Sunday 21 September 2014

கவியரசர் கண்ணதாசனால் கிடைத்த பாராட்டு !








ஒரு சில மாதங்களுக்கு முன்பு, வல்லமை மின்னிதழில்  " என்  பார்வையில்   கண்ணதாசன் " என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி கவிஞர் திரு. காவிரி மைந்தன்  அவர்களால் நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். பரிசு  கிடைக்கவில்லை. ஆனால் நடுவரின் பாராட்டு   என் கட்டுரைக்குக் கிடைத்தது. கட்டுரையை  இங்கே பகிர்கிறேன்.

படித்து உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்களேன்.

                                         


                                       
                                           என் பார்வையில் கண்ணதாசன்.

கண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான பின்  தான் யோசிக்க ஆரம்பித்தேன். கவியரசைப் பற்றிய கட்டுரையை  நான்  எழுதுவதா........ ......சற்றே தயங்கி ஓடி ஒளிந்து கொண்ட மனசாட்சியைப் பிடித்து இழுத்து வைத்து ,
 " கவிதை என்பது  மெத்தப்படித்தவர்கள் மட்டுமே படித்து  ரசிப்பது என்கிற நிலைமையை மாற்றி பாமரரையும் சேரும் விதமாய்  கவிதை எழுதியவர் நம் கவிஞர்.அதனால் நீ ரசித்த அவருடைய கவிதைகள் பற்றி எழுத என்ன  தயக்கம்?" என்று மனசாட்சியை சமாதானப்படுத்தி விட்டு எழுத அமர்ந்தேன்.
அடுத்த  பிரச்சினை தலை தூக்கியது.
எந்த விதமான கண்ணதாசன் பாடல்களைப் பற்றி கட்டுரை வடிப்பது  என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். காதலா, வீரமா, ஆன்மீகமா, தத்துவமா,.தேசப்பற்றா, சமுதாய அக்கறையா .... ....எதைப் பற்றி எழுதுவது எதை விடுவது .கவியரசு எழுதிக் குவித்திருப்பவை  எண்ணற்றவை.ஏராளமோ ஏராளம். அத்தனையும் முத்துக்களே. அதில்  தனியாக ஒரு  தலைப்பை  எடுத்துக் கொண்டால் மற்றவை விடும்படி ஆகிவிடுமே  என்று தோன்ற  நாம் ஏன் என்னைப் பாதித்த , பிடித்த, நான் மயங்கிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்ற அப்படியே கட்டுரை எழுத ஆரம்பிக்கிறேன்.

மீண்டும் ஒரு சுணக்கம். எனக்குப் பிடித்த கவிஞரின்  பாடல்களோ ஏராளம். எதைச் சொல்ல.... எதை விட.....மிகசிலப்  பாடல்களை  பற்றி எழுத நினைத்தேன்.

ஒரு சில பாடல்கள் என்னுள்  ஏற்படுத்திய தாக்கத்தைத்  தொகுத்துக் கட்டுரையாக சமர்ப்பிக்கிறேன்.

நான் பள்ளி செல்லும் வயதில் , சினிமா  பார்ப்பதும், சினிமா பாட்டு கேட்பதும் இமாலயக் குற்றம் என்கிற நிலை இருந்த நாளில் கூட  என் மனதில் புகுந்த கொண்ட பாட்டு,

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
கவலையில் வருவதும் அம்மா அம்மா.

அன்றைய சிறு வயது  சங்கடங்களுக்கு மட்டுமா "அம்மா அம்மா ". இன்றும் கூட நான் சவால்களை எதிர் கொள்ளும் போதும் ,கவலைகளில் நான் மூழ்கும் போதும் , தெம்பு தருவது " அம்மா " என்கிற வார்த்தை தான்.  எத்தனை நிதரிசனமான உண்மை . அதை அழகிய பாட்டாய்  வடித்து நமக்குள் ஊற்றெடுக்கும்   தாய் பாசத்தை  நாமே உணரும்படி செய்தது இந்தப் பாட்டு என்று சொன்னால் மிகையாகாது.அந்த சிறு வயதில் என்னைப் பாதித்த மற்றுமொரு பாட்டு என்று சொன்னால் அது இந்தப்பாட்டு .

"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி "

சரஸ்வதி சபத்தத்தில் வரும் இந்தப் பாட்டு  நம் மனதை உருக வைத்தப் பாடல்களில் ஒன்று. இந்தப் பாட்டுக் காதில் விழுந்தாலே  நம் கண் முன் சரஸ்வதியின்   உருவம்  வருவதைத்  தடுக்க முடியாது. அத்தனை வலிமை வாய்ந்த வரிகள் .இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்தப் பாட்டு  மிக மிகப் பிரபலம். பல சிறுவர் சிறுமிகளின்  மனதைத் தொட்ட பாட்டு என்றே சொல்ல வேண்டும்.

சகோதரப் பாசம் பற்றி எழுதியுள்ள பாடல்கள்  உணர்ச்சி மிகுதியால் கண்கள்  குளமாகும்.பாசமலர்  படத்தில்   வரும் அண்ணன் தங்கைப்  பாசத்தை கவியரசர் சொல்லும் விதமே அலாதி தான்.

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா…

என்று ஒரு தங்கை தன் சகோதரன் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பை  விளக்கும் வரிகளில் ,  நாம் நம்மையே தங்கையாகவோ அண்ணனாகவோ  நினைக்கத் தவறுவதில்லை  என்பது உண்மையே!


பதின்ம வயதிலோ  சொல்லவே  வேண்டியதில்லை. காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  திருட்டுத் தனமாய்  மனதில் போய் ஒளிந்துக் கொண்டு இன்றளவும்  வெளியே வர மறுக்கும் பாடல்கள் பட்டியலிட்டால்  பக்கம் போதாது.  "அத்திக்காய் அத்திக்காய் " பாடல்  மிகவும் மென்மையாக அதே சமயத்தில் காதலர்களிடையே  இருக்கும் காதலின் மகத்துவத்தை  அருமையாய் விளக்கும் பாடல்.
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே " பாடல் திருமதி சுசீலா குரலின்  இனிமையுடன் ஒலிக்கும் போது  மயங்காதவர்கள் யார் ? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சிவகங்கை சீமையில் வரும் " கனவு கண்டேன்  நான் கனவு கண்டேன் "  என்கிற பாடலைக் கேட்கும் போது  மனம் கண்டிப்பாய் அவரவர் திருமண நிகழ்வை  மீண்டும் மனதிற்குள் பார்த்து மகிழாமல் இருக்க முடியாது. நம்மை மீண்டும் இளமைக்குத் திருப்பும் சக்தி வாய்ந்தவை இந்தப் பாடல்கள்.
பாடலுக்கும், கவிதைக்கும் இந்த சக்தி உண்டா என்கிற  வியப்பு மேலிடுகிறது. கண்ணதாசனின் பேனா மை  செய்யும் விந்தையல்லவா  இது.

சிறுவர்களுக்கும், வாலிப வயதினருக்கும் மட்டுமா  கவியரசு பாடல்கள் புனைந்துள்ளார்.எல்லா வயதினருக்கும், எல்லா வித நிலையிலும் நாம் ஆறுதல் தேடிக் கொள்ள உதவியாய் பாடல்கள் வந்து விழுந்திருக்கின்றதே! வாழ்வின் ஓர் அங்கமான  சோகத்தையும் விடவில்லை கவிஞர் . சோகப் பாடல்களில் சோகத்தை பிழிந்ததோடு இல்லாமல்  ஆறுதலும் தரவல்லவர்  கவியரசர்.

காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.

கவலைகள் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து விடலாகாது என்பதை எவ்வளவு எளிதாய் காலம் மாறினால்  கவலைகளும் நீங்கும் என்பதில் அழகாய் விளக்குகிறார்.

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

என்கிறப் பாட்டை கேட்கும் போது மனம் கனத்துப் போவதைத் தடுக்க முடியவில்லை. சோதனைகள் பார்க்காத மனிதர்கள் உண்டா?  சவால்களும் வாழ்க்கையின் அங்கமே என்கிற ஆறுதல் உணர்வைத் தரும் பாடல்  . கண்டிப்பாக அவர் எதிர் நோக்கிய  சவால்களே இப்பாடலின் ஆதாரம் என்றே நான் நம்புகிறேன்.

கவிஞர் மரணத்தை  விட்டு விட்டாரா என்ன?. அதையும்  பாட்டிற்கு கருப்பொருளாக்கும் தைரியம் நம் கவியரசுக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். அந்தப்பாட்டு எவ்வளவு பெரிய ஹிட் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.


வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

இந்த வரிகளில் சொன்னவை அத்தனையும் உண்மை தானே! மரணத்தைக் கூட லாவகமாய் கையாளும் தந்திர  வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்  கவியரசே  என்று சொல்லலாம் .

கண்ணதாசன்  பெயருக்கு ஏற்றார் போல் பக்தி மான் கூட." திருமால் பெருமைக்கு நிகரேது " என்கிற பாடலில் பெருமாளின் பத்து அவதாரங்களின் காரணத்தையும், அவதார மகிமையும்  இந்தப்பாடலில் ஒளிர்வதை கண்கூடு.இது போல் இன்னும் நிறைய பாடல்கள் பக்தி மனம் கமழ எழுதிவைத்துள்ளார் கவிஞர். அத்தனையும் எழுத இங்கே எனக்கு இடமில்லை.

கவிஞர் தேன் மழையாய் பொழிந்திருக்கும் பாடல்களில்  ஒரே ஒரு துளி  எடுத்து  சுவைத்ததில்  நான் பெற்ற இனிமையை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 


இந்தக் கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.


image courtesy--google.

33 comments:

  1. அருமையான கட்டுரை...
    பரிசு கிடைக்க வில்லை என்றாலும் பாராட்டுக் கிடைத்ததே பெரிய பரிசுதானே...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.

      Delete
  2. கவியரசருக்கு அருமையான கட்டுரை படைத்தீர்கள் சகோதரி...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி மகேந்திரன் சார்.

      Delete
  3. அருமை சகோதரியாரே
    குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை
    பாடல்களைத் தொகுத்து அருமையான தோரணம் கட்டியுள்ளீர்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் றுகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
  4. Replies
    1. உங்கள் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி சார்.

      Delete
  5. கட்டுரை மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். சுட்டிக்காட்டியுள்ள ஒவ்வொரு பாடல்களும் எனக்கும் மிகவும் பிடித்தவை. பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கக்கூடிய அர்த்தமுள்ள அழகான பாடல்கள். அதுவே அவரின் தனிச்சிறப்பு.

    //இந்தக் கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.//

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.

      Delete
  6. //பரிசு கிடைக்கவில்லை. //

    போனால் போகட்டும் போடா.

    காலம் ஒருநாள் மாறும் - நம்
    கவலைகள் யாவும் தீரும்.

    //ஆனால் நடுவரின் பாராட்டு என் கட்டுரைக்குக் கிடைத்தது.//

    சந்தோஷம். பரிசினைப்போலவே .... இன்னும் சொல்லப்போனால் பரிசினை விடவும்கூட பாராட்டுகளுக்கு மதிப்பு அதிகம் உண்டு.

    நானும் தங்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் பாராட்டிற்கு பரிசை விடவும் மதிப்பு அதிகம் . அதுவும் நடுவர் மட்டுமல்லாமல் நீங்கள் எல்லோரும் பாராட்டுவது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது கோபு சார். நன்றி சார்.

      Delete
  7. கேட்கக் கேட்க இனிக்கும் பாடல்களைத் தந்தவரல்லவா கவியரசர்.....

    இனிய கட்டுரை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி வெங்கட்ஜி

      Delete
  8. கவிஞர் தேன் மழையாய் பொழிந்திருக்கும் பாடல்களில் இங்கே ஒரே ஒரு துளி தான்!..
    நிதர்சனமான உண்மை!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துரை சார்.

      Delete
  9. கவிஞர் கண்ணதாசன் பற்றி கருத்தான ஆக்கம்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி மேடம்.

      Delete
  10. கண்ணதாசன் அவர்கள் பாடல்களில் (உங்கள் பார்வையில் )அருமையான பாடல்வரிகளை சொல்லிய விதம் அழகு.
    பாராட்டுக்கள்., வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கோமதி

      Delete
  11. அருமையான கட்டுரை மனம் நெகிழப் படித்தேன் பகிர்வுக்கு
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் அம்மா !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அம்பாளடியாள்.

      Delete
  12. சிறு வயதிலிருந்து நீங்கள் ரசித்த, உங்களை வியக்க வைத்த, கண்ணதாசன் படைப்புகளில் சிலவற்றை உங்கள் அடிமனதிலிருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இப்பாடல் வரிகளில் மிகைப்படுத்தாத உண்மையத்தவிர எதுவும் இல்லை!

    மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும், அழகாகவும் இருக்கிறது உங்களின் இக்கட்டுரை.

    எங்களுடன் இக்கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க, ராஜி மேடம்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி வருண் சார்.

      Delete
  13. அருமையான தொகுப்பு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தும் நான் எழுதாமல் இருந்துவிட்டேன் ராஜி. கண்ணதாசன் ஒரு மஹா சமுத்திரம். அதில் எந்த அலையை எடுப்பது,எந்தத் துளியை விடுப்பது.ஒவ்வொரு பாடலும் ஏற்படுத்திய தாக்கத்திற்கு நான்கு பக்கங்கள் போதாது. நீங்கள் பகிர்ந்திருக்கும் அழகு நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும் , பாராட்டிற்கும் நன்றி வல்லி மேடம்.

      Delete
  14. அருமையான பதிவு அம்மா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி கில்லர்ஜி .

      Delete
  15. நடுவரின் பாராட்டே பரிசு பெறுவதற்கு சமமாகும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் , பாராட்டிற்கும் நன்றி திருமதி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

      Delete
  16. உங்கள் கட்டுரை மிகவும் அருமை. பலமுறை படித்தேன். உங்களுடன் எனக்குக் கிடைத்த அவார்டை பகிர்ந்து கொள்கிறேன். தயவு செய்து chollukireen ஐப் பாருங்கள்..ஏற்றுக் கொள்ளுங்கள். அன்புடன் காமாட்சி

    ReplyDelete
  17. அம்மா,

    தாங்கள் என் வலைப்பூவில் பதிந்த பின்னூட்டத்தின் மூலம் உங்கள் தளம் கண்டேன். இனி தொடருவோம் !

    கண்ணதாசன் என்னும் கவிதை கடலின் நல்முத்துக்களை தொகுத்து மிக அழகான கட்டுரையாக கொடுத்துள்ளீர்கள். மனித வாழ்க்கையின் அனைத்து சூழல்களையும் பாடல்களாய் படைத்தவர் அவர் ஒருவர் மட்டும்தான் என தோன்றுகிறது.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  18. எந்தப் பாடலை எடுப்பது எதை விடுப்பது ? இருந்தாலும் உங்கள் பார்வையில் கண்ணதாசனைப் பற்றிய இப்பதிவிலுள்ள பாடல்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்