Monday, 4 August 2014

என் கார் பயணம்.










" பாட்டி , நான் கார் எடுக்கப் போகிறேன். நீயும் வரியா ? என்று பேரன் அர்ஜுன் கேட்டதும் தான் தாமதம் சட்டென்று  காரில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

உட்கார்ந்தபின் கேட்டேன். " அர்ஜுன் , எங்கேடா  போறோம்.? "

" பாட்டி  தொணதொணக்காமல்  வருவதாயிருந்தால் உனக்குப் பிடித்தமான இடத்திற்கு அழைத்துப் போகிறேன்.. ஆனால் பேசவே கூதாது." கட்டளை வந்தது அர்ஜுனிடமிருந்து.

எதற்கு வம்பு பேசாமல் போவோம். எனக்குப் பிடித்த இடம் என்று தானே சொல்கிறான். போய் தெரிந்து கொள்வோம். மனம் வந்து அர்ஜுன் முதல் முறையாக என்னை காரில் அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று சொல்கிறான், அதைக் கெடுத்துக் கொள்வானேன் என்று பேசாமல் காரில் ஏறி  உட்கார்ந்தேன்.

டிரைவர் சீட்டில்  அர்ஜுன் ஏறி  உட்கார, நானோ அவனருகில்.

" ஷ்...... சீட் பெல்ட் போடு ." என்று அடுத்த கட்டளை. நானும் கையை தூக்கி  சீட் பெல்ட்டை  துழாவினேன் . நான் தடுமாறுவதைப் பார்த்து எழுந்து என் சீட்டருகில் வந்து சீட் பெல்ட் போட உதவி விட்டு போய் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்.

சாவியை போட்டு காரை ஸ்டார்ட் செய்து விட்டு சாலையில் கவனத்தைத் திருப்பினான்.
நானோ  அமைதியாய் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு குலுக்கலுடன்  கார் நின்றது,

" ஏண்டா காரை நிறுத்தினாய் " நான் கேட்க,

" சி...க்....ன.....ல் " என்று அழுத்தந் திருத்தமாக பதில் வந்தது அவனிடமிருந்து. கையை  மடக்கி கார் கதவில் முழங்கையை வைத்து,  தலையை அந்தக்  கையின் மேல்  சாய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் அர்ஜுன்.

" தலை வலிக்குதாடா அர்ஜுன் ?" கவலையோடு  நான் கேட்டேன்.

" இல்லை பாட்டி. தினம்  இப்படித் தான்  டிராபிக் ஜேம். என்னைக்குத் தான் சரியாகுமோ தெரியவில்லை  "   அலுத்துக் கொண்டான். அர்ஜுன்.

சிறிது நேரத்தில் ஸ்பென்சர் வாசலில் அழகாய் லாவகமாய் பார்க் செய்தான் அர்ஜுன். என் பேரன் இவன்   என்று பெருமை பட்டுக் கொண்டேன் நான்.

" இங்கேயாடா என்னை அழைத்துக் கொண்டு வந்தாய் ? " நான் கேட்க,

" பாட்டி உனக்கு அமுல்  லஸ்ஸி வேணுமா ? வேண்டாமா? உனக்கு ரொம்பவும் பிடிக்குமே " என்று ஆதுரத்துடன் அன்பாகக்  கேட்க  நான் நெகிழ்ந்து போனது உண்மை. இவனும் இவன் அப்பா மாதிரியே பாசம்  நிறைந்தவன் என்று நினைத்துக் கொண்டே ஸ்பென்சர் உள்ளே இருவரும் சென்றோம். அவனுக்கு  வேண்டிய ஹேர் க்ரீம் , சோப், எனக்கு லஸ்ஸி எல்லாம் வாங்கிக் கொண்டு காரில் அமர்ந்தோம்.

காரை ரிவர்செடுக்க திரும்பியவனுக்கு சுருக் என்று கோபம் தலைக்கேறியது. " எத்தனை தடவை  சொல்வது பாட்டி?  சீட் பெல்ட் போடு " என்று  கறாராய்  சொல்லவும் அவசரவசரமாய் நான் போட்டுக் கொண்டேன்.

மிக அழகாய் ரிவர்ஸ் எடுத்து  வண்டியை முன்பாக செலுத்தினான். அவன் கார் ஓட்டுவதைப் பர்த்து அசந்து விட்டேன். அப்படியே இவன் அப்பாவைக் கொண்டு வருகிறானே. கார் ஓட்டுவதில் கூடவா? நினைத்துக் கொண்டேன்.

" எங்கேதாண்டா  போறோம் நாம் ? " கேட்கவும்,

" உனக்குப் படித்த இடம் தான் பாட்டி ,. விதான் ஸௌதா  அருகில்  தான் பாட்டி. அங்கே    மேஃப்ளவர்  கொட்டிக் கிடக்கும் . அதைப் பார்ப்பது உனக்கு ரொம்பப் பிடிக்கும்  என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாயே அதனால் தான் அங்கே போகிறோம்." என்று அவன் சொன்னதும்  எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை

மஞ்சளும், ரோஸும், லேவண்டருமாய் மே ஜுன் மாதங்களில் , மரம் கொள்ளாமல் பூத்து ,  கீழே உதிர்ந்து  தரையில் அழகிய வண்ண ஜமுக்காளமாய்  விரிந்திருப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் தான். அதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு இவன் அப்பா சிறுவனாய் இருக்கும் போது.இப்பவும் அப்படித் தான் இருக்குமா ? பார்க்க ஆவலாய் என்னைத் தயார் படுத்திக் கொண்டேன்.

"சொல்லியிருந்தால் கேமிரா எடுத்து வந்திருப்பேன்டா அர்ஜுன் "

"கண்ணை ரோடிலிருந்து எடுக்காமலே  பின் சீட்டில் பார் பாட்டி.....கேமிரா  இருக்கு . " என்று சொன்னவுடன்  திரும்பி கேமிராவைப் பார்த்துத் திருப்தியடைந்தேன்.

பேசிக் கொண்டே போனவன் சற்று ஓரமாக காரை நிறுத்தி  தள்ளுவண்டியில் சுட்டுக் கொண்டிருந்த சோளத்தை சுடச்சுட  வாங்கிக் கொடுத்தான். 

சோளம் என்னடா விலை? கேட்டேன் சொன்னான். கொஞ்சம் குறைத்துக் கேட்டிருக்கலாமே  என்று சொல்ல " பாட்டி பாவம் அந்தக் கிழவரே  இதை வைத்துத் தான் பிழைக்கிறார். அவரிடம் போய் பேரமா? " என்று சொல்லவும்,
 நான் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாட்டி, " நேற்று, அப்பா அம்மாவிடம் சொன்னதைத் தான் நான்  இப்ப சொன்னேன் " என்று சொல்ல, அங்கு   அர்ஜுனைப் பார்க்கவில்லை .அப்போது அவன் அப்பாவையே கண்டேன் அங்கு.

சோளத்தை வாயில் வைத்துக் கடிக்க ஆரம்பித்தேன். அர்ஜுன் சோளத்தை கையில் வைத்துக் கொண்டே  காரை ஸ்டார்ட் செய்யப் போனான்.

" அர்ஜுன் " அவன் அம்மா கூப்பிடும் குரல் கேட்டது.

"என்னம்மா " கேட்டான் அர்ஜுன்.

" வாடா  சாப்பிட. காரில் பாட்டியை அப்புறம் அழைத்துக் கொண்டு விதான் ஸௌதா போகலாம். உனக்குப் பிடித்த பூரி கிழங்கு இருக்கு வா  "என்று அவன் அம்மா கூப்பிட்டதும்

இவ்வளவு நேரம் ஹாலில் ,திருப்பிப் போடப்பட்டு காராய் மாறியிருந்த  மூன்று சக்கர சைக்கிளிலிருந்து   டைனிங் டேபிளுக்கு ஓடினான் நான்கு வயதான்  அர்ஜுன்.

கற்பனைக் கார் பயணம் முடிந்த திருப்தியில் ,நான் எழுந்து உள்ளே போனேன்.
அவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அத்தனையும் என் மகனை பிரதிபலித்தன.

கார் ஓட்ட மட்டுமா அப்பாவைப் பார்த்து  செய்கிறான்?
அவன் எதிர்கால வாழ்க்கைக்கும் , பெற்றோர் வாழ்க்கை தானே அவனுக்குப் பாடம்!


35 comments:

  1. அருமையான சஸ்பென்ஸ் ...
    அழகான கதை...
    ஆனந்தமான பாட்டி ,பேரன் உறவை
    கண் முன் நிறுத்தியதற்கு நன்றி,ராஜலக்ஷ்மி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி உஷா.

      Delete
  2. அவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அத்தனையும் என் மகனை பிரதிபலித்தன.

    கார் ஓட்ட மட்டுமா அப்பாவைப் பார்த்து செய்கிறான்?
    அவன் எதிர்கால வாழ்க்கைக்கும் , பெற்றோர் வாழ்க்கை தானே அவனுக்குப் பாடம்!

    நிறைய முறை கண்டு ரசித்த காட்சிகள் தங்கள் பதிவில் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ஒரு பாட்டியின் உணர்வு இன்னொரு பாட்டியான உங்களுக்கு சரியாகவே புரிந்திருக்கிறது.
      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி மேடம்.

      Delete
  3. மிகவும் ரஸித்துப்படித்துக்கொண்டே வந்தேன். கடைசியில் வழக்கப்படி தங்கள் குறுப்பு ஏதேனும் இருக்கும் என எதிர்பார்த்தேன். மேலும் கார் ஓட்டும் வயதில் பேரன் இருப்பானா என்றும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அழகாகக் கடைசியில் எதிர்பாரா [ஆனால் நான் மட்டும் எதிர்பார்த்த] ட்விஸ்ட் அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். ;)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எதிர்பார்ப்பை வீணாக்காமல் ட்விஸ்ட் கொடுத்து விட்டேன் பாருங்கள் கோபு சார்.
      உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.

      Delete
  4. ஜோர்!

    ReplyDelete
  5. வணக்கம்

    ஆரம்பம் முதல் முடிவு வரை கதை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி ரூபன்.

      Delete
  6. காரில் பயணித்த உணர்வு..... எதிர்பாராத திருப்பம் கடைசியில்! :)

    ReplyDelete
    Replies
    1. என் பேரனோடு நீங்களும் காரில் பயணித்ததற்கு நன்றி வெங்கட்ஜி. உங்கள் பாராட்டிற்கும் நன்றி ஜி.

      Delete
  7. என்ன அருமையான கற்பனை? பிள்ளைகள் பெற்றவர்களை முன்னோடியாகக் கொள்கிறார்கள் பல விஷயங்களில். ஜீன்களும் துணை நிற்கின்றன! நல்ல பாட்டி, நல்ல பேரன்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  8. அர்ஜுனின் மழலைப் பேச்சிலிருந்தே அவனுடன் நீங்கள் பயணிப்பது பொம்மைக் காரில் என்பதை உணர்ந்தாலும்கூட பாட்டி + பேரனுடனான இந்தப் பயணத்தில் உடன் பயணிக்கும் ரசனை குறையவில்லை. கடைசிப் பாரா நச்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் எங்களோடு விதான் ஸௌதா வந்ததற்கு நன்றி கணேஷ் சார்.
      உங்களின் பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  9. கார் ஓட்ட மட்டுமா அப்பாவைப் பார்த்து செய்கிறான்?
    அவன் எதிர்கால வாழ்க்கைக்கும் , பெற்றோர் வாழ்க்கை தானே அவனுக்குப் பாடம்!//

    கற்பனை என்றாலும் மிக அருமையாக நல்ல செய்தியை சொன்னீர்கள்.
    முன் ஏர் போகும் பாதையில் பின் ஏர் போகும் என்பார்கள் அம்மா.நாம் வாழ்த்து காட்டவேண்டும் குழந்தைகளுக்கு. அறிவுரையைவிட நாம் நல்லபடியாக வாழ்நது காட்டினாலே போதும் இல்லையா?
    பதிவை மிகவும் ரசித்துப்படித்தேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் நாம் வாழ்வதை பார்த்துத் தானே குழந்தைகள் அவர்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள்..மிக்க நன்றி கோமதுய் உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும்.

      Delete

  10. ரசனையான கார்ப்பயணம். ஸ்பென்சரில் சாமான் வாங்கிக் கொண்டு வண்டியை ரிவெர்சில் எடுக்கும்போதே என்னடா இது, ஸ்பென்சர் எப்போ இவ்வளவு சுலபமா வண்டியை எல்லாம் எடுக்கும் அளவுக்கு எளிதாஅக ஆச்சுனு சந்தேகம் வந்தது. நினைச்சாப்போலவே முடிவு.:)))))))

    ReplyDelete
    Replies
    1. //ஸ்பென்சர் எப்போ இவ்வளவு சுலபமா வண்டியை எல்லாம் எடுக்கும் அளவுக்கு எளிதாஅக ஆச்சுனு சந்தேகம் வந்தது// ஹா.....ஹா.....ஹா.....

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  11. ஆஹா.அர்ஜும்ன் சின்னப் பையனா. குழம்பிவிட்டேன் ராஜி. உங்களுக்கு இவ்வளவு பெரிய பேரன் எங்கெயிருந்து வந்திருப்பான் என்று. மிக அழகு. இந்தக் கற்பனை இன்னும் 20 வருடங்களில் நிஜமாகிவிடும். எத்தனை அருமையான பாட்டி பேரன் உறவும்மா. இது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்திற்கும், ஆசிக்கும் நன்றி வல்லி மேடம்.

      Delete
  12. உண்மையிலேயே.. அழகான அருமையான பதிவு..
    படித்துக் கொண்டு வரும் போதே - சந்தோஷமாக இருந்தது..

    விளையும் பயிர் முளையிலே தெரியும்!..

    இன்றைய நற்குணங்களோடு எந்நாளும் வாழவும் வளரவும் வேண்டுகின்றேன்.
    இந்தப் பேரனுடன் தாங்கள் காரில் ஏறி வலம் வருவதற்கு - ஆயுளும் ஆரோக்யமும் தந்து அன்னை அபிராமி அருகிருந்து காத்தருள்வாளாக!.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. எனக்காக அண்ணை அபிராமியிடம் விண்ணப்பிக்கும் உங்களுக்கு என் நன்றிகள் பல. என் பேரனுக்கான் ஆசிகளுக்கும் நன்றி சார்.

      Delete
  13. தங்களின் இன்றைய வலைச்சர தொகுப்பில் -
    தஞ்சையம்பதியையும் அறிமுகம் செய்வித்தமை கண்டு மிக்க மகிழ்ச்சி..
    மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தளம் வழியாக நீங்கள் ஆன்மீக சேவை புரிந்து வருகிறீர்கள்.அதை நான் பாராட்டினேன் அவ்வளவே.

      Delete
  14. கனவுகள் மெய்ப்பட வேண்டுதல்களும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
    Replies
    1. என் கற்பனை மெய்ப்பட ,நீங்கள் வேண்டுவதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

      Delete
  15. படிப்பவர்களுக்கு நல்ல ஏமாற்றம்.
    எனது பதிவு ''Mr. திருவாளி'' காண்க...

    ReplyDelete
    Replies
    1. //படிப்பவர்களுக்கு நல்ல ஏமாற்றம்.// அவ்வளவு மோசமோ பதிவு.( தமாஷ்)
      உங்கள் திருவொளி காண்கிறேன்.

      Delete

  16. "என் கார் பயணம்"
    சிறந்த பயணப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  17. மிக..மிக. அருமை..
    முதன்முறையாக உங்கள் வலைத்தளத்தை பார்க்கிறேன்.. மிக அருமையான பதிவு
    பெற்றோர் குழந்தைகள், தாத்தா- பாட்ஐடி பேரப்பிள்ளைகள் உறவு முறையின் அவசியத்தை உணரத்தும் பதிவு..
    இது போன்ற பதிவுகளை தேடிப் படிக்கும் நான் இனி உங்கள் தளத்தை தொடரந்து பார்ப்பேன்..
    நன்றி
    பாஸ்கரசந்திரன்

    ReplyDelete
  18. கடைசி டிவிஸ்ட் சூப்பர்! அருமையான கார்ப்பயணம்! நன்றி!

    ReplyDelete
  19. எனக்கு ஓரளவு உங்க வயது, உங்க பையன் வயது, பேரன் வயது எல்லாம் ஒரு யூகத்தில் தெரியும் என்பதால், ஆரம்பத்திலேயே இது உங்க பேரனின் "விளையாட்டு வாகனம்"னு எனக்குத் தெரிந்துவிட்டது..

    *** நடவடிக்கைகள் அத்தனையும் என் மகனை பிரதிபலித்தன.***

    நீங்க சாதாரணமாகத்தான் சொல்றீங்கனு நினைக்கிறேன். எனக்கென்னவோ இதை நீங்க எழுதும்போது உங்கள் ஆனந்தத்தில் கண்கள் கலங்குவதுபோல் ஒரு உணர்வு! :)

    ReplyDelete
  20. நல்ல கற்பனை கார் பயணம்.!! நான் என் மகளின் பள்ளி விடுமுறையின் போது அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது என் மகளும் என் அப்பாவும் வீட்டின் வராண்டாவில் நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு விளையாட்டாக பயணம் செய்வது என் கண் முன்னே தோன்றியது. கற்பனையாக பெட்ரோல் போடுவார்கள், சிக்னலில் காத்திருப்பார்கள், வர வழியில் பச்சை காயை பார்த்ததும் வாங்குவார்கள், ஓவர்டேக் பண்ணினால் துரத்துவார்கள்,..... ம்ம்... மீண்டும் அந்த நாட்களை உங்களுடைய கார் பயணத்தின் மூலம் நினைவு படுத்தியதற்கு நன்றி. அருமையான பதிவு!!

    ReplyDelete
  21. சுவாரஸ்யமான தங்களின் கற்பனைக் கதையைக் கேட்டு முதன் முறையாக
    நானும் பல்பு வாங்கிவிட்டேன் :)))) வாழ்த்துக்கள் அம்மா .

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்