Monday, 25 May 2020

குலசேகராழ்வாரும், மலையும்.



குல சேகராழ்வார், திருமலை  மீது அமைதியய் அமர்ந்து யோசித்திருப்பார். இத்தனைப் பிறவிகளையும் நாமே கேட்டு நாமே மறுத்தும் விட்டோம். பெருமாளும் நாம் சொல்வதற்கெல்லாம் இசைந்து கொடுக்கிறாரே. 

அதனால் இப்ப நன்றாக யோசித்துக் கேட்க நினைக்கிறார். அவருக்கு ஏழுமலைகளும் மனதில் தோன்றவே...
ஏன் இந்த மலைகளில் ஒன்றாகி விட்டால்..... இங்கேயே வேங்கடவன் அருகிலேயே இருந்து விடலாமே  என்று தோன்றவே அதையே வரமாய் கேட்கிறார்.


மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே


மின்னல் போன்ற இடையை உடையவர்களாகிய  ஊர்வசி, மேனகை போன்ற ஸ்த்ரீகளின் ஆட்டமும், பாட்டமுமாகியவற்றையெல்லாம் நான் விரும்பவில்லை.  வண்டுகளின் கூட்டம் 'தென தென' என்று பண் பாடும், திருமலையிலே, அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய  அருமையான தவத்தை உடையவனாகக் கடவேன்.


ஆனால் இதிலும் அவருக்குத் திருப்தியில்லைப் போலும். கோயில் கட்டுகிறேன் பேர்வழியென்று பாறைகளுக்காக யாரேனும் மலையை உடைத்து எடுத்துக் கொண்டுப் போய் விட்டால். 

அப்படிக் கூட நடக்குமா? என்ன? 

ஏன் நடக்காது? இப்பொழுது நடப்பதையெல்லாம் பார்த்தால்..... குல சேகராழ்வார் தீர்க்கதரிசியென்றே தோன்றுகிறது. 

சரி. விஷயத்திற்கு வருவோம். 

மலையானால் அதற்கு ஒரு இடையூறு வரும் என்று நினைத்தவர் , யாராலும் உடைத்து எடுக்க முடியாதபடிக்கு, 'சல...சல' என்று பாய்ந்தோடும் ஆறாகிப் போனால்....

அது தான் சரியென்று தோன்றவே...அதையே வரமாய் கேட்கவும் செய்கிறார். 


வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே

ஆகாயத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு விளங்குகின்ற பூரண சந்திரன் போன்ற ஒற்றை வெண் குடையின் கீழ், ராஜாதி ராஜனாய் பெருமையுடன் இருந்து, அனைவராலும் விரும்பப்டுகின்ற செல்வத்தை ஒரு பொருளாக மதிக்க மாட்டேன். தேன்  மிக்க மலர்களுள்ள சோலைகளையுடைய திருமலை மேல் ஒரு கானாறாய்ப் பாயும் பாக்கியத்தை உடையவனாவேனே .


பெருக்கெடுத்தோடும் ஆறாய் பிறவிக் கேட்டவர் ...கேட்ட மாத்திரத்திலேயே " வேண்டாம் வேங்கடவா...வேண்டவே வேண்டாம் ..ஆறு வற்றிப் போனால் நான் உன்னை விட்டுப் பிரிய நேரிடுமே "  என்று மறுதலித்து விடுகிறார்.

"அதனால் வேறொருப் பிறவி யோசித்து சொல்கிறேன். "என்று யோசிக்கவும்  ஆரம்பிக்கிறார். 

வேங்கடவன் மேலுள்ள அளவற்றக் காதலால் குழம்பிப் போய் பிறவி மேல் பிறவி கேட்கிறார்.

மாறாப் புன் முறுவலுடன் வேங்கடவனும் காத்திருக்க ஆரம்பிக்கிறார்.                                                                                                                                                         (தொடரும்)


3 comments:

  1. ஆசைகளுக்கு அளவேது என்பது போல குலசேகர ஆழ்வாரின் விருப்பங்களுக்கும் அளவே இல்லை - அவனிடத்தில் இருக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்.

    மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் மிக்க நன்றி வென்கட்ஜி.

      Delete
  2. மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்