Tuesday, 20 December 2016

இட்லியும் இரண்டாயிரம் ரூபாயும் .


"தோசை மாவு இல்லாத நாட்கள் எல்லாம் சோதனை மிகுந்த நாட்கள்" என்கிற உண்மையை பல இல்லத்தரசிகள்  உணர்வார்கள்..  ஆனால் தினம் இட்லி தோசை என்றாலும் ....குடும்பத்தினர்,  முகத்தைத்  திருப்பிக் கொள்கிறார்கள்.




எங்கள் வீட்டில் இட்லி, தோசை  இரண்டும், இரண்டாயிரம் ருபாய்  நோட்டு போல் ,ஆகிவிட்டது.  அது இல்லாமலும்  இருக்க முடியவில்லை. இருந்தாலும் செலவழிக்க முடியவில்லை.

இட்லி, தோசை, இல்லாம வேறென்ன  செய்யலாம் என்று யோசித்து, யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டது தான் மிச்சம்.

அடை  செய்யலாமா?  வேண்டாம் இப்ப தான் அடை சாப்பிட்டோமே .சரி அப்படிஎன்றால் இடியாப்பம் செய்வோமா ? யோசித்தேன்....

அவசரத்திற்கு ஆகாது , முன்பு போல் சிக்கிக் கொண்டால் ....(சிக்கிக் கொண்டாயா? அது எங்கே ? எப்போ? என்று கேட்பவர்கள் இங்கே படியுங்கள்).......என்ன செய்வது?
ஆக இடியாப்பம் வேண்டாம்.

இப்படி, அப்படி என்று  பெரிய ஆராய்ச்சியில் இறங்கி, கடைசியில் உப்புமா செய்ய  தீர்மானித்தேன்.

ஆனால், ஐநூ று, ஆயிரம் ரூபாய்  நோட்டுக்கள் போல் செல்லாத காசாய் உப்புமா டைனிங்  டேபிள் மேல் கேட்பாறற்றுக் கிடந்தது. .

" யாராவது என்னை சாப்பிட வாங்களேன் என்று உப்புமாவே கதறினாலும்  கிட்ட போக மாட்டேன் என்கிறார்கள்.. "

அதனால் நேற்று  ஒரு ஐடியா செய்தேன். இன்றைக்கு இட்லி.... இல்லையென்றால்,  உப்புமா..... என்று இரண்டே சாய்ஸ் கொடுத்தேன் பாருங்கள்.

ஐயோ ! உப்புமாவா......அதற்கு இட்லியே  தேவலாம்  என்கிற சாதகமான பதில் கிடைத்தது.  வெயிலில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.

பெருத்த நிம்மதியுடன் இட்லியும் சட்னியும் செய்து விட்டு நிமிர்ந்தேன்.

ஆனால் இவர்களை நம்பி இட்லி  செய்து வைத்ததில், இவர்களெல்லாம் கொத்றிதது போக நிறைய  மீந்து போய் விட்டது.......இரண்டாயிரம்  ரூபாய் நோட்டு போல் செலவழிக்க முடியாமல்  இருக்கிறதே ..என்ன செய்வது.......அதை உதிர்த்து உப்புமா செய்தால்...?

ஆனால்..... உப்புமாவா?  என்று முகம் சுளிக்கும்  குடும்பத்தினருக்கு  என்ன பதில் சொல்வது? நாங்கள்  சாப்பிட மாட்டோம் என்று மறியலில்  ஈடுடுபட்டு  விட்டால்  ........ போலீசையா  கூப்பிட முடியும்......சொல்லுங்கள்..

பிரச்சினையை சுமுகமாக தீர்க்க  வழி  இருக்கிறதா என்று யோசித்தேன்...

இட்லி ஃபிரை செய்து பார்த்தால் என்ன? என்று தீர்மானித்து செய்தே விட்டேன்..ஹோட்டலில் செய்யும் இட்லி ஃபிரை என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் கம்பெனி பொறுப்பில்லை.

ஆனால் மிகப் பிரமாதமாக  அமைந்து விட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.   டைனிங் டேபிளில் இருந்த இட்லி  ஃபிரை வைத்திருந்த பாத்திரம்    தற்போதைய  வங்கி ATM மெஷின் மாதிரி  ஒரு சில நிமிடங்களில்  காலியாகி விட்டது  என்று சொன்னால் நம்புவீர்களா?

அதை எப்படி செய்தேன் என்று சொல்கிறேன் கேளுங்கள்.....


பெரிய வெங்காயம் -2 அல்லது 3  நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வெங்காய  சட்னி யை......

இருங்கள்.....இருங்கள்.......படித்து செய்வதை விடவும்,   வீடியோவில்  பார்த்து தெரிந்து கொள்வது நல்லதாயிற்றே ...

இதோ வீடியோ.....



வங்கியில்  பணம் எடுக்கக் கால் கடுக்க நின்று விட்டு , வரும் உங்களவருக்கு இதை சாப்பிடக் கொடுங்கள்.. 

சாப்பிட்டு விட்டு  அடுத்து ATM க்யூவில்   நிற்க ரெடியாகி விடுகிறாரா ,இல்லையா பாருங்கள்.

பி.கு : " இட்லியும் இரண்டாயிரமும் " வெறும் ஜாலிப் பதிவு. இதில் அரசியல் எதுவும் இல்லை . 'துன்பம் வருங்கால் நகுக'  என்று படித்த பின் நகைத்து விட்டு கருத்திடுங்கள். 
தொலை  நோக்கு லாபத்தைப் பார்த்தால் இப்போதையத் துன்பம், மிக மிக சொற்பமே. அதுவும் தற்காலிகமே!

Friday, 18 November 2016

பிரியாவும் , ஔவையாரும்

"நீ இந்த புடைவையை எங்கே வாங்கினாய்? " பிரியா  கேட்க ,  நான் சற்றுப் பெருமையுடன்  என் புடைவையைப் பார்த்துக் கொண்டேன்.

" என்  கணவருடன், நான் ஷாப்பிங்  செய்த போது, இந்தக் கலரும், டிசைனும், நன்றாக இருக்கும் என்று அவர் தான் எடுத்துக் கொள்ள சொன்னார் பிரியா.. நான் அரை மனதுடன் தான் எடுத்துக் கொண்டேன், உனக்குத் தான் தெரியுமே . இந்தக் கலரில் நான் வாங்கவே மாட்டேன் என்று." சொல்லி முடிக்கவும்,

google image


சர்வர் நுரை பொங்கும் காபியை எங்கள் முன்னால் வைக்கவும் சரியாயிருந்தது. காபியின் மணம் மூக்கைத் துளைத்தது. இருவரும் பேச்சைப் பாதியில் நிறுத்தி  விட்டு காபியைக் குடித்து முடித்தோம். ஹோட்டல் பில்லைக் கட்டி விட்டு, ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தோம். இருவரும் இருப்பது ஒரே குடியிருப்பு வளாகம். வெவ்வேறு பிளாக்.

என் பிளாக்கைத் தாண்டி தான் அவள் வீட்டிற்கு போக வேண்டும். அதனால் வாயேன் கொஞ்ச நேரம் பேசி விட்டுப் போகலாம் என்று வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்ததும், ஃபேனை  திருப்பி விட்டு உட்கார்ந்தோம்.

பேச்சு அங்கே இங்கே சுற்றி , மீண்டும் என் புடைவைக்கே வந்தது.
பிரியா ,"  என் கணவர் புடவைக் கடைப் பக்கம் திரும்பிப் பார்க்கக்  கூட மாட்டார்."  என்று அலுத்துக் கொண்டாள்.
சட்டென்று அவளுக்கு  ஏதோ நினைவிற்கு வர,

" இவர் போன வாரம் என்ன செய்தார் தெரியுமா? இங்கே முதியோர்கள் எல்லோரும் சேர்ந்து கிளப் ஆரம்பித்திருக்கிறார்கள் இல்லையா?." என்று தொடர்ந்தாள்.

" ஆமாம்."

"அவர்கள் எல்லோரையும்  இவர் வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்தார்."

" அதனால் என்ன? நீயும் உட்கார்ந்து, அவர்களோடு  அரட்டை அடிக்க வேண்டியது தானே பிரியா.." இது நான்.

" என்ன அரட்டை வேண்டியிருக்கு சொல்லு ? அரசியல் பேச எனக்கு முடியாது.  அரட்டையோடு  விட்டாரா இவர்? எல்லோரும் காபி குடித்து விட்டுப் போனால் தான் ஆயிற்று என்று சொல்லி விட்டார். " சொன்னாள் பிரியா.

"காபி தானே பிரியா! நீயோ சமையல் ராணி. இதெல்லாம் பெரிய விஷயமா என்ன உனக்கு?"

"அதெல்லாம் சரி ராஜி. காபி போட பால் வேண்டுமா இல்லையா ? சொல்லு. . எப்பவும் ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ரா  இருக்கும் . நேற்று ஒரு பாக்கெட்  பால் பிரிந்து போனது. அது இவருக்கும் தெரியும். நாங்கள் இருவர் தானே. இருக்கும் இரண்டு டம்ளர் பாலை வைத்து  சமாளித்துக் கொண்டால் மீண்டும் நாளைக்குப் பால் வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இருக்கும் இரண்டு டம்ளர் பாலில்  எட்டு   பேருக்குக் காபியா சொல்லு ."

"கஷ்டம் தான் " ஒத்துக் கொண்டேன்.
"ஆண்களுக்கு நம் கஷ்டம் புரியாது பிரியா. எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாமே . என்னிடம் பால் இருந்தது.நான் கொடுத்திருப்பேனே.  ."
" அப்புறம் எப்படி சமாளிச்சே ?" கேட்டேன்.

"இதில் ஷர்மாவும்,  கோபாலும் வேண்டாம்.... எங்களுக்குக் காபி வேண்டாம் என்று கெஞ்சி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் , அதெப்படி  நீங்கள் வேண்டாம் என்று சொல்லலாம் . எங்கள்  வீட்டுக் காபி  ரொம்பவே  நல்லா இருக்கும். பிரியா , நீ காபி போடு. அவர்கள் குடிப்பார்கள்  "  என்று
மகாராஜா, சேவகனைப்  பார்த்து  சொல்வது போல்,எனக்கு ஆர்டர் போட , என்ன செய்வது என்று புரியாமல்   நான் முழிக்க, அதற்குள்  ஷர்மாவிற்கு  வந்த போன் தான் ஆபத்பாந்தவனாய்  காப்பாற்றியது.

"அவசர போன் என்று அவர் கிளம்பி விட அவருடன் இன்னும் இரண்டு மூன்று பேர் போய் விடவும், ஐந்து பேர் தான் இருந்தார்களா....
டீ போட்டு சமாளித்தேன்." என்று முடித்தாள்.

"அப்பாடி.... ஒருவழியாய்  சமாளித்தே பிரியா " நான் பெருமூச்சு விட....

"அப்புறம் நடந்ததைக் கேளு ..."பிரியா தொடர்ந்தாள்.

"எல்லோரும் போன பின்பு, என்றுமில்லாத திருநாளாய்,  இவர்  டீ குடித்த டபரா, டம்ளர் எல்லாம் எடுத்து வந்து சிங்க்கில்  போட்டு,  விம் கொடு .... நானே தேய்த்து விடுகிறேன் என்று என்னிடம் சொல்கிறார். இவர் கிச்சனில் எனக்கு உதவி செய்கிறாரா........ ? அசந்து விட்டேன் ராஜி...பிறகு தான் எனக்குப் புரிந்தது .. என்னை சமாதானப்படுத்துகிறாராம். " கோபத்தோடு சொன்னாள் பிரியா .

பிரியாவின் அன்புக் கணவர்  நிலையை நினைத்து எனக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தேன். நல்ல வேளை . சில நிமிடங்களில்  பிரியா கிளம்பி விட்டாள்.

இத்தனயும்  கேட்டுக் கொண்டு உள்ளிருந்து என்னவர் வெளியே வந்து ," உன்  
பிரண்ட்  ,  அனந்துவை( பிரியாவின்  கணவர்) ஒரு வழி  பண்ணி  விட்டாற் போல் தெரிகிறதே, என்று  சொல்லவும்  நான் அவரிடம் சொன்னேன்,

"இன்று,  நேற்றல்ல ...... விருந்தாளிக்காக  மனைவியிடம்  மாட்டிக் கொள்ளும் கணவர்கள்,  ஔவையார் காலத்திலிருந்தே இருக்கிறார்கள். "

"உனக்கு எப்படித் தெரியும்?'

ஔவையார் சொல்லித் தான் .

" ஓ....ஔவையாரை வழியில் பார்த்தாயா ? அப்பொழுது உன்னிடம் சொன்னாரா  இந்த மாபெரும் தத்துவத்தை.?" கிண்டலடித்தார்  இவர்.

"நான் பார்க்கவில்லை,....."   என்று தொடர்ந்தேன்
" ஔவையாரை, வழியில் பார்த்துத், தன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டால் தான் ஆயிற்று என்று  அழைத்து செல்கிறான்  ஒருவன்.  ஆனால் அதற்காக மனைவியிடம்,  அவன்  முறத்தால்  அடி வாங்கியதை  , பொல்லாத கிழவிப்  பார்த்து  விட்டு ஒரு பாட்டுக்  கட்டி விட்டாள் பாருங்களேன்."என்றேன்.


"இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா டோடத் தான் "


(இப்பாடலை தமிழ் இணையக் கல்விக் கழகம்  பக்கத்தில்  காண இங்கே கிளிக்கவும். நன்றி www.tvu.org)

"ஔவையாரை விருந்தினராக  அழைத்து சென்றவன், உள்ளே தனிமையில் தன மனைவியை தாஜா செய்கிறானாம். எப்படி என்கிறீர்கள்.? மனைவிக்குத் தலையை சீவி, அதோடு   தலையிலிருந்து, ஈர், பேன் எல்லாம் எடுத்து விட்டு, முகத்திற்கு மேக்கப் போட  உதவி செய்து, பின்னர் மெதுவாகத் தயங்கி, தயங்கி  ஔவையார் விருந்துக்கு வந்திருப்பதை   சொல்கிறான்.  அதைக்  கேட்டதும் . அவளுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லையாம்.  கணவனை திட்டித் தீர்த்து . ஒரு ஆட்டமே ஆடிவிட்டாள் என்கிறார் ஔவையார்.
அப்படியும் அவள் கோபம் அடங்கவில்லையாம்.  முறம் , அதுவும் பழைய  முறத்தால்  கணவனை வெளுத்து வாங்கி விட்டாளாம். ஓட ஓட  விரட்டி  அடித்தாளாம். "

என்று  முடிக்கவில்லை நான்......
.
 " இப்பொழுது என்ன சொல்ல  வருகிறாய்? அனந்துவை  ஜாக்கிரதையாக இருக்க சொல்லணுமா ? " என்னவர் சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ....

அவரைப் பார்த்து, "பாட்டு சொன்னால் ரசிக்கத் தெரியணும்,  கேள்வி கேட்கக் கூடாது.." சொல்லி விட்டு  நகர்ந்தேன்.


Thursday, 3 November 2016

அந்த சில நிமிடங்கள்......


google image
பைக் பள்ளியை நெருங்க நெருங்க வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பற்பல  வண்ணங்களில்  அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.

பள்ளி வாசலில்  இறக்கிவிடப்பட்டேன்.

"பயமாயிருக்கிறது.."
கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

"எதற்கு?"

"ஃபெயிலாயிட்டா ?"

'அப்படி எல்லாம் ஆகாது .தைரியமாய் போ.""

"சரி ...".கால்கள் பின்ன  மெதுவாக நடந்து முன்னேறினேன்.

பள்ளி வாசலில் இருந்த பெரிய வேப்பமரம் காற்றில்  அசைய, அதிலிருந்த காகம் கரையத் தொடங்கியது.

'அந்தக் காகமாய் மாறிவிடக் கூடாதா ?' என்கிறத் தவிப்பு மனதிற்குள்

நான்  படித்தது எல்லாம் மறந்து விட்டது போன்ற உணர்வு.

'குருபிரம்மா குரு விஷ்ணு  மகேஸ்வரஹா .....'. மாணவிகளின் கோரஸ் குரல் பளீரெனக் கேட்டது.
இன்னும் பயம் அப்பிக் கொண்டது.

 நானும் கூட சேர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டேன். 'என்னைக் காப்பாற்றுப்பா  ஆண்டவனே .'
திரும்பிப் பார்க்காமல் ஓடி விடலாமா என்று கூடத் தோன்றியது.

இருக்கும் தைரியத்தையெல்லாம் சேர்த்துப் பிடித்துக் கொண்டு , தலைமையாசிரியையின்  அறையை நெருங்கினேன்.

உள்ளே செல்லலாமா என்று யோசிப்பதற்குள்.,
பள்ளி  சிப்பந்தி , "காலை அசெம்ப்ளி முடிந்து, மேடம் வரும் வரை இங்கு அமருங்கள் ." என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

பத்து நிமிடம் ஓடியது. தலைமையாசிரியை  மாணவிகளுக்கு கொடுத்த  அறிவுரைகள் காதில் விழுந்தன. மனம் தான் அதில் செல்லவில்லை.

" இப்பொழுது கூட  நேரமிருக்கிறது  சட்டென்று எழுந்து வாசல் வழியே போய் விடு" என்று மனம்  அறிவுறுத்தியது.

அடுத்த நிமிடமே அதே மனம்," அப்படி பயப்பட என்ன இருக்கிறது? " என்று சமாதனப் படுத்த  இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தேன்.

பள்ளி மாணவிகள் வரிசையாக தங்கள் அறைகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.நானும் அவர்களில் ஒருத்தியாக சட்டென்று மாறிவிடக்  கூடாதா ? என்று மனம்  ஏங்க....

பள்ளி சிப்பந்தி என்னிடம் வந்து, " நீங்கள் உள்ளே செல்லலாம். " என்று சொல்ல ,தலைமையாசிரியை என்னைத் தாண்டி உள்ளே சென்றதைக் கூட கவனியாமல் குழப்பத்தில் இருந்திருக்கிறேன்.

மெதுவாக உள்ளே சென்றேன்.

தலைமையாசியையை என்னை வரவேற்று, "வாழ்த்துக்கள் " சொல்லி விட்டு, பள்ளி  சிப்பந்தியைப் பார்த்து," நல்ல நேரம் முடிவதற்குள் அட்டெண்டஸ்  ரெஜிஸ்டரில்  புது டீச்சரிடம்  கையெழுத்து  வாங்கி விடு. அப்புறம்  நளினி டீச்சரிடம் (AHM) அழைத்துக் கொண்டு போ" என்று சொன்னார்.

என்னுடைய நீண்ட ஆசிரியப் பணியின் முதல் சில நிமிடங்கள் தான் இது வரை நீங்கள் படித்தது.. என்னிடம் படிக்கப் போகும்  மாணவிகளில் பன்னிரெண்டாம்  வகுப்புப் பொதுத் தேர்வு மாணவிகளும் அடங்குவர்.

நான் நல்லபடியாகப் பாடம் நடத்த வேண்டுமே என்கிற பதைபதைப்புடன் இருந்தேன். இது நாள் வரை மாணவியாக மட்டுமே இருந்தவள் , ஆசிரியையாக பொறுபேற்ற போது எனக்குள் தோன்றிய மனப் பதட்டம் .

என்னால் அவர்களின்  வளமான எதிர்காலத்திற்கு  எந்த விதத் தீங்கும் நேர்ந்து விடக் கூடாதே என்கிறக் கவலையுடன் தான் என் பணியை ஆரம்பித்தேன்.

 எனக்கும், என்னவருக்கும் அன்று நடந்த உரையாடல் தான் நீங்கள் மேலே படித்தது.

ஆனால் ,'ஸ்டார்ட்டிங்  ட்ரபிள்' மட்டுமே என்னிடம் இருந்திருக்கிறது என்று எனக்கே புரிய ஒரு சில நாட்களானது..  அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்க  நேரமில்லாமல்  முழு ஈடுபாட்டுடன்  பணியைத் தொடர்ந்தேன்.

மிகுந்த மனத் திருப்தியுடன் பணியிலிருந்து விருப்ப( உண்மையில் மனமேயில்லாமல் தான் ) ஓய்வு பெற்றேன் .

Wednesday, 5 October 2016

ஜெய் ஹிந்த் !

image courtesy-google.
இன்று காலை  என் கணவர் வெளியே சென்று நெடு நேரமாகியும் வரவில்லை செல்பேசியில்  தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ரிங் போனது .அவர்  எடுக்கவில்லை.  மீண்டும்  எண்களை அமுத்தினேன்  பதிலில்லை. இரண்டு மூன்று முறை முயன்ற பின் என் மனம் "Panic Button"ஐ  அழுத்தியது.

 சரியான நம்பர் தானா என்று சரி பார்த்து ,  மீண்டும் முயன்றேன். இப்பொழுது " சந்தாதாரர்  தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு டயல் செய்யவும் "  என்கிற செய்தியை, தேனினும் இனிய குரலில் ஒரு  பெண்மணி  , கீறல் விழுந்த ரிக்கார்டாய்  சொல்லவும் , எரிச்சலானேன்.

சரி...... எஸ்.எம்.எஸ். .....அனுப்பி வைப்போம் என்று  " Where are you?
 " Are you ok?"  என்று ஒரு பத்து குறுஞ்செய்தி அனுப்பியாகி விட்டது .

இது  போதாது என்று  "வாட்ஸ் அப்" வழியாக  தொடர்பு கொள்ள முயலவும்,
"டிங் டாங்" என்று வாசல் மணியொலிக்கவும்  சரியாக இருந்தது.

வந்தவர் என்னவர் தான். அதற்குப் பிறகு எங்களுக்குள், என்ன மாதிரி சண்டை நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

சண்டை முடிந்து சமாதானபின் , கணவர் இணைய செய்தி ஒன்றை என்னிடம் கொடுத்து , " இரண்டு மணி நேரம் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று  பதை பதைத்தாயே.   இதைப் படித்து விட்டு அப்புறம் சொல்." சொன்னார்.

ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர்பற்றிய செய்தி அது.(பெயர் மட்டுமே கற்பனை)

ராணுவ அதிகாரியின் மனைவி ரேணுகாவும் அவர் கணவரும்  கல்லூரியில் படிக்கும் போது உருகி, உருகி  காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள்.  கணவர் ராணுவ அதிகாரியாகப் போகிறார் என்று தெரிந்தே, ரேணுகா காதல் திருமணம் புரிந்துக் கொண்டிருக்கிறார்.

திருமணமானப் புதிதில் ரேணுகாவும் ,கணவருடன் அவர் பணியிடங்களுக்குக் கூடவே பயணித்திருக்கிறார். அதெல்லாம் சிறிது காலத்திற்குத் தான். பிறகு ரேணுகா  தன் தொழிலிற்காகவும் , மகளின் படிப்பிற்காகவும்  மெட்ரோ நகரத்திலியே இருக்க முடிவெடுக்கிறார்.   கணவரோ காஷ்மீரப் பனிமலையில்  தேசப் பணியில் தவமாக இருக்க  நேரிடுகிறது.

ரேணுகா சொல்கிறார்,"நான்கு மாதத்திற்கு , ஒரு தடவை  , பதினைந்து  நாள் தான் என் கணவர், குடும்பத்துடன்  இருக்க நேரிடும். பதினைந்து நாளும் எனக்கும் என் மகளுக்கும் சொர்க்கம். அதற்குப் பிறகு அவர் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்.. மிகவும்  துன்பம் விளைவிக்கும் பிரிவு அது. ஆனால் என்னைப் போலவே என் மகளுக்கும் அவள் தந்தையின் பிரிவு பழகி விட்டது போல் தெரிகிறது. அதற்குப் பிறகு தினம் தினம் நாங்கள் பேசிக் கொள்வது செல்பேசியில் தான். அது தான் எனக்கும் என் கணவருக்கும்  இடையே பாலமாய் அமையும்."

"அதற்கும் சில நேரம் வேட்டு தான்.  பணி நிமித்தமாக சில இடங்களுக்கு செல்லும் போது, அவர் தொடர்பு எல்லையில் இருக்க மாட்டார். அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை எனக்கு.  மீண்டும் அவரிடமிருந்து வரும்  போன் தான் என்னை சகஜமாக்கும் .பெருத்த   நிம்மதியளிக்கும் .

அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் என் மகள் தான் எனக்கு ஆறுதல் சொல்வாள்," அம்மா. கவலைப்படாதே. அப்பா பத்திரமாக இருப்பார். நம் தேசத்திற்காகத் தானே  சென்றிருக்கிறார். " என்று சமாதானப் படுத்துவாள்."

இந்த செய்தியைப் படித்து முடித்தவுடன்,  மனம் ஒரு நிலையில் இல்லை.
 ஒவ்வொரு ராணுவ வீரரின் மனைவியும், அவர்களின் தியாகமும்   என் மனதிற்குள் வானளாவ  உயர்ந்து நின்றது.

(இவ்வளவு நாளாக இது உனக்குத் தெரியாதா? என்று கேட்காதீர்கள். சம்பந்தப்பட்டவர்களே, அவர்கள் அனுபவங்களை, பகிரும் போது நம் உணர்ச்சிகள்  நம்மை  தோற்கடித்து விடும் .)

பெரும்பாலான ராணுவத்தினரின் வாழ்க்கை முறை இது போல் தான் என்றுணர முடிகிறது.

வருடத்தில் ஒரே ஒரு நாள் "ஆர்மி டே" என்று கொண்டாடி விட்டு  நம் வேலைகளைப் பார்க்கப் போகிறோம். நாம் நிம்மதியாக வாழ்வதற்கு,   காஷ்மீரப் பனி மலையில், உறைய வைக்கும் குளிரில் ,தன் உறவு, உறக்கத்தை மறந்து , தன் உயிரைத் துச்சமாக நினைத்து, தேச நலனை மட்டுமே முன்னிறுத்தி  பணியில் இருப்பவர்களை ஒவ்வொரு நாளும்  நாம் கொண்டாட வேண்டும் என்றே தோன்றியது.

"திடீரென்று எதற்கு இந்த ஆர்மிப் பதிவு?" என்று யாரும் கேட்க மாட்டீர்கள். தெரியும்.

யூரியில்  வீரமரணமடைந்த  நம் வீரர்களுக்கு,  வீர வணக்கங்களையும் , அதற்கு தக்கப்  பதிலடிக் கொடுத்த நம் ராணுவத்திற்கு, சல்யூட்களையும்  காணிக்கையாக்குவோம்  வாருங்கள்.!

                                                                ஜெய் ஹிந்த்!                        

Friday, 23 September 2016

பழைய பஞ்சாங்கம்.

google image




 சென்ற வாரத்தில் எனக்கு  பல்லில் வலியான வலி.  கைவைத்தியமாக  கிராம்புத் தைலத்தை  உபயோகித்ததில்  சறறே நிவாரணம் தெரிந்தது. வலியை மறக்க டிவி பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்......
  டிவியில் எனக்காகவே காத்திருந்தாற்போல்,  திருமதி காஜல் அகர்வால் வந்து  "உங்கள் பற்பசையில்  உப்பு இருக்கிறதா?"  என்று கேட்டார்.

"என் பேஸ்ட்டில் உப்பு இல்லையோ. அது தான் வலியோ"  என்கிற  சந்தேகம் வந்தது.

ஒரு சில நாட்களுக்கு முன்பாக," உங்கள் பற்பசையில் கரி இருக்கிறதா என்று வேறு ஒரு நடிகை கேட்டதாக நினைவு.

மார்கெட் உத்தி எப்படியெல்லாம் இருக்கிறது பாருங்கள்.

நான் பள்ளியில் படிக்கும் போது பற்பசையை வீட்டிற்கு, சில விருந்தினர் ,வரும் போது அவர்கள் கையில் மட்டுமே பார்த்ததாக நினைவு.

"ஏன்  நீங்கள் எல்லோரும் பல் விளக்கியதாக  சரித்திரமே இல்லையா?"என்று கேட்காதீர்கள். நாங்கள் பல் விளக்கியது பற்பொடியில் அதுவும் 'ஹோம்மேட்' பற்பொடி .

"பற்பொடியை  வீட்டில் தயாரிக்க முடியும் "என்கிற செய்தி இளம் தலைமுறையினருக்கு பெருத்த ஆச்சர்யமளிக்கும்  விஷயம் என்பது உண்மை.

வீட்டுத் தயாரிப்பு மட்டுமே  நாங்கள் உபயோகித்தது. எப்படி தயாரித்தோம் என்று சொல்கிறேன்.

பலருக்குத் தெரிந்த விஷயமாகத் தானிருக்கும்.

அருகிலிருக்கும் செட்டியார் கடையில் தான் மளிகை சாமான்கள் வாங்குவோம். (ஸூப்பர் மார்கெட்,  பிக் பாஸ்கெட் இல்லாத காலம் அது.) அங்கே 'உமி'யும்  கிடைக்கும்.
'உமி' என்றால்  என்ன ? என்று கேட்பவர்களுக்கு...... நெல்லில் இருந்து 
அரிசியை எடுத்த பின்பு , மிச்சம் இருப்பது தான் உமி. அது  எட்டணாவிற்கு (ஐம்பது பைசா) இரண்டு அல்லது மூன்று படி கிடைக்கும்.

உமி இரண்டு படி வாங்கி வந்து, ஒரு பெரிய இரும்பு வாணலியில் கொட்டி ,  நெருப்பாய் கணன்று கொண்டிருக்கும் கரித்துண்டு , ஒன்றிரண்டை  உமியின் நடுவில் வைத்து வாணலியைக் காலையில் கொல்லையில் வைத்து விட்டு  மறந்து விடலாம். கொஞ்சம் கொஞ்சமாக உமி புகைந்து ,  கருகும்.

மாலையில்  பார்க்கும் போது , எல்லா உமியும் கருகி விட்டிருக்கும். சூடு ஆறின  பிறகு அதில் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கிராம்பு, எல்லாவற்றையும் கலந்து கல்லுரலில் போட்டு, உலக்கையால் இடித்து பொடியாக்கி ,வாசனைக்கு சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து,  ஒரு பெரிய டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்வோம்.

இது தான் 'ஹோம்மேட்' பற்பொடி.  அப்போதெல்லாம்  பல வீடுகளில் 'ஹோம் மேட், பற்பொடி தான் இருக்கும் .

எல்லாமாக சேர்ந்து,செலவு ஐந்து ருபாய்க்குள் அடங்கும்.

எட்டு பேர் அடங்கிய கூட்டுக் குடும்பத்திற்கு , இது இரண்டு, மூன்று  மாதத்திற்கு மேல் தாராளமாய்  வரும்.

பல்லாண்டு ஆரோக்கியமாய் இருந்தன பற்கள்.

பல்லிற்கும்,பர்சிற்கும்  நண்பனானது 'ஹோம்மேட்' பற்பொடி.

பல், பர்ஸ், பற்பொடி மூவரும்   நண்பர்களாய் இருந்தால் பொறுக்குமா? பலரின் கண்ணை உறுத்தியது. பிரிவினை  செயல்பாடுகள் ஆரம்பித்தன.

ஆகவே, மெதுவாக 'பேஸ்ட்'  பக்கம் நம்மை இழுக்கும் மார்க்கெட் உத்தி நடந்தது.

பல் விளக்குவதற்கு உப்பும், கறியும்,சாம்பலுமா? அவை  எல்லாம் பற்களைக் கெடுத்து விடும் என்று பிரெயின் வாஷ் செய்து, நம் கையில் "பேஸ்ட்டைத் திணித்தனர்  பெரும் தொழிலதிபர்கள்.
 நம் உடல் நலத்தில் தான் அவர்களுக்கு எவ்வளவு அக்கறை!

பேஸ்ட்டின் விலை  நம் பர்சைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.

வருடங்கள் உருண்டோடி விட்டன. மளிகை சாமான் லிஸ்ட்டில்  டூத்பேஸ்ட் இன்றியமையாத இடத்தை பிடிக்க ஆரம்பித்து விட்டன.

நாம் நம் பழைய  பழக்க வழக்கங்களிளிருந்து வெகு தூரம் வந்த பின்பு, இப்பொழுது பிரபல நடிகைகள் கையில் ஒரு மைக்கைக் கொடுத்து 
" உங்கள் பேஸ்ட்டில், உப்பு இருக்கிறதா? கரி இருக்கிறதா? . இந்தப் பேஸ்ட்டை உபயோகியுங்கள். அதில் கூடுதலாக வேம்பும் இருக்கிறது  ." என்று  விளம்பரப் படுத்துகிறார்கள். ..


 எதையெல்லாம் பல்லிற்குக் கேடு என்று அன்று அவர்கள் சொன்னார்களோ,  அதே உமி சாம்பல், உப்பு, வேம்பு, கூடவே  உடல் நலத்திற்குக் கேடு செய்யும் ரசாயணத்தை சேர்த்து, பிளாஸ்டிக்  ட்யூபில் அடைத்து டூத்பேஸ்ட்  என்று விற்று, நம் பர்சில் இருக்கும் பணத்தைப் பிதுக்கி எடுத்து விடுகிறார்கள்.

  அட... இதைத்தான் அப்பவே செய்தோமே பெரிய பொருட் செலவில்லாமல்! என்று சொன்னால்  பழைய பஞ்சாங்கம்  என்கிற பெயர் தான் மிஞ்சும்.

Wednesday, 24 August 2016

அம்மாவிடம் காட்டிக் கொடுக்கக் கூடாது!

கிருஷ்ணர் கதைகள் கேட்கவும் , சொல்லவும் அலாதி  இன்பம் தான் . கிருஷ்ண ஜெயந்தியாக இருப்பதால் , நான் படித்த கதையை சொல்ல ஒரு வாய்ப்பு அவ்வளவே.

இது நீங்கள்படித்த கதையாய் தான் இருக்கும்.



image courtesy-google.

கோகுலத்தில் நந்த கோபரின் இல்லம். தயிரும் , வெண்ணையுமாய் மணக்கிறது வீடு.  செல்வம் செழித்த  இல்லம். இருக்காதா என்ன? மஹாலஷ்மி கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக இருப்பாளே!

குழந்தைக் கிருஷ்ணன் தன்தோழர்களுடன் வீடு வீடாக சென்று தயிரையும், வெண்ணெயெயையும்  திருடிக் கொண்டிருக்கிறான்.  கோபிகைகளெல்லாம் வந்து," தாயே ! யசோதா " என்று முறையிட்ட போதெல்லாம் , "அதெப்படி என் கிருஷ்ணனை கள்வன் என்று சொல்லாம்?" என்று சண்டைப்பிடித்த யசோதைக்கு, இப்பொழுது பிரச்சினை .

ஆமாம். கள்ளக் கிருஷ்ணனின் சேனையிடமிருந்து தன வீட்டு உறியைக் காப்பாற்ற படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாள்.  அவள் சற்றே அயரும் போது , தடால் என்னும் சத்தம் எழுப்பும் . தயிரும் வெண்ணையும்  கீழே சிதற , திருட்டுக் கூட்டம் நாலா பக்கமும் ஓடும். ஆனால் கண்ணன் மட்டும் கைக்குக் கிடைக்க மாட்டான்.

இதற்கு ஒரு முடிவுக் கட்ட வேண்டுமே! யோசித்தாள்  யசோதா .....
ஆமாம். இப்படித்தான் செய்ய வேண்டும் என்று மனதிற்குள்  திட்டம் போட்டுக் கொண்டு , வெண்ணெய் கடைந்துக் கொண்டிருந்தாள். 

பின்னாலிருந்து இரண்டு பிஞ்சுக் கைகள் அவள் கண்களை மறைக்க, "அம்மா என்னைக் கண்டுபிடிப் பார்க்கலாம்." என்கிற மழலைக் குரல் யசோதையை மயக்கியது.. ஆனாலும் , யசோதை நினைத்துக் கொண்டாள், " இதற்கெல்லாம் நாம் அசரக் கூடாது. நம் திட்டத்தை இன்று நிறைவேற்றி விட வேண்டியது தான்." மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் . 

நண்பகல் . எல்லோரும் மதிய உணவு உண்ட பின்பு , கிருக்ஷ்ணரிடம் , " கிருஷ்ணா, போய் விளையாடு. எங்கேயும் போய் வெண்ணெய் திருடக் கூடாது. சரியா? எல்லோரும் உன்னைத் திருடன், கள்வன் என்று சொல்லும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா?" என்று யசோதை சொல்ல,

கிருஷ்ணன், " இல்லேம்மா , நான் எங்கேயும் போகவில்லை. நம் வீட்டு முற்றத்திலேயே விளையாடுகிறேன். நீ போய்த் தூங்கு." என்று சொல்லி விட்டு ஓடவும், யசோதைத் தன் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினாள்.

தயிர், வெண்ணெய் வைத்திருக்கும்  உறியிலிருந்து,  ஒரு கயிற்றைக்  கட்டி அதன் மறுமுனையை  பக்கத்து அறைக்குக் கொண்டு போய், அதன் நுனியில் ஒரு மணியையும்  கட்டி விட்டாள். பிறகு , உறியை மெதுவாக ஆட்டவும், மணி 'கிணி கிணி ' என்று அடித்தது.

ஆக, வெண்ணெய் திருடும் போது கிருஷ்ணனை இன்றுக் கையும் களவுமாகப் பிடித்து விடலாம் என்று உறுதிப் படுத்திக் கொண்டு,  சற்றே கண்ணயரத் தொடங்கினாள்.

இப்பொழுது உள்ளே ஓடி வந்த கிருஷ்ணன் ,யசோதை தூங்கி விட்டாளா என்று உறுதி செய்து கொண்டான்.  சட்டென்று உறியில் தொங்கும் கயிறு அவன் கண்ணில் பட, அந்தக் கயிற்றைத் தொடர்ந்து சென்று பார்க்க இறுதியில் மணி ஒன்றுக் கட்டப்பட்டிருந்தது..

இது தான் விஷயமா? என்று நினைத்துக் கொண்டு, மணியிடம், " மணியே !மணியே ! " என்று கூப்பிடவும், மணி விழித்துப் பார்த்தது. கூப்பிட்டவன் கிருஷ்ணன் என்று தெரிய அதற்கு ஒரே குஷி தான்.

"மணியே ! எனக்கு ஒரு உதவி செய்வாயா ? "என்று கிருஷ்ணன் கொஞ்சிக் கேட்க,

மணிக்கோ ஒரே சந்தோஷம். "என்ன பாக்கியம் செய்தேன் நான். பரம் பொருளே என்னிடம் உதவி கேட்கிறாரே."  ,
" பரம் பொருளே சொல்லுங்கள்! இல்லை...இல்லை .....ஆணையிடுங்கள். செய்யக் காத்திருக்கிறேன்." என்று மணி சொன்னது.

"நானும் என் நண்பர்களும் வெண்ணெய் திருடும் போது  நீ சப்தம் செய்து  என்னை அம்மாவிடம் காட்டிக் கொடுக்கக் கூடாது". என்று கிருஷ்ணன் சொல்லவும், மணி சந்தோஷமாக ஒத்துக் கொண்டது. "வாக்கு மாற மாட்டாயே!"  என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு  , வெளியே நிற்கும் தன் நண்பர்களை , சைகையால் உள்ளே வரவழைத்தான் கண்ணன்.

பின் ஒருவர் மேல் ஒருவர் ஏறி , உறியிலிருந்து , வெண்ணெய் பானையை ஓசைப்படுத்தாமல் கீழே இறக்கினார்கள் .

மணியும் ஓசையே செய்யாமல்  நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது..

பிறகு, வெண்ணெயை உருண்டை உருண்டையாக எடுத்து  தன் நண்பர்களுக்கு வாரி வழங்கினான் கிருஷ்ணன்.எல்லோரும்  கட்டிக் கட்டியாக வெண்ணெயை  முழுங்கினார்கள்.

ஊஹும்.....அப்போதும் மணி மூச்சுக் காட்டவில்லையே.

எல்லோருக்கும் கொடுத்து முடித்தப் பிறகு, தன் பிஞ்சு விரல்களால் வெண்ணெயை அள்ளி, தன் செம்பவழ  இதழில் வைக்கவும்,

 "கிண்  கிணி , கிண்  கிணி " என்று மணியோசை யசோதையை எழுப்பியது.

யசோதை திட்டம்  பலித்து விட்ட மகிழ்ச்சியில் வரவும், கிருஷ்ணன், கை, வாய், குண்டு கன்னம் எல்லாம்  வெண்ணெய் வழிய  எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. யசோதை தாவிப் பிடித்தாள் கிருஷ்ணனை. " கையும் களவுமாக மாட்டிக் கொண்டாயா?. இன்று உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபமாக சொல்லவும்.

"கொஞ்சம் இரும்மா  .இதோ வந்து விடுகிறேன்"என்று சொல்லி விட்டு மணியிடம்  ஓடினான்  கிருஷ்ணன்.

" மணியே! கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனாயே . உன்னை நம்பித் தானே இந்த வேலையில் இறங்கினேன்." என்றுகிருஷ்ணன் கேட்கவும்,

மணி சொல்லியது," பரம் பொருளே ! தாங்கள் உறியைத்த் தொடும்போது சப்தித்தேனாசொல்லுங்கள் பிரபுவே.."

"இல்லை" என்றான் கிருஷ்ணன்.

"உறியிலிருந்து பானையை இறக்கினீர்களே. அப்பொழுதாவது  சப்தம் போட்டேனா ? "

"இல்லை."

"உங்கள் நண்பர்களுக்கு  வெண்ணெயை  பகிர்ந்து கொடுக்கும் போது ஏதாவது சப்தம் செய்தேனா ?"

"இல்லை."

"அவர்கள் உண்ணும் போது கூட , நான் சப்தம் செய்யவில்லை தானே.?"

"ஆமாம். நீ அப்பொழுதும் சப்திக்கவில்லை.. பின் நான் உண்ணும் போது மட்டும்  சரியாக சப்தம் செய்துக் காட்டிக் கொடுத்து விட்டாயே. அது ஏன்?" என்று கோபமாகக் கிருஷ்ணன் கேட்க,

"பரம் பொருளிற்கு நைவேத்தியம் செய்யும் போது, மணியடிக்காமல் இருக்கலாமா? அது என் கடமை அல்லவா? அந்த நினைவில் அடித்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் ." என்று மணி கிருஷ்ணன் திருவடிகளில்  விழுந்து வணங்கியது.

அதற்குள் யசோதை அங்கு ஆஜர்," இன்று உன்னைக் கண்டிப்பாக உரலில் கட்டுகிறேன் பார் என்று கோபமாகக்  கிருஷ்ணனை கையைப் பிடித்துக் கொண்டு செல்ல, ,

கிருஷ்ணனோ,  ஜன்னல் வழியாகத் தன நண்பர்களைப் பார்த்து, கள்ளத் தனமாக சிரிக்கிறான் .

அவனுக்கு மட்டும் தானே  தெரியும் எதற்காக இப்படி உரலுக்குக் கட்டுப்படுகிறான் என்று!


Friday, 5 August 2016

நாமும் பணம் படைத்தவர்களே! (அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு- 8).


அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-7 படிக்க இங்கேகிளிக்கவும்.


image courtesy-http://www.clipartlord.com


ராசி "Tiffany Drive" இல்  தன் மகன் ராஜேஷ் ,பேரன் அர்ஜுனுடனும்,நடந்து  சென்று கொண்டிருந்தாள் . அமெரிக்கா வந்தப்  புதிதில், "பரவாயில்லையே இங்கு வீட்டிற்கு அருகிலேயே ஒரு டிரைவ் இன்  ஹோட்டல் இருக்கிறதே" என்று நினைத்துக் கொண்டிருந்தாள் .

தன் மகனிடம், "என்னடா... இந்தக் குடியிருப்பு வளாகத்திலேயே டிரைவ் இன் ஹோட்டல் இருக்கிறதே" என்று சொல்ல,  முதலில் ராஜேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. Tiffany drive என்கிற பெயர் தான்  அம்மாவைக் குழப்பியிருக்கிறது என்று பின்னர் ராஜேஷிற்குப் புரிய, அது தெருப் பெயர் மட்டுமே என்று  விளக்கி சொன்னான்i

இன்று  Tiffany drive வழியாக, நடந்து போகையில், இது மனதில் ஓடியதில் ராசி முகத்தில்  ஒரு சின்ன புன்னகை வந்தது. சின்னப் புன்னகையுடன்  நடந்தவள் எதிரே 'புசுபுசு' வென்று வெள்ளைப் பந்துருண்டை போலிருந்த நாய்க்குட்டியை, அமெரிக்கப் பெண்மணி ஒருவர், அழைத்துக் கொண்டு போனார்.
ராசியைப்  பார்த்து ஹாய்  சொல்லவும், பதிலுக்கு ராசியும் ஹாய் சொல்ல இப்பொழுது பழகிக் கொண்டிருந்தாள் .

ராஜேஷிடம்   , " அந்த   'டாக் ' நல்ல அழகு , இல்லடா ?" என்று ராசி  கேட்கவும்,
ராஜேஷோ , " கத்திப்  பேசாதேம்மா . நாய் என்று சொல்லக் கூடாது. நீ இங்லிஷீல் வேறு சொல்கிறாய் "

"ஏண்டா  நாயை, நாய் என்று சொல்லாமல் பின்னே எப்படி சொல்வார்கள்.  "

" இது அவர்கள் வீட்டு செல்லப் பிராணி அம்மா. அதற்கென்று ஒரு பெயர் இருக்கும், அதை சொல்லித் தான் கூப்பிடனும்."

"எனக்கு எப்படிடா அவர்கள் வீட்டு நாயின் பேர் தெரியும்?"

"அம்....மா நாய் என்று சொல்லாதே என்றால் எத்தனை தடவை  நாய் என்று சொல்கிறாய்?  தங்கள் வீட்டு செல்லப் பிராணிக்காக கோர்ட்டிற்குப் போகக் கூடத் தயங்க மாட்டார்கள் அமெரிக்கர்கள்."

"போடா நீயும் உன் அமெரிக்காவும். இம்மென்றால் சிறைவாசம்! உம்மென்றால் வனவாசம்! என்பார்கள் போலிருக்கிறது...என்னவோ போ ... நீங்களெல்லாம் எப்படித்தான் இங்கே இருக்கிறீர்களோ புரியவில்லை!"

"இந்தியாவில், எதற்கெடுத்தாலும், டிவிக்களில் " போச்சு... போச்சு .....கருத்து  சுதந்திரம் போச்சு" என்று கூப்பாடு போடுகிறார்கள். அதற்கு அமெரிக்காவும் ஜால்ரா . இங்கே என்ன வாழ்கிறதாம்?. நாயை.... நாய் என்று சொன்னாலே குற்றமாம்."

அப்பொழுது , ராஜேஷ் ," அதை விடு.இங்கே பார்.... இந்த மரத்தில்......"  காட்டிய இடத்தில் படம் ஒன்று ஒட்டி இருந்தது.

ராசி, கண்ணாடியை கழட்டித்  துடைத்து மாட்டிக் கொண்டு,"என்னது அது? நாய் மாதிரி தெரிகிறதே."  சொல்லி விட்டு 'நாய் 'என்று சொன்னதற்காக நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

"என்ன போட்டிருக்கு?"

அதில் பெரிதாக  ," காணவில்லை"   என்று  'நாய்' படம் ஒன்றைப்  போட்டிருந்தார்கள். அதன் பெயர்,உயரம், நீளம், கலர்,  கடைசியாக பார்த்த இடம் நேரம் ...இத்யாதி...... இத்யாதி..... ,
கண்டுப்  பிடித்து கொடுப்பவர்களுக்கு  நல்ல சன்மானம் வழங்கப்படும் என்றும் இருந்தது."

ஆச்சர்யத்தில், திறந்த வாய், மூடவில்லை  ராசி.
அட........ செல்லப் பிராணி தான் என்றாலும்  இப்படியா?

கூந்தல் இருக்கும் சீமாட்டி அமெரிக்கா!  சீவி முடிக்கிறா, சிங்காரிக்கிறா? நமக்கென்ன  வந்தது........ம்க்கும்... என்று பெரிய  பெருமூச்சை விட்டு விட்டு நகர்ந்தாள் ராசி.

அன்று மாலையே ராசிக்கு  இன்னும்  பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது .
மாலை எல்லோருமாக அங்கிருக்கும் சரவண பவனிற்கு இரவு உணவு சாப்பிட சென்றிருந்தனர்.

வரும் வழியில் ராஜேஷ் சொன்னான்," அம்மா  'மிஸ்ஸிங் பெட்'  நோட்டீஸ் பார்த்து ஆச்சர்யப்பட்டாயே!. இங்கே ஒன்று காட்டுகிறேன் பார்," என்று சொன்னான்.

"என்னடா ?"

காரை ஓட்டிக் கொண்டே ," இடதுப் பக்கம் பார்." என்றான்.


 " பார்லர் " என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்க  " ஆமாம்! பார்லர் இருக்கு அதற்கு என்ன ?' என்று   ராசி கேட்க

"யாருக்குப் பார்லர்?" என்று நன்றாகப் பார்த்து சொல் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தினான் ராஜேஷ்.

" ஆமாம்டா ' பெட் பார்லர் ' என்று போட்டிருக்கு. இங்கே என்னடா செய்வார்கள்? "என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே  ஒரு பெண்மணி ," வெள்ளை நாய்க்கு அங்கங்கே  பிங்க் கலரில் அதன் ரோமங்களை  கலரடித்துக் கொண்டு , அதன் தலையில் அழகிய' பிங்க் போ'வை சரி செய்து கொண்டே  அதற்கு முத்த மாரி பொழிந்து கெண்டே வந்தார். .

அருகிலிருந்த தன் காருக்கு சென்று," பின் சீட்டைத் திறந்து , அதைக் கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி சீட்டில் விட்டு, பிரியா விடை பெற்று முன் கதவைத் திறந்து,  டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டு காரைக் கிளப்பிக் கொண்டு போனார். பார்த்துக் கொண்டிருந்த ராசிக்கு, மயக்கம் வரும் போலிருந்தது.

"எல்லாம் பணம் படுத்தும் பாடு!." நினைத்துக் கொண்டாள் ராசி.
இது நடந்தது சில வருடங்களுக்கு முன்பு.

இந்தியாவிலும், இப்பொழுது செல்லப் பிராணிகளுக்கு  பார்லர்கள் அங்கங்கே முளைத்து கொண்டிருக்கின்றனவே.
அப்படி என்றால் ராசியைப் பொறுத்த வரை நாமும் பணம் படைத்தவர்கள் தானே.(LOL)
,

Thursday, 9 June 2016

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - 7.

ராசிக்கு ஆங்கிலம் தெரியுமே!

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --6 படிக்க இங்கே க்ளிக்கவும்.

image courtesy-wikkimedia commons.


ராசியும், விஷ்ணுவும்  அமெரிக்கா வந்தது,அவர்கள் மகன் ராஜேஷ், மருமகள் ஆர்த்தி  இருவருக்குமே, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை விடவும் பேரன் அர்ஜுன்,  தாத்தா-பாட்டி பாச மழையில் நனைந்துக் கொண்டிருந்தான் .

ராஜேஷ் இருவரையும் வாராவாரம் எங்காவது  அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான் . அங்கிருக்கும் சுத்தம், ஒழுங்கு, விண்ணை முட்டும் கட்டடங்கள்,  ஹாரன் சத்தமே இல்லாமல் ஓடும் வண்டிகள், முக்கியமாக போக்குவரத்தில், வண்டிகளுக்கிடையே இருக்கும் நான்கைந்து அடி இடைவெளி  ......ஆகிய விஷயங்கள் அவர்களை மலைக்க வைத்தன.

சில விஷயங்கள் அவர்களை சற்றே பயமுறுத்தவும் செய்தன. இல்லை என்று சொல்ல முடியாது. அதிலொன்று 911. அந்தப் பயத்தை  அவர்களிடையே உண்டு பண்ணியதில் பெரும் பங்கு அவர்கள் பேரன் அர்ஜுனையே சாரும் . அவன் பள்ளியில் சொல்வதை  இவர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தான் எனலாம்.

எப்பொழுது நடைப் பயிற்சிக்கு ராசியும் விஷ்ணுவும் கிளம்பினாலும், " பாட்டி 911 மறக்காதே. என்ன பிரச்சினையானாலும் 911 கூப்பிட்டு விடு . நீயும் எந்தப் பிரச்சினையிலும் போய்   மாட்டிக் கொள்ளாதே அப்புறம் அவர்கள் 911ற்கு போன் செய்து விடுவார்கள் .  என்று பயமுறுத்தி வைத்திருந்தான்.

பள்ளியில் தற்காப்பிற்காக சின்ன குழந்தைகளுக்கு,  சொல்லிக் கொடுப்பதைப் பற்றி   ஆச்சர்யப்படாமல் இருக்க முடிவில்லை .
அன்றொரு  நாள் இப்படித்தான் அக்டோபர் மாதம் முதல் வாரம்.. "யார் இந்த மரங்களுக்கு மருதாணி வைத்துவிட்டது?  எல்லா மரங்களும் இப்படி  அரக்கு சிவப்பாக மாறியிருக்கிறதே!" என்று நினைத்துக் கொண்டே  அவற்றை 'ஆ' வென்றுப் பார்த்தபடி  நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தாள் ராசி. மகன் ராஜேஷ் குடியிருக்கும் வளாகத்திற்குள் தான் நடப்பாள். விஷ்ணு வரவில்லை என்று சொல்லி விட்டதால் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாள் .

சட்டென்று எதிரே பார்த்தால்  பக்கத்து  வீட்டுப் பெண்மணி. தன்  இரண்டு வயதுப் பெண்ணை  அழைத்துக் கொண்டு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் . அப்பெண்மணியின் பெயர் லூசி என்று தெரியும். ஆனால் அதற்கு மேல் அவளிடம் ராசி பேசியது இல்லை.

ராசிக்கோ ஆங்கிலமே தகராறு. அதிலும் அமெரிக்கர்கள்  பேசுவது புரிவதேயில்லை என்று புலம்புவாள். அது ஏன்  பல்லிடுக்காலேயே பேசுகிறார்கள். இவர்கள் பேசும் போது கரண்டிக் காம்பினை விட்டு நெம்பினால்  சற்றுப் புரியுமோ என்னமோ என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வாள்.   வெளியே சொல்வதில்லை.. எதற்கு வம்பு சொல்லுங்கள். எதையெடுத்தாலும் 911 என்று பயமுறுத்துகிறார்கள்.

எதிரே  இரண்டு வயது பெண்னுடன் நடந்து வரும் லூசி, ராசியைப் பார்த்து 'ஹாய்' என்று சொல்லவும், ராசியும் பதிலுக்கு  'ஹாய்'
 என்று சொல்லி வைத்தாள் . லூசியின்  பெண்ணைப் பார்த்தாள் ராசி.  எதற்காகவோ  அழுதுக் கொண்டிருந்தது அக்குழந்தை.

அரை குறை ஆங்கிலத்தில்   " ஒய்  க்ரை? " ராசி கேட்கவும், லூசி  படபடவென்று  ஆங்கிலத்தில் சொன்னதில்  கொஞ்சமே, கொஞ்சம் புரிந்தது  ராசிக்கு.

" அட.ப்  பாவமே!" நினைத்துக் கொண்டே  நகர்ந்தாள்  ராசி.

ஒரு மணிநேர நடைப்  பயிற்சியை முடித்து விட்டு , வீட்டிற்குத் திரும்பினாள்  ராசி.

ஹாலில், ராசியின் கணவர் விஷ்ணு, ராஜேஷ், ஆர்த்தி,  டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். பேரன் அர்ஜுன், மட்டும் கையில் ஒரு கார் பொம்மையை வைத்துக் கொண்டு  டர் .......டர் என்று கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

ராசி உள்ளே வந்து ஆசுவாசபடுத்திக் கொண்டாள் .

ஆர்த்தி  "மாமி ஜூஸ் குடிக்கிறீர்களா?" என்று கேட்கவும் ,

"ஒரு டம்ளர் கொடேன்."  என்று ராசி சொல்ல

விஷ்ணுவோ நமுட்டுச்  சிரிப்பு சிரித்தார்.

" இப்ப எதற்கு  சிரிப்பு ?" ராசி கோபமாக கேட்டாள் .

" இல்லை நினைத்துப் பார்த்தேன். ஒரு மணி நேரம் நடந்து குறைத்ததை  , இரண்டு நிமிடத்தில் சரி செய்து விடுவாயே என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது."

"ஆனாலும் ராசி நீ பத்திரமாகத் திரும்பி வரவேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா?"

" ஏன்?  என்ன ஆகிவிடும் எனக்கு. இந்த வளாகத்தைத் தாண்டுவதேயில்லையே நான் "  என்று புருவம் நெரித்தாள் ராசி.

"அதற்கில்லை.  உன்னால் பேசாமலே இருக்க முடியாதே . யாரிடமாவது எதையாவது உளறி வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணுமே என்று தான் , " இது விஷ்ணு.

"ஆமாம் . உங்களுக்கு எப்பவுமே நக்கல் தான் ." சலித்துக் கொண்டே ராசி ஜுஸ் குடித்து விட்டு டம்ளர் வைக்க உள்ளே கிளம்பினாள் .

அதற்குள் அவளுக்கு லூசி நினைவு வரவே ." ஆர்த்தி இன்று லூசியைப் பார்த்தேன்  "

"அப்படியா?   பக்கத்து வீட்டு லூசி அங்கே  எங்கே வந்தாள் ? "ஆர்த்தி  விசாரிக்க ,

விஷ்ணுவோ, " அதானே பார்த்தேன்.  பேசாமல் இருக்க மாட்டாயே என்று நினைத்தேன். எதிலேயும் மாட்டிக் கொள்ள வில்லையே   ," பாதி கிண்டலுடன், பாதி நிஜமான அக்கறையுடன்   கேட்க ஆர்வமானார்.

ராசி விஷ்ணுவைப் பார்த்து  ஒரு முறைப்புடன், கழுத்தை வெட்டிக் கொண்டாள் .

ராசி , "லூசி , அவளுடைய இரண்டு வயதுப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தாள் ."

" அவள் பெண் குழ்நதை என்ன அழகு தெரியுமா?  அந்தப் பெண் குழந்தையின் பேர் "ரோஸ்" என்று  வைத்திருக்கிரார்களாம்.. சரியான பேர் தான் . ரோஜாப்பூ  கலரில் இருக்கிறது. , பிங்க் கலரில்  கவுன் மாட்டிக் கொண்டு.......  ஹ ....ப்பா ....... என்ன அழகு ?  கை விரல்கள் எல்லாம் நம் ஊட்டிக் கேரட் மாதிரில்ல  இருக்கு". ."."

"அவளிடம் பேசினாயா " ராஜேஷ் அவசரமாகக்  கேட்டான். அவன் பயம் அவனுக்கு. குழந்தைகளுக்கு அமெரிக்கர்கள்  கொடுக்கும் முக்கியத்துவம்  சொல்லி மாளாது. விளையாட்டாக ஏதாவது சொன்னாலே , உடனே என் குழந்தை மன  நிலையில் மாற்றம் தெரிகிறது . அது நீ சொன்ன ஒரு வார்த்தையால் தான் என்று கோர்ட்டிற்கு நம்மை இழுத்து விடுவார்கள்.  ராசி  எதையாவது விளையாட்டாக  சொல்லி,  வம்பாகி விடப் போகிறதே என்று ராஜேஷ் பயந்தான்.

" நான் ஒரு வம்பையும் விலைக்கு வாங்கவில்லை. ஒரு ஹாய் சொன்னேன் அவ்வளவு தான்."

"கடவுளுக்குக் கண்ணில்லையோ என்னமோ? எல்லாம் அவரவர் விதிப்பயன் "....என்று  ராசி அங்கலாய்க்க......

 குழம்பிய எல்லோரும் ராசியையே பார்க்க  அவள் தொடர்ந்தாள் ,

" ஆனால்  பாருடா ராஜேஷ் அவ்வளவு அழகானப் பெண் குழந்தைக்கு....."

"ஏன்  ? என்னாச்சு? " விஷ்ணு நிஜ அக்கறையுடன் வினவ

" அந்தப் பெண் லூஸாம் . "

" லூஸா  " கோரசாக  கத்தினர் ராஜேஷும் ஆர்த்தியும்.

" யாரு லூஸூ ?" ராஜேஷ் குரலில் பயம்  தொனித்தது .

" லூசி  பெண் தான். " ராசி சொன்னாள் .

" அப்படியெல்லாம் ஒண்ணுமிருக்காது அம்மா .அதுவுமில்லாமல் இரண்டு வயதுக் குழந்தைக்குப் பைத்தியம் என்று சொன்னால் நம்ப முடியுமா . நீயே சொல்லு." என்று  ராஜேஷ் சொல்லவும்.

'பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லைடா ராஜேஷ். "

"பின்னே எப்படி சொல்கிறாய் அது லூஸு  என்று....."

"நான் சொல்லலைடா.. லூசி  தான் சொன்னாள்  ."

" என்ன சொன்னாள் ? நடந்து போகும் உன்னை நிறுத்தி என் பொண்ணு லூஸு ன்னு  உன்கிட்டே வந்து  சொன்னாளா ?   யாரிடம் கதை விடுறே? நீ ஏதாவது அந்த மாதிரி கேட்டு விட்டு என்னையும் சேர்த்து வம்பில் மாட்டி விடப்போறே போலிருக்கு ." என்று தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

" நான் ஏண்டா பொய் சொல்லப் போகிறேன்.  அவள் தான் சொன்னாள் . சொல்லாமல் எனக்கெப்படித் தெரியும் சொல்லு."

"நீ ஏதோ வம்பில் மாட்டாமல் இந்தியா திரும்ப மாட்டேன்னு நினைக்கிறேன் ." ராஜேஷ் கோபமாகக் கத்த

இப்பொழுது விஷ்ணு, முன்னாடி வந்து கரகாட்டக் காரனில் வரும் திருமதி கோவை சரளா போல்  கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தார் .

"நீ பார்த்தது லூசி  தானா?"

"ஆமாம்."

"அவள் பெண்ணையும் பார்த்தியா ?

"ஆமாம் ஹாய் சொன்னேன்."

"பிறகு என்ன நடந்தது ராசி....சொல்லேன்."

" அந்தச் சின்னக் குழந்தை அழுதுக் கொண்டேயிருந்தது."

 பிறகு.....

"எதற்கு அழுகிறாள் " என்றுக் கேட்டேன். அதற்குத் தான் அவள் சொன்னாள்

"அவள் பைத்தியம் "  என்று.

" அவள் சொன்னதை அப்படியே சொல் ராசி" என்று விஷ்ணு  வக்கீல் போன்று குறுக்கு கேள்வி கேட்க ,

"படபடவென்று எதையோ லூசி சொன்னாள் . எதுவும் புரியவில்லை. ஆனால் கடைசியில் குழந்தையைக் காண்பித்து " ஷி இஸ் மேட்(mad) அட் மீ " என்று சொன்னாள் . " மேட்(mad) "  என்று சொன்னால் பைத்தியம் தானே. அதான் சொன்னேன்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ,ஆர்த்தி,' "  மாமி அவள்  ரோஸ் பைத்தியம் என்று சொல்லவில்லை. கோபமாயிருக்கிறாள்  என்று சொல்லியிருக்கிறாள்."

" இப்பொழுது  ராசிக்குக் கோபம் வந்தது. எனக்கு அவ்வளவா ஆங்கிலம் வராது தான் ஆர்த்தி.. அதற்காக  "மேட்"  என்றால் கோபம் என்று சொல்கிறாயே. என்னை வைத்துக் காமெடி செய்யறே இல்ல. நான் உன் மாமியார் நினைவில் வைத்துக் கொள். நான் வேண்டுமானால்  டிக்ஷனரியைக்  காட்டட்டுமா? " என்று ராசி கோபமாகக் கத்த ,

விஷ்ணு வந்து ராசி தோளைத் தொட்டு " கத்தாதே ராசி . ஆர்த்தி சொல்வது சரி." இந்த ஊர் சொல்வடை  இது. "

"நான் விளக்குகிறேன் வா."

ஆனால் ராசிக்கு மட்டும் இது விளங்கவேயில்லை. " எனக்கு ஆங்கிலம்அவ்வளவா  தெரியாது என்பதால் தானே  எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள் . . அடுத்த  வருடம் இங்கே வருவதற்குள்  ஆங்கிலம்  பேசக் கற்றுக்  கொண்டு ,எப்படி ஆங்கிலத்தில் விளாசிக் காட்டுகிறேன் பார் " என்று சொல்லிக் கொண்டாள் .

ஆர்த்தி அந்த இடத்திலேயே இருக்கவில்லை. வரும் சிரிப்பை அடக்க முடியாமல் நகர்ந்தாள் .

"  ஷி இஸ் மேட் அட் மீ( she is mad at me) " என்பதற்கு என்ன அர்த்தம் என்று ராசிக்கு நீங்களே சொல்லுங்களேன்.

பி.கு : சொல்ல மறந்து விட்டேனே . இந்தக்  கட்டுரையை பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பி வைத்தேன் . அவர்கள் வெளியிட்டதாகத் தெரியவில்லை.
"பரவாயில்லை  விடு ராஜி. அவர்கள் வெளியிடவில்லை  என்றால் இழப்பு அவர்களுக்குத் தானே  தவிர உனக்கில்லை. பத்திரிக்கையின் விற்பனையை பலமடங்காக்கியிருப்பாய். தவற விட்டு விட்டார்கள்.
நீ அதை வைத்து அரட்டை அடித்து விடு" என்று என்னவர் ( கின்டலாக) சொல்ல, அதை நானும் சிரமேற்கொண்டு விட்டேன்.
 கணவர் சொல்லைத் தட்டலாமா? என்ன ?




Saturday, 7 May 2016

நீங்கள் உல்லன் அன்னையா?


தொலைக் காட்சியில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது. அம்மா மகனைப் பள்ளிக்கு   அழைத்து செல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சி. அது மிதமானக் குளிர்கால காலைப்  பொழுது.  மகனுக்கு முதலில்  உல்லன் குல்லாயை  மாட்டி விடுவார் அம்மா.

 பிறகு நடந்துக் கொண்டே   ,",இந்தக் கம்பளி சால்வையை  அணிந்து கொள் " என்று சொல்லி கம்பளி  சால்வையை நீட்டுவார் .இன்னும் சில வினாடிகளில்  அடுத்து  ஸ்வெட்டரைக் கொடுத்து, அணிந்துக் கொள்ள சொல்வார். 

ஆனால் அருகிலயே அவர் மகனின் நண்பன்  எந்த கம்பளி ஆடையும்  இல்லாமல் நடந்து வருவதைப் பார்க்கும் போது, அதிகமானக் குளிரில்லை என்று  புரிகிறது.  

ஆனால் பாசத்தால் , கம்பளியால்  மகனைப் போர்த்திக் கொண்டேயிருக்கும அம்மாவை "உல்லன் அம்மா" என்று  அடையாளப்படுத்தலாம் என்று தோன்றியது.

அந்த விளம்பரத்தில் வரும்  வாசகம் ," உங்கள் மகனை வெயில், குளிர், தூசி என்று எதையும் எதிர் கொள்ளப் பழக்குங்கள். தானாகவே அவர்கள் எதிர்ப்பு சக்தி வளரும்." என்று அறிவுரையும் "  எங்கள் சத்துணவு பானம் அதற்குக் கை கொடுக்கும் ' என்றும் விளம்பரம் முடியும்.

விளம்பர அறிவுரையின் மேலோட்டமான அர்த்தத்தை விட்டு விட்டு சற்றே ஆழமாக யோசித்தால், இந்த விளம்பரம் குழந்தை வளர்ப்பதைப் பற்றி  சொல்வதாகத் தோன்றுகிறது.

 'இப்பொழுது என்ன சொல்ல வருகிறாய்?  நாங்கள் எங்கள் குழந்தைகளை  பத்திரமாக பார்த்துக் கொண்டால் உடனே  உல்லன் அம்மா என்று எங்களுக்குப் பெயர்  சூட்டுகிறாய் . அவ்வளவு தானே!  என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்" என்று அம்மாக்கள் கோபப்படுவது எனக்குத் தெரிகிறது.

எனக்கு ஒன்றைப் புரிய வைப்பீர்களா? உங்களை உங்கள் பெற்றோர் இப்படித் தான் வளர்த்தார்களா?  பெரும்பாலும் கூ ட்டுக் குடும்பப்ப் பின்னணியில் வளர்க்கப்பட்டோம்.  அதனால்  தனியாக எந்த சலுகையும் நமக்குக் கிடைத்ததில்லை எனலாம்.

அதனால் நம் பெற்றோர் நம்மை சரியாக கவனிக்கவில்லை என்றாகி விட்டதா என்ன?  எத்தனை சவால்களை நாம் எதிர் கொள்கிறோம்.  அத்தனையும் வெற்றிகரமாகத் தாண்டித் தானே வருகிறோம். அதற்கான அடித்தளம் போட்டது  நம் பெற்றோர் வளர்ப்பு முறை  தானே.

சரி . நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். நாங்கள் உல்லன்  அம்மாவாகவே இருந்து விட்டுப் போகிறோம் என்று ஒரு சில அம்மாக்கள் முணுமுணுப்பதும் கேட்கிறது.

இருந்து விட்டுப் போங்கள்  ஆனால் நீங்கள் ஒரு அபாய விளிம்பில் நிற்கிறீர்கள்  என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

அபாய விளிம்பா ....?

ஆமாம் .உல்லன் அன்னைகள் ஒரு சின்ன  இடறலில்  ஹெலிக்காப்டர்  அம்மாவாகி விடும்  அபாயம் இருக்கிறது . ( இங்கே நான் அரசியல் எதுவும் கலக்கவில்லை என்பதையும்  சொல்லிக் கொள்கிறேன் )


ஹெலிகாப்டர் அம்மா அல்லது சாப்பர்(chopper) அம்மா  என்பவர் எப்பொழுதும் தன்  மகன்/மகளின் தலைக்கு மேலேயே பறந்துக் கொண்டிருப்பார்.  அது பள்ளியோ,  விளையாட்டு அரங்கமோ,வீடோ, நண்பர்களுடன் இருக்கும் போதோ, எங்கும் பறந்து பறந்து  கவனித்துக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு உதவி தேவையோ சட்டென்று  உதவலாமே என்பது தான் அவர்கள் எண்ணம்.அவர்கள் மகன்/ மகள் முடிவுகளை பெரும்பாலும் சாப்பர்(chopper) அம்மாக்களே எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அதனால் என்ன ? என்று நீங்கள் கேட்கலாம். நல்லது தானே என்று கூடத் தோன்றலாம்.

இப்படிக் கண்காணிக்கப்படும் மகன், பின்னாளில் தன்னிச்சையான முடிவை எடுக்க நேரிடும் போது  சட்டென்று  குழம்ப நேரிடலாம். தவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம். அப்பொழுது அம்மாக்களோ  உதவ முடியாத நிலையில் இருப்பார்கள்.

இந்த சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் மகன்  சிறுவனாக இருக்கும் போதே சற்றே சுதந்திரமாக இருக்க விட வேண்டும்.கண்டிப்பாக சின்ன சங்கடங்கள், தோல்விகள்  என்று அவன் எதிர் கொள்ள நேரிடும்.அவை அவனை  நன்கு செதுக்கி , எந்த சவாலையும் எதிர் கொள்ளும் பக்குவத்தைக்  கொடுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

இதற்குப் பிறகும் நாங்கள் ஹெலிகாப்டராய் பறந்து சாப்பர்(chopper) அம்மாக்களாய் இருந்து விட்டுப் போகிறோம். எங்கள் மகனை  சங்கடங்களிலிருந்துக் காப்பாற்றுவோம். அது போதும் எங்களுக்கு.  என்று சொல்பவர்களுக்கு ..

ஓகே.....அப்படியே  சாப்பராகப்(chopper ) பறந்துக் கொண்டிருங்கள்.அப்படிப் பறக்கும் போது நீங்கள் உயரமான மரங்களின் மேல் பறக்க நேரிடலாம். அங்கு கூடு கட்டி ,குஞ்சு பொறித்திருக்கும்  கழுகைக் காண நேரிடலாம்.  கழுகம்மா, தன்  குழந்தையை எப்படி வளர்க்கிறார் என்று 'பராக்'காகத் தான் பாருங்களேன்..

உயரமான மரங்களில் இன விருத்திக்காக கழுகு கூடு கட்டும்.   இலவம் பஞ்சு மெத்தையைப் போலவே இருக்கும் அந்தக் கூடு.  எல்லா அம்மாக்களைப் போலவே, கழுகும்மாவும்  தன்  குழந்தைகளை கண்ணில் வைத்துத் தான் காப்பாற்றும். அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுத்து, , எதிரிகள்,மழை, வெயில் என்று  பல சங்கடங்களிலிருந்து தன்  குஞ்சுகளைக் காப்பாற்றும்.

இந்தக் கவனிப்பு எவ்வளவு நாட்களுக்கு?

குழந்தைகள் பறக்கும் காலம் வரும்  போது , கழுகம்மா என்ன செய்கிறது?
முதலில் கூட்டை  , குச்சிகள் எல்லாம் வெளியே நீட்டும்படி லேசாகக் கலைத்துப் போடும்.


கழுகுக் குஞ்சுக் கிறீச்சிடும்,"அம்மா... அம்மா.   படுக்கவே முடியவில்லைம்மா. இந்தப்  படுக்கைக் குத்துகிறது.கொஞ்சம் சரி செய்து விடேன் ." என்று கெஞ்சுகிறது.

கழுகம்மா ," கூடு   சௌகர்யமாக இல்லையென்றால்  வெளியே பறந்து போயேன் "என்று சொல்லும்.

கழுகுக்  குஞ்சு  வெளியே எட்டிப் பார்க்கும். பரந்து விரிந்துக் கிடக்கும் பிரம்மாண்டமான உலகம் கண்டு, பயந்து உள்ளே ஓடி வந்து விடும்..

இப்பொழுது கழுகம்மா , சிறிதும் இரக்கமின்றி, தன் குழந்தையை  கூட்டின் விளிம்பிற்குத் தன இறக்கையாலேயே  தள்ளி விடும். அங்கிருந்து கீழே பார்க்கும் குஞ்சு," ஐயோ...அம்மா.. கீழே தள்ளி விடாதேம்மா . காற்று எப்படி வீசுகிறது பார். என்னால் பறக்க முடியாதே . நான் இனிமேல் எந்த விஷமமும் செய்ய மாட்டேன்.என்னை வீட்டில் இருக்க விடேன் " என்று கெஞ்சும்.

ம்ஹூம்.....கழுகம்மா அசைந்துக் கொடுக்கவில்லையே.  இதோ....இதோ .... தள்ளியே விட்டு விட்டதே கழுகம்மா .  கழுகுக் குஞ்சு," அம்மா.......என்றலறிக் கொண்டே  கீழே விழ ஆரம்பிக்கிறது . தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில்  தன இறக்கையை 'பட பட'வென  சிறகடிக்க முயற்சிக்கும் கழுகுக் குஞ்சு.

முதல் முறையே பறக்க வந்து விடுமா என்ன?  ஒரு சில வினாடிகளில்  வேகமாக கீழே விழ ஆரம்பிக்கும். எங்கிருந்தோ சட்டென்று கழுகம்மா பறந்து  வந்து கீழே விழாமல் பிடித்து,  அதைக் கூட்டிற்குள்   கொண்டு போய் விடும்.

கழுகுக் குஞ்சு , மேல் முச்சு, கீழ் மூச்சு வாங்க, "நான் சொல்ல சொல்ல என்னைத தள்ளி விட்டாயே அம்மா. எனக்குப் பறக்க வராது என்று சொன்னால் நீ நம்பவேயில்லையே. விழப் பார்த்தேன் இல்லையா. இப்பொழுதாவது புரிந்ததா?  நல்ல வேளை  என்னைக் காப்பாற்றினாய் அம்மா. உனக்கு என் மேல் பாசம் அதிகம். " என்று சொல்லி விட்டு 
"ஐ லவ் யூ அம்மா" என்று தன்  அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொள்ள முயலும்.

கழுகம்மா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், ஒரு சில நிமிடங்களில் மீண்டும், அதை வெளியேத்  தள்ளி விடும்.  கழுகுக் குஞ்சு , கீழே விழாமல் இருக்கும்   முயற்சியில், தன சிறகினை 'பட பட'  என்று  அடித்துக் கொண்டு பறக்க முயலும். 

இப்பொழுது சற்றேக்கூடுதல் நேரம் தன்  சிறகை விரித்து பறக்கும். ஆனாலும்  சிறிது நேரத்தில் பறக்க முடியாமல், மீண்டும் கீழே விழ ஆரம்பிக்கும். கழுகம்மா , எங்கிருந்தோ பறந்து வந்து, தன் குழந்தையைக் காப்பாற்றிக் கொண்டுப் போய் கூட்டில் வைக்கும். சில மணித் துளிகள் தான்.

திரும்பவும், இந்தப் பயிற்சியைத் தொடங்கி விடும் கழுகம்மா.

ஒரு முறை, இரு முறை இல்லை . பல முறை இந்தப் பயிற்சி நடக்கும்.. கழுகு நன்குப் பறக்கத தெரிந்துக் கொள்ளும் வரை, கழுகம்மா அயராது பயிற்சிக் கொடுப்பார்.

ஒரு சில நாட்களுக்குப் பிறகு, "அட......அம்மா ..இதோ நான் உயரப் பறக்கிறேனே !  என்று கழுகுக்  குஞ்சு, உயர உயரப் பறந்து, உற்சாகக் குரல் கொடுக்கும். .

கழுகின் கம்பீரம், அதன் தைரியத்திலும் , கம்பீரத்திலும் தானே  இருக்கிறது. அதை உணர்ந்து தான் கழுகம்மா ,பயிற்றுவிக்கிறது. 

கழுகு மட்டும் தன் குழந்தைகளுக்கு பறக்கும்  பயிற்சியைக் கொடுக்கவில்லையெனில் , இந்தக் கழுகுகள், கூட்டிலேயே அல்லவா அடைபட்டு இறக்க நேரிடும். அதை நன்கு அறிந்து தானே கழுகம்மா நடந்து கொள்கிறது.

கழுகம்மாவிற்குத் தான் என்ன ஒரு தொலை நோக்குப் பார்வை! கழுகம்மாவை  பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

அட.....இது என்ன? யாரோ ஹெலிக்காப்டரிலிருந்து இறங்குகிறார் போல் தெரிகிறதே !

" ஏன் இறங்குகிறீர்கள்?"

"கழுகிற்கு இருக்கும்  அறிவும், தொலை நோக்குப் பார்வையும்  எனக்குக்  கிடையாதா என்ன? நான் இனி மேல் 'சாப்பர்'(chopper )அம்மா இல்லை." என்று சொல்லி  விட்டு இறங்கினார்.

அவரையே ஆச்சர்யத்துடன் பார்க்கும் என்னை, கண்களால் ஒரு வெட்டு, வெட்டி விட்டு, நகர்ந்து  போனார், அந்த முன்னாள்  'சாப்பர்'(chopper) அம்மா.

அவரை மட்டுமல்ல எல்லா அன்னையரையும் வாழ்த்துவோம்  வாருங்கள்.

   அன்னையர் தின வாழ்த்துக்கள்!      

பி .கு: அன்னையர் தினத்திற்காக என்னுடைய ஆங்கிலப் பதிவான "You Made Me Fly " படித்துப் பார்த்து, அதைப் பற்றியும் உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள் .

image courtesy-google.

Monday, 29 February 2016

கீரை வாங்கப் போய் திட்டு வாங்கி வந்த கதை

image courtesy-publicdomainvectors.org

அன்று  காய்கறிக்  கடையில்  நின்று வெண்டைக்காய் பொறுக்கிக் கொண்டிருந்தேன்.  பெங்களூரில்  உள்ள காய்கறி மார்க்கெட்டில்   தான்.

வாங்கிக் கொண்டிருக்கையில் , இளம் ஜோடி ஒன்று "நாட்டி !"  என்று  பேசிக் கொண்டே என்னைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள்.

அட.....இந்தக் காதலர்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போ ய் விட்டது.  பொது இடங்களில் எல்லோர் காதுகளிலும் விழுவது போல் அன்னியோன்யமாகப்   பேசுவது தான் இப்போதைய நாகரீகம் போலிருக்கிறது. என்ன தான் காஸ்மாபாலிடன் நகரம்  என்றாலும்..... இப்படியா? நினைத்துக் கொண்டே காய் கறிகளைத்   துணிப்பைக்குள் வைத்துக் கொண்டே நகர்ந்தேன்.

அப்பொழுது  ஸ்கூட்டரில் இருந்து ஒரு  இளம் பெண் இறங்கினார். கண் இரண்டு மட்டுமே தெரியும்படியாக  போர்த்திக் கொண்டு, தன் கவச குண்டலங்களை (ஹெல்மெட், கிளவுஸ் ...இத்யாதி ...இத்யாதி )  ஒவ்வொன்றாக கழட்டி, இரு சக்கர வாகனத்தின் உள்ளேதிணித்து விட்டு , காதில் தொங்கும் ஒயருடனும், பேசிக்கொண்டும் , சென்றுக் கொண்டிருந்தார்.

என்னைத் தாண்டி சென்றவர், நான் கொத்தமல்லி  வாங்கிக் கொண்டிருந்த கிழவரிடம் , எதையோ கன்னடத்தில் சொல்லி விட்டு  "  நாட்டி ! " என்று சொல்லவும் , திரும்பவும்  எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
பெங்களுரில்...... ஆனாலும் ரொம்பத் தான் ஆங்கிலம் சர்வ சாதரணமாக எல்லோர் வாயிலும் விழுந்து புரண்டுக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் இவ்வளவு வயதான மனிதரிடமா  இந்தப் பெண்..........ஏன் ......இப்படி.   புரியாமல் குழம்பினேன்.  வயதானவர் முகத்தைப் பார்த்தேன் . அவர் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல்  எனக்கு காய்கறி நிறுத்துக் கொண்டிருந்தார்.

எல்லாம் காலத்தின் கோலம் என்று சற்றுக்  கோபத்துடன் நகர்ந்தேன்.

 நாட்டி என்கிற வார்த்தை சரளமாக வருகிறதே . இதற்கு வேறு அர்த்தம் இருக்கும் என்பது என் மரமண்டைக்கு எட்டவேயில்லை.

அட... முருங்கைக் கீரை இருக்கிறதே  என்று கீரை வாங்கப் போனேன். கீரை விற்கும் பெண்மணியிடம்  நடுத்தர வயது மனிதர் ஒருவர் ,மீண்டும் நாட்டி என்று சொல்லவும் , கீரை விற்கும் பெண்மணியைப் பார்த்து இப்படி சொல்கிறாரே! இப்பொழுது பெரிய சண்டை இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே , கீரை வாங்க மறந்து , வழக்கம் போல் பராக்குப்  பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் எதிர்பார்த்தபடி நல்ல சண்டை வந்ததே! 'திட்டு திட்டெ'ன்று திட்டித் தீர்த்து விட்டார் அந்தப் பெண்மணி  . 'நாட்டி' சொன்ன மகானுபவரை திட்டவில்லை.   என்னைத் தான்.

கீரைக் கூடை அருகே நின்றுக் கொண்டிருந்த என்னிடம்,  முதலில் கன்னடத்தில் எதையோ கோபமாக சொல்லவும். என்னிடம் ஏன் கோபப்படுகிறார் என்று புரியாமல்  "கன்னடம் கொத்தில்லா " என்று நான் சொன்னது தான் தாமதம்.( அர்ச்சனைத் தமிழில் இருந்தால் புரியும் இல்லையா )

தொடங்கி விட்டார். நல்ல சென்னைத் தமிழில், அங்கங்கே கன்னடம் தூவி , வசை மாறிப் பொழிந்தார் . " நானும் ஜாஸ்தி நேரமாய் உன்னை கவனித்துக் கொண்டே  இருக்கிறேன். இந்த மார்க்கெட்டில் அங்கங்கே எல்லோரையும் நோட்டம்  பார்க்கிறாய். இப்ப என் கீரைக்  கூடை கிட்டே நில்சி  என்ன மாடுறே ?( என் கீரைக் கூடை கிட்டே நின்று கொண்டு என்ன செய்கிறாய்?)

ஒண்ணா வாங்கணும், இல்லைனா நகரணும். எதுக்குப் பக்கத்திலேயே நின்னுகிணு  .....  நான் அசந்து மறந்தா.... திருடலாம் அணுகொண்டு( நினைத்துக் கொண்டு ).... ஹோகம்மா ( போம்மா ) என்று திட்டி விட்டு ,.

நாட்டி என்று சொன்னாரே அந்த மனிதருக்கு மரியாதையுடன்  கீரை கொடுத்துக் கொண்டிருந்தாள் .

( இப்படிக் கூடவா யாராவது  இருப்பார்கள் ? யாராவது திட்டும் போது "கன்னடம் கொத்தில்லா" என்றா சொல்வார்கள் . கன்னடத்தில் திட்டினால் புரியவில்லை என்று தமிழில் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மையில் நான் அதைத்தான் செய்திருக்கிறேன்))


அந்த மனிதரோ என்னை பாவமாய் பார்த்துக் கொண்டே நகர , இனியும் மார்கெட்டில் நின்றால்  வம்பில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு ,
யாரோ  யாரையோ  'நாட்டி' என்று செல்லம் கொஞ்சி விட்டுப் போகட்டும் .நமக்கென்ன,
என்று விடு விடுவென்று வீட்டிற்கு நடையைக் கட்டினேன்.

ஆனால் கீரைப் பெண்மணியிடம் வாங்கிய திட்டு , அவமானமாய் என் முகத்தில் ஒட்டிக்   கொண்டது .
உள்ளே நுழைந்தவுடன் , என் மகன்," ஏன்  ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?" என்று கேட்க, " ஒன்றுமில்லை " சொல்லி விட்டு ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் குடித்து அவமானத்தை முழுங்கப் பார்த்தேன்.

அப்படியெல்லாம் முழுங்க விட்டு விடுவேனா என்பது போல்அங்கே ஆஜரானாள் என் மருமகள்.
" மாமி என்ன காய் வாங்கி வந்தீர்கள்? " என்று பையை விட்டு முதலில் கொத்தமல்லியை  எடுத்து வெளியே வைத்தாள் . பிறகு என்னிடம் , " ஏன் பேயறைந்தாற் போலிருக்கிறதே உங்கள் முகம் " என்று கேட்டது  , எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலிருந்தது ,

" ஏன்  நாட்டி  உங்களுக்குக் கிடைக்கவில்லையா?  ' என்று மேலும் கேட்டு எரிகிற நெருப்பில் இப்போது  பெட்ரோலையே  ஊற்றினாள்.

 " இப்படி  உட்கார். முதலில்  இந்த நாட்டி என்றால் என்ன என்று சொல். ஒரு பெரிய வம்பில் மாட்டிக் கொள்ள இருந்தேன் " என்று  நடந்த அத்தனையும் விலாவாரியாக சொல்ல ,

அவளுக்குப் புரிந்து விட்டது 'நாட்டி' என்பதை நான்  எப்படிப் புரிந்துக் கொண்டேன் என்பதை.

அதனால், "மாமி. நாட்டி என்கிற வார்த்தை ஆங்கில 'நாட்டி'  இல்லை. 
'நாட்டி' என்பது  நாட்டுக் கத்திரிக்காய், நாட்டுக் கொத்தமல்லி..... என்பது போல். நம் ஊரில் நாட்டுக் காய் என்று சொல்வோமே அது தான் மாமி இங்கே  நாட்டி என்பது. நாட்டி காய் விலை சற்று அதிகம் ஏனென்றால் பூச்சி மருந்து இல்லாமல், இயற்கை உரம் போட்டு விளைவித்தது என்று சொல்லிக் கொண்டே போனாள். 

'நாட்டி'யைப் பற்றிய உண்மைப் புரிய இப்பொழுது என் மேல் எனக்கே  கோபம் வந்தது. எனக்குத் தெரிந்ததை  வைத்துக் கொண்டு தவறாக  மற்றவர்களை எடை போட்டு  விட்டேனே.

மறு நாள் பொழுது விடிந்தது. " கீரை வாங்கி வாயேன் ராஜி " என்று என்னவர் என்னைப் பார்த்துக் கிண்டலாய்  சொல்ல ,.

நானோ, காபி ஆற்றுவது, ராக்கெட் சயின்ஸ் என்பது போல்  எதையும் காதில் வாங்காமல் ,காபியையே பார்த்து சர்வ ஜாக்கிரதையாக   ஆற்றிக் கொண்டிருந்தேன்.

Sunday, 7 February 2016

ராசி வீட்டில் ரத்த ஆறு.


google image


 டிவி நிகழ்ச்சி ஒன்றில் லயித்துப் போயிருந்தாள்  ராசி.  மணி இரவு பத்தை  நெருங்கிக் கொண்டிருந்தது.  ஆப்பிள்  நறுக்கி சாப்பிட்டு விட்டு படுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ராசி.

"இந்த முறையாவது  புளிக்காத நல்ல ஆப்பிளை வாங்கி வந்தீர்களா?" என்று விஷ்ணுவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே, ஆப்பிள், கத்தி , தட்டு என்று சகல உபகரணங்களுடனும்   வந்தமர்ந்தாள்  ராசி.

" உனக்கு என்னிடம்  குற்றம் கண்டு பிடிக்காவிட்டால்  இன்றிரவுத் தூக்கம் வராதே ." என்று விஷ்ணு சொல்ல

" ஆமாம் எனக்கு உங்களைக் குற்றம் சொல்லணும் என்று  எப்பவும் ஆசை பாருங்கள். நீங்களே சொல்லுங்கள். போன  முறை வாங்கி வந்த ஆப்பிளை வாயில் வைக்க முடிந்ததா.? மாங்காயா ? ஆப்பிளா ? என்று சந்தேகத்துடன் சாபிட்டது  நீங்கள் தானே ."

" அதைக் கேட்டால்....... ராசி பொல்லாதவள். " கழுத்தை நொடித்தாள் ராசி.

" சரி. ஆப்பிளைப் பார்த்து  வெட்டு. கத்தி வேறு புதுசு. ஜாக்கிரதை." என்று விஷ்ணு சொல்ல

இடது கையில் ஆப்பிளை எடுத்து வாகாய் வைத்துக் கொண்டு " இந்த அக்கரைக்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை." என்று சொல்லிக் கொண்டே கத்தியை சரக்கென்று  ஆப்பிளில்  சொருக  ,

ஆப்பிளை வெட்டியதோடு நில்லாமல்  கொஞ்சமே கொஞ்சம்  விலகி  ராசியின் சுண்டு விரலையும்   பதம் பார்த்தது கத்தி.

" உஸ்.....ஆ......" என்று சன்னமாக ராசி குரலெழுப்ப  , விஷ்ணு "என்ன ஆச்சு " என்று கேட்டார்.

விடுதலையான மகிழ்ச்சியில்  ராசியின் விரலிருந்து ரத்தம் வெளியே  வர ஆரம்பித்தது.

ஓடிப்போய்  , வாஷ் பேசினில் சுண்டு  விரலை  நீட்டினாள்  ராசி. சட்டென்று  நின்றது ரத்தம்.  வாஷ்பேசின் குழாயை மூடி விட்டு  மீண்டும் வந்தமர்ந்தாள் ராசி. ஆப்பிளைக் கையில் எடுத்து வாயில் வைக்கப் போனவள் , இடது உள்ளங்கையில் ஜில்லென்று  என்னவோ  பட, பார்த்தால்  ரத்தம் நின்றது போல் பாவ்லா காட்டி விட்டு மீண்டும் வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால்  வலி எதுவும் இல்லை ராசிக்கு.

மீண்டும் குழாயில் விரலை நீட்டவும், ரத்தம் நின்று விட்டது.

திரும்பவும் ராசி ஹாலிற்கு வரவும், மீண்டும் ரத்தம் முட்டிக் கொண்டு வந்தது. வெட்டுக்  காயம் ரொம்பவும் பெரிதில்லை தான் .ஆனால் ரத்தமோ  விடாமல்  வந்து கொண்டு இருந்தது.

இப்பொழுது  விஷ்ணுவிற்கு மனதின் ஓரத்தில் கடுகத்தனைப் பயம்  விருட்டென்று முளைத்தது. "ரத்தம் நிற்கவில்லையே " நினைத்துக் கொண்டே பிரிஜ்ஜிலிருந்த ஐஸ் கட்டியை எடுத்து விரலில் வைத்துப் பார்த்தார் விஷ்ணு. ரத்தம் நின்றது.. .

"அப்பாடி ......இருவரும் பெருமூச்சு விட்டனர் . " ஐஸ் கட்டிக் கரையும் வரை அப்படியே பிடித்துக் கொண்டிரு . ரத்தம் நின்று விடும். "  என்று விஷ்ணு அறிவுறுத்தினார்.

 சொல்லி விட்டு ," இப்பொழுது  உன்னை யார் ஆப்பிளை வெட்ட சொன்னார்கள்.? என்று விஷ்ணு கோபமாக ஆப்பிளையும் கத்தியையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

மணி அதற்குள் பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. ராசி  ஐஸ் கட்டியை கெட்டியாக வெட்டுப்பட்ட சுண்டு விரலில் அழுத்திப் பிடித்துக் கொண்டிந்தாள் .

"நீ ஐஸ் கட்டியை வைத்து அணை கட்டினால்...........   நான் வர மாட்டேனா ?" என்று கேட்பது போல்  ஐஸ் கட்டி மெதுவாக கலர் மாறி சிவப்பு நிறமாக மாறிக்   கொண்டிருந்தது.  ஐஸ் கட்டி முழுதும் கரையும் தருவாயில் சின்ன  ரத்த ஐஸ் கட்டியாக மாறிக்கொண்டிருந்தது. விரல்  உறைந்துப் போனது தான் மிச்சம், ரத்தம் மட்டும் உறையவேயில்லை."

பயம் சற்று கூடுதலாக உணரத் தொடங்கினார் விஷ்ணு. இந்த அகால வேளையில் யாரைப் போய் எழுப்புவது?  ரத்தமோ நிற்பதாகத் தெரியவில்லை.  துணியால் கட்டிப் பார்த்தாள்  ராசி.

ம்ஹூம்.... ஒரு  பிரயோஜனமுமில்லை.  ரத்த ஆறு ஓடவில்லை தான். ஆனால்  விடாமல் இப்படியே ,  இரவுப் பூராவும் ரத்தம் வந்துக் கொண்டிருந்தால்....... பயம்  ராசியின் மனதிலும் மேலெழும்பிக் கொண்டிருந்தது.

ஆனால் ரத்தம் ஏன் இப்படி  நிற்காமல் வருகிறது என்பது மட்டும் புரியவில்லை ராசிக்கு . இது ரொம்பப் பெரிய வெட்டுக்  காயமுமில்லை. இதை விடப் பெரிய காயம் எல்லாம் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் வராத தொல்லை இப்பொழுது மட்டும்  ஏன் ?வயதானால் ரத்தம்  உறையாதோ என்கிற சந்தேகமும் வந்தது ராசிக்கு.

அதற்குள் விஷ்ணு  என்ன செய்யலாம் என்கிற யோசனையில் ஆழ்ந்தார்.
மகளையோ, மகனையோ போன் செய்து வரவழைக்கலாம் என்றால்  இந்த நேரத்தில் ..........போன்  செய்தால்.............வேண்டாம் ...வேண்டாம்..... இருவருமே பதறி ......  வேண்டாம் ....பதட்டத்தில்  வண்டி எடுக்க வேண்டாம் .சிறிது நேரம் பார்க்கலாம். ரத்தம் நின்றாலும் நின்று விடும். இல்லையென்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று போன் செய்யும் முடிவை ஒத்திப் போட்டார் விஷ்ணு.

சட்டென்று google நினைவு வந்தது விஷ்ணுவிற்கு. உடனே டாக்டர் கூகுளார்  துணையினை நாடினார் விஷ்ணு. ராசி அதற்குள் துணி மேல் துணி வைத்துக் கட்டி ரத்தத்தை நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் போராட்டம் எல்லாம் வீண் .

விஷ்ணு கூகுளில்  தேடியதும் பல உபாயங்கள் கிடைத்தன. பலர் இது போல் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியே மனதில் ஒரு பெரிய தைரியத்தை வரவழைத்தது விஷ்ணுவிற்கு.,

ஒவ்வொருவரும் என்னதான் தீர்வுக் கொடுக்கிறார்கள் என்று பார்த்தார் விஷ்ணு. தோசைமாவு, காபிப் பொடி, படிகாரம்  என்று பல கைவைத்தியங்கள் கிடைத்தன. எல்லாவற்றிலும் நடை முறை சிக்கல் இருந்ததால்  எதுவும் உபயோகமில்லை..
.
ஆனால் ஒரு யோசனை  நடைமுறைபடுத்தக் கூடியதாக இருந்தது.

"கையை சற்றே தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டிருங்கள். நிற்க வாய்ப்பிருக்கிறது" என்பது தான் அது..  விஷ்ணுவே ராசியின் கையை பிடித்து அவள் தலைக்கு மேல் உயர்த்தி வைத்தார். " அப்படியே கொஞ்ச நேரம் வைத்திரு ." இப்பவும் நிற்கலைன்னா  டாக்டர் வீடு தான் என்று சொல்லி விட்டு ராசியின் சுண்டு விரலையே பார்த்துக் கொண்டிருர்ந்தார் விஷ்ணு.

முதலில்  நின்றது  போல் இருந்த ரத்தம் ,  இரண்டு நிமிடங்களில், ராசி கையை கீழே இறக்கவும், மீண்டும்  'குபுக்'கென்று  புதிய வேகத்துடன் வெளியே வரத் தொடங்கியது.

பார்த்தார் விஷ்ணு. இதற்கு மேல் காத்திருப்பதில் புண்ணியமில்லை. என்று , " ராசி நீ கொஞ்ச நேரத்திற்குக் கையை மேலேயே  தூக்கிப் பிடித்துக் கொள். நான் நம்ம டாக்டர் மயில் வாகனனை  போனில் கூப்பிடுகிறேன் '

இரண்டி ரிங்கிற்குப் பிறகு டாக்டர் லைனில் வந்ததும் , "சாரி டாக்டர்.உங்களை இந்த நேரத்தில்  தொந்திரவு பண்ண ."

"அதான் பண்ணி விட்டீர்களே  சொல்லுங்கள்  விஷ்ணு."
மேலும் "சும்மா விளையாட்டிற்கு சொன்னேன்.என்ன விஷயம்? " என்று சமய சந்தர்ப்பில்லாமல் ஜோக் அடித்துக் கொண்டிருந்தார்.

டாக்டர், " ராசிக்குக் கையில் வெட்டுக் காயம். ரத்தம் நிற்காமல் வந்துக் கொண்டேயிருக்கிறது."

இப்பொழுது டாக்டர் சற்று சீரியசாக," எவ்வளவுப் பெரிய காயம்? நான் உங்கள் மனைவியை சற்று ஜாக்கிரதையாக இருக்க சொல்லியிருக்கிறேனே. ரத்தம் லேசில் நிற்காதே."

"ஏன் டாக்டர்?  ஆனால் காயம் சின்னது தான்."

" என்ன ஏன்  என்று கேள்வி கேட்கிறீர்கள் ?.சின்னதோ பெரிதோ  ராசி இதய நோயாளி அல்லவா.  அதற்கான anticoagulant tablets சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா ? அது ரத்தம்  உறைவதைத் தடுக்கும் மாத்திரை . சரி . இன்னும் வந்து கொண்டே தான் இருக்கிறதா. ?

"ஆமாம் டாக்டர். கையை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தால் நிற்கிறது.இல்லையென்றால் உடனே வந்து விடுகிறது."

" நல்ல வேலை செய்தீர்கள். அப்படியே கையை கீழே இறக்காமல்  விரலை மடிக்காமல் , நிமிர்த்தி வைத்துக் கொண்டு , ஒரு  நல்ல துணியால்  அழுத்திக் கட்டுங்கள்.   சில  நிமிடங்களில் நிற்கிறதா பாருங்கள். இல்லையென்றால் இங்கே  கிளினிக்கிற்கு அழைத்து வாருங்கள். "
என்று டாக்டர்  போனில் முதலுதவி சொல்லவும்.  விஷ்ணு அதை அப்படியே கடைபிடிக்க, ராசிக்கு உத்தரவுப் போட்டார்.

ராசியும் பயந்து போய் விஷ்ணுவையே பார்க்க, விஷ்ணு கேட்டார் " என்ன ஆச்சு? "
" இல்லை உங்களைத் தனியே விட்டு விட்டு போய் விடுவேனோ ?" ராசிக்குத்  துக்கம் தொண்டையடைத்தது.

" என்ன இந்த சின்ன வெட்டுக் காயத்திலா? "

"சரி , நீ ரொம்பவும் பயந்து போயிருக்கிறாய். உனக்குக் காபிப் போட்டுத் தருகிறேன்". என்று சொல்லவும் விஷ்ணு போட்ட காபி ராசியின் நினைவிற்கு வர  ," ஐயோ வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன் " என்று அவசரமாக மறுத்தாள் .

பத்து நிமிடம் ஓடியது.  ரத்தம் முழுசுமாக நின்று விட்டது.ஆனாலும் ராசிக் கையைக் கீழே இறக்குவதாயில்லை.  மீண்டும் ரத்த  ஆறு ஓடுவதைத் தவிர்க்கத் தான்.

விஷ்ணு சொன்னார்," மணி பதினொன்றரை ஆச்சு. ரத்தம் இனிமேல் வராது.  பேசாமல் படுத்துத் தூங்கு." 

ம்ஹூம்  ...ராசி கேட்பதாயில்லை. அவள் பயம் அவளுக்கு.

பார்த்தார் விஷ்ணு,  சுவற்றில் மாட்டியிருந்த கோவர்த்தனகிரி பெருமாளைப் பார்த்து,"கிருஷ்ண பரமாத்மா ! உன் சுண்டு விரலிற்கு கொஞ்ச நேரத்திற்கு   விடுதலை கொடுக்க நினைக்கிறாள் ராசி என்று நினைக்கிறேன்.நீ சுண்டு விரல் மீது தூக்கி வைத்திருக்கும் கோவர்த்தன மலையை ராசியின் சுண்டு விரல் மேல் வைத்து விட்டு நீ சற்று ரிலாக்ஸ் செய்து கொள். ராசியும் அதே போஸில்  தானே  கையை வைத்திருக்கிறாள் . அதற்காக சொன்னேன். " என்று விஷ்ணு சொன்னதை ராசி சட்டை செயவேயில்லையே.

ராசிக்குப்  புரிந்தது, "மனிதர் என் ரத்தத்தைப் பார்த்துக் கொஞ்சம் ஆடித் தான் போய் விட்டார் போலிருக்கிறது . இப்பொழுது தான் சகஜ நிலைக்குத் திரும்பியிருக்கிறார்."

ராசி எப்பொழுது தூங்கினாளோ  தெரியாது.

விடிந்தது. ராசிக்குப்  பூரண  குணம். காபிக் குடித்து விட்டு சமைக்க ஆரம்பித்து விட்டாள் . ஆனால் விஷ்ணு கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர்.

ஆனந்தக் கண்ணீர்  என்று நீங்கள் நினைத்தால் விஷ்ணு பொறுப்பில்லை.

வெங்காயம் நறுக்கிக் கொண்டிருகிறார். அவ்வளவு தான்..
இன்னும் சில நாட்களுக்கு  விஷ்ணு காய்கறி நறுக்கினால் தான் அவருக்கு சாப்பாடு கிடைக்கும்.

பி.கு :  நண்பர் இல்லத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியைஅடிப்படையாகக்  கொண்டது இப்பதிவு. 
 ராசி விஷ்ணு தம்பதியினரை வைத்து சற்று  ஜாலியாக விவரிக்க முயற்சித்திருக்கிறேன்.

Anti Coagulant tablets சாப்பிடும் இதய நோயாளிகளுக்கு இப்படி ஒரு தொல்லையா? கவனமாக  இருந்து கொள்ளுங்கள் மக்களே!  

Monday, 4 January 2016

கொத்தங்குடியின் வில் வண்டி -2.

கொத்தங்குடியின்  வில் வண்டி --1 படிக்க இங்கே க்ளிக்கவும் 


google image
 அறிவிப்பு. 
 பழைய நினைவுகளை  அசைபோடுவது மட்டுமே இத்தொடரின்  நோக்கம். இத்தொடரில் என்னுடன் பயணிப்பவர்கள்,  அசௌகர்யமாக உணர்ந்தால் தெரியப்படுத்தவும். பதிவை உடனே நீக்கி விடுகிறேன்.பாதுகாப்புக் காரணங்களுக்காக  பெயர்கள் கற்பனையே!

சரி. வாங்க கொத்தங்குடிக்குப் போவோம்.

கோமலில், பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் எங்களுக்காக ஆவலுடன் காத்திருந்த வண்டி ஓட்டுபவர் எங்கள் சாமான்களைப் பத்திரமாக வண்டிக்குள் ஏற்றியவுடன், மெத்தென்ற  பஞ்சு மெத்தை சீட்டில் நாங்களும் தாவி ஏறி  உட்கார்ந்தோம். 

ஏறியவுடன் விமானத்தில் வரும் அறிவிப்பைப் போல் வண்டி ஓட்டி  ஒரு அறிவிப்பை வெளியிட்டார். "பத்திரமாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள் பசங்களா .வண்டி குலுக்கலில்  கண்டிப்பாக உங்கள் பின்னந்தலை, அல்லது நெற்றி  அடிபடக் கூடும்". மாட்டு வண்டிப் பயணத்தில் பழக்கமானவர்களுக்கு தலையில் இடித்துக் கொள்ளாமல்  பிரயாணம் செய்யும் லாவகம் தெரியும். ஆனால், நாங்களோ  அவருடைய அறிவிப்பை அலட்சியம் செய்தோம். ஒரு சில வினாடிகளில் அதன் பலனை அனுபவித்தோம்.   என் தம்பிக்கு பின் மண்டையில் இடி  என்றால் எனக்கும், என் தங்கைக்கும்  நெற்றியில் . 
சரி .... பார்த்தான் என் தம்பி. . வண்டியை நிறுத்த சொல்லி வண்டி ஓட்டுபவருடன் , முன்னாலேயே உட்கார்ந்து கொண்டு வந்தான். அப்படியே அவரிடம் " எனக்கும் வண்டி ஓட்டக் கற்றுக் கொடுங்களேன்." என்று கேட்க ......


கற்றுக் கொள்ள அது என்ன பெரிய ராக்கெட் சயின்ஸா என்று கேட்பவர்களுக்கு, " சற்றுத் தப்பினாலும் குடை சாய்ந்து விடும் அபாயம் இதில் உண்டு. குடை சாய்ந்தால் சேற்றில் புரண்டு வீடு போய் சேர வேண்டும்.அதிர்ஷ்டமிருந்தால் அடிபடாமலும் தப்பிக்கலாம். "

வண்டியில் லாவகமாய் உட்கார்ந்துக் கொண்டு பயணிப்பது ஒரு சுகானுபவம் தான்.  "சிலுசிலு"வென்று  காற்றும்,  பச்சைப் பசேல் நெற்கதிர்கள்  பச்சை வெல்வெட் துணி போல்   காற்றில் அலையலையாய்  பறப்பது..... என்ன ஒரு அழகு. நம்மை " வா வா" என்று அழைப்பது போல் தோற்றமளிக்கும் . ஒற்றையடிப் பாதையில் "ஜல்ஜல்" என்று மாட்டு சலங்கையின் சப்தமும், ஓட்டுபவர்  செல்லமாய் மாடுகளை  அதட்டுவதும் .....

ஆஹா......அந்த நாளும் வந்திடாதோ என்று மனதை ஏங்க  வைக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல் வழியில் தென்படுபவர்களின் அன்பான விசாரிப்பு  சென்னை வாசிகளான எங்களை ஆச்சர்யப்படுத்தியது.. மெதுவாக எங்கள் வண்டி , வீடு போய்  சேர்ந்தது. சட்டென்று  கீழே குதித்தோம்.  நான்கைந்துப் படிகள் ஏறினால் வருவது  ஆலோடி /ஆளோடி . 
 மிக நீளமாக இருக்கும் அந்த ஆலோடியில் எண்ணிக்கையிலடங்கா முறை ஓட்டப்பந்தயம் நாங்கள் நடத்திக் கொண்டிருந்திருப்போம். 

ஒலிம்பிக்ஸில்  பங்கேற்பது போல் தான் தினமும் அதில் ஓட்டப்பந்தயப் பயிற்சி  நடக்கும், ஆனால் இதுவரை  நாங்கள் யாரும் மெடல் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கவில்லை. 

பார்க்கலாம்......... வருங்காலத்தில் எங்களில் ஒருவர் அந்த அதிசயத்தை  நிகழ்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவ்வளவுப் பயிற்சி எடுத்திருக்கிறோம். 

அதற்குப் பிறகு எதிர்படுவது இரண்டுப் பக்கமும் பெரிய திண்ணை. பிறகு உள்ளே நுழையும்  வாசல். வாசலில் இரண்டுப் பக்கமும் விளக்கு வைக்கும் மாடம் மிக நேர்த்தியாக  அழகாக வடிவமைக்கப் பெற்றிருக்கும்.

என்னுடன் நீங்களும் உள்ளே வாங்களேன். அட.... ஜாக்கிரதை  தலையை சற்றே குனிந்து வாருங்கள். இல்லை நெற்றிப் புடைத்து விடும். அந்த ஹாலில் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். வீ ட்டிற்குப் போகிற நேரம் பொறுத்துத் தான் காபி கிடைக்கும். இல்லை என்றால் பெருங்காய வாசனைத்  தூக்கலாக இருக்கும் மோர் தான்.

காபி காலையிலும் மாலையிலும் தான் . அதுவும் பால்  படு  ஃ பிரஷ். பால் கறந்த பத்துப் பதினைந்து நிமிடங்களில்  நல்ல திக்கானப்  பாலில் காபி  சாப்பிடலாம். காபி சுவையில்  மெய் மறந்து போனேனே. ஹாலின் இரண்டு பக்கமும்  "காமிரா அறை " என்று சொல்லப்படும்  அறைகள்  இருக்கும். 

ஒரு காமிரா அறைக்குள்   நாங்கள் செல்ல முடியாது. " Right of Admission Reserved."  போர்டு மாட்டாத குறையாய்  இருக்கும். பேரன் பேத்திகள் அனைவருக்கும் அது கொஞ்சம் மர்மம் தான். இன்று வரை அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.  என்ன இருக்கலாம் என்கிற ஊகம்  பிய்த்துக் கொண்டு போகும். அதனுள் இருப்பது,  பாட்டியின் பொக்கிஷங்கள் என்றும், இல்லையில்லை  தாத்தாவின் சொத்துப் பத்திரங்கள் என்றும்  நாங்கள் வாதிட்டுக் கொள்வது வாடிக்கை.
இன்னொரு காமிரா அறையில் தோப்பில் பறித்தத்  தேங்காய்கள்  குவிந்து இருக்கும். 

ஹாலிலிருந்துப் பார்த்தாலே தாழ்வாரம் பிறகு முற்றம் தெரியும் . முற்றத்தை ஒட்டி  ஒரு தொட்டி. அது நிறைய தண்ணீர் நிரம்பி  இருக்கும். நிலா வெளிச்சத்தில் அந்த முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு,  பேரன், பேத்தி அனைவருக்கும் பாட்டி கையில் உருட்டிப் போடும் தயிர் சாதமும், வத்தக் குழம்பின் மணமும் இன்னும் கையில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சித்தி, மாமாக்கள், அவர்களுடைய குடும்பம் என்று இவ்வளவு பேரும் இருப்பதால் கொண்டாட்டத்திற்குக் குறைவேயிருக்காது. கருத்து வேறு பாடுகளும் மிக மிக சகஜம். அதையெல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதேயில்லை. 

அந்த தண்ணீர் தொட்டி, எனக்கும் என்  தம்பிக்கும் திட்டு வாங்கிக் கொடுத்த நிகழ்ச்சி ஒன்று சட்டென்று  நினைவிற்கு வருகிறது..

ஒரு கோடை விடுமுறை . நாங்களும் , சித்தியின்  குடும்பமும் அங்கு இருந்தோம்.

தங்கை அகிலாவும், சித்தியின் பெண் அம்புஜாவும்  இருவருக்கும் வயது வித்தியாசம் பெரிதாக இல்லை. பார்ப்பதற்கு, ஒரே அளவாக இருப்பார்கள். இருவரும்  ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டு இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். தண்ணீர் தொட்டியில் நீர் தளும்பிக் கொண்டு இருந்தது. அதில் பேப்பரில் படகுகள் செய்து விட்டு இருவரும்  விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

" நீயும் நானும்  ஒரே கலர் கவுன் !" என்று ஒருவரையொருவர் கிள்ளிக்  கொண்டே படகுகள் விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 நான், என் தம்பி, சித்தியின் பையன் கார்த்திக் 
 எல்லோரும் ஹாலில் அமர்ந்து கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் எல்லோரும் நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பவர்கள். நாங்கள் விளையாடும் இடத்திலிருந்துப்  பார்த்தால் எங்களுக்குத் தண்ணீர் தொட்டித் தெரியும்.

கேரம் சுவாரஸ்யமாகப் போய் கொண்டிருந்தது. பெரியவர்கள் எல்லோரும் அவரவர்  வேலையில் மூழ்கி இருந்தார்கள். நான் சீரியசாக சிவப்புக் காயினிற்கு, ஃ பாலோ  ஆன் செய்ய முனைப்பாக போர்டையே பார்த்துக் கொண்டிருந்த நேரம்.

" தொபுக்கடீர்  " என்று ஒரு பெரிய சத்தம். சட்டென்று கவனம் கலைந்து , திரும்பிப்  பார்த்தேன் . பதறி விட்டேன். அப்படியே ஒரே ஓட்டமாக "அகிலா" என்று கத்திக் கொண்டே முற்றத்தில்  குதித்தோட, என் பின்னாடியே என் தம்பியும், கார்த்திக்கும்    குதிக்க .....
அதற்குள்  சித்தி ஓடி வந்து, தண்ணீர் தொட்டியில் விழுந்தவளைத் தூக்கி விட்டு விட்டார். 

மூச்சுத் திணறி, வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் வடிய, வடிய  தொப்பலாக நின்றுக் கொண்டிருந்தாள் அம்புஜா. தண்ணீர் தொட்டியில் தலைக் குப்புற விழுந்தது அம்புஜா. அப்படி என்றால்  அகிலா எங்கே என்று   சுற்று முற்றும் பார்க்க , தாழ்வாரத் தூண்  ஓரமாக " நான் தள்ளி விடலை. நான் அம்புஜாவைத் தள்ளலை " என்று பெரிதாக அழுதுக் கொண்டு நின்றிருந்தாள் .அம்புஜாவிற்கு முதலுதவிகள் செய்துவிட்டு, எல்லோருமாக அகிலாவை சமாதானப் படுத்தினோம் . பயம் நீங்க இருவருக்கும் "கொழு மோர்" காய்ச்சிக் கொடுத்தார் பாட்டி.
 யாரும் தண்ணீர் தொட்டிப் பக்கம் தலை  வைத்துப் படுக்கக் கூடாது என்கிற உத்தரவும்  அமுலுக்கு வந்தது.

விஷயம் ஒரு வழியாய் நல்லபடியாய் முடிந்தது என்கிற திருப்தியில் , அதைப் பற்றி அன்று மாலை  பெரியவர்கள் எல்லோருமாக திரும்பவும் பேசிக் கொண்டிருந்தார்கள் .
நானும் என் தம்பியும், சின்னவர்களாய், லக்ஷணமாய்  வாயை முடிக் கொண்டு இருந்திருக்கலாம். 

ஆனால் விதி யாரை விட்டது? சொல்லுங்கள்......

 சும்மா இல்லாமல் நான் தான் ஆரம்பித்தேன். " முதலில் நான் கூட  பயந்து போய் விட்டேன் . ஒரே கலர் கவுன் வேறேயா.....தண்ணீரில் விழுந்தது அகிலான்னு  பயந்து விட்டேன்.. இல்லடா." என்று என் தம்பியைத் துணைக்கு அழைக்க , அவனோ" விழுந்தது அகிலா இல்லை என்றதும் தான் எனக்கு மூச்சே  வந்தது." என்று ஆமோதிக்கவும் . எங்கள் சித்திக்கு எவ்வளவுக் கோபம் வந்திருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை.

"அபப்டி என்றால் அம்புஜா விழுந்தால் உங்கள்  இருவருக்கும் பரவாயில்லை இல்லையா?அகிலா மட்டும் தான் உங்களுக்குத் தங்கையா? அம்புஜா தங்கை இல்லை . அப்படித்தானே. அக்கா....... பார் எப்படி இருக்கிறார்கள் இவர்கள் இருவரும். சென்னை வாசிகளே இப்படித் தான் சுயநலம் ஜாஸ்தி " என்று எங்கள் அம்மாவிடம் சித்தி வத்தி வைக்க , அம்மா முறைக்க ... நாங்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து அப்பொழுது எஸ்கேப்...

  ஆனால் அதற்காகப் பிறகு  அம்மாவிடமிருந்து 
 லக்ஷார்ச்சனைக் கிடைத்தது தனிக் கதை.

இதை விடுங்கள். இதெல்லாம்  ஜுஜுபி  என்பது போல் நான்   பேயிடமே  அறை  வாங்கிய கதை  ஒன்று இருக்கிறது.. 

பேயறை  இல்லைங்க...... உண்மைப் பேயிடமே அறை  வாங்கியக்  கதை சொல்கிறேன். ............................................................தொடர்ந்து வாருங்கள்.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்