ரொம்பவும் மகிழ்ச்சியில் இருந்தீர்களா? அப்பாடி........ மூன்று வாரங்களாக இவள் இம்சையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று .அப்படியெல்லாம் விட்டு விடுவேனா என்ன?
உங்கள் நினைப்பில் ஒரு லாரி மண்.
இதோ வந்து விட்டேனே.......... ஆனால் இப்பொழுது உங்களிடம் ஒரு உதவி கேட்கத் தான் வந்திருக்கிறேன். யாராவது நான் கேட்பதை எனக்கு தேடித் தந்து விடுங்கள். அப்புறம் நான் இந்தப் பதிவுலகம் பக்கம் வந்து உங்களை இம்சிக்கவே மாட்டேன்.
It is a promise......o.k.
விஷயத்திற்கு வருகிறேன்.........
நான் நழுவ விட்ட ஒன்றைத் தேடி தருவீர்களா?....
என்ன " பணமா ?"
இல்லை.
பதவியா?
அப்படிஎன்றால்........
நகை நட்டு ஏதாவது?..........
நகையாவது நட்டாவது அதெல்லாம் எப்படி இருக்கும்?
பின் எதைத் தான் நழுவ விட்டாய்? என்று சலித்துக் கொள்கிறீர்களா?
சில மணி நேரங்களைத் தொலைத்து விட்டேன்.
"என்ன உளறல் இது " நினைப்பது எனக்குக் கேட்கிறது.
கொஞ்சம் பொறுமையாக என் கதை கேட்டு ஒரு தீர்வு சொல்லுங்களேன்.
சென்ற திங்கட்கிழமை இரவு சுமார் பதினோரு மணிக்கு அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டேன் . கவனமாகப் படியுங்கள். சரியா.......
எங்கே விட்டேன்.
இரவு பதினொரு மணிக்கு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டேனா.........
சுமார் பதின்மூன்று மணி நேர பயணத்தில் அபுதாபி வந்து சேர்ந்தோம்.
அங்கு மூன்று மணி நேர ஹால்ட். அடுத்த ப்லைட்டிற்கு முன்னால்
Duty Free Shop இல் சாக்லேட்ஸ் வாங்கிக் கொண்டு , பொருட்களும், ரசீதும் ஒத்துப் போகிறதா என்று ஒரு தடவைக்கு இரு தடவை செக் செய்து கொண்டு வெளியேறினேன்.
கேட்டிற்கு வந்தோம் . சென்னை ப்ளைட்டைப் பிடித்தோம்.
ஐந்து மணி நேரப் பிரயாணத்தில் சென்னை வந்தடைந்தோம்.
அளவில்லா மகிழ்ச்சி. ஸ்வீட் சென்னையை விட்டு விட்டு இவ்வளவு மாதங்களாகி விட்டதே!
பெட்டிகளை கன்வேயர் பெல்டிலிருந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். .
ஹோட்டல் சங்கீதாவிலிருந்து வந்த பொங்கல் நெய்யின் மணமும், கம கம சாம்பார் மணமும் , எங்களை உள்ளே இழுத்து கொண்டது.
என்ன தான் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு விமானத்தில் பரிமாறப் பட்டாலும்
நம் பொங்கல் சாம்பாருக்கு ஈடாகுமா?
பட படவென்று பொங்கலும், வடையும் ,வயிற்றுக்குள் அடைக்கலமாயின.
பிறகு தான் நான் ஒரு நிதானத்திற்கு வந்தேன்.
" மணி என்ன ?"--இது நான்.
மணி இப்ப காலை ஆறு மணி "-- அவர்.
என்னதிது ? குழப்பத்துடன் அவர் அமர்த்திய டாக்சிக்குள்
யோசனையுடன் அமர்ந்தேன்.
"இன்று புதன் கிழமை " என்று மேலும் குழப்பினார்.
குழம்பிய மனதுடன் வீட்டில் நுழைந்தேன்.
நான்கு மாதத் தூசியை மேக்கப்பாய் போட்டுக் கொண்டிருந்த வீட்டை கொஞ்சமாய் சுத்தம் செய்து குளித்து நிமிர்ந்தால் , மணி இரண்டைக் காட்டியது.
மீண்டும் சரவண பவன் அண்ணாச்சி எங்கள் வயிற்றுக்கு உணவளித்து புண்ணியம் கட்டிக் கொண்டார்.
அங்கே தான் என் குழப்பத்தை ஆரம்பித்தேன்.
சாம்பாரை சாதத்துடன் பிசைந்து கொண்டே ," மொத்தமாக நாம் பிரயாணம் செய்த நேரம் வெறும் 21 மணி நேரமே. அப்படியானால் , திங்கட் கிழமை கிளம்பிய நாம் செவ்வாய் இரவே யல்லவா சென்னை வந்திருக்க வேண்டும்.ஆனால் நாம் வந்திருப்பதோ புதன் காலை தான். "
" அப்படியானால் அந்த சுமார் அரை நாள் எங்கே போனது.
எங்கே நழுவ விட்டேன். அபுதாபியிலா..இல்லை அமெரிக்காவிலேயே விட்டு விட்டேனா....இல்லை ..duty free shop லியா........."என்று கேட்டதற்கு
" நீ கொஞ்சம் பசி மயக்கமும், பிரயாணக் களைப்புமாக ஜெட் லேகிங்கில் இருக்கிறாய். நீ நேரத்தை Greenwich line அருகில் தான் விட்டு விட்டாய் . மறந்து விட்டாய் "என்றார் என்னவர்.
Greenwich Line இப்படி witch ஆகவே மாறி சூனியம் வைத்து என் நேரத்தைப் பறித்துக் கொண்டதே!
நேரம் பொன்னானது அல்லவா".
அதனால் யாராவது நான் நழுவ விட்ட நேரத்தை தேடிக் கொடுப்பீர்களா?
எனக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டாம். Greenwich line, one day gain, one day loss போன்ற டெக்னிகல் சமாசாரங்களைக் கேட்டு கேட்டு என் காது புளித்து விட்டது.
எனக்கு வேண்டியது நான் நழுவ விட்ட நேரம் அவ்வளவு தான். யாராவது
இங்கிருந்தே அதைத் தேடிக் கொடுத்தாலும் சரி, இல்லை Greenwich line தாண்டிப் போகிறவர்களாவது ,என் நேரத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாலும் சரி. நான் சந்தோஷப் படுவேன்.....
நான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மறக்க மாட்டேன்.......
நான் தொலைத்த நேரம் எங்கே? எங்கே? எங்கே?
image courtesy----google.