Thursday, 26 June 2014

அப்படியா .......ராசி.











ராசி அவள் சித்தி வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்து  ஒரே யோசனையிலேயே இருந்தாள்.  விஷ்ணு கேட்ட  கேள்விகளுக்கு  ஒற்றை வார்த்தையில் பதில்கள் விழுந்த வண்ணம் இருந்தன.  விஷ்ணு  இப்படி ராசியைப் பார்த்ததே இல்லை.ராசியை  ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.  படபடவென்று எப்பொழுதும் பொரித்துக் கொண்டிருக்கும் ராசி அமைதியின்  வடிவமாயிருந்தாள் .

சாப்பாடு எல்லாம் முடிந்த பின் விஷ்ணு பேப்பருடன்  சேரில் அமர , ராசி டேபிளை கிளீன் செய்து விட்டு  நேராக  வந்து  சோபாவில்  அமைதியாயிருந்த  லேப்டாப்பை  ,  திறக்கப் போனாள் . ஒரு இன்ச்  தூசியை மேக்கப்  போட்டுக் கொண்டிருந்த லேப்டாப்பை துடைத்துக் கொண்டே  விஷ்ணுவிடம்," புது லேப்டாப் வாங்கிய ஜோரில் இதை மறந்து விட்டீர்களே " என்று சொல்லிக் கொண்டே சார்ஜரைத்  தேடிக் கண்டுப் பிடித்து பிளக்கை சொருகினாள் .

விஷ்ணுவிற்கு பகீர் என்றது  ." இது என்னடா? புதுத் தொல்லை ஆரம்பாமாவது போல் தெரிகிறதே. இவளுக்கு  இன்டர்நெட்  ரொம்பவும் தெரியாதே. ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை  தன மெயில்களை   செக் செய்யும் ரகமாயிற்றே . இன்று அவள் லேப்டாப்பை திறக்கும் விதமே வித்தியசமாயிருக்கிறதே. என்று நினைத்துக்  கொண்டார்.

" ராசி  உன் சித்தி   வீட்டில் எல்லோரும்  சுகம் தானே ? "

"ம்.....ம்....."

" ராஜேஷ்  , உன் சித்தி பையன்  இப்பொழுது எங்கே வேலை பார்க்கிறான்."

" தெரியாது."

"என்ன செய்து கொண்டிருக்கிறாய் ராசி?

"ஒன்றுமில்லை ராஜேஷ்  எனக்கு facebook account  ஆரம்பித்துக் கொடுத்தான். இவ்வளவு நாள் நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா? நண்பர்கள், உறவினர்கள் போட்டோக்கள் கூட பார்க்கலாமாமே " ராசி சொல்ல  விஷ்ணு அதிர்ந்தார்.

ராஜேஷிற்கு  வேறு பிழைப்பே இல்லையா? இவனை யார் இப்ப ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து   மெனக்கெட்டு இந்த வேலை செய்ய சொன்னது என்று மனதிற்குள்  மறுகினார்.

இதில் அதிர்ச்சிக்கு என்ன விஷயம் இருக்கிறது  என்று நீங்கள் நினைக்கலாம்.

அவர் நினைத்தது என்னவோ  இவள் ஆன்லைனில் எதையாவது வாங்கி அவர் க்ரெடிட் கார்டிற்கு உலை வைக்கப் போகிறாள் என்று தான். நீங்களும் அதையே தான் நினைத்திருப்பீர்கள். அது தான் இல்லை.  தொடர்ந்து வாருங்கள்......சொல்கிறேன்.

மறு நாளிலிருந்து  ராசி, தன சமையல் வேலையெல்லாம் முடித்து  விட்டு லேப்டாப்பும் கையுமாகவே இருந்தாள் . எப்பொழுதும்  FB  பக்கம் தான். ஒரே வாரத்தில்  அவள் நண்பர்கள் வட்டம்  பெரிதானது.   Friends Request அனுப்பிக் கொண்டேயிருந்தாள் .  அவளுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால்  உடனே ராஜேஷிற்குப் போன் பறக்கும். பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு," ராஜேஷ்  உனக்கு என்ன பாவம்  செய்தேன் ? ஏண்டா  இப்படி பழி வாங்குகிறாய்? " என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.

மறு நாள் ஆபிசிலிருந்து வந்ததும் காபி கொடுத்து விட்டு விஷ்ணுவைக் கூப்பிட்டு தன் FaceBook  பக்கத்தை  காட்ட விஷ்ணு அதிர்ந்து போய் விட்டார்..... ஒரே வாரத்தில்............................................ இத்தனை நண்பர்களா?  யார் அதெல்லாம் என்று பார்த்தால் முக்கால்வாசி பேருக்கு மேல் யாருமே தெரியவில்லை. சுமித், கீத், பிரியா, கல்யாணி, கௌதமி., வசந்த் , ப்ரீதி ......என்று நீண்டு கொண்டே போனது லிஸ்ட் . மிக்சி, கிரைண்டர் பேரில் எல்லாம்  நண்பர்கள். FB தொடர்பினால் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் கதையெல்லாம் இவளுக்குத் தெரியாதே. இவளுக்கு சொன்னாலும்  புரியாதே.. நம் மேலேயே எரிந்து விழுவாளே என்று பதைபதைத்தார் விஷ்ணு.

" ஆமாம் இவர்களெல்லாம் யார்? " விஷ்ணு கேட்க.....

" இவர்களா  ...Friends..."  பட்டென்று ப தில் வந்தது  ராசியிடமிருந்து.

"எல்லோருமா? " விஷ்ணு மீண்டும் கேட்க....

" ஆமாம்..." Friends ", " Friends of friends ", " friends of friends of friends "  என்று அளந்து கொண்டே போனாள்  ராசி.

இதில் எத்தனை fakeஆக இருக்கும் என்று இவளுக்கு சொன்னால் புரிந்தும் தொலையாதே.. பெரிய வம்பு ஒன்றை விலைக்கு வாங்கிக் கொள்கிறாள் என்று மட்டும் உரைத்தது விஷ்ணுவிற்கு.

ஒரு மாதம் எந்த வில்லங்கமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது  . விஷ்ணுவும் இந்த FB பிரச்சினையை மறந்து கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

 ராசிக்குமே Fb  மோகம் ,முன்பு போல் பெரிய அளவில் இல்லை .
அதற்காக  ஒன்றுமே நடக்கவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

விஷ்ணு அவ்வப்பொழுது  ராசியின் முகனூல் பக்கம் எட்டிப் பார்த்துக் கொள்ளத் தவறவில்லை. எங்கேயாவது தன்னை வம்பில் மாட்டி விடுவாளோ என்கிற அச்சம் அவர்  உள்  மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது.

என்ன ஒரு தீர்க்ககதரிசி  விஷ்ணு.!

ஒரு வாரத்திற்குப் பிறகு ராசியின் Fb பக்கம் சென்ற விஷ்ணுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. குரு பெயர்ச்சி  அவர் ராசிக்கு சரியில்லை  என்று தெரியும் அதற்காக இவ்வளவு மோசமாகவா இருக்கும்.....

என்ன தான் நடத்திருக்கும் என்கிறீர்களா.

அவள்  friends of friends  சுமீத் அவருடைய  உயரதிகாரியைப் பற்றி படு கேவலமாக எழுதி, கண்ணா பின்னாவென்று திட்டி எழுதியிருந்தார். Tom and Jerryஇல் வரும்  Jerryடம் Tom சரணாகதியடையும் சீன் லிங்கைப் போட்டு, " எனக்கும்  சான்ஸ் கிடைத்தால் என் பாஸையும் இப்படி என் காலடியில் விழ வைக்க வேண்டும்.அந்த நாள் வெகு தொலைவில் இல்லை " என்று கறுவியிருந்தார்.

அதற்கு  ஏகப்பட்ட  likes. அதில் ஒன்று  நம் ராசியினுடையதும் தான் . இதிலென்ன  பிரச்சினை.? தோன்றலாம் உங்களுக்கு.
 இதனால் ஒரு பிரச்சினையும் விஷ்ணுவிற்கு இல்லை.
அதற்குக் கீழே வரும் கமெண்ட்ஸ் தான்  பிரச்சினையே!

ஏகப்பட்ட கமெண்ட்ஸ் . ராசியும் கமெண்ட் எழுதியிருந்தாள் .
 என்ன எழுதியிருந்தாள்  தெரியுமா?

"என் கணவரின் பாஸ் கூட  அவரைப் பாடாய்  படுத்துகிறார். லீவே கொடுப்பதில்லை. வீட்டிற்கு எவ்வளவு நேரம் கழித்து வருகிறார் தெரியுமா?  அவ்வளவு அதிக வேலை தருகிறார்.  " இதோடு ராசி நிறுத்தியிருந்தால் கூட தேவலை.
மேலும் தொடர்ந்திருந்தாள் , "    என் பாஸ் என்ன ஆட்டம் ஆடுகிறான் தெரியமா? பூனை மாதிரி தன்னை நினைத்துக் கொண்டு குதிக்கிறான்.  கிழட்டுப் பூனை .! ஒரு நாள் என் காலில் வந்து விழ வைக்கிறேனா  இல்லையா பார்? "  என்று விஷ்ணு சொன்னதாக  கமெண்ட் அடித்திருந்தாள் .

படித்தபின் கோபம் வராதா என்ன விஷ்ணுவிற்கு. கோபம் தலைக்கேறியது .

" நான் எப்ப இப்படியெல்லாம்  கந்தசாமியைப்பற்றி சொன்னேன். (கந்தசாமி அவர் உயரதிகாரி.)எதற்கு  இந்த வேலை செய்திருக்கிறாய். ராஜேஷை  சொல்ல வேண்டும் சும்மா இல்லாமல் FB account  ஆரம்பித்துக் கொடுத்து விட்டு ஆஸ்திரேலியாவிற்குப்  பறந்து விட்டான். "

அவனை  ஆள் வைத்து அடித்தால் கூட பாதகமில்லை என்று நினைத்துக் கொண்டார்.

தலையில் அடித்துக் கொண்டு முகமெல்லாம் ஜிவு ஜிவு என்று  சிவக்க
" நீ கமெண்ட் எழுது , என்னவோ செய்து தொலை.. என் பேரை இதில் எதற்கு இழுக்கிறாய்."
என்று கோபத்தில் கத்த  ராசி நிஜமாகவே பயந்து தான் போனாள் .

" பாருங்கள் இப்படியெல்லாம்  எழுதப்போகத் தானே இவ்வளவு Likes வந்திருக்கு." . மீண்டும்  லேடாப்பை அவர் முன் நீட்ட  வெறுப்புடன் ராசியைப் பார்த்துக் கொண்டே , கண்களை லேப்டாப்பின் மேல் ஓடவிட்டார்.

இப்பொழுது அவருக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது.
ராசியின் கமெண்ட்டிற்குக் கீழே இருந்த கமெண்ட் தான் காரணம்.

அந்தக் கமெண்ட் .." அப்படியா.........." என்கிற ஒற்றை வார்த்தை தான். ஆனால் அதை எழுதியிருந்தது MaliniKandasamy . சந்தேகத்துடன், கைகள் நடுங்க  விஷ்ணு யார் இந்த மாலினி  என்று பார்க்கப் போக ..........சந்தேகமேயில்லை .... 

உங்களுக்கும் புரிந்திருக்குமே  மாலினி யாரென்று.

விஷ்ணு  லேப்டாப்பையே பார்த்தவாறு அசையாமல்  அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.

ராசியோ பேயறைந்தாற்போல் இருக்கிறாள்.  அவள் கண் முன்னால்  தான் செய்த தவறுப்  புரிய , உலகமே தட்டாமாலையாக சுற்றியது.



சரி .....வந்தது வந்தீர்கள் விஷ்ணுவிற்கு ஒரு நல்ல யோசனை சொல்லி விட்டுப் போங்களேன்.

image courtesy---google.

Thursday, 19 June 2014

உதவி.....உதவி.......உதவி........

நான்கைந்து  நாட்களாக  பெரும்பாலும் கணினி பக்கமே வரமுடியாத சூழ்நிலை. நேற்று  தான்  கணினியோடு  சற்றே  அளவளாவ  முடிந்தது. முகநூல், மின்னஞ்சல், என்று வரிசையாக  பார்த்து முடித்து  விட்டு கடைசியாக பதிவுலகம் வந்தேன். பதிவுலகம் பக்கம் முதலில் வந்தால் நேரமாகுமே என்று தான்  கடைசியாக பதிவுலக உலாவை வைத்துக் கொண்டேன்.

பதிவுலகம் வந்து என் டேஷ் போர்டை  செக் செய்து விட்டு  , சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்கலாம் என்று " Reading List " என்கிற தலைப்பின் கீழே  பார்த்தால்  ஒரே ஒரு  பதிவு மட்டுமே தென்படுகிறது.  இது என்ன கலாட்டா? யாருமே  பதிவுகள் எழுதவில்லையா? மொத்தப் பதிவுலகமே  விடுமுறையில் உள்ளதா? என்று நான் தொடரும் பதிவர்கள் லிஸ்டைப் பார்த்தால் அது சரியாக வருகிறது.   ஒவ்வொரு பதிவராக க்ளிக் செய்து பார்த்தால்.....  சிலர் இன்று கூட பதிவு எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் என் டேஷ்போர்டில் தான் தெரியவில்லை. என்ன தவறு செய்கிறேன் என்று புரியவில்லை. Bloggerற்கு என் மேல் என்ன கோபம் என்று புரியவில்லை.

டேஷ்போர்டில் பார்த்தால் லேட்டஸ்டாக யார் எழுதுகிறார்களோ அவர்கள் பதிவு மட்டும் தெரிகிறது. அவர்களுக்குப் பிறகு  வேறு யாராவது பதிவு எழுதினால்  அடுத்தவரின் பதிவு தெரியும். இருந்தது மறைந்து விடும்.ஆக ஒன்றே ஒன்று மட்டுமே தெரிகிறது.

நான் தொடரும் எண்ணற்ற பதிவர்களின்  updates ஐ  நான் பார்ப்பது எவ்வாறு. ஒவ்வொரு பதிவரின் பெயரையும் க்ளிக் செய்து தான் படிக்க வேண்டுமா? முடிகிற காரியமா? எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சினையா? இல்லை  வேறு யாருக்கும் இது இருக்கிறதா? கூகுளின்  உதவியையும் நாடிவிட்டேன்.
மனம் இறங்கவில்லை கூகுளும். செய்வதறியாது திகைக்கிறேன்.

settings  பல் சக்கரத்தையும் ஒரு வழி செய்து விட்டேன். எந்தப் பல் சக்கரத்தையும் விடவில்லை . இன்று முழுவதும் blogger உடன்  தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றி பெறுவது எப்போது என்று மட்டும் தெரியவில்லை.
 





மேலே இருக்கும் screen shot  பார்த்தால் உங்களுக்கே புரியும். அதில் இருக்கும் view more  என்பதையும் க்ளிக்  செய்து விட்டேன். பலன் பூஜ்யம் தான்.

யாராவது உதவுவீர்களா...............................................................?


Saturday, 7 June 2014

அது ஜுரமல்ல வரம்











அன்று மாலை ஐந்து மணியிருக்கும்.  டாக்டரைப் பார்க்க உட்கார்ந்திருந்தேன். கூட்டமான  கூட்டம் . டாக்டரின் காரியதரிசி கொஞ்சம் சிடுசிடு என்று இருப்பது போல் தெரிந்தது. இல்லை எனக்குத் தான் அப்படித் தோன்றியதோ! அவ்வப்பொழுது தன்  குதிரைவால் கொண்டையை சரி செய்து கொண்டே போனில் அலுத்துக் கொண்டே பதில் சொல்லிக்  கொண்டே இருந்தார்.

எங்கள் முறை வருவதற்கு இன்னும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று புரிந்தது. நான் எதற்கு டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்லவில்லையே! என் நெருங்கிய உறவினருக்கு உடம்பு சுகமில்லாததால்  எங்கள் குடும்ப டாக்டரை பார்க்க வந்திருந்தேன்.  இன்று இரண்டாம் முறையாக வந்திருக்கிறேன். நேற்று வந்திருந்தேன்.

உறவினருக்கு ஜுரம்.  அவ்வளவு தானே  . அதற்கா இந்த அலட்டல் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அவருக்கு ஒரு வாரமாகவே ஜுரம். முதலில் " க்ரோசின் " முழுங்கியிருக்கிறார்.  இரண்டு நாட்களுக்கு . அதற்கு அடங்கவில்லை. பிறகு ஒரு நாள் வேறு பெயரில் இருக்கும் ஜூர மாத்திரை முழுங்கியிருக்கிறார். அதற்கும் " பெப்பே " காட்டி விட்டது ஜுரம்.அதற்குப் பிறகு  என்னிடம் போன் செய்து கேட்க, நான் அவரை எங்கள் டாக்டரிடம் நேற்று அழைத்து வந்திருந்தேன்.

"எவ்வளவு  நாட்களாக ஜுரம்?"  டாக்டர் கேட்க

" நான்கு நாட்களாக" தயங்கியபடியே  உறவினருக்குப் பதிலாக நான்  சொன்னேன்.

"மாத்திரை எதுவும் சாப்ப்பிட்டீர்களா?" டாக்டர் கேட்டார்.

சாப்பிட்ட மாத்திரைகளை சொல்லவும் டாக்டருக்கு சரியான கோபம் வந்தது.

"நான்கைந்து நாட்களாக  இருக்கும் ஜுரத்திற்கு  நீங்களாகவே மாத்திரை சாப்பிட்டு வந்திருக்கிறீர்கள்.  திரும்பவும் இன்னொரு பெயரில் உலா வரும் ஜூர மாத்திரை ஏதாவது முழுங்கி வைக்க வேண்டியது தானே!" என்று டாக்டர் கோபப்பட..,

உறவினருக்கோ ஜூர வேகத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் "திரு திரு "என்று முழிக்க ,

இத்தனை நாட்களாக ஜுரம் இருந்து வருவதால் முதலில் ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து விடுவோம் என்று  டாக்டர் எழுதிக் கொடுக்க  அது முடித்து ரிபோர்ட்டுடன் இன்று வந்திருந்தோம்.(ஜுரம் குறைவதற்கும் மாத்திரை கொடுத்திருந்தார்)

என் உறவினரைப் பார்த்தேன். திரும்பவும் நல்ல ஜுரம் போலிருக்கிறது. தலையை அப்படியே சேரில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

"இந்த ஜுரம் விட்டே தொலையாதோ ?" உறவினர் ஈனஸ்வரத்தில்  புலம்பினார்.தொட்டுப்பார்த்தால் கொதிக்கிறது உடம்பு. ஒரு டம்ளர் தண்ணீர் அவர் கையில் கொடுத்தால்  கொதிக்க ஆரம்பித்து விடும் போலிருந்தது உடம்பு சூடு .

நர்ஸ் தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்ததில் 103 இல் நின்றது மெர்க்குரி.அதற்குள் டாக்டரின் பெல் அடிக்க நாங்களும் உள்ளே நுழைந்தோம்.

டாக்டர் "எப்படியிருக்கு இப்ப ?"என்று கேட்டுக்கொண்டே பரிசோதனை ரிபோர்ட்டை  பார்த்துக் கொண்டேயிருந்தார். நான் அவர் முக பாவனைகளை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

உறவினரோ   டாக்டரிடம் மெதுவாக கெஞ்சவே  ஆரம்பித்தார். எப்படியாவது இந்த ஜுரத்திற்கு ஏதாவது இன்ஜெக்ஷன் போட்டுக் குறையுங்களேன். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே ,. இப்படி என்னை படுக்க வைத்து விட்டதே இந்த பாழாய் போன ஜுரம்  என்று புலம்பவே ஆரம்பித்து விட்டார்.

டாக்டர் ஸ்டெத்தை எடுத்துக் காதில் மாட்டிக் கொண்டே , " ஜுரத்தை இப்படித் திட்டுகிறீர்களே! எய்தவனிருக்க அம்பை நோவது  பாவமில்லையா? பாவம் ஜுரம் என்ன செய்தது. ஜுரம் வந்ததினால் தான் உங்களுக்கு இருக்கும் நோய்  தெரிய வந்திருக்கிறது . urinary infection இனால் தான் உங்களுக்கு ஜுரம் வந்திருக்கிறது. இந்த ஜுரம் மட்டும் இல்லையென்றால் infection கவனிக்கப்படாமல் உங்கள் சிறு நீரகத்தைக் கூட  சென்றடையும் வாய்ப்பிருக்கிறது. அந்தப் பெரிய  ஆபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிய ஜுரத்தை இப்படித் திட்டுகிறீர்களே ! நீங்கள் மட்டுமில்லை எல்லோருமே இப்படித்தான்.  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜுரத்திற்கு  மனித குலமே நன்றிக் கடன் பட்டிருக்கிறது " என்று பெரிய லெக்சர் அடித்தார் டாக்டர்.

பிறகு  அதற்கான மருந்தையும் எழுதிக் கொடுத்தார். இரண்டு வேளை மருந்து சாப்பிட்டதில் நல்ல  முன்னேற்றம் தெரிய, இரண்டு நாளில் நன்றாகவே குணமடைந்து விட்டார். மீண்டும், அவர் விரைவிலேயே சகஜ நிலைக்குத் திரும்பினார். எங்கள் எல்லோருக்கும் பெரிய நிம்மதியானது.

டாக்டர் சொன்ன பிறகு  ,ஜுரம் ஒரு நோயல்ல நோய்க்கான அறிகுறியே  என்பது நன்கு விளங்கியது.

 மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் " அது  ஜுரமல்ல ,வரம்! "

image courtesy--google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்