கம்பனுக்கும் சண்டைக்கும் என்ன சம்பந்தம்? இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.
ஹாலில் டிவி உச்சஸ்தாயில் அலறிக் கொண்டிருந்தது.
நாலு ballல் , இரண்டு run எடுத்தால் வெற்றிக் கோப்பை 'விராட்' கையில் இருக்கும் என்கிற நிலையில் , இந்தியாவே டிவிக்குள் மூழ்கிக் கிடந்திருந்தது.
'விராட்' பதட்ட நிலையில் பெவிலியனில் நின்றுக் கொண்டிருந்தார்.
இப்ப...2 balls 2 runs.
இந்தியாவே மயான அமைதி.
Bowler வேகமாக ஓடி வந்து பந்தை வீசவும், அது நேராக 'மிடில் ஸ்டம்ப்'ஐ இடித்துத் தள்ளி விட்டு, விக்கெட் கீப்பர் கையில் சமர்த்தாய் போய் செட்டில் ஆனது.
போச்சு...
இப்ப 1 பால், 2 ரன்..
கடைசி ball.
புது பேட்ஸ்மேன்.
இரண்டு ரன்.
எல்லோரும் கடவுளை வேண்டிக் கொண்டிருக்க bowler ம் மேலே வானத்தை ஒரு முறை பார்த்து (கடவுளிடம் வேண்டிக் கொண்டு) பந்து வீசவும், பந்தை அடிப்பதாய் நினைத்துக் கொண்டு, பேட்ஸ்மேன் காற்றைக் கிழிக்கவும், பால் இப்ப லெஃப்ட் ஸ்டம்பை பேர்த்து வீசி எறிந்தது.
போச்சு... 'கப்' போயே போச்.....
இப்படியா கடைசி நிமிடத்தில் வெற்றிக் கோப்பைக் கை நழுவும்?
There is many a slip between the cup and the lip என்று சும்மாவா சொன்னார்கள்.
ராமாயணக் கைகேயியும் இது போன்ற ஒரு தருணத்தை எதிர் கொண்டாள்.
அது அவளை அவள் மைந்தனிடம் இருந்தே பிரித்து விட்டது எனலாம்.
வாருங்கள் கைகேயி மாளிகைக்கு செல்வோம்...(கற்பனையில்)
கைகேயியும் மந்தரையும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
" மந்தரை! நீ சொன்னபடி ராமனைக் காட்டுக்கு அனுப்பியாகி விட்டது. இனிமேல் சிம்மாசனம் பரதனுக்குத் தான். ஆனால்..."
'ஆனால்...என்ன ராணி?'
" என் ஆருயிர்க் கணவன் மறைந்து விட்டாரே! கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்தார் போல் கொட்ட ஆரம்பித்தது."
" அழுவதை நிறுத்துங்கள் ராணி.இப்ப என்ன ஆச்சு? நீங்களா அவரைக் கொன்றீர்கள்? கொடுத்த வரத்தை கேட்டதால் உயிரை விட்டு விட்டார். ஊர் என்ன வேண்டுமானாலும் பேசும். வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். உங்கள் மகனுக்காக நீங்கள் செய்த மிகப் பெரிய தியாகம் இது. நீங்கள் தான் இனிமேல் ராஜ மாதா." மந்தரை சொல்லி முடிப்பதற்குள்..
" ராஜகுமாரர்கள் பரத, சத்ருக்ணர்கள் வந்து விட்டார்கள்" செய்தி வந்து சேர்ந்தது.
"மந்தரை! பரதன் வரவில்லையடி. சிம்மாசனமே என்னை நோக்கி வருகிறது. என் வார்த்தையே இனி கட்டளை. என் கட்டளையே சாசனம்." புளகாங்கிததுடன் பேசுகிறாள் கைகேயி.(தசரதன் இறப்பை மறந்து விட்டு)
"ஜாக்கிரதை மஹாராணி ! ஜாக்கிரதையாக பரதனிடம் பேசுங்கள்." என்று மந்தரை எச்சரிக்கவும்....
புயலெனப் பரதன் உள்ளே நுழையவும் சரியாயிருந்தது.
வந்து தாயை வணங்கிய பின்னர், "அயோத்தி நகரம் எதையோ இழந்தாற் போல் தோன்றுகிறது தாயே."
கைகேயி அமைதிக் காக்க...
பரதன் தொடர்ந்தான்," தாயே! தந்தையும், தனயனும் கண்ணில் தென்படவில்லையே!! அவர்களையும் போய் நான் வணங்க வேண்டுமே!"
கைகேயி இப்பொழுது தான் வாய் திறந்தாள்."இருவரும் இங்கில்லை மகனே!"
"அப்படியென்றால்....."
"உன் தந்தை வானுலகம் சென்று விட்டார்."
அதிர்ச்சியில் உறைந்தான் பரதன்.
அந்த அதிர்ச்சியிலிருந்து பரதன் மீள்வதற்குள் அடுத்த குண்டை போடுகிறாள் கைகேயி.
"உன் தமையன் ராமன் வனத்திற்கு சென்று விட்டான். அவனுடன் சீதையும், இலக்குவனும் சென்று விட்டார்கள்."
"ஏன் இப்படி அடுக்கடுக்கான துன்பம் ஏற்பட்டது? " பரதன் குரல் உடைந்து கேட்க...
"தானாக ஏற்படவில்லை . நான் தான் ஏற்படுத்தினேன்." வெற்றிக் களிப்புடன் சொல்கிறாள் கைகேயி.
"என்ன? நீங்கள் காரணமா?"
"ஆமாம் . அதுவும் ..உனக்காகவே செய்தேன்.
உன் தந்தை எனக்குக் கொடுத்த இரண்டு வரங்களை உனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டேன்.
ஒரு வரம்- நீ நாடாள
இன்னொன்று - ராமன் காடாள..
உன் தந்தை வானுலகம் சென்றது நம் துர்பாக்கியம்."
கைகேயி என்ன செய்திருக்கிறாள் என்பது புரிய பரதனுக்கு , கோபம் தலைக்கேறியது . கோபத்தின் டிகிரி உச்சத்தை எட்டியது.
கைகேயியைப் பார்த்து, பரதன் கண்ணும், முகமும் கோபத்தில் ஜிவு... ஜிவுக்க, " தந்தை வான் புக... தமையன் வனம் புக.... உன் மகன் பரதன் நாடாளுவான் என்று கனவு கண்டாயோ? "
"நீ செய்த அநியாயங்களுக்கு நான் துனை வருவேன் என்று எப்படி உன்னால் நினைக்க முடிந்தது? கெடுதல் எல்லாம் செய்து விட்டு, அதைப் பெருமையாக சொல்லும் உன் வாயைக் கிழிக்க விடாமல் என்னை எது தடுக்கிறது என்று தெரியவில்லையே " தன்னையே நொந்து கொள்கிறான்.
தாய் என்றும் பாராமல் அவளைத் திட்டி விட்டு ,"நான் கோசலைத் தாயைப் பார்த்து வணங்கி, மன்னிப்புக் கேட்கப் போகிறேன். பிறகு நான் வனம் சென்று ராமன் அண்ணாவை பார்த்து வணங்கி, அவர் திருவடிகளை பணிந்து அழைத்து வரப் போகிறேன். உன்னால் நின்ற ராம பட்டாபிஷேகம், என்னால் நிறைவு பெறப் போகிறது. " கோபத்தில் சொல்லி விட்டு வேகமாக கோசலை மாளிகையை நோக்கி சென்றான்.
யோசித்துப் பாருங்கள் ....கைகேயிற்கும், மந்தரைக்கும் எப்படி இருந்திருக்கும். கைகேயி கண்ட ராஜமாதா கனவு என்ன? நிமிட நேரத்தில் அந்தக் கனவு தகர்ந்து பொடிப் பொடியாய் உதிர்ந்து போயிற்றே.
A slip between the cup & lip. Absolutely True.
நம் எல்லோருக்குமே கைகேயி மேல் கோபம் கொஞ்சமில்லை, நஞ்சமில்லை. கம்பர் தன் கோபம் எல்லாவற்றையும், பரதன் வழியாக தீர்த்துக் கொள்கிறார் பாருங்கள்.
பரதன் தாயைத் திட்டுவதாக நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் ஒன்றை இப்ப பார்ப்போமா?
நோயீர் அல்லீர்; நும் கணவன்தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்!
தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே!
உம் கணவனது உயிரைக் குடித்தீர். நோய் போன்று நின்று நிதானமாக உயிரைப் போக்கவில்லை. சட்டென்று தந்தையின் உயிரை வாங்கி விட்டீர். ஆகையால் நீர் பேய் போன்றவரே. இத்தகைய நீர்கணவன் இறந்த பிறகும் இன்னமும் உயிருடன் வாழ்வதற்குரியவர் ஆவீரோ? (உரியரல்லீர்). இறந்து போக மாட்டீரோ.குழந்தையாய் இருந்தபொழுது பால் கொடுத்து வளர்த்தீர். ஆகையால் நீர் என் தாயார்தான். இளைஞனாய் இருக்கின்றேன். இப்பொழுது, அழியாத கொடும்பழி கொடுத்து என்னைக் கெடுத்தீர். எதிர்காலத்தில் என்னவெல்லாம் தரப்போகின்றீரோ?’
நாம் கைகேயியை என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைக் கம்பன் செய்கிறார் பாருங்கள்.
பரதனின் Character நம்மை அசர அடிக்கிறது அல்லவா?
அதனால் தான், கம்பர் வேறொர் சமயத்தில் அவனைக் கோடி ராமர்க்கு நிகர் என்று சொல்கிறார்..
வேறொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.
நன்றி.
நல்லதொரு விளக்கம்.
ReplyDeleteதொடரட்டும் கம்ப ரசம்.
// கோடி ராமர்க்கு நிகர் // என்பது முற்றிலும் உண்மை...
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteபாராட்டுகள்
தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 19 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteஎமது திரட்டியை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்