Thursday, 12 September 2019

கம்பனும், சாம்பாரும்.(கம்பன் என்ன சொல்கிறான் -3)

Image Courtesy : Wikkimedia Commons


கம்பனும், ஜன்னலும் படிக்க இங்கே க்ளிக்கவும்.

இன்றைக்கு என்ன சமையல் ? கேட்டுக் கொண்டே அவர் டேபிளில் அமர... என் இரண்டு  வாண்டுகளும் எதிர் எதிராக உட்கார ... எங்கள் வீட்டு டைனிங் டேபிள் களைக் கட்டியது.

"இன்றைக்கு வெண்டைக்காய் சாம்பாரும்,உருளைக் கிழங்கு  ரோஸ்ட் "என்றதும், வாண்டுகள் ஜாலியாக டேபிளில் தட்ட ஆரம்பித்தனர்....

குழந்தைகள் இருவருக்கும் உருளைக் கிழங்கு ரோஸ்ட் மிக விருப்பமான ஒன்று.

அதற்குப் பிறகு நடந்தது தான் சூப்பர்.

சுடச் சுட சாதத்தை பரிமாறியதும், சாம்பார் பாத்திரத்தை டேபிளின் நடுவில் நகர்த்தி விட்டு , தண்ணீர் ஜக் எடுக்க உள்ளே சென்றேன்.

"அம்மா சாம்பார்" மகன் குரல் கொடுக்க ,

"அங்கேயே டேபிள் மேல இருக்கு பார்"

"ஓ! இது சாம்பாரா?" என் மகள் குறும்பாகக் கேட்க....

"அதானே! இதுக்குப் பேர் சாம்பாரா?" என்னவரும் சேர்ந்துக் கொள்ள...

எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்று நான் எட்டிப் பார்த்தேன்.

"அம்மா நான் ரசம்னு நெனச்சேன்" எங்கள் வீட்டு ராஜகுமாரன் கிண்டலடிக்க...

ராஜகுமாரி மட்டும் லேசுபட்டவளா என்ன?  "இது ரசம் இல்லடா. Two in One.  " அவள் சொல்லி சிரிக்க..

"இது சாம்பாரும் தான், ரசமும் தான்..."அவளுடைய நக்கல் தொடர்ந்தது...

இவரோ," இப்ப ரெண்டு பேரும் என்ன சொல்ல வரீங்க... "

"இது சாம்பாரா? இல்லை ரசமா? "

"இப்ப என்ன பட்டி மன்றமா நடக்குது இங்கே...பேசாம சாப்டுட்டு போய் படிங்க" என்று நான் அதட்ட....

இதெல்லாம் நடந்தது கிட்டத் தட்ட முப்பது வருடம் ஆகியிருக்கும். இன்று நினைத்தாலும் தேனாய் தித்திக்கும் நினைவுகள்.

அதுக்கு இப்ப என்ன வந்தது என்கிறீர்களா?

கம்பன் ராமனை வர்ணித்ததைப் படிக்கும் போது, எனக்கும் மலரும் நினைவுகள் .

அப்படி என்ன கம்பன் சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசையா...

இதோ கம்பன் என்ன சொல்கிறார் பார்ப்போமா....

ராமன், பின்னோடு சீதை, அவர்கள் பின்னால் இலக்குவன் என்று காட்டு வழியாகப் போய் கொண்டிருக்கிறார்களாம்.  அப்பொழுது ராமன் மேல் வெயில் படுகிறதாம். ஆனால் ராமன் மேனியின் பளபளக்கும் கருநீல ஒளியில்  சூரிய ஒளியே  மங்கி விட்டதாம். (என்ன உவமை!என்ன உவமை!) .

இத்துடன் நின்றாரா கம்பர். அவருக்கு அதில் திருப்தி இல்லை.

ராமனின் வண்ணம்.....மையோ?  கண் மை போன்ற கருமையோ! 

இல்லையில்லை, கரும் பச்சை நிறமான மரகதமோ!

ம்ஹூம்.....

மையோ! மரகதமோ! என்று சொல்லிக் கொண்டிருந்தவர். ....இல்லையில்லை... கடலின் கருநீலம் போலலவா இருக்கிறான் நம் நாயகன் என்று நினைத்து, மறி கடலோ என்று வர்ணிக்கிறார்.


ஆனால் கடலின் வண்ணமும், பரந்தாமனின் வண்ணத்தை முழுமையாக சொல்லவில்லை என்று தோன்றவே...

மழை தரும் கருமேக வண்ணம் என்று  சொல்லிப் பார்க்கிறார்.

ஆனால் அதுவும், அவருக்கு சரியாக படவில்லைப் போலிருக்கிறது.
எதை உவமையாக சொன்னாலும், அதற்கு ஒப்பாக மாட்டேன்கிறானே இந்த ராமன்.... எதைத் தான் உவமையாக சொல்வது என்று அசந்த கம்பன்....

" ஐயோ! அவனுடைய ஒப்பற்ற அழகை என்னன்னு சொல்றது " என்று கை தூக்கி சரணடைகிறார் போலும்.

(கவிச் சக்கரவர்த்தியையே அசரடித்து விட்டானே இந்த ராமன் !)

இத்தனைஅழகான ராமன், இடை என்ற ஒன்று இல்லாத சீதையுடனும், இலக்குவனோடும் காட்டு வழியே செல்கிறானாம்.

இதோ அந்த கம்பன் பாடல்..

வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!


அயோத்தியா காண்டம் ; கங்கை படலம். பாடல் எண் 1926

கண்ணுக்கு இடக் கூடிய மையோ! பச்சை நிற ஒளிக் கல்லாகிய மரகதமோ!அலைகள் மறிக்கின்ற கடலோ!பெய்யும் கார் மேகமோ! ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் இந்த ராமன்.சூரியனது ஒளியானது தன் திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் மறைந்து விடும்படியான நிறத்தையுடைய ராமன், இல்லையோ என்று சொல்லத்தக்க மெல்லிய இடையினையுடைய சீதையோடும், தம்பியாகிய இலக்குவனோடும் காட்டு வழியே நடந்து செல்லலானான்.

பாடலின் சந்தமும் நம்மை அசர அடிக்கிறது பாருங்களேன். 

கம்பனுக்கு ஒரு வேளை ராம தரிசனம் கிடைத்திருக்குமோ என்று தோன்ற வைக்கிறதல்லவா இந்தப் பாடல். 

 இருந்தாலும் இருக்கும்....

மீண்டும் இன்னொரு பாடலுடன் வருகிறேன்...

8 comments:

  1. ஆஹா.... எத்தனை அழகாய் சொல்லி இருக்கிறார் கம்பன். உங்கள் வீட்டு நிகழ்வுடன் ஒப்பிட்டு புரிய வைப்பது சிறப்பு.

    தொடரட்டும் கம்ப ரசம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வெங்கட்ஜி.

      Delete
  2. அழகாக, ரசனையாக சொல்லி நீங்களும் அசர வைத்து விட்டீர்கள்...!

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய சருகைக்கும், ரசனையான பாராட்டிற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  3. மிக அருமையாக கதை சொன்ன பாங்கு பிடித்து இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி.

      Delete
  4. அருமையான பதிவு

    ReplyDelete
  5. படிக்க மறக்காதீர்கள்
    நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
    http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்