Friday, 22 March 2013

''சிட்டுக்குருவி சேதி" தெரியுமா?

                                  
                                                             அறிவிப்பு
 
 மேலே படத்தில் உள்ளவர்களை  காணவில்லை.

கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.


உயரம்     சுமார்  இரண்டு அங்குலம்.


நிறம்        லைட் பிரவுன்


 பார்க்க மிக அழகான கண்களுடன், சின்ன அலகு
ம் கூட.

 இங்குமங்கும் 'பட பட ' என்று 'பறக்கும் படை'.


இந்தக் குருவியார் தன் குடும்பம், தாயாதி பங்காளிகள், உற்றார் .உறவினர்,எல்லோருமாக என் வீட்டு முற்றத்தில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.இதெல்லாம் ஒரு பத்து பதினைந்து வருடம் முன்பாகத் தான் .பின்பு ஒவ்வொருவராக  வெளியே சென்றவர்கள்  திரும்ப வில்லை.

இப்பொழுது  பார்த்தால் ஒருவரையும் காணோம்.


இவ்வளவு  நாளாக என்ன  செய்து   கொண்டிருந்தேன் என்கிறீர்களா?


தேடி தேடி தவித்தது தான் மிச்சம்.அதனால் தான் இந்த அறிவிப்பு.


என்னால் மறக்க முடியவில்லை,


குருவிகள் என் வீட்டு முற்றத்தில்,வீட்டுப் பரணில் ,போட்டோக்களுக்கும்,

சுவற்றுக்கும் இடையில் கூடு கட்டி,முட்டையிட்டு,குடும்ப விருத்தி செய்து, 


குட்டி குருவிகளை தாய் அன்புடன் ,பார்த்து பார்த்து உணவூட்டியது எல்லாம் 

அப்படியே கண்ணில் நிற்கிறது.


கீச்,கீச் என்று நாள் பூராவும் கத்தி கும்மாளமிட்டு ,வீடே உயிரோட்டமாயிருக்கும்.


குருவிகள் வீ ட்டில் விளையாடுவது ,மங்களகரம் என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.


தன் துணையுடன் கொஞ்சி விளையாடும்.


திடீரென்று இரண்டும் ஊடல் கொண்டாடும்.


பார்க்க ரம்யமாக இருக்கும்


'படக், படக்' என்று  தலையை திருப்பி என் மழலைக் குழந்தைகளை வித்தியாசமாக பார்க்கும்..


குழந்தைகள்  குருவியை பிடிக்கிறேன் பேர்வழி என்று துரத்திக் கொண்டு


 ஓடினால் 'விர்' ரென்று பறந்து துணி உலர்த்தும் கொடியில், அமர்ந்து

வெற்றிக் களிப்புடன் உற்சாக  ஊஞ்சலாடும்.


என்  குழந்தைகளுக்கு நான் பருப்பு சாதம் ஊட்டும் போது,எங்களுக்கு கிடையாதா? என்று ஏக்கமாக பார்க்கும்.


அம்மாவோ,பாட்டியோ, அரிசியில் கல் நெல் பொறுக்கும் போது,

குடும்பத்துடன் வந்திருந்து  கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டு, தத்தி தத்தி குதித்து கொண்டு' கீச் கீச் 'என்று மாநாடு போடும்.


இது அத்தனையையும்,  இதற்கு மேலும் அவை செய்யும் அட்டகாசங்களை ரசித்திருக்கிறேன்.கடைசியாக கிடைத்த தகவலின்படி,

நாம் தேடும் சிட்டுக் குருவியை இனிமேல் நம்மிடையே பார்க்கவே முடியாது என்று தோன்றுகிறது.அவைகள் நாடு கடந்து போயிருக்கலாமோ என்று சந்தேகமாயிருக்கிறது.


சிட்டுக்குருவிக்கு என்ன கோபம் நம்மேல் என்று விசாரித்த போது கிடைத்த தகவல்


நம் செல்போன் டவர்களிலிருந்து வெளிவவரும் கதிர்வீச்சின்ஆபத்தில் சிக்கியிருக்கலாம்.


நம் சிறுவர் சிறுமிகள்(சமயத்தில் பெரியவர்களும் தான்) கண்டகண்ட இடங்களில் மென்று ,மென்று துப்பும்  சூயிங்கம் அவர்கள் உயிரை குடித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


அதோடு


மக்களிடையே குறைந்து கொண்டே வரும் தோட்ட ஆர்வமும்,


மலிந்து வரும் சுய நலமும்(எச்சிற்கையால் கூட காக்காய் விரட்டுவதில்லையே.) காரணமோ.?


இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.......


சரி,எப்படி தான் சிட்டுக் குருவிப் பஞ்சம் தீர்ப்பது.


என்  எண்ணங்கள்  இதோ


நம் வீட்டு பால்கனியில்,ஜன்னலில்,குருவிக்கும் ஒரு பறவை வீடு


கட்டிக்கொடுக்கலாம்(இப்பொழுது bird house விற்கிறார்கள்).


சின்ன தட்டுகளில் தானியம்,தண்ணீர் வைக்கலாம்.


மரம்,செடி கொடி வளர்ப்போம்.


சுற்று சூழலைப் பாதுகாப்போம்.


நம் குழந்தைகளுக்கும் ,சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துவோம்.


இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ  அதையெல்லாம் செய்து,சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகளுக்காக


வழி மீது விழி வைத்து காத்திருப்போம்.நன்றி   கூகுள் (பட உதவி)

22 comments:

 1. மிகவும் பயனுள்ள பதிவு. சிட்டுக் குருவிகளை இப்போது பர்ர்க்க முடியால் போன வருத்தமும் ஆதங்கமும் எனக்கும் நிறையவே உள்ளது.

  சிட்டுக்குருவி போன்ற அழகான பதிவுக்கும், பல்வேறு தகவல்களுக்கும், வர்ணிப்புகளுக்கும், ஏக்கங்களுக்கும் என் அன்பான இனிய பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வைகோ சார்,
   மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், ஊக்கப்படுத்தும் கருத்துரைகளுக்கும்.
   சிட்டுக்குருவிகள் எங்கு தான் போயின என்பது ஒரு புரியாத புதிர் தான் எனக்கு. அதன் பாதிப்பு தான் இந்த பதிவு.
   நன்றி

   ராஜி

   Delete
 2. ராஜி,

  எங்கள் வீட்டிலும் நிறைய சிட்டுக்குருவிகள் இருந்தன.ஸ்விட்ச் போர்டின்மேல் முட்டையிட்டு,கீழே விழுந்து உடைந்ததால்,மாவு சலிக்கும் சல்லடை வைத்து அழகாக வீடுபோல் கட்டி வைத்தார் எங்க அப்பா.எந்நேரமும் கீச்கீச் சத்தம்தான்.சண்டையெல்லாம் நடந்து,கீழே விழுந்து எழுந்து பறப்பாங்க. அவற்றையெல்லாம் காணவில்லை எனும்போது வேதனையாகத்தான் உள்ளது.கட்டுரையில் உங்களின் ஆதங்கத்தையும்,தீர்வையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க.திருந்தப் பார்ப்போம்.

  இங்கே எங்க வீட்டிற்கு (USA) அருகிலுள்ள மரத்திற்கு சிட்டுக்குருவி முதல் பெயர் தெரியாத ப‌ல குருவிகளும் வருவாங்க.அதிகாலை 4 மணிக்கே ஒரே சத்தமாக இருக்கும்.கேட்கவே நல்லாருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சித்ரா,
   நீங்கள் சொல்வது உண்மை தான்.நானும் நியு ஜெர்சி வரும் போது
   குண்டு குண்டு சிட்டுக் குருவிகளை பார்ப்பதுண்டு.அப்பொழுது எல்லாம் எனக்கு ரொம்பவே ஆதங்கமா இருக்கும்.இந்தியாவிலிருந்தே விரட்டி விட்டோமோ என்ற அஞ்சுவேன்.
   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

   ராஜி

   Delete
 3. அருமை இதே ஏக்கம் என்னுள்ளும் எழுந்ததுண்டு. வேகமாக மாறிவரும் உலகில் மரங்களுக்கே தட்டுப்பாடு. காடு மேடுகள் எல்லாம் காங்கிரீட் சுவர்களாக. ஒரு அழகான உயிரினத்தை அழித்த திருப்தியோடு வளர்ச்சி பற்றி பேசி திரிகிறோம். வீட்டு முற்றத்தில் ஜோடியாக பறந்து செல்லும் இது போன்ற சிறு சிறு உயிரினங்களை பார்த்து பரவசப்பட்ட நாம், அடுத்த தலைமுறைக்கு வெறும் படங்களாக அல்லது பேசும் சித்திரங்களாக மட்டுமே விட்டு செல்வதை நினைத்து மனம் கனக்கிறது. சிட்டுக்குருவியை நினைவூட்டியதற்க்கு நன்றி. முடிந்தால் எனது ஏக்கத்தையும் வந்து பாருங்கள் http://muthuchitharalkal.blogspot.com/2012/08/blog-post_12.html

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் முத்துகுமரன்.வணக்கம்.
   உங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
   நீங்கள் சொல்வது போல் இந்த கான்கிரிட் காடுகளில் தான் இதைப்போன்ற
   சின்ன சின்ன அழகான உயிரினங்களை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.இதெல்லாம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதை தான்.என்ன செய்வது.............
   இதோ உங்கள் தளத்திற்கு வந்து உங்களுடைய அருமையான கவிதைக்கு பின்னூட்டமிடவும், தொடரவும் செய்கிறேன்.
   நன்றி

   ராஜி

   Delete
 4. சிட்டுக்குருவிகள் வருமைக்கு வழி மீது விழி வைத்து காத்திருப்போம்.

  http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html

  சிங்காரச் சிட்டுக்குருவிகள் பதிவில் எமது ஆதங்கத்தையும் பதிவு செய்திருக்கிறோம் ...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.
   இதோ உங்கள் சிங்கார சிட்டுக்குருவி பதிவைப்படித்து பின்னூட்டமிடுகிறேன்.
   நன்றி,

   ராஜி

   Delete
 5. ரொம்பவும் வித்தியாசமான சிந்தனை! இப்போதுள்ள‌ யந்திர உலகில் சிட்டுக்குருவிகளையும் இயற்கை அழகையும் ரசிக்க எத்தனை பேருக்கு நேரமிருக்கிறது? பொறுமையிருக்கிறது? சிட்டுக்குருவிகள் பற்றி பாடிக்கொன்டு, ஒவ்வொரு பறவையின் குரலை வைத்தே அதை இனம் கண்டு கொள்ள முயற்சி செய்த காலங்கள் எல்லாவற்றையும் உங்கள் பதிவு திரும்ப நினைவுக்குக் கொண்டு வருகின்றது! உங்களின் ரசனையும் பதிவும் அருமை!!

  ReplyDelete
  Replies
  1. மனோ,
   நாம் பார்த்து,ரசித்த சிட்டுக்குருவிகளை வரும் தலைமுறைக்கு ஒரு போட்டோவில் தான் பார்க்க வைக்கிறோம்.ஆதங்கமாய் இருக்கிறது.
   உங்களுடைய பழைய நினைவுகளை மலர வைத்ததற்கு மகிழ்கிறேன்.
   வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி.

   ராஜி

   Delete
 6. சமீபத்தில் திருச்செந்தூர்போய் இருந்தேன். அங்கு சிட்டுக்குருவிகள் கீச் கீச் என்று மகிழ்ச்சியோடு சத்தம் இட்டு மகிழ்ச்சியாக பறந்ததை கண்டேன். என் கணவரிடம் நம் ஊரில் இல்லை, இங்கு இருக்கே என்று கேட்ட போது திருச்செந்தூர் அருகே இலங்கை நிலப்பரப்பும், கடல்பரப்பும், இருக்கிறது, டவர்கள் குறைவு. ஆகையால் குருவிகளுக்கு ஆபத்து இல்லை போலும் அதனால் இங்கு இருக்கு என்றார்கள். தூத்துகுடி போய் இருந்தோம் அங்கும் சிட்டு குருவிகளை கண்டேன். கேதார் நாத் கோவிலும் பார்த்தோம். ஒரு ஆறுதல் முற்றிலும் அழியவில்லை எங்கோ ஒரு சில இடங்களில் இருக்கிறதே என்று ஒரு ஆறுதல் பட வேண்டியது தான். என் மகன் இருக்கும் நியூஜெர்சியிலும் மகிழ்ச்சியாக பறந்து கொண்டு இருக்கிறது.

  அதன் வருகைக்காக நானும் சிட்டுக்குருவி தினத்தன்று ஒரு பதிவு போட்டு இருக்கிறேன்.

  உங்கள் ஆதங்கமும் , அது திரும்பி வர காத்திருப்பும் மிகவும் பிடித்து இருக்கிறது. பதிவு மிக நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
   இவ்வளவு இடங்களில் சிட்டுக்குருவிகள் இருப்பது மிக்க ஆறுதல்.
   அவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை அமைந்தால் கண்டிப்பாக வந்து விடும் என்ற நம்பிக்கை வருகிறது உங்கள் கருத்தைப் படிக்கும் போது.ஆறுதலடைவோம்.

   வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி.

   ராஜி

   Delete
 7. ஹலோ ராஜி!
  வேர்ட்ப்ரஸ் - இலிருந்து இங்கு மாறிவிட்டீர்களா? ரொம்பநாட்களாக நீங்கள் எதுவும் எழுதவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

  சிட்டுக்குருவிகள் பற்றிய உங்கள் ஆதங்கம் ரொம்பவும் நிஜம். நான் கூட இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன். இதோ இணைப்பு:http://wp.me/p244Wx-40
  http://wp.me/s244Wx-420

  அங்கும் எழுதுங்கள் ப்ளீஸ்!

  ReplyDelete
  Replies
  1. word press லிருந்து மாறிவிட்டேன்.
   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்கள் எனக்கு பெரிய பூஸ்ட்.
   உங்கள் சிட்டுக்குருவி பதிவிற்கு சென்று பின்னூட்டமிடுகிறேன்.

   நன்றி.
   ராஜி.

   Delete
 8. அருமையான பதிவிட்டு சிட்டுகுருவிக்காக எங்களையும் ஏங்க வைத்து விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்!!!
   உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   ராஜி

   Delete
 9. Squirrels fell prey to our change in life style combined with environmental hazards. Lovely write. Sorry, cant respond in Tamil.

  ReplyDelete
  Replies
  1. sir,

   Thankyou for visiting my blog and complementing it.

   I can understand your concern over squirrels.It it true that we are losing them too.
   I understand that you face difficulty in writing Tamil.
   Comments posted in Tamil or English is appreciated.
   Keep posting your comments in English/Tamil.

   Raji

   Delete
 10. :) நல்ல ப்கிர்வு!சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா??? இந்த விசயமெல்லாம் நமக்கு தெரிகிறது...சிட்டுக்குருவிக்கு தெரியாது :(

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் விஜயன்.
   உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
   நீங்கள் சொல்வது போல் சிட்டுக்குருவிக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது. அதனால் தான் நாம் அவற்றை இழந்து கொண்டிருக்கிறோம்.

   நமக்கு நாமே வில்லன்கள் தான்.
   உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி விஜயன்.

   Delete
 11. இங்கே எங்க வீட்டுலே பெரிய இடம் மாடியிலே இருக்கு. நிறைய தொட்டிகள், அதனடியில் தட்டுகள் என தண்ணீர் வீணாகாமல் இருக்கிரது. நிறைய புராக்கள்,காகங்கள் என தண்ணீர் குடிக்க வருகிரது. சில ஸமயங்கள் 5 அல்லது 6 சிட்டுக்குருவிகளும் வருகிரது. கூட்டம் கூட்டமாக இல்லை.
  சும்மா,படை எடுக்கும் மாதிரி வரும் குருவிகள், பார்க்க இரக்கமாக இருக்கிரது. மிக்க அழகாக எழுதியிருக்கிறீர்கள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதைப் படிக்கும் சென்னை bird lovers ற்கு பொறாமையாக இருக்கும்.படையாக வரும் என்று சொல்கிறீர்களே. நாங்கள் இங்கு ஒன்றைப் பார்ப்பதே அபூர்வம்.

   எங்களை விட்டு பறந்து விட்டன.
   மீண்டும் வரும் என்று நம்புகிறோம்.
   உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி .

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்