Wednesday 21 January 2015

ஊஞ்சல்


google images
அப்பாடா  .... அரட்டைத் தொல்லையிலிருந்து தப்பித்தோம்  என்று நிம்மதியாய் இருந்தீர்களா?  விட்டு விடுவேனா என்ன? இதோ வந்து விட்டேனே!

சோபாவில் சாய்ந்து சோம்பலாய் உட்கார்ந்திருந்த என்னை  , செல்பேசியின் மணியோசை  வாட்ஸ்  ஆப்  செய்தி வந்திருப்பதை அறிவித்து அழைத்தது . யார், என்ன  செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று ஆவலோடு பார்த்தேன். அனுப்பியிருந்தது, வெளி நாட்டில் இருக்கும் என் தம்பி மனைவி.
" உங்களை எங்கே இணையப் பக்கம் காணவே காணோம் . ஏன்  உடம்பு  சரியில்லையா ? " என்று அக்கறையோடு விசாரித்திருந்தாள் . இது நடந்தது ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பாக.

சென்ற வாரம் வெளியூரில் இருக்கும் சகோதரி , " என்னடி நாள் முழுசும் பண்ணிட்டிருக்கே. முக நூல் பக்கமே  காணோமே. நலம்தானே ! " என்று   கேட்டிருந்தாள் .

உறவுகளின் பாசம் என்னை நெகிழ  வைத்தது.

ஆனாலும் இணையப் பக்கம் ஏனோ வரவேயில்லை. யாருக்கும் பின்னூட்டடமிடவில்லை. பொங்கலுக்குக் கூட  யாருக்கும் வாழ்த்துத் தெரிவிக்க , சற்றே சோம்பலாயிருந்தது. உடல், மனம்  இரண்டும் தான்.

 நட்புகளின்  அக்கறையும்  பின்னர் தெரிய வந்தது.  பல நண்பர்கள், தோழிகள்,  முகநூலில் என் டைம்லைனில் வந்து அவர்களாகவே  பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து இணையப் பக்கம் என்னை வரவைக்க முயற்சித்தார்கள்.அப்பொழுதும்,  அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்ததோடு விட்டு விட்டேன்.

 சில, பல நாட்களுக்குப் பிறகு என் வலைத்தளம் பக்கம் இன்று தான்  வந்தேன். ஏன் இத்தனை நாள்  வரவில்லை  என்கிற கேள்விக்கு  இன்னமும்  என்னிடம் விடையில்லை  பல விதமான சிந்தனைகளில்   ஆழ்ந்துப் போய்  விட்டேன் என்று மட்டும் உணரத் தொடங்கினேன். எதனால் இந்த மனச்சோர்வு ?

இத்தனை  வருட வாழ்க்கையில்எதிர்கொண்ட சவால்கள்  தான் எத்தனைஎத்தனை !,
பெரும்பாலானவற்றில்  வெற்றியும், சிலவற்றில் தோல்வியும் கண்டிருக்கிறேன்.தோல்விகளைக்   கண்டு அப்பொழுதெல்லாம்   அஞ்சாத கலங்காத மனம்  சட்டென்று இப்பொழுது  என்ன ஆச்சு? சுயப் பரிசோதனை செய்து கொண்டேன்.

முதுமையை எட்டிப் பிடிக்கிறேனோ?
"அப்படியொன்றும் உனக்கு வயதாகிவிடவில்லை." மனசாட்சி அதட்டியது.
உண்மை தானே ! ஒத்துக் கொண்டேன்.

குழந்தைகள்  நம்மை விட்டுப் பிரிந்துசென்று வாழ்கிறார்களே. பிரிவின்  சுமையை மனம்  தாங்கவில்லையா?
"அட......உன் குழந்தைகள் தான்  உன்னை விட்டு வேறு ஊர்களுக்கு பத்து  ஆண்டுகளுக்கு முன்பாகவே சென்று வாழ்ந்து வருகிறார்களே  . இப்பொழுது திடீரென்று என்ன வந்தது அதற்கு?" மீண்டும் மனசாட்சி.
ஆமாம். கரெக்ட் தான் நீ சொல்வது...என்று சொன்னேன்.


"உடல் நலமில்லையா? "என்னையே கேட்டுக் கொண்டேன்.
உன் உடலுக்கு என்ன கேடு ? நன்றாகத் தான் இருக்கிறாய்? சொன்னது மனசாட்சி.


அப்ப  எனக்கு எழுதுவதுப் பிடிக்கவில்லையோ?
"அப்படியெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. அப்படித் தோன்றினால் ராசியின் அமெரிக்கப்  பயணத் தொடரை ஆரம்பித்து வைத்திருக்க மாட்டாய்?" மனசாட்சியின் பதில்

அப்ப என்ன  தான் என்னுடையப்  பிரச்சினை?
அதற்குத் தான் என்னிடமும் பதிலில்லை என்று கையை விரித்து விட்டது மனசாட்சி.

"போனது போகட்டும். உன் ராசியையும், விஷ்ணுவையும்  அமெரிக்காவிற்கு அனுப்பும்  வழியைப் பாரு. அவர்கள் அங்கு அடிக்கும் லூட்டி உன்னை உற்சாக மனநிலைக்குக் கொண்டு வரும்  "என்று சொன்ன மனசாட்சி வேறு ஒரு அறிவுரையும் சொன்னது.

" ஒரு வேலையை இருபத்தொரு நாட்களுக்குத் தொடர்ந்து செய்தால்  அதுவே பழக்கமாகி விடுமாம் . அதனால்......." ஆரம்பித்த மனசாட்சியை நான் இடை மறித்தேன்.
" இருபத்தோரு  நாட்கள் நான் தொடர்ந்து எழுதாததால் தான்  இந்த  இணைய  இடை வெளியோ எனக்கு ? "

"நிறுத்து. நான் சொல்ல வந்தது அதுவல்ல . இருபத்தொரு நாட்கள் தொடர்ந்து எழுது. எழுதுவது பழக்கமாகி  விடும் என்று சொல்ல  வந்தேன் " என்று மனசாட்சி மண்டையில் குட்ட

அட...... ஆமாம்.......யோசிக்க ஆரம்பித்தேன்.

இருங்கள். இருங்கள்... எங்கே  போகிறீர்கள்? போய் விடாதீர்கள்.   இருபத்தொரு நாட்களுக்குத தொடர்ந்து  எழுதி, பதிவுகள் வெளியிட்டு   உங்களைக் கொல்லப் போவதில்லை. அந்த உறுதியைத் தருகிறேன்.

இருபத்தியொரு நாட்கள் தொடர்ந்து எழுதுகிறேன்  . ஆனால்..... இடைவெளி  விட்டே வெளியிடுகிறேன். சரி தானே!

எல்லாம் சரி தலைப்பு என்ன ஊஞ்சல் என்றிருக்கிறதே  என்று கேட்கிறீர்களா? 
அது  தாங்க Mood Swings. மூட் ஆடும் ஊஞ்சலாட்டம்.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்