Tuesday 25 November 2014

ஹள்ளி மனேயும், டைப்ரைட்டரும்.

சென்ற முறை பெங்களூர்  சென்ற போது , நண்பரைப் பார்க்க நேர்ந்தது. அவருடன் பேசிக்கொண்டே  நடந்தோம். பரஸ்பர நல விசாரணை.. நான் சற்றுப் பின்னால் நடந்து கொண்டிருக்க கணவரும்,நண்பரும் முன்னால் பேசிக்கொண்டே  நடத்து கொண்டிருந்தார்கள்.

சட்டென்று நண்பர்," வருகிறீர்களா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்  " என்று சொல்லவும்,  எங்களுக்கும் காபி சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்ற

 நன்பரிடமே " இங்கே  நல்ல ஹோட்டல்  ஒன்றிற்குப் போகலாமே " என்று  சொல்லவும்.

நண்பர்," ஹள்ளி  மனே " போகலாமா ? "


picture courtesy--google.


" ஏதோ ஒன்று போகலாம் வா " என் கணவர் சொல்ல

" ஏதோ ஒன்று இல்லை . மிகவும் அருமையாக இருக்கும். கிராமத்து  செட்டப்பில்  இருக்கும் "  என்று ஹைப் கொடுத்தார் நண்பர்.

 "அதென்ன கிராமத்து செட்டப் ? " நான் வினவ

"வாங்க மேடம், வந்துப் பாருங்க " என்று சொல்லிக் கொண்டே " ஹள்ளி மனே"க்குள் அழைத்துச் சென்றார்.

" அட... கிராமத்து  வீடு போலிருக்கிறதே "  என்று நான் சொல்லவும்,

"அதே தான் மேடம், "ஹள்ளி மனே " என்றால் கிராமத்து வீடு "என்றார்.

அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள்  தாங்கிப் பிடிக்கும் கூரை,  உடகார்ந்து சாப்பிட  பென்ச் ,. வாழையிலையில்    சாப்பாடு என்று  கிராமத்து  வீட்டை  நினைவுப்படுத்தத்  தவறவில்லை.

" எரடு  கா...............பி..... " என்று சர்வர் கத்தி ஆர்டர்  கொடுக்காதது தான் பாக்கி.

யோசித்துப் பார்த்தேன். கிராமம் விட்டு நகரம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாய்  தாவிக்கொண்டிருக்க, நகருக்குள், கிராமத்தைக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.  ஓடு வேய்ந்தக்  கூரை, அங்கங்கே கோலம்,  சுவற்றின் பெயிண்ட் கலர், எல்லாமே  மனதைக் கொள்ளையடித்தது.

இவ்வளவு அருமையான இந்த ஹோட்டலில் , விலையும் சற்றே  அதிகம் என்று சொன்னார் நண்பர். ஆனால் கூட்டம்  அலை மோதுகிறது.

வேடிக்கை தான்  இது. கிராமம் விட்டு ஆசை , ஆசையாய் நகரத்திற்குக் குடிப் பெயர்ந்து   வந்து ,  மீண்டும்  கிராமத்து  விருந்தை  அதிகப் பணம் கொடுத்து,உண்கிறோம். ஆக இதல்லாம் பழைய விஷயங்கள் என்று எதையும் நாம்  ஒதுக்கி வைக்க முடியாது. எல்லோரும் மறந்திருக்கும் போது யாரோ ஒருவர் அதையே மீண்டும் புதுப் பொலிவோடு கொண்டு வந்து விடுகிறார்.  " Old is Gold " தானே.

நிறைய விஷயங்கள் இப்படித்தான் . சாதத்தை  வடித்துக்  கொண்டிருந்த நம்மை குக்கரில் சாதம் வைக்க சொன்னார்கள் . திரும்பவும் இப்பொழுது சாதம் வடிப்பது தான் நல்லது என்கிறார்கள்.

உணவு விஷயத்தில் தான் இப்படியென்றால், கம்ப்யுட்டர் படுத்தும் பாடு இருக்கிறதே........  மெயில் என்று ஒன்று வந்தாலும் வந்தது , அலுவலகக் கடிதங்கள், எல்லாமே மெயிலில் சென்றுக் கொண்டிருக்கின்றன.
என்ன வேகம்! என்னத் துல்லியம்! தவறுகள் இல்லாதக் கடிதங்கள் அசத்துகின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குக்  கொள்ளைக் காரர்களும்  மிக அதிகம். மெயிலைக் கொள்ளையடித்து ( Hackers ) சென்று கொண்டிருக்கிறார்கள். அலுவலகக் கடிதங்களில் இருக்கும் ரகசியத் தன்மை பெருமளவில்  பாதிக்கப் பட்டிருப்பதை யாருமே மறுக்க மடியாது.

அப்படியானால் ,  கடு மந்தண  ( Strictly Confidential )அலுவலகக் கடிதங்களை  என்ன செய்யலாம் என்கிறாய்? மீண்டும் கையால் எழுத வேண்டும் என்கிறாயா என்று கேட்காதீர்கள். வேண்டாமே...... டைப்ரைட்டரைத் தூசித்  தட்டினால் போதுமே.

மீண்டும் டைப்ரைட்டரா....... இதென்ன கம்ப்யுட்டருக்கு வந்த சோதனை என்கிறீர்களா?

தினசரியில் வந்த செய்தி  இதைத் தான் சொல்கிறது. ரஷ்யா, ஜெர்மனி  ஆகிய நாடுகளில், மீண்டும்  அலுவலகங்களில், confidential கடிதங்களை  டைப் அடிக்க டைப்ரைட்டரைக்  கொண்டு வரலாமா என்று யோசிக்கிறார்களாம் . அமெரிக்காவில்  அந்தக் கஷ்டம் கூட இல்லை. அவர்கள் டைப்ரைட்டரை மொத்தமாக  ஒழித்துக் கட்டவில்லையாம். ஒரு ஓரமாக  கவர் போட்டு மூடி வைத்திருக்கிரர்களாம் .
 தூசித்  தட்டி உபயோகப்படுத்த ஆரம்பித்தது விடுவார்கள்.
எல்லாம் சரி..... இந்தியாவில் தான் டைப்ரைட்டர் மெஷின் தயாரிப்பே பரவலாக நின்று விட்டது போல்  தெரிகிறதே. நாம்  என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அலுவலகங்கள் இதைப் பற்றி யோசிக்கும் முன் .......வாருங்கள்.  OLX இல்  பார்த்துக் கொண்டிருப்போம். பழைய மெஷின் கிடைத்தால் வாங்கி வைப்போம்.
 யாரும் மெஷின் தயாரிப்பை ஆரம்பிப்பதற்கு முன்,  மெஷினை விற்று லாபம் பெறுவோம்..

" Old is Gold " ஹள்ளி மனேக்கு மட்டும் தானா  என்ன ?டைப்ரைட்டருக்கும் தான்.
33 comments:

 1. நல்ல தகவலோடு OLX விளம்பரமும் கண்டேன் அருமை அம்மா நேரமிருப்பின் எமது (ஹள்ளி மனே) குடிசைக்கும் வாங்க...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி. உங்கள் வரவேற்பையும் ஏற்றுக் கொண்டேன். நன்றி.

   Delete
 2. எதிலும் எதுவும் Old is Gold தான்...!@

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தனபாலன் சார்.

   Delete
 3. மேடம், ஓரிரு ஆண்டுகளுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் சில ஆயிரம் டைப்பிஸ்ட் வேலைக்கு ஆட்தேர்வு அறிவித்த கதை நடந்தது. ‘கம்ப்யூட்டர் தான் வந்து விட்டதே, டைப்பிங் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது’ என்று, அதை கற்றுக் கொள்ளாமல் இருந்த பலருக்கும் அப்போதுதான் பிரச்னை புரிந்தது. என்னதான் கம்ப்யூட்டர் வந்தாலும், நவீன வசதி இருந்தாலும், கைப்படச் செய்கின்ற வேலைக்கு என்றுமே முக்கியத்துவம் இருக்கும் என்பதே என் கருத்து.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது போல் பழமைக்கு என்று இருக்கும் தனித்தன்மை மாறவே மாறாது. அது போல் எளிதில் மறையவும் மறையாது. என்றாவது அதைத் தேடி நாம் போவது உறுதி.
   உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி சார்.

   Delete
 4. இரண்டு விஷயங்களை இணைத்துச் சொன்னவிதம்
  மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. எங்கள் ஊரில் கொடுக்கும் டைப்ரைட்டிங் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் இயங்கி கொண்டு இருக்கிறது. மறுபடியும் பழமைக்கு போவோம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் போலும்.

  //கிராமம் விட்டு நகரம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாய் தாவிக்கொண்டிருக்க, நகருக்குள், கிராமத்தைக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். //

  நிறைய இடங்களில் இப்படி ஓட்டல்கள் வந்து விட்டது.

  கும்பகோண டிகரி காப்பி எங்கும் வந்து விட்டது.

  நீங்கள் சொல்வது போல் பழைய விஷயங்கள் எதையும் ஒதுக்கி வைக்க முடியாது.  ReplyDelete
  Replies
  1. நானும் கவனிக்கிறேன். அங்கொன்றும், இங்கொன்றுமாக டைப்ரைட்டிங் கற்றுக் கொடுப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பழைமையை நாம்விடவே முடியாது.
   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி

   Delete
 6. மீண்டும் டைப் ரைட்டருக்கு காலம் வரும்!..
  - என்ற தங்களது நம்பிக்கை வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி..

  இதைப் போலவே - மீண்டும் அம்மி குழவி, ஆட்டுக் கல், திரிகைக் கல் - எல்லாம் வீட்டுக்குள் காலம் வெகு தொலைவில் இல்லை!..

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லும் கற்கள் வீட்டிற்குள் வருமா? உடற்பயிற்சி சாதனமாக வந்தால் வரலாம்.

   Delete
 7. துரை செல்வராஜி ஐயா சொல்வது போல் அம்மி, ஆட்டுக் கல் , திரிகைக் கல் எல்லாம் வந்திடுமோ

  ReplyDelete
  Replies
  1. அன்பின் எழில் அவர்களுக்கு வணக்கம்..

   அவைகளோடு - உரல் உலக்கை போன்றவைகளும் வரத்தான் வேண்டும். இவையெல்லாம் அந்தக் காலத்தில், பிரத்யேகமாக - பெண்களின் உடல் நலனைப் பேணிக் காத்தவை.

   ஆண்கள் வயல் வரப்பு என்று மாடுகளோடும் ஏர் கலப்பை, ஏற்றம், இறவை சால்களுடன் உழைத்துக் கொண்டிருந்த போது - பெண்கள் வீட்டில் நெல் குத்துவதிலும் மாவு அரைப்பதிலும் கிணற்று நீரை சகடை வாளியில் இறைப்பதிலும் வியர்வையைச் சிந்தி ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்.

   சேர்த்த பணமும் சிக்கனமாக இருந்தது. ஆறு குளம் கிணறு எல்லாவற்றையும் அழித்து விட்டு - சமையலறை மேடையிலேயே குடத்தில் தண்ணீர் நிரப்பி - இடுப்பை அழித்துக் கொண்டார்கள் பெண்கள். ஆண்களும் பலவிஷயங்களில் அப்படியே!..

   டாக்டர் சொன்னார் -ன்னு விடியற்காலையில நடை பயிற்சி போனால் - இரவெல்லாம் குலைத்து விட்டு விடிந்ததும் தூங்கும் நாய்களால் பின்னங்கால் தசை பிய்த்துக் கொண்டு போய் விட்டது.

   பெண்கள் அம்மியில் சமையலுக்கு அரைக்கும் போது வேண்டாத கொழுப்புகள் கரைந்து போகின்றனவாம். இன்னும் சொல்ல இயலும். தாங்களே சிந்தித்துக் கொள்ளவும்.

   வீட்டிற்குள்ளேயே உழைப்பு எனும் செல்வம் இருந்தது.
   அதைத் தொலைத்து விட்டு வெளியே ஆரோக்கியத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்..

   அனைவரும் நலம் பெறவேண்டும் .. வாழ்க வளமுடன்!..

   Delete
  2. வரட்டுமே வந்தால் என்னை இயற்க்கை மாறினால் எல்லாம் நலமே,,,

   Delete
  3. எழில்,
   கில்லர்ஜி, துரை சார், இந்தக் கற்கள் எல்லாம் வீட்டிற்குள் வந்தால் நாங்கள் எங்கே இணையம் பக்கம் வருவது? LoL

   Delete
  4. எழில், கில்லர்ஜி, துரை சார், மூவரும் அவரவர் கருத்துக்களை ஆசாகாய் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

   Delete
  5. எழில், கில்லர்ஜி, துரை சார், மூவரும் அவரவர் கருத்துக்களை அழகாய் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
   Delete

   Delete
 8. பழசை மறக்க கூடாது என்று சொல்வது சரி தான் போல....:)

  ஹள்ளி மனே - கிராமத்து வீடு தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.

   Delete
 9. கால சுழற்சியை அருமையாக சொன்னது கட்டுரை!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சுரேஷ்.

   Delete
 10. நான் பெங்களூருவில் வசிப்பவன். ஹள்ளி மனைக்குச் சென்றிருக்கிறேன். மக்கள் பழைய நிலைக்குப் போக அல்ல. இவர்கள் அதிகம் காசு பார்க்கிறார்கள். poshஇடத்தில் இந்தமாதிரி கிராம வாசனை என்று சொல்லிக் கொள்ளும் இடங்களில் உண்பது ஃபேஷன் ஆகி வருகிறது. முன்பு brigade road அருகே ஒரு ethnic கேரளா ஹோட்டலுக்குச் சென்றோம் மலையாள பாரம்பரிய உடையில் கட்டங் காப்பி கொடுக்கிறார்கள்.( இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை)எக்ஸ்ப்ரெஸ்ஸோ காஃபியை விட விலை அதிகம். உணவு உண்டோம். சொல்கிறமாதிரி இலையில் பரிமாறல். பாயசம் இன்னும் கொஞ்சம் வேண்டுமென்று கேட்டபோது கொடுத்தார்கள் ஐந்து அவுன்ஸ் கூட இருக்காது. ரூபாய் 20 அதிகம் சார்ஜ் செய்தார்கள். நான் சொன்னதுபோல் மேல்தட்டு மக்கள் கட்டங்காப்பிக்கு ( 15 ஆண்டுகளுக்கு முன்) ரூ. 25/- கொடுத்து இது பற்றிப் பேசிக்கொண்டு போவதைப் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், கருத்ஹ்டுக்கும் நன்றி ஜிஎம்பி சார்.

   Delete
 11. ஹள்ளி மனைக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து இங்கு பசவனகுடியில் ஹள்ளி திண்டி (டிபன்) என்று ஒரு கையேந்தி பவன் ஆரம்பித்தார்கள். அப்புறம் நம்ம ஹள்ளி என்று ஒன்று. பெயரை புதுமாதிரி வைக்க வேண்டுமென்று பழைய பெயர்களை வைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
  எங்கள் ஊர் ஹள்ளி மனேயையும், மறைந்து போகும் நிலையில் இருக்கும் டைப்ரைட்டரையும் இணைத்து எழுதியிருப்பது நல்ல யோசனை. பாராட்டுக்கள். அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் டைபிஸ்ட் வேலைக்குத் தான் போய்க்கொண்டிருந்தோம். நீங்கள் டைப்ரைட்டரைப் பற்றி சொன்னவுடன் எனக்கும் எங்கள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் நினைவு வந்துவிட்டது!

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே வியாபாரத் தந்திரம் தான். மக்களின் விருப்பங்கள் மாறிக்கொண்டே ரயுக்கின்றன. அதற்கேற்றார் போல் தானகலு மாறி காசு பன்னுகிறார்கள் டைப்ரைட்டர் செய்தியைப் படித்ததும், அதைப் பகிர வேண்டும் என்ற எண்ணினேன்.. நானும் டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டேன்.
   அது ஒரு பெரிய ராமாயணம். நான் A அடித்து முடிப்பதற்குள், சிலிண்டர் அந்தக் கடைசிக்கு ஓடி விடும். திரும்பவும் அதை இழுத்துக் கொண்டு வந்து வைத்து,,S அடித்து .....
   அட... அனுபவத்தை ஒரு பதிவு எழுதலாம் போலிருக்கிறதே......எப்படியோ லோயர் பாஸ் செய்தேன்.
   உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், பதிவிற்கான கருவை உருவாக்கிக் கொடுத்ததற்கும் மிக்க நன்றி ரஞ்சனி.

   Delete
 12. பழமைக்கு நல்ல விலை கிடைக்கிறது - GMB ஐயா சொல்வது போல இந்த இடங்களில் நல்ல காசு சம்பாதிக்கிறார்கள் - ஜெய்பூரில் சௌக்கி தானி [சென்னையில் கூட இப்போது இருக்கிறது], குஜராத்தில் [விஷாலா] என்று சில இடங்களுக்கு நானும் சென்றதுண்டு. விஷாலாவில் உணவு ஒருவருக்கு 580/- + வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி.

   Delete
 13. ***நிறைய விஷயங்கள் இப்படித்தான் . சாதத்தை வடித்துக் கொண்டிருந்த நம்மை குக்கரில் சாதம் வைக்க சொன்னார்கள் . திரும்பவும் இப்பொழுது சாதம் வடிப்பது தான் நல்லது என்கிறார்கள்.***

  இன்னொரு ஸ்டெப் போனீங்கன்னா, வெள்ளை சாதம் நல்லதில்லை, ப்ரவ்ன் ரைஸ்தான் நல்லது என்பார்கள். It is all relative!

  ***என்ன வேகம்! என்னத் துல்லியம்! தவறுகள் இல்லாதக் கடிதங்கள் அசத்துகின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குக் கொள்ளைக் காரர்களும் மிக அதிகம். மெயிலைக் கொள்ளையடித்து ( Hackers ) சென்று கொண்டிருக்கிறார்கள். அலுவலகக் கடிதங்களில் இருக்கும் ரகசியத் தன்மை பெருமளவில் பாதிக்கப் பட்டிருப்பதை யாருமே மறுக்க மடியாது.***

  இப்போ எல்லாம் ப்ரைவசி என்பதே கெடையாதுங்க. உங்களுக்கே தெரியாமல் உங்க இ-மெயில்களை உங்க கம்பெணி மேலதிகார்கள் வாசிக்க முடியும் (வாசிக்கிறார்கள்).

  உங்களுக்கே தெரியாமல் உங்க அரசாங்கம் உங்க மெயிலை மானிட்டர் பண்ணலாம் (பண்ணுகிறார்கள்).

  அதாவது, யாரும் படிக்கலைனு நம்மளா நெனச்சுக்க வேண்டியதுதான். These days there is no privacy at all. Not many of us realize that fact.


  ReplyDelete
  Replies
  1. வருண் நீங்கள் சொவது மிக மிக சரியே. இப்பொழுதெல்லாம் அஆன்லைனில் கார்டு நம்பர் டைப் சய்து, பாஸ்வர்ட் டைப் செய்து முடிப்பதற்குள் , பயமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் காலத்தின் கட்டாயம் இதெல்லாம். முடிந்த வரை
   ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான் . வேறென்ன செய்வது.....
   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வருண்.

   Delete
 14. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 15. ஹள்ளி மனே பற்றி ஹொள்ளதாக எழுதியிருக்கிறீர்கள். கும்பகோணம் டிகிரிகாப்பி என்று பளபளக்கும் பித்தளை டபரா டம்ளரில் பேரைமட்டும்கும்பகோணத்தைச் சொல்லி
  விட்டு நவீன வசதிகளுடன் கூடிய கடைகள் ஞாபகம் வந்தது. காபி நன்றாக இருக்கு.
  பித்தளை டபரா டம்ளரினால் கும்பகோணம்பெயர்.
  அதே மாதரி கிராமத்து வீட்டுக் கடைகள் நிஜமாகவே கிராமத்தை ஞாபகப்படுத்துவது
  நல்ல காரியம் அல்லவா?
  போர்ட்டபிள் டைப் ரைட்டர் ,அமெரிக்காவிலிருந்து வாங்கியது இரண்டு இருந்தது.
  இருக்கும். பிள்ளைகளைக் கேட்க வேண்டும். குட்டியா அழகாக இருக்கும். நன்றி. அன்புடன்

  ReplyDelete
 16. உணவு விடுதி பரவாயில்லை. ஆனால் டைப் ரைட்டர் பற்றி படிக்கையில் பரணில் ஏறிய உணர்வு வந்துவிட்டது. தும்மல் மட்டும்தான் பாக்கி. ஆனால் ஒரு எண்ணம் தோன்றவே செய்கிறது. ஏன் ஒன்று வாங்கி வீட்டில் வைக்கக்கூடாது என்று.

  ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்