Monday, 24 April 2017

கள்ளன் எங்கே?

எனக்குத் திருமணமான புதிது.அப்போது எனக்கு சமையல்  அரையும் குறையுமாய்  தான் தெரியும்.

அப்போது ஒரு நாள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். என் கணவருக்கு   சகோதரி முறையாக வேண்டும் அவர்.

குசல விசாரிப்பெல்லாம் முடிந்த பின், காபி போட உள்ளே சென்றவரை நானும் தொடர்ந்தேன்.  டைனிங் டேபிளின் மேல்  வாழைப்பூ  ஒன்று பாதி ஆய்ந்த நிலையில் இருந்தது. காபி போட்ட பின்பு  வாழைப்பூவை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தார் அக்கா.

அப்பொழுது அவருக்கு பக்கத்து வீட்டில் இருந்து அழைப்பு வரவே  எழுந்து போய் விட, நான் அரிவாள் மனையை எடுத்து வாழைப்பூவை  நறுக்கி  நீரில் போட்டுக் கொண்டிருந்தேன்."சகோதரன் மனைவி கை வேலையில் கெட்டிக்காரி" என்று நல்ல பெயர் எனக்கு வராதா  என்கிற ஆசையில் நறுக்கஆரம்பித்தேன்.

எல்லாமே நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. சட்டென்று நறுக்க முடியாமல் திணறினேன் 'என்னவோ நறுக்க விடாமல் தடுக்கிறதே ' ....ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நறுக்க முயற்சிக்கும் போது  ," அடடா .... கள்ளனை எடுத்து விட்டு நறுக்கி வை ராஜி " சொல்லிக் கொண்டே வந்தார்  அக்கா. .

இவர் என்ன சொல்கிறார்?
 " கள்ளனா ?"  எங்கே என்று சுற்று முற்றும் பார்த்தேன்.

ஒன்றும் புரியாதவளாய், மீண்டும் நறுக்க முயற்சிக்கவும்,அக்கா , " ராஜி...ராஜி... கள்ளனை எடுக்க சொன்னது  வாழைப்பூவிலிருந்து. நீயோ சுற்று முற்றும்  தேடுகிறாய். உன் உள்ளம் கவர்ந்த கள்வனை சொன்னேன் என்று நினைத்து விட்டாயோ " என்று என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டினார்..

இன்று சட்டென்று அந்த சம்பவம் நினைவில் வந்து மோதியது. என் " Rajisivams Kitchen"channel இல் வாழைப்பூ  வடை செய்முறை சொல்லும் போது நானும் கள்ளனைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.  சேனல் டைரக்டராயிருக்கும் என்னவர், " எல்லாம்  நேரம் ராஜி.  நீ கள்ளனைத் தேடியது எனக்கல்லாவா தெரியும்." என்றார்.

இதோ வீடியோ உங்கள் பார்வைக்கு.இதை ' Like', 'Share' & 'Subscribe'  செய்ய மறக்க வேண்டாமே ....ப்ளீஸ் ...
                                                          நன்றி !

Thursday, 2 March 2017

ராதா பாட்டியுடன் வருகிறேன். !

சமையல் குறிப்புகளை அஞ்சறைப் பெட்டியில் எழுதி வருகிறேன்.  அதையே this is raji's counter  என்று ஆங்கிலத்திலும்  எழுதிக் கொண்டிருக்கிறேன்.  பலரும் அறிவீர்கள்.

எல்லோரையும் எழுதிக் கொல்வது போதாது என்று  தோன்றியதால்,  நேரே  உங்கள்  வரவேற்பறைக்கே  வந்து  உங்களுக்கு சமையல் குறிப்புகள் கொடுத்தால் என்ன என்று தோன்றி விட , உடனே செயல் படுத்தி விட்டேன்.

டிவியில்  நான் வரப்போவதாக   நீங்களாகவே  நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை.

சொல்ல மறந்து விட்டேனே .... நான் மட்டுமில்லை என் அம்மாவும் என்னுடன் வருகிறார்..

எப்படி  என்று யூகித்து விட்டீர்கள் இல்லையா?

ஆமாங்க......You Tube வழியாகத் தான். நானும் என் அம்மாவும் சேர்ந்து  சமையல் குறிப்புகளை வாரி வழங்கப் போகிறோம். நீங்களும் ருசித்துப் பார்த்து  சொல்லுங்கள்.

 சமையல் ராணியான, என் அம்மாவின் பெயரில் " Radha Paati Recipes "  என்று ஆரம்பித்திருக்கிறேன்.

வீடியோ பார்த்து  உங்கள் மேலான கருத்துக்களை  தெரியப்படுத்துங்கள். இது என் முதல் வீடியோ. குறைகளுக்கு வாய்ப்புண்டு.. குறைகளை  என்னிடம் மட்டும் தெரிவியுங்கள். நிறைகளை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வீடியோ பார்த்து பின்  மறக்காமல் 'Like' மற்றும்  ' Subscribe' பட்டன்களை ஒரு தட்டித்  தட்டி  விடுங்கள்.

உங்களின் மேலான ஆதரவை  எதிர்பார்க்கிறேன்.
இதோ 'You Tube'.......
                                                        நன்றி! நன்றி! நன்றி!

Thursday, 16 February 2017

கற்சட்டியில் சமைக்கலாம் வாருங்கள் !

 ஒண்ட வந்த பிடாரியான பிட்சாவும், பர்கரும்,  நம் பாரம்பரிய தின்பண்டங்களான  சீடை , முறுக்கு , அதிரசம்.....போன்றவற்றை  விரட்டியது மட்டுமல்லாமல்,  சாதத்திற்குப் பதிலாக  நாம் பிரெட்  சாப்பிட ஆரம்பித்து விடுவோமோ  என்கிற  அச்சத்தையும்  உண்டு பண்ணி விட்டது. நம் உணவு முறை மாற்றத்தை நம் உடற்கூறு  ஏற்றுக் கொள்ளுமா அல்லது புது உணவு முறை நம்மைக் கொல்லுமா என்கிற மிகப் பெரிய பயம் தோன்றிய நேரத்தில் தான்.....மௌனமாய்  புரட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நம் சமையலறையில்  இப்பொழுது சிறு தானியங்கள்  வருகை புரிந்து நம்மைக் காப்பற்ற உறுதி கொண்டுள்ளன எனலாம்.

ஆரம்பத்தில், அவற்றை எப்படி சமைப்பது என்பது பற்றிய ஒரு சிறு தயக்கம் இருந்தது. ஆனால் இணையம்  அதற்கு பேருதவி  புரிந்தது எனலாம்.

சிறு தானியங்கள் சமைப்பது பற்றிய விடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறு தானிய உணவு  மிகப் பெரிய வரப் பிரசாதம் என்றும் சொல்கிறார்கள் .

சிறு தானிய வகையில், நான் வரகரிசி உபயோகம்  செய்ய ஆரம்பித்தேன்.பொங்கல்  செய்யும் போது நன்றாகவே வந்தது. அதையே சாதமாக சமைப்பது  என் திறமைக்கு சவாலாக இருந்தது.

வரகரிசியை  சாதாரண அரிசி போல் குக்கரில் வைத்தால் வரகரிசி கூழ் கிடைத்தது. பேசாமல் சாதத்தை ஒரு  டம்ளரில் கொடு. நான் அதில் சாம்பாரோ, ரசமோ, மோரோ கலந்து குடித்து விடுவேன் என்று சீரியசாய்  முகத்தை வைத்துக் கொண்டு என்னவர் அடித்த கிண்டலை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நகர்ந்தேன்.

வடித்தால் ஒருவேளை  நன்றாக வரும் என்று நினைத்து மறு நாள் சாதம் வடிப்பது போல்  வடிக்க ........ , அப்படி வடித்தால் கஞ்சி  வடிகட்டப் படுகிறதோ இல்லையோ , வரகரிசி கடுகு சைசில் இருப்பதால்  சாதமே கஞ்சியுடன் சென்று விடுகிறது. என்னவரோ பாத்திரத்திற்குள் எட்டிப் பார்த்து கண்ணிற்கு மேல் கையை அனைவாய்  வைத்து, " கண்ணிற்கு எட்டிய தூரத்தில் தான் சாதம் இருக்கிறது" என்று மீண்டும் என்னை நக்கலடித்தார். அன்று எப்படியோ சமாளித்தேன் .

பிறகு எப்படித்தான் இதை சமைப்பது  என்று யோசித்துக் கொண்டே  நம் கூகுளார்  உதவியை நாடினேன்.

"ஒரு பாத்திரத்தில் அரிசிக்கு வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் அப்படியே வைத்து கொதி வந்தவுடன், இறக்கி வைத்து தட்டால் மூடி, பிறகு இருபத்த்தைந்து நிமிடங்களில் திறந்தால் உதிர் உதிராக வரகரிசி சாதம் கிடைக்கும்." என்கிற செய்முறை கண்ணில் பட்டது.

எவர்சில்வர் பாத்திரத்தில், அப்படி செய்ததில் எனக்கு அப்படியொன்றும்  பெரிய திருப்தி கிடைக்கவில்லை.

மண் பாண்டத்தில் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிற உபரி செய்தியையும் இணையம் சொன்னது. மண் பாண்டம் நமக்கு சரிப்படுமா?  "யார் மேலாவது இருக்கும் கோபத்தில்   ' நங்' என்று நீ மேடையில் வைத்தால், மண் பாண்டம் உடைந்து மேடைக்கு அன்னாபிஷேகம் செய்து விடுவாய் . அது தான் நடக்கும். பிறகு நாம் எல்லோரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தான்  " என்று அவர்  எச்சரிக்க ...

அப்பொழுது தான்  சட்டென்று மின்னலாய் உதித்தது......
என் தம்பி மனைவி ஆறு மாதத்திற்கு முன்பாக  எனக்கு ஒரு கற்சட்டி  பரிசளித்திருந்தாள்.

அதை கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நாள் பழக்கி  விட்டு,  வத்தக் குழம்பிற்கு உபயோகித்து  வந்தேன். அதுவும் இரண்டொரு முறை  உபயோகித்தப் பின் கவிழ்த்து வைத்த நான் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்து விட்டேன்.

மண் பாண்டத்திற்குப்  பதிலாக இதை உபயோகித்தால் என்ன.....தோன்றவே  யோசனையை செயல் படுத்தி பார்த்தேன்..இது மட்டும் உடையாதா என்று கேட்பவர்களுக்கு, "மண் பாண்டம் அளவிற்கு சட்டென்று கற்சட்டி உடையாது".

கற்சட்டியில் வரகரிசி சாதம் உதிர் உதிராக வெந்து என்னை அசத்தி விட்டது.எதிர்பார்த்தப் பலன் கிடைத்து ,எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

கற்சட்டிக்காக இந்தப் பதிவா? வரகரிசிக்காக இந்தப் பதிவா என்று கேட்டால் இரண்டுக்கும் தான் ......

இந்தக் கற்சட்டி சமையல் பற்றித் தெரியாதவர்கள் இதைத் தெரிந்து கொள்வார்களே என்று தான் பதிவிட்டேன்.

அது என்ன 'கற்சட்டி' என்பவர்களுக்கு , இது மாக்கல்லால் தயாரிக்கப்பட்டது. நம் பாட்டிக் காலத்தில்  சைஸ் வாரியாக  அடுக்களையில்  உட்கார்ந்திருந்த கற்சட்டிகளைத்   தொலைத்து விட்டு ,'நான் ஸ்டிக்' போன்ற நவநாகரிக பாண்டங்கள் பின்னால் ஓடினோம். அது உடல் நலனிற்குக் கேடு விளைவிக்கும்  என்பது இப்பொழுது புரிய வர ..

மீண்டும் பாரம்பரிய  பாத்திரமான  கற்சட்டியும், மண் பாண்டமும்,   நம் இல்லங்களுக்கு வருகைத் தர ஆரம்பித்திருக்கின்றன.

கற்சட்டியில் வத்தக் குழம்பு  வைத்துப் பாருங்கள். அலாதி சுவையோடு இருக்கும். சமைக்கும் உணவும் அதிக நேரம் சூடாகவே  இருக்கும்.

அதோடு இப்பொழுது 'ஸ்லோ குக்கிங்' ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரவலாக பேசப்படுகிறது. அதற்கும்  கற்சட்டி ஏற்றது தான்.கற்சட்டியில் அரிசியைப் போட்டு , அரிசிக்கு வேண்டிய அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரண்டியால்  அவ்வப்போது கிளறி விட வேண்டும். ஐந்து பத்து நிமிடத்தில் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது  அடுப்பை அணைத்து விட்டு , கீழே  இறக்கி விடவும். ஒரு தட்டால் கற்சட்டியை மூடி விடவும்.

பதினைந்து நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தால் பொலபொலவென்று சாதம் நம்மைப் பார்த்து சிரிக்கும்.இத்தனைப் பலன்கள் இருப்பதால் தான் அக்காலத்தில்  இந்தப் பாத்திரங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். நாம் தான் அருமை தெரியாது அதை  எல்லாம் குப்பையில் போட்டு  விட்டோம்.

இனியாவது  அதையெல்லாம்  மீண்டும்  உபயோகிக்க ஆரம்பிப்போம்.
நம் பாரம்பரிய சமையல்  முறைகளை மீட்டெடுப்போம் வாருங்கள்.

அட..... நீங்கள் எங்கே கிளம்பி விட்டீர்கள்? கற்சட்டி வாங்கவா? இல்லை  மண் பாண்டம் வாங்கி வரவா?

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்

Google+ Badge