" நான் காபி போடப் போகிறேன்.உங்களுக்கும் காபி போடவா? "
" ம் "
" டிகாக்ஷன் போதுமா?"
" உனக்குத் தெரியாதா? "
" சரி மெயில் செக் செய்தீர்களா? "
" ம் "
" கிரெடிட் கார்ட் பணம் கட்டியாச்சா? "
" ம் "
" கணேஷ் போன் செய்தான்.
அடுத்த வாரம் வருகிறானாம். "
" ஓ "
" பக்கத்து வீட்டில் மாடியில் ஏதோ கட்டுகிறார்கள்? "
" ஓ "
" நான் டி. நகர் போய் வருகிறேன்."
"சரி."
" பால் பாக்கெட் வந்தால் பிரிட்ஜில் வைத்து விடுங்கள் ."
"ஓ. கே. "
இந்த நீள நீள கேள்விகள் எல்லாம் என்னுடையவை.
ஒரு எழுத்து , மிஞ்சி மிஞ்சிப் போனால், இரண்டு எழுத்து வரை நீண்டிருக்கும் பதில்கள் என்னவருடையது.
இந்த ஒற்றை எழுத்து பதில்கள் கிடைக்கவே நான் தவமிருந்த நாட்களும் உண்டு.
ஒன்று, பேப்பரில் அவர் தலை அமுங்கியிருக்கும்,இல்லை டிவியில் நடக்கும் சண்டைகளில், (NDTV, HT, Times Now களி ல் நடக்கும் விவாதங்கள் ) தன் மனதைப் பறிகொடுத்தபடி அமர்ந்திருப்பார்.
திருமணமான இத்தனை வருடத்தில் என் கணவர் பற்றி நான் தெரிந்து கொண்டது இது.
" Man of very few words " என்ற பட்டம் கூட பெற்றிருக்கிறார்.
இந்தப் பட்டத்தை அவருக்கு வாங்கிக் கொடுத்த பெருமையெல்லாம் என்னைத் தான் சேரும் என்று...... நான் பெருமைபட்டுக் கொள்ளவில்லை.
அவர் தான் சொல்கிறார். அவருக்குப் பேசவே நேரம் கொடுக்காமல் நானே பேசிக் கொண்டிருக்கிறேன் என்று .
ஏதோ .....இந்தப் பெருமையாவது என்னை சேர்ந்ததே! அதுவே போதும்.
அது எப்படித் தான் அவரால் இப்படி இருக்க முடிகிறதோ என்று தோன்றும் எனக்கு.சாப்பிடாமல் கூட இருந்து விடலாம். பேசாமலா......?(மயக்கம் வரும் போலிருக்கிறதே)
இந்த Man ம் பேசும் சந்தர்ப்பங்கள் உண்டு.
அன்றும் அப்படித் தான் இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒற்றை எழுத்து பதில் பறந்து வந்து கொண்டிருந்த நேரம், .......
நான் " எங்கள் ப்ளாக் "கில் திரு .ஸ்ரீராம் அவர்களின் பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அதில் வந்திருந்த " குவாட்ரி சைக்கிள் " பற்றிய விஷயம் படித்தபின் அவரிடம்,
"இங்கே பாருங்கள் ஒரு புது வண்டிக்கு நம் மத்திய அரசு ஒப்புதலளித்திருக்கிறது.இதோ முக நூலிலும், பதிவிலும் வந்திருக்கு" என்று சொன்னது தான் தாமதம்.
சட்டென்று என்கையிலிருந்து ipad மின்னல் வேகத்தில் மாறி அவர்கையிலிருந்தது.
ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டார்.
அதற்குப்பிறகு ,
" இது Reva கார் மாதிரியே இருக்கு.
எவ்வவளவு கி.மி. கொடுக்குமோ தெரியலையே
வண்டி பெட்ரோலில் ஓடுமா அல்லது டீசலில் ஓடுமா?
பார்த்தால் rear என்ஜின் போல் தெரிகிறது.
எத்தனை பேர் உட்காரலாம். என்று சரமாரியாய் கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்."
என்னிடம் கேட்டுப் பிரயோசனமில்லை என்று தெரியும்.
எனக்கு வண்டிகள் பற்றிய அறிவு கொஞ்சம் ( கொஞ்சம் தான் )கம்மி.உடனே எனக்கு வண்டி பற்றிய அறிவேயில்லை என்று தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
என்னவருக்கு இந்த வண்டிஎன்று இல்லை , எந்த வண்டியானாலும் இதே போல் ஆர்வம் பிய்த்துக் கொண்டு போகும். அன்று சைக்கிள் ஓட்டும் போதும் இந்த ஆர்வத்தைப் பார்த்திருக்கிரேன் ,. இன்று கார் ஓட்டும் போதும் துளி கூட ஆர்வம் குறைந்த பாடில்லை.
நாலு சக்கரம் சின்ன சைசில் இருந்தால் கார். (உடனே லாரிக்கு எவ்வளவு சக்கரம் என்று யாரும் கேட்க வேண்டாம் )
ஹோண்டா என்பார், ஹுண்டாய் என்பார் (யாரையாவது திட்டுகிறாரோ என்று தான் முதலில் நினைத்தேன்).
Audi கார் என்று பேசுவார். (ஆடியோ, ஆடாமலோ கார் போனால் சரி )
BMW கார் என்றால் இது என்ன காருக்கு கூட இனிஷியலா என்று தோன்றும்.
பஜாஜ் என்று சொல்லும் போதெல்லாம் எனக்கு பஜ்ஜி நினைவுக்கு வந்து தொலைக்கும்.
வெஸ்பா என்றால் யாருப்பா என்பேன்.....
அவ்வளவு விசாலமான அறிவு வண்டிகளைப் பற்றி எனக்கு.
இவர் நண்பர்களும் இவரைப் போலவே வண்டிகள் விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி உரையாடக் கேட்டிருக்கிறேன்.
எங்கோ படித்திருக்கிறேன்,
" ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் பொம்மை கடைக்கு அழைத்து சென்றால் ஆண் குழந்தை கார் ஸ்கூட்டர் என்று வண்டிகளையே விரும்பும் , பெண் குழந்தை அந்த வண்டி பொம்மைகள் பக்கம் கூடத் திரும்பாது "
இது உண்மையா ?
இவருக்கு வண்டி ஆர்வம் மிகுந்த நண்பர்கள் இருக்கிறார்களா ,இல்லை ஆண்கள் , பெருவாரியாக வண்டி பற்றியே பேசி காரும் ஸ்கூட்டரும் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார்களா ?
புரியவில்லை.
என் கணவருக்கு மட்டும் தான் வண்டிகள் கனவுக் கன்னியா !
எனக்குக் காரையும் , ஸ்கூட்டரையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.
image courtesy--google.