Sunday, 31 August 2014

ராசிக்கு வந்த சோதனை












ராசி  காலை  எழுந்ததும் அன்று ஒரே பரபரப்பாக இருந்தாள் . காலை எழுந்ததும்  தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தாள் . பக்கத்து வீட்டிலிருந்து மாமி ," ராசி......என்ன ஆச்சு ருக்குவிற்கு ? இன்றைக்கு . வரவில்லையா? " என்று கேட்கவும், சோகமாக " இல்லை மாமி :" என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள் .

உள்ளே நுழைந்ததும் விஷ்ணு எதிர்பட்டார். " என்ன ஆச்சு ? நீ கோலம் போடுகிறாய்? ருக்கு  வரவில்லையா ? "  என்று கேட்கவும்  இ....ல்....லை......என்று சலிப்பாகப் பதில் வந்தது ராசியிடமிருந்து .

" அதற்கு ஏன்  இப்படி சலித்துக் கொள்கிறாய். ? ஒரு நாள் தானே.....நாளை வந்து விடுவாள். முடிந்த வேலைகளை செய். இல்லையெனில் விட்டு விடு. நாளை அவளே வந்து செய்யட்டும் ." என்று விஷ்ணு சொல்லவும்,

" இல்லை... இனி அவள் வரவே மாட்டாள் " என்று ராசி சொல்லவும் திடுக் என்று தூக்கி வாரிப் போட்டது விஷ்ணுவிற்கு.

" நேற்றுக் கூட  நல்லாத் தானே இருந்தாள் .....  வீடு பெருக்கினாளே. என்ன உடம்பு வந்தது அவளுக்கு ? " என்று விஷ்ணு கேட்கவும் .

ராசி அவரைப் பார்த்து, " அவள்  இப்பவும் சௌக்கியமாகத் தான் இருக்கிறாள்.
நம் வீட்டிற்குத் தான் இனிமேல் வரமாட்டாள் என்று சொன்னேன்." என்று எரிந்து விழுந்தாள்.

" ஏன் ?  அவளுக்கு புது டிகாக்ஷனில் காபிப் போட்டுக் கொடுப்பதென்ன, இருவருமாக டிவி சீரியல் பற்றிய சந்தேகங்களை  தீர்த்துக் கொள்வதென்ன? கடைக்கு அவளைத் துணைக்கு  அழைத்துப் போவதென்ன .... என்று ஓருயிரும் ஈருடலும் போலல்லவா  இருந்தீர்கள். என்ன சண்டை உங்களுக்குள் ? " என்று கேட்கவும்  பயங்கரக் கோபம் ராசிக்கு.

" என்னைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறதா உங்களுக்கு.....'சிங்க்' பாத்திரமாகப்  பொங்கி வழிகிறது . அத்தனைப் பாத்திரங்களையும் தேய்க்க வேண்டும். அது கூட நின்ற படியே செய்து விடலாம். ஆனால் வீடு பெருக்கித் துடைப்பது என்பது.....ஹப்பா....உதவி செய்யா விட்டாலும் இந்தக் கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை."என்று ராசி கோபப் பார்வை வீசவும் ...விஷ்ணு  அவளை சமாதானப் படுத்த முயன்றார்.

" சரி, இவள் போனால் என்ன?  வேறு யாரையாவது பிடி. பக்கத்து பிளாட்டிற்கு வருபவளைக் கேட்டுப் பார்ப்பது தானே. "

"அவள் வர மாட்டாளாம்."

" ஏன்? " விஷ்ணு ஆச்சர்யமாய் பார்க்கவும் ,

" என் கணவன் என் தோழன்" பார்ப்பியாஅப்படின்னு என்னை அவள் கேட்டதற்கு , நான் பார்ப்பதில்லை என்று சொன்னதும். அப்படின்னா என்னால் வேலைப் பார்க்க முடியாது என்று பட்டென்று சொல்லி விட்டாள் ," என்று ராசி சொல்லவும்.....

இப்படியெல்லாம் கூடவா கண்டிஷன் போடுவார்கள். நான் கூட ஆபிசில்  எனக்கு  ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்தால் தான் வேலை பார்க்க வரும் என்று சொல்லலாமோ ... நினைத்துக் கொண்டே ஆபீஸ்  போனார்.

அன்று மாலை வரும் போதே ராசியைப் பார்க்க பாவமாயிருந்தது.  " வேறு ஒருவரும் உதவிக்குக் கிடைக்கவில்லையா " என்று கேட்டுக் கொண்டே காபிக் குடித்தார்.

" எதிர்  வீட்டிலிருப்பவர்களுக்கு வேலை செய்யும் சாந்தி, நாளைக் காலை ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதாக சொல்லியிருக்கிறாள் ." என்று ராசி நம்பிக்கையுடன் சொல்வதைப் பார்த்த விஷ்ணுவிற்கு,  நாளையாவது  ராசிக்கு உதவி  கிடைக்கட்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டார்.

மறு நாள் காலை  விஷ்ணு, காபிக் குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது ,

"டிங் டாங் " வாசல் மணி இசைத்தது.

விஷ்ணு தான் போய் கதவைத் திறந்தார். இரண்டு பெண்மணிகள் நின்றிருந்தார்கள்.

" அம்மா இல்லையா ? " என்றார்கள்.

" ராசி...... " குரல் கொடுத்தார் விஷ்ணு.
"யாரோ உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள் " சொல்லி விட்டு ஹாலில் உடகார்ந்து,  பேப்பரை விட்ட இடத்திலிருந்து  தொடர்ந்தார்.

ராசி வந்தவர்களுடன் உரையாடுவது காதில்விழுந்தது.

"அம்மா.... நீங்கள் வேலைக்கு  ஆள் வேணும் என்று கேட்டிருந்தீர்களே. இவங்க பேர்  கவிதா . இனிமே நீங்க  பேசிக்குங்க அம்மா. நான் போறேன் ."  என்று சொல்லி விட்டு நகரவும்.
ராசி எப்படி இன்டர்வியு  செய்கிறாள் என்பதை ஆர்வத்துடன் கவனிக்கலானார் விஷ்ணு.

" கவிதா தானே உன் பேரு ....நல்லாருக்கு பேரு " ஐஸ் வைக்க ஆரம்பித்தாள்  ராசி.
அதற்குள் கவிதா பேச ஆரம்பித்தாள் .

"நீங்கள் எத்தனை பேர் வீட்டில் ?"  சென்சஸ் எடுப்பவர் மாதிரி கேட்டாள்  கவிதா.

"இரண்டு பேர் தான் கவிதா " பதில் சொன்னாள்  ராசி.

" டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்  எல்லாம் இருக்கா? " அடுத்தக் கேள்வி வந்து விழுந்தது.

" இருக்கே. நான் சீரியல் எல்லாம் கூட பார்ப்பேன்." என்று முந்திக் கொண்டாள்  ராசி.

" பாத்திரம் எவ்வளவு  போடுவீர்கள்? "

" ஜாஸ்தி இல்லை "

" காலையில் என்ன டிபன் தினமும். ? "

" இட்லி, தோசை  பூரி,......" இழுத்தாள்  ராசி.

அடுத்தக் கேள்வி....
" கெசட்  உண்டா ? "

புரியவில்லை ராசிக்கு. விஷ்ணுவிற்கும் தான்.

என்ன கேசட் ? ஒருவேளை டிவிடி எல்லாம் போட்டுக் காட்ட வேண்டுமோ. என்று நினைத்துக் கொண்டார் விஷ்ணு.

" அதாம்மா   விருந்தாளிகள் அதிகம் வருவார்களா ? ஓ ...கெஸ்ட்  என்பதைத் தான் அப்படி கேட்டிருக்கிறாள்  என்று நினைத்துக் கொண்டாள் ராசி.

"அதிகம் எல்லாமில்லை. எப்பவாவது தான்  வருவார்கள் " சமாளித்தாள் ராசி.

அப்பவே விஷ்ணுவிற்குப் புரிந்துப்  போனது ," இவள்  சரிப்பட மாட்டாள் " என்று. அவள் சம்பள விவர எல்லையைத் தொடுவதற்குள் .....

கேட் சத்தம் பெரிசாக  கேட்டது. வந்தது  எங்கள் வீட்டுப் பழைய உதவிப்பெண்மணி   ருக்கு ......

இதென்ன இவள் இத்தனை ஆக்ரோஷமாக வருகிறாள் என்று ஜன்னல் வழியே பார்த்தவாறு இருந்தார் விஷ்ணு.

வந்தவள் முதலில் கவிதாவைப் பார்த்துக் கத்தினாள் ," த.....எந்திரி. நான் வேலை செய்ற ஊட்டுலே உனக்கென்ன   வேலை. ஒரு வாரம் அவசரமாய் ஊருக்குப் போனால்  நீ உடனே என் வயிக்கு வருவியா. உன்னை .,....என்ன செய்யறேன் பார். வூட்டாண்ட  வந்து உன்னை கவனிச்சிக்குறேன்....." என்று மிரட்டவும். பதிலுக்கு கவிதா ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும்,

" வாயை மூடிக்கினு, கம்முனு போ .." என்று மிரட்டி அனுப்பி வைத்தாள் ருக்கு.

இப்ப ராசியைப் பார்த்து, "  ஒரு வாரம் லீவு போட்டால் உடனே ஆளை மாத்திடுவாயா? அவசரமா ஊருக்குப் போக வேண்டியிருந்தது. மூத்தாருக்கு கை கால் உயிந்துருச்சுன்னு  ஓரகத்தி  போன்ல ஓன்னு அய்வுது . தாங்க முடியாம போய் கண்டுகினு வந்தேன்.. அதுக்குள்ள.....இன்னா கலாட்டா பண்ணிகினே நீய .  அய்ய......                இன்னா ? " என்றதும் தான் ராசிக்கு மூச்சே  வந்தது.

"ஒரு வாரம் முன்னாடி நீ தானே கோச்சுகிட்டு  நான் வந்தேன்னா என் பேரு ருக்கு இல்லன்னு  சொல்லிட்டுப் போனே. அதுக்குப் பிறகு வரவேயில்லையே . அதனால் தான் ..."தடுமாறினாள் ராசி.

"அன்னைக்கு இன்னாவோ கோபம். அதுக்காவ  வராமலே நான் இருந்தா
உட்டுடுவியா. வூட்டாண்ட வந்து என் தல மேல நாலுப் போட்டு என்னை நீ இஸ்துகினு வரதாவல ....இன்னா ஐயா நான் சொல்றது " என்று விஷ்னுவைப் பார்த்துக் கேட்க.....

விஷ்ணுவோ , " நீயாச்சு....... உன் அம்மாவாச்சு " என்று பிரச்சினை தீர்ந்த 
நிம்மதியில்  குளிக்கக் கிளம்பினார்.

ராசிக்கும், விஷ்ணுவிற்கும் ஒன்று நன்றாகப் புரிந்தது. உதவிக்கு ஆள் கிடைப்பதுக் கஷ்டம் என்று . நல்ல ஆட்களாக கிடைப்பது  அதை விடவும் கஷ்டம்.

மீண்டும் பாசமான ருக்கு வந்தாளோ  பிழைத்தாள் ராசி ........கவிதா மாதிரி ஆட்களை உதவிக்கு வைத்துக் கொண்டால் ., ராசி தான் கவிதாவிற்கு உதவ வேண்டியிருந்திருக்கும்.

image courtesy---google.

Thursday, 28 August 2014

நான் செய்த கச்சேரி !









தலைப்பைப் பார்த்து  யாரும் பயந்து விட வேண்டாம் . பாட்டுக்கும்  எனக்கும்  கொஞ்சம் தூரம். (கொஞ்சம் தான் )அதனால் நான்  பாடவில்லை. பாடவும் மாட்டேன்.
 இது வேறு....தொடர்ந்து படியுங்கள் .......

 பதிவுகள் எழுதத் தொடங்கிய போது , எனக்கு என் தளத்தை  சுற்றி வரவே நேரம் போதவில்லை. எழுதினேனோ  இல்லையோ, அலங்காரத்திற்கு  மிகவும் முக்கியத்துவம் கொடுத்தேன். அதான்......ஒவ்வொரு காட்ஜெட்டை சேர்ப்பதும் , நீக்குவதுமாக இருந்தேன்.  சில நாட்களுக்கு   என் தளத்தையே  சுற்றி வந்தவள் பின்னர் பலருடைய  தளங்களுக்கு  சென்று வர ஆரம்பித்தேன்.

அப்பொழுது  தான் அறிமுகமானது வலைச்சரம்.  வலைச்சரத்தில்  முதலில் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஒரு சில வார்த்தைகள்  மட்டும் வேறு கலரில் இருக்கிறதே என்கிற ஆச்சர்யம் தான் முதலில் வந்தது. பிறகு சில நாட்கள் கழித்துத தான் புரிந்தது அது அந்தந்த தளங்களுக்கு  செல்லும் லிங்க் என்று .

 
தினம் காலைக் காப்பி குடித்துக் கொண்டே லேப்டாப்பைத் திறந்து  யாராவது எனக்குப் பின்னூட்டம் எழுதியிருக்கிறார்களா  என்று பார்த்துக் கொண்டிருப்பேன்.( நான் பதிவு எழுதினாலும், எழுதாவிட்டாலும் ) நீங்கள் சிரிப்பது எனக்குத் தெரிகிறது.

 அட....இரண்டு பின்னூட்டம் காத்துக் கொண்டிருகிறதே! (நான் ஒன்றுமே எழுதாவிட்டாலும்  எனக்குப் பின்னூட்டம் இடுகிறார்களே  என்று ஒரே பெருமை தான்.). முதலில் பின்னூட்டத்தைப் படி  என்று மனசாட்சி சொல்ல யார் கருத்து என்று படித்தால் ...... திரு. ரூபன், திரு, திண்டுக்கல் தனபாலன்  இருவரும் என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருந்ததாக  சொல்லியிருந்தார்கள் .

அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்று வலைச்சரத்தில் நான்.... என்று ஒரு பதிவே போட்டு விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதற்குப் பிறகு பலமுறை அறிமுகபடுத்தப்பட்டேன்.

ஒருவருடம் உருண்டோடியது. ஒரு நாள் திரு. சீனா ஐயா  என்னை மெயிலில் தொடர்பு கொண்டு  ஒரு வாரத்திற்கு ஆசிரியர் பணி  ஏற்க  சொன்னபோது ,  தயக்கமாயிருக்க  பிறகு பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.

மீண்டும் என்னை ஒரு சில வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட போது ,
மறுக்க முடியவில்லை. என்னை நம்பி  அவரே வலிச்சரத்தைக்  கொடுக்கும் போது  நமக்கென்ன வந்தது என்று என் அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்து விட்டேன்.

அதன் இணைப்புகள் இதோ.
  1. அரட்டையின் அறிமுகம். 
  2. அரட்டைக் கச்சேரி --2
  3. அரட்டைக் கச்சேரி --3
  4. அரட்டைக் கச்சேரி--4 
  5. அரட்டைக் கச்சேரி--5
  6. அரட்டைக்கச்சேரி --6
  7. அரட்டைக் கச்சேரி  நிறைவு

எல்லாம் சரி. நீ எழுதியது இருக்கட்டும் . யார் படித்தார்கள் என்று கேட்காதீர்கள். விதி யாரை விட்டது. வலைச்சர வாசகர்கள் அவ்வளவு பேரும் படித்திருக்கிறார்களே !

படித்து விட்டார்களே எதற்கு இந்தப் பதிவு  என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஒரு வேளை.. ....நீங்கள் படிக்காமல்  இருந்தால்........ விட்டு விடுவேனா  உங்களை.
உங்கள்  பார்வைக்குத்  தான் இந்தப் பதிவு.  நீங்கள் படிக்காமல் தப்பித்து விடக் கூடாதல்லவா? அந்த நல்ல எண்ணம் தான். 






Saturday, 23 August 2014

Happy Birthday Chennai!

 


சிங்காரச் சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை போல் ஒரு சொர்க்க பூமி எங்குமில்லை என்றே சொல்வேன். தென்னகத்தின்  நுழைவாயில்  மட்டுமல்ல  சென்னை . வந்தோரை வாழவைக்கும் நகரமுமாகும் சென்னை. 375வது பிறந்த நாளை சென்னை கொண்டாடும் இவ்வேளையில்  என் மனம்  நான் சென்னையை விட்டுப் பிரிந்திருந்த  நாட்களுக்குப் பறந்து போனது.

திருமணத்திற்குப் பிறகு  சென்னையை விட்டு  வேறு மாநிலங்களுக்கு சென்ற போது நான் சென்னையை மிகவும் மிஸ் செய்தேன் என்று தான் சொல்ல வேண்டும். சென்னையை விட்டு முதன் முதலாக நான் சென்று  வாழத் தொடங்கிய இடம் டெல்லி. டெல்லி மாநகரம்  எனக்கு ஒட்டவே இல்லை. குளிரும், பாஷையும் என்னை அன்னியப்படுத்தின என்றே சொல்ல வேண்டும். எங்காவது பொட்டு வைத்த பெண்கள் முகம் தெரியாதா ( அப்பொழுதெல்லாம் வட இந்தியப் பெண்கள்  வகிட்டில்  சிந்தூர்  மட்டுமே இட்டுக் கொள்வார்கள்.)என்று  அலை பாய்வேன்.  யாராவது தமிழில் பேசினால்  உடனே அடுத்த கேள்வி ," நீங்கள்  சென்னையா? " என்பது தான்.

டெல்லியிலிருந்து  வர வேண்டுமென்றால் பெரும்பாலும ஜிடி எக்ச்பிரச்சில் தான் வருவோம். இரண்டு இரவுகள்  ரயிலில் கழித்த பிறகே அடுத்த நாள் காலை சென்னை வந்து சேருவோம். நாங்கள் சென்னை வந்து சேரும் மூன்றாவது நாள்  அதிகாலை  ஐந்து மணியிலிருந்தே தேவுடு காக்க ஆரம்பித்து விடுவேன். கம்பார்ட்மெண்டில் அனைவரும் உறக்கத்திலிருக்க  நான் மட்டும் ஸ்டேஷன் ஸ்டேஷனாக பார்த்துக் கொண்டே.......

மீஞ்சுரில்  ரயில் நிற்கும் போது ," பூ ....பூ ..." என்று பூ விற்பவர்களும்,  "காபி காபி " என்று காபி விற்பவர்களும்  தமிழில் விற்பது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும். இது தமிழின் மேலுள்ள காதல் என்றுத் தோன்றலாம்.  அது சென்னை மேலிருக்கும்  காதல்( சென்னை அருகில் வந்து விட்டோமே ) என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம். வட இந்தியாவில் இருந்த போதெல்லாம் யாராவது  தமிழில் பேசினால், யோசிக்காமல் அவர்களை சென்னை வாசி என்றே நினைத்து விடுவேன்..

வெளி மாநிலங்களில் எந்தப் பண்டிகை கொண்டாடினாலும்., அன்றைய தினத்தில் சென்னை எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை  செய்து பார்க்காமல் இருக்க முடியாது.
வினாயக் சதுர்த்தசியன்று, சீர்காழி கோவிந்தராஜனின் ," விநாயகனே , வினை தீர்ப்பவனே"  என்கிற குரல் சென்னையில் முக்கிற்கு முக்கு அமர்ந்து அருள் பாலிக்கும் பிள்ளையார்  கோவில்களில்  ஒலிப்பதை  கற்பனையில் கேட்டு மகிழ்வேன்.

நவராத்திரி  வந்தால்  பெண்கள்  அழகழகாக அலங்கரித்துக் கொண்டு எல்லோர் வீடுகளிற்கும் விஜயம் செய்து கொண்டு ,  வெற்றிலைப் பாக்கு  வாங்கும் அழகு  வேறு எங்கு காணக் கிடைக்கும் என்று தோன்றும்.
இது மட்டும் தானா ? தீபாவளியும், பொங்கலும் வரும் போதும், நான் சென்னையில் இல்லை என்பது புரிய கண்ணில் நீர் தளும்பும் .

எத்தனையோ  மாறுதல்கள், கலாசார மாற்றங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பூரிப்புடன் நிற்கிறது சென்னை. கலாசாரம்  மாறத் தொடங்கினாலும் , பழமையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நகரங்களில்  நம் சென்னையும் ஒன்று. பழைமையை  விடாத புதுமை நகரம் சென்னை எனலாம்.

சென்னை பீச்சில்  அமர்ந்தால், காற்று நம் முகத்தில் மெதுவாக மோத நம்மை சுற்றி அங்கங்கே காதல் ஜோடிகள் கிசுகிசுக்க  சுற்றுப் புறமே ரம்மியமாகத் தோன்றும். காணும் பொங்கலன்று பீச்சில் காணும் கூட்டம் , சினிமாத் தியேட்டர்களிலும்  இருக்கும்.

சென்னை வாசிகளை  வெறும் பொழுது போக்குப் பிரியர்கள் என்று எண்ணி விடப் போகிறீர்கள். வைகுண்ட ஏகாதேசியன்று , திருவல்லிக்கேணி பார்த்தசாரதியைப் பார்க்க அலை போல் கிளம்பும். கந்த சஷ்டியன்று வடபழனி முருகனைப் பேட்டி காண நீள  வரிசையில் காத்துக் கிடக்கும்.

மால்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே  கடைகள் என்றால்  சென்னை நகரம் தான். இங்கிருக்கும் புடவைக் கடைகள்  ஏராளம்.அதில் இருக்கும் வகைகளோ  ஏராளமோ ஏராளம். நகைக் கடைகளுக்கும் பஞ்சமில்லையே. ஸ்பென்சரில்  கிடைக்காத  பொருளும் உண்டோ? இங்கேயும்  கூட்டம் காணலாம்.
 சென்னையில் புத்தகத் திருவிழாவா? கோவில் திருவிழாவைப்  போல் கொண்டாடுபவர்கள்  சென்னை வாசிகள்.

பொழுது போக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை , படிப்பிற்கும் கொடுக்கும் பொறுப்பானவர்கள் சென்னை வாசிகள் .அவர்கள் ஆதரவு இல்லாமலா இவ்வளவு பள்ளி, கல்லூரிகள்  சென்னையில் இருக்கின்றன.

அடுக்கிக் கொண்டே போகிறாயே.......  உங்கள் சென்னை என்ன அவ்வளவு உயர்த்தியோ ? என்று நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது. என் கண்ணோட்டத்தில்   சென்னை பிரும்மாண்டமாக என்னைக் கவர்கிறது என்றே சொல்வேன்.
 
 நானும்  சென்னை வாசி என்கிற  பெருமிதத்துடன் வாழ்த்துகிறேன்,
                           Happy Birthday Chennai !

image courtesy---google.

Monday, 4 August 2014

என் கார் பயணம்.










" பாட்டி , நான் கார் எடுக்கப் போகிறேன். நீயும் வரியா ? என்று பேரன் அர்ஜுன் கேட்டதும் தான் தாமதம் சட்டென்று  காரில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

உட்கார்ந்தபின் கேட்டேன். " அர்ஜுன் , எங்கேடா  போறோம்.? "

" பாட்டி  தொணதொணக்காமல்  வருவதாயிருந்தால் உனக்குப் பிடித்தமான இடத்திற்கு அழைத்துப் போகிறேன்.. ஆனால் பேசவே கூதாது." கட்டளை வந்தது அர்ஜுனிடமிருந்து.

எதற்கு வம்பு பேசாமல் போவோம். எனக்குப் பிடித்த இடம் என்று தானே சொல்கிறான். போய் தெரிந்து கொள்வோம். மனம் வந்து அர்ஜுன் முதல் முறையாக என்னை காரில் அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று சொல்கிறான், அதைக் கெடுத்துக் கொள்வானேன் என்று பேசாமல் காரில் ஏறி  உட்கார்ந்தேன்.

டிரைவர் சீட்டில்  அர்ஜுன் ஏறி  உட்கார, நானோ அவனருகில்.

" ஷ்...... சீட் பெல்ட் போடு ." என்று அடுத்த கட்டளை. நானும் கையை தூக்கி  சீட் பெல்ட்டை  துழாவினேன் . நான் தடுமாறுவதைப் பார்த்து எழுந்து என் சீட்டருகில் வந்து சீட் பெல்ட் போட உதவி விட்டு போய் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்.

சாவியை போட்டு காரை ஸ்டார்ட் செய்து விட்டு சாலையில் கவனத்தைத் திருப்பினான்.
நானோ  அமைதியாய் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு குலுக்கலுடன்  கார் நின்றது,

" ஏண்டா காரை நிறுத்தினாய் " நான் கேட்க,

" சி...க்....ன.....ல் " என்று அழுத்தந் திருத்தமாக பதில் வந்தது அவனிடமிருந்து. கையை  மடக்கி கார் கதவில் முழங்கையை வைத்து,  தலையை அந்தக்  கையின் மேல்  சாய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் அர்ஜுன்.

" தலை வலிக்குதாடா அர்ஜுன் ?" கவலையோடு  நான் கேட்டேன்.

" இல்லை பாட்டி. தினம்  இப்படித் தான்  டிராபிக் ஜேம். என்னைக்குத் தான் சரியாகுமோ தெரியவில்லை  "   அலுத்துக் கொண்டான். அர்ஜுன்.

சிறிது நேரத்தில் ஸ்பென்சர் வாசலில் அழகாய் லாவகமாய் பார்க் செய்தான் அர்ஜுன். என் பேரன் இவன்   என்று பெருமை பட்டுக் கொண்டேன் நான்.

" இங்கேயாடா என்னை அழைத்துக் கொண்டு வந்தாய் ? " நான் கேட்க,

" பாட்டி உனக்கு அமுல்  லஸ்ஸி வேணுமா ? வேண்டாமா? உனக்கு ரொம்பவும் பிடிக்குமே " என்று ஆதுரத்துடன் அன்பாகக்  கேட்க  நான் நெகிழ்ந்து போனது உண்மை. இவனும் இவன் அப்பா மாதிரியே பாசம்  நிறைந்தவன் என்று நினைத்துக் கொண்டே ஸ்பென்சர் உள்ளே இருவரும் சென்றோம். அவனுக்கு  வேண்டிய ஹேர் க்ரீம் , சோப், எனக்கு லஸ்ஸி எல்லாம் வாங்கிக் கொண்டு காரில் அமர்ந்தோம்.

காரை ரிவர்செடுக்க திரும்பியவனுக்கு சுருக் என்று கோபம் தலைக்கேறியது. " எத்தனை தடவை  சொல்வது பாட்டி?  சீட் பெல்ட் போடு " என்று  கறாராய்  சொல்லவும் அவசரவசரமாய் நான் போட்டுக் கொண்டேன்.

மிக அழகாய் ரிவர்ஸ் எடுத்து  வண்டியை முன்பாக செலுத்தினான். அவன் கார் ஓட்டுவதைப் பர்த்து அசந்து விட்டேன். அப்படியே இவன் அப்பாவைக் கொண்டு வருகிறானே. கார் ஓட்டுவதில் கூடவா? நினைத்துக் கொண்டேன்.

" எங்கேதாண்டா  போறோம் நாம் ? " கேட்கவும்,

" உனக்குப் படித்த இடம் தான் பாட்டி ,. விதான் ஸௌதா  அருகில்  தான் பாட்டி. அங்கே    மேஃப்ளவர்  கொட்டிக் கிடக்கும் . அதைப் பார்ப்பது உனக்கு ரொம்பப் பிடிக்கும்  என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாயே அதனால் தான் அங்கே போகிறோம்." என்று அவன் சொன்னதும்  எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை

மஞ்சளும், ரோஸும், லேவண்டருமாய் மே ஜுன் மாதங்களில் , மரம் கொள்ளாமல் பூத்து ,  கீழே உதிர்ந்து  தரையில் அழகிய வண்ண ஜமுக்காளமாய்  விரிந்திருப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் தான். அதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு இவன் அப்பா சிறுவனாய் இருக்கும் போது.இப்பவும் அப்படித் தான் இருக்குமா ? பார்க்க ஆவலாய் என்னைத் தயார் படுத்திக் கொண்டேன்.

"சொல்லியிருந்தால் கேமிரா எடுத்து வந்திருப்பேன்டா அர்ஜுன் "

"கண்ணை ரோடிலிருந்து எடுக்காமலே  பின் சீட்டில் பார் பாட்டி.....கேமிரா  இருக்கு . " என்று சொன்னவுடன்  திரும்பி கேமிராவைப் பார்த்துத் திருப்தியடைந்தேன்.

பேசிக் கொண்டே போனவன் சற்று ஓரமாக காரை நிறுத்தி  தள்ளுவண்டியில் சுட்டுக் கொண்டிருந்த சோளத்தை சுடச்சுட  வாங்கிக் கொடுத்தான். 

சோளம் என்னடா விலை? கேட்டேன் சொன்னான். கொஞ்சம் குறைத்துக் கேட்டிருக்கலாமே  என்று சொல்ல " பாட்டி பாவம் அந்தக் கிழவரே  இதை வைத்துத் தான் பிழைக்கிறார். அவரிடம் போய் பேரமா? " என்று சொல்லவும்,
 நான் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாட்டி, " நேற்று, அப்பா அம்மாவிடம் சொன்னதைத் தான் நான்  இப்ப சொன்னேன் " என்று சொல்ல, அங்கு   அர்ஜுனைப் பார்க்கவில்லை .அப்போது அவன் அப்பாவையே கண்டேன் அங்கு.

சோளத்தை வாயில் வைத்துக் கடிக்க ஆரம்பித்தேன். அர்ஜுன் சோளத்தை கையில் வைத்துக் கொண்டே  காரை ஸ்டார்ட் செய்யப் போனான்.

" அர்ஜுன் " அவன் அம்மா கூப்பிடும் குரல் கேட்டது.

"என்னம்மா " கேட்டான் அர்ஜுன்.

" வாடா  சாப்பிட. காரில் பாட்டியை அப்புறம் அழைத்துக் கொண்டு விதான் ஸௌதா போகலாம். உனக்குப் பிடித்த பூரி கிழங்கு இருக்கு வா  "என்று அவன் அம்மா கூப்பிட்டதும்

இவ்வளவு நேரம் ஹாலில் ,திருப்பிப் போடப்பட்டு காராய் மாறியிருந்த  மூன்று சக்கர சைக்கிளிலிருந்து   டைனிங் டேபிளுக்கு ஓடினான் நான்கு வயதான்  அர்ஜுன்.

கற்பனைக் கார் பயணம் முடிந்த திருப்தியில் ,நான் எழுந்து உள்ளே போனேன்.
அவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அத்தனையும் என் மகனை பிரதிபலித்தன.

கார் ஓட்ட மட்டுமா அப்பாவைப் பார்த்து  செய்கிறான்?
அவன் எதிர்கால வாழ்க்கைக்கும் , பெற்றோர் வாழ்க்கை தானே அவனுக்குப் பாடம்!


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்