சமையலா......என் கணவருக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாது. நான் இல்லாமல் அவரால் இருக்க முடியாது. என்று பெருமை பட சொல்லும்
மனைவிகள் நிறைய.
இப்படி தான் ராசியும் அடிக்கடி சொல்வாள். "என்னவருக்கு சமையலறைக்கு எந்தப் பக்கம் போக வேண்டும் என்று கூடத் தெரியாது " என்று பெருமையடிப்பாள் .
இத்தனை நாள் ,'மேடம் 'இப்படியே பெருமையில் ஓட்டிக் கொண்டிருந்தாள் .
அவர் பட்ட பாடு இருக்கிறதே ..........படியுங்கள்.....
படிக்க படிக்க காபி போடுவதில் இருக்கும் சிரமங்கள் எல்லாம் உங்களுக்குப் புரியும்..
ஒரு நாள் காலையில் எழுந்திருக்கும் போது லேசான தலைவலியாயிருந்தது ராசிக்கு. அந்த வலியுடனே காபி ,டிபன், மத்தியான சாப்பாடு எல்லாம் விஷ்ணுவிற்கு கொடுத்தனுப்பி விட்டு, இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டுப் போய் படுத்தவள் தான் . மாலை மணி ஐந்திற்கு விஷ்ணு ஆபிஸிலிருந்து வரும் போது தான் எழுந்தாள் .
ஊரெல்லாம் பரவியிருக்கும் ஃளு ஜுரம் ராசியையும் ' விஸிட் 'அடிக்க வந்திருப்பது.., அவள் முகத்திலே தெரிந்தது .
" காலை ஓரளவு உடம்பு சரியாகிவிடும் "என்ற நினைப்பில் ஒரு லாரி மண்ணையள்ளிப் போட்டது, இறங்காத ஜுரம்.
காலை மணி 7.30 க்கு தான் முழிப்பே வந்தது ராசிக்கு.
" இவர் என்ன செய்கிறார் '" பார்த்தாள் ராசி.
நியுஸ் பேப்பரில் தலை அமுங்கியிருந்தது.
" கொஞ்சம் காபி குடித்தால் தேவலாம் " முனகினாள் ராசி.
( அவள் நாவில் சனி "டென்ட் ' அடித்திருந்தார் போலிருக்கிறது)
' காபி கேட்கிறாளே " நினைத்தார் விஷ்ணு.
காபி போடுவது என்ன பெரிய விஷயம். (இது............இது தான்...இந்த நினைப்பு தான் அவர் காபிக்கு உலையாய் வந்தது. ) " இதோ போட்டுக் கொண்டு வருகிறேன்." என்று சொல்லிக் கொண்டே லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு போர் வீரனைப் போல் சென்றார்.,அடுக்களைக்குள்.
எங்கிருந்து ஆரம்பிப்பது..............?
ஸ்டார்டிங் ட்ரபிள் .
முதலில் எது ?
டிகாக்ஷன் போடுவதா? பால் காய்ச்சுவதா?
மாபெரும் சந்தேகம்.
ஆரம்பமே இப்படி தன்னம்பிக்கையில்லாமல் இருந்தால் எப்படி....யோசித்துக் கொண்டே, டிகாக்ஷனில் ஆரம்பிப்போம் என்ற மிக முக்கியமான முடிவையெடுத்தார்.
முதலில் அதற்குத் தேவையான சாமான்களை எடுத்தார்.
தண்ணீர் ஒரு பாத்திரத்தில்..
காபிபொடி .....எங்கே ...? தேட ஆரம்பித்தார்.
" எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறாள் ராட்சசி " செல்லமாக திட்டிக் கொண்டே தேடினார்.
அப்பாடி..........சாம்பார் பொடி பாட்டிலுக்குப் பின்னே ஒளிந்து கொண்டிருந்த காபிப் பொடி பாட்டிலை ஒரு வழியாய் கண்டு பிடித்தார்.
3 ஸ்பூனா?..... 4 ஸ்பூனா ?......
யோசித்து ஒரு வழியாக " குன்ஸா "வாக போடத் தீர்மானித்தார்.
அவசரத்திற்கு ஸ்பூன் கிடைக்காததால் ஒரு கரண்டியை " சிங்க் "லிருந்து அரை குறையாய் கழுவி பாட்டிலுக்குள் ஒரு ஈராக் ....இல்லை ...இல்லை....ஈரக் கரண்டியால் எடுத்தார்.
எடுத்தபின் தான் எங்கே போடுவது என்ற நினைப்பு வந்தது.
கீழே குனிந்து காபி பில்டரை எடுக்கப் போனார்.
இதென்ன? கும்பகோணம் அடுக்கு கேள்விப் பட்டிருக்கிறோம் . காபி பில்டரில் கூடவா
எடுக்கப் போனவர் கையில் பட்டு எல்லாம் உருண்டோடியது. காபி பில்டரின் டாப்பும், பாட்டமும் உறவு முறித்துக் கொண்டன.
காபி பில்டரை ஜோடி சேர்ப்பதற்குள் இவர் ஜோடி குரல் கொடுத்தாள்.
" இன்னுமா காபி போடலை? "
"இதோ.... இரண்டு நிமிஷம்....... கொண்டு வருகிறேன்." என்றார் விஷ்ணு.
ஒரு வழியாக ஜோடி சேர்த்த பில்டரில் காபி பொடியைப் போட்டு தண்ணீரை எடுத்து கேசில் வைத்து தண்ணீர் கொதிக்க காத்துக் கொண்டிருந்தார்.
"ட்ரிங்,..... ட்ரிங் "
மீண்டும் "ட்ரிங்,.... ட்ரிங்".
சமையலறையிலிருந்து வேகமாகப் போய் போனை எடுத்தார். போனில் அவர் நண்பர் அப்பாசாமி.
"இன்னைக்கு நியுஸ் படித்தீர்களா விஷ்ணு?"
தேர்தல் கூட்டணி பக்கம் பேச்சுத் திரும்பியது.
சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது உரையாடல்.
சமயலறையிலிருந்து ஒரே கமறும் வாசனை . விஷ்ணுவிற்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது ' கேஸ் 'ல் தண்ணீர் வைத்தது. விழுந்தடித்து ஓடினார்.
அதற்குள் எல்லாமே கைமீறிப் போய்விட்டது தெரிந்தது.பாத்திரம் தீய்ந்து போயிருந்தது.
அடுக்களையில் ஏதோ ஏ .பி. நாகராஜன் பட ஷூட்டிங்க் நடப்பது போலிருந்தது . ஒரே புகை மண்டலம்.
சாவித்திரி ,"கோமாதா......எங்கள் குலமாதா......என்ற பாட்டு பாடிக் கொண்டே வருவார் போலிருந்தது .
அதற்குள் ராசி வேறு ," ஒரு காபி போடுவதற்குள் என்ன பாடு இது? " என்ற புலம்பல்.
ஜன்னலைத் திறந்து எல்லா புகையையும் விரட்டு ,விரட்டு. என்று விரட்டி விட்டு.
மீண்டும் " கேசில் "வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு
மணியை நிமிர்ந்து பார்த்தார் விஷ்ணு.
மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. தண்ணீரை பில்டரில் ஊற்றி விட்டு ஹாலிற்கு வந்து ஆபிசிற்கு போன் செய்து , அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டார்.
பின்னே.... காபி போட வேண்டாமா? அதற்குத் தான்.
டிகாக்ஷண் இறங்கியிருக்கும். அதை வைத்து காபி கலந்து விட்டு, குளிக்கப் போகலாம் என்று அடுக்களைக்கு சென்றார்.
டிகாக்ஷன் இறங்கியிருந்தது. ஆனால் சமையல் மேடையில் தான். இவர் பில்டரை சரியாக ஃ பிட் செய்யவில்லையா? இல்லை ஜோடி மாற்றம் செய்து விட்டாரா என்பது புலனாகவில்லை.
சரி, முதலில் டிகாக்ஷ்ணாய் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கு(?) அணைகட்ட தீர்மானித்து, பிடி துணியை தேடினார்.
கண்டு பிடித்தார் .
போட்டு துடைத்தார்.
பிடிதுணி என்று தாம் போட்டது"ராசியின் பிளவுஸ்" என்பது பிறகு தான் அவருக்குப் புரிந்தது.
" இருக்கு தனக்கு மண்டகப்படி "என்று புரிந்தது விஷ்ணுவிற்கு. " என் பிளவுஸ் உங்களுக்குப் பிடி துணியா " என்று பொசுக்கி விடுவாள். என்ன செய்வது? சட்டென்று அந்தத் துணியை அழகாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு குப்பைத் தொட்டியில் போட்டார்.
(" கொலைக்கான துப்பை" மறைப்பது போல்).
சரி.' காபி என்னாச்சு"
மீண்டும் ராசியின் கேள்வி .அவளால் முடியவில்லை. இல்லையென்றால்
இவ்வளவு நேரம் சமயலறையில் ஆஜர் ஆகியிருப்பாள்.
"இருக்கும் டிகாக்ஷனில் முதலில் ராசியின் வாயை அடைத்து விடுவோம்" என்று பிரிட்ஜில் இருந்த பாலைஎடுத்து காய்ச்ச அது விஷ்ணுவை அன்னப் பறவை என்று நினைத்ததோ என்னவோ , தண்ணீரும் பாலுமாய் கட்டி கட்டியாக பிரிந்து போனது.
இப்ப என்ன செய்வது? யோசித்தார்.
அதற்குள்
" டிங் டாங் "
போய் கதவைத் திறந்தார் விஷ்ணு.
'வாசலில் கொரியர். கையெழுத்து போட்டு வாங்கிவிட்டு கதவை மூடப் போன விஷ்ணுவின் கண்களில் பட்டது பால் பை.
ஓ .........இன்றைய பாலை எடுக்கவேயில்லையோ?பிரிந்தது பழைய பாலா ..... நினைத்துக் கொண்டே ,
புது பாலை காய்ச்சி டிகாக்ஷனை எடுத்து ஊற்றப் போனார். மெதுவாக சாய்த்தார்..........இன்னும் கொஞ்சம்..இன்னும் கொஞ்சம்.... என்று கவிழ்த்தே விட்டார்.
ம்ஹூம்.......ஒன்றுமே வரவில்லை . எல்லாம் தான் மேடையில்
ஆறாகப் பிரவாகமெடுத்து ஓடி விட்டதே !
இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை.
சூடான பாலில் பூஸ்ட் கலந்து ராசிக்கு கொடுத்து விட்டு , குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் " உனக்கு உடம்பிற்கு நல்லது என்று பூஸ்ட் போட்டிருக்கிறேன் "என்று கூறினார்.
ராசி குடித்து விட்டு , அவர் தடுத்தும் கேட்காமல் " இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நானே போய் மற்ற வேலைகளை பார்க்கிறேன் " என்று போனாள் ராசி."
வெகுநேரமாகியும் வரவில்லை ராசி. (மயங்கி விழுந்து விட்டாளோ ?)
பின்னே குருக்ஷேற்ற யுத்தம் நடந்த ரண பூமி போலல்லவா இருக்கிறது சமையல் மேடை?
"காபி போடுவது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை" புரிந்தது விஷ்ணுவிற்கு .
ராசியின் காபியை என்னவெல்லாம் பேர் சொல்லி கிண்டலடித்திருக்கிறோம்.
சுடு தண்ணீர், கழனித் தண்ணீர் , பானகம்......என்றெல்லாம் சொல்லியிருக்கிறோமே.
"அதற்கு சரியான தண்டனை தான்." நினைத்துக் கொண்டார் விஷ்ணு.
ஒன்றை விஷ்ணு மட்டுமல்ல, நாமெல்லோரும் கூட மறந்து விட்டோமே?
ஆனால் ,ராசி.........தேடிக் கொண்டிருக்கிறாள் அவளுடைய மயில் கழுத்து கலர் பட்டுப்புடவைக்கான பிளவுசை.
ராசியிடம் நான் சொல்ல மாட்டேன் அவள் பிளவுஸ் பிடிதுணியான ரகசியத்தை.
உஷ்..........நீங்களும் யாரும் சொல்லி விடாதீர்கள்.
குடும்பத்தில் நம்மால் குழப்பம் வர வேண்டாம். .
image courtesy---google.