Friday, 23 September 2016

பழைய பஞ்சாங்கம்.

google image




 சென்ற வாரத்தில் எனக்கு  பல்லில் வலியான வலி.  கைவைத்தியமாக  கிராம்புத் தைலத்தை  உபயோகித்ததில்  சறறே நிவாரணம் தெரிந்தது. வலியை மறக்க டிவி பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்......
  டிவியில் எனக்காகவே காத்திருந்தாற்போல்,  திருமதி காஜல் அகர்வால் வந்து  "உங்கள் பற்பசையில்  உப்பு இருக்கிறதா?"  என்று கேட்டார்.

"என் பேஸ்ட்டில் உப்பு இல்லையோ. அது தான் வலியோ"  என்கிற  சந்தேகம் வந்தது.

ஒரு சில நாட்களுக்கு முன்பாக," உங்கள் பற்பசையில் கரி இருக்கிறதா என்று வேறு ஒரு நடிகை கேட்டதாக நினைவு.

மார்கெட் உத்தி எப்படியெல்லாம் இருக்கிறது பாருங்கள்.

நான் பள்ளியில் படிக்கும் போது பற்பசையை வீட்டிற்கு, சில விருந்தினர் ,வரும் போது அவர்கள் கையில் மட்டுமே பார்த்ததாக நினைவு.

"ஏன்  நீங்கள் எல்லோரும் பல் விளக்கியதாக  சரித்திரமே இல்லையா?"என்று கேட்காதீர்கள். நாங்கள் பல் விளக்கியது பற்பொடியில் அதுவும் 'ஹோம்மேட்' பற்பொடி .

"பற்பொடியை  வீட்டில் தயாரிக்க முடியும் "என்கிற செய்தி இளம் தலைமுறையினருக்கு பெருத்த ஆச்சர்யமளிக்கும்  விஷயம் என்பது உண்மை.

வீட்டுத் தயாரிப்பு மட்டுமே  நாங்கள் உபயோகித்தது. எப்படி தயாரித்தோம் என்று சொல்கிறேன்.

பலருக்குத் தெரிந்த விஷயமாகத் தானிருக்கும்.

அருகிலிருக்கும் செட்டியார் கடையில் தான் மளிகை சாமான்கள் வாங்குவோம். (ஸூப்பர் மார்கெட்,  பிக் பாஸ்கெட் இல்லாத காலம் அது.) அங்கே 'உமி'யும்  கிடைக்கும்.
'உமி' என்றால்  என்ன ? என்று கேட்பவர்களுக்கு...... நெல்லில் இருந்து 
அரிசியை எடுத்த பின்பு , மிச்சம் இருப்பது தான் உமி. அது  எட்டணாவிற்கு (ஐம்பது பைசா) இரண்டு அல்லது மூன்று படி கிடைக்கும்.

உமி இரண்டு படி வாங்கி வந்து, ஒரு பெரிய இரும்பு வாணலியில் கொட்டி ,  நெருப்பாய் கணன்று கொண்டிருக்கும் கரித்துண்டு , ஒன்றிரண்டை  உமியின் நடுவில் வைத்து வாணலியைக் காலையில் கொல்லையில் வைத்து விட்டு  மறந்து விடலாம். கொஞ்சம் கொஞ்சமாக உமி புகைந்து ,  கருகும்.

மாலையில்  பார்க்கும் போது , எல்லா உமியும் கருகி விட்டிருக்கும். சூடு ஆறின  பிறகு அதில் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கிராம்பு, எல்லாவற்றையும் கலந்து கல்லுரலில் போட்டு, உலக்கையால் இடித்து பொடியாக்கி ,வாசனைக்கு சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து,  ஒரு பெரிய டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்வோம்.

இது தான் 'ஹோம்மேட்' பற்பொடி.  அப்போதெல்லாம்  பல வீடுகளில் 'ஹோம் மேட், பற்பொடி தான் இருக்கும் .

எல்லாமாக சேர்ந்து,செலவு ஐந்து ருபாய்க்குள் அடங்கும்.

எட்டு பேர் அடங்கிய கூட்டுக் குடும்பத்திற்கு , இது இரண்டு, மூன்று  மாதத்திற்கு மேல் தாராளமாய்  வரும்.

பல்லாண்டு ஆரோக்கியமாய் இருந்தன பற்கள்.

பல்லிற்கும்,பர்சிற்கும்  நண்பனானது 'ஹோம்மேட்' பற்பொடி.

பல், பர்ஸ், பற்பொடி மூவரும்   நண்பர்களாய் இருந்தால் பொறுக்குமா? பலரின் கண்ணை உறுத்தியது. பிரிவினை  செயல்பாடுகள் ஆரம்பித்தன.

ஆகவே, மெதுவாக 'பேஸ்ட்'  பக்கம் நம்மை இழுக்கும் மார்க்கெட் உத்தி நடந்தது.

பல் விளக்குவதற்கு உப்பும், கறியும்,சாம்பலுமா? அவை  எல்லாம் பற்களைக் கெடுத்து விடும் என்று பிரெயின் வாஷ் செய்து, நம் கையில் "பேஸ்ட்டைத் திணித்தனர்  பெரும் தொழிலதிபர்கள்.
 நம் உடல் நலத்தில் தான் அவர்களுக்கு எவ்வளவு அக்கறை!

பேஸ்ட்டின் விலை  நம் பர்சைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.

வருடங்கள் உருண்டோடி விட்டன. மளிகை சாமான் லிஸ்ட்டில்  டூத்பேஸ்ட் இன்றியமையாத இடத்தை பிடிக்க ஆரம்பித்து விட்டன.

நாம் நம் பழைய  பழக்க வழக்கங்களிளிருந்து வெகு தூரம் வந்த பின்பு, இப்பொழுது பிரபல நடிகைகள் கையில் ஒரு மைக்கைக் கொடுத்து 
" உங்கள் பேஸ்ட்டில், உப்பு இருக்கிறதா? கரி இருக்கிறதா? . இந்தப் பேஸ்ட்டை உபயோகியுங்கள். அதில் கூடுதலாக வேம்பும் இருக்கிறது  ." என்று  விளம்பரப் படுத்துகிறார்கள். ..


 எதையெல்லாம் பல்லிற்குக் கேடு என்று அன்று அவர்கள் சொன்னார்களோ,  அதே உமி சாம்பல், உப்பு, வேம்பு, கூடவே  உடல் நலத்திற்குக் கேடு செய்யும் ரசாயணத்தை சேர்த்து, பிளாஸ்டிக்  ட்யூபில் அடைத்து டூத்பேஸ்ட்  என்று விற்று, நம் பர்சில் இருக்கும் பணத்தைப் பிதுக்கி எடுத்து விடுகிறார்கள்.

  அட... இதைத்தான் அப்பவே செய்தோமே பெரிய பொருட் செலவில்லாமல்! என்று சொன்னால்  பழைய பஞ்சாங்கம்  என்கிற பெயர் தான் மிஞ்சும்.

20 comments:

  1. நன்றாகசொன்னீர்கள் ராஜி, மீண்டும் எல்லோரும் பழமைக்கு மாறுவது சந்தோஷமான விஷயம் தான், ஆனால் ஏமாற்றுபவர்களிடம் ஏமாந்து போகாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி

      Delete
  2. திரும்பவும் மக்கள் நாட்டு வைத்தியம் சித்த மருத்துவம்னு திரும்பறதை பார்த்து கம்பெனிகளும் உப்பு இருக்கா சாம்பல் இருக்கான்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஹோம் மேட் பல்பொடி செய்ய சொல்லி கொடுத்தமைக்கு நன்றி! முயன்று பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பற்பொடி செய்து பாருங்கள் சுரேஷ். உங்கள் பல்,பர்ஸ் , இரண்டிற்கும் நண்பனாகி விடும் பற்பொடி. அதற்கு நான் கியாரண்டி.
      உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  3. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று அன்றே சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

    உமிக்கரியுடன், உப்பு + கிராம்பு சேர்த்து நன்கு நைஸாகப் பொடியாக்கி Home Made Tooth Powder செய்து அதனைப் பிறர் பார்க்கப் பெருமையாக, காலியான கோல்கேட் டூத் பவுடர் டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டிருந்ததும் நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைக்கிறது எனக்கு.

    இதையெல்லாம் நகைச்சுவை மேலிட கலந்துகட்டி நான் எழுதியது தான் என் ‘பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா’ கதையும்.

    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி கோபு சார். நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் சென்று படிக்கிறேன்.

      Delete
  4. இப்போது உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா, பெருங்காயம் இருக்கா என்று கேட்பவர்கள்தான் முன்பு "ஐயையே.. இதையா தேய்க்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  5. அருமையான விஷயத்தை
    மிக அருமையாக சொல்லிச் சென்றவிதம்
    மனம் கவர்ந்தது
    நல்லவனவிட்டு ஏமாற்றப்பட்டு
    எல்லா விஷயங்களிலும்வெகு தூரம் வந்துவிட்டோம்
    திருமபச் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் பழைய வழக்க்த்திளிருந்து வெகு தூரம் வந்து விட்டோம். திரும்பிப் போவதென்பது முடியாத காரியம் தான் .

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  6. அருமை...
    மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அம்மா...

    ReplyDelete
  7. இருபத்தைந்து வயது வரைக்கும் இதேபோல வீட்டில் தயாரித்த பற்பொடி தான்..

    ஆனாலும், ஆர்வம் மாறாததால் - கடந்த பத்து வருடங்களாக மீண்டும் மூலிகைப் பற்பொடிதான்..

    வருடங்களில் விடுமுறைக்குச் சென்று வரும்போது மீண்டும் ஓராண்டுக்கான பற்பொடியை எடுத்து வருவதால் நல்லதாக இருக்கின்றது..

    பற்பொடியின் கதையை புன்னகை ததும்பும்படிக்கு வழங்கியிருக்கின்றீர்கள்.. மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லையே! மஊளிகை பற்பொடி தா நீங்கள் உபயோகிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி துரை சார்.

      Delete
  8. நல்ல பகிர்வு. நம்மை என்னவெல்லாம் சொல்லிக் கிண்டல் செய்தார்கள். இப்போது அவர்களே இதைச் செய்கிறார்கள்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி வெங்கட்ஜி

      Delete
  9. நீங்க சொல்லும் ஹோம்மேட் உமி பல்பொடி சூப்பரா இருக்கே. செய்யணும்னு ஆசையா இருக்கு, ஊருக்குப் போனால் நினைவு வைத்து, செய்து பார்க்கிறேன். அப்போதெல்லாம் நிறைய பேர் சாம்பல் எடுத்து விளக்குவார்கள். பார்க்கப் போனால் இந்த கெமிக்கலுக்கு அந்த சாம்பலே பரவாயில்லையோன்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரியே சித்ரா. பல கெமிக்கல்கள் நம் வயிற்றுக்கு செல்கின்றன. எல்லாவற்றையும் யோசித்து தான் செய்தார்கள் நம் முன்னோர். நாம் தான் அதையெல்லாம் முட்டாள் தனமாய் ஒதுக்கி விட்டு பின் அவஸ்தைப் படுகிறோம். உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சித்ரா.

      Delete
  10. i know in southern dts ONE GOPAL TOOTH POWDER was very famous
    and did not spoil teeth...

    ReplyDelete
    Replies
    1. yes. You are right. I had in my mind to mention about the sweet, pink Gopal "palpodi" but forgot to make a mention about it.
      Thankyou for visiting my blog and commenting on it. Thankyou!
      T

      Delete
  11. இன்னும் கொஞ்ச நாளில் நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவில் சிகைக்காய் இருக்கிறதர? நீங்கள் குளிக்க உபயோகிக்கும் சோப்பில் பயர் மாவு இருக்கிறதா? நீங்கள் பாத்திரம் கழுவ உபயோகிக்கும் பொடியில் அரப்புத்தூள் இருக்கிறதா, சாம்பல் இருக்கிறதா? என்றெல்லாம் கேள்வி கேட்டு விளம்பரங்கள் வரும்.

    செயற்கை உரங்களை உபயோகிப்பீர் விளைச்சலை பெறுக்குவீர் என்று பசுமைப் புரட்சி செய்து விட்டு தற்போது ஆர்கானிக் என்ற பெயரில் இயற்கை உரங்களை உபயோகிப்பீர் என்று கூவும் காலமிது.
    --
    Jayakumar

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்