Sunday, 6 September 2020

கம்பனும், மைனாவும்( கம்பன் என்ன சொல்கிறான்?-26)


கைகேயியை கம்பன் விவரிப்பதைப் படிக்கும் போது, " இப்படியுமா ஒரு மனைவி இருப்பாள்?" கம்பர் விடுகிற ரீலுக்கு ஒரு அளவேயில்லையோ  என்று தான் தோன்றியது எனக்கு.

ஆனால் கைகேயி செய்த காரியம் அவரை அப்படித் சொல்ல வைத்திருக்கு என்று தான் சொல்ல வேண்டும். தன் காதல் கணவன் என்றும் பார்க்கவில்லை. பதவி மோகம் அவளைப் பிடித்து ஆட்டி வைத்திருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் " ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்று.

அவள் எத்தனைக் கொடூரமானவள் என்பதைப் புரிய வைக்க , கம்பர் ஆளுகின்ற உத்தி நம்மை அசர அடிக்கிறது.

இச்சமயத்தில் ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.
பட்டிமன்றம் ஒன்றில் கேட்டது ....

சிறுவன் ரவிக்குப் பத்து வயது.

மைனா ஒன்றை ஆசை ஆசையாய் வளர்த்து வந்தான். மைனா மேல் உயிராய் இருந்தான்.

ஒரு நாள் இவன் பள்ளிக்கு சென்றிருக்கும் போது, மைனா தண்ணி தொட்டிக்குள் விழுந்து உயிரை விட்டு விட்டது.

மாலை ரவி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அவன் அம்மா தயங்கி....தயங்கி....
"ரவி.... மைனா செத்துப் போச்சுடா."சொன்னாள்.

"போனாப் போகுது. விடு" சொல்லிவிட்டு விளையாடப் போய் விட்டான்.

அவன் அம்மா" அட...என்ன இவ்வளவு சுளுவாக விட்டு விட்டான்." நினைத்துக் கொண்டாள்.

விளையாடி முடித்து விட்டு, உள்ளே வந்தவன், " அம்மா .... மைனாவுக்கு சாப்பாடு குடுத்தாச்சா.?" கேட்டான்.

"ரவி...ஏண்டா சாய்ங்காலமே சொன்னேனேடா....மைனா செத்துப் போச்சுன்னு." கலவரமாக சொல்ல
ஓவென்று அழுது புலம்பினான்..

"நான் தான் அப்பவே சொன்னேனேடா." மீண்டும் அம்மா சொல்ல..

என் காதுலே "'நைனா' செத்துப் போச்சு" அப்படின்னு தான் காதுலே விழுந்தது. 

"இப்பத் தானே புரியுது. என் மைனா தான் செத்துப் போச்சுன்னு"

சொல்லிவிட்டு மைனா கூண்டைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,"மைனா! மைனா!" என்று அழுது புலம்ப...

நகைச்சுவையாக சொல்லப்படும் கதை. 

இதைப் போல் தானே கைகேயியும் ," பரதனிடம் தசரதன் இறந்து விட்டான் " என்று சர்வ சாதரணமாக சொல்கிறாள் பாருங்கள்.

தசரதன் மாண்ட பிறகு, பரதன் அழைத்து வரப்படுகிறான். பரதனுக்கு இன்னும் அயோத்தியில் கைகேயி வீசியப் புயல் பற்றித் தெரியாது. ஆனால் என்னவோ விசித்திரமாக இருக்கு அயோத்தியில் என்பது மட்டும் புரிகிறது. 

கைகேயியைக் காண செல்கிறான்.

பார்த்ததும்," அம்மா! அப்பா எங்கேம்மா?  நலம் தானே அவர்?" கேட்கிறான்.

கைகேயி சர்வ சாதரணமாக சொல்கிறாள்," உன் அப்பா விண்ணுலகு சென்று விட்டார்...." முடிக்க வில்லை.

"என்ன?...என்ன தாயே சொல்கிறீர்கள்? " பரதன் பெருங்குரலில் கத்தி விட்டான்.

முதலில், பரதன் தன் காதில் தவறாக விழுந்து விட்டது என்று தான் நினைத்திருப்பான். அப்பா செத்துப் போய் விட்டார் என்று இப்படி சர்வ சாதரணமாகவா அம்மா சொல்வாள். இவ்வளவு சகஜமாக அம்மா பேசுகிறாள் என்றால் தவறெதுவும் நடந்திருக்காது என்று தான் நினைத்திருப்பான்.

ஆனால் அது உண்மை என்று அவள் தொடர்ந்து பேசியதிலிருந்து புரிகிறது பரதனுக்கு. 
" நீ கவலைப் படாதே" என்று பரதனை தேற்றுகிறாளாம் கைகேயி.

இதை விடவும் கொடுமைக்காரியாக  வேறு யாராலும் கைகேயியை வர்ணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.

பரதன் பதறிப் போய் விட்டான். இப்படியும் ஒரு மனைவி இருப்பாளா? தன் தாயை வைத்தக் கண் வாங்காமல் பார்க்கிறான். சிலையாகி விட்டான். தந்தையை இழந்த துயரத்தைத் தாங்க முடியவில்லை அவனால்.

பிறகு அவளைக் கண்டபடி ஏசுகிறான் பரதன். "தாயா நீ! இல்லவேயில்லை...பேய்". அதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால் கணவன் இறந்த செய்தியை இவ்வளவு சாதரணமாக "நைனா செத்துப் போச்சு" என்கிற மாதிரி கைகேயியை சொல்ல வைக்கிறார் கம்பர். 

அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போமா...

அயோத்தியா காண்டம். பள்ளிப் படைப் படலம்.2234

ஆனவன் உரைசெய, அழிவு இல் சிந்தையாள்,

தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்

தேன் அமர் தெரியலான், தேவர் கைதொழ,

வானகம் எய்தினான்; வருந்தல் நீ என்றாள்.


பரதன் வினாவஎதற்கும் கலங்காத திட சித்தம் உடைய கைகேயி,"அசுரரது வலிமை கெடும்படி சேனையை உடைய, தேன் பொருந்திய  மலர்மாலையை அணிந்த  தயரதன்(தமக்கு வாழ்வளித்தவன் வருகின்றான் என்று கருதி) தேவர்கள் கைகூப்பி வணங்க விண்ணுலகத்தை அடைந்தான். நீ துன்புறாதே.


இப்படி கைகேயினால் மட்டுமே இருக்க முடியும் என்பதே உண்மை.


கம்பர் இத்துடன் நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை. வேறொரு பாடலில் அவளுக்கு ஒரு அவார்டே கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 


அதைப் பற்றி நான் எழுதியப் பதிவு இதோ.."கம்பனும் Awardம்"


கம்பரின் பாடலை ரசித்துக் கொண்டிருங்கள். வேறொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்