Showing posts with label கிருஷ்ணன். Show all posts
Showing posts with label கிருஷ்ணன். Show all posts

Wednesday, 24 August 2016

அம்மாவிடம் காட்டிக் கொடுக்கக் கூடாது!

கிருஷ்ணர் கதைகள் கேட்கவும் , சொல்லவும் அலாதி  இன்பம் தான் . கிருஷ்ண ஜெயந்தியாக இருப்பதால் , நான் படித்த கதையை சொல்ல ஒரு வாய்ப்பு அவ்வளவே.

இது நீங்கள்படித்த கதையாய் தான் இருக்கும்.



image courtesy-google.

கோகுலத்தில் நந்த கோபரின் இல்லம். தயிரும் , வெண்ணையுமாய் மணக்கிறது வீடு.  செல்வம் செழித்த  இல்லம். இருக்காதா என்ன? மஹாலஷ்மி கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக இருப்பாளே!

குழந்தைக் கிருஷ்ணன் தன்தோழர்களுடன் வீடு வீடாக சென்று தயிரையும், வெண்ணெயெயையும்  திருடிக் கொண்டிருக்கிறான்.  கோபிகைகளெல்லாம் வந்து," தாயே ! யசோதா " என்று முறையிட்ட போதெல்லாம் , "அதெப்படி என் கிருஷ்ணனை கள்வன் என்று சொல்லாம்?" என்று சண்டைப்பிடித்த யசோதைக்கு, இப்பொழுது பிரச்சினை .

ஆமாம். கள்ளக் கிருஷ்ணனின் சேனையிடமிருந்து தன வீட்டு உறியைக் காப்பாற்ற படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாள்.  அவள் சற்றே அயரும் போது , தடால் என்னும் சத்தம் எழுப்பும் . தயிரும் வெண்ணையும்  கீழே சிதற , திருட்டுக் கூட்டம் நாலா பக்கமும் ஓடும். ஆனால் கண்ணன் மட்டும் கைக்குக் கிடைக்க மாட்டான்.

இதற்கு ஒரு முடிவுக் கட்ட வேண்டுமே! யோசித்தாள்  யசோதா .....
ஆமாம். இப்படித்தான் செய்ய வேண்டும் என்று மனதிற்குள்  திட்டம் போட்டுக் கொண்டு , வெண்ணெய் கடைந்துக் கொண்டிருந்தாள். 

பின்னாலிருந்து இரண்டு பிஞ்சுக் கைகள் அவள் கண்களை மறைக்க, "அம்மா என்னைக் கண்டுபிடிப் பார்க்கலாம்." என்கிற மழலைக் குரல் யசோதையை மயக்கியது.. ஆனாலும் , யசோதை நினைத்துக் கொண்டாள், " இதற்கெல்லாம் நாம் அசரக் கூடாது. நம் திட்டத்தை இன்று நிறைவேற்றி விட வேண்டியது தான்." மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் . 

நண்பகல் . எல்லோரும் மதிய உணவு உண்ட பின்பு , கிருக்ஷ்ணரிடம் , " கிருஷ்ணா, போய் விளையாடு. எங்கேயும் போய் வெண்ணெய் திருடக் கூடாது. சரியா? எல்லோரும் உன்னைத் திருடன், கள்வன் என்று சொல்லும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா?" என்று யசோதை சொல்ல,

கிருஷ்ணன், " இல்லேம்மா , நான் எங்கேயும் போகவில்லை. நம் வீட்டு முற்றத்திலேயே விளையாடுகிறேன். நீ போய்த் தூங்கு." என்று சொல்லி விட்டு ஓடவும், யசோதைத் தன் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கினாள்.

தயிர், வெண்ணெய் வைத்திருக்கும்  உறியிலிருந்து,  ஒரு கயிற்றைக்  கட்டி அதன் மறுமுனையை  பக்கத்து அறைக்குக் கொண்டு போய், அதன் நுனியில் ஒரு மணியையும்  கட்டி விட்டாள். பிறகு , உறியை மெதுவாக ஆட்டவும், மணி 'கிணி கிணி ' என்று அடித்தது.

ஆக, வெண்ணெய் திருடும் போது கிருஷ்ணனை இன்றுக் கையும் களவுமாகப் பிடித்து விடலாம் என்று உறுதிப் படுத்திக் கொண்டு,  சற்றே கண்ணயரத் தொடங்கினாள்.

இப்பொழுது உள்ளே ஓடி வந்த கிருஷ்ணன் ,யசோதை தூங்கி விட்டாளா என்று உறுதி செய்து கொண்டான்.  சட்டென்று உறியில் தொங்கும் கயிறு அவன் கண்ணில் பட, அந்தக் கயிற்றைத் தொடர்ந்து சென்று பார்க்க இறுதியில் மணி ஒன்றுக் கட்டப்பட்டிருந்தது..

இது தான் விஷயமா? என்று நினைத்துக் கொண்டு, மணியிடம், " மணியே !மணியே ! " என்று கூப்பிடவும், மணி விழித்துப் பார்த்தது. கூப்பிட்டவன் கிருஷ்ணன் என்று தெரிய அதற்கு ஒரே குஷி தான்.

"மணியே ! எனக்கு ஒரு உதவி செய்வாயா ? "என்று கிருஷ்ணன் கொஞ்சிக் கேட்க,

மணிக்கோ ஒரே சந்தோஷம். "என்ன பாக்கியம் செய்தேன் நான். பரம் பொருளே என்னிடம் உதவி கேட்கிறாரே."  ,
" பரம் பொருளே சொல்லுங்கள்! இல்லை...இல்லை .....ஆணையிடுங்கள். செய்யக் காத்திருக்கிறேன்." என்று மணி சொன்னது.

"நானும் என் நண்பர்களும் வெண்ணெய் திருடும் போது  நீ சப்தம் செய்து  என்னை அம்மாவிடம் காட்டிக் கொடுக்கக் கூடாது". என்று கிருஷ்ணன் சொல்லவும், மணி சந்தோஷமாக ஒத்துக் கொண்டது. "வாக்கு மாற மாட்டாயே!"  என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு  , வெளியே நிற்கும் தன் நண்பர்களை , சைகையால் உள்ளே வரவழைத்தான் கண்ணன்.

பின் ஒருவர் மேல் ஒருவர் ஏறி , உறியிலிருந்து , வெண்ணெய் பானையை ஓசைப்படுத்தாமல் கீழே இறக்கினார்கள் .

மணியும் ஓசையே செய்யாமல்  நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது..

பிறகு, வெண்ணெயை உருண்டை உருண்டையாக எடுத்து  தன் நண்பர்களுக்கு வாரி வழங்கினான் கிருஷ்ணன்.எல்லோரும்  கட்டிக் கட்டியாக வெண்ணெயை  முழுங்கினார்கள்.

ஊஹும்.....அப்போதும் மணி மூச்சுக் காட்டவில்லையே.

எல்லோருக்கும் கொடுத்து முடித்தப் பிறகு, தன் பிஞ்சு விரல்களால் வெண்ணெயை அள்ளி, தன் செம்பவழ  இதழில் வைக்கவும்,

 "கிண்  கிணி , கிண்  கிணி " என்று மணியோசை யசோதையை எழுப்பியது.

யசோதை திட்டம்  பலித்து விட்ட மகிழ்ச்சியில் வரவும், கிருஷ்ணன், கை, வாய், குண்டு கன்னம் எல்லாம்  வெண்ணெய் வழிய  எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. யசோதை தாவிப் பிடித்தாள் கிருஷ்ணனை. " கையும் களவுமாக மாட்டிக் கொண்டாயா?. இன்று உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபமாக சொல்லவும்.

"கொஞ்சம் இரும்மா  .இதோ வந்து விடுகிறேன்"என்று சொல்லி விட்டு மணியிடம்  ஓடினான்  கிருஷ்ணன்.

" மணியே! கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போனாயே . உன்னை நம்பித் தானே இந்த வேலையில் இறங்கினேன்." என்றுகிருஷ்ணன் கேட்கவும்,

மணி சொல்லியது," பரம் பொருளே ! தாங்கள் உறியைத்த் தொடும்போது சப்தித்தேனாசொல்லுங்கள் பிரபுவே.."

"இல்லை" என்றான் கிருஷ்ணன்.

"உறியிலிருந்து பானையை இறக்கினீர்களே. அப்பொழுதாவது  சப்தம் போட்டேனா ? "

"இல்லை."

"உங்கள் நண்பர்களுக்கு  வெண்ணெயை  பகிர்ந்து கொடுக்கும் போது ஏதாவது சப்தம் செய்தேனா ?"

"இல்லை."

"அவர்கள் உண்ணும் போது கூட , நான் சப்தம் செய்யவில்லை தானே.?"

"ஆமாம். நீ அப்பொழுதும் சப்திக்கவில்லை.. பின் நான் உண்ணும் போது மட்டும்  சரியாக சப்தம் செய்துக் காட்டிக் கொடுத்து விட்டாயே. அது ஏன்?" என்று கோபமாகக் கிருஷ்ணன் கேட்க,

"பரம் பொருளிற்கு நைவேத்தியம் செய்யும் போது, மணியடிக்காமல் இருக்கலாமா? அது என் கடமை அல்லவா? அந்த நினைவில் அடித்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் ." என்று மணி கிருஷ்ணன் திருவடிகளில்  விழுந்து வணங்கியது.

அதற்குள் யசோதை அங்கு ஆஜர்," இன்று உன்னைக் கண்டிப்பாக உரலில் கட்டுகிறேன் பார் என்று கோபமாகக்  கிருஷ்ணனை கையைப் பிடித்துக் கொண்டு செல்ல, ,

கிருஷ்ணனோ,  ஜன்னல் வழியாகத் தன நண்பர்களைப் பார்த்து, கள்ளத் தனமாக சிரிக்கிறான் .

அவனுக்கு மட்டும் தானே  தெரியும் எதற்காக இப்படி உரலுக்குக் கட்டுப்படுகிறான் என்று!


Saturday, 2 February 2013

ஆரா.......ரோ.......ஆரி...ரா.....ரோ......










பக்கத்து  வீட்டுக்   குழந்தை    விடாமல்    அழுது  கொண்டேயிருந்தது
கேட்டது.

" அருணா , ஏன் குழந்தை     அழுது  கொண்டேயிருக்கிறான்? "   என்று
கேட்டென்.    " தூங்க ,  இப்படித்தான்     அழுகிறான் "   என்று    கூறினாள்.  

சிறிது   நேரத்திற்கெல்லாம்,  லேட்டஸ்டான   சினிமாப்   பாட்டு   ஜன்னல்
 வழியாக   அருணா  வீட்டிலிருந்து    மிதந்து வந்தது.    குழந்தையின்
அழுகையும்    சட்டென்று    நின்றது. 

சினிமாப்    பாட்டு    தாலாட்டியதோ ?

நம்முடைய    தாலாட்டுப்    பாட்டு    என்னானது?

நகரங்களில்    பெரும்பாலான     தாய்மார்களுக்கு    தாலாட்டுப்   பாட்டு
 தெரியாது      என்றே    நினைக்கிறேன்.

அவர்களுக்கு    இருக்கும்   வேலை  சுமையில்       இதெல்லாம்     எங்கே..............
அதுவும்  இல்லாமல்   இணையம்,   t.v. , f.m ..,   என்று   எல்லாமே   தாயின்
தாலாட்டும்     சுமையை    பகிர்ந்து   கொள்கின்றன.

தாலாட்டுப்    பாடலைக்    கேட்டுக்    கொண்டே    உறங்கும்    குழந்தை
ஒரு  பெரிய    நிம்மதியுடன்     தூங்கப்   போகும்.  பாதுகாப்பற்ற    உணர்வே
இல்லாமல்   இருக்கும்.

இந்தப்    பாதுகாப்பு    உணர்வு    அந்தக்     குழந்தையின்    எதிர்காலத்தை
 நிர்ணயிக்கும்   ஒரு  பெரிய  காரணி  என்பதை    மறுப்பதற்கில்லை.
யாருக்குத்   தெரியும்    நம்  வீட்டுக்   குழந்தை    ஒரு  பெரிய    விஞ்ஞானியாகவோ  , மருத்துவராகவோ  ,   விளையாட்டு    வீரராகவோ    சாதனை  புரியலாம் .

அதற்கான   கிளாசில்    பின்னர்    சேர்க்கலாம்  ,என்று    இப்பொழுது   அதற்கான    சின்ன    விதையை  தாலாட்டின்    மூலம்   விதைக்கிறாள்.

இதையும்   தவிர    குழந்தைக்கு   என்ன   வேதனையோ?  அந்த  சமயத்தில்
 தாயின்   தாலாட்டு   பெரிய    ஆறுதல்    இல்லையா?

சில    தாலாட்டுப்   பாடல்கள்    தாயின்    உள்ளக்   கிடக்கையை    அற்புதமாக
 எடுத்துக்    கூறும்.

தன்    பிறந்த   வீட்டை    மிஸ்   பண்ணுகிறாளோ    என்று   கூடத்  தோன்றும்.
"மாமா  அடித்தாரோ   மல்லிப்   பூச்செண்டாலே"   என்ற   பாடலைப்    பாருங்களேன்  ,உங்களுக்கே    புரியும்.

தன்   குலப்   பெருமை  ,  தாத்தா பெருமை    என்று   கூறி   பாடும்  போது      ஒரு   உளவியாளர்  , போல    குழந்தையை   ஊக்குவிக்கிறாள்.


இதையெல்லாம்   தாண்டி   ஒரு  தாய்    தனக்குள்ள   வருத்தத்தை வெளிபடுத்தவும்   தாலாட்டை    உபயோகிப்பதாக    படித்திருக்கிறேன்.

அப்படி     என்றால்    அவளுக்கும்  அது   ஒரு    பெரிய   உதவி  தானே.
குழந்தையின்    மன   நலம் மட்டுமல்ல,   தன்     மன     நலமும்     அல்லவா   பேணுகிறாள்.

நம்    கலாசாரத்திலேயே     தாலாட்டு   என்று   ஒன்று  இருந்தது    என்றே   கூறலாம்.

"மண்ணு   புகழ்   கோசலை   தன்   மணி   வயிறு    வாய்த்தவனை "  என்று    ராமன்  தாலாட்டு   ,

"ஆயர் பாடி  மாளிகையில்  "   கிருஷ்ணனை   இன்னும்   சிறு    குழந்தையாகத்
 தாலாட்டிக்   கொண்டிருக்கிறோம்.


 ஆராரோ     பாடி   (குரல்   மோசமாக இருந்தாலும்)    குழந்தையின்  மனம்,  மற்றும்   உடல்  நலம்   காப்போம்.



PAATTI  STORIES  படிக்க    இங்கே   சொடுக்கவும்.படித்து   நிறை  குறை   எழுதுங்களேன்.


 image   courtesy---google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்