Saturday, 4 October 2014

குப்பைக் கூடையில் அம்புகள்.


சில நாட்களுக்கு முன்பு திரு. தமிழ் இளங்கோ அவர்கள் அந்தக் காலத்தில் " அட்டெஸ்டேஷன் " வாங்கும் சிரமம் பற்றி எழுதியிருந்தார். அந்தப் பதிவு படித்ததும் என் மனமும்  மலரும் நினைவுகளின்  வட்டத்துக்குள் நுழைந்தது.


அப்பொழுது என்னுடைய  எஸ்.எஸ்.எல்.சி  பரீட்சை  முடிவுகள் வெளியாகியிருந்தன. பேப்பரில் நம்பர் பார்த்து , எல்லோருக்கும், தெரிந்தவர், தெரியாதவர் என்று எலோருக்கும்  சாக்லேட் கொடுத்து   என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.அடுத்து, கல்லூரிகளுக்கு அப்ளிகேஷனுடன் படையெடுக்க வேண்டும். அதற்கும் முன்பாக  மதிப்பெண் சான்றிதழ் வர  வேண்டுமே.


மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க  இரண்டு நாட்கள் ஆனது. இப்பொழுது போல்  உடனே நம் மதிப்பெண்கள் தெரிந்து விடாது. பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். பள்ளிக்கு  இரண்டு நாட்கள் கழிந்த பிறகே வந்து சேரும்.


பள்ளிக்கு சென்று மதிப்பெண்  சான்றிதழ் பார்த்ததும், தலை  கால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்..  அதிக மதிப்பெண்களை பெறுவேன்  என்கிற தன்னம்பிக்கையுடன் தான் தேர்வை எதிர் கொண்டேன். இருந்தாலும், முயற்சியின் பலனை மார்க்காக பார்க்கும் போது  ஏற்படும் மகிழ்ச்சி  எல்லையில்லாதது  ஆயிற்றே!


ஆக, கல்லூரியில்  பி.யு.சி. சேர பெரிதாகக் கவலைப்பட வேண்டாம் என்பதில் வீட்டில் எல்லோருக்கும் நிம்மதி . ஆனால் அதற்கு முன்னால் முதலில் மார்க் எல்லாவற்றையும்  " ஜாப்  டைப்பிங் "கில் கொடுத்து , டைப் செய்ய வேண்டும். ( இப்பொழுது போல் ஜெராக்ஸ்  எல்லாம் கிடையாதே!)


ஜாப் டைப்பிங் காரர்களுக்கும் டிமாண்ட்  அதிகம். அதுவும் தப்பில்லாமல்  டைப்படிக்கிறவர்களுக்கு டிமாண்ட் மிக அதிகம் . அதற்குப் பிறகு டைப் அடித்ததை எடுத்துக் கொண்டு  ஒரிஜினல் மார்க் ஷீட்டையும் எடுத்துக் கொண்டு அட்டெஸ்டேஷணிற்கு  அலைய ஆரம்பிக்க வேண்டும். பச்சை இங்கால்  கையெழுத்திடுபவர்கள்  அதிகமாக அப்பொழுதெல்லாம் தென்பட மாட்டார்கள் . அப்படியே இருந்தாலும் அவர்கள்  ஏக பிகு செய்து கொள்வார்கள். அவர்களை சொல்லியும் தப்பில்லை. டைப் அடித்ததை சரி பார்த்துக்  கையெழுத்திட வேண்டும்.  அந்த சிரமத்திற்கு பயந்து நிறைய பேர்  அதை தவிர்த்து விடுவார்கள்.


மதிப்பெண் சான்றிதழ் வந்ததும்., ஜாப் டைப்பிங்கில் மர்க்கை எல்லாம் டைப் செய்து வாங்கி விட்டு  அட்டெஸ்டேஷணிற்கு  எங்கே செல்லலாம் என்பதற்கு வீட்டில் ஒரு குட்டி மீட்டிங்கே நடந்தது . பிறகு எங்களுக்குத் தெரிந்த  மருத்துவரிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்த பின்,  என் சித்தப்பாவுடன் மருத்துவரைப் பார்க்க சென்றிருந்தேன்.


கிளினிக்  வாசலில் கூட்டம்  என்றெல்லாம் நினைத்து  விடாதீர்கள். அதிக பட்சம் இரண்டு அல்லது மூன்று  பேர் தான் இருப்பார்கள். நாங்கள் போன அன்று நான்கு பேர் இருந்தனர்.   எல்லா வியாதிக்காரர்களும் போன பிறகு , நானும் சித்தப்பாவும் உள்ளே நுழைந்தோம். அவர் எங்களுக்குத் தெரிந்தவர் ஆதலால்,  சித்தப்பாவிடம் அப்பொழுது நடந்த பரபரப்பான நிகழ்ச்சியைப் பற்றி  உரையாடிகே கொண்டே இருந்தார்.

எனக்கோ என் மார்க் மேல் ஒரே பெருமை. மார்க்கை எப்பொழுது கேட்பார் , பெருமையாய் சொல்லலாம் என்று பார்த்தால் , அரட்டை அடித்துக் கொண்டேயிருந்தார். ஐந்து நிமிடம் கழித்து, அனிச்சையாக என்னிடம் கையை நீட்டி டைப் அடிக்கப் பட்டிருந்த மார்க் லிஸ்டை  வாங்கினார் டாக்டர்.


நான் கொடுக்கவும், அப்பொழுது தான் அவருக்கு நாங்கள்  எதற்காக வந்திருக்கிறோம் என்பது புரிய ,


" இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி  யா நீ? "


பவ்யமாக  " ஆமாம் " சொன்னேன்.


" என்ன பாஸ் செய்து விட்டாயா ?" டாக்டர் கேட்கவும்,


அபத்தமாகக் கேள்வி கேட்கிறாரே. பாஸ் செய்யவில்லை என்றால் இவரிடம் எதற்குக் கையெழுத்து வாங்க நிற்கிறேன்  என்று நினைத்தேன் சொல்லவில்லை.( மனதிற்குள்  என் மார்க்கைப் பார்  அப்ப தெரியும்." பாஸா"  என்றா கேட்கிறாய் என்று நினைத்துக் கொண்டேன்,)


ஆனால் ,"ஆமாம். பாஸ் செய்து விட்டேன் "என்று சொன்னேன் மீண்டும் பவ்யமாகக் காட்டிக் கொண்டு .


பிறகு " எவ்வளவு மார்க் ?  "  என்று கேட்டார் டாக்டர்.


அவர் கையில் தான் இருக்கிறது மார்க் ஷீட்.  ( ஆனாலும் இவர் எப்ப கேட்பார் என்று தானே இவ்வளவு நேரமும்  ஏங்கிக் கொண்டிருந்தேன்.)

நான் வாங்கியிருந்த மார்க் என்னைத் தரையில் நிற்க விடவில்லையே . மேலே பறந்துக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தப் பெருமை என் குரலில் தொனிக்க  என் மார்க்கை சொன்னேன்.


" அட்டகாசமான மார்க் ஆச்சே " ( இன்னும் மேலே ...... மேலே உயரேப்  போனேன் என்  மனதில். )


" நிஜமாவா " டாக்டர் என்னைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.


அப்பொழுதே மேலேயிருந்து  டாக்டர் ,லேசாக  என்னை கீழே  தள்ளியது போலுணர்ந்தேன்.


அடுத்து டாக்டர் சொன்னதைக் கேட்டதும்.  நான் கீழே இறங்கவில்லை. அதலபாதாளத்தில் விழுந்தேன் என்று தான் சொல்ல  வேண்டும். அப்படி என்ன சொன்னார் என்று தானே கேட்கிறீர்கள்.


" நம்பவே முடியவில்லை. நீயா இவ்வளவு மார்க்  வாங்கியிருக்கிறாய்? " கேட்டாரே பார்க்கலாம்.  அழுகை  முட்டிக் கொண்டு வெளியே வரத் தயாரானது சமாளித்து, அட்டஸ்டேஷணிற்கு  நன்றி சொல்லி விடை பெற்றோம். 


மனதிற்குள்,


சொக்கா ! சொக்கா! என்ன இப்படிக் கேட்டு விட்டாரே  டாக்டர். 

நான் என்ன தருமியா? இல்லை...... பரீட்சை தான் மண்டபத்தில் நடந்ததா   எனக்குப் பதிலாக சொக்கன்  வந்து எழுதியிருப்பதற்கு. வருடம் முழுக்க நான் செய்த கடின உழைப்பைப்  பாராட்டாவிட்டாலும்  போகிறது. இப்படி என்னை மட்டமாக எடை போடாமல் இருந்தாலே போதும் என்று தோன்றியது எனக்கு.

இவருக்கு என் படிப்பைப் பற்றி என்னத்  தெரியும். இவர் எனக்கு ஆசிரியரா ? இல்லையே !

டாக்டர் தானே.


ஆனாலும் ,பின்னாளில் எதிர்மறைக் கருத்துக்கள் ,  சொல்லம்புகளாய் என்னைத் தாக்க வரும்போது , அப்படியே அதை குப்பைக் கூடையை நோக்கித் திசை  திருப்பலாம் என்கிற  பாடத்தின் அரிச்சுவடியை அன்றே   கற்றுக் கொடுத்தற்கு   நன்றி டாக்டர்.

image courtesy--google.

36 comments:

  1. உங்கள் இந்தப் பதிவைப்பார்த்து நானும் அந்தக் காலத்திற்குச் சென்று விட்டேன், ராஜி. நான் கல்லூரிக்குப் போகவில்லை. வேலை கிடைத்தபின் தொலைதூரக் கல்லூரி வழியாகப் படிக்க ஆரம்பித்தேன். அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருப்பேன். இதைப்பார்த்து விட்டு எனது மேலதிகாரி 'பாஸ் பண்ணிவிடுவாயா?' என்று கேட்டபோது 'நிச்சயம்' என்று சொல்லிவிட்டு மனதிற்கு 'முட்டாள்! எப்படிப் பாஸ் பண்ணிக் காமிக்கிறேன் பார்' என்று சவால் விட்டேன். அதேபோல் முதுகலை வரை படித்தும் விட்டேன்.
    எதிர்மறைக் கருத்துக்கள் நம் மனதை கெடுத்துவிட அனுமதி கொடுக்கக் கூடாது. அதை நேர்மறையாக மாற்றிக் காண்பிக்க வேண்டும். நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
    தமிழ்மணம் வாக்கும் போட்டுவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், உங்கள் எண்ணங்களை விரிவாக இங்கே பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ரஞ்சனி. திரு தமிழ் இளங்கோ அவர்களின் அட்டெஸ்டேஷன் பற்றியப் பதிவைப் படித்ததும் இந்த நிகழ்ச்சி சடாரென்று நினைவில் மோதியது. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த கருத்துரைகள் லேசில் மறையாது போலிருக்கிறதே!
      உங்கள் பாராட்டிற்கு மீண்டும் நன்றி ரஞ்சனி.

      Delete
  2. //இவருக்கு என் படிப்பைப் பற்றி என்னத் தெரியும். இவர் எனக்கு ஆசிரியரா ?
    இல்லையே ! டாக்டர் தானே.//

    அதானே ! :)))))

    >>>>>

    ReplyDelete
  3. //ஜாப் டைப்பிங் காரர்களுக்கும் டிமாண்ட் அதிகம். அதுவும் தப்பில்லாமல் டைப்படிக்கிறவர்களுக்கு டிமாண்ட் மிக அதிகம் . //

    நாம் இதுபோலெல்லாம் எவ்வளவு சிரமப்பட்டிருப்போம்.

    //அதற்குப் பிறகு டைப் அடித்ததை எடுத்துக் கொண்டு ஒரிஜினல் மார்க் ஷீட்டையும் எடுத்துக் கொண்டு அட்டெஸ்டேஷணிற்கு அலைய ஆரம்பிக்க வேண்டும். பச்சை இங்கால் கையெழுத்திடுபவர்கள் அதிகமாக அப்பொழுதெல்லாம் தென்பட மாட்டார்கள் அப்படியே இருந்தாலும் அவர்கள் ஏக பிகு செய்து கொள்வார்கள். //

    கரெக்ட். ஆனால் எனக்குத்தெரிந்த ஒரு பிரபலம் இருந்தார். அவர் வீட்டில் காலையிலேயே ஒரே கூட்டமாக இருக்கும். அவர் வந்ததும் சரசரவென்று நாம் நீட்டுமிடத்திலெல்லாம் பச்சை இங்கில் கையெழுத்துப்போட்டு விடுவார். நிறைய சீல் அங்கு வைத்திருப்பார். நாமே சீல் குத்திக்கொண்டு செல்லலாம். எதையுமே ஒரிஜினலுடன் ஒப்பிட்டே பார்க்க மாட்டார். மிகவும் நல்லவர். நம் மீது அவ்வளவு நம்பிக்கை மட்டுமல்ல...... இளைஞர்கள் மேல் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை .... இவர்களின் நாளைய வோட் நமக்கே என அவருக்கு நன்றாகவே தெரியும்.

    அவர் எதற்கும் பயப்படாமல் கையெழுத்திட்டதற்குக் காரணம் அவர் ஓர் அரசியல் வாதி. ஆளும் கட்சி சட்டசபை உறுப்பினர். மிகவும் நல்லவர் + வல்லவர்.

    >>>>>

    அவர்களை சொல்லியும் தப்பில்லை. டைப் அடித்ததை சரி பார்த்துக் கையெழுத்திட வேண்டும். அந்த சிரமத்திற்கு பயந்து நிறைய பேர் அதை தவிர்த்து விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //அவர்களை சொல்லியும் தப்பில்லை. டைப் அடித்ததை சரி பார்த்துக் கையெழுத்திட வேண்டும். அந்த சிரமத்திற்கு பயந்து நிறைய பேர் அதை தவிர்த்து விடுவார்கள்.//

      ஆமாம் ..... ஆமாம். அவர்களுக்கு இதர பல வேலைகள் இருக்குமே. இது அவர்களுக்கு உபரியான வேலையாகும். இதில் கையெழுத்துப்போடுவதால் அவர்களுக்கு எந்த ஒரு ஆதாயமோ வருமானமோ கிடைக்கவும் வழியில்லை. அதனாலும் பலர் இதயெல்லாம் தவிர்த்து விடுவார்கள். ஒப்பிட்டுப்பார்க்காமல் அவசரமாக கையெழுத்திட்டு பிறகு மாட்டிக்கொள்வோமோ எனவும் அஞ்சுவார்கள்.

      Delete
  4. தங்களின் குழந்தைப்பருவ உணர்வுகளை அழகாக சுவைபட நகைச்சுவை மிளிர அனுபவித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நீண்ட விரிவான கருத்துரைக்கும், பாராட்டுக்கும், நன்றி கோபு சார்.
      அப்பொழுதெல்லாம் இந்த அட்டஸ்டேஷன் பெரிய விஷ்யமாயிற்று இல்லையா. இந்த அனுபவம் என் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது. உங்கள் மீள் வருகைக்கும், பாராட்டி ஊக்கப் படுத்துவதற்கும் நன்றி கோபு சார்

      Delete
  5. மலரும் நினைவுகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  6. உங்கள் மலரும் நினைவுகள் மறுபடியும் அந்நாளைய மாணவப் பருவத்திற்கு என்னை அழைத்துச் சென்றது.

    ஜாப் டைப்பிங் அடிப்பவர்களைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் சிலர் இதுமாதிரி வேலைகள் என்றாலே எடுத்துக் கொள்வதில்லை. சிலர் சர்டிபிகேட்டுகளை தங்களிடம் கொடுத்துவிட்டு அப்புறம் வந்து வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள். அவற்றைத் திரும்ப வாங்கும் வரை மனம் திக் திக் திக்தான்.

    டாக்டரிடம் அட்டெஸ்டேசன் வாங்கியது பெரிய விஷயம்தான். அவ்வளவு சீக்கிரம் போட மாட்டார்கள். ஏனெனில் பெரும்பாலும் அவர்களது ரப்பர் ஸ்டாம்புகள் அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே வைத்து இருப்பார்கள். அந்த காலத்து வயதான டாக்டர்கள் நகைச்சுவையாக பேசுவார்கள். சிரித்துக் கொண்டே ஊசி போடுவார்கள். ஊசி போட்டதே தெரியாது.

    அந்தநாள் சான்றொப்பம் (attestation) நினைவுகளுக்கு எனது பதிவும் ஒரு காரணமாயிற்று என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சி!

    பகிர்வுக்கு நன்றி! ( த.ம. 2 )

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவைப் படித்த அன்றே என் நினைவடுக்குகளில் இருந்து இந்த சம்பவம் சட்டென்று மேலே வந்தது. அதைத் தான் பதிவாக்கினேன்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தமிழ் இளங்கோ சார்.

      Delete
  7. //பின்னாளில் எதிர்மறைக் கருத்துக்கள் , சொல்லம்புகளாய் என்னைத் தாக்க வரும்போது , அப்படியே அதை குப்பைக் கூடையை நோக்கித் திசை திருப்பலாம் ///
    ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஒரு பாடமிருக்கும்
    இன்றைக்கு அநேகர் இப்படித்தான் இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சார். அதனால் தான் டாக்டர் அரிச்சுவடி பாடம் எடுத்தார் என்று சொல்கிறேன். இன்றைக்கும் பலர் இந்த சொல்லம்புகளை விட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். அதை அப்படியே குப்பையில் தள்ளி விட வேண்டியது தான்.

      Delete
  8. எனக்கும் என் அட்டஸ்டேஷன் அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். நகைச்சுவையைக் கலந்து நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள். ரஞ்சனி மேடம் சொல்லியிருப்பதும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நம் தலைமுறையைச் சேர்ந்த எல்லோருக்கும் இந்த னுபவங்கள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  9. தங்களுக்கே உரித்தான நடையில் இனிமையான பதிவு!..
    மலரும் நினைவுகளில் நானும் மூழ்கி விட்டேன்.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி துரை சார்.

      Delete
  10. மலரும் நினைவுகள் மறுபடியும் மாணவப் பருவத்திற்கு இனிமையாக
    அழைத்துச் சென்றது.

    அன்று முதல் இன்று வரை உதாரணம் காட்டி வாழ்த்துகிறார்கள்.
    அட்டஸ்டேசன் பள்ளி தலைமை ஆசிரியரே அளிப்பார்..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி மேடம்.

      Delete
  11. ஒரு சிலருக்கு ஐ க்யு அதிகமாக இருக்கும். நல்லாப் படிப்பார்கள். படிச்சு டாக்டராகவும் ஆயிடுவாங்க. ஆனால், இவர்கள் சோஷியல்லி ஆக்வர்டாக இருக்கவும் வாய்ப்பிருக்கு. டாக்டர் என்பதால் உயர்வான சிந்தனைகள் இருக்கும், நாகரிகம் தெரியும், மற்றவர் மனதைப் புண்படுதுவதுபோல் பேசமாட்டார்கள்னு நாம் நினைப்பது தவறு. டாக்டர் என்பது ஒரு தொழில். பணம் சம்பாரிக்க இந்த்த் தொழில் செய்றாங்க. அவ்ளோதான்.

    அந்த வயதில் இதுபோல் எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் சொல்லம்புகளை "ஹாண்டில்" செய்வது கஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் டாக்டர் என்பதால் அவரைப் பற்றிய ஒரு உயர்ந்த அபிப்பிராயம் என் மனதில் இருந்திருக்குமோ ? அதனால் தான் அவர் என் 'மார்க்'கை அங்கீகரிக்கவில்லை என்பது இன்று வரை என்னைப் பாதித்திருக்கிறதோ ? அப்படியும் இருக்கலாம்.
      அந்தவயஹ்டில் நீங்கள் சொன்னது போல் ஹாண்டில் செய்வதற்கு சற்றுக் கடினமாக இருந்தாலும், இப்படியும் கருத்துரைகள் வரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வருண் சார்.

      Delete
  12. ஏயப்பா. எத்தனை நினைவுகளை மீட்டுவிட்டீர்கள் ராஜி.ஒரே ஒரு கெஜட்டட் ஆஃபீசரை நம்பியே எங்கள் வாழ்க்கை ஓடியது. ஆக்கபூர்வமான வார்த்தைகள் அரிதானால் நம்மை நாமே ஊக்கப் படுத்திக் கொள்ளவேண்டியதுதான். மிக நல்ல பதிவு.ரஞ்சனியின் பின்னூட்டம் ரசிக்கவைத்தது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இந்த அட்டெஸ்டேஷன் அனுபவம் உண்டு போல் தெரிகிறது. நீங்கள் சொல்வது போல் நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது தான். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வல்லி மேடம்.

      Delete
  13. பதிவை ரசித்தேன். ஆனால் எதிர்மறைக் கருத்துக்களை ஒரு முறை அதன் மதிப்புக்கு ஆராய்ந்து அவை சரியானால் உள் வாங்கிக் கொண்டு பின் தேவைப் பட்டால் குப்பைத் தொட்டிக்குச் செலுத்தலாம் அட்டெஸ்டேஷன் எனும்போதுஇப்பவும் நான் எதிர்கொள்வது இந்த life certificate தான் நான் உயிருடன் இருப்பதாக என்னைத்தவிர யார் யாரோ சான்று தரலாம். கேவலமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எதிர்மறைக் கருத்து என்று தெரிந்த பின் எதற்கு நம் மனதில் அந்தக் குப்பையை வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் குப்பையைக் கூடையில் போடலாம் என்று சொன்னேன் பாலு சார்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  14. இந்த அட்டெஸ்டேஷன் விஷயத்தில் நானும் அவதிப் பட்டிருக்கிறேன். யாரும் சும்மாப் போட்டுக் கொடுக்க மாட்டார்கள். பணம் கொடுக்கணும். அதை அப்பாவிடமிருந்து வாங்குவதற்குள் போதும் போதும்னு ஆகும்னா கையெழுத்து வாங்குவது அதைவிடக் கஷ்டமாக இருக்கும். பொதுவாக மருத்துவர்கள் கையெழுத்து வாங்க வரும் சிறுவர், சிறுமிகளை மதிக்க மாட்டார்கள். :))))))))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனுபவங்களை பதிவாக்குங்களேன் கீதா மேடம்.

      Delete
  15. இதை எல்லாம் நினைவில் கொண்டே பின்னாட்களில் என் கணவர் அட்டெஸ்டேஷன் செய்கையில், ஒரிஜினலைப் பார்த்ததும் எந்தக் கேள்வியும் இல்லாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடுவார். காக்க வைப்பதில்லை. ஆஃபீஸ் கிளம்பும்போது வந்தால் தான் பின்னர் வரச் சொல்லுவார். வீட்டிலேயே இதற்கென ஸ்டாம்ப் பாட், ஸ்டாம்ப் முத்திரை தயாராக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி மேடம்.

      Delete
  16. சின்ன வயது நினைவுகள் சிறப்பு! பழைய காலத்திற்கு கொண்டு சென்றது பதிவு! ஆனாலும் அந்த டாக்டருக்கு எவ்வளவு கொழுப்பு? கையில் மதிப்பெண் சான்றிதழை பார்த்தும் உங்களை நம்பவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. பிரச்சினையே அது தானே சுரேஷ் சார். நல்ல மதிப்பெண் தான் அதில் சந்தேகமில்லை டாகடருக்கும். அதை நான் வாங்கியிருக்க வாய்ப்பில்லை என்கிற தொணி அல்லவா இருக்கிறது அவர் கேள்வியில் அதைத் தான் சொன்னேன்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ் சார்.

      Delete
  17. மலரும் நினைவுகள் சுவாரசியமாக இருந்தது மேடம். டாக்டர்கள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் பாேலிருக்கிறதே!

    ReplyDelete
  18. அன்புடையீர், தங்களின் சிறப்புக்கட்டுரை [நேயர் கடிதம்] இன்று என் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இது தங்களின் + அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2014/10/4.html

    அன்புடன் கோபு

    ReplyDelete
  19. //சொல்லம்புகளாய் என்னைத் தாக்க வரும்போது , அப்படியே அதை குப்பைக் கூடையை நோக்கித் திசை திருப்பலாம் என்கிற பாடத்தின் அரிச்சுவடியை அன்றே கற்றுக் கொடுத்தற்கு நன்றி டாக்டர்.//

    உண்மைதான்...

    மனசுக்குள் பள்ளி நாட்களின் வருகைப் பதிவை ஞாபகப்படுத்திய பகிர்வு அம்மா...

    ReplyDelete
  20. பின்னாளில் எதிர்மறைக் கருத்துக்கள் , சொல்லம்புகளாய் என்னைத் தாக்க வரும்போது , அப்படியே அதை குப்பைக் கூடையை நோக்கித் திசை திருப்பலாம் என்கிற பாடத்தின் அரிச்சுவடியை அன்றே கற்றுக் கொடுத்தற்கு நன்றி டாக்டர்.//

    நன்றாக சொன்னீர்கள். எதிர்மறை கருத்துக்கள், சொல்லும்புகளை தூக்கி குப்பைகூடையில் தான் போட வேண்டும் .

    ReplyDelete
  21. நடந்தது அந்த நாளில்தான் என்றாலும் மற்றவர்களாஇ இளக்காரமாகப் பார்த்த‌தை நினைக்கும்போது கடுப்பாகத்தான் இருக்கிறது.

    உங்கள் பள்ளியிலேயே வேலை செய்யும் கிராஜுவேட் ஆசிரியரிடம் அட்டஸ்டேஷன் வாங்கக் கூடாதா?

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்