Wednesday 24 December 2014

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-- 1

                                ஹூ  ஆர்  யு?

courtesy--google images

 ராசி அடிக்கும் லூட்டிகளும் ,, அதில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷ்ணுவைப் பற்றியும் " அப்பாவி விஷ்ணு " மின்னூலில் படித்திருப்பீர்கள்.
இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் ராசியிடம் விஷ்ணு மாட்டிக் கொண்டு முழிப் பிதுங்கிப் போனார். அதைப்பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டாமா நீங்கள்? 

விசா வாங்கப் போனதிலிருந்து  ஆரம்பிக்கிறது ராசியின் லூட்டி. அங்கிருந்து ஆரம்பிக்கிறேன்.

ராசி அமெரிக்காவில் , அவள் மகன் வீட்டிற்குத் போகப் போகிறாள். விசாவிற்கு   வேண்டிய எல்லா ஆவணங்களையும் அவன்  அனுப்பி விட்டான்.  மேலே நடக்க வேண்டியவைகளைப் பற்றி ராசி ஆலோசிக்க ஆரம்பித்தாள்.  யாரிடம் தெரியுமா? விஷ்ணுவிடம்...என்று நினைத்தால் அது உங்கள் தவறு. அவருக்கு   என்ன தெரியும் ? அங்குப் பேசும் ஆங்கிலம்  இவருக்கும் தெரியும். அதைத் தவிர வேறென்னத் தெரியும் என்பது போல் விஷ்ணுவை ஒரு பார்வைப்  பார்த்து விட்டு, ஹால் மூலையில்  சாதுவாய் சுருண்டிருந்த போனை நோக்கிப் போனாள். இதற்கு முன்பாக  அமெரிக்கா  சென்று வந்திருந்தத் தன்  தோழிகளுக்குப் போன் செய்து, விசாரிக்கத் தான். .

ஒவ்வொருத்தியும் முதலில்  ராசியைக் கேட்டது ," விசா கிடச்சாச்சா ? "

அதற்குத் தானே  அவர்களிடம் பேசுகிறாள் ராசி. எல்லோரிடமும் விசாரித்து ஏஜண்ட்  பேரை
பேப்பரில்  எழுதிக் கொண்டே வந்தாள் .  பத்து விசா  ஏஜண்சி பேராவது  அவள் கையில் இருக்கும். பக்கத்திலேயே   எந்த ஏஜண்ட்  யார்  பரிந்துரைத்தது  என்கிறக்  குறிப்புடன்  எழுதி ....  போனை வைத்தாள் .

பிறகு  லல்லி, ஜானகி, ஸ்ரீதேவி,  இவர்கள் சொன்ன ஏஜண்ட்  எல்லோரும் கட் .

"ஏன் ? எதுக்கு   எல்லோரிடமும் ஏஜண்ட் பேர் கேட்டு , அப்புறம் எதுக்கு வேண்டாம்னு  அடிக்கிறே ராசி. " விஷ்ணு கேட்டார்.

வேலையத்தவன்   பூனையைக் கட்டி என்னமோ செய்தது போலேல்ல இருக்கு ராசி செய்யற வேலை என்று நினைத்துக் கொண்டார் விஷ்ணு. சொல்லவில்லை. சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளுவதற்கு விஷ்ணு முட்டாளா என்ன?

" நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது.அவங்க எல்லாம் வயித்தெரிச்சல் பிடித்தவர்கள். நமக்கு விசா கிடைக்காம போகனுங்கறதுக்காகவே சதி செய்தாலும் செய்வாங்க. அதனால் தான் வேண்டாம்னு விட்டுத்தள்ளத் தான் அவங்க சொன்ன பேரையெல்லாம்  எழுதிகிட்டேன். "

" உன்னோட பிரண்ட்ஸ் தானே அவங்க எல்லாம். அவங்க எப்படி சதி......" இழுத்தார் விஷ்ணு.

" பிரண்ட்ஸா இருந்தா..................... பொறாமைப்பட  மாட்டாங்களா?" புருவத்தை உயர்த்தி திருப்பிக் கேள்வி கேட்டாள் ராசி.

" என்னவோ போ. எனக்கு உங்கள் ஃபிரண்ட்ஷிப் பற்றி ஒன்றும் புரியல.  யாராவது ஒரு ஏஜண்ட் கெடச்சா சரி. "


அப்படி இப்படி யோசித்து கடைசியாக ,சுருதி சொன்ன  ஏஜெண்சியை  நாடினாள் . ஏஜண்ட்   ராசியிடமிருந்தும் , விஷ்ணுவிடமிருந்தும்  பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டு  இரண்டொரு நாட்களில்   தொடர்பு கொள்வதாக  சொல்லி விட்டு நகர்ந்தார்.

அப்பொழுதிலிருந்து   ராசிக்கு நிலைக் கொள்ளவேயில்லை.  சமையலறைக்கும், போனிற்கும் ஒரு ஆயிரம் தடவை நடைப் போட்டிருப்பாள். வரும் போன்  எல்லாம்  ஏஜெண்ட்  என்றே  நினைத்துப் பாய்ந்து எடுத்துக் கொண்டிருந்தாள் . 

ராசி அமெரிக்கா போக வேண்டும் என்று நினைத்திருந்தால் என்றைக்கோ போயிருக்கலாம்.

அவள்  மகன் பல முறை அழைத்தும், , மருமகளுடன்  சுமுகமான உறவில்லாததால் ,இவ்வளவு  நாள்  அமெரிக்கா போவதையே தவிர்த்து வந்தாள் .   "பெரிய அமெரிக்கா'  என்று  தோளில் முகவாய்க்கட்டையை இடித்துக் கொள்வாள். இப்ப மட்டும் என்ன  இவள் மருமகள் சமாதானப் புறா பறக்க விட்டாளா என்று யாரும் கேட்காதீர்கள். தீடீரென்று  அவளுக்குத் தோன்றிவிட்டது,," குழந்தைகள் அப்படி, இப்படி தான் இருப்பார்கள் . நாம் தான் விட்டுக் கொடுத்தால் என்ன ?"  என்று சொல்லிக் கொண்டு விசா வாங்க , விழாவிற்குப் போவது போல்  நினைத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள் .பிள்ளைப் பாசமோ என்னவோ?

ஏஜண்டும் ,  எல்லா  பார்மாலிடீஸ்சும் முடித்து விட்டு  , அவர்கள் விசா வாங்குவதற்கானத் தேதியைக் குறிப்பிட்டு , அவர்கள் எடுத்துக்  கொண்டுப் போக வேண்டியதையும், அவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று  சொல்லிக் கொடுத்து விட்டு அனுப்பி வைத்தார். சும்மா இல்லை. அவர் ஃபீசை வாங்கிக் கொண்டு தான்.கணிசமாகக் கறந்துவிட்டார். பின்னே ராசி அமெரிக்கா அமெரிக்கா என்று பறந்ததால் , அவரும்  அதை  
சரியாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டார்.

விசா வாங்க வேண்டிய நாளும் வந்தது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் மதியம் இரண்டு மணி. 

காலையிலிருந்து ராசியும் விஷ்ணுவும் ஒரு பதட்ட நிலையிலேயே இருந்தார்கள்.  காலை எழுந்ததும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலில்  ஒரு சிதறு  காய் உடைத்தாயிற்று . விசா கிடைத்ததும் அடுத்த காய் உடைப்பதாகஅம்மனிடம் பேரம் பேசி முடித்தாள்  ராசி.

இரண்டு மணி விசா நேர்காணலிற்கு  ஆகாரத்தை பத்து மணிக்கே முடித்துக் கொண்டுப் பதினோரு மணிக்கே விஷ்ணுவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். விஷ்ணு , " இப்பவே போகணுமா? " என்று கேட்டதற்கு, " இங்கே இருப்பதை எம்பசி வாசலில் காத்திருப்போம் " என்று அடித்து சொல்லிவிட்டாள்.,  

ஆட்டோவைப் பிடித்து  அண்ணா சாலை எம்பசி வாசலில் மண்டை வெடிக்கும் வெயிலில்  வந்து இறங்கி, அங்கு நிற்கும் பெரிய வரிசையில் தங்களையும்  ஐக்கியப் படுத்திக் கொண்டார்கள் . 

வரிசை நகர  ஆரம்பித்தது.இவர்கள் முறை வந்ததும்,
செக்யுரிடி ," உங்கள் இன்டர்வியு  லெட்டர் எங்கே ? " என்று கேட்க,

ராசி, பவய்மாக எடுத்து நீட்டினாள். உடனே செக்யுரிட்டி," இரண்டு மணிக்கு ஏன் இப்பவே வந்தீர்கள்  ? போய் அப்படி நில்லுங்கள் " என்று டீச்சர் மாணவனை கிளாசுக்கு வெளியே போகச்  சொல்வது போல் சொல்ல , செக்யுரிட்டி கை காட்டிய இடத்தில்  ஒரு பெரியக் கும்பலே இருந்தது. நம்மைப் போல் இத்தனை பேரா என்று நினைத்துக் கொண்டே இவர்களும் அவர்களுடன்  சேர்ந்துக் கொண்டனர்.

விஷ்ணு அதிக நேரம் நிற்க  முடியாமல் ஓரமாய் கீழே உட்கார்ந்துக் கொண்டார்.பிளாட்பாரத்தில் தான் . பிறகென்ன " சேரா "  போடுவார்கள்?  ராசியையும்  உட்கார சொல்லிப் பார்த்தார். அவள் காதிலேயே வாங்காமல் எட்டி எட்டி  பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்து, " ஏன் ராசி அப்படி  டெண்ஷானாக இருக்கே? அங்கு நிற்பவர்  ஜனாதிபதி ஒபாமா இல்லையே " என்று நக்கலாக சொல்லவும், அருகிலிருந்தவர்கள் சிலர் " களுக் ' என்று சிரித்து  விட, ராசியின் முகத்தில்  எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஒரு முறை முறைத்தாள் விஷ்ணுவைப் பார்த்து....... 

அதற்குள்  ஆபத்பாந்தவனாய் , வந்தது  ஒரு குரல் . ஆமாம் , இவர்கள் நேர்காணல் நேரம் வந்ததாக செக்யுரிட்டி சொல்லவும் , ராசி பாய்ந்துக் கொண்டு  வரிசையில் நின்றுக் கொண்டாள்.

விலை உயர்ந்த கைப்பை முதற்  கொண்டு, கையிலிருந்த  எல்லாவற்றையும்   அனாதையாய்  வெளியே எறிந்து விட்டு,  வெறும் பேப்பர்களுடன் உள்ளே சென்றனர். விஷ்ணுவிற்கு, இப்படிஎல்லாம் அந்த ஊருக்குப் போக வேண்டுமா என்றிருந்தது. ராசி விட்டு விடுவாளா என்ன?

உள்ளே சென்று,  விஷ்ணுவிற்கு வேறு பயம் பிடித்துக் கொண்டது. தனக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் அமெரிக்கர்களின் ஆங்கிலம்(accent)  சட்டென்றுப் புரியாதே.

சமீபக் காலமாக Star Movies, HBO, AXN...... என்று எல்லா சேனல்களையும்  ராசி  பார்த்துக் கொண்டிருந்தாள். ஆங்கிலம் புரிய வேண்டுமே ! அதற்காகத்தான். அவளுக்கு ஆங்கில சினிமாவில் புரிந்தது என்னவோ ஷ் .... ஷ் .....ஷ்  என்ற ஒலி  தான்.  இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று தான்  வந்திருந்தாள்.ஆனாலும் இவர்கள் பேசும் போது பல்லிடுக்கில் அல்லவா பேசுகிறார்கள். என்கிறப் பயம் இருந்தது..வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அதிகாரி இவர்களிடம்,

" ஹாய் ஹௌ  ஆர் யு?" 

ராசி முந்திக் கொண்டு

" ஃ பைன் ..தாங்க் யு " என்று சொன்னதோடு  நிற்காமல் , பதட்டத்தில்  என்ன சொல்கிறோம் என்றுப் புரியாமல வாய் குழற.......

( ஹௌ  ஆர் யு ? என்று திருப்பிக் கேட்பதாக  நினைத்துக்  கொண்டு ),

" ஹூ  ஆர் யு ? "  என்று கேட்டு விட்டாள் .

அந்த ஆறடி உயர அமெரிக்க அதிகாரி  அரண்டு போயிருக்க வேண்டும். 

கோபம் கொப்பளிக்க, சிவந்த முகம் மேலும் ஜிவுஜிவுக்க , " வா....ட்......?" என்றுக் கேட்க

 பதறின விஷ்ணு , அதிகாரியிடம்  மன்னிப்புக் கேட்டு விட்டு ராசியின்  தவறை திருத்தினார் .

 விசா ஆபிசருக்கு  கோபம் சட்டென வந்தாலும்  ராசியின் பதட்டத்தைப் பார்த்து மன்னித்து  விட்டு  , 

" ...............விசிட் ? "  என்றுக் கேட்டார். 

விசிட்    என்கிற  வார்த்தை மட்டுமேப் புரிந்தது இருவருக்கும் .

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்  கொண்டு " எஸ் ..எஸ் ...விசிட் " என்றுத் திருப்பி  சொல்லினர்

அதிகாரி இப்பொழுது ,
" ஹூம் ...ஆர்....யூ ...கோயிங்...டு... விசிட் ? " என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்கவும்.

ராசியும் விஷ்ணுவும் கோரசாக " சன் " என்று சொல்லவும்  . 

" ஓ...கை "( O.K)   

 அதிகாரி " இதென்னடா  நமக்கு இன்று வந்த சோதனை " என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ , இவர்களை முதலில் அனுப்பி விடலாம் என்று தீர்மானித்து , அவர்களுக்கு ஆறு மாத விசாவைக் கொடுத்தனுப்பி விட்டார். இருவரும் வெளியே வந்தார்கள்.

விஷ்ணு ராசியிடம், " சொன்னால் கேட்டால் தானே. ஆங்கிலம் தெரியாது என்றால் தமிழ் பேசும் ஒருவரை வைத்துக் கொண்டு நேர்காணல் செய்திருப்பார்கள். நீதான் நமக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவர் நினைத்தால் அதற்காகவே விசா கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்று சொன்னாய்"

ராசி சொன்னது தான் டாப்,"அதையெல்லாம் விடுங்கள்.... நான் என்ன தப்பாய் பேசி விட்டேன். " ஹு ஆர் யு ?"  என்று கேட்டால் அது ஒரு தப்பா...அதற்குப் போய் அவருக்கு இவ்வளவு கோபம் வருவானேன்." 
நீங்களே சொல்லுங்க.....

அமெரிக்க எம்பசியில் ,  அமெரிக்க இம்மிக்ரேஷன்  ஆபிசரைப்  பார்த்து "ஹூ ஆர் யு?" என்று கேட்டால் தப்பில்லையாம். தெரிஞ்சிக்கோங்க. 

அமெரிக்காவில் இன்னும் என்னென்ன  கூத்தெல்லாம் ராசி   அடிக்கப் போகிறாளோ...........

பார்ப்போம்.......

Thursday 11 December 2014

உறவுகளுக்கு formula உண்டா?


google images 




திரு. ஜி.எம். பாலசுப்பிரமணியம்  அவர்கள் உறவுகள் என்கிறத் தொடர் பதிவிற்கு  அழைத்திருந்தார். எனக்கு இப்படி சீரியசாக ஒரு பதிவு எழுதிப் பழக்கமில்லை என்று சொன்ன பின்பும் , என்னைத் தப்பிக்க விடவில்லை. ஆக விதி வலியது (எனக்கில்லை, படிக்கும் உங்களுக்கு).

. என்னைத் தொடர் பதிவிடுமாறு அழைத்ததற்கு திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ உறவுகளுடன் நான் வந்து விட்டேன்.நான் எழுத நினைத்ததை ஒருக் கதையாக/சம்பவமாக  உங்கள்  முன் வைக்கிறேன்.. தொடர்ந்துப் படியுங்கள்.........
                                        ---------------------------------------------

தன்  தம்பிக்குத்  திருமணம் கிட்ட நெருங்குவதை நினைக்கும் போது  சற்றே மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஜானகிக்கு . இரண்டே வயதான நித்யாவின்  பட்டுப்பாவாடை, சட்டை , எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி.. படுக்கையறையில் இருக்கும் பீரோவிலிருந்து தன்னுடைய பட்டுப்புடவை, நகைகள் என்று பெட்டிக்குள் திணிக்க முடியாமல் திணித்துக் கொண்டிருந்த போது .....

உள்ளே எட்டிப் பார்த்த அவள் மாமியார்........ க்கும் ......என்றுக் கழுத்தை நொடித்துக் கொண்டுப் போனாள் .
அவள் மாமியார்  எப்பவுமே இப்படித்தான் இருப்பாள் அது பழகி விட்டது ஜானகிக்கு .  மாமியாரின் கோபம்,  சீண்டல்கள்.......... சற்று  வருத்தமளிக்கும். ஆனால் ராஜேஷின் அன்பும் காதலும் , இதையெல்லாம் மறக்கடிக்கும்.அவன் காதலில் இவள் கிரங்கியிருந்தாள்  என்று சொன்னால் தப்பில்லை.


உள்ளே நுழைந்த ராஜேஷ்," மேடம்  தம்பிக் கல்யாணத்திற்குத் தயாராகி விட்டீர்கள்  போலிருக்கிறதே. சரி. இந்தாப் பணம், உன் தம்பி குமாருக்கு திருமணப் பரிசாக  மூன்றுப் பவுனில் செயின் ஒன்று வாங்கி விடு. குமாருக்குப் பிடித்த மாதிரி, அவனை  அழைத்துக் கொண்டு  போய்  வாங்கு. நான் வந்து வாங்க நேரமிருக்காது." என்றான் . காலைப் பிடித்துக் கொண்டு நின்ற மகளை த் தூக்கி....." நித்யா குட்டி... அப்பாவை விட் டு விட்டு ஊருக்குப் போகிறாயா? " என்றுக் கொஞ்சிக்  கொண்டிருக்கும்  போதே  ராஜேஷின் அம்மா தொண்டையைக் கனைத்துக் கொண்டு வந்தாள் .

" ராஜேஷ்......... ஜானகியும்  நித்யாவும் நாளைக்குத் தானே கிளம்புகிறார்கள். இப்பொழுது வா நீ. டிபன் சாப்பிட " என்று சிடுசிடுப்பாக அழைத்துக் கொண்டுப் போனாள் .
சற்று வருத்தமாயிருந்தாலும்  ராஜேஷின் மேலிருந்தக் காதல்  அவள் மாமியாரின் சிடுசிடுப்பை  புறக்கணிக்க வைத்தது. கல்யாணத்திற்குப் பின் வந்தக் காதல் தான்.

மறு நாள்ஜானகி நித்யாவை அழைத்துக் கொண்டு இரவு மெயிலில்  சென்னைக் கிளம்பினாள். ராஜேஷும் அவன் அம்மாவும் திருமனத்திற்கு ஒரு நாள் முன்பாக வருவதாக ஏற்பாடு. சென்ட்ரல் ரயில் நிலையத்தில்அதிகாலை  ஐந்து மணிக்கு நித்யாவுடன் கீழே இறங்கினாள்  ஜானகி . கதவருகிலே காத்துக் கொண்டிருந்த  அவள் அப்பா சிவராமன். நித்யாவை  அப்படியே வாரியணைத்துக் கொண்டார்.

அதற்குள் ராஜேஷிடமிருந்து போன் .  "

"பத்திரமாக  சென்னைப் போய்  விட்டாயா?"

" நான் சென்னை வந்து விட்டேன் .அப்பாவையும் பார்த்து விட்டேன் " என்றாள்  ஜானகி .

" ஹை .... தாத்தா " என்று நித்யாவும் ஒட்டிக் கொண்டாள். ஆட்டோப் பிடித்து வீட்டிற்கு வந்தார்கள். வழியிலேயே   மாப்பிள்ளையின்,  மாமியாரின் குசலம் என்று விசாரித்துக் கொண்டார் சிவராமன்.


வீட்டிற்குள் நுழைந்ததுமே " குமார் மாமா " என்று ஒட்டிக் கொண்டாள் நித்யா.

" என்னடா குமார் ? ஸ்ருதி   என்ன சொல்கிறாள்.  " ஒரு நாளில் எத்தனை போன் பேசுகிறீர்கள்?" என்று தம்பியை  கிண்டலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்  ஜானகி.

தாத்தாவிடமிருந்து பாட்டியின் இடுப்பில் ஏறிக் கொண்டாள் நித்யா. ஜானகி குளித்து முடித்து விட்டு, சுடச்சுட இட்லி , அவளுக்குப் பிடித்த வெங்காயசட்னியுடன் சாப்பிட்டு விட்டு, ஹாலில் இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள். குமார் ஆபீஸ் கிளம்பி விட்டான். இன்னும் மூன்று  நாட்கள் கழித்துத் தான் லீவு எடுத்திருக்கிறான் குமார்.


கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடியதும், இட்லி சாப்பிட்ட நித்யா  தூங்கி விட்டாள் . பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

ஜானகி கேட்டாள் " பக்கத்து வீட்டு மீனா அப்புறம் வந்தாளா அம்மா? "

" இரண்டு மூன்று  வாட்டி வந்து விட்டுப் போனாள் .  அவளுக்கென்ன அவள் ஆம்படையான் அவளைத் தலையில் தூக்கி வைத்துக்   கொண்டு ஆடுகிறான். மாமியார், நாத்தனார் யாரும் கூட இல்லை. அவள் வைத்தது தான் சட்டம் மகாராணியாய்  வைத்துக் கொண்டிருக்கிறான். . அப்படியிருக்கும் போது  அவளுக்கென்னக் குறைச்சல் " என்றால் அவள் அம்மா.

சிவராமன், தூங்கிக்  கொண்டிருந்தப் பேத்தியைத் தூக்கி , உள்ளேப் படுக்கையில் போட்டு விட்டு, சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு ஜானகியைப் பார்த்துக் கொண்டிருந்தார். என் மகள் தான் எவ்வளவு அழகு. ராஜேஷ் கொடுத்து வைத்தவன், எத்தனை  பதவிசு இவள் என்று  பெற்ற மனதுப் பெருமைப்பட்டது. ஆனால் அதை, அவள் கணவரும், மாமியாரும்  தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களோ  என்கிறக் கவலையும்   நெருடலாய்  உறுத்தியது அவருக்கு.

மனதில் தோன்றியதைக் கேட்டார் அவர்,
 " ஜானகி .... , மாப்பிள்ளை என்ன சொல்கிறார் ?

"எதைப்பற்றி ?"

சற்றுத் தயங்கி, " உன் மாமியார்  ராஜேஷின் அண்ணன் வீட்டில்  கொஞ்ச நாட்களும்,  உங்கள் வீட்டில் கொஞ்ச நாட்களும் இருக்கலாம் இல்லையா? "

" என் மாமியார் என்னுடன் இருப்பதால் உங்களுக்கு  என்னப்பா கஷ்டம்?"

" இல்லை ஜானகி . உன் மாமியார் எப்பவும் உன்னிடம்  கோபமாக இருப்பதாகவே தெரிகிறது. உனக்கு உன் வீட்டிலேயே  சுதந்திரம் இல்லையோ  என்று கூட  நினைக்கத் தோன்றுகிறது ஜானு.. மாப்பிள்ளை  உன்னிடம்அன்பாகத் தானே இருக்கிறார். " என்று அக்கறையுடன்  கேட்டார் சிவராமன்.

அப்பா... நான் சந்தோஷமாகவே  இருக்கிறேன்  அப்பா. ஏன் கவலைப்படுகிறீர்கள்.  உங்கள் மாப்பிள்ளை  என்னிடம் மிகவும் அன்பாகவே இருக்கிறார்? "  என்று ஜானகி  சொல்லி முடிக்கும் போதே அவள் செல்பேசி சிணுங்கியது. ராஜேஷ் தான்.

போனில் ஜானகி பேச ஆரம்பித்ததும், சிவராமன், நாகரீகம் கருதி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். பேசி முடித்ததும் உள்ளே வந்தார், சிவராமன் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர.

" நீ என் மகள் அம்மா . நீ சந்தோஷமாக இருக்க வேண்டுமே என்கிறக்  கவலை  தான்.. பக்கத்து வீட்டு மீனாவைப் பார். அவளும் நீயும் பால்ய சினேகிதிகள். அவளைப் பார் . நினைத்தால் வருகிறாள். நினைத்தால் போகிறாள். என்ன வேண்டுமோ, நினைத்த மறு கணமே வாங்கி விடுகிறாள்.  " என்று இடைவெளி விட்டார் சிவராமன்.

" அவளைப் போல் உன் வாழ்க்கை அமையவில்லை என்கிறக் குறை தான் உன் அப்பாவிற்கு " என்று சமையலுக்குக் காய் நறுக்கி கொண்டே சொன்னாள்  அவள் அம்மா.

எனக்கென்னக் குறை சொல்லுங்கள் அப்பா?

" உன் மாமியார்  உன்னைப் படுத்துவது,  உள்ளூரில் இருக்கும் நாத்தனார் அடிக்கடி   வந்து மாப்பிள்ளையிடம்  உன்னைப் பற்றிக் கோள் சொல்கிறாளோ  என்கிற சந்தேகம். உன் ஓர்ப்படி எந்தக் கவலையும் படாமல் , குடும்பத்தோடு ஒட்டாமல் நாக்பூரில்  உட்கார்ந்திருப்பது .........  
குருவித் தலையில் பனங்காயை நான் தான் தெரியாமல் வைத்து விட்டேனோ என்றுத் தோன்றுகிறது.  "

" அப்பா..... அப்பா...... என்று சொல்லிக் கொண்டே எழுந்து வந்து சிவராமன் அருகில் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டாள் ஜானகி . "

" அப்பா .... நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை, நான் கஷ்டப் படுகிறேன் என்பதைத் தவிர. என் மாமியார் சற்று சிடுசிடுப்பாக இருப்பது போல் வெளியேத் தெரியும். ஆனால் அவர்கள் மனது சொக்கத் தங்கம் அம்மா . அன்பை வெளியேக்  காட்டத் தெரியவில்லை அவர்களுக்கு அவ்வளவு தான்."

" சென்ற மாதம் நான் ஜுரத்தில் ஒரு வாரம் படுத்து விட்டேனே. அப்பொழுது என் மாமியார் என்னைக் கவனித்துக் கொண்டதைப் பார்த்திருந்தால் , உங்கள் பயம் அர்த்தமற்றது என்கிற  உண்மை உங்களுக்கும் தெரிந்திருக்கும். "

 " என் மேல் சற்றுக் கோபமாக இருக்கிறார் என்றால் ...... அதற்கும் காரணம் நான் சொல்கிறேன்.  என் மைத்துனர், திருமணமாகி  அவர் மனைவியுடன், நாக்பூரில்  இருக்கிறார். வருடம் ஒரு முறை வந்தாலும்  அவரும் , என் ஓர்ப்படியும் என் மாமியாருடன் செலவிடும் நாட்களை  விரல் விட்டு எண்ணி விடலாம்.  அப்படி இருக்கும் போது , உங்கள் மாப்பிள்ளை தானே அப்பா, என் மாமியாருக்கு ஒரே ஆதரவு. அதனால் நான் எங்கே அவரின் மகனை தட்டிக் கொண்டுப் போய் விடுவேனோ என்கிற பயம் தான் அப்பா. மாமனார் இறந்துப் போனதோ சமீபத்தில். அதனால் தோன்றியுள்ள பாதுகாப்பற்றத் தன்மை எல்லாம் சேர்ந்துக் கொண்டு  என்னிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துக் கொள்கிறார்கள் . அவர்களுக்கு  என்னைப் பற்றித் தெரிய சிறிது காலம்  ஆகும் .அதற்குப் பிறகு   பாருங்கள்  . இப்பொழுதே கொஞ்சம்  சுவாதீனமாக இருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மாமியாருடைய  சிடு சிடுப்பு சற்றுக் குறைந்திருக்கிறது என்று சொல்லலாம் அப்பா."

"என் நாத்தனார்  பற்றி நீங்கள் கவலைப் படுவது தேவையற்றது. அவளுடைய நடவடிக்கை அவளுடைய முதிர்ச்சியின்மையைத் தான் காட்டுகிறது. போதாதற்கு, எனக்கு என் கனவரின் முழு சப்போர்ட் இருக்கிறதே. அவள் என்ன கோள் சொன்னாலும் இவர் நம்புவதில்லை அப்பா. உங்களுக்கு அந்தப் பயமே வேண்டாம் அப்பா.  அவளுக்கும் என்னைப் பற்றி  முழுதாய் தெரிய வரும் போது அவளும் மாறுவாள் அப்பா. எனக்குத் தேவை  இப்பொழுது பொறுமையும் உங்களனைவரின் ஆதரவும் அவ்வளவே."

" நான் பொறுமையாக இருப்பதில் என் சுய நலமும் கலந்திருக்கிறதே அப்பா. இவர்களுடைய நடவடிக்கைகளினால்   நானும் அவரும் இன்னும் அதிக நெருக்கத்துடன் இருக்கிறோம் . அவருடைய அன்பும், காதலும் எனக்கு அபரிமிதமாகக் கிடைக்கிறது. சொல்லி முடிப்பதற்குள்  ஜானகியின் முகம், வெட்கத்தினால்  'குப்'பென சிவந்து விட்டது ."

"நீங்களெல்லாம் வந்தால் நான்கு நாட்களுக்கு மேல் இருக்க மாட்டேன் என்கிறீர்கள்?  உங்களை உபசரிப்பதில் என் மாமியார் ஏதாவதுக் குறை வைத்திருக்கிறார்களா  சொல்லுங்கள் அப்பா? சில நாட்கள் இருந்துப் பார்த்தால்   என் வாழ்க்கை எத்தனை இனிமை என்று உங்களுக்கும் புரிந்திருக்கும். " என்று  ஜானகி முடித்ததும்  அவள் அப்பாவும், அம்மாவும், அசந்து போய், திறந்த  வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

" ஆனாலும்,  பக்கத்து வீட்டு மீனா போல் சுதந்திரம் உனக்கு இல்லை என்பதை நீ மறுக்கவே முடியாது." என்று சிவராமன் மீண்டும் ஆரம்பிக்க

"அப்பா..மீனாவிற்குக் கிடைத்துள்ளது சுதந்திரமா என்பதைப் பற்றிய விவாதத்தைப் பிறகு வைத்துக் கொள்வோம். அது வேறு விஷயம். ஆனால்  என் வாழ்க்கையை நீங்கள் ஏன் அவள் வாழ்க்கையுடன் ஒப்பீடு செய்கிறீர்கள். .
கணக்கு ஆசிரியரான நீங்கள் எல்லா வற்றையும் அப்படியே பார்க்கிரீகள் என்று நினைக்கிறேன்.  மாணவர்களுக்கு (a+b)^2  சொல்லிக் கொடுப்பது போல்  நினைத்துக் கொண்டு  a,b  என்கிற இடத்தில் கணவனையும், மனைவியையும் போட்டு விட்டால் இது தான் விடை என்று சொல்கிறீர்கள்.

உளவியல் படித்த என்னால் இதை  ஒத்துக் கொள்ள முடியாது. உறவுகள் வேறு, உணர்வுகள் வெவ்வேறு , தனித் தன்மைகள் ,என்றுப் பல விஷயங்கள்  அடங்கி இருக்கின்றன . நான் ஏன், என் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  "

அவள் அம்மா கேட்டாள் ," ஜானகி   எப்படியடி  இத்தனை முதிர்ச்சியாக நினைக்க முடிகிறது உன்னால். உன்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக் இருக்கிறது." என்று முடிக்கவும்.

ஜானகி பதில் சொன்னாள் ," அம்மா நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. நீ தான் இதையெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தாய்?"

"நானா....." புரியாமல் விழித்தால் அவள் அம்மா .

"நீ வாழ்ந்துக் காட்டி இருக்கிறாயே.  எனக்குத் தான்  தாத்தா, பாட்டி, அத்தை, சித்தப்பா, பெரியப்பா என்று......  ஆனால்..உனக்கு, அவர்கள் உன் புகுந்த வீட்டு உறவுகள் . நீ யாரையும் விட்டுக் கொடுக்கவில்லையே.  உனக்கும் அவர்கள் மேல் வருத்தம் உண்டு, கோபம் உண்டு, சண்டை உண்டு, சச்சரவுண்டு...... எல்லாமே எனக்குத் தெரியும்.  ஆனாலும் சமாதானமும் உண்டு என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவள் நீதானே அம்மா ."

அப்பொழுதெல்லாம் நீ சொல்வாயே " குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" அதைத் தானே நானும் செய்கிறேன். இதிலென்ன அதிசயம் என்று சொல்லி முடிக்கவும் , நித்யா தூக்கத்தில் சிணுங்க  ஆரம்பித்தாள் . அவளைத் தட்டிக் கொடுக்க உள்ளே ஜானகி போகவும்.,வெளியே ஆட்டோ  நிற்கும் சப்தம் கேட்டது.

வந்தது காஞ்சிபுரம் அத்தை. " சிவராமா  எனக்கு என்ன புடைவை எடுத்திருக்கிறாய் காட்டு.  பிடித்தக் கலர் இல்லையென்றால்  இப்பொழுதே  மாற்றிக் கொடுக்கணும் . என்ன விலை? " கட்டளை வந்தது.

சிவராமனோ மனைவியைப்  பார்த்து. " மைதிலி,   அக்காப் புடைவையை  எடுத்து வா. நல்லக் கலர் அக்கா.  உனக்குப் பிடிக்கும் "என்று ஐஸ் வைக்கவும்.
உள்ளே ஜானகி  முகத்தில் புன்னகை.
'பரபர' வென்று ஹாலிற்கு வந்தாள்  ஜானகி ,அத்தையை வரவேற்க இல்லாவிட்டால்  அதற்கு வேறு அத்தை கோபித்துக் கொண்டு விடுவாளே .

ஆமாம்.
கோபத்தையும் , அன்பிற்குரியவர்களிடம்  தானே காட்ட முடியும்.

பி.கு : ஜானகிகளையும், மைதிலிகளையும் கவுரப்படுத்தும் விதமாக உங்களுக்குத் தெரிந்த ஜானகி, மைதிலிகளை  பின்னூட்டத்தில் பட்டியலிடுங்கள்.

Thursday 4 December 2014

'சார்' ஆன தாத்தா



google image






பேப்பர் ..... பேப்பர்..... பேப்பர்......

 வாரப் பத்திரிக்கையிலிருந்து,  என் கவனம் பேப்பர்....பேப்பர் என்று கூவிக் கொண்டு செல்பவரை  நோக்கித் திரும்பியது. நரைத்தத் தலை , அழுக்கேறிய லுங்கி,  சாயம் வெளுத்த சட்டை , தலையில் ஒரு கட்டுப் பழைய பேப்பர்  சகிதமாய் ஒரு வயதான மனிதர்   நடந்துக் கொண்டிருந்தார்.  பார்க்கப் பாவமாயிருந்தது.

பழைய பேப்பர் என்னவோ வீட்டில் இருந்தது  போட. ஆனால் இந்த மாதிரி ஆட்களைக் கூப்பிடுவது  சற்றே இப்பொழுதெல்லாம் கொஞ்சம் பயம் தான். பேப்பர் எடுக்கும் சாக்கில்  உள்ளே வந்து திருடுவதற்கு நோட்டம் விட்டாலோ, அல்லது திருடவே வந்து விட்டாலோ என்கிறப்  பயம் தான். நான் அந்த மனிதரைக் கவனிப்பதை அந்த மனிதரும் பார்த்து விட்டார்.

" பழைய பேப்பர் இருந்தாப் போடுங்கம்மா". என்று சொல்லி விட்டு "பிளாஸ்டிக், இரும்பு எல்லாம் கூட எடுப்பேன்"  என்று உபரியாய்   சொல்லவும், உள்ளே டிவிட்டரில்  சுவாரஸ்யமாய் ஆழ்ந்திருந்த என்னவர் , உள்ளேயிருந்து எட்டிப் பார்த்தார்.  தெருவில் போகிறவர்களை  எல்லாம் கூப்பிடாதே . நமக்கு வீ ட்டு வேலை செய்யும் கல்புவிடமே கொடுத்து விடு. அவள் ஏதோ பணம் வாங்கிக் கொள்ளட்டும்.  ,
 " தெருவில் சும்மாப் போகிற வம்பை  கூப்பிட்டு உள்ளே விடாதே " என்கிற  எச்சரிக்கையும் வந்தது என்னவரிடமிருந்து.

பேப்பர் காரரைப் பார்த்து நான், " ஒன்னும் இல்லைப்பா" என்றேன்.

மறு நாளும் அதே நேரத்திற்கு அதே பேப்பர் குரல் .  அதற்கடுத்த  நாளும்.... என்று சலிக்காமல் பேப்பர் எடுப்பவர் எங்கள் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

தினம் காலைப் பத்தரையிலிருந்து பன்னிரெண்டிற்குள்  பேப்பர் குரல் கேட்கும். அதே அழுக்கு உடைகள் தான்.  முதுகோடு ஒட்டிய வயிறு  , என்னை இம்சைப் படுத்தும்.

" பாவம். இந்தப் பேப்பர் எடுக்கும் தொழிலில் எவ்வளவு வந்து விடும்? இந்த மனிதருக்குத் தான் எத்தனை  நம்பிக்கை?  இதில் எப்படித்தான் குடும்பம் நடத்த  முடியும்? விற்கிற விலை வாசியில் என்னத்தை சாப்பிட முடியும்? " என்று என் கணவரிடம் அங்கலாய்க்கவும்,

அவரோ, " ஆமாம். உனக்கு என்னைத் தவிர அத்தனைப் பேரும் பாவம். நானும் சாப்பிட்டு எத்தனை நாளாச்சுத்  தெரியுமா ? "  என்று சொன்னார். என்ன உளறுகிறார் இவர் என்று நான் பார்க்கவும்   "தவலை வடையை  சாப்பிட்டு எத்தனை நாளாச்சு என்று சொல்ல வந்தேன்." எவ்வளவு  நாளாய் கேட்கிறேன்? கேட்டால் டாக்டர், டயட் என்கிறாய்?  " என்று  அவர் குறைப் பட்டுக் கொண்டார்.

தினமும் பேப்பர் காரர்  தெரு வழியாக செல்வது வழக்கமாச்சு  .  நம்பிக்கைத் தளராமல் எங்கள் வீட்டருகில் வந்ததும்  இன்னும் இரண்டுக் குரல் சேர்த்தே கூவுவார்.
 நானும் அவரைப் பார்த்துப் பரிதாபப் படுவதும்  தொடர்கதையானது.

ஒரு நாள் என் கணவர் கேட்டார்," ரொம்பவும்  பரிதாபப் படுகிறாயே. பேசாமல் அவரிடமே  பேப்பரைக்  கொடுத்து எடுத்துக் கொள்ள சொல். ஆனால் நீயே கேட்டருகில் கொண்டு போய் கொடுத்து  விடு என்று சொல்லவும்  , எனக்கும் அது சரியெனப் படவே அவரைக் கூப்பிட்டு, பழைய பேப்பர்  , பால் கவர், பழைய பிளாஸ்டிக் பக்கெட் என்று எல்லாவற்றையும்  அவரிடம் போட்டு விட்டேன் . பேப்பருக்குப் பணம் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. மற்ற சாமான்களுக்கு ஒரு சொற்பத் தொகைக் கொடுத்து  விட்டுப் போனார்.
ஆனாலும் மனதிற்குப்  பெரியத் திருப்தியாக இருந்தது. ஒரு மனிதருக்கு என்னால் ஆனது ஒரு நாள் சாப்பாடு கொடுத்து விட்டதாக( பெருமையாக ) எண்ணிக் கொண்டேன்.

அன்றிலிருந்து இரண்டு  மாதத்திற்கு ஒரு முறை பழையப் பேப்பர் காலியாகிக் கொண்டிருந்தது.எனக்கும்  பரம திருப்தி. பேப்பரும் காலியாகிறது. என்னாலான  உதவி அந்த வயதான  மனிதருக்கு என்று எண்ணிக் கொண்டேன்.( பேப்பருக்குக் காசு வாங்கிக் கொள்ளவில்லை . அதில்  எனக்குப் பெருமையோ பெருமை. அதை ஓரிருவரிடமும் பெருமையடித்துக் கொள்ளவும்   தவறவில்லை.)

அடிக்கடி  பேப்பர் தாத்தா, வீட்டிற்கு வர ஆரம்பிக்க,  எங்களுடன்  நன்றாகவே  பழக ஆரம்பித்தார்.  வராண்டா வரை அவர்  வர ஆரம்பித்தார். நாளாக  நாளாக அவர் குடும்பக் கதைகளை  அவிழ்த்து விட ஆரம்பித்தார்.
 அவர் மனைவிக்கு அறுவை சிகிச்சை ஆனது,  அவருக்கு அடிக்கடி வரும் நெஞ்சு  வலி ... என்று சொல்லிக் கொண்டிருப்பார்.  அவருக்கு நானும்  மோர் கொடுத்து  உபசரிப்பது வழக்கமானது..

 என்னவரோ"  இந்த மனிதர் இப்படி குறைகளாய் அவிழ்த்து விடுகிறாரே. நம் வீட்டரசிக்குப்   பாவம் தாங்காமல்  இவள் பாட்டிற்குப் பேப்பரையும்  போட்டு,  அதற்குப் பணமும் கொடுத்து அனுப்பி விடப் போகிறாள்  என்று  பயம்.

ஒரு நாள்  பர்சிலிருந்து " இந்தப் போட்டோவைப் பாரும்மா...என் பேத்தி "  என்று காண்பித்தார்.

அந்தப்பெண்  சிவப்பு சூடிதாரில் அழகாகவே இருந்தது.  அலை பாயும் கூந்தலை  இறுக்கி ஒரு ரப்பர் பேண்டிற்குள் சிறைப் படுத்தி இருந்தாள் .காதுகளிலும், கைகளிலும், பிளாஸ்டிக்  அணிகலன்கள் தான் ஆனாலும் வறுமையின் சாயல் தெரியவில்லை. பாவம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்களோ என்றிருந்தது எனக்கு.

" என்னப் படிக்கிறாள்? "

 " B.Sc.., ம்மா "

" பையன் பீஸ் கட்டி படிக்க வைக்கிறாரோ? " என்றேன்.

" ஆமாம்,"

" உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்  தாத்தா? "( இப்பொழுது நான் அவரைத்  தாத்தா என்று கூப்பிடும் அளவிற்கு சகஜமாகியிருந்தோம்.. )

"எனக்குக் குழந்தைகள்  இல்லம்மா..... "

"பின்னே..... இது யாரு? பேத்தின்னு சொல்றீங்களே தாத்தா? "

" அதுவா.....சுமித்ராவோட அப்பா  என்  தத்துப் பிள்ளை."

" சுமித்ரா......? "

" அதான் என் பேத்தி......."

 ஆச்சர்யம் கலந்தக் சுவாரஸ்யமாயிருந்தது எனக்கு.

அதற்குள்  டெலிபோன் மணி ஒலிக்க . "கொஞ்சம் இருங்கத் தாத்தா" என்று சொல்லி விட்டு போனை எடுக்க நான் உள்ளே கிளம்பும் போது .  " நான் நாளைக்கு  வரேம்மா  " என்று சொல்லி, என் சுவாரஸ்யத்தை அதிகமாக்கி விட்டு நகர்ந்தார்.

 சர்வ சாதாரணமாகத் தத்துப் பிள்ளை என்கிறார். பேத்தி என்கிறார். இவருக்கே சாப்பாட்டிற்கேக் கஷ்டம்( என்று நினைத்துக் கொண்டிருந்தேன்).  இந்தக் கஷ்டத்தில் தத்து எடுத்திருக்கிறார். "எத்தனைப் பெரிய மனது இந்தக் மனிதருக்கு "  மனதில் அவர் மேல்  அதிகமான மரியாதைத் தானாக  வந்தது.

அடுத்த முறை வரும் போது இவர் தத்து எடுத்தக் கதையைக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்குப் பிறகு  கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து நாட்கள் ஆளைக் காணவில்லை.  " வீடு  எங்கே என்றுக் கேட்காமல் போனோமே ? " என்று அங்கலாய்த்துக் கொண்டேன்.

" ஏன், வீட்டிற்குப் போய் விசாரிக்கப் போகிறாயா? " கணவர்  நக்கலடித்தார்.

சில நாட்களானது. பேப்பர் காரத் தாத்தாவும் என் நினைவடுக்குகளில் இருந்து மெல்ல நழுவ ஆரம்பித்திருந்தார்.

அன்று காலை ரசத்திற்குக் கறிவேப்பிலைத் தாளித்துக் கொண்டிருந்த போது , லேசாகக் கமறல் வந்தது. கமறலுடன், எங்கோ பேப்பர்  என்கிற சத்தம் கேட்டது போல் இருந்தது. கமறலை அடக்கிக் கொண்டு கவனிக்கையில்  பேப்பர்.... பேப்பர்  ..... என்கிற சத்தம் துல்லியமாய் கேட்டது. கேசை அணைத்து விட்டு

வெளியேப் போய்  பார்த்தால் , அட ..  . பேப்பர் தாத்தா..." தாத்தா... என்ன ஆச்சு உங்களுக்கு? இவ்வளவு நாட்களாகக் காணோமே " என்று விசாரித்தேன்.

" இல்லம்மா ஜுரம் வந்துப் படுத்து விட்டேன். உடம்பு சரியாக நாளாச்சு. .வயசாச்சு இல்லையா  அதான். "

" சரி. உள்ளே வாங்கத் தாத்தா." உடம்பு சரியில்லை என்கிறாரே என்று " இட்லி இருக்கு சாப்பிடுகிறீர்களா  ? " என்று கேட்டு ஒரு தட்டில் நாலு இட்லியும் சட்னியும் வைத்துக் கொடுக்க  " ஆசையாய் சாப்பிட்டார். சாப்பிட்டத் தட்டை வெளியே இருக்கும் குழாயில் கழுவி வைத்து விட்டு அவர் " அப்பாடி  ... " என்று உட்காரவும்.

நானும் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து, அவர் தத்துக் கதையை கேட்டுக் கொண்டேன்.  வீட்டருகிலேயே அம்மா இல்லாத பையன் , சித்திக் கொடுமை, அவனுடைய அப்பாவிடம் சொல்லி இவர் வீட்டிலேயே தங்கிப் படித்து  இன்று மாருதி சர்வீஸ் சென்டரில் கார் மெக்கானிக்  . அவனுக்கு இவரே கல்யாணம் செய்து வைத்து  பேரன் பேத்தியும் பார்த்து  விட்டார் இந்தக் கிழவர். ", நீங்கள் ஏன் தாத்தா இந்த தள்ளாத வயதில் பேப்பர் எடுத்துப் பிழைக்க வேண்டும்? பையன் தான் நல்ல சம்பாதிக்கிறானே"  என்று என் ஆதங்கத்தை சொல்லவும்.

" என் கையே  எனக்கு உதவிம்மா. அதோடு வீட்டில் சும்மா உட்கார்ந்து என்ன செய்ய ? " என்கிற பேச்சில் தன்னம்பிக்கை  வெளிப்பட்டது.

இரண்டு மூன்று  மாதம் ஆகியிருக்கும். ஒரு நாள் பேப்பர் தாத்தா வந்தார்,
 " அம்மா  என்னமோ  பான்  கார்டாமே ? அதை எங்கே போய்  வாங்க வேண்டும்.? " என்று தாத்தா கேட்க ,
நானோ அசால்டாக  அவர் ஆதார் கார்டைக் கேட்கத் தெரியாமல் பான்  கார்டு என்கிறார் என்று நினைத்துக் கொண்டு  " ஆதார் கார்டு மையம்  அங்கங்கே இருக்கிறதே. அங்கே  போய் கேட்டால் சொல்வார்களே . அடுத்தத்  தெருவில் கூட ஒன்று இருக்கிறது தாத்தா? " என்று நான் சொல்ல.

" இல்லம்மா... பான்  கார்டு " என்று  மீண்டும் சொன்னார்.

 " பான்  கார்டா , ரேஷன் கார்டா ? " நம்பிக்கையில்லாமல் நான் மீண்டும் கேட்க

அழுத்தம் திருத்தமாகப் பதில் வந்தது அந்த மனிதரிடமிருந்து," பான்  கார்டு "

"அது எதுக்குத் தாத்தா  உங்களுக்கு ? " என்றேன் சர்வ  அலட்சியமாய் .

"இல்லம்மா  எனக்கு இடம் ஒன்னு இருக்கு அதை விற்க வேண்டும். அதுக்கு  பான்  கார்டு வேணுமாம்."

நான் எங்கோ ஒரு ஒட்டப் பிடாரம், அல்லது கரிசல் காடு என்கிற இடத்தில் ஒரு கோவணம் அளவு இடம் இருக்கப் போகிறது  என்று நினைத்துக் கொண்டு.

" அப்படியா.. தாத்தா.... பான்  கார்டு எப்படி வாங்கவேண்டும் என்று எனக்குத் தெரியாதே . ஆமாம் எந்தக் கிராமம் உங்களுடையது. எவ்வளவு  நிலம் இருக்கு ? "  நான் கேட்ட கேள்வியில்  ஒரு ஏளனம் தொனித்தது.

அமைதியாய் அந்த அழுக்கு லுங்கிக்காரர் சொன்னார்," இங்கே தாம்மா ஆவடியில்  நிலம்.  அந்தக் காலத்தில் நான் ரயில்வேயில் தினசரிக் கூலியாக இருந்த போது ,  கடன் வாங்கித்  தான் இடம் வாங்கிப் போட்டேன். அந்தக் கடன் தீர்வதற்கு நான் பட்டப் பாடு எனக்குத் தான் தெரியும் . "

 " ஆவடியிலா?....." ஆச்சர்யம்  தொனித்தது என் கேள்வியில் .

"என்ன விலை இப்பொழுது? '

" ஒரு கோடிக்குக் கேக்கறாங்கம்மா . "
 " ஒரு கோடியா...... " திறந்த வாய், மூட சற்று அவகாசம் தேவைப்பட்டது.

இந்தக் கோடீஸ்வரருக்கா......  நான்  ஒரு வேளை சாப்பாடு போட்டதாக பீற்றிக் கொண்டேன். என்  மேல் எனக்கே  சற்றுக் கோபமே வந்தது. உருவத்தைக்   கொண்டு தப்புக் கணக்குப் போட்டேனே. இவருடைய உழைப்பு போற்றப்பட வேண்டியது . பரிதாபப்பட வேண்டியதில்லை என்கிற உண்மை புரிந்தது.

 அவருக்குத்  தான்   எவ்வளவுப் பெரிய பணக்காரர் என்றுத் தெரியவில்லையா? இல்லை   இளமையில் கஷ்டப்பட்டதின் விளைவாக பணத்தின் அருமை  உணர்ந்ததால்  எளிமையாய்  இருக்கிறாரா?புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

 சட்டென்று சமாளித்துக் கொண்டு

"பான்  கார்டு எங்கே வாங்க வேண்டும் என்றுக் கணவரிடம் கேட்டு சொல்கிறேன் சார். " என்றேன்.

" தாத்தா" சட்டென்று  " சார் " ஆக மாறினார்.(எல்லாம் பணம் படுத்தும் பாடு)

Tuesday 25 November 2014

ஹள்ளி மனேயும், டைப்ரைட்டரும்.

சென்ற முறை பெங்களூர்  சென்ற போது , நண்பரைப் பார்க்க நேர்ந்தது. அவருடன் பேசிக்கொண்டே  நடந்தோம். பரஸ்பர நல விசாரணை.. நான் சற்றுப் பின்னால் நடந்து கொண்டிருக்க கணவரும்,நண்பரும் முன்னால் பேசிக்கொண்டே  நடத்து கொண்டிருந்தார்கள்.

சட்டென்று நண்பர்," வருகிறீர்களா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்  " என்று சொல்லவும்,  எங்களுக்கும் காபி சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்ற

 நன்பரிடமே " இங்கே  நல்ல ஹோட்டல்  ஒன்றிற்குப் போகலாமே " என்று  சொல்லவும்.

நண்பர்," ஹள்ளி  மனே " போகலாமா ? "


picture courtesy--google.


" ஏதோ ஒன்று போகலாம் வா " என் கணவர் சொல்ல

" ஏதோ ஒன்று இல்லை . மிகவும் அருமையாக இருக்கும். கிராமத்து  செட்டப்பில்  இருக்கும் "  என்று ஹைப் கொடுத்தார் நண்பர்.

 "அதென்ன கிராமத்து செட்டப் ? " நான் வினவ

"வாங்க மேடம், வந்துப் பாருங்க " என்று சொல்லிக் கொண்டே " ஹள்ளி மனே"க்குள் அழைத்துச் சென்றார்.

" அட... கிராமத்து  வீடு போலிருக்கிறதே "  என்று நான் சொல்லவும்,

"அதே தான் மேடம், "ஹள்ளி மனே " என்றால் கிராமத்து வீடு "என்றார்.

அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள்  தாங்கிப் பிடிக்கும் கூரை,  உடகார்ந்து சாப்பிட  பென்ச் ,. வாழையிலையில்    சாப்பாடு என்று  கிராமத்து  வீட்டை  நினைவுப்படுத்தத்  தவறவில்லை.

" எரடு  கா...............பி..... " என்று சர்வர் கத்தி ஆர்டர்  கொடுக்காதது தான் பாக்கி.

யோசித்துப் பார்த்தேன். கிராமம் விட்டு நகரம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாய்  தாவிக்கொண்டிருக்க, நகருக்குள், கிராமத்தைக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.  ஓடு வேய்ந்தக்  கூரை, அங்கங்கே கோலம்,  சுவற்றின் பெயிண்ட் கலர், எல்லாமே  மனதைக் கொள்ளையடித்தது.

இவ்வளவு அருமையான இந்த ஹோட்டலில் , விலையும் சற்றே  அதிகம் என்று சொன்னார் நண்பர். ஆனால் கூட்டம்  அலை மோதுகிறது.

வேடிக்கை தான்  இது. கிராமம் விட்டு ஆசை , ஆசையாய் நகரத்திற்குக் குடிப் பெயர்ந்து   வந்து ,  மீண்டும்  கிராமத்து  விருந்தை  அதிகப் பணம் கொடுத்து,உண்கிறோம். ஆக இதல்லாம் பழைய விஷயங்கள் என்று எதையும் நாம்  ஒதுக்கி வைக்க முடியாது. எல்லோரும் மறந்திருக்கும் போது யாரோ ஒருவர் அதையே மீண்டும் புதுப் பொலிவோடு கொண்டு வந்து விடுகிறார்.  " Old is Gold " தானே.

நிறைய விஷயங்கள் இப்படித்தான் . சாதத்தை  வடித்துக்  கொண்டிருந்த நம்மை குக்கரில் சாதம் வைக்க சொன்னார்கள் . திரும்பவும் இப்பொழுது சாதம் வடிப்பது தான் நல்லது என்கிறார்கள்.

உணவு விஷயத்தில் தான் இப்படியென்றால், கம்ப்யுட்டர் படுத்தும் பாடு இருக்கிறதே........  மெயில் என்று ஒன்று வந்தாலும் வந்தது , அலுவலகக் கடிதங்கள், எல்லாமே மெயிலில் சென்றுக் கொண்டிருக்கின்றன.
என்ன வேகம்! என்னத் துல்லியம்! தவறுகள் இல்லாதக் கடிதங்கள் அசத்துகின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குக்  கொள்ளைக் காரர்களும்  மிக அதிகம். மெயிலைக் கொள்ளையடித்து ( Hackers ) சென்று கொண்டிருக்கிறார்கள். அலுவலகக் கடிதங்களில் இருக்கும் ரகசியத் தன்மை பெருமளவில்  பாதிக்கப் பட்டிருப்பதை யாருமே மறுக்க மடியாது.

அப்படியானால் ,  கடு மந்தண  ( Strictly Confidential )அலுவலகக் கடிதங்களை  என்ன செய்யலாம் என்கிறாய்? மீண்டும் கையால் எழுத வேண்டும் என்கிறாயா என்று கேட்காதீர்கள். வேண்டாமே...... டைப்ரைட்டரைத் தூசித்  தட்டினால் போதுமே.

மீண்டும் டைப்ரைட்டரா....... இதென்ன கம்ப்யுட்டருக்கு வந்த சோதனை என்கிறீர்களா?

தினசரியில் வந்த செய்தி  இதைத் தான் சொல்கிறது. ரஷ்யா, ஜெர்மனி  ஆகிய நாடுகளில், மீண்டும்  அலுவலகங்களில், confidential கடிதங்களை  டைப் அடிக்க டைப்ரைட்டரைக்  கொண்டு வரலாமா என்று யோசிக்கிறார்களாம் . அமெரிக்காவில்  அந்தக் கஷ்டம் கூட இல்லை. அவர்கள் டைப்ரைட்டரை மொத்தமாக  ஒழித்துக் கட்டவில்லையாம். ஒரு ஓரமாக  கவர் போட்டு மூடி வைத்திருக்கிரர்களாம் .
 தூசித்  தட்டி உபயோகப்படுத்த ஆரம்பித்தது விடுவார்கள்.




எல்லாம் சரி..... இந்தியாவில் தான் டைப்ரைட்டர் மெஷின் தயாரிப்பே பரவலாக நின்று விட்டது போல்  தெரிகிறதே. நாம்  என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அலுவலகங்கள் இதைப் பற்றி யோசிக்கும் முன் .......வாருங்கள்.  OLX இல்  பார்த்துக் கொண்டிருப்போம். பழைய மெஷின் கிடைத்தால் வாங்கி வைப்போம்.
 யாரும் மெஷின் தயாரிப்பை ஆரம்பிப்பதற்கு முன்,  மெஷினை விற்று லாபம் பெறுவோம்..

" Old is Gold " ஹள்ளி மனேக்கு மட்டும் தானா  என்ன ?டைப்ரைட்டருக்கும் தான்.




Sunday 16 November 2014

பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லாருக்கே !

நாங்கள் டெல்லியில் இருந்த சமயத்தில்  , வருடத்திற்கு ஒரு முறை சென்னை வருவது வழக்கம். அதுவும் பதினைந்து நாள் அல்லது இருபது நாட்கள் விடுமுறையிலேயே   வருவோம். அப்பொழுது  ஒரு வருடத்தில் விட்டுப் போன  சுக, துக்க விசாரணைகள் , உறவினர், நண்பர்கள் வீடு என்று  மூச்சு முட்ட சுற்றிக் கொண்டிருப்போம். பதினைந்து நாளில்  ஒரு சுற்று எல்லோரையும் பார்க்க வேண்டுமென்றால் ........ஃபிளாஷ்  விசிட்டாகத் தான் இருக்கும்.

அந்த மாதிரி ஒரு சென்னை விஜயத்தின்  போது  , நண்பர் சுந்தர் வீட்டிற்கு போக நேர்ந்தது. மாலை  நான்கு மணிக்கு சென்றிருப்போம்.  சுந்தரின் வீட்டிற்குப் போகாமல்  நாங்கள் டெல்லித் திரும்பவே மாட்டோம். கணவரின் ஆப்த நண்பர் ஆதலால், எங்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் அவர் வீட்டிற்கு செல்வோம்.ஒரேயொரு குறை அவரிடம், என்னவென்றால், அவரும் சரி, அவர் மனைவியும் சரி, பேச ஆரம்பித்தால்  ஓயவே மாட்டார்கள். இவர்களுக்கு என்று  எங்கிருந்து தான்  விஷயம் கிடைக்குமோ தெரியாது. அவ்வளவு  பேசுவார்கள். நாம் உம்  ...உம்..... என்று சொல்ல மட்டுமே அனுமதி கிடைக்கும். மற்றபடி மிகவும் நல்லவர்கள் .


விஷயத்திற்கு வருகிறேன். மாலை  அவர் வீட்டிற்கு நானும் என்கணவரும் சென்ற வேளையில்  சுந்தர் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அவருக்கு ஒரே சந்தோஷம். உள்ளே பார்த்து, "  பாலா யார் வந்திருக்கிறார்கள் பார் "  என்று சொல்லவும் , சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த அவர் மனைவி பாலா,கையை டவலில் துடைத்துக் கொண்டே " அடடே ......நீங்களா  வாங்க... வாங்க,  எப்படியிருக்கீங்க " என்று கேட்டுக் கொண்டே வந்தமர்ந்தார்.

முதலில் பரஸ்பரம் குசல விசாரிப்புகள்.எங்கள் குழந்தைகள் பற்றி அவர்களும்  விசாரித்தனர். பிறகு அவர்கள் பெண், பிள்ளை எங்கே என்று கேட்டது தான் தாமதம் , அவர்கள் இருவரும் மாறி மாறி பெண், பிள்ளைப் புராணங்கள், சுந்தருக்கு வந்த உடல் நலக் குறைவு, பாலாவின்  முதுகு வலி என்று தொடர்ந்து ,அல்லோபதி டாக்டர், சித்தா, ஆயுர்வேதம்  என்று தொடர் ஓட்டமாக அவர்கள் இருவரின் பேச்சும் ஓடிக்............... கொண்டே இருந்தது.

பாலாவிற்குத் திடீரென்று நினைவிற்கு வந்தது, வந்ததிலிருந்து எங்களுக்கு சாப்பிட ஒன்றுமே கொடுக்கவில்லை என்பது.  " இருங்கள் உங்களுக்கு டிபன் எடுத்து வருகிறேன் " என்று சொல்லி விட்டு  வேக வேகமாக  உள்ளே சென்று ,இரண்டுத் தட்டுகளில் டிபன்  எடுத்துக் கொண்டு வந்தார் .  கருப்பாக ,கேசரி பதத்தில் தட்டில்  இருக்க, நான் இது என்ன என்று கேட்கவும் கேழ்வரகு அல்வா என்றுப் பெருமையாக பதில் வந்தது பாலாவிடமிருந்து.

"ராகி உடம்பிற்கு நல்லது என்று நான் அடிக்கடி செய்யும் ஸ்வீட் இது "  என்று பாலா மேலும் 'ஹைப்' கொடுக்க

மெதுவாக ஒருஸ்பூனால் எடுத்து வாயில் வைத்தேன்.அல்வாவும் இல்லை. ஒன்றும் இல்லை , ராகியும் வெல்லமும் சேர்ந்த களி  என்பது புரிந்தது.  வாயிலிருந்து உள்ளே  இறங்க மறுத்த  அல்வாவை (அப்படித் தானே பாலா சொன்னார் )   மெதுவாக உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

அப்போழுதுப் பார்த்து  என் கணவர் கேட்டார்,' " மிகவும் அருமையாக இருக்கிறது. எப்படி செய்தீர்கள் " என்றுக் கேட்கவும் பாலா  செய்முறையை சொன்னதோடு இல்லாமல் இன்னும் ஒரு கரண்டி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு  போதும், போதும் என்றும் கேட்காமல் பரிமாறவும், கணவரைப் பார்த்து  முறைத்தேன். பாவம் அவர் மேலும் ஒரு கரண்டி  களி.....இல்லையில்லை, அல்வாவை,   எதிர்பார்க்கவில்லை என்பதுப் புரிந்தது. சும்மா நண்பரின் முகதாக்ஷண்யத்திற்கு  சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார். என்னையும் மாட்டி விட்டு விட்டார் .
கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தோம்.

அப்பாடி ....... தண்டனை ஒருவழியாய் முடிந்தது என்றுப் பெருமூச்சு விட்டேன்.
டம்ளர் தண்ணீரைக் குடித்து விட்டு கிளம்ப , சேரை விட்டு எழுந்தேன். பாலா அதற்குள், " இதென்ன , டிபன் சாப்பிட்டு விட்டு ஒன்றும் குடிக்காமல்  போவார்களா?. இருங்கள்  ராகி மால்ட் போட்டுக் கொண்டு வருகிறேன்." என்று சொல்லவும்,   வேறு வழியில்லாமல்  மீண்டும் சோபாவில் கணவரருகே வந்தமர்ந்தேன்.அடுத்தத் தண்டணையை எதிர்பார்த்து .

பாலா இரண்டு தம்ளர்களில் ஆவிப் பறக்க ஆரஞ்சு கலரில்  பானம் கொண்டு வந்தார்.  ராகி மால்ட்டை  வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. ராகிக் களி  வேறு  வயிற்றை  என்னவோ செய்துக் கொண்டிருக்க, அதற்கு மேலேயே ராகி மால்ட்டா . சரி. விதியை வெல்ல முடியாதே .குடித்து வைப்போம் என்று ஆற்ற ஆரம்பித்தேன். வேறென்னவெல்லாம் ராகியில் இவர் செய்வாரோ என்று யோசித்தபடி .

பால் சேர்க்காமல் ராகி மால்ட் கலந்திருக்கிறார்  போலிருக்கிறது. ராகி மால்ட் வாசனையே பிடிக்கவில்லை. பால் வேறில்லை. இதை எப்படிக் குடிப்பது  ...யோசித்துக் கொண்டே மெதுவாக ஆற்றினேன். நல்ல கொதிக்கும் வெந்நீரில் சர்க்கரையைத் தாராளமாகப் போட்டு , ஆரஞ்சு கலரில் வாசனைப் பொடி போட்டு எங்களிடம் நீட்டி விட்டு ,  பாலா விட்ட இடத்திலிருந்து மகளின் வீணை  வாசிப்பைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார் .

" காற்றினிலே வரும் கீதம் எங்கள் கீதா வாசித்தால் போதும், நிஜமாகவே மயக்கும்" என்று பிரதாபத்தை ஆரம்பிக்கவும்....

 நான் மெதுவாக ஆரஞ்சு ராகி மால்ட்டை  டம்ளரில் ஊற்றி  குடித்துக் கொண்டே ,உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன் .

இருவரும் என்னைப் பார்த்தே  பேசிக் கொண்டிருக்க, இவரோ , ஜாலியாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டே  ராகி மால்ட்டை ஆற்றிக் கொண்டிருந்தார்.(அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்) மெதுவாக அரை டம்ளர் உள்ளே போய் விட்டது. இன்னும் அரை டம்ளர் தானே  என்று நினைத்துக் கொண்டே டபராவைப் பார்த்தால்  ராகி மால்ட் குறைந்த மாதிரியே தெரியவில்லை. டபரா தளும்ப தளும்ப  ராகி மால்ட்  என்னைப் பார்த்து  சிரித்துக் கொண்டிருந்தது.

இது எப்படி......? அட்சயப் பாத்திரம் மாதிரி  வந்துக் கொண்டேயிருக்கிறது.
ஒரு வேளை  டம்ளர் பெரிசோ........ என்கிற சந்தேகம் வர, டம்ளரைப் பார்த்தேன். ரொம்ப உயரம் ஒன்றுமில்லை. அப்படிஎன்றால்.......

காற்றினிலே வரும் கீதம் பற்றிய பிரசங்கத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கும்  போது என் கணவர் செய்த வேலை இது என்று அவர் முகத்தைப் பார்த்ததும் புரிந்தது.

நான் டம்ளரில் ஊற்றிக் குடிக்க, குடிக்க இவர் தன்  ராகி மால்ட்டை என் டபராவில்  நிரப்பிக் கொண்டே வந்திருக்கிறார். அது எனக்குப் புரிபட, உடனே,  டபராவை  என் கையிலேயே வைத்துக் கொண்டேன். ஆனால் அதற்குப் பிறகும் அசரவில்லையே என்னவர். கையில் வைத்திருந்தால்.......... என்னால் ஒன்றும் செய்ய முடியாதா? என்பது போல்  திரும்பவும் பாலாவும், சுந்தரும், கவனம் சிதறிய நேரத்தில் என் டபராவை  நிறைத்து விட்டார்.முழி பிதுங்க இரண்டு டம்ளர் ராகி மால்ட்டை  வயிற்றில் ஊற்றி வைத்தேன். தண்ணீர் டாங்க்  போல்  வயிறு  இருந்தது . எந்த நேரத்திலும்  வாந்தி வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.

அவர் டம்ளரோ காலி. ஒரே ஒரு வாய் தான்  குடித்திருப்பார் என்று நினைக்கிறேன். இல்லை அதுவும் இல்லையோ.........

" சீக்கிரம் குடி . கிளம்பு வேண்டும் " என்று  என்னை வேறு அவசரப்படுத்தினார் . விளக்கெண்ணெய்  குடிப்பது போல் குடித்து விட்டு , " தப்பித்தோம், பிழைத்தோம்"  என்று  விடைப் பெற்றோம்.

வருவேன், வருவேன் என்று பயம் காட்டிக் கொண்டிருந்த வாந்தி, அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பிய ஐந்தாவது  நிமிடத்தில்  பஸ் ஸ்டாண்டில்  வெளியே  வந்து விட்டது.

பஸ் ஸ்டாண்டில் நின்றுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர்," 'பிள்ளைதாச்சியா? அதான் வாந்தி எடுக்கிறாரா ?பார்த்து அழைத்துக் கொண்டு போங்கள்."  என்று கணவருக்கு, அறிவுரை ஒன்றை இலவசமாக வழங்கவும் , இவர் என்ன சொல்கிறார் என்று அவரைப் பார்த்தேன். அவரோ பொங்கி வரும் சிரிப்பை அடக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டு விட்டார்.

மெதுவாக வீடு வந்து சேர்ந்து , நல்ல சுடச்சுட வெந்நீர் குடித்து விட்டு  படுத்தேன். காலை உடம்பு சரியாகி விட்டது.

இது நடந்து இருபது வருடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றுக் காலை எப்பொழுதும் போல் சுடச்சுட  காபியை டேபிளில் வைத்து விட்டு நகர்ந்தேன்.  அவரோ,  பேப்பரில் சுவாரஸ்யமாக ஆழ்ந்து விட்டதில் , காபி ஆறி  அவலானது . நான்  " காபியை இன்னும் குடிக்கவில்லையா ? என்று நினைவுப்படுத்தவும்  , காபியை கையில் எடுத்துக் கொண்டு , என்னிடம் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி.

 " இதற்குப் பேர் காபியா?" என்று.

"ஓ.....உங்களுக்கு என் காபிப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. பரவாயில்லை..
காபி நன்றாக இல்லையென்றால்  குடிக்க வேண்டாம். இனி மேல் உங்களுக்கு ராகி மால்ட்  தருகிறேன். ".

" ராகி மால்ட்டா ? ... " அவர் புரியாமல் விழிக்க

" ஆமாம் .. அன்றோரு நாள்.......  ஒரு மாலை வேளையில்........... பாலா போட்ட ராகி மால்ட் மாதிரி....  நினைவிற்கு வந்து விட்டதா "என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட சொன்னேன்.

" அய்யய்யோ ....  ராகிமால்ட் வேண்டவே வேண்டாம்.  உன் காபிப்  போல் வேறு ஒரு ஒரு பானம் உண்டா ?" என்று புகழ ஆரம்பிக்க

 நான் கேட்டேன்," திரும்ப சொல்லுங்கள்.........  என் காபி எப்படி இருக்கிறது?"

 தலையை பலமாக ஆட்டியபடி," பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு " என்று சொன்னார்.

ஆனாலும் எப்படியாவது இவரை ஒரு டம்ளர்  ராகி மால்ட்டை குடிக்க வைக்க, சபதமே போட்டிருக்கிறேன்.
அது நடக்குமா..........

என் சபதத்தில்  வெற்றி பெற  வாழ்த்தி விட்டுப் போங்களேன்.

image courtesy--google.

Monday 20 October 2014

ராசி போட்ட முடிச்சு.



" அதோ அங்கே இரண்டாவதாக இருக்கும் . பச்சைக் கலர் புடைவையை எடுத்துப் போடுங்கள் "
அதைப் பார்த்து  விட்டு, " இல்லை இது வேண்டாம் . அந்த ப்ளு  நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன். அதை எடுத்துக் காட்டுங்கள் " ராசி புடைவை  அடுக்கைக் காட்டி  சொல்லவும், சேல்ஸ்மேன் எடுத்துப் போட்டார்.

" ஓ இதில்  ஜரிகை அடையாக இருக்கிறதே. . கொஞ்சம் கம்மியாக இருக்கட்டும். " என்று சொல்லவும்  வேறு சின்ன ஜரிகைப் போட்டப் புடைவையை சேல்ஸ்மேன்   எடுத்துக் காட்டவும் , ஜரிகை  எனக்குத் தேவலாம் தான். ஆனால் கலர் தான்  பச்சைக்கும், ப்ளுவிற்கும் நடுவில் வேணும் ."

பச்சைக்கும், ப்ளுவிற்கும் நடுவில் என்ன கலராயிருக்கும் என்று விஷ்ணு யோசித்துக் கொண்டே , இந்தப் புடைவை  செலக்ஷனை  முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்து  அவரே ஒரு புடைவை  எடுத்துக் காட்ட சொன்னார். ஆனால் ராசி அதைக் கடைக்கண்ணால் கூடப்  பார்க்கவில்லை 
 " இந்தக் கலரெல்லாம் என்னிடம் ஏற்கனவே இருக்கு."  என்று சர்வ அலட்சியமாய் சொல்லி விட்டு, அடுத்த புடைவையை எடுத்துப் போட சொன்னாள் .

பேசாமல் அருகிலிருக்கும் ஸ்டூலில் அமர்ந்து கொண்டார் விஷ்ணு. வேறென்ன செய்வார்....பாவம்....

ராசியோ  சேல்ஸ்மேனை பெண்டு கழட்டிக் கொண்டிருந்தாள்.
 சேல்ஸ்மேன் படும்பாட்டைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது விஷ்ணுவிற்கு. பச்சையாகவும் இருக்கக் கூடாது, ப்ளூவாகவும் இருக்கக் கூடாது. பார்டர் அகலமும் கூடாது, குறைவாகவும்  இருக்கக் கூடாது. ப்ளெயினாவும் இருக்கக் கூடாது. புட்டாவும் இருக்க வேண்டும் ஆனால் மிக அதிகமும் வேண்டாம்.  என்று எத்தனை கண்டிஷன்கள. ராசி புடைவை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை சாட்சாத் அந்தப் பிரம்மா கேட்டால் , நல்லவேளை  இரண்யன்  வரம் கேட்கும் போது  இத்தனைக் கண்டிஷன்கள் போட்டு நம்மை திண்டாடவிடவில்லையே   என்று நினைத்து திருப்பதியடைவார்.

 ஒவ்வொரு புடைவையாக ராசி "நல்லருக்கா"  என்று கேட்பதும் , எல்லாவற்றிற்கும் இவரோ "ரொம்ப நல்லாருக்கு" (சில சமயம் செல்போனை விட்டு  தலையைத் தூக்காமலே) என்று சொல்வதுமாக இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி  நேரமாக  இந்தப் போராட்டம் போய்க் கொண்டிருந்தது. 
நடுவில் விஷ்ணு ஆபிசிலிருந்து வந்த போனிற்குப் பதில் சொல்லி முடிக்கும்  போது  ," இந்தப் புடைவையை  பில்லிற்கு அனுப்புங்கள் "  ராசியின் குரல்  தேனாகப்  பாய்ந்தது   விஷ்ணுவின்  காதுகளில்.  விஷ்ணு  அவசரமாகப்  பில்லைப் பார்த்துப் பணம் கட்டக் கிளம்பினார். சீக்கிரமாக  புடைவையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட அவசரப்பட்டார். அவருக்குத் தானே தெரியும் அவர் கஷ்டம்.
அவசரவசரமாக  பில்லைக் கட்டி விட்டுப் புடைவை  வாங்கிக் கொண்டு " போகலாமா ராசி ?" என்று கேட்கவும் ,
ராசி,, " கொஞ்சம் இருங்கள் . முடிச்சுப் போட்டுக் கொண்டு வருகிறேன்? "

" என்ன முடிச்சு? "  கேட்டார்  விஷ்ணு.

" புடைவைத் தலைப்பை  முடிச்சுப் போட வேண்டுமே " ராசி சொல்வதைக் கேட்ட கடை சூப்பர்வைசர்  அவளிடமிருந்து புடைவையை வாங்கிக் கொண்டு போய் வேறு ஒருவரிடம் கொடுக்கவும், ராசி அங்கிருக்கும் ஸ்டுலில் அமர்ந்துக் கொண்டாள்.

விஷ்ணுவும் வேறு வழியில்லாமல் வேறு ஒரு ஸ்டுலில்  அமர்ந்துக் கொண்டு  தன்னைப் போல் மாட்டிக் கொண்டு விழிக்கும் கணவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். " என் வேலை முடிந்து விட்டது ." என்கிறத் திருப்தி அப்பட்டமாய் தெரிந்தது அவர் முகத்தில்.

" அப்படியெல்லாம் உன்  வேலை முடிந்து விடவில்லை " என்று சொல்வது போல் கோபமாய் ராசி வந்து கொண்டிருந்தாள்,கையில்  புதுப் புடைவையுடன்.

" என்ன வேலை முடிந்ததா? " என்கிற விஷ்ணுவின் கேள்விக்கு, ராசி கோபமாக ," நானே போட்டுக் கொள்ளப் போகிறேன். ஆறாயிரம் கொடுத்து  வாங்கியிருக்கிறோம்.  ஒரு மரியாதை இல்லை. அடுத்து வந்தவர்களுக்கெல்லாம்  போட்டுக் கொண்டிருக்கிறார்கள் " என்று சொல்லவும்.

" எதையோ செய்துத் தொலை " என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே வீட்டிற்கு  வந்தார்.

ஒரு வாரம் ஆகியிருக்கும். ஞாயிற்றுக் கிழமை விஷ்ணு பேப்பரில் மூழ்கியிருந்த வேளையில் ராசி புதுப் புடைவையுடன், கையில் கத்திரியுடன் வந்து அமர்ந்தாள்.

" என்ன செய்யப் போகிறாய்? " விஷ்ணு கேட்கவும்.
ராசி "புடைவைத் தலைப்பை  சரி செய்யப் போகிறேன் " என்று சொன்னாள் .

என்ன தான் செய்யப் போகிறாள் ராசி என்று பார்த்தார் விஷ்ணு . 
முதலில்  கத்திரி வைத்து சிறிது கட் செய்து விட்டு  நூலைப் பிடித்து  இழுக்க ஆரம்பித்தாள் .  சர்ரென்று ஒரு இழை வந்தது. பெருமையாக இருந்தது விஷ்ணுவிற்கு . என்னவெல்லாம் தெரிகிறது தன்  மனைவிக்கு என்று பெருமிதத்துடன் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்தார் விஷ்ணு.

அதற்குள் போன் மணியடிக்கவும், ராசி  போனை  எடுத்து அவள் தோழியுடன்  அளவளாவி விட்டு வந்து திரும்பவும் தொடர்ந்தாள் .. இப்பொழுது ஒருபக்கம இழை இழுக்கும் போது , புடைவைத் தலைப்பு வேறு பக்கமாய் இழுத்துக் கொண்டது.  இந்தப்பக்கம் இழுத்தால் அந்தப்பக்கம் இழுத்துக் கொண்டு புடைவை சுருங்கிக் கொண்டது, அந்தப் பக்கம் இழுத்தால் இந்தப் பக்கமும், இந்தப் பக்கம் இழுத்தால் ,அந்தப் பக்கமும் சுருங்கியது, புடைவை. முதல் இழை வந்தது போல் வரவில்லை. புடவைக்கு வலிப்பு  வந்தது போல் காணப்பட்டது.

ராசிக்கு வியர்வை ஆறாய்ப் பெருக சரி செய்ய பிரம்மப் பிரயத்தனப்பட்டாள் . திரும்பக் கத்திரியை வைத்து கட் செய்தாள் . பிறகு இழை எடுக்க முயற்சித்தாள் . ம்ஹூம் .... வந்தால் தானே . இப்படியே இழுப்பதும், கட் செய்வதும், குரங்கு-அப்பம் கதையாய்  போய்க் கொண்டிருந்தது.

கட் செய்ததில்  புடைவையின் நீளம்  குறைய செய்தது. ஒரு ஸ்டேஜில் ராசி  இழை  எடுப்பதைஅப்படியே நிறுத்தி விட்டு , தையல் மெஷினை எடுத்து, தலைப்பின் ஓரத்தை மடித்து வைத்துத்  தைத்து விட்டாள்  ராசி.  விஷ்ணுவிற்கு புடைவை பற்றி அதிகம் தெரியாது  ஆனாலும்  பட்டுப் புடைவை ஓரம் அடித்து, ராசி  உடுத்திக் கொண்டதில்லையே என்று யோசித்தார்.

அன்று மாலையே  அவர் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. ராசியின்  அத்தை பெண் மாதுரி  வந்திருந்தாள் . ராசியும் அவளுமாக  ரிசப்ஷனிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.  ராசி  புதுப் புடைவை  உடுத்திக் கொண்டு மாதுரியிடம் காண்பிக்கவும் , அவளும்  பார்த்து " ஆஹா........  அழகானக்  கலர் அக்கா ! இந்தக்  கலரில் தான் நானும் புடைவைத் தேடிக் கொண்டிருக்கிறேன் . தலைப்பில்  என்ன டிசைன்? ....பார்க்கலாம்... " என்று பார்த்தாள் .

" அக்கா பாரேன்  பட்டு மாதிரியே இருக்கிறது  இந்தப் புடைவை. . தலைப்பில் ஓரம் அடித்திருப்பதை வைத்துத் தான் இது பட்டு இல்லை என்பது தெரிகிறது. "என்று மாதுரி  சொன்னதும், ராசி முகம் போன போக்கைப் பார்த்து விஷ்ணுவிற்கு  வந்த சிரிப்பையடக்க முடியவில்லை.

மாதுரி  அவளால் ஆன உபகாரம் செய்து விட்டாள் . அதன் விளைவு ......

திரும்பவும் பட்டுப்புடைவை வாங்க ராசியுடன் போக வேண்டும் . க்ரெடிட்  கார்டு பில்லும் அவர் தான் கட்ட வேண்டும்  என்பதை மறந்து விஷ்ணு  சிரித்துக்  கொண்டிருக்கிறார். இது தான் இடுக்கண் வருங்கால் நகுக  போலிருக்கிறது..

  அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


image courtesy--google.

Saturday 4 October 2014

குப்பைக் கூடையில் அம்புகள்.


சில நாட்களுக்கு முன்பு திரு. தமிழ் இளங்கோ அவர்கள் அந்தக் காலத்தில் " அட்டெஸ்டேஷன் " வாங்கும் சிரமம் பற்றி எழுதியிருந்தார். அந்தப் பதிவு படித்ததும் என் மனமும்  மலரும் நினைவுகளின்  வட்டத்துக்குள் நுழைந்தது.


அப்பொழுது என்னுடைய  எஸ்.எஸ்.எல்.சி  பரீட்சை  முடிவுகள் வெளியாகியிருந்தன. பேப்பரில் நம்பர் பார்த்து , எல்லோருக்கும், தெரிந்தவர், தெரியாதவர் என்று எலோருக்கும்  சாக்லேட் கொடுத்து   என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.அடுத்து, கல்லூரிகளுக்கு அப்ளிகேஷனுடன் படையெடுக்க வேண்டும். அதற்கும் முன்பாக  மதிப்பெண் சான்றிதழ் வர  வேண்டுமே.


மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க  இரண்டு நாட்கள் ஆனது. இப்பொழுது போல்  உடனே நம் மதிப்பெண்கள் தெரிந்து விடாது. பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். பள்ளிக்கு  இரண்டு நாட்கள் கழிந்த பிறகே வந்து சேரும்.


பள்ளிக்கு சென்று மதிப்பெண்  சான்றிதழ் பார்த்ததும், தலை  கால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்..  அதிக மதிப்பெண்களை பெறுவேன்  என்கிற தன்னம்பிக்கையுடன் தான் தேர்வை எதிர் கொண்டேன். இருந்தாலும், முயற்சியின் பலனை மார்க்காக பார்க்கும் போது  ஏற்படும் மகிழ்ச்சி  எல்லையில்லாதது  ஆயிற்றே!


ஆக, கல்லூரியில்  பி.யு.சி. சேர பெரிதாகக் கவலைப்பட வேண்டாம் என்பதில் வீட்டில் எல்லோருக்கும் நிம்மதி . ஆனால் அதற்கு முன்னால் முதலில் மார்க் எல்லாவற்றையும்  " ஜாப்  டைப்பிங் "கில் கொடுத்து , டைப் செய்ய வேண்டும். ( இப்பொழுது போல் ஜெராக்ஸ்  எல்லாம் கிடையாதே!)


ஜாப் டைப்பிங் காரர்களுக்கும் டிமாண்ட்  அதிகம். அதுவும் தப்பில்லாமல்  டைப்படிக்கிறவர்களுக்கு டிமாண்ட் மிக அதிகம் . அதற்குப் பிறகு டைப் அடித்ததை எடுத்துக் கொண்டு  ஒரிஜினல் மார்க் ஷீட்டையும் எடுத்துக் கொண்டு அட்டெஸ்டேஷணிற்கு  அலைய ஆரம்பிக்க வேண்டும். பச்சை இங்கால்  கையெழுத்திடுபவர்கள்  அதிகமாக அப்பொழுதெல்லாம் தென்பட மாட்டார்கள் . அப்படியே இருந்தாலும் அவர்கள்  ஏக பிகு செய்து கொள்வார்கள். அவர்களை சொல்லியும் தப்பில்லை. டைப் அடித்ததை சரி பார்த்துக்  கையெழுத்திட வேண்டும்.  அந்த சிரமத்திற்கு பயந்து நிறைய பேர்  அதை தவிர்த்து விடுவார்கள்.


மதிப்பெண் சான்றிதழ் வந்ததும்., ஜாப் டைப்பிங்கில் மர்க்கை எல்லாம் டைப் செய்து வாங்கி விட்டு  அட்டெஸ்டேஷணிற்கு  எங்கே செல்லலாம் என்பதற்கு வீட்டில் ஒரு குட்டி மீட்டிங்கே நடந்தது . பிறகு எங்களுக்குத் தெரிந்த  மருத்துவரிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்த பின்,  என் சித்தப்பாவுடன் மருத்துவரைப் பார்க்க சென்றிருந்தேன்.


கிளினிக்  வாசலில் கூட்டம்  என்றெல்லாம் நினைத்து  விடாதீர்கள். அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று  பேர் தான் இருப்பார்கள். நாங்கள் போன அன்று நான்கு பேர் இருந்தனர்.   எல்லா வியாதிக்காரர்களும் போன பிறகு , நானும் சித்தப்பாவும் உள்ளே நுழைந்தோம். அவர் எங்களுக்குத் தெரிந்தவர் ஆதலால்,  சித்தப்பாவிடம் அப்பொழுது நடந்த பரபரப்பான நிகழ்ச்சியைப் பற்றி  உரையாடிகே கொண்டே இருந்தார்.

எனக்கோ என் மார்க் மேல் ஒரே பெருமை. மார்க்கை எப்பொழுது கேட்பார் , பெருமையாய் சொல்லலாம் என்று பார்த்தால் , அரட்டை அடித்துக் கொண்டேயிருந்தார். ஐந்து நிமிடம் கழித்து, அனிச்சையாக என்னிடம் கையை நீட்டி டைப் அடிக்கப் பட்டிருந்த மார்க் லிஸ்டை  வாங்கினார் டாக்டர்.


நான் கொடுக்கவும், அப்பொழுது தான் அவருக்கு நாங்கள்  எதற்காக வந்திருக்கிறோம் என்பது புரிய ,


" இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி  யா நீ? "


பவ்யமாக  " ஆமாம் " சொன்னேன்.


" என்ன பாஸ் செய்து விட்டாயா ?" டாக்டர் கேட்கவும்,


அபத்தமாகக் கேள்வி கேட்கிறாரே. பாஸ் செய்யவில்லை என்றால் இவரிடம் எதற்குக் கையெழுத்து வாங்க நிற்கிறேன்  என்று நினைத்தேன் சொல்லவில்லை.( மனதிற்குள்  என் மார்க்கைப் பார்  அப்ப தெரியும்." பாஸா"  என்றா கேட்கிறாய் என்று நினைத்துக் கொண்டேன்,)


ஆனால் ,"ஆமாம். பாஸ் செய்து விட்டேன் "என்று சொன்னேன் மீண்டும் பவ்யமாகக் காட்டிக் கொண்டு .


பிறகு " எவ்வளவு மார்க் ?  "  என்று கேட்டார் டாக்டர்.


அவர் கையில் தான் இருக்கிறது மார்க் ஷீட்.  ( ஆனாலும் இவர் எப்ப கேட்பார் என்று தானே இவ்வளவு நேரமும்  ஏங்கிக் கொண்டிருந்தேன்.)

நான் வாங்கியிருந்த மார்க் என்னைத் தரையில் நிற்க விடவில்லையே . மேலே பறந்துக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தப் பெருமை என் குரலில் தொனிக்க  என் மார்க்கை சொன்னேன்.


" அட்டகாசமான மார்க் ஆச்சே " ( இன்னும் மேலே ...... மேலே உயரேப்  போனேன் என்  மனதில். )


" நிஜமாவா " டாக்டர் என்னைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.


அப்பொழுதே மேலேயிருந்து  டாக்டர் ,லேசாக  என்னை கீழே  தள்ளியது போலுணர்ந்தேன்.


அடுத்து டாக்டர் சொன்னதைக் கேட்டதும்.  நான் கீழே இறங்கவில்லை. அதலபாதாளத்தில் விழுந்தேன் என்று தான் சொல்ல  வேண்டும். அப்படி என்ன சொன்னார் என்று தானே கேட்கிறீர்கள்.


" நம்பவே முடியவில்லை. நீயா இவ்வளவு மார்க்  வாங்கியிருக்கிறாய்? " கேட்டாரே பார்க்கலாம்.  அழுகை  முட்டிக் கொண்டு வெளியே வரத் தயாரானது சமாளித்து, அட்டஸ்டேஷணிற்கு  நன்றி சொல்லி விடை பெற்றோம். 


மனதிற்குள்,


சொக்கா ! சொக்கா! என்ன இப்படிக் கேட்டு விட்டாரே  டாக்டர். 

நான் என்ன தருமியா? இல்லை...... பரீட்சை தான் மண்டபத்தில் நடந்ததா   எனக்குப் பதிலாக சொக்கன்  வந்து எழுதியிருப்பதற்கு. வருடம் முழுக்க நான் செய்த கடின உழைப்பைப்  பாராட்டாவிட்டாலும்  போகிறது. இப்படி என்னை மட்டமாக எடை போடாமல் இருந்தாலே போதும் என்று தோன்றியது எனக்கு.

இவருக்கு என் படிப்பைப் பற்றி என்னத்  தெரியும். இவர் எனக்கு ஆசிரியரா ? இல்லையே !

டாக்டர் தானே.


ஆனாலும் ,பின்னாளில் எதிர்மறைக் கருத்துக்கள் ,  சொல்லம்புகளாய் என்னைத் தாக்க வரும்போது , அப்படியே அதை குப்பைக் கூடையை நோக்கித் திசை  திருப்பலாம் என்கிற  பாடத்தின் அரிச்சுவடியை அன்றே   கற்றுக் கொடுத்தற்கு   நன்றி டாக்டர்.

image courtesy--google.

Friday 26 September 2014

தூய்மையாக்குவோம் இந்தியாவை!

பதிவை ஆரம்பிப்பதற்கு முன் ,

செவ்வாய் கிரகத்திற்கு  செயற்கைக்கோளை  வெற்றிகரமாக செலுத்தி , இந்தியாவை பெருமையடையச் செய்த  ISRO விஞ்ஞானிகளுக்கு  என்  சல்யூட்!  



விஷயத்திற்கு  வருகிறேன்.

மாலை நடை பயிற்சிக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்வது வழக்கம்.
இன்று மாலையும்  சென்றேன்.    ஓரளவு   சுத்தமாகவே இருக்கும் பூங்காவில்  இன்று என்னவோ ஒரே குப்பை . அங்கங்கே  குப்பைகளை போடுவதற்கு  பெரிய பெரிய பெங்குயின்கள்  நின்று கொண்டிருந்தாலும் , தரையெங்கும் ஒரே பிளாஸ்டிக் கவர்களும், அங்கங்கே பேப்பர்களும், பழத் தோல்களும் காண சகிக்கவில்லை.  டூரிஸ்ட்  பஸ்ஸில்  வருபவர்கள்  பார்க்கை  தற்காலிக  தங்குமிடமாக,  சாப்பிடும் இடமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.  உண்ட பின் ,குப்பைகளைப் போட்டு விட்டு அவர்கள் சென்றிருக்கிறார்கள். கொஞ்சமே கொஞ்சம் சிரமபட்டிருந்தால் போதுமே, வாயைத் திறந்து கொண்டு நிற்கும் பெங்குயின்கள் வாயில் போட்டிருக்கலாம். பார்க்கவும்  சுத்தமாயிருக்கும். 'பார்க்'கும் சுத்தமாக இருந்திருக்கும் . "சுற்றுப்புறத்தைத் தூய்மையாக  வைத்துக் கொள்ளலாமே ! " என்று சொல்வது என்பது பூனைக்கு மணி கட்டுகிற வேலை தான்.


அப்பொழுது தான் தோன்றியது வெளியே குப்பையை தாறு மாறாகப் போடுபவர்கள்  தங்கள் வீட்டை எப்படி வைத்துக் கொளவார்கள் . என்று சிந்தித்தேன். அதைப் பற்றி  என்னவரிடம்  ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்தேன்.
" இப்பொழுதெல்லாம் பெரும்பாலான அதுவும் 90சதவிகிதம்   வீடுகள் மிக சுத்தமாக இருக்கின்றன.  யோசித்துப் பார்  "என்று  ஒரு சில எங்களுக்குத் தெரிந்த வீடுகளைப் பற்றி அவர் சொன்னது யோசிக்க வைத்தது.

 அவர் சொல்வதும் சரி தான் .பெரும்பாலானவர்கள்  தங்கள் வீட்டை என்னவோ கண்ணாடி போல் தான் வைத்திருக்கிறார்கள். தெருவில் குப்பை கொட்டிக் கொண்டே,  ' யாருமே பெருக்குவதில்லை. எப்படி இருக்கிறது தெரு? ' என்று அங்கலாய்க்கிறார்கள்.

அதனால் தான் மற்ற நாட்டவர்களின் கண்களுக்கு , நம் பாரத தேசம்  அழுக்காகவும்,  குப்பையாகவும் காட்சியளிக்கிறது. நாடு என்பதும்  ஒரு வகையில் பார்த்தால் பெரிய வீடு தானே! அதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனப்பக்குவம் எப்பொழுது வருமோ தெரியவில்லை.

உலகமே அன்னாந்து பார்க்கும் உயர்ந்த கலாச்சாரம்.
குதித்து உயர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம்.
விண்ணை ஆக்கிரமிக்கும்  நம் செயற்கைக் கோள்கள் .....
இப்படி நம் தேசத்தைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் . ...

சாதனைகளைஅனாயாசமாகப் புரிந்து கொண்டே வரும் நமக்கு  நாட்டைத் தூய்மையாய் வைத்துக் கொள்வது பெரிய வேலையா என்ன?
சற்றே சிரத்தை எடுத்துக் கொண்டால்  போதுமே .
இதைத்தான் நம் பாரதப் பிரதமரும்  நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பிக்கப் போகும் " Swachh Bharat "  இயக்கத்திற்கு ,  நம் பாரதப் பிரதமர்  திரு. நரேந்திர மோடி  அவர்கள்  மக்களிடம்  என்ன எதிர் பார்க்கிறார்  என்பதை  பார்ப்போமா?அவர் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே  கொடுக்கிறேன்.

அன்பு  நண்பர்களே,

' தெய்வீகத்தன்மைக்கு அடுத்து  வருவது தூய்மைத்தன்மை ' என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீர்கள் . ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை.

வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று  'ஸ்வச்ச பாரத்' - 'தூய்மையான பாரதம்' - எனும் இயக்கத்தைத் துவக்க உள்ளோம். இது தூய்மையான இந்தியாவை உருவாக்கும்  மாபெரும் மக்கள் இயக்கமாகும். தூய்மைத் தன்மை என்பது  மகாத்மா காந்தி மனதில் கொண்டிருந்த ஆழ்ந்த ஒரு கருத்தாகும் . வரும் 2019 -ல் பாபுவின் 150-வது பிறந்த ஆண்டுக் கொண்டாட இருக்கும் தருணத்தில் 'தூய்மையான இந்தியா 'என்பது நாம் அவருக்கு செலுத்தும் மிகச் சிறந்த மரியாதையாக இருக்கும்.

இந்தியா சுயராஜ்யம் அடைவதற்காக மகாத்மா  காந்தி தனது வாழ்வையே  அர்பணித்தார் . நமது   தாய்த்திருநாடு தூய்மை அடைய  நாம் அனைவரும் நம்மை அர்பணித்துக் கொள்ள வேண்டிய நேரமிது .

நீங்கள் ஒவ்வொருவரும்  ஆண்டொன்றிற்கு  200 மணி நேரம் - அதாவது ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் -  தூய்மைப்  பணிக்கென  அர்ப்பணிக்க  வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா தூய்மையற்றதாக  இருக்க நாம் இனிமேலும் அனுமதிக்க இயலாது. வரும் அக்டோபர் 2ம்  தேதியன்று, கையில் வாருகோலுடன் நானே இந்தப் புனிதப் பணியில் களமிறங்க உள்ளேன்.

உங்களது  இல்லங்கள், பணியிடங்கள்,  கிராமங்கள், நகரங்கள், சுற்றுப் பகுதிகளை முழு மனதுடன் முறைமையாக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என இன்று நான் உங்கள் அனைவரையும். குறிப்பாக அரசியல்-மதத் தலைவர்கள், நகர மேயர்கள், கிராமத் தலைவர்கள், தொழிலதிபர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தூய்மையான பாரத்தத்தை உருவாக்கும் நமது இந்த ஒட்டு மொத்த முயற்சியில் உங்களது உதவியையும்  துடிப்பான பங்காற்றலையும்  நான்  கோருகிறேன்.



                                                                                                                                  உங்களது,
                                                                                                                             நரேந்திர மோடி .


வாருங்கள் பிரதமரின் கோரிக்கையை ஏற்போம்.
தூய்மையான பாரதத்தை உருவாக்குவதில் நம் பங்கும் இருக்கட்டும்.

நன்றி: www.narendramodi.in
PM's Message on Swachh Bharat



image courtesy--google.

Sunday 21 September 2014

கவியரசர் கண்ணதாசனால் கிடைத்த பாராட்டு !








ஒரு சில மாதங்களுக்கு முன்பு, வல்லமை மின்னிதழில்  " என்  பார்வையில்   கண்ணதாசன் " என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி கவிஞர் திரு. காவிரி மைந்தன்  அவர்களால் நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். பரிசு  கிடைக்கவில்லை. ஆனால் நடுவரின் பாராட்டு   என் கட்டுரைக்குக் கிடைத்தது. கட்டுரையை  இங்கே பகிர்கிறேன்.

படித்து உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்களேன்.

                                         


                                       
                                           என் பார்வையில் கண்ணதாசன்.

கண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான பின்  தான் யோசிக்க ஆரம்பித்தேன். கவியரசைப் பற்றிய கட்டுரையை  நான்  எழுதுவதா........ ......சற்றே தயங்கி ஓடி ஒளிந்து கொண்ட மனசாட்சியைப் பிடித்து இழுத்து வைத்து ,
 " கவிதை என்பது  மெத்தப்படித்தவர்கள் மட்டுமே படித்து  ரசிப்பது என்கிற நிலைமையை மாற்றி பாமரரையும் சேரும் விதமாய்  கவிதை எழுதியவர் நம் கவிஞர்.அதனால் நீ ரசித்த அவருடைய கவிதைகள் பற்றி எழுத என்ன  தயக்கம்?" என்று மனசாட்சியை சமாதானப்படுத்தி விட்டு எழுத அமர்ந்தேன்.
அடுத்த  பிரச்சினை தலை தூக்கியது.
எந்த விதமான கண்ணதாசன் பாடல்களைப் பற்றி கட்டுரை வடிப்பது  என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். காதலா, வீரமா, ஆன்மீகமா, தத்துவமா,.தேசப்பற்றா, சமுதாய அக்கறையா .... ....எதைப் பற்றி எழுதுவது எதை விடுவது .கவியரசு எழுதிக் குவித்திருப்பவை  எண்ணற்றவை.ஏராளமோ ஏராளம். அத்தனையும் முத்துக்களே. அதில்  தனியாக ஒரு  தலைப்பை  எடுத்துக் கொண்டால் மற்றவை விடும்படி ஆகிவிடுமே  என்று தோன்ற  நாம் ஏன் என்னைப் பாதித்த , பிடித்த, நான் மயங்கிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்ற அப்படியே கட்டுரை எழுத ஆரம்பிக்கிறேன்.

மீண்டும் ஒரு சுணக்கம். எனக்குப் பிடித்த கவிஞரின்  பாடல்களோ ஏராளம். எதைச் சொல்ல.... எதை விட.....மிகசிலப்  பாடல்களை  பற்றி எழுத நினைத்தேன்.

ஒரு சில பாடல்கள் என்னுள்  ஏற்படுத்திய தாக்கத்தைத்  தொகுத்துக் கட்டுரையாக சமர்ப்பிக்கிறேன்.

நான் பள்ளி செல்லும் வயதில் , சினிமா  பார்ப்பதும், சினிமா பாட்டு கேட்பதும் இமாலயக் குற்றம் என்கிற நிலை இருந்த நாளில் கூட  என் மனதில் புகுந்த கொண்ட பாட்டு,

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
கவலையில் வருவதும் அம்மா அம்மா.

அன்றைய சிறு வயது  சங்கடங்களுக்கு மட்டுமா "அம்மா அம்மா ". இன்றும் கூட நான் சவால்களை எதிர் கொள்ளும் போதும் ,கவலைகளில் நான் மூழ்கும் போதும் , தெம்பு தருவது " அம்மா " என்கிற வார்த்தை தான்.  எத்தனை நிதரிசனமான உண்மை . அதை அழகிய பாட்டாய்  வடித்து நமக்குள் ஊற்றெடுக்கும்   தாய் பாசத்தை  நாமே உணரும்படி செய்தது இந்தப் பாட்டு என்று சொன்னால் மிகையாகாது.அந்த சிறு வயதில் என்னைப் பாதித்த மற்றுமொரு பாட்டு என்று சொன்னால் அது இந்தப்பாட்டு .

"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி "

சரஸ்வதி சபத்தத்தில் வரும் இந்தப் பாட்டு  நம் மனதை உருக வைத்தப் பாடல்களில் ஒன்று. இந்தப் பாட்டுக் காதில் விழுந்தாலே  நம் கண் முன் சரஸ்வதியின்   உருவம்  வருவதைத்  தடுக்க முடியாது. அத்தனை வலிமை வாய்ந்த வரிகள் .இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்தப் பாட்டு  மிக மிகப் பிரபலம். பல சிறுவர் சிறுமிகளின்  மனதைத் தொட்ட பாட்டு என்றே சொல்ல வேண்டும்.

சகோதரப் பாசம் பற்றி எழுதியுள்ள பாடல்கள்  உணர்ச்சி மிகுதியால் கண்கள்  குளமாகும்.பாசமலர்  படத்தில்   வரும் அண்ணன் தங்கைப்  பாசத்தை கவியரசர் சொல்லும் விதமே அலாதி தான்.

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா…

என்று ஒரு தங்கை தன் சகோதரன் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பை  விளக்கும் வரிகளில் ,  நாம் நம்மையே தங்கையாகவோ அண்ணனாகவோ  நினைக்கத் தவறுவதில்லை  என்பது உண்மையே!


பதின்ம வயதிலோ  சொல்லவே  வேண்டியதில்லை. காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  திருட்டுத் தனமாய்  மனதில் போய் ஒளிந்துக் கொண்டு இன்றளவும்  வெளியே வர மறுக்கும் பாடல்கள் பட்டியலிட்டால்  பக்கம் போதாது.  "அத்திக்காய் அத்திக்காய் " பாடல்  மிகவும் மென்மையாக அதே சமயத்தில் காதலர்களிடையே  இருக்கும் காதலின் மகத்துவத்தை  அருமையாய் விளக்கும் பாடல்.
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே " பாடல் திருமதி சுசீலா குரலின்  இனிமையுடன் ஒலிக்கும் போது  மயங்காதவர்கள் யார் ? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சிவகங்கை சீமையில் வரும் " கனவு கண்டேன்  நான் கனவு கண்டேன் "  என்கிற பாடலைக் கேட்கும் போது  மனம் கண்டிப்பாய் அவரவர் திருமண நிகழ்வை  மீண்டும் மனதிற்குள் பார்த்து மகிழாமல் இருக்க முடியாது. நம்மை மீண்டும் இளமைக்குத் திருப்பும் சக்தி வாய்ந்தவை இந்தப் பாடல்கள்.
பாடலுக்கும், கவிதைக்கும் இந்த சக்தி உண்டா என்கிற  வியப்பு மேலிடுகிறது. கண்ணதாசனின் பேனா மை  செய்யும் விந்தையல்லவா  இது.

சிறுவர்களுக்கும், வாலிப வயதினருக்கும் மட்டுமா  கவியரசு பாடல்கள் புனைந்துள்ளார்.எல்லா வயதினருக்கும், எல்லா வித நிலையிலும் நாம் ஆறுதல் தேடிக் கொள்ள உதவியாய் பாடல்கள் வந்து விழுந்திருக்கின்றதே! வாழ்வின் ஓர் அங்கமான  சோகத்தையும் விடவில்லை கவிஞர் . சோகப் பாடல்களில் சோகத்தை பிழிந்ததோடு இல்லாமல்  ஆறுதலும் தரவல்லவர்  கவியரசர்.

காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.

கவலைகள் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து விடலாகாது என்பதை எவ்வளவு எளிதாய் காலம் மாறினால்  கவலைகளும் நீங்கும் என்பதில் அழகாய் விளக்குகிறார்.

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

என்கிறப் பாட்டை கேட்கும் போது மனம் கனத்துப் போவதைத் தடுக்க முடியவில்லை. சோதனைகள் பார்க்காத மனிதர்கள் உண்டா?  சவால்களும் வாழ்க்கையின் அங்கமே என்கிற ஆறுதல் உணர்வைத் தரும் பாடல்  . கண்டிப்பாக அவர் எதிர் நோக்கிய  சவால்களே இப்பாடலின் ஆதாரம் என்றே நான் நம்புகிறேன்.

கவிஞர் மரணத்தை  விட்டு விட்டாரா என்ன?. அதையும்  பாட்டிற்கு கருப்பொருளாக்கும் தைரியம் நம் கவியரசுக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். அந்தப்பாட்டு எவ்வளவு பெரிய ஹிட் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.


வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

இந்த வரிகளில் சொன்னவை அத்தனையும் உண்மை தானே! மரணத்தைக் கூட லாவகமாய் கையாளும் தந்திர  வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்  கவியரசே  என்று சொல்லலாம் .

கண்ணதாசன்  பெயருக்கு ஏற்றார் போல் பக்தி மான் கூட." திருமால் பெருமைக்கு நிகரேது " என்கிற பாடலில் பெருமாளின் பத்து அவதாரங்களின் காரணத்தையும், அவதார மகிமையும்  இந்தப்பாடலில் ஒளிர்வதை கண்கூடு.இது போல் இன்னும் நிறைய பாடல்கள் பக்தி மனம் கமழ எழுதிவைத்துள்ளார் கவிஞர். அத்தனையும் எழுத இங்கே எனக்கு இடமில்லை.

கவிஞர் தேன் மழையாய் பொழிந்திருக்கும் பாடல்களில்  ஒரே ஒரு துளி  எடுத்து  சுவைத்ததில்  நான் பெற்ற இனிமையை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 


இந்தக் கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.


image courtesy--google.

Saturday 13 September 2014

விருது* கிடைத்தது !


நான் வலைப்பதிவு  எழுதுவது, இப்பொழுது  சற்றுக்  குறைந்து  விட்டது என்று சொல்லியது ,என்னுடைய டேஷ் போர்ட். பல காரணங்கள்.
ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்....... என்று தான் சொல்ல வேண்டும்.

ஆமாம்..........  ஏதோ நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில்,  திருமதி  ரஞ்சனி நாராயணன்  அவர்களிடமிருந்து ஒரு பின்னூட்டம்  வந்திருந்தது. எனக்கு விருது கொடுக்கப்பட்டிருப்பதாக சொன்ன அந்த பின்னூட்டத்தை  சரியாக படிக்கக் கூட  இல்லை. அவர் சொல்லியிருந்த லிங்கிற்கு  ஓடி  விட்டேன்.  எனக்கு  நாட்டின் மிகப்பெரிய விருது வாங்கியதைப் போல் ஒரே மகிழ்ச்சி.

விருதை வாங்க அவர் தளத்திற்குப் போனேன் . விருதிற்கு  பெருமை சேர்க்கும் வலையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் எனக்கும் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது .

எல்லாம் சரி . தலைப்பில் விருதிற்கு மேல் நட்சத்திரக் குறி இருக்கிறதே என்று நீங்கள் யோசிக்கலாம்.

இந்த விருது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது (*Conditions Apply)

விருதின் நிபந்தனைகளை திருமதி ரஞ்சனி குறிப்பிட்டிருந்தார்.

என்ன என்று படித்துப் பார்த்தேன்.....
உடனுக்குடன் நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்.

முதலில்,
விருதைப் பகிர்ந்து கொண்டவருக்கு நன்றி சொல்லி , அவர் தளத்திற்கு இணைப்பு கொடுக்க வேண்டும். மிக்க நன்றி ரஞ்சனி.
அவர் தளத்திற்கு இணைப்பு  இங்கே  ranjaninarayanan.wordpress.com கொடுத்து விட்டேன்.

அடுத்து,
விருதினை  தளத்தில் போட்டுக் கொண்டேயாக  வேண்டுமாம்.
கரும்புத் தின்னக் கூலியா ? போட்டுக் கொண்டு விட்டேன்.

அப்புறம்,
என்னைப் பற்றி 7 விஷயங்களை  சொல்ல வேண்டும்.
இதோ அதையும்  சொல்லி விடுகிறேன்,.
  • ஓய்வு  பெற்ற ஆசிரியை.
  • எழுத வேண்டும்  என்று ஆசை. முயற்சி செய்கிறேன்.
  • அதுவும் பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்கிற  பேரவா உண்டு..  முயற்சிக்கிறேன்.இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை. 
  • எழுதாத நேரங்களில் படித்துக் கொண்டிருப்பேன்.
  • இசையின் மேல் காதலே  உண்டு. ஆனால் அது  கேட்க மட்டுமே .
  • இனிய மனைவி, பொறுப்பான தாய். அது  மட்டுமல்ல  செல்லமான பாட்டியும் கூட .
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...........

பிறகு,
விருதினை  ஐந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதோ என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு விடுகிறேன். எனக்குத் தான் இது முதல் விருது. இவர்களுக்கு  இது மேலும் ஒன்று.

(உங்கள் பின்னூட்டங்களின் மூலமாக என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நன்றியைச்  சொல்லும் விதமாக  இந்த விருதினை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சார்.. உங்களிடம் ஏற்கனவே இருக்கும் எண்ணற்ற விருதுகளுடன் இதையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.)



  • எங்கு சென்று  வந்தாலும் , அதைப் பற்றிய முழு விவரங்களை , நம்மோடு பகிர்ந்து கொள்ளும் திருமதி கோமதி அரசு.


  • தீதும் நன்றும் பிறர் தர வாரா, என்று சொல்லும் திரு. ரமணி .


அப்பாடி ........எல்லா நிபந்தனைகளும்   நிறைவேற்றியாச்சு.

இனிமேல் நானும் ஒரு Versatile Blogger .

இந்த விருதினை நான் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் , உங்கள் தளத்தில்  உங்களுக்குப்  பிடித்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா நிபந்தனைகளும் நினைவில் இருக்கட்டும். அதிலும் முக்கியமாக அரட்டைக்கு வரச்  சொல்ல மறக்க வேண்டாம்.

திருமதி ரஞ்சனி  நாராயணனுக்கு மீண்டும் என் நன்றிகள் பல.


image courtesy--google.


  

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்