Sunday 16 November 2014

பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லாருக்கே !

நாங்கள் டெல்லியில் இருந்த சமயத்தில்  , வருடத்திற்கு ஒரு முறை சென்னை வருவது வழக்கம். அதுவும் பதினைந்து நாள் அல்லது இருபது நாட்கள் விடுமுறையிலேயே   வருவோம். அப்பொழுது  ஒரு வருடத்தில் விட்டுப் போன  சுக, துக்க விசாரணைகள் , உறவினர், நண்பர்கள் வீடு என்று  மூச்சு முட்ட சுற்றிக் கொண்டிருப்போம். பதினைந்து நாளில்  ஒரு சுற்று எல்லோரையும் பார்க்க வேண்டுமென்றால் ........ஃபிளாஷ்  விசிட்டாகத் தான் இருக்கும்.

அந்த மாதிரி ஒரு சென்னை விஜயத்தின்  போது  , நண்பர் சுந்தர் வீட்டிற்கு போக நேர்ந்தது. மாலை  நான்கு மணிக்கு சென்றிருப்போம்.  சுந்தரின் வீட்டிற்குப் போகாமல்  நாங்கள் டெல்லித் திரும்பவே மாட்டோம். கணவரின் ஆப்த நண்பர் ஆதலால், எங்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் அவர் வீட்டிற்கு செல்வோம்.ஒரேயொரு குறை அவரிடம், என்னவென்றால், அவரும் சரி, அவர் மனைவியும் சரி, பேச ஆரம்பித்தால்  ஓயவே மாட்டார்கள். இவர்களுக்கு என்று  எங்கிருந்து தான்  விஷயம் கிடைக்குமோ தெரியாது. அவ்வளவு  பேசுவார்கள். நாம் உம்  ...உம்..... என்று சொல்ல மட்டுமே அனுமதி கிடைக்கும். மற்றபடி மிகவும் நல்லவர்கள் .


விஷயத்திற்கு வருகிறேன். மாலை  அவர் வீட்டிற்கு நானும் என்கணவரும் சென்ற வேளையில்  சுந்தர் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அவருக்கு ஒரே சந்தோஷம். உள்ளே பார்த்து, "  பாலா யார் வந்திருக்கிறார்கள் பார் "  என்று சொல்லவும் , சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த அவர் மனைவி பாலா,கையை டவலில் துடைத்துக் கொண்டே " அடடே ......நீங்களா  வாங்க... வாங்க,  எப்படியிருக்கீங்க " என்று கேட்டுக் கொண்டே வந்தமர்ந்தார்.

முதலில் பரஸ்பரம் குசல விசாரிப்புகள்.எங்கள் குழந்தைகள் பற்றி அவர்களும்  விசாரித்தனர். பிறகு அவர்கள் பெண், பிள்ளை எங்கே என்று கேட்டது தான் தாமதம் , அவர்கள் இருவரும் மாறி மாறி பெண், பிள்ளைப் புராணங்கள், சுந்தருக்கு வந்த உடல் நலக் குறைவு, பாலாவின்  முதுகு வலி என்று தொடர்ந்து ,அல்லோபதி டாக்டர், சித்தா, ஆயுர்வேதம்  என்று தொடர் ஓட்டமாக அவர்கள் இருவரின் பேச்சும் ஓடிக்............... கொண்டே இருந்தது.

பாலாவிற்குத் திடீரென்று நினைவிற்கு வந்தது, வந்ததிலிருந்து எங்களுக்கு சாப்பிட ஒன்றுமே கொடுக்கவில்லை என்பது.  " இருங்கள் உங்களுக்கு டிபன் எடுத்து வருகிறேன் " என்று சொல்லி விட்டு  வேக வேகமாக  உள்ளே சென்று ,இரண்டுத் தட்டுகளில் டிபன்  எடுத்துக் கொண்டு வந்தார் .  கருப்பாக ,கேசரி பதத்தில் தட்டில்  இருக்க, நான் இது என்ன என்று கேட்கவும் கேழ்வரகு அல்வா என்றுப் பெருமையாக பதில் வந்தது பாலாவிடமிருந்து.

"ராகி உடம்பிற்கு நல்லது என்று நான் அடிக்கடி செய்யும் ஸ்வீட் இது "  என்று பாலா மேலும் 'ஹைப்' கொடுக்க

மெதுவாக ஒருஸ்பூனால் எடுத்து வாயில் வைத்தேன்.அல்வாவும் இல்லை. ஒன்றும் இல்லை , ராகியும் வெல்லமும் சேர்ந்த களி  என்பது புரிந்தது.  வாயிலிருந்து உள்ளே  இறங்க மறுத்த  அல்வாவை (அப்படித் தானே பாலா சொன்னார் )   மெதுவாக உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தேன்.

அப்போழுதுப் பார்த்து  என் கணவர் கேட்டார்,' " மிகவும் அருமையாக இருக்கிறது. எப்படி செய்தீர்கள் " என்றுக் கேட்கவும் பாலா  செய்முறையை சொன்னதோடு இல்லாமல் இன்னும் ஒரு கரண்டி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு  போதும், போதும் என்றும் கேட்காமல் பரிமாறவும், கணவரைப் பார்த்து  முறைத்தேன். பாவம் அவர் மேலும் ஒரு கரண்டி  களி.....இல்லையில்லை, அல்வாவை,   எதிர்பார்க்கவில்லை என்பதுப் புரிந்தது. சும்மா நண்பரின் முகதாக்ஷண்யத்திற்கு  சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார். என்னையும் மாட்டி விட்டு விட்டார் .
கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தோம்.

அப்பாடி ....... தண்டனை ஒருவழியாய் முடிந்தது என்றுப் பெருமூச்சு விட்டேன்.
டம்ளர் தண்ணீரைக் குடித்து விட்டு கிளம்ப , சேரை விட்டு எழுந்தேன். பாலா அதற்குள், " இதென்ன , டிபன் சாப்பிட்டு விட்டு ஒன்றும் குடிக்காமல்  போவார்களா?. இருங்கள்  ராகி மால்ட் போட்டுக் கொண்டு வருகிறேன்." என்று சொல்லவும்,   வேறு வழியில்லாமல்  மீண்டும் சோபாவில் கணவரருகே வந்தமர்ந்தேன்.அடுத்தத் தண்டணையை எதிர்பார்த்து .

பாலா இரண்டு தம்ளர்களில் ஆவிப் பறக்க ஆரஞ்சு கலரில்  பானம் கொண்டு வந்தார்.  ராகி மால்ட்டை  வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. ராகிக் களி  வேறு  வயிற்றை  என்னவோ செய்துக் கொண்டிருக்க, அதற்கு மேலேயே ராகி மால்ட்டா . சரி. விதியை வெல்ல முடியாதே .குடித்து வைப்போம் என்று ஆற்ற ஆரம்பித்தேன். வேறென்னவெல்லாம் ராகியில் இவர் செய்வாரோ என்று யோசித்தபடி .

பால் சேர்க்காமல் ராகி மால்ட் கலந்திருக்கிறார்  போலிருக்கிறது. ராகி மால்ட் வாசனையே பிடிக்கவில்லை. பால் வேறில்லை. இதை எப்படிக் குடிப்பது  ...யோசித்துக் கொண்டே மெதுவாக ஆற்றினேன். நல்ல கொதிக்கும் வெந்நீரில் சர்க்கரையைத் தாராளமாகப் போட்டு , ஆரஞ்சு கலரில் வாசனைப் பொடி போட்டு எங்களிடம் நீட்டி விட்டு ,  பாலா விட்ட இடத்திலிருந்து மகளின் வீணை  வாசிப்பைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார் .

" காற்றினிலே வரும் கீதம் எங்கள் கீதா வாசித்தால் போதும், நிஜமாகவே மயக்கும்" என்று பிரதாபத்தை ஆரம்பிக்கவும்....

 நான் மெதுவாக ஆரஞ்சு ராகி மால்ட்டை  டம்ளரில் ஊற்றி  குடித்துக் கொண்டே ,உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன் .

இருவரும் என்னைப் பார்த்தே  பேசிக் கொண்டிருக்க, இவரோ , ஜாலியாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டே  ராகி மால்ட்டை ஆற்றிக் கொண்டிருந்தார்.(அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்) மெதுவாக அரை டம்ளர் உள்ளே போய் விட்டது. இன்னும் அரை டம்ளர் தானே  என்று நினைத்துக் கொண்டே டபராவைப் பார்த்தால்  ராகி மால்ட் குறைந்த மாதிரியே தெரியவில்லை. டபரா தளும்ப தளும்ப  ராகி மால்ட்  என்னைப் பார்த்து  சிரித்துக் கொண்டிருந்தது.

இது எப்படி......? அட்சயப் பாத்திரம் மாதிரி  வந்துக் கொண்டேயிருக்கிறது.
ஒரு வேளை  டம்ளர் பெரிசோ........ என்கிற சந்தேகம் வர, டம்ளரைப் பார்த்தேன். ரொம்ப உயரம் ஒன்றுமில்லை. அப்படிஎன்றால்.......

காற்றினிலே வரும் கீதம் பற்றிய பிரசங்கத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கும்  போது என் கணவர் செய்த வேலை இது என்று அவர் முகத்தைப் பார்த்ததும் புரிந்தது.

நான் டம்ளரில் ஊற்றிக் குடிக்க, குடிக்க இவர் தன்  ராகி மால்ட்டை என் டபராவில்  நிரப்பிக் கொண்டே வந்திருக்கிறார். அது எனக்குப் புரிபட, உடனே,  டபராவை  என் கையிலேயே வைத்துக் கொண்டேன். ஆனால் அதற்குப் பிறகும் அசரவில்லையே என்னவர். கையில் வைத்திருந்தால்.......... என்னால் ஒன்றும் செய்ய முடியாதா? என்பது போல்  திரும்பவும் பாலாவும், சுந்தரும், கவனம் சிதறிய நேரத்தில் என் டபராவை  நிறைத்து விட்டார்.முழி பிதுங்க இரண்டு டம்ளர் ராகி மால்ட்டை  வயிற்றில் ஊற்றி வைத்தேன். தண்ணீர் டாங்க்  போல்  வயிறு  இருந்தது . எந்த நேரத்திலும்  வாந்தி வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.

அவர் டம்ளரோ காலி. ஒரே ஒரு வாய் தான்  குடித்திருப்பார் என்று நினைக்கிறேன். இல்லை அதுவும் இல்லையோ.........

" சீக்கிரம் குடி . கிளம்பு வேண்டும் " என்று  என்னை வேறு அவசரப்படுத்தினார் . விளக்கெண்ணெய்  குடிப்பது போல் குடித்து விட்டு , " தப்பித்தோம், பிழைத்தோம்"  என்று  விடைப் பெற்றோம்.

வருவேன், வருவேன் என்று பயம் காட்டிக் கொண்டிருந்த வாந்தி, அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பிய ஐந்தாவது  நிமிடத்தில்  பஸ் ஸ்டாண்டில்  வெளியே  வந்து விட்டது.

பஸ் ஸ்டாண்டில் நின்றுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர்," 'பிள்ளைதாச்சியா? அதான் வாந்தி எடுக்கிறாரா ?பார்த்து அழைத்துக் கொண்டு போங்கள்."  என்று கணவருக்கு, அறிவுரை ஒன்றை இலவசமாக வழங்கவும் , இவர் என்ன சொல்கிறார் என்று அவரைப் பார்த்தேன். அவரோ பொங்கி வரும் சிரிப்பை அடக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டு விட்டார்.

மெதுவாக வீடு வந்து சேர்ந்து , நல்ல சுடச்சுட வெந்நீர் குடித்து விட்டு  படுத்தேன். காலை உடம்பு சரியாகி விட்டது.

இது நடந்து இருபது வருடம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றுக் காலை எப்பொழுதும் போல் சுடச்சுட  காபியை டேபிளில் வைத்து விட்டு நகர்ந்தேன்.  அவரோ,  பேப்பரில் சுவாரஸ்யமாக ஆழ்ந்து விட்டதில் , காபி ஆறி  அவலானது . நான்  " காபியை இன்னும் குடிக்கவில்லையா ? என்று நினைவுப்படுத்தவும்  , காபியை கையில் எடுத்துக் கொண்டு , என்னிடம் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி.

 " இதற்குப் பேர் காபியா?" என்று.

"ஓ.....உங்களுக்கு என் காபிப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. பரவாயில்லை..
காபி நன்றாக இல்லையென்றால்  குடிக்க வேண்டாம். இனி மேல் உங்களுக்கு ராகி மால்ட்  தருகிறேன். ".

" ராகி மால்ட்டா ? ... " அவர் புரியாமல் விழிக்க

" ஆமாம் .. அன்றோரு நாள்.......  ஒரு மாலை வேளையில்........... பாலா போட்ட ராகி மால்ட் மாதிரி....  நினைவிற்கு வந்து விட்டதா "என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட சொன்னேன்.

" அய்யய்யோ ....  ராகிமால்ட் வேண்டவே வேண்டாம்.  உன் காபிப்  போல் வேறு ஒரு ஒரு பானம் உண்டா ?" என்று புகழ ஆரம்பிக்க

 நான் கேட்டேன்," திரும்ப சொல்லுங்கள்.........  என் காபி எப்படி இருக்கிறது?"

 தலையை பலமாக ஆட்டியபடி," பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு " என்று சொன்னார்.

ஆனாலும் எப்படியாவது இவரை ஒரு டம்ளர்  ராகி மால்ட்டை குடிக்க வைக்க, சபதமே போட்டிருக்கிறேன்.
அது நடக்குமா..........

என் சபதத்தில்  வெற்றி பெற  வாழ்த்தி விட்டுப் போங்களேன்.

image courtesy--google.

48 comments:

  1. :) enjoyed reading Raji madam! :)
    Vazhthukkal, unga aasai viraivil niriaivera!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகி உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும்.

      Delete
  2. ராகிக் களி மற்றும் ராகி மால்ட் ( ! ) குடித்த அனுபவம் படித்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

    பதிவு "பேஷ்..பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு...!"

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  3. உங்க ராகி(ங்) ஆசை நிறைவேறட்டும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நிஜாமுத்தீன் சார். தொடர்ந்து வருகை புரியுங்கள்..நன்றி.

      Delete
  4. பதிவு பேஷாக்கீது,,,, நான் தொடர் பதிவு ஒன்றை ஆரம்பித்து வைத்து இருக்கிறேன் வருகை தரவும்
    அன்புடன்
    கில்லர்ஜி

    இணைப்பு கீழே.

    http://www.killergee.blogspot.ae/2014/11/1.html


    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி. உங்கள் தளத்திற்கு இதோ வருகிறேன். நன்றி.

      Delete
  5. ராகி மால்ட்டுக்கு வேற பேர் வச்சு உங்க ஆசைய நிறைவேற்றிக்கொள்ள வாழ்த்துக்கள். அப்படியும் முடியலன்னா ம் ம் வேறு வழியில்லை, அந்த நாள் டீச்சரா மாறிட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஐடியா நல்லாருக்கே! ஒன்றும் முடியவில்லைஎன்றால் கண்டிப்பாக டீச்சராகி விட வேண்டியது தான்.
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  6. Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  7. மிகவும் இரசித்துப் படித்தேன். உங்கள் சபதம் விரைவில் நிறைவேறட்டும்.

    ReplyDelete
  8. பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்கு " பதிவு.
    ரசித்து சிரித்தேன்.
    ஆரஞ்சு கலரில் எப்படி ராகி மாலட்? பாலாவிடம் தான் கேட்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி கோமதி

      Delete
  9. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு
    சபதத்தில் வெற்றி உங்களுக்குத்தான்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
  10. ராகி மால்ட்டுக்கு ஏன் இத்தனை கொலைவெறி?..

    அது கிடக்கட்டும் .. காபிக்கு ஈடு இணை ஏது!?..

    காபியின் அருமையை எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி!..

    ReplyDelete
    Replies
    1. என் ஓட்டும் காபிக்குத் தான் துரை சார். நான் காபியின் தீவிர பக்தி என்றே சொல்லலாம்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி துரை சார்.

      Delete
  11. Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு நன்றி கோபு சார். பிறந்தநாள் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  12. பாவங்க உங்க வீட்டுக்காரர் ஒரு நாள் காபியை குறை சொல்லிட்டார்னு அவருக்கு ராகி மால்ட் தண்டனை தரத் தயாராகிட்டீங்களே...

    ReplyDelete
    Replies
    1. யாம் பெற்ற இன்பம் அவருக்கும் கிடைக்கட்டுமேன்னு தான். வேறென்ன நல்லெண்ணம் இருக்கப் போகிறது எழில். உங்கள் பிரயாணம் எல்லாம் சுகமாக முடிந்ததா. முக நூலில் உங்கள் ட்ரெக்கிங் படங்களைப் பார்த்தேன், நீங்கள் சென்ற இடங்கள் எல்லாமே மிக மிக ரம்மியமாக இருக்கிறது.
      நன்றி சொல்ல மறந்து விட்டுக் கதை பேசுகிறேனே.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி எழில்.

      Delete
  13. சுந்தர் பாலா போல் நான் இப்போ ஒருத்தர்கிட்ட மாட்டிக் கொண்டுள்ளேன்.....:)) அவங்க பேச நான் கேட்க..... நான் கேட்க அவங்க பேச என்று போய்க் கொண்டுள்ளது. வாய் வலிக்காதோ....:))

    ராகி அல்வா... ராகி மால்ட்.....:))

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு வாய் வலிப்பது இருக்கட்டும், உங்கள் காதுகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஆதி.

      Delete
  14. 'யான் பெற்ற துன்பம் அவரும் பெறுக' என்று கிளம்பிவிட்டீர்கள் போலிருக்கே! வேணாங்க, ஆண்பாவம் பொல்லாது!
    (சும்மா சொன்னேன். தூள் கிளப்புங்க!) வாழ்த்துக்கள்.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் கூட! வல்லமை குழுமத்தில் உங்களுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிரார்களே! சீக்கிரம் வந்து நன்றி சொல்லுங்க!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் , பிறந்தநாள் வாழ்த்திற்கும் நன்றி ரஞ்சனி.

      Delete
  15. ராகி களியும் ராகி மால்ட்டும் நன்றாகவே எங்களை சிரிக்க வைத்தன! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  16. நல்ல நகைச்சுவை. அடுத்த தடவை பாலா - சுந்தர் வீட்டிற்கு போனீர்களா? அன்று ராகி தினம் கொண்டாடியதைப் போல ஏதாவது சோளக்கதிர் தினம் கொண்டாடி இருப்பார்களோ?
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. பல முறைப் போனேன். ஆனால் ராகிமால்ட் தண்டனைக் கிடைக்கவில்லை.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி தமிழ் சார்.

      Delete
  17. ராகி அல்வா, ராகி மால்ட் செய்முறையைக் கற்றுக் கொண்டீர்களா. ?வேண்டாத விருந்தாளிக்குக் கொடுக்கலாமே. நகைசுவையுடன் பதிவு ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி பாலு சர்.

      Delete
  18. அது என்ன குளம்பி? காஃபியை காஃபி என்றே சொல்லுங்கள். தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு புதுமையான அதேசமயம் உலகளாவிய கண்டுபிடிப்புகளை பொதுவான அதே பெயரால் அழைப்பதில் தவறில்லை. ( நேற்று உங்கள் கருத்துரைப் பெட்டியில் எனது கருத்துரையில், விட்டுப் போன வரிகள் இவை)

    ReplyDelete
    Replies
    1. நான் காபியைக் காபி என்று தானே எழுதியிருக்கிறேன். குழம்பி என்று எழுதவில்லையே. நீங்கள் எதை சொல்கிறீகள் என்று குழப்பமாக இருக்கிறது.

      Delete
    2. மன்னிக்கவும்! பிளாட்பார்ம் மாறி வந்த ட்ரெயின் போன்று, வேறு ஒருவருடைய (ஆர்.உமையாள் காயத்ரி) பதிவுக்கு செல்ல வேண்டிய கருத்துரை உங்களுக்கு வந்துவிட்டது. டேஷ் போர்டில் காப்பி பேஸ்ட் முறையில் அனுப்பும் போது உங்கள் கருத்துரைப் பெட்டியை தேர்வு செய்துவிட்டேன் போலிருக்கிறது

      Delete
    3. அது என்ன குளம்பி? காஃபியை காஃபி என்றே சொல்லுங்கள். தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு புதுமையான அதேசமயம் உலகளாவிய கண்டுபிடிப்புகளை பொதுவான அதே பெயரால் அழைப்பதில் தவறில்லை. ( நேற்று உங்கள் கருத்துரைப் பெட்டியில் எனது கருத்துரையில், விட்டுப் போன வரிகள் இவை)//

      சரி ஐயா.

      Delete
  19. தமிழ்மண வாக்கிற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  20. ராகி அல்வா ராகி மால்ட் ... நல்ல நகைச்சுவையாக இருந்தது.... உங்கள் ஆசை நிறை வேறட்டும் நல்ல சுவையான ராகி மால்ட்டாக ....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி உமையாள் காயத்ரி.

      Delete
  21. ***அவரும் சரி, அவர் மனைவியும் சரி, பேச ஆரம்பித்தால் ஓயவே மாட்டார்கள். இவர்களுக்கு என்று எங்கிருந்து தான் விஷயம் கிடைக்குமோ தெரியாது. ***

    இதென்னவோ பெருங்குறைதான். ஒரு முறை ஒரு இண்டர்வியூ சென்றிருந்த போது, எல்லாம் முடிந்த பிறகு டாக்சி பிடித்து நேரத்திற்கு ஏர்போர்ட் போயி இருக்கலாம். ஆனால் என்னை இண்டெர்வியூ செய்தவர் ஏர்போர்ட்டுக்கு ரைட் கொடுக்க வேண்டியவர்.. நேரங்காலம்தெரியாமல் பேசியே கழுத்தை அறுத்தார். கடைசியில் பிளேனை மிஸ் பண்ண வேண்டியதாகிவிட்டது. உருப்படியான விடயம் எதுவும் பேசவும் இல்லை!

    எனக்கு ஒரு இடத்திற்கு போணும்னா 1 மணி நேரம் ஏர்லியராகப் போகணும். அவருக்கு ப்ளேனை ஓடிப் பிடிக்கணும் போல! இருவருக்கும் நல்ல "மிஸ்மேட்ச்". நானும் நெறையாப் பேசுவேன், ஆனால் பிளேனைப் பிடிக்க வெய்ட் பண்ணும் ஆட்களிடம் இல்லை!

    அமெரிக்காவில் இதையெல்லாம் கண்டுக்காமல்.. "சீக்கிரம் என்னைக் கொண்டுபோயி விடுய்யா இல்லைனா டாக்சில போறேன்!" னு சொன்னால், யு ஆர் ரூட்" அல்லது "இம்பொலைட்" என்பார்கள்.

    பிளேனை மிஸ் பண்ணினால், நீங்க "பொலைட்" நாக்ரீகம் தெரிந்தவன் என்கிற "பட்டம்" பெறலாம்! :))

    அதிகமாகப் பேசினாலோ, அல்லது பேசாமலே இருந்ந்தாலோ, ரெண்டுமே தொல்லைதான்.

    ***மெதுவாக ஒரு ஸ்பூனால் எடுத்து வாயில் வைத்தேன்.அல்வாவும் இல்லை. ஒன்றும் இல்லை , ராகியும் வெல்லமும் சேர்ந்த களி என்பது புரிந்தது. ***

    :)))) (விழுந்து விழுந்து சிரிக்கிறேன்)


    என்ன மூட்ல இருக்கேன்னு தெரியலை, நீங்க எழுதியிருக்கது சிரிப்பா வருது! என் ஆய்வகத்தில் நைட்ரஸ் ஆக்ஸைட் எதுவும் இல்லை! இருந்தும் சிரிக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஊர்களிலும் நேரம் காலம் தெரியாமல் பேசுபவர்கள் உண்டு போலிருக்கிறது. நீங்கள் சொல்வதுப் போல் பேசுவதில் தவறில்லை. நானும் பேசுபவள் தான் . ஆனால் பாலா சுந்தர் போலில்லை.

      அட,,,,,,Laughing gas smell பண்ணியது போலிருந்ததா ? ஆஹா...... இதைப் போன்ற பின்னுட்டங்கள் எழுதுவதற்கு ஒரு பெரிய பூஸ்ட். நன்றி வருண் என்னை ஊக்கப்படுத்தியதற்கு.

      Delete
  22. ***பஸ் ஸ்டாண்டில் நின்றுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர்," 'பிள்ளைதாச்சியா? அதான் வாந்தி எடுக்கிறாரா ?பார்த்து அழைத்துக் கொண்டு போங்கள்." ***

    :-))))

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்ததற்கும் உங்கள் மீள் வருகைக்கும் நன்றி

      Delete
  23. ஆனால் ஒண்ணு, உங்க காஃபியை இன்னும் அதிக சுவையாக்கியது "பாலா அவர்களின்" ராகி மால்ட் தான்!! Credit should go to Bala! It is unfair if you take all the "compliments" for the "not-so-tasty coffee"! lol

    Take it easy, Mrs. Raji!

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்து விட்டது . இதுவும் என் கணவர் வேலையாய் தானிருக்கும். உங்களிடம் ரகசியமாய் என் காபியைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். LOL.
      ஒரு ஐடியா கொடுத்து விட்டீர்கள். என் காபியை மட்டுமல்ல என் சமையலையும் " ரொம்ப நல்லாருக்கே! " என்று சொல்ல வைத்து விடலாம் போலிருக்கிறதே.
      ஐடியா கொடுத்த உங்களுக்கும், ராகிமால்ட் கொடுத்துதவிய பாலாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  24. ஃஃஃஃ

    பஸ் ஸ்டாண்டில் நின்றுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர்," 'பிள்ளைதாச்சியா? அதான் வாந்தி எடுக்கிறாரா ?பார்த்து அழைத்துக் கொண்டு போங்கள்." என்று கணவருக்கு, அறிவுரை ஒன்றை இலவசமாக வழங்கவும் , இவர் என்ன சொல்கிறார் என்று அவரைப் பார்த்தேன். அவரோ பொங்கி வரும் சிரிப்பை அடக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டு விட்டார்.
    ஃஃஃஃ

    ரணகளம்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்