Wednesday 4 September 2013

மஞ்சு ஊரா.........மலேயாவா ?







மஞ்சு ஊர் எதுவாயிருந்தால் என்ன?
மஞ்சு யார்? எதற்கு அவள்  ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ?

கேள்விகள் உங்கள்  மனதில்  ரீங்காரமிடுகிறதா?

மஞ்சுவேறு யாருமில்லை என் மருமகள் தான்.( அவள் ஊரைப் பற்றிப் பதிவெழுதி, அவளுக்கு  நீ சோப் போட்டுக் கொள் .நீ உன் மருமகளிடம் நல்ல பெயர் வாங்க,.....  நாங்கள் தான்   மாட்டினோமா?என்று உங்கள் மைண்ட்  வாய்ஸ் சொல்வது கேட்கிறது)!
இதற்குள் சிலருக்கு என் பதிவின் மேல் ஆர்வம் வந்திருக்குமே! இவள் மருமகளுக்கு எப்படி சோப் போடுகிறாள் பார்க்கலாம் என்று தானே.

சக பதிவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ என் உறவினர் நிறைய பேர் படிக்கப் போகிறார்கள். அது மட்டும் உறுதி.

சரி விஷயத்திற்கு  வருகிறேன்.

காலையில் சோழன் எக்ஸ்பிரஸ் ஏறினால் பிற்பகல் 1 மணியளவில் நீங்கள் மாயவரத்தில் இறங்கி விடலாம்.அங்கிருந்து பஸ்ஸில் கோமல் சென்று  விடலாம்.
அங்கிருந்து வில் வண்டியில் (தலை அடிபடாமல் லாவகமாக உட்கார்ந்து கொண்டு) அரை மணி நேரப் பிராயணத்தில்  ஒரு அழகான பச்சை பசேல் என்று ஒரு கிராமம் இருக்கிறது.

ஓ ...... இந்தக் கிராமம்தான் மஞ்சு ஊரா

ஸ்டாப் !...... ஸ்டாப்!........ இது என் பாட்டி  ஊர்.
போகும் வழியெல்லாம்  எழில் கொஞ்சி  விளையாடும். ஊரும் மிகவும் பெரிது இல்லை. மிகவும் சின்ன ஊர். ஒரே தெரு தான். ஊருக்கு எல்லையாக இரு அழகான கோவில்கள்.

கரெக்ட்............. நீங்கள் நினைப்பது போல் பாரதிராஜா படத்தில் வரும் கிராமம் போலவே இருக்கும் இந்த ஊர். உறவினர்கள் போல் பழகும் மனம் கொண்ட மக்கள் .

ஒரு வீட்டில்  விசேஷமென்றாலும் ஊரில் யார் வீட்டிலும், அவர்கள்   சமையலறை கதவு திறக்காது.

அப்படிப்பட்ட ஊரிலிருந்து ,எங்கள் பாட்டி  சென்னையில் ,எங்கள் வீட்டிற்கு  வந்திருந்தார்.

வந்து குளித்து சுடசுட இட்லியும், சட்னியும் சாப்பிட்டு விட்டு வெளியே பால்கனி பக்கம் வந்தார்.

" இது என்ன? பணத் தோட்டமா?

 படிக்கும் நீங்கள் நான் பணத்தாலேயே தோட்டம் போட்டிருக்கிறேன் என்று நினைத்து விடப் போகிறீர்கள்........இல்லையில்லை.....(நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைவிலாவது நான் பணத்தால் தோட்டம் போடுகிறேன்)

" பணத் தோட்டமா........" நான்" ஆ "  வென்று வாய் திறக்க 

பின்னே இந்த கொடிக்கு என்ன பெயர்? என்றார்.

" money plant "

அதெல்லாம்  தெரியாது. இதற்கு அழகான தமிழ் பேர் " பணத்தோட்டம் " என்று சொல்லி விட்டுப் போய் விட்டார.

ராஜி. " நாளைக்கு  நல்லியிலோ ,குமரனிலோ எனக்கு  புடவை வாங்க வேண்டும் .அப்படியே சரவணபவனுக்கும் சென்று வரலாம் என்று  itineryஐ  வாயால் சொன்னார்.
சரி, நாளைக்கு என்னுடைய ராசியில் என்ன போட்டிருக்கோ தெரியலையே என்று நினைத்துக் கொண்டே படுக்கப் போனேன்.

பாட்டியின் தமிழுக்கு நாங்கள் அடிமை.
ஷெல்ப் என்பதை அலமாரி.
மேஜை, நாற்காலி, மூக்குக் கண்ணாடி, கூடம், காமிரா  அறை ,  வாளி,தாழ்வாரம்.. ,.......என்று அழகழகாய்  தமிழ் கொஞ்சும்.

கீழே உட்கார் என்பதை  தாழ  உட்கார்ந்து கொள்  என்று சொல்வது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

மறு நாள் குமரனில் புடைவை எடுத்து விட்டு அங்கு இருக்கும்,  விற்பனை ஆட்களை, தம்பி என்று அழைத்து  உறவு கொண்டாடி, பக்கத்தில், புடைவை எடுக்க வந்திருந்த ,யாரோ ஒருபெண்மணியிடம்  "எனக்கு இந்த கலர் நல்லா இருக்குமா " என்று  எந்தத் தயக்கமுமில்லாமல்  கேட்டு, ஒரு வழியாய்  MS blueவில்  அரக்கு பார்டர் போட்ட , அழகான பட்டுப் புடைவை எடுத்துக் கொண்டு விட்டார்.

எல்லோருமாக  சரவணபவனிற்கு  படையெடுத்தோம். நான், என் பையன்,பெண் ,  எல்லோருமாக.

என் அன்பிற்குரியவருக்கு , இந்த மாதிரி ஷாப்பிங் எல்லாம் ஜுஜுபி  மாதிரி. அவர் பெரிய அளவில் யோசிப்பவர். ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதைப் பற்றிய கவலையுடன், எல்லா சானல்களிலும்  வரும் செய்திகளைப் பற்றித்  தெரிந்து கொண்டிருந்தார்.

சரவணா பவனில் உட்கார்ந்து  ஜில் தண்ணியை ஆளுக்கு ஒரு மடக்குக் குடித்தோம்.அதற்குள் ஆர்டர் எடுப்பவர் வந்தார். பாட்டிக்கு தோசையும் , எங்களுக்கு வட இந்திய உணவு வகைகள்  ஆர்டர் செய்தோம்.

சர்வர் எல்லாவற்ரையும் டேபிளில் வைத்தார். பாட்டி எங்கள் பக்கம் திரும்பவேயில்லையே! இதையெல்லாம் சாப்பிட்டால் உடம்பிற்கு வந்தால் என்ன செய்வது என்கிற பயமாம்.

சாப்பிட்டு  விட்டு காபி  ஆர்டர் செய்ய.........

காபியும் வந்தது.
" காபி ரொம்ப நல்லாயிருக்கு " என்று பாட்டி சொல்லிக் கொண்டே ,"தம்பி...."
என்று கூப்பிட  என் பையன் கலவரமானான்.

" கொஞ்சம் சும்மாயிருங்களேன் பாட்டி ! " என்று நான் சொல்லி முடிப்பதற்குள் இவர் கூப்பிட்ட அந்த  சூப்பர்வைசர் கிட்டே வந்து,"ஏதாவது வேணுமா பாட்டி" என்று கேட்க,

" ஆமாம் நீ  மஞ்சு  ஊர் தானே  "என்று கேட்க  என்மகன் குழம்ப, அதைப் பார்த்து என் பெண் " களுக் "என்று சிரிக்க எனக்கோ ஒன்றுமே புரியவில்லை.

எங்களை விட  சூப்பர்வைசர் இன்னும் அதிகமாய் குழம்ப , இந்தக் குழப்பம் தீருவதற்குள் ," நீங்கள் மலேயாவா ....... "  என்று இன்னும் ஒரு  கேள்வி.

சூப்பர்வைசரோ  பாட்டியை ஒரு மாதிரி பார்க்க , நான்   ,"ஒன்றுமில்லை, உங்களை வேறு யாரோ என்று பாட்டி நினைத்து விட்டார்கள் " என்று சமாளித்தேன்.

ஆனாலும் என் பையன் முகத்தில் எள்ளும் கொள்ளும்.

வீடு வந்து சேர்ந்தோம்..
என் பெண் ஆரம்பித்தாள் .

"பாட்டி எதற்கு அவரைப் பார்த்து மஞ்சு ஊரா, மலேயாவா  என்றெல்லாம் கேட்டே  ?"

என்னவரோ  டிவியை ஆப் செய்து விட்டார். ரூபாயாவது மதிப்பாவது. அதை நம் நிதியமைச்சர் பார்த்துக் கொள்வார்  என்று நினைத்து  எங்கள்  பஞ்சாயத்தை  ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தார்,

" நான் எங்கே சொன்னேன். அந்த ஆள் தான் சொன்னார். அதைத் தீர விசாரிப்பதற்குள்  தான் நீங்கள் என்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டீர்களே" என்று குறைபட்டார் பாட்டி.

வாழைப்பழ ஜோக்கில்  வரும் கோவை சரளா மாதிரி    என் பெண் திரும்பவும் ஆரம்பித்தாள்,
"பாட்டி நான் கேட்ட வரைக்கும்  அப்படி ஒன்றும் சொல்லவில்லையே!பாருங்கள் கணேஷை டென்ஷன் ஆக்கி விட்டீர்கள் "- இது என் பெண்.

" நான்  தப்பா ஒன்னும் கேட்கலையேடா " என்று என் பையனைப் பார்த்துப் பாவமாக சொல்ல ,

தொடர்ந்து என்னைப் பார்த்து," நீ ஆர்டர் குடுக்கும் போது தானே சொன்னார்" என்று சொல்ல ," இது ஏதடா வம்பு "  என்று நினைத்துக் கொண்டேயிருக்கும் போது  என்னவர் ,"என்னை விட்டுவிட்டு சாபிட்டால் இப்படித்தான்" என்று பழி தீர்த்துக் கொண்டார்.(அதற்கு இதுவா நேரம்)

நீ  எனக்குத் தோசை சொல்லி விட்டு  உங்கள் ஐட்டங்கள்  சொன்னாயே , அப்பொழுது தான் அவர்," நான்,,மஞ்சு  ஊர் , மலேயா"  என்று சொல்லிக் கொண்டே தானே எழுதிக் கொண்டிருந்தார். அதை கேட்க விட்டீர்களா நீங்கள்" பாட்டி .

" ஓ " என்றான்  என் பையன் " பாட்டி அது மஞ்சு ஊருமில்லை.மலேயாவுமில்லை. " நான்.."... " மன்ச்சூரியன் " மலாய்  கோப்தா "
எல்லாம் நாங்கள் சாப்பிட்ட ஐட்டங்கள்  என்று கணேஷ் சொல்ல,

எனக்கும், என் பெண்ணிற்கும்  சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தால் கோபம்  வரும் பாட்டிக்கு. ரொம்பக் கஷ்டப்பட்டு  சிரிக்காமல் இருந்தோம்.

அது என்னவோ போங்க! ஒன்னும் புரியல  என்று அலுத்துக் கொண்டார்.அவருக்கு அது என்னமோ  நிஜமாகவே ஒண்ணுமே தான் புரியல.

ஆனால் அடுத்த  முறை போகும் போ து எனக்கும் மஞ்சூ ஊரை வாங்கித் தரனும்  என்று உறதி   செய்து கொண்டார்.

" நீ கவலயே படாதே பாட்டி மஞ்சுவுடனேயே வந்து  சாபிடலாம் "என்று நான் வாக்குக் கொடுத்தேன். 

மஞ்சு வரட்டும்  அவளையும் அழைத்துக் கொண்டு  பாட்டியையும் அழைத்துக் கொண்டு போய் மன்சூரியன்  சாப்பிட்டு விட வேண்டியது தான்.தீர்மானித்துக் கொண்டேன்.

என்பெண்ணும், பையனும், " எங்களை விட்டு விடுங்கள் . நீங்கள் ஹோட்டலுக்குப் போகும் அன்று உபவாசம் இருக்கப் போகிறோம் "என்று கோரஸ் பாடினார்கள்.


image courtesy--google.


34 comments:

  1. /// வாழைப்பழ ஜோக்கில் வரும் கோவை சரளா மாதிரி ///

    யாரு... கோவை சரளாதேவி அவர்களா...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன் சார் .
      கரெக்டாக கண்டுபிடித்து விட்டீர்களே! நன்றி.
      உங்கல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  2. பாட்டி பயங்கர கலக்கல் பார்ட்டியாக இருப்பார் போலிருக்கே!
    பணத்தோட்டம், மூக்குக் கண்ணாடி, நாற்காலி, கூடம் என்று நாம் மறந்துபோன வார்த்தைகளையெல்லாம் நினைவு படுத்துகிறார். 'தாழ உட்கார்ந்து கொள்'- அட, கேள்விபட்டதே இல்லை இந்த சொல் வழக்கை.
    பாட்டியின் ரசனையும் - MS ப்ளூவில் அரக்கு பார்டர் புடவை - கலக்கல்!
    அந்தக் காலத்து மனிதர்களுக்கு வெளிப்படையாக இருப்பதுதான் தெரியும். நாம்தான் நாகரீகம் என்று எதையும் வெளியில் சொல்லாமல் நோய்களுக்கு ஆளாகிறோம்.

    கலக்கல் பா(ர்)ட்டிக்கு ஜே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரஞ்சனி. இதையெல்லாம் எழுதிய பிறகு யோசித்தால், நம் தமிழை நாமே மறந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்ற வைக்கிறது. மெல்லத் தமிழ் இனி சாகாமல் , அடுத்த தலை முறைக்கு செல்ல வேண்டுமே!

      நன்றி ரஞ்சனி, உங்கல் வருகைக்கும் உங்கல் ஜே விற்கும்.

      Delete
  3. நமக்கே முதன் முதலில் கேட்க
    குழப்பத்தான் செய்யும்
    பாட்டியென்றால் சொல்லவேண்டுமா என்ன ?
    சுவாரஸ்யமான பகிர்வு
    பதிவுக்கும் தொடரவும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி ரசார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  4. செம கலாட்டாதான் போங்க... எங்க ஊர்ல பக்கத்து வீட்டு பாட்டி ப்ரிட்ஜ் என்பதற்கு மென்மையாக சொல்லாமல் ப்ரீட்ஜ்( பாலம் சொல்வோமே அந்த ப்ரிட்ஜ் - ஐ போல்) அழுத்தி சொல்லும். ஹர்ஷிதா என்ற பெயரை அரிசிதா என்று கூப்பிடுவாங்க நாங்க சிரித்தால்.. " ம் என்னமோ போங்கடி வாயில நுழையற மாதிரியா பேர் வைக்கிறிங்க என்று முணு முணுப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க உஷா!
      நிறைய பாட்டிகள் இப்படித் தான் அலுத்துக் கொள்கிறார்கள்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  5. அடடே என்ன ஒரு அழகான பதிவு. மஞ்சுவை பற்றி சொல்ல போகிரீர்கள் என்று பார்த்தால், கதை எங்கையோ ஆரம்பித்து, எங்கையோ முடிந்து விட்டதே!! பாட்டிக்கு காது செம ஷார்ப் போலையே! முதலில் உங்கள் பாட்டி ஊருக்கு எங்களை கூட்டி சென்று விட்டு, பின்பு உடனே சென்னையின் நல்லியை சுற்றி காண்பித்து பின் சரவணபவனுக்கு அழைத்து சென்று பசியாத்தி விட்ட விதம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மஹா!
      எனக்குத் தெரியும் இப்படித் தான் மஞ்சுவை மறந்து விடுவீர்கள் என்று. என் மருமகளை யாரும் மறந்து விடக் கூடாதே என்பதற்காகத் தான் கடைசியில் திரும்பவும் அவளைப் பற்றிக் குறிப்பிட்டேன்.
      சரி! சாப்பிட்டாகி விட்டதா சரவண பவனில். எப்படி இருந்தது மன்ச்சூரியன்.?
      நன்றி மஹா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  6. பாட்டி நல்ல பாட்டிதான் ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி ,உங்கள் வ்ருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  7. தலைப்பை பார்த்ததும்.. ஹிஹி.. என்னைப்பத்தி தான் என்னவோ வில்லங்கம் எழுதி இருக்கீங்க. பார்த்துட்டு நன்ன்ன்ன்ன்ன்ன்னா ரெண்டு நான் மஞ்சூரியன் மலாய் வாங்கி சாப்பிட்டு போகலாம்னு பார்த்தாக்க..

    உங்க மருமகப்பெண் பெயர் மஞ்சுவா.. ரைட் ரைட்.. நோட்டட் மிலாட்... பாட்டி இருக்கும் ஊரை எத்தனை ரம்மியமா விவரிச்சீங்க.. ஆஹா ஐ லவ்ட் இட்... வில்வண்டி ஏறி உட்காரும்போது இப்பவும் கார்ல ஏறி டொங்குனு தலை இடிச்சுக்கும் எனக்கு இந்த அறிவுரை கண்டிப்பா அவசியம்.. அதுக்குன்னு நான் ரொம்ப ஹைட்டுன்னு நினைச்சுராதீங்க. குள்ளக்கத்திரிக்காவை விட ரெண்டு இஞ்ச் தான் அதிக உயரம் நானு :)

    ரசிச்சு ரசிச்சு படிச்சேன்.. பாட்டி தமிழ்ல பேசும்போது கேட்க எவ்ளோ அழகா இருக்கு..

    ஆஹா பணத்தோட்டமா? எனக்கு எனக்கு?? அதான்பா மணிப்ப்ளாண்ட் எனக்கும் வேணும்.... வீட்ல வெச்சா ப்யூர் ஆக்சிஜன் கிடைக்குமாமேப்பா... ஆரோக்கியம் ஆயுள்விருத்தி... ஹெல்த் இஸ் வெல்த் அட பாட்டி பொருத்தமா தான் சொல்லி இருக்காங்க...

    பாட்டிக்கு புடவை அதென்னப்பா எம் எஸ் ப்ளூ விளக்குங்களேன். மண்டைக்குள் நண்டு பிராண்டுது...

    சரவணபவல போயிட்டு பொண்ணு பையனோட அதரகளம் பண்ணுவீங்கன்னு பார்த்தா.. பண்ண கலாட்டா எல்லாமே பாட்டி தானா? ச்ச்ச்ச்ச்சோ ச்சுவீத்து.. ஐ லவ் யுவர் பாட்டி...

    அந்தப்பையன் நல்லவேளை இன்னும் கொஞ்சம் விட்டா அழுதிருப்பான்...

    உங்க வீட்டுக்காரர் சைட்ல சிந்து பாடினதும் ரசித்தேன்.. என்னை கூட்டிட்டு போகலல்ல...

    நான் மஞ்சூரியன் மலாய் கோஃப்தா எனக்கும் வேணும் வேணும்.. அடுத்த முறை பாட்டிக்கூட மஞ்சு கூட நானும் வருவேன்...

    உபவாசம் இருப்போரெல்லாம் வீட்டில் இருக்குக... :)

    தாழ உட்காரு என்பது தாழ என்ற வார்த்தை மலையாளத்திலும் வரும்பா... சேம் பிஞ்ச்...

    ரசிக்க தந்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊரில் மணி பிளாண்ட் எல்லாம் வளரதா?
      திருமதி மஞ்சுளா கனெஷ், திருமதி மஞ்சுபாஷினி சம்பத்குமார் , பாட்டி எல்லோருமாகப் போய் கண்டிப்பாக மன்ச்சுரியன் சாப்பிட்டு விடுவோம்!ஒ.கே!
      நன்றி மஞ்சு உங்கல் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
    2. MS Blue பற்றி எழுத மறந்து விட்டேன் மஞ்சு. நீங்கள் ,பணத்துடன் சென்னை வ்ந்து குமரனில், நல்லியில் இதே கலர் புடைவை வாங்கிப் பாருங்கள். அப்பொழுது தான் புரியும்.சொன்னால் புரியாது. இதற்கு மேலும் இதைப்பற்றி எழுதி உங்கள் வீட்டிலுள்ளவரிடம் இருந்து நான் வசவு வாங்கிக் கொள்ளத் தயாராயில்லை.

      Delete
  8. ரசிக்க தந்த பகிர்வுக்கு த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஞ்சு உங்கள் த.ம. ஓட்டுக்கு!

      Delete
  9. குறும்புக்காரப் பாட்டியா இருப்பாங்க போல...! கோபி மஞ்சூரியந்தான் அந்தப் பாடு பட்டதா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

      Delete
  10. பாட்டி அடுத்த முறை சென்னை வரும்போது எங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வாருங்கள்.

    அவருடன் சேர்ந்து க்ராண்ட் ஸ்வீட்ஸ் சென்று அங்கு இருக்கும் மலாய், மஞ்சூரியா,
    மைசூர் பாகு, குலோப் ஜாமுன், ஜாங்கிரி, பாதுஷா , லட்டு, பாதாம் பால், கேசரி, பேல் பூரி, அல்வா, அத்தனையும் சாப்பிடுவோம். அங்கே சாப்பிட்டால் யாராவது திருஷ்டி போட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயப்பட்டால் பார்ஸல் செய்து வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிடலாம். சாப்பிட்டுக்கொண்டே ஊர்க்கதைகள் பல பேசலாம்.

    எத்தனை நாட்கள் தான் நாங்களும் தனிமையிலே இனிமை காண முடியும் ?
    பாட்டி மாதிரி துணை இருந்தா ஜாலியாத்தான் இருக்கும் இல்லையா.

    சுப்பு தாத்தா.
    மீனாட்சி பாட்டி.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சுப்பு ஐயா,
      பாட்டி வ்ருகிரார்களோ இல்லையோ நான் வருகிறேன். ஸ்வீட்டெல்லாம் சாப்பிட்டு
      உங்களிடமும், மீனாக்ஷி மாமியிடமும் ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு வ்ந்து விடுவேன்.
      நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete

  11. பாட்டிக்கு மன்சூரியன் சாப்பிடும் கொடுப்பினை எப்போது.? பணத் தோட்டம் பிடித்தது. நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.

      Delete
  12. தஞ்சையின் - பழைமை மாறாத மண் மணம் கமழ்கின்றது!.. பாட்டிகள் இருக்கும் வரை சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  13. ரஸித்தேன். நல்ல சந்தோஷமான பகிர்வு. பாட்டி நல்ல பார்ட்டி தான். ;)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  14. மலேயாவைப் பற்றித்தான் இன்ட்ரஸ்டிங்கா ஏதோ சொல்லப்போறீங்க என பார்த்தா, முற்றிலும் வித்யாசமா சர்ப்ரைஸ் குடுத்துட்டீங்க ராஜி மேடம்! :)

    பாட்டி சூப்பர் பாட்டி! :) மஞ்சூரியனையும், மலாய் கோஃப்தாவையும் சீக்கிரமா ருசிக்க வைங்க அவங்களையும். ;)

    //MS blueவில் அரக்கு பார்டர் போட்ட// அதென்ன ப்ளூ-ங்க அது? எனக்குப் புதுசா இருக்கே!

    அப்புறம், இது உண்மை நிகழ்வுதானே..ராசி-விஷ்ணு கதை போல அல்லவே? ஏன் கேக்கறேன்னா...உண்மைக்கதைன்னு சொன்னீங்கன்னா என் காதில புகை போகவே இல்லன்னு பொய் சொல்லிருவேன்! ;) பின்னே?? நீங்க பாட்டியான பிறகும் உங்க பாட்டி கதை சொல்றீங்களே, கொஞ்சம் பொறாமையா இருக்குல்ல? ;) நான் பிறக்கும்போதே என் பாட்டி தாத்தாக்கள் 4 பேருமே இல்லை!

    [தவறா எடுத்துக்காதீங்க, சும்மா தமாஷுக்குச் சொல்றேன்!]

    ReplyDelete
    Replies
    1. மஹி!
      ஏமாந்தீர்களா!மலேயாவெல்லாம் நான் போனதேயில்லை.
      பாட்டி சாப்பிடுகிறார்களோ இல்லையோ! நான் சென்னை போனதும் முதல் வேலையாக மன்ச்சுரியன் சாப்பிட்டேயாக வேண்டும்.
      //MS blueவில் அரக்கு பார்டர் போட்ட// அதென்ன ப்ளூ-ங்க அது?//
      மஞ்சுவிற்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். சொன்னால் புரியாது. வாங்கி உடுத்திப் பாருங்கள் , கலரின் அழகு தெரியும்.
      உங்கல் கனவர் திட்டினால் நான் பொறுப்பில்லை. விடு..... ஜூட்.........
      //பின்னே?? நீங்க பாட்டியான பிறகும் உங்க பாட்டி கதை சொல்றீங்களே, கொஞ்சம் பொறாமையா இருக்குல்ல? ;) // I leave it to the reader's guess.

      நன்றி மஹி, உங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும்.

      Delete
  15. "என் உறவினர் நிறைய பேர் படிக்கப் போகிறார்கள்.அது மட்டும் உறுதி"___ இதிலிருந்து இப்போது 'மஞ்சு'(வை) பார்க்கும் படலம் (மருமகள் தேடும்) நடந்துகொண்டிருக்கிறது சரியா?

    இந்த கலகலப்பான பதிவுக்குக் காரணமான உங்க 'பாட்டி' இன்னமும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாய் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கற்பனை கதாபாத்திரத்தை உண்மை என்கிறீர்கள் எல்லோரும். உண்மையை கற்பனை என்கிறீர்கள்.
      உண்மையை நம்பாத உலகமாக இருக்கிறதே!மஞ்சுவைப் பெண் பார்த்து நிச்சயம் செய்து என் வீட்டில் அவள் மறு மகளாக (மருமகள்) வளைய வந்து கொண்டிருக்கிறாள். குட்டி வாலாக பேரனும் உண்டு.
      ன்அன்றி சித்ரா உங்கள் வ்ருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  16. பாட்டி நல்ல பாட்டிதான், கலக்கல் பேத்திதான்.
    நகைச்சுவை அருமையாக வருகிறது உங்களுக்கு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  17. உங்கல் மெயில் படித்தேன்.
    என் கணினி கொஞ்சம் நல்மில்லாமல் இருந்தது. இப்பொழுது தான் குணமாகி இருக்கிறது.இனிமெல் தான் பொறுமையாக நீங்கல் சொன்ன மாற்றங்கலை செய்ய வேண்டும்.
    நன்றி

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்