Image Courtesy: Google. |
பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயனித்துக் கொண்டிருந்தோம்.சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணம்.
ஒரு முதிய தம்பதி என் இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்தனர்.
'மைக்'கில் கஃப்தான் வினய் ( பைலட்) எந்த உயரத்தில் பறக்கிறோம்.... எப்ப போய் சேருவோம்.....இத்யாதி..இத்யாதி... 'கர கர' குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.
நானோ"எங்களுக்கு இந்த சங்கதியெல்லாம் தேவையில்லை கஃப்தானே! சென்னையில் பத்திரமாகத் தரையிறக்குங்கள். போதும் ." என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.(மனதில்).
சிறிது நேரத்தில் விமான பணிப் பெண் கொடுத்த ஒரு குட்டியூண்டு சோன்பப்டி, சமோசா, சாப்பிட்டு, காபி என்கிற பேரில் குடுத்ததை உள்ளே தள்ளி விட்டு, எல்லோருமே கண்ணயர ஆரம்பித்திருந்திருப்போம்.
மீண்டும் கஃதான் குரல் எங்களை எழுப்பி விட்டது.
" எல்லோரும் சீட் பெல்டை மாட்டுங்கள். தரையிறங்கப் போகிறோம்."
அதற்குள் சென்னை வந்து விட்டோமா .அப்பாடி...என்று நான் நினைக்க ஆரம்பிக்கவும்...முன் இருக்கை மாமி," சென்னை அதுக்குள்ள வந்துடுத்தா? தூக்கமா வருது " என்று சொல்லிக் கொண்டே பெரிய கொட்டாவி விட்டார்.
"ஆமாம்டி மதுரா ! ராமன் வில்லை ஒடித்த நேரத்தில் சென்னைக்கு வந்துட்டோம் பாரேன். நீ மிச்ச தூக்கத்தை ஆத்துல போய் தூங்கிக்கலாம்." என்று மாமா சொல்ல...
எனக்கு கம்பனின் வரிகள் நினைவில் வந்து மோதியது...
விசுவாமித்திரர் ராம லக்ஷ்மணர்களை ஜனகனின் அரண்மனைக்கு அழைத்து வந்து விட்டார்.
பிறகு, விசுவாமித்திரர்,ராம லஷ்மணர்களைப் பற்றி ஜனகனிடம் விரிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ராமனின் கை வண்ணம், கால் வண்ணம் என்று சொல்லிக் கொண்டே போகிறார்.
எனக்கோ பதை பதைக்கிறது. இந்த விசுவாமித்திர முனிவருக்கு விவஸ்தையே இல்லையோ.
"கை வண்ணம் , கால் வண்ணம் எல்லாம் சொல்கின்ற நேரமாய்யா இது. ராமன், ஜனகனின் மாப்பிள்ளையானவுடன், சீதை தன் அப்பாவிடம் ஆத்துக் காரர் பெருமை சொல்லிக் கொள்ள மாட்டாளா என்ன? . ஆத்துக்காரர் பெருமையை 'டமாரம்' அடிக்க பெண்களுக்கு சொல்லித் தரனுமா ?
அதனால் நீங்கள், முதலில் ராமனை வில்லில் நாணேற்ற சொல்லுங்கள் முனிவரே. வேறு யாராவது முந்திக் கொண்டு விடப் போகிறார்கள்" என்று விசுவாமித்திரரிடம் கத்த வேண்டும் போல் தோன்றியது.
கம்பராமாயணம் படிப்போர் பலருக்கும் இந்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும்.
ராமன் தானாகட்டும். வந்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல் விசுவாமித்திரர் எப்பொழுது தலை அசைப்பார் என்று காத்து கிடக்கிறானாம்." ராமா! சீதை வேணுமா இல்லையா? எழுந்திரு. இப்படி உட்கார்ந்திருந்தால் ஆகாதப்பா." என்று சொல்லத் தோன்றியது.
ஒரு வழியாக விசுவாமித்திரர் 'பிசினஸ்'க்கு வந்தார்.
ஆமாம்....
ராமனைப் பார்த்துக் கண்ணசைவாலேயே ," ராமா போ! போய் வில்லை எடுத்து நாணேற்று " ஏன்று சொன்னாராம்.
உடனே ராமன், 'விருட்'டென்று எழுந்து போய் சிவ தனுசை கையில் அனாயாசமாக எடுத்ததைத் தான் எல்லோரும் பார்த்தார்களாம்.
" டமால்....." என்று மிகப் பெரிய சத்தம். எல்லோரும் அலறிப் புடைத்திருப்பார்கள் .
எல்லாம் ராமன் கை வண்ணம் தானாம்.
சிவ தனுசு முறிந்த ஓசை அது. எல்லோருக்கும் ராமன் வில்லை எடுத்தது தெரியும், பின் முறித்ததைத் தான் கேட்டனராம். நாண் ஏற்றுகிறேன் பேர்வழியென்று வில்லை முறித்தே விட்டானாம்.
"ராமா...இரு...இரு.. சிவ தனுசை முறித்ததற்கு பரசுராமருடன் ஒரு தனிப் பஞ்சாயத்து காத்திருக்கு."
ஆக.... எல்லோரும் என்ன பார்த்தார்களாம்?
"எடுத்தது கண்டனர்.இற்றது கேட்டனர்."
இதைக் கம்பன் நான்கே வரிகளில் ஒரு வீடியோ பதிவாக்கி விட்டான் பாருங்கள்.
பால காண்டம். கார்முகப் படலம்.படல் எண்:783
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.
கண் கொட்டுவதைத் தடுத்து இமையாதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்ற யாவரும், ராமன் தன் திருவடியால் அவ்வில்லின் நுணியை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாணேற்றியதையும், ராமனின் செயலின் வேகத்தால், காண முடியாதவராயினர். அன்றியும் மனத்தாலும் இன்னது தான் நிகழும் என்று கருதவும் இயலாதவராயினர். ஆயினும் ராமன் தன் கையால் அவ்வில்லை எடுத்ததைப் பார்த்தார்கள். பின் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்.
பாருங்களேன்..கம்பனின் காவியம் நமக்கு ராமாயணத்தை கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறது இல்லையா?
மீண்டும் ஒரு கம்பன் பாடலுடன் சந்திப்போம்.
No comments:
Post a Comment
நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்