Monday 23 September 2019

கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-4.)



image courtesy:Google.

கம்பனும், சாம்பாரும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

வாசலில்  இரண்டு மயில்கள், கழுத்தை ஒய்யாரமாக திருப்பி பார்த்துக் கொண்டிருந்தன....மாக்கோலத்தில்... 

யார் போட்டிருப்பார்கள்? நாத்தனாராய் இருக்குமோ.....
கூறைப் புடவை சரசரக்க....புது மஞ்சள் சரடும்,....மாலையுமாய்.... அவரின் கரம் பற்றி இல்லம் புகுந்தேன்...

சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தேறிய பின்னர்...வந்து உட்கார்ந்தேன்....இல்லையில்லை உட்கார வைக்கப்பட்டேன். 

ஆமாம்....கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் தான் இருந்தது. எல்லோருமே புது முகம் என்னவர் உட்பட.... திரு திரு என்று முழித்துக் கொண்டு...என்னை சுற்றி நடப்பதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...

"அந்த ஜமுக்காளத்தை இங்கே போடு."

" இலை வாங்க சொன்னேனே கணேசா ...வாங்கிட்டியா?"

"அக்கா ....சாம்பாரில் உப்பு சரி தானே! பாத்து சொல்லுங்களேன்."

இப்படி வீடே பரபரத்துக் கொண்டிருந்தது. குனிஞ்ச தலை நிமிராமல் நானும், என்னை அவ்வப்போது பார்க்கும் அவரும்....அமர்ந்திருந்தோம்.

ஒரே அமர்க்களமாய் இருந்த கல்யாண வீடு..சட்டென்று அலர்ட் ஆனது.

தெருவிலிருந்து உறவினர் ஒருவர் வந்து," அத்தை வராங்க! அத்தை வராங்க!" என்று கட்டியம் கூறுவது போல் சொல்லவும்,

அடுக்களையிலிருந்து பெண்கள் , கூடத்தில் உட்கார்ந்திருந்த ஆண்கள் என்று எல்லோரும்,"வந்தாச்சா...அத்தை வந்தாச்சா!" என்று கேட்டதிலிருந்து, அவர்கள் எல்லோரும், பதட்ட நிலைக்கு செல்வது புரிந்தது.

அவரின் தூரத்துப் பெரியம்மா அருகில் வந்து," அத்தை வந்ததும், உடனே ஆசீர்வாதம் வாங்கி விடுங்கள்" என்று எங்களைப் பார்த்து சொல்லவும், 

"ஏன் உடனே கிளம்பி விடுவாங்களா?" வெடுக்கென்று கேட்க நினைத்ததை, அப்படியே முழுங்கினேன்.
( அவசியமில்லாமல், வாயைத் திறக்காதே!இது நீ வாழப் போகும் இடம்.என்று மைண்ட் வாய்ஸ் எச்சரித்தது.)

அந்த வி.ஐ.பி அத்தையை எல்லோரும்,என் மாமியார் உட்பட தடபுடலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். என்னவர் 'அத்தை அத்தை' என்று தனி மரியாதை காண்பிக்கவும்.....

பிறகு ஒரு நாள் தனிமையில் ,"அந்த அத்தை என்றால் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமோ?" நான் கேட்க....சின்னதாய் ஒரு ஸ்மைல் செய்து விட்டு," அப்படியும் வைத்துக் கொள்ளலாம். "என்றார்.

"அப்படினா" நான் கேட்க...

"போகப் போகத் தெரியும்" என்று அவர் சொல்ல ...அதன் அர்த்தம் ஒரு சில மாதங்களிலேயே புரிந்து போனது.

" வி.ஐ.பி அத்தை மிகப் பெரிய ட்ரபிள் ஷூட்டர்" 
(அந்த வி.ஐ.பி அத்தையிடம் நான்  வசமாய் சிக்கி மீண்டது மிகப் பெரிய கதை)

சிக்கி மீண்ட பின் " அத்தையிடம் ஜாக்கிரதையாய் இரு" என்று என்னை அன்றே நீங்கள் அலர்ட் செய்திருக்கலாமே " என்று அவரிடம் கேட்டதற்கு,

அவர்," அத்தை நல்ல மனுஷி தான். எப்பவாவது கொஞ்சமே கொஞ்சம் எடக்கு மடக்கா ஏதாவது சொல்வார் அல்லது செய்வார்." என்று அலட்சியமாக சொல்ல...

விட்டுக் கொடுக்காமல் பேசும் அவரைத் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இத்தனை வருடங்களாகியும், இப்பக் கூட அவர் சொன்னதையேதான் சொல்கிறார் (வி.ஐ.பி அத்தை பற்றி ) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இந்த ஆண்களே இப்படித் தான் போலிருக்கு....இந்தக் காலம் என்றில்லை...கம்பர் காலத்திலிருந்தே இப்படித் தான் என்று நினைக்கிறேன்.

பின் என்ன? கம்பன் சொல்வதைப் பாருங்களேன்...

சீதா கல்யாணம் முடிஞ்சாச்சு..திவ்ய தம்பதியர் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள்!

இப்ப கவனிங்க..

முதல்ல தசரதன் காலில் விழுந்தாச்சு. 

ஆச்சா?

இப்ப யார் கால்ல விழனும் ராமனும், சீதையும்? சொல்லுங்க...

வரிசைப் படி கோசலை கால்ல தானே! 

அதான் இல்லையாம் ...சீதை கரம் பற்றி அழைத்து நேரே போய்  கைகேயி காலில் விழுகிறானாம்  ராமன்.
(கோசலை...பாவம் என்ன நினைத்திருப்பாள்? )

அப்புறம் தான் கோசலையிடம்  ஆசீர்வாதம் வாங்குகிறானாம்.

அதற்குப் பிறகு சுமித்திரை... 

எதற்கு ராமன் (காலில் விழும்)ஆர்டரை மாற்றினான் என்றால்," கைகேயிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்." என்பதை சீதைக்கு சொல்லாமல் சொல்கிறானாம் ராமன் .

கொஞ்சம் வாயைத் திறந்து ராமன் சொன்னால் தான்  என்னவாம். "கைகேயி அம்மா ட்ரபிள் ஷூட்டர். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்."என்று வெளிப்படையாக சொல்லியிருந்தால் சீதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கைகேயிக்கு  'ஐஸ்' வைத்திருப்பாள் இல்லையா. காட்டிற்குப் போக வேண்டிய நிலையே வந்திருக்காது அல்லவா? 

அதனால் தான் சொன்னேன் ராமன் , கம்பன் முதல்  இன்றைய ஆண்கள் வரை தங்கள் வீட்டு உறவினரை விட்டே கொடுக்க மாட்டார்கள்...

கம்பன் எப்படி அதை சொல்கிறான் பாப்போமா?

பால காண்டம். கடி மணப் படலம் . பாடல் எண் 1339

கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.



இராமன் சீதையுடன், கேகய மன்னனின் மகளான கைகேயியின் ஒளி மிகுந்த திருவடிகளை, தன்னைப் பெற்ற தாயான கோசலையினிடத்துக் கொண்டுள்ள அன்பைக் காட்டிலும், மிகுந்த அன்புடனே வீழ்ந்து வணங்கி,பின்பு தன்னைப் பெற்ற தாயான கோசலையின் இணைடிகளைத் தலைக்கு அணியாக சூடி, அதன் பின்பு உளத் தூய்மை மிக்கவளான சுமித்திரையின் திருவடிகளை வணங்கினான்.

கம்பனின் ராம காவியம் படிக்கப் படிக்க வியந்து போகிறேன்.
நீங்களும் தான் இல்லையா?

மீண்டும் ஒரு கம்பனின் பாடலுடன் சந்திப்போமா?



2 comments:

  1. நல்லதொரு பாடலும் விளக்கமும். நன்றி.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்