Saturday, 9 May 2020

குலசேகராழ்வாரும், புதரும்.
"எனக்கு....எனக்கு.... "  நான் உளறலாய் கத்த...

"ராஜி! ராஜி ! எழுந்திரு....தூக்கத்தில் என்ன கத்துற? " என்னவர் என்னை உலுக்கி எழுப்ப...

"ம்.....ம்....." முணகிக் கொண்டே கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு  திருதிரு வென நான் முழிக்க....

சில வினாடிகளுக்குப் பிறகு...

" எதற்கு என்னை எழுப்பினீர்கள்? நல்ல கனவு. " அவரிடம் கோபித்துக் கொண்டேன்.

"அருமையான கனவு. திருப்பதியில் பெருமாள் தரிசனம். "

" திருப்பதி தரிசனமா? நல்ல தரிசனம் கிடைத்ததா?" கிண்டலாக அவர் கேட்க..

"பெருமாள் பேசினார் தெரியுமா? " தொடர்ந்தேன்.

"என்னது பெருமாளா?"
"உன்னிடமா?." அவர் நக்கலாய் கேட்க...

"ஜருகண்டி...ஜருகண்டி.." சத்தத்திற்குப் பின்னால், " தந்தேன்... தந்தேன்..." குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.


"பெண்ணிற்குக் கல்யானம் ஆக வேண்டும்" - தந்தேன்.
வீடு வாங்க வேண்டும்- தந்தேன்..
பரீட்சையில் பாஸ் பண்ண வேண்டும்- தந்தேன்..

இப்படிப் பலரின் வேண்டுதல்களுக்கும் அவர் அருள...எல்லோரும், (including ஜருகண்டி காரர்களும்)  திறந்த வாய் மூடாமல் அவரைப் பார்க்க...

" குலசேகரா....நல்லா வேண்டிக்கோடா.." பெரிதாய் ஒரு குரல் கேட்க...
 தந்தேன்...தந்தேன்... என்று சொல்லிக் கொண்டிருந்த  பெருமாள்

"குலசேகரனா ? எங்கே? எங்கே? குலசேகராழ்வான் இங்கேயும் வந்துட்டானா?" பதறியபடி  அங்குமிங்கும் சுத்தி சுத்திப் பார்க்க....
( எப்படியெல்லாம்  மானத்தை வாங்கி விடுவானோ? என்கிற பதட்டம் அவர் குரலில் தொணிக்க..)

"பெருமாள் பார்க்கிறார். நேத்ர தரிசனம் ! நேத்ர தரிசனம் ! கோவிந்தா கோவிந்தா!"  கத்தல் காதைக் கிழிக்க.....

கூட்டம் சீக்கிரம் போனால் தேவலை என்றாகி விட்டது பெருமாளுக்கு.
பெண்டாட்டி தாசன் என்று சொன்ன குலசேகராழ்வார் இத்தனைப் பேர் மத்தியில் நம்மைப் பற்றி வில்லங்கமாய் என்னமாவது சொல்லி விட்டால் என் மரியாதை என்னாவது? ? பதைப்பதைப்புடன் பெரிய கண்களை உருட்டி உருட்டி பார்க்க... பகத கோடிகளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

குல சேகராழ்வார் அப்படி என்ன பெருமாளை சங்கடத்தில் விட்டார் என்று தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்..

"என்ன நான் சொல்வது காதில் விழ்கிறதா? தூங்கி விட்டீர்களா?" எனவரிடம் கேட்க..

"இல்லை...... ஆ....வ்...... நீ சொல்லு கதையை...இல்லையில்லை கனவை..." என்னவர் பவ்யமாய் நடிக்க...

அலட்சியமாய் தொடர்ந்தேன்...

"அப்பப் பார்த்து நான் பெருமாள் அருகில் சென்றேன்."

"அப்புறம்...?"

நான் வரம் கேட்பதற்கு தான் ' எனக்கு எனக்கு " நான் சொல்ல ....நீங்க எழுப்பிவிட.. சோகத்துடன் சொன்னேன்.

குலசேகராழ்வார் திருமொழி படித்து விட்டுத் தூங்கச் சென்றதன் விளைவு....இந்த கனவு.

மீன், கொக்கு, கோவில் பணியாள், செண்பக மரம் என்று வரிசைக் கட்டி நின்ற கோரிக்கையில் அடுத்ததாக அவர் கேட்டது....

 புதர் பிறவி.

செண்பக மரத்தை வேண்டாம் என்று சொன்ன ஆழ்வார்.... திருமலையில் ஒரு  புதராய் இருந்து விட்டால், யாரும் நம்மை விரும்பிப் பெயர்க்க மாட்டார்களே.... என்று தோன்றவே....

அதையே வரமாய்  கேட்கிறார்....பெருமாளிடம்.

கேட்ட பின்பு தான் , அவருக்கு உறைக்க்கிறது...

ஆனால் புதர் , ரௌடிகளின் கூடாரம் ஆயிற்றே. திருமலைப் புதர் என்றால் மட்டும் என்ன ரௌடிகள் விட்டு விடுவார்களா? சீட்டு விளையாட...மது அருந்த... என்று புதர்களைத் தானே தேடி தேடி அலைகிறார்கள். 

அது மட்டுமா? புதர்களை யாராவது வெட்டி விட்டால்.....என் நிலை என்னாவது?

அல்லது புதர் 'தீ'க்கு  விருந்தாகி விட்டாலோ...திருமலை விட்டுப் போக வேண்டியது தானே.

அதனால் ," பெருமாளே! தெரியாமல் கேட்டு விட்டேன். எனக்கு 'புதர்' பிறவியும் வேண்டாம். 
வேறு ஏதாவது யோசித்து சொல்கிறேன்." என்று ஆழ்வார் வேண்டிக் கொள்ள...

கேட்பதையெல்லாம் கொடுக்கும் திருமலை தெய்வம் , புன் சிரிப்புடன்..இதற்கும் தலையசைக்கிறார்.

குல சேகராழ்வார் பாடலைப் பார்ப்போமா?

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து 
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே

தன்னைப் பார்ப்பவர்களுக்கு, அச்சத்தால், நடுக்கத்தை விளைவிக்கின்ற மதங் கொண்ட யானையினது கழுத்தின் மீது வீற்றிருந்து, எல்லா சுகங்களையும் அனுபவிக்கும்படியான செல்வமும்,அரசாட்சியையும் நான் விரும்ப மாட்டேன். எமது தலைவனாகிய பெருமாளுடைய திருமலையிலே புதராய் நிற்கும்படியான பாக்கியத்தை உடையவனாகக் கடவேன்.

புதராகும் வரத்தையும், நிராகரித்த குலசேகராழ்வார்... அடுத்து என்ன வரம் கேட்கப் போகிறார் என்று பார்ப்போம்.

2 comments:

  1. எத்தனை எத்தனை ஆசைகள் - கேட்டதெல்லாம் கொடுப்பவன் ஆயிற்றே! அடுத்து என்ன கேட்டார் என்பதை உங்கள் பாணியில் சொல்வதைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகை புரிந்ததற்கும், ரசித்துப் படித்ததற்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்