Thursday, 11 December 2014

உறவுகளுக்கு formula உண்டா?


google images 
திரு. ஜி.எம். பாலசுப்பிரமணியம்  அவர்கள் உறவுகள் என்கிறத் தொடர் பதிவிற்கு  அழைத்திருந்தார். எனக்கு இப்படி சீரியசாக ஒரு பதிவு எழுதிப் பழக்கமில்லை என்று சொன்ன பின்பும் , என்னைத் தப்பிக்க விடவில்லை. ஆக விதி வலியது (எனக்கில்லை, படிக்கும் உங்களுக்கு).

. என்னைத் தொடர் பதிவிடுமாறு அழைத்ததற்கு திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ உறவுகளுடன் நான் வந்து விட்டேன்.நான் எழுத நினைத்ததை ஒருக் கதையாக/சம்பவமாக  உங்கள்  முன் வைக்கிறேன்.. தொடர்ந்துப் படியுங்கள்.........
                                        ---------------------------------------------

தன்  தம்பிக்குத்  திருமணம் கிட்ட நெருங்குவதை நினைக்கும் போது  சற்றே மனம் மகிழ்ச்சியால் துள்ளியது ஜானகிக்கு . இரண்டே வயதான நித்யாவின்  பட்டுப்பாவாடை, சட்டை , எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி.. படுக்கையறையில் இருக்கும் பீரோவிலிருந்து தன்னுடைய பட்டுப்புடவை, நகைகள் என்று பெட்டிக்குள் திணிக்க முடியாமல் திணித்துக் கொண்டிருந்த போது .....

உள்ளே எட்டிப் பார்த்த அவள் மாமியார்........ க்கும் ......என்றுக் கழுத்தை நொடித்துக் கொண்டுப் போனாள் .
அவள் மாமியார்  எப்பவுமே இப்படித்தான் இருப்பாள் அது பழகி விட்டது ஜானகிக்கு .  மாமியாரின் கோபம்,  சீண்டல்கள்.......... சற்று  வருத்தமளிக்கும். ஆனால் ராஜேஷின் அன்பும் காதலும் , இதையெல்லாம் மறக்கடிக்கும்.அவன் காதலில் இவள் கிரங்கியிருந்தாள்  என்று சொன்னால் தப்பில்லை.


உள்ளே நுழைந்த ராஜேஷ்," மேடம்  தம்பிக் கல்யாணத்திற்குத் தயாராகி விட்டீர்கள்  போலிருக்கிறதே. சரி. இந்தாப் பணம், உன் தம்பி குமாருக்கு திருமணப் பரிசாக  மூன்றுப் பவுனில் செயின் ஒன்று வாங்கி விடு. குமாருக்குப் பிடித்த மாதிரி, அவனை  அழைத்துக் கொண்டு  போய்  வாங்கு. நான் வந்து வாங்க நேரமிருக்காது." என்றான் . காலைப் பிடித்துக் கொண்டு நின்ற மகளை த் தூக்கி....." நித்யா குட்டி... அப்பாவை விட் டு விட்டு ஊருக்குப் போகிறாயா? " என்றுக் கொஞ்சிக்  கொண்டிருக்கும்  போதே  ராஜேஷின் அம்மா தொண்டையைக் கனைத்துக் கொண்டு வந்தாள் .

" ராஜேஷ்......... ஜானகியும்  நித்யாவும் நாளைக்குத் தானே கிளம்புகிறார்கள். இப்பொழுது வா நீ. டிபன் சாப்பிட " என்று சிடுசிடுப்பாக அழைத்துக் கொண்டுப் போனாள் .
சற்று வருத்தமாயிருந்தாலும்  ராஜேஷின் மேலிருந்தக் காதல்  அவள் மாமியாரின் சிடுசிடுப்பை  புறக்கணிக்க வைத்தது. கல்யாணத்திற்குப் பின் வந்தக் காதல் தான்.

மறு நாள்ஜானகி நித்யாவை அழைத்துக் கொண்டு இரவு மெயிலில்  சென்னைக் கிளம்பினாள். ராஜேஷும் அவன் அம்மாவும் திருமனத்திற்கு ஒரு நாள் முன்பாக வருவதாக ஏற்பாடு. சென்ட்ரல் ரயில் நிலையத்தில்அதிகாலை  ஐந்து மணிக்கு நித்யாவுடன் கீழே இறங்கினாள்  ஜானகி . கதவருகிலே காத்துக் கொண்டிருந்த  அவள் அப்பா சிவராமன். நித்யாவை  அப்படியே வாரியணைத்துக் கொண்டார்.

அதற்குள் ராஜேஷிடமிருந்து போன் .  "

"பத்திரமாக  சென்னைப் போய்  விட்டாயா?"

" நான் சென்னை வந்து விட்டேன் .அப்பாவையும் பார்த்து விட்டேன் " என்றாள்  ஜானகி .

" ஹை .... தாத்தா " என்று நித்யாவும் ஒட்டிக் கொண்டாள். ஆட்டோப் பிடித்து வீட்டிற்கு வந்தார்கள். வழியிலேயே   மாப்பிள்ளையின்,  மாமியாரின் குசலம் என்று விசாரித்துக் கொண்டார் சிவராமன்.


வீட்டிற்குள் நுழைந்ததுமே " குமார் மாமா " என்று ஒட்டிக் கொண்டாள் நித்யா.

" என்னடா குமார் ? ஸ்ருதி   என்ன சொல்கிறாள்.  " ஒரு நாளில் எத்தனை போன் பேசுகிறீர்கள்?" என்று தம்பியை  கிண்டலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்  ஜானகி.

தாத்தாவிடமிருந்து பாட்டியின் இடுப்பில் ஏறிக் கொண்டாள் நித்யா. ஜானகி குளித்து முடித்து விட்டு, சுடச்சுட இட்லி , அவளுக்குப் பிடித்த வெங்காயசட்னியுடன் சாப்பிட்டு விட்டு, ஹாலில் இருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள். குமார் ஆபீஸ் கிளம்பி விட்டான். இன்னும் மூன்று  நாட்கள் கழித்துத் தான் லீவு எடுத்திருக்கிறான் குமார்.


கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடியதும், இட்லி சாப்பிட்ட நித்யா  தூங்கி விட்டாள் . பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

ஜானகி கேட்டாள் " பக்கத்து வீட்டு மீனா அப்புறம் வந்தாளா அம்மா? "

" இரண்டு மூன்று  வாட்டி வந்து விட்டுப் போனாள் .  அவளுக்கென்ன அவள் ஆம்படையான் அவளைத் தலையில் தூக்கி வைத்துக்   கொண்டு ஆடுகிறான். மாமியார், நாத்தனார் யாரும் கூட இல்லை. அவள் வைத்தது தான் சட்டம் மகாராணியாய்  வைத்துக் கொண்டிருக்கிறான். . அப்படியிருக்கும் போது  அவளுக்கென்னக் குறைச்சல் " என்றால் அவள் அம்மா.

சிவராமன், தூங்கிக்  கொண்டிருந்தப் பேத்தியைத் தூக்கி , உள்ளேப் படுக்கையில் போட்டு விட்டு, சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு ஜானகியைப் பார்த்துக் கொண்டிருந்தார். என் மகள் தான் எவ்வளவு அழகு. ராஜேஷ் கொடுத்து வைத்தவன், எத்தனை  பதவிசு இவள் என்று  பெற்ற மனதுப் பெருமைப்பட்டது. ஆனால் அதை, அவள் கணவரும், மாமியாரும்  தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களோ  என்கிறக் கவலையும்   நெருடலாய்  உறுத்தியது அவருக்கு.

மனதில் தோன்றியதைக் கேட்டார் அவர்,
 " ஜானகி .... , மாப்பிள்ளை என்ன சொல்கிறார் ?

"எதைப்பற்றி ?"

சற்றுத் தயங்கி, " உன் மாமியார்  ராஜேஷின் அண்ணன் வீட்டில்  கொஞ்ச நாட்களும்,  உங்கள் வீட்டில் கொஞ்ச நாட்களும் இருக்கலாம் இல்லையா? "

" என் மாமியார் என்னுடன் இருப்பதால் உங்களுக்கு  என்னப்பா கஷ்டம்?"

" இல்லை ஜானகி . உன் மாமியார் எப்பவும் உன்னிடம்  கோபமாக இருப்பதாகவே தெரிகிறது. உனக்கு உன் வீட்டிலேயே  சுதந்திரம் இல்லையோ  என்று கூட  நினைக்கத் தோன்றுகிறது ஜானு.. மாப்பிள்ளை  உன்னிடம்அன்பாகத் தானே இருக்கிறார். " என்று அக்கறையுடன்  கேட்டார் சிவராமன்.

அப்பா... நான் சந்தோஷமாகவே  இருக்கிறேன்  அப்பா. ஏன் கவலைப்படுகிறீர்கள்.  உங்கள் மாப்பிள்ளை  என்னிடம் மிகவும் அன்பாகவே இருக்கிறார்? "  என்று ஜானகி  சொல்லி முடிக்கும் போதே அவள் செல்பேசி சிணுங்கியது. ராஜேஷ் தான்.

போனில் ஜானகி பேச ஆரம்பித்ததும், சிவராமன், நாகரீகம் கருதி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். பேசி முடித்ததும் உள்ளே வந்தார், சிவராமன் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர.

" நீ என் மகள் அம்மா . நீ சந்தோஷமாக இருக்க வேண்டுமே என்கிறக்  கவலை  தான்.. பக்கத்து வீட்டு மீனாவைப் பார். அவளும் நீயும் பால்ய சினேகிதிகள். அவளைப் பார் . நினைத்தால் வருகிறாள். நினைத்தால் போகிறாள். என்ன வேண்டுமோ, நினைத்த மறு கணமே வாங்கி விடுகிறாள்.  " என்று இடைவெளி விட்டார் சிவராமன்.

" அவளைப் போல் உன் வாழ்க்கை அமையவில்லை என்கிறக் குறை தான் உன் அப்பாவிற்கு " என்று சமையலுக்குக் காய் நறுக்கி கொண்டே சொன்னாள்  அவள் அம்மா.

எனக்கென்னக் குறை சொல்லுங்கள் அப்பா?

" உன் மாமியார்  உன்னைப் படுத்துவது,  உள்ளூரில் இருக்கும் நாத்தனார் அடிக்கடி   வந்து மாப்பிள்ளையிடம்  உன்னைப் பற்றிக் கோள் சொல்கிறாளோ  என்கிற சந்தேகம். உன் ஓர்ப்படி எந்தக் கவலையும் படாமல் , குடும்பத்தோடு ஒட்டாமல் நாக்பூரில்  உட்கார்ந்திருப்பது .........  
குருவித் தலையில் பனங்காயை நான் தான் தெரியாமல் வைத்து விட்டேனோ என்றுத் தோன்றுகிறது.  "

" அப்பா..... அப்பா...... என்று சொல்லிக் கொண்டே எழுந்து வந்து சிவராமன் அருகில் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டாள் ஜானகி . "

" அப்பா .... நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை, நான் கஷ்டப் படுகிறேன் என்பதைத் தவிர. என் மாமியார் சற்று சிடுசிடுப்பாக இருப்பது போல் வெளியேத் தெரியும். ஆனால் அவர்கள் மனது சொக்கத் தங்கம் அம்மா . அன்பை வெளியேக்  காட்டத் தெரியவில்லை அவர்களுக்கு அவ்வளவு தான்."

" சென்ற மாதம் நான் ஜுரத்தில் ஒரு வாரம் படுத்து விட்டேனே. அப்பொழுது என் மாமியார் என்னைக் கவனித்துக் கொண்டதைப் பார்த்திருந்தால் , உங்கள் பயம் அர்த்தமற்றது என்கிற  உண்மை உங்களுக்கும் தெரிந்திருக்கும். "

 " என் மேல் சற்றுக் கோபமாக இருக்கிறார் என்றால் ...... அதற்கும் காரணம் நான் சொல்கிறேன்.  என் மைத்துனர், திருமணமாகி  அவர் மனைவியுடன், நாக்பூரில்  இருக்கிறார். வருடம் ஒரு முறை வந்தாலும்  அவரும் , என் ஓர்ப்படியும் என் மாமியாருடன் செலவிடும் நாட்களை  விரல் விட்டு எண்ணி விடலாம்.  அப்படி இருக்கும் போது , உங்கள் மாப்பிள்ளை தானே அப்பா, என் மாமியாருக்கு ஒரே ஆதரவு. அதனால் நான் எங்கே அவரின் மகனை தட்டிக் கொண்டுப் போய் விடுவேனோ என்கிற பயம் தான் அப்பா. மாமனார் இறந்துப் போனதோ சமீபத்தில். அதனால் தோன்றியுள்ள பாதுகாப்பற்றத் தன்மை எல்லாம் சேர்ந்துக் கொண்டு  என்னிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துக் கொள்கிறார்கள் . அவர்களுக்கு  என்னைப் பற்றித் தெரிய சிறிது காலம்  ஆகும் .அதற்குப் பிறகு   பாருங்கள்  . இப்பொழுதே கொஞ்சம்  சுவாதீனமாக இருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மாமியாருடைய  சிடு சிடுப்பு சற்றுக் குறைந்திருக்கிறது என்று சொல்லலாம் அப்பா."

"என் நாத்தனார்  பற்றி நீங்கள் கவலைப் படுவது தேவையற்றது. அவளுடைய நடவடிக்கை அவளுடைய முதிர்ச்சியின்மையைத் தான் காட்டுகிறது. போதாதற்கு, எனக்கு என் கனவரின் முழு சப்போர்ட் இருக்கிறதே. அவள் என்ன கோள் சொன்னாலும் இவர் நம்புவதில்லை அப்பா. உங்களுக்கு அந்தப் பயமே வேண்டாம் அப்பா.  அவளுக்கும் என்னைப் பற்றி  முழுதாய் தெரிய வரும் போது அவளும் மாறுவாள் அப்பா. எனக்குத் தேவை  இப்பொழுது பொறுமையும் உங்களனைவரின் ஆதரவும் அவ்வளவே."

" நான் பொறுமையாக இருப்பதில் என் சுய நலமும் கலந்திருக்கிறதே அப்பா. இவர்களுடைய நடவடிக்கைகளினால்   நானும் அவரும் இன்னும் அதிக நெருக்கத்துடன் இருக்கிறோம் . அவருடைய அன்பும், காதலும் எனக்கு அபரிமிதமாகக் கிடைக்கிறது. சொல்லி முடிப்பதற்குள்  ஜானகியின் முகம், வெட்கத்தினால்  'குப்'பென சிவந்து விட்டது ."

"நீங்களெல்லாம் வந்தால் நான்கு நாட்களுக்கு மேல் இருக்க மாட்டேன் என்கிறீர்கள்?  உங்களை உபசரிப்பதில் என் மாமியார் ஏதாவதுக் குறை வைத்திருக்கிறார்களா  சொல்லுங்கள் அப்பா? சில நாட்கள் இருந்துப் பார்த்தால்   என் வாழ்க்கை எத்தனை இனிமை என்று உங்களுக்கும் புரிந்திருக்கும். " என்று  ஜானகி முடித்ததும்  அவள் அப்பாவும், அம்மாவும், அசந்து போய், திறந்த  வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

" ஆனாலும்,  பக்கத்து வீட்டு மீனா போல் சுதந்திரம் உனக்கு இல்லை என்பதை நீ மறுக்கவே முடியாது." என்று சிவராமன் மீண்டும் ஆரம்பிக்க

"அப்பா..மீனாவிற்குக் கிடைத்துள்ளது சுதந்திரமா என்பதைப் பற்றிய விவாதத்தைப் பிறகு வைத்துக் கொள்வோம். அது வேறு விஷயம். ஆனால்  என் வாழ்க்கையை நீங்கள் ஏன் அவள் வாழ்க்கையுடன் ஒப்பீடு செய்கிறீர்கள். .
கணக்கு ஆசிரியரான நீங்கள் எல்லா வற்றையும் அப்படியே பார்க்கிரீகள் என்று நினைக்கிறேன்.  மாணவர்களுக்கு (a+b)^2  சொல்லிக் கொடுப்பது போல்  நினைத்துக் கொண்டு  a,b  என்கிற இடத்தில் கணவனையும், மனைவியையும் போட்டு விட்டால் இது தான் விடை என்று சொல்கிறீர்கள்.

உளவியல் படித்த என்னால் இதை  ஒத்துக் கொள்ள முடியாது. உறவுகள் வேறு, உணர்வுகள் வெவ்வேறு , தனித் தன்மைகள் ,என்றுப் பல விஷயங்கள்  அடங்கி இருக்கின்றன . நான் ஏன், என் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  "

அவள் அம்மா கேட்டாள் ," ஜானகி   எப்படியடி  இத்தனை முதிர்ச்சியாக நினைக்க முடிகிறது உன்னால். உன்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக் இருக்கிறது." என்று முடிக்கவும்.

ஜானகி பதில் சொன்னாள் ," அம்மா நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. நீ தான் இதையெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தாய்?"

"நானா....." புரியாமல் விழித்தால் அவள் அம்மா .

"நீ வாழ்ந்துக் காட்டி இருக்கிறாயே.  எனக்குத் தான்  தாத்தா, பாட்டி, அத்தை, சித்தப்பா, பெரியப்பா என்று......  ஆனால்..உனக்கு, அவர்கள் உன் புகுந்த வீட்டு உறவுகள் . நீ யாரையும் விட்டுக் கொடுக்கவில்லையே.  உனக்கும் அவர்கள் மேல் வருத்தம் உண்டு, கோபம் உண்டு, சண்டை உண்டு, சச்சரவுண்டு...... எல்லாமே எனக்குத் தெரியும்.  ஆனாலும் சமாதானமும் உண்டு என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவள் நீதானே அம்மா ."

அப்பொழுதெல்லாம் நீ சொல்வாயே " குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" அதைத் தானே நானும் செய்கிறேன். இதிலென்ன அதிசயம் என்று சொல்லி முடிக்கவும் , நித்யா தூக்கத்தில் சிணுங்க  ஆரம்பித்தாள் . அவளைத் தட்டிக் கொடுக்க உள்ளே ஜானகி போகவும்.,வெளியே ஆட்டோ  நிற்கும் சப்தம் கேட்டது.

வந்தது காஞ்சிபுரம் அத்தை. " சிவராமா  எனக்கு என்ன புடைவை எடுத்திருக்கிறாய் காட்டு.  பிடித்தக் கலர் இல்லையென்றால்  இப்பொழுதே  மாற்றிக் கொடுக்கணும் . என்ன விலை? " கட்டளை வந்தது.

சிவராமனோ மனைவியைப்  பார்த்து. " மைதிலி,   அக்காப் புடைவையை  எடுத்து வா. நல்லக் கலர் அக்கா.  உனக்குப் பிடிக்கும் "என்று ஐஸ் வைக்கவும்.
உள்ளே ஜானகி  முகத்தில் புன்னகை.
'பரபர' வென்று ஹாலிற்கு வந்தாள்  ஜானகி ,அத்தையை வரவேற்க இல்லாவிட்டால்  அதற்கு வேறு அத்தை கோபித்துக் கொண்டு விடுவாளே .

ஆமாம்.
கோபத்தையும் , அன்பிற்குரியவர்களிடம்  தானே காட்ட முடியும்.

பி.கு : ஜானகிகளையும், மைதிலிகளையும் கவுரப்படுத்தும் விதமாக உங்களுக்குத் தெரிந்த ஜானகி, மைதிலிகளை  பின்னூட்டத்தில் பட்டியலிடுங்கள்.

26 comments:

 1. வித்தியாகமாகச் சொல்லிப்போனாலும்
  உறவின் அருமை குறித்துச் சொல்லிப்போனவிதம்
  மிகமிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Replies
  1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ரமணி சார்.தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

   Delete
 3. அசத்தி விட்டீர்கள்.

  எவ்வளவு மனஸ்தாபங்கள் இருந்தாலும் உறவு அறுந்து விடாமல் பாதுகாப்பது ஊடாடும் நரம்பாய் அன்பு. அதை மனதில் பதிய வைப்பது ரோல் மாடலாய் இருக்கும் பெற்றோர்கள். சொல்ல வேண்டியதை அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார். அன்பு என்பது எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் மருந்து என்பதை வாழ்க்கையின் அனுபவங்ககள் சொல்லிக் கொடுத்தன.

   Delete
 4. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை
  கெட்டுப் போனவன் விட்டுக் கொடுப்பதில்லை
  என்பார்கள் வாழ்க்கை என்பதே
  விட்டுக் கொடுத்தலும், அனுசரித்து போகுதலும்தானே.
  சில வருடங்களுக்கு முன்னர், தமிழ்அறிஞர் இளங்குமரனார் அவர்களின்
  இல்லத்தின், சுவற்றில் ஒரு வாசகத்தினைப் பார்த்தேன்,
  //உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம்,
  உள்ளம் சுருங்கினால் உறவும் பகையே///
  எனது வலைப் பூவின் முகப்பில் கூட இவ்வார்த்தைகளைதான்
  இடம்பெறச் செய்துள்ளேன்
  நன்றி சகோதரியாரே
  தம 3

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் , பாராட்டிற்கும், விரிவானக் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 5. அக்கறைகளால் வரும் கோபம் கோபமல்ல... ஆனால் மற்றவர்கள் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.

   Delete
 6. அருமையான பதிவு..
  பாசப் பிணைப்புகளால் மனம் நெகிழ்கின்றது..
  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதனால் -
  அன்பில் பயிராகி ஆனந்தமே விளைகின்றது!..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி துரை சார்.

   Delete
 7. எனக்குத் தேவை இப்பொழுது பொறுமையும் உங்களனைவரின் ஆதரவும் அவ்வளவே."//

  முதிர்ச்சியான மனம்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி மேடம்.

   Delete
 8. விட்டுக்கொடுத்துப்போனால் உறவுகள் இனிக்கும் என்பதை சிறப்பாக சொன்னது பதிவு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சுரேஷ்.

   Delete
 9. அருமையான கதை மூலம் குடும்ப உறவுகளை சொல்லிவிட்டீர்கள்.
  கூட்டு குடும்பத்தில் கணவனின் அன்பு மிக முக்கியம். அது மட்டும் கிடைத்து விட்டால் பெண்கள் எந்த கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்வார்கள்.
  அவர்கள் என்ன செய்தார்கள்? நீங்கள் செய்கிறீர்கள் அவர்கள் அப்படி சொன்னார்களே, இப்படி சொன்னார்களே என்று சொன்னால்குற்றம் பார்க்கையில் சுற்றம் இல்லை, செய்யாதவர்களுக்கு செய்து காட்டவேண்டும் இது தான் அம்மா சொல்லும் வாசகம் .

  ஆசிரியர் அல்லவா? அதனால் அருமையான கதைகளம் அமைத்து உறவுகளின் ஒற்றுமைக்கு அன்பே! என்று அழகாய் சொல்லிவிட்டீர்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது அனுபவத்தில் உணர்வது தானே. அதைக் கருவாக்கி கதை அமைத்தேன் . கதையைப் பாராட்டியதற்கு நன்றி கோமதி

   Delete
 10. உறவுகளைப் பற்றி அழகான கதைமூலம் விளக்கி விட்டீர்கள். பாராட்டுக்கள். இங்கும் பெண் அனுசரித்துப் போவதையே முன் நிறுத்தி இருக்கிறீர்கள்.ஆக உறவுகள் மேம்படுவதும் சீரழிவதும் பெண்களால்தான் என்று புரிந்து கொள்ளலாமா. ? என் வேண்டுகோளுக்கு இணங்கி பதிவிட்டதற்கு நன்றி ராஜலக்ஷ்மி மேடம். .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கேள்விக்கு என் நாயகி ஜானகியே ஓரிடத்தில் பதில் சொல்கிறாள். ஜானகி புகுந்த வீட்டு உறவைப் பேணுவதற்கு அவள் கணவனின் அன்பு முக்கியக் காரணமே.
   ஆக உறவுகளைப் பேணுவதில் இருவருக்கும் சம பங்கு இருக்கிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து. இந்தக் கதையில் கணவனின் பங்கு மறைமுகமாக இருக்கிறது.
   என் கதையைப் பாராட்டியதற்கு நன்றி பாலு சார்.

   Delete
 11. விட்டுக்கொடுத்தல் நல்லதே என்ற சித்தாந்தத்தை விளக்கியது அருமை

  ReplyDelete
 12. கதை மூலமாக எடுத்துரைத்தது மனதில் நின்றது.

  ReplyDelete
 13. கதையின் நடையும், கருத்தும் ஒன்றுக்கொன்று போட்டிபோடுகின்றன.

  ReplyDelete
 14. வித்தியாசமாக கதை மூலம் கருத்துச் சொன்னது நன்று.

  குடும்பம் இன்பமயமாக இருக்க, ஆண் பெண் இருவருக்குமே சரிசமமான பங்கு இருக்கிறது என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க... வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. வலைச்சரத்தில் தாங்கள்........

  ReplyDelete
 16. உறவுகளை எப்படி கையாள வேண்டும் என்று மிக அழகாகசொல்லியிருக்கிறீர்கள், ராஜி.ஆனால் இந்தப் பக்குவம் எல்லோருக்கும் வருமா, சந்தேகம் தான். மிகமிகப் பொறுமை முதலில் மிகவும் அவசியம். இதைப் போல ஜானகிகளும், மைதிலிகளும் இருந்தால் பல குடும்பங்கள் பிரியாதே!
  கற்பனைக் கதை நன்றாக இருக்கிறது படித்துப் பார்க்க. நிஜத்தில் ...?

  ReplyDelete
 17. உங்களுடைய இப்பதிவினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். தங்கள் தகவலுக்காக!

  http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_31.html

  நட்புடன்
  ஆதி வெங்கட்

  ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்