Friday 22 November 2013

வாழ்த்தும்...... ஆசியும் .........








சென்ற வருடத்தில் ஒரு நாள் ," இந்தப் புத்தகத்தைப் பார் ராஜி." என்று என் கணவர் சொல்ல , நான் சுரத்தே இல்லாமல் ,அவர் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தேன். 

தோழி, சினேகிதி, அவள் , இதில் எதுவென்று நினைவில் இல்லை.ஒரு பக்கத்தைத் திருப்பிச் சின்னக் கட்டத்தில் இருக்கும் செய்தியைப் படிக்கச் சொல்ல நானும் படித்தேன்.

"அதுக்கென்ன இப்போ ?" என்றது நான்.

"என்னவா? நீ தானே 'என்னவோ எழுதிக் கிழிப்பேன் ' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே. அதற்காகத் தான் கொடுத்தேன். அலட்சியமாகப் பேசுகிறாயே! வேண்டாமென்றால் போ " என்று அவர் திரும்ப ,

"ஆமாம் ....... "சட்டென்று உரைத்தது எனக்கு.

இரண்டொரு தடவை, பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்பினேன்.
இன்று வரை என்னவாயிற்று, என்றே தெரியவில்லை. அந்த அலுப்பில் எழுதியனுப்புவதை விட்டு விட்டேன். ஆனால் எழுதவேண்டும் என்று கீறல் விழுந்த ரெக்கார்டாய் பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை.

அதற்குத் தான் என்னவர் அந்தச் செய்தியைக் காட்டினார்.
செய்தி ,செய்தி என்று சொல்லிப் படுத்துகிறாயே. அதிலென்ன தான் இருந்தது என்று கேட்கிறீர்களா?

பிரபல பதிவர்கள் ,திருமதி ரஞ்சனி நாராயணன் , திருமதி காமாட்சி அவர்களின் வலைப்பூ பற்றி ஒரு சிறிய குறிப்பு.

இவர்கள் இன்டர்நெட்டில் எழுதுகிறார்கள் என்பது மட்டுமே எனக்குப் புரிந்தது.
நாமும்.................... எழுதலாமா ? வேண்டாமா? பட்டிமன்றம் ஓடியது மனதில்.

முதலில் ,அவர்களின் வலை URL வைத்து ,அவர்கள் வலைப்பூவைத் திறந்து பார்ப்போமே ,என்று பார்த்தால் அற்புத மாளிகைக்குள் நுழைவது போன்ற பிரமிப்பு உண்டாயிற்று. இவர்களெல்லாம் எப்படி எழுதுகிறார்கள், எவ்வளவு எழுதுகிறார்கள் ,மலைத்துப் போனேன்.

நமக்குத் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும் என்பதாலேயே ..... நாமும் எழுதுவதா?......
ஒரு சின்னச் சந்தேகம்.

ஆனால், ஆர்வம் , சந்தேகத்தை ஒரு தள்ளு தள்ளி விட்டு எழுது என்று ஆணையிட  என் கிறுக்கல்களை  ஆரம்பிக்கத் தீர்மானித்தேன்.

சரி எப்படி ஆரம்பிப்பது ? எங்கு ஆரம்பிப்பது, எதைப் பற்றி எழுதுவது.? மீண்டும் ஒரு பிரேக் .
கணினி பொறியியல் வல்லுனராய் இருக்கும் என் தங்கை பையன் ,சதீஷ் வந்திருக்கும் போது,
என் ஆசையைச் சொன்னேன்.

"இவ்வளவு தானே பெரியம்மா "என்று சொல்லி விட்டு சட்டென்று,
Word Press இல் ,ப்ளாக் ஒன்று ஆரம்பித்துக் கொடுத்தான்.
நீங்கள், எதை வேண்டுமானாலும் ,எழுதிக்கொள்ளுங்கள் என்று சொன்னதும் எனக்கு ஆர்வம் தாங்கவில்லை.

நீ ஆரம்பித்துக் கொடுத்து விட்டாய். நான் எழுதினால் யார் படிப்பார்கள் ?என்று மறு கேள்வி கேட்க

அது நீங்கள் எழுதுவதில் அடங்கியிருக்கிறது என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு WordPress ஐயே, சுற்றி, சுற்றி வந்தேன்.
ஒன்றும் சரியாகப் புலப்படவில்லை. எதைப் பற்றியோ எழுதினேன். ஆனால் சேமிக்கவில்லை போலிருக்கிறது. கரெண்ட் போய் விட்டது.

கரண்ட் வந்தபின்  திறந்தால் ஒன்றுமேயில்லை. கண்ணில் நீர் வராத குறை தான்.

மீண்டும், திருமதி ரஞ்சனி நாராயணன் வலைப் பக்கம் , விஸிட். வேறு யாரைப் பற்றியோ வலையுலகம் பற்றியோ எதுவும் தெரியாதாதால் ரஞ்சனியின் வலை என்னிடம் பட்ட பாடு இருக்கிறதே.................நான் பார்த்ததிலேயே அன்று நூறு ஹிட்ஸ்  வந்திருக்கும் அவர்களுக்கு.

ஆனாலும் 'வேர்ட் பிரஸ்' ஒரு மர்ம மாளிகை போலவே இருந்தது.
எங்கெல்லாம் ,திருமதி ரஞ்சனியின் வலையில் ,லிங்க் இருந்ததோ அங்கெல்லாம் போய் க்ளிக்கினேன்.

comments என்ற வார்த்தையைக் கிளிக்கினால் சுருட்டி வைத்திருந்த கேலண்டர் பிரிந்தது போல் சர்ரென்று மிக நீளமாய் கீழே  இறங்கியது. அதில் நிறையப் பேர் பதிவைப் பற்றிக் கருத்திட்டிருந்ததைப் பார்த்தேன் .

அங்கே எங்காவது லிங்க் வருகிறதா என்று பார்த்தால் என்னிடம் மாட்டியது திரு வை. கோபாலகிருஷ்ணனின் வலை. அவருடைய வலைப் பக்கம் போனால் டிசைன், எழுத்துரு , எல்லாமே வித்தியாசமாக, இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. URL பார்த்து Blogspot என்பதைத் தெரிந்து கொண்டேன்.

உடனே இன்னுமொரு ஜன்னலைத் திறந்தேன். ஹால் ஜன்னலா என்று கேட்காதீர்கள். பிரவுசர் விண்டோ தான். கூகிலிற்குப் போய்ப் பிளாக் ஸ்பாட்  என்று டைப்பினேன். உடனே பிளாக் ஸ்பாட் கதவு arattai காகத் திறந்தது.பிளாக் ஸ்பாட்  புரிபடுவது  கொஞ்சம் எளிமையாகப் பட்டது எனக்கு.

உடனே என் குடித்தனத்தை வேர்ட்பிரஸ் இலிருந்து ,பிளாக் ஸ்பாட்டிற்கு
மூட்டை கட்டிக் கொண்டு வந்து விட்டேன்.
அப்புறமென்ன ....எழுத ஆரம்பித்தேன்.
நான் எழுத ஆரம்பித்த சமயத்தில், தீபாவளி ஜவுளி எடுக்கச் சென்று வந்த சமயம். என் பேரன் ,அபினவ் 'ஆச்சா, ஆச்சா 'என்று எங்களைப் பாடாய் படுத்தியதை 'தீபாவளி ஆச்சா ' என்று பதிவிட்டேன்.

அதற்குப் பிறகு தான் காமெடி. பதிவிட்டதை publish என்று அழுத்தாமல் விட்டிருக்கிறேன். அப்பபோ போய் யாராவது பார்த்தார்களா என்று பார்த்தால்
(அதெல்லாம் புரிந்தது stats போய் க்ளிக்க வேண்டுமென்று.) ஒரு ஈ ,காக்காய் வரவேண்டுமே. "பப்ளிஷே "ஆகவில்லை . அப்புறம் யார் வந்து படிப்பார்கள்? ஒரு மாதிரி நானே கண்டு பிடித்துப் பப்ளிஷ் செய்தேன்.

அதற்குப் பிறகும் இரண்டு நாள் ,நான்  மட்டுமே  படித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரேயொரு முறை என் கணவர் படித்தார்.ஊரிலிருந்த வந்திருந்த, என் நாத்தனாரை விட்டுப் படிக்கச் சொன்னேன். ஆக மொத்தம் மூன்று பேர் தான் படித்திருந்தோம்.
என் நிலைப் பார்த்து ,பரிதாப்பட்டு ,என் கணவரே  கமெண்ட்ஸ் எழுதினார். ஒரு கருத்து வந்து விட்டது ,என்று மகிழலாமென்றால் அந்த நினைப்பிலும் மண்.
கமெண்டைப் பார்த்தால் rajalakshmi commented என்றேயிருக்க ,நொந்து போனேன

என் கணவரோ  ஹா...ஹா... என்று ,வெடிச் சிரிப்பு, சிரிக்க ,நான் அசடு வழிய ... என்ன தவறு செய்தேன் என்று புரிந்தது.

திரு வைகோ சார் வலைக்குச் சென்று அவரை என் தளத்திற்கு  வரவேற்றேன். தவறாமல் உடனடி வருகைப் புரிந்தார்.அது மட்டுமில்லாமல்
எனக்கு ஆலோசனைகளை ,அழகாய், அள்ளி வழங்கியிருக்கிறார்.அதையெல்லாம் ஓரளவிற்கு   கடைபிடித்து வருகிறேன் என்றே  சொல்ல வேண்டும்.
அதைப் படிக்க இங்கே' க்ளிக் 'செய்யவும்.
என்னுடைய maiden venture பதிவிற்கு மூன்று பேர் வருகை புரிந்தார்கள்.

வலையுலகம் என்கிற அற்புத உலகம், மெல்ல மெல்ல , புரிய ஆரம்பித்தது. என் வலையில் நிறைய நண்பர்களும் தோழிகளும் மாட்டிக் கொண்டார்கள். இவர்கள் எல்லாம் நான் தேங்காமல்  இருக்க உதவுவார்கள் என்று புரிந்தது.

இதற்காக நான் arattai க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன
 "ஊக்குவிப்பார் இருந்தால் ஊக்கு விற்பவன் கூடத் தேக்கு விற்பான்" என்று கவிஞர்  வாலி  சொன்னது நினைவிற்கு வருகிறது. 

இந்த ஒரு வருடத்தில் எனக்குப் பின்னூட்டம் என்கிற டானிக் கொடுத்தவர்கள் லிஸ்ட் மிக மிகப் பெரியது. அவர்கள் யார்யார் என்று சொல்லாமல் போனால் நான் நன்றி மறந்தவளாவேன்.
திருமதிகள் ரஞ்சனினாராயணன், சித்ராசுந்தர் ,கோமதி அரசு ,ராஜராஜேஸ்வரி,மகி,மஹாலக்ஷ்மி ,மனோசாமிநாதன் , தமிழ்முகில்,சாதிகா,
உஷாஅன்பரசு, ராஜி,மலர்பாலன்,மஞ்சுபாஷினிசம்பத்குமார் , ஜலீலா, கவிநயா,சமீரா,காமாக்ஷி, சந்திரகௌரி ,துளசிகோபால்,தமிழ்செல்வி, கீதாசாம்பசிவம் ,லக்ஷ்மி,விஜிபார்த்திபன்,கிரேஸ் ,அருணா செல்வம், அமைதிச் சாரல்,அனுஸ்ரீனி,ரத்னாபீட்டர்ஸ்

மற்றும்

திருவாளர்கள் .வை .கோபாலகிருஷ்ணன்,திண்டுக்கல் தனபாலன்,ரமணி, ஸ்ரீராம்,சுப்புத்தாத்தா,தமிழ்இளங்கோ,ஸ்கூல்பையன்,ஜோக்காளி,வெங்கட்ஜி,GMB,Chellappa Yagyaswamy,MTG,பாலகனேஷ்,கவியாழி கண்ணதாசன்,வருண் ,நம்பள்கி,சுரேஷ்,துரை செல்வராஜ் ,Arumugam Eswar,செம்மலை ஆகாஷ்,ஜெயதேவ் ,கடைசிபெஞ்ச் ,ரூபன் ,பாலசுப்ரமணியன், கவிஞர் பாரதிதாசன்.அட்வகேட் ஜெயராஜன் ,சென்னைப் பித்தன்,விமலன், விஜயன்,அப்பாதுரை,முனைவர். குணசீலன்,
 ஆகியோர் என் பதிவுகளைப் பொறுமையாய் படித்து என்னை ஊக்குவித்தவர்கள்.

அவர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி .இவர்கள் எல்லாம் என் நினைவிற்கு வந்தவர்கள். வேறு யார் பெயரும் விட்டிருந்தால் அவர்களுக்கும் என் நன்றி.

அலை போல், திரண்டு வந்து  என்பதிவுகளைப் படித்து எக்கச்சக்கமாய்  ' ஹிட்ஸ் ' கொடுக்கும் வாசக அன்பர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.

பதிவுகள் எழுத ஆரம்பித்த பொழுது தான் உணர்ந்தேன் ,வலையுலகம் என்பது ,கட்டுபாடுகளற்ற சுதந்திரமான வெட்டவெளி. அதில் எழுத்துப் பயணம், என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் தவறினாலும், கத்தி நம்மைப் பதம் பார்த்து விடும்.நான்  சர்வ ஜாக்கிரதையாக நடப்பதற்கு உதவுவது என்னவர் , என் பதிவுகளின் எடிட்டர். அவர் எடிட் செய்யவில்லை,என்றால் பல சமயங்களில், நான் வம்பில் மாட்டியிருப்பேன். அதனால் அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி .

Arattai யின் ஓராண்டு நிறைவிற்கு உங்கள் வாழ்த்தையும் ஆசியையும் வழங்குங்களேன். ................ப்ளீஸ் .

image courtesy----google


Saturday 16 November 2013

கிரிக்கெட் கடவுள்



200வது  கிரிக்கெட் மாட்ச்  திரு. சச்சின் டெண்டுல்கர்  விளையாடிக் கொந்டிருந்ததை  டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார் என் கணவர். நானும் அவ்வப்போ கிச்சனிலிருந்து தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்று, சச்சின்  விளையாடிய 200வ து  டெஸ்ட் மாட்சில் இந்தியா  வெற்றியடைந்தது. சாதரண வெற்றி இல்லை. Innings Defeat ஆகியிருந்தது  மேற்கிந்திய  தீவுகள் அணி. ஆனாலும் இந்தியா வெற்றி என்றதும்  வழக்கமாக  மனதிற்குள் இருக்கும் சந்தோஷம்  இன்று  இல்லை. டிவியில் பார்க்கும் பொது  மும்பை மைதானத்திலிருக்கும்  ரசிகர்கள் முகத்திலும் எப்பொழுதும்  இருக்கும்  உற்சாகம்  இல்லை. 
சச்சின் டெண்டுல்கர்  இரண்டாவது இனிங்ஸ்  விளையாட முடியாதே!
மேலும் சச்சின் டெண்டுல்கர் இந்த டெஸ்ட்டுடன்  ஓய்வு  பெறுகிறாரே .
வருத்தத்திற்கு இதெல்லாம்  ஒரு காரணம் தானே.

அதற்குப் பிறகு பரிசளிப்பு விழா . பரிசளிப்பின் பொது  சச்சின் டெண்டுல்கர்  பேச்சு. மைதானத்தையே கட்டிப் போட்டு வைத்திருந்தது. அந்தப் பேச்சின் தமிழாக்கத்தை நான் எழுதப் போவதில்லை. நீங்கள் எல்லோருமே அதை கவனித்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

அவர் பேச்சைக் கேட்டதில் எனக்கு  மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
அவர் பேச்சை ஆரம்பிக்கும் போது  இருபத்தியிரண்டு அடியில்  தான்என் வாழ்க்கை இருபத்தி நான்கு வருடங்களாக  இருந்திருக்கிறது என்று  பெருமையுடன் சொன்னார்.  அவர் அதற்குப் பிறகு கிரிக்கெட்டைப் பற்றி தன்  பேச்சில் எங்குமே குறிப்பிடவேயில்லை. அவர் பேசியதெல்லாமே தன்னை வளர்த்தவர்கள், தனக்கு கோச்  செய்தவர்கள் தன மேனேஜர்   என்றே சுற்றி வந்தது.

தந்தையின் வழிகாட்டலின்  பேரில் தான் இத்தனை வருடங்களாக  விளையாடியதாக சொன்னதை இக்கால இளைஞர்கள் எடுத்துக் கொண்டால்  நல்லது. அவர் தந்தை சொன்னபடியே  தன கனவுகளை நனவாகக் எந்த குறுக்கு வழியும் எடுக்காமல் , வந்த தடைக் கற்களையெல்லாம் படிக்கற்களாக  மாற்றிக் கொண்டே இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். தன தந்தையின் மேல் அபார மரியாதை வைத்திருக்கிறார்.
தன தாயைப் பற்றி சொல்லும் போது குரல் உடைகிறது. அவருடைய தாய்ப் பாசம் நெகிழ் வைக்கிறது.மைதானத்தில் நிறைய பேர் கண்கள் குளமான.
உலகளாவிய  புகழ் பெற்ற மனிதர்  தன முதல் மரியாதையை தன பெற்றோருக்கு கொடுப்பது  அவரை இன்னும் உயரத்தில் வைக்கிறது.

பேச்சு சுவாரஸ்யத்தில் யாருக்காவது நன்றி சொல்லாமல் விட்டு விடுவோமோ என்கிற பதைப்பு இருந்தது அவரிடம் . அவர் கையில் வைத்திருக்கும் பெயர்கள் அடங்கிய லிஸ்டைப பார்த்து பார்த்து பேசுவதில்  அவருக்கு தன்னை சுற்றியிருந்தவர்கள் மீதிருந்த மரியாதையைக் காட்டியது..

அவரைப்பற்றி பேசும் வெளிநாட்டு கிரிகெட் வீரர்கள்  அவர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன்  என்பதைத் தாண்டி ஒரு மிக நல்ல மனிதர் என்றே புகழ்கிறார்கள். அதுவல்லவோ அவருடைய  பெருமைக்கு அழகு சேர்க்கும் ஒன்று.

ஒவ்வொரு ஆண்  மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் துணையிருக்கிறாள். தன்  மனைவியைப் பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை அவர். டாக்டராக இருக்கும் திருமதி அஞ்சலி டெண்டுல்கர்  தன கணவருக்காக  அவர் தன்  தொழிலைக்  கொஞ்சம் புறந்தள்ளி, குடும்ப நிர்வாகத்தில் நேரம் செலவழித்திருக்கிறார்.
அதுவும் உண்மை தானே. குடும்பம் என்னும் பொழுது எத்தனை எத்தனை கடமைகள். அத்தனையும்  திருமதி அஞ்சலி  தன் கணவருக்காக  தன் தொழில்
ஆர்வத்தை குறைத்து தியாகம் செய்திருக்கிறார் பாருங்கள். இக்கால பெண்கள்
சிலர்  குடும்பத்தை  பின்னால் தள்ளி முன்னேறத் துடிக்கும்
சுயநலவாதிகளாயிருக்கிரார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.
உடனே  எங்கள் கணவர்கள்  டெண்டுல்கர் மாதிரி புகழடைந்தால் நாங்களும் எங்கள் தொழில்  ஆர்வத்தைக் குறைத்துக் கொள்கிறோம் என்று விதண்டாவாதம் செய்ய வேண்டாம். காதல் கணவன் கைபிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுப்பதால்  ஒன்றும் அவர்கள் தாழ்ந்து போவதில்லை என்பதற்கு அஞ்சலி ஒரு நல்ல உதாரணம் என்றே எனக்குப் படுகிறது.

அவருடைய பேச்சிலிருந்து  தெரிய வருவது அவர் பெற்றோரின் மேல் கொண்டிருக்கும் பக்தி, சகோதரப் பாசம், அன்புக் கணவராய்,  அருமைத் தந்தையாய், இருந்து மட்டுமல்லாமல் அவர்  மேற்கொண்ட கிரிக்கெட் தவத்தில் எத்தனை சவால்கள்  வந்தாலும் அதை எதிர் கொண்டு   அவர் மேலே எழுந்து வந்தது  எப்படி  என்பது தான்.

இந்த மகத்தான் மனிதருக்கு பாரத ரத்னா விருது வழங்கி    கௌரவித்திருக்கிறது நமது அரசு.
எந்த விருதோ, பரிசோ, புகழ்ச்சியோ  இந்த மனிதரை  ஒன்றுமே செய்யாது போலிருக்கிறது.அத்தனை எளிமை அவர் பேச்சில் மிளிர்கிறது.

அவர்   புகழ்  உச்சிக்குக்  காரணம் வெறும் கிரிகெட் மட்டுமல்ல அவருடைய எளிமை, அவர் குடும்பம்,  எடுத்துக்  கொண்ட நேர்மையான வழி இவையெல்லாம் தான் .
இவைகள் தான் உண்மையான காரணங்கள்.

முத்தாய்ப்பாய் அவர் தான் விளையாடிய கிரிக்கெட் பிட்சை  கையால் தொட்டு கும்பிடும் பொது  அங்கிருக்கும் ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நிறைய பேர் தங்கள் கண்களை  கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.நானும் தான்.

இவரைக் கிரிக்கெட்டின்  கடவுள் என்று  சொல்வது  சரி தானே!

image courtesy---google.

Thursday 14 November 2013

கோடீஸ்வரராக வேண்டுமா?





இன்று  உலக டையாபிடீஸ்  தினம்.
எதைப் பற்றி எழுதலாம் என்று  யோசித்ததில் கிடைத்த ஐடியா  ," சாக்லேட்"
என்ன ........... டையாபிடிஸ்  தினத்தன்று சாக்லேட் பற்றி  எழுதி எல்லோர்  எரிச்ச்சலையும் கொட்டிக் கொள்கிறாயா என்று கேட்கிறீர்கள் தானே!
அதே டையாபிடீஸ் காரர்கள் தான்  அவசரத்திற்கு  கையில் சாக்லெட்டுடன் அலைபவர்கள். நினைவில்  வையுங்கள்.

அதோடு ,தலைப்பில் , கோடீஸ்வரர் ஆக வேண்டுமா என்று கேட்டு விட்டு  எதைப் பற்றியோ சொல்கிறாளே என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.

தொடர்ந்து படியுங்கள்.....

சாக்லேட், சொல்லும் போதே நாவில் இனிப்பு  கரைகிறது. இந்த சாக்லேட்  கண்டு பிடிக்கப் படவில்லைஎன்றால், அல்லது  இப்பூவுலகை  விட்டு திடீரென்று  மாயமாகிப் போனாலோ  என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மிகவும் துன்பத்திற்கு உள்ளாகப் போவது  குழந்தைகளாகத் தானிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

நாமும்  தான்  மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ள  என்ன செய்வோம்??
மீண்டும், கல்கண்டு, சர்க்கரை, ஆரஞ்சு மிட்டாய் என்று தேட வேண்டியது தான்.
லட்டு போன்ற இனிப்புகளுக்கு உடனடி  வாழ்வு கிடைக்கலாம்.
சாக்லேட் ஹீரோ  என்கிற சொல்லே வழக்கத்தில் இருக்காது. (பாவம் திரு. மாதவன்.​)
போர்ன்விடா, பூஸ்ட் , சாக்லேட் பால்   எதுவும் இல்லாத வீடுகளை நினைத்துப் பாருங்கள்.(எனர்ஜியின் சீக்ரெட் என்று எதை சொல்வது? )

இதில் மிகவும்  பாதிக்கப் படப் போவது  பிரபலமான சாக்லேட் கம்பெனிகள் தான் . கதவை இழுத்து மூடி விட்டு அடுத்த வேலையில் இறங்க வேண்டியது தான்.

அவர்களை விடவும்  அதிகம் பாதிப்புக்குள்ளாவது  யாரென்று  நினைக்கிறீர்கள். காதலன் தான் .அப்பப்போ  கோபித்துக் கொள்ளும் காதலிக்கு சட்டென்று  தன்னிடம் ஸ்டாக்கில் வைத்திருக்கும்  ஒரு சாக்லேட் பாரை எடுத்துக் கொடுத்து சமாதானப்படுத்த முடியாதே. கணவனும் ஊடலில்  இருக்கும் மனைவியை சாக்லெட்டைக் கொடுத்து ,"ஸ்வீட் எடு, கொண்டாடு " என்று  சொல்ல முடியாதே.ஆக கணவன், காதலன் பாடு எல்லாம் திண்டாட்டம் தான்., இனி.......


சாக்லேட்டை நம்பியே இருக்கும் விளம்பர நிறுவனங்கள் என்ன செய்யும் சொல்லுங்கள்.எத்தனை பேருக்கு  பிழைப்பு இதை நம்பியே இருக்கிறது  பாருங்கள்.

பொன் வைக்குமிடத்தில் பூ வைக்கலாம்.
சாக்லேட் இருந்த இடத்தில் பொன் வைத்தால் கூட நிரம்பாது என்றே நினைக்கிறேன்..
ரொம்பவே  கஷ்டம் தான்.

இதில் " டார்க்  " சாக்லேட்டைப் பற்றி வேறு பிரசாரம் செய்கிறார்கள்.
இதயத்திற்கு நல்லதாம்.  ஃ ப்ளாவினாயிட்ஸ்  இருக்கிறதாம் . அதனால் மன அழுத்தத்தைக் குறைக்க டார்க் சாக்லேட்  சாபிடுங்கள் என்கிறார்கள்.

சாக்லேட்டே  இல்லை என்கிறேன். டார்க் சாக்லெட்டிற்கு எங்கே போவது ?

ஆமாம் உனக்கேன் இந்த விபரீத கற்பனை என்று கேட்கிறீர்கள் தானே!

கற்பனையெல்லாம் இல்லை.
விகடனில்  இன்பாக்ஸ் பகுதியில் வந்திருந்த ஒரு செய்தி தான் என்னை பதிவு எழுத வைத்தது.

சாக்லெட்டிற்கு தேவையான மிகவும் முக்கியமான  பொருள்  கோகோ (cocoa).
அந்த கோகோவிற்கு 2020 இல் தட்டுப்பாடு வரப் போகிறதாம்.அதனால்  சாக்லேட்  என்கிற வஸ்து  இல்லாமல் போகும்  நிலை வரலாம். என்பது தான் அந்த செய்தி.

அதற்காக நிறைய கோகோ  செடிகள்  வளர்க்கத் திட்டமிடப் படுகிறதாம்.ஆனால் அது வளர்ந்து  சாகுபடி செய்ய  குறைந்த பட்சம்  நான்கு வருடங்கள் ஆகலாம். அதற்குப் பிறகு தான்  அறுவடையே.  உடனே மனம் கணக்குப் போடுகிறது தானே! 2020 ற்கு இன்னும் ஆறு வருடங்கள் தான் இருக்கிறதே என்று.
கோகோ  விளைந்து  அறுவடை நடந்தால்  தான் சாக்லேட். இல்லையென்றால் 2020ற்குப் பிறகு  பிறக்கும்  குழந்தைகளுக்கு  சாக்லேட்  என்ன ?என்பது பற்றி   தெரியாமலே போகும்  நிலை கூட வரலாம்.
உடனே  நிறைய சாக்லேட் வாங்கி  பதுக்கலாம்  என்று தானே தோன்றுகிறது. நானும் அப்படித் தான் நினைத்தேன்.

ஆனால் பாருங்கள் அன்று "மக்கள் " டிவி  சானலில் கோகோ  சாகுபடி செய்வது பற்றி விரிவான விளக்கம். நிறைய விவசாயிகள் ஊடு  பயிராக
சாகுபடி  செய்கிறார்கள் என்கிற செய்தி மகிழ்ச்சி.

ஆனால் நம் விவசாயிகள்  மட்டும் தானா, கோகோ பயிர் செய்வார்கள்?
நானும் செய்யப் போகிறேன் என் வீட்டுத் தோட்டத்தில்.. இப்ப ஆரம்பித்தால் தான் ,இன்னும் ஆறுவருடத்தில்  எழப்போகும் சந்தர்ப்பத்தை  உபயோகித்துக் கொள்ள முடியும்  .இதோ போய் கொண்டேயிருக்கிறேன்  நர்சரிக்கு.

நான் சொல்வது  உண்மையே. நீங்களும்  சாகுபடியை ஆரம்பியுங்கள். இன்னும் ஆறே வருடத்தில்  பெரும் கோடீஸ்வரர்கள் நாம்.
பெல்ஜியம்  நாட்டின் (உலகின் மிகச்  சிறந்த சாக்லேட்டுகளை  உருவாக்குபவர்கள்)
சாக்லேட் கம்பெனி  எம்.டி, மற்றும் Cadbury, Hershey போன்ற கம்பெனிகளின் எம்.டிக்கள்   நம் வீட்டு வாசலில்  லைன் கட்டி நிற்பார்கள். .
எதற்கா........? கோகோ வாங்கத்தான்.
அப்புறம் என்ன " ஸ்வீட் எடு,  கொண்டாடு " தான்.

image courtesy---google.

Monday 11 November 2013

கோல்டன் " Zero "







" 49 O "என்ற தேர்தல் ஒட்டுக் கருவியின்  கடைசி பட்டனைப் பற்றிய  பதிவு என்று நினைக்கிறீர்களா?  

 இல்லை.

 ஆசிரியையாய்  இருந்ததால் ,எனக்கு  பூஜ்யத்தின் மேல் தனி அபிமானமோ  என்றும்  நினைக்க வேண்டாம்.

இணையத்தில் படித்த ஒரு விஷயத்தைப் பற்றித் தான் இது.
உண்மைச்  சம்பவம் என்கிறது மெயில் .

ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு மாதாந்திர  ' கேஸ் '(cooking gas)  பில்  வருகிறது. நம்மைப் போல் சிலிண்டர் இல்லை போலிருக்கிறது.' கேஸ் 'பைப்ப்பில் வரும் என்று நினைக்கிறேன். அதனால் மாதாந்திர பில்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது வரை அவர் ' கேசை ' உபயோகிக்கவில்லை  என்பது தான். அதனால்  'ஜீரோ டாலருக்கு ' பில் வருகிறது.நண்பர் சும்மா இருந்து விடுகிறார். இது அறியாமல் நடந்த தவறு. அதனால் அவர்களே சரி செய்து விடுவார்கள் என்று.

அடுத்த மாதமும், அதற்கடுத்த மாதமும் அதே ' ஜீரோ  டாலருக்கு 'பில் வருகிறது. அதுவும் உடனே கட்டணத்தை செலுத்த சொல்லி.
(அவர் வீட்டில் சமைக்கவே மாட்டாரா? காபி  .... இல்லையில்லை  வெந்நீர்.......அது கூட  வைத்துக் கொள்ள மாட்டாரா? என்று கேட்காதீர்கள்.
அவருக்கு திருமனமாகவில்லையோ என்னவோ? உடனே ,இளகிய  மனதுடையவர்கள் , பாவப்பட்டு அவருக்குப்  பெண் பார்க்க கிளம்பி விடப் போகிறீர்கள்.. நம்மூர்  பையன்களே,  பெண் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இதில் அவருக்கெல்லாம் நம் ஊர் பெண் எதற்கு?. )

இப்பொழுது அந்த நண்பர்  கேஸ் கம்பெனிக்கு போன் செய்ய , அவர்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, சரி செய்கிறோம் என்று சொல்லி விட்டனர். நண்பரும் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால் அந்த நிம்மதி அடுத்த மாத பில்  வரும் வரை  தான். அடுத்த மாதமும் இதே கட்டணத்திற்கு பில்.

அவர் எரிச்சலாகி இந்தத் தொல்லையிலிருந்து எப்படி விடுபடலாம் என்று யோசித்தார்.இதற்கு  ஒரே வழி  'கேஸை ' கொஞ்சமாவது உபயோகப் படுத்துவது தான்  என்று தீர்மானித்து, 'கேஸை 'உபயோகிக்க போனால் , இவர் பில் பணம் கட்டாததால்  இவர் 'கேஸ் 'இணைப்புத் துண்டிக்கப் பட்டிருந்தது.அதோடு இன்னும் பத்து நாட்களில் பணம் கட்டும்படி ஒரு கடிதமும் வந்திருந்தது.

சரி, இவர்கள் மொழியிலேயே நாமும் பேசலாம் என்று    'ஜீரோ' டாலருக்கு செக் எழுதி 'கேஸ்' கம்பெனிக்கு அனுப்பி விட்டார்.'கேஸ்' கம்பெனியும் உங்கள் பில் செட்டிலாகி விட்டது என்று செய்தி அனுப்பி விட்டது.
(காமெடியாயில்லை!)

பிறகு தான்  விஷயமே இருக்கிறது.

இரண்டு மூ ன்று நாட்களுக்குப் பிறகு வங்கி மேனேஜர் நண்பரை போனில் தொடர்பு கொண்டு  "எதற்கு  ஜீரோ டாலருக்கு செக் கொடுக்கிறீர்கள் ?"என்று கோபப்பட  , இவர் விவரத்தை சொல்லியிருக்கிறார்.
அதற்கு அந்த மேனேஜர், " உங்கள் "செக்"கால் எங்களுக்கு அன்றைய  அலுவல்கள் எதையும் செய்ய முடியாமல் கம்ப்புட்டார்  க்ரேஷ்  ஆகிவிட்டது . எங்கள் வாடிக்கையாளர்கள் நிறைய பேரின்  செக்  திருப்பியனுப்பும்படியாகி விட்டது. அதற்காக உங்கள் மேல் நாங்கள் நஷ்ட ஈடு  வாங்க கோர்டுக்குப் போகலாம் ," என்று பொரிந்து தள்ளி  விட்டார்.

இப்படியும் ஒரு தொல்லையா? முன்னே போனால் முட்டுகிறது, பின்னே வந்தால் உதைக்கிறது என்று நினைத்திருப்பாரோ நம் நண்பர்.

'கேஸ்' கம்பெனியும்  ஒரு வாரத்திற்குப் பிறகு இவருடைய  செக்   திரும்பி விட்டது என்கிற  காரணத்தைக் காட்டி , உடனே பணத்தைக் கட்டாவிட்டால் கோர்ட்டிற்கு இழுப்பதாக மிரட்டியது.

"நீங்களெல்லாம்  என்ன என்னை  கோர்டுக்கு இழுப்பது. நானே போகிறேன் " என்று நண்பர் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார். முதலில் இவருக்காக வாதாடுவதற்கே  எந்த வக்கீலும் தயாராகயில்லை  .('ஜீரோ டாலருக்கு'  ஒரு கேசா ? என்கிற இளக்காரம் தான் ). பெரும் முயற்சிக்குப் பிறகே இவர் கோர்ட்டில் வக்கீல் வைத்து வாதாடி  வெற்றி பெற்று, கேஸ் கம்பெனியிடமிருந்து  நஷ்ட ஈடு  பெறுவதற்கான கோர்ட் ஆர்டர் வாங்கியிருக்கிறார்.

கோர்ட் ஆர்டர் ,  கேஸ் கம்பெனிக்கு  ,
1. அவர்களுடைய கம்ப்யுட்டரின் தானியங்கி  பில்  போடும்  முறையை சீரமைக்கவும் ,
௨. நண்பருக்கு  அவருடைய  செக் திருப்பட்டதற்கான செலவையும்,
3.வங்கி  வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட  கஷ்டத்திற்கான நஷ்ட ஈடும்,
4.நண்பரின்  கோர்ட்  செலவையும்,
5. நண்பரின்  மன உளைச்சலுக்காக  கணிசமான  பணம் கொடுக்கும்படியாகவும்  
அறிவுறுத்தப் பட்டிருந்தது.

இத்தனையும்  "ஜீரோ" டாலருக்காகத் தான்.   அந்த ஜீரோ  " கோல்டன் ஜீரோ " தானே!

இதைப் படித்ததும்  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
"நமக்கு கேஸ் , சிலிண்டரில் தானே வருகிறது. நாம் பணமாகத்தானே சிலிண்டர்  போடுபவரிடம்  கொடுக்கிறோம்.அதனால் இந்தத் தகராறு  எல்லாம் இங்கே வராது.இந்த  மாதிரி  நாம் கோர்டுக்கு  செலவு செய்வோமா ?
 நேரமும் , பணமும் இங்கே கொட்டியா கிடக்கிறது?
மேலும் இந்த  ஜீரோவைக் கண்டு பிடித்ததே இந்தியர்களாகிய நாம் தானே .அதனால் இந்த ஜீரோ எல்லாம் நம்ம கிட்டே ஒன்றும் வாலாட்டாது.நம்மவர்கள் அவ்வளவு மோசமும்  இல்லை. இப்படிப் பட்ட பில் எல்லாம் நமக்கு வராது . அப்படியே தவறுதலாக  வந்தாலும்  கோடிக்கணக்கில் தானே இருக்கும் ." என்று தானே நினைத்தீர்கள்.

நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டு  , லாப்டாப்பை  மூடி விட்டு காபி போட, உள்ளே செல்ல எழுதேன்.

டிவி மேலிருந்த ,செல்போனிடமிருந்து   செல்லமாய் ஒரு சின்ன சினுங்கல் .
பார்த்தால்  எஸ்.எம்.எஸ். வங்கியிலிருந்து.

அலட்சியமாய் திறந்து பார்த்தால்  ," உங்கள் க்ரெடிட்  கார்டுக்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகை Rs.0.00. "அதோடு  இதைக் கட்ட வேண்டிய கடைசி தேதியையும் குறிப்பிட்டிருந்தது.

வங்கியும் , செல்போனும் என்னைப் பார்த்து  ,"இப்ப என்ன  செய்வே ? இப்ப என்ன செய்வே? " என்று  நக்கலடிக்கிறதோ !
                                                           


images courtesy---google.                                                         

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்