கம்பனும், நழுவிய கோப்பையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
ஒரு சின்ன ப்ளாஷ் பேக்...
மணமேடையில் குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தேன்.
அவர் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பாரா? இல்லை கண்டுக்காதது போல் உட்கார்ந்திருக்கிறாரா? தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தாலும் ....
அவரை திரும்பிப் பார்க்க முடியவில்லை. லேசாக சற்றே தலையைத் திருப்பியிருந்தாலும், பக்கத்திலிருந்த கல்லூரி தோழிகள் என் மானத்தை வாங்கி விடுவார்களே!
ஆனால் கம்பராமாயண சீதையைப் பாருங்கள்....என்னா டெக்னிக் ? பக்கத்திலிருந்த ராமனை எப்படி கள்ளத்தனமாகப் பார்க்கிறாள் என்று கவனியுங்கள்..
ஜனகனின் சபைக்கு திருமகளின் வடிவமான அழகு சீதையை, மேலும் அலங்கரித்து அழைத்து வருகிறார்கள்.
நாணத்தால் தலைக் கவிழ்ந்திருக்க,
'தொம் தொம்' என்று சத்தம்.
சீதையின் இதயத் துடிப்பு 'ஸ்டெத்' எதுவுமில்லாமல் அவளுக்கே கேட்க...
அவள் மனம் விரும்பிய ராமனே வில்லை முறித்து , அவள் கரம் பற்றப் போகிறான். அப்புறம் எதற்கு இத்தனைப் பதட்டம்??
சீதையின் எண்ண ஓட்டத்தைக் கவனிப்போமா?
அருகிலிருக்கும் தோழி நீல மாலையைப் பார்க்கிறாள் சீதை..
"என்ன?" என்பது போல் நீல மாலை புருவத்தை உயர்த்த...
" அவர் தானே?" சீதை கண்களால் கேட்க...
"எவர்?" நீலமாலை கண்களில் குறும்பு கொப்பளிக்க பார்க்க..
" ஏய்! சும்மா இருடி. சரியாகப் பார்த்து சொல் அவர் தானே." மீண்டும் கண்களால் சீதை ஆனையிட..
நீல மாலை சபையை ஒரு முறை கண்களால் ஸ்கேன் செய்து விட்டு...
" ஆமாம்... ஏன் என்னைக் கேட்கிறாய்? நீயே பார்க்க வேண்டியது தானே. பாத்துக்க." என்பது போல் கண்களால் சொல்ல...
"போடி! வெட்கமாயிருக்குடி. ப்ளீஸ்...கொஞ்சம் சரியாய் பாத்து சொல்லேன்.."
" சரி. சொல்றேன்..ரொம்பவும் அவஸ்தைப் படாதே.... இரு ...இரு... அவர் போலத் தான் இருக்கு. அவரே தான் என்று நினைக்கிறேன்.."
இப்ப சீதை, "எவரே தான்?" கண்களால் பேச
"ம்ம்ம்ம்......"நீலமாலை பொய்க் கோபம் காட்ட..
"ஓகே...ஓகே..ப்ளீஸ்...ப்ளீஸ்" சீதை கண்களால் கெஞ்ச..
"அப்படி வா வழிக்கு. சொல்றேன்...நீ எறிந்த பூப்பந்து விழுந்த தோளுக்கு சொந்தக் காரர் தான். அந்தக் கரிய செம்மல் தான். போதுமா?" கண்களால் சொல்ல...
"அப்பாடி.." என்றிருந்தது சீதைக்கு.
ஒரே ஒரு கணம் தான்.
"நீலமாலை சரியாகத் தான் சொல்கிறாளா" மீண்டும் சீதைக்குக் குழப்பம்.
தாமரையாய் மலர்ந்திருந்த அவள் முகம், குழப்பத்தில் தவிப்பதைப் பார்க்க முடிந்தது.
"நானே பார்த்தால் தான் எனக்குத் திருப்தியாய் இருக்கும். பார்க்கலாம் என்றால் நாணம் தடுக்கிறது. எப்படிப் பார்க்கலாம்?" நிலைக் கொள்ளாமல் தவிக்கிறாள் சீதை.
அவள் தன் தந்தை ஜனகன் அருகில் அமர வைக்கப் படுகிறாள்.
ஜனகன் ஒரு தந்தையின் பெருமிதத்துடன், சீதையைப் பார்க்கிறான்.
"என் செல்லப் பெண், இந்தப் பொற் சித்திரம் என்னை விட்டு அயோத்திக்கு போய் விடுவாளே." மனம் லேசா விசனப் பட...
சீதையோ , அப்பாவின் மன ஓட்டத்தை அறியாமல் ராமனை எப்படிப் பார்க்கலாம் என்று அலை பாய்கிறாள்.
(பெண் குழந்தைகளே இப்படித் தான். காதலனும், கரம் பற்றியவனும் தான் எல்லாம் அவர்களுக்கு)
சட்டென்று அவள் "மைண்ட் வாய்ஸ்",
"சீதை ! ஒரு ஐடியாடி."
"என்ன?"
"கைகளில் எத்தனை எத்தனை பொன், வைர, வைடூரிய வளையல்களைப் போட்டிருக்கே."
"ஆமாம். அதுக்கென்ன?"
"அதை சரி செய்யறாப் போல...." சொல்லி முடிக்கவில்லை மைண்ட் வாய்ஸ்....
"நல்ல ஐடியாவா சொல்றியே! வெரி குட்!"
சந்தோஷமாக செயல் படுத்துகிறாள் சீதை.
கைவளையலை பார்த்து சரி செய்வது போல், தலையை மிக மிக லேசாகத் திருப்பி, கடைக் கண்ணால் தன் கரம் பற்றப் போகும் ஶ்ரீராமனை ஆசைத் தீரப் பார்த்து விடுகிறாள். "அன்று என்னைப் பார்த்து என் இதயத்தைத் திருடிக் கொண்டு சென்றவன் தான்" என்று உறுதி செய்து மகிழ்கிறாள்.
சீதை கள்ளத்தனமாகப் பார்ப்பதை, ராமனும் கவனித்து விடுகிறான்.சட்டென்று மின்னலாய் ஒரு புன்னகை அவன் முகத்தில் தோன்றி மறைய...
நீல மாலை இந்த கண நேர காதல் நாடகத்தைக் கவனித்து, சீதையை லேசாக கைகளால் இடிக்க..
'அட..இத்தனையும் நடந்ததா ஜனகனின் சபையில்? '
கம்பனின் பாடலைப் படித்ததில் கற்பனையில் நான் கண்ட காட்சி தான் மேலே சொன்னது..
இதோ அந்தக் கம்பராமாயணப் பாடல்
பால காண்டம். கோலங்கான் படலம் .எண் 1238
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை. அகத்து வடிவே அல. புறத்தும்.
கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்
இலக்கையுடைய வில்லை வளைத்ததையும், அதனை முறித்ததையும், (பலர் வாயிலாக) உரைக்கக் கேட்டு விட்டாள். உண்மை முடிவாகத் தெரிதலால் கன்னி மாடத்தில் கண்டவனோ வேறு ஒருவனோ வில் முறித்தவன் என்று தெருவிற் கண்ட முதற் காட்சி காரணமாக எழுந்த ஐயத்தை ஓரளவு நீக்கி விட்ட பிராட்டி,தலைவனாகிய இராமனை அன்று முதல் தன் அகமாகிய மனத்திலே நிலை நிறுத்திய வடிவத்தால் கண்டு களித்து வந்தவள், வெளியேயும்(அவன் வடிவத்தைக் கண்னாரக் காண) பெண்மையின் இயல்பான நாணம் தடுத்தலால், நேராக நோக்காது கை வளையல்களை சரி செய்வது போல் கடைக் கண்ணால் ரசித்து , அவன் தான் இவன் என்று அறிந்து மகிழ்ந்தாள்.
எத்தனை அழகு இந்த ராமாயணம்... கண்களுக்கு முன்னர் அக்காட்சி ஓடுகிறது.
ReplyDeleteதொடரட்டும் கம்பரசம்.
ரசனையை ரசித்தேன்... அருமை...
ReplyDeleteஅருமையான விளக்கம்
ReplyDelete