Sunday, 22 December 2013

விஷ்ணுவின் கணக்கு







விஷ்ணு  காபி  போட்டது  படித்திருப்பீர்கள்.
கணக்குப் போட்டது தெரியுமா?
படியுங்கள்........

" இந்த வருடம் எப்படியாவது  ராசியின் பிறந்தநாளை நினைவில்  வைத்து, அவளுக்கு நல்ல பரிசுப் பொருள்  ஒன்றைக் கொடுத்து ,அசத்தி விட வேண்டியது தான் "  என்று நினைத்துக் கொண்டார்  விஷ்ணு.

ஆமாம். இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நினைத்துக் கொள்வார் விஷ்ணு.
ஆனால்  கரெக்டாக மறந்து விடுவது, சகஜமாகிப் போனது விஷ்ணுவிற்கு.
முதலில் எல்லாம் ராசிக்கு ஏமாற்றமாய் இருந்தது.  போகப் போக  பழகி விட்டது.

ஒரு மாதம் முன்பிருந்தே  தனக்குத் தானே நினைவு  படுத்திக் கொண்டேயிருந்தார்.
என்ன வாங்குவது? யோசித்து  யோசித்து மண்டை குழம்பியது  தான் மிச்சம். 
சரி, அதற்குத் தான்  இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே என்று எப்பொழுதும் போல்  நினைத்துக் கொண்டார்.

அந்த நாளும் வந்தது.
காலை  எழுந்ததும் சொல்ல வேண்டாம். மாலை வரை  சஸ்பென்ஸை  நீட்டித்து விட்டு  , பிறகு அவள் எதிர்பாராத சமயத்தில்  சொல்லலாம், என்று  சஸ்பென்ஸ் வைத்தார்.

காலை எழுந்ததும் ,அவருக்கு  வாழ்த்து சொல்ல வேண்டும் போல் தானிருந்தது. ஆனாலும்  அடக்கிக் கொண்டார்.  வேண்டாம் ,அவளை அவள் விரும்பும்  சேலையை  வாங்கிக் கொடுத்து விட்டு ,சொல்லலாம் என்று அமைதி கொண்டார்.

"காலை எழுந்ததிலிருந்து பார்க்கிறேன்.  ஒரே சிந்தனையில் இருக்கிறீர்களே! "
என்றாள்  ராசி.

" அதெல்லாம் ஒன்றுமில்லை,........... ஒன்றுமில்லை "  விஷ்ணு பதட்டமானார்.. 

அவரை  பார்த்து ," என்ன என்றைக்குமில்லாமல் ஒரு மாதிரி பதட்டத்துடன்  இருக்கிறார் போல் தெரிகிறார். " நினைத்துக் கொண்டு,

" உடம்பிற்கு ஒன்றுமில்லையே! " கேட்டாள்  ராசி.

" நான் நன்றாகத்தான் இருக்கிறேன் " என்று சொல்லியும்  சற்றே நம்பிக்கையில்லாமலே தான் , கவலயுடன் , தன்  வேலைகளை  பார்க்கச்  சென்றாள்  ராசி.

" அவருக்கு BP  செக் செய்து நாளாகி விட்டதே.டாக்டரிடம், செக் அப்பிற்கு போக வேண்டுமோ ?" சின்ன வருத்தம் எட்டிப் பார்த்தது ராசி மனதில். 

" சிறிது நேரத்திற்கெல்லாம்  ஆபிஸ் கிளம்பினார்  விஷ்ணு. போகும் போது 
," இன்று மாலை  நான்  சீக்கிரம்  வந்து விடுகிறேன்.  மாலை வடபழனி  போய் வருவோம். " என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

"சரி , என்ன திடீர் கரிசனம் இவருக்கு. ? எவ்வளவு நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று  இன்றைக்குப் போகலாம் என்கிறாரே!" 
எப்படியோ  இன்றைக்காவது  போகலாம் என்கிறாரே. முருகன் தரிசனம் கிட்டப் போகிறது  நமக்கு என்று மகிழ்ந்து  கொண்டாள் ராசி.

மத்தியானம்  ஒரு மணியிருக்கும். போன்  அலறி ,ராசியின் மதியத் தூக்கத்தைக்  கெடுத்தது.

போனை   காதருகில் கொண்டு போனதும்  "ஹலோ" என்றார் விஷ்ணு.

" இவர் ஏன்  இந்த நேரத்தில் பொன் செய்கிறார்.நானே போன்  செய்தால் கூட  ஆபீஸ் நேரத்தில்  ஏன்  தொல்லை செய்கிறாய்  " என்று தானே எரிந்து விழுவார்.
என்று சற்றே  ஆச்சர்யபட்டாள்  ராசி.

" இன்றைக்கு ஏதாவது உனக்குப் பிடித்த ஸ்வீட் செய்யேன் " என்று விஷ்ணு கேட்க , நன்றாகவே குழம்பினாள்  ராசி.

"என்ன ஆச்சு  இவருக்கு? சென்ற வாரம்  நான்   டாக்டரிடம் " ஹெல்த் செக் " செய்தேனே.அதில் ஏதாவது வில்லங்கமோ? 
எனக்கு ஏதாவது  வியாதி  வந்து முற்றி விட்டதோ? அது தான்  என் மேல் கரிசனமாய் பேசுகிறாரோ?.  எனக்குப் பிடித்த ஸ்வீட் செய் என்கிறாரே. எல்லாமே நார்மல் என்று  டாக்டர் சொன்னதாய் தான் நினைவு. 
என்னையே தானே ஸ்வீட் செய்ய சொல்கிறார். நாம் நினைப்பது போலெல்லாம் இருக்காது" என்று சமாதானபடுத்திக் கொண்டாலும்,
தன்  மேல் சுய பச்சாதாபம் , மேலோங்கியது ராசிக்கு.திரும்பவும் எல்லா மெடிக்கல் ரிபோர்ட்ஸ்  எல்லாம்  எடுத்துப் பார்த்ததில் ,  எல்லாமே  நார்மல் என்று தான் சொல்லியது  ரிப்போர்ட் .

மாலை  ஆறு மனிக்கு ,. " கோவிலுக்கு  போக  ஏன்  கிளம்பவில்லை ?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் விஷ்ணு.

பதிலே சொல்லாமல்  உட்கார்ந்திருந்தாள்  ராசி.
"என்ன யோசனை? கிளம்பி வாயேன் . எத்தனை நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். போய்  முருகனிடம்  நீ வேண்டுமென்கிற நேரம் , பேரம்  பேசி, வேண்டி ,விண்ணப்பித்து விட்டு வா.  நான் உன்னை அவசரப்படுத்தவே  மாட்டேன் .ஆமாம். உன்னை ஸ்வீட் செய்ய சொன்னேனே ? என்ன ஆச்சு ? "என்று விஷ்ணு கேட்க.
(விஷ்ணுவிற்கு மனதில் நம் 'டேமேஜ்' ஆன   பெயர் இன்று  'ரிப்பேர்' செய்யப்பட்டு விட்டது  என்கிற பெருமிதம் தோன்றியது.)

"இல்லை ஒன்றும் செய்ய வில்லை.  அலுப்பாக இருந்தது . அதனால் தான் செய்யவில்லை." ராசி.சொல்ல.

" சரி வா, முருகனை  நீ பேட்டி கண்டு விட்டு  வா. நாம் அப்படியே சரவண பவனில்  சாப்பிட்டு விட்டு  வருவோம்." என்று ராசியை கிளப் பி அழைத்துக் கொண்டு போனார். 

காரில்  ,எப்பொழுதும்  வீணை  காயத்ரியின்   " raga waves '  அலை அடித்துக் கொண்டிருக்கும்.இன்றோ  ராசிக்கு மிகவும் பிடித்தமான  சூலமங்கல  சகோதரிகள்  " காக்க காக்க  " என்று பாடிக் கொண்டிருக்க , ராசிக்கு தன்  ஆரோக்கியத்தின் மேல்  சந்தேகம் வலுத்தது.கோவிலுக்குப் போய்  அர்ச்சனைத்   தட்டு வாங்கிக் கொண்டு , 
இருவரும் உள்ளே சென்றனர். .

"இன்றைக்கு அர்ச்சனை உன் பேரில் தான் " இது விஷ்ணு.

" ஏன் ? என் பெயருக்கு? " குரல் நடுங்கக் ராசி கேட்கவும்,  விஷ்ணு  ,
"நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.எப்பவும் போலவேயில்லையே நீ. 
என் மேல் கோபமோ? உன் பிறந்தநாளை மறந்து விட்டேன் என்று தானே! உனக்கு சஸ்பென்சாக  இருக்கட்டுமே என்று தான்  காலையிலிருந்து வாழ்த்த்து சொல்லவில்லை.. இப்பொழுது சொல்கிறேன்," பிறந்தநாள் வாழ்த்துக்கள் "
என்று சொன்னவுடன், தன்னுடைய  பயம் பொய்யான திருப்தியில், 'கலகல'வென்று  சில்லறையைக் கொட்டியது போல் சிரித்தாள் ராசி. 

" பார்த்தியா  இந்த வருடம்  கரெக்டாக நினைவில் வைத்து உன்னை வாழ்த்திவிட்டேனே . அது மட்டுமில்லை. உனக்குப் பிடித்த புடைவை வேண்டுமானாலும்  வாங்கிக் கொள் ,இன்று" என்று சொல்லவும்.

தெரு என்பதையும் மறந்து ,சிரிப்பை அடக்க மாட்டாமல்,  ராசி சிரிக்க  விஷ்ணு குழம்பினார்.

"என்ன ஆச்சு சொல்?  எதற்கு சிரிக்கிறாய்?" விஷ்ணு கேட்க,

"சிரிக்காமல்  என்ன செய்ய?  மனைவியின் பிறந்த நாளை கரெக்டாக ஒரு மாதம் கழித்துக்  கொண்டாடுகிற கணவர் நீங்களாகத் தான் இருக்க முடியும் . என் பிறந்த நாள் ,போன மாதம் இதே தேதி.. .(என் அர்த்தமற்ற பயம் பொய்  ஆனது ஒரு பெரிய சந்தோசம் என்று  மனதில் நினைத்துக் கொண்டு),  நீங்கள்  இன்று தான் என் பிறந்தநாள் என்று சொல்வதும் எனக்கு சந்தோஷமே! ஏன்  சொல்லுங்கள் பார்க்கலாம்?" ராசி வினவ  ,

விஷ்ணு முகத்தில் லிட்டர் கணக்கில்  அசடு வழிய, தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்க,  ராசியே சொன்னாள் ,
" இன்று கணித மேதை  ராமானுஜம் பிறந்த  நாள்.  அவருடையதைப்போல் என் பிறந்த நாளும் இன்றே   என்று சொன்னதற்காகத் தான் " என்று சொல்லிக் கொண்டே  , ராஜ அலங்காரத்தில்  கம்பீரமாய்  வேலுடன் நின்ற வடிவேலனை  பார்த்து ,இனம் புரியாத நிம்மதியுடன் ,கன்னத்தில் போட்டுக் கொண்டாள் ராசி.

ஆக ,விஷ்ணுவின் கணக்கு  இந்த வருடமும் தப்பு தான்.
ராசிக்கோ, தன்  கணக்கு தப்பானதில்   பெரு மகிழ்ச்சியே!

சரி, ராசிக்கு "Belated Wishes" சொல்லி விட்டு  அந்தத் தம்பதியை , தனிமையில் விட்டு விட்டு  நாமும் நகர்வோம்.

image courtesy--google.

Tuesday, 17 December 2013

களி நடனம் கண்டதுண்டா?





அது என்ன களி நடனம்?
 எம்பெருமான் சிவன்  ஆடிய நாட்டியம் தெரியும்.
அதைத் தான் களி நடனம் ,என்று சொல்கிறேனா  என்று  பார்க்கிறீர்களா ?
இல்லை...இல்லை.....

தொடர்ந்து படியுங்கள்......

திருமணமான வருடம். டெல்லி வாசம் . திருவாதிரைத் திருநாள் வந்தது.
ரொம்பவும் ஆர்வத்துடன் இருந்தேன். திருமணத்திற்குப்  பின் , தனியாக ,முதல் பண்டிகையைக் கொண்டாட இருக்கிறேன்.  திருவாதிரை  வந்ததோ ஞாயிற்றுக் கிழமை.அதனால்  என்னவருக்கும்  லீவு. தமிழ் நண்பர் ஒருவர் காலை  டிபனிற்கு வருவதாக சொல்ல   முதல் நாளே நான் "களி" செய்ய   ரெடியானேன்.

" இங்கு தினசரி சமையலே ஆட்டம் தான். இதில் களி வேறு செய்யப் போகிறாயா ? "என்று கேட்ட  மனசாட்சியை  " சும்மா இரு  .எல்லாம் எனக்குத் தெரியும் " என்று அடக்கி விட்டு  அரிசி ,பருப்பு வறுத்து பொடித்து வைத்தேன்.

மறு  நாள் டிசெம்பர் மாத டெல்லி குளிரில் , அதிகாலை எழுந்து குளித்து , 'வெடவெட'வென்று  ,நடுங்கிக் கொண்டே  ஸ்டவ்வில்  பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி ,  கொதிக்க வைத்து , அதன் பின்  பொடித்த மாவைக் கொட்டி  கிளறி விட்டு விட்டு ,ஸ்டவ்வைக் குறைத்து விட்டு , மூடி  வைத்தேன்.

இன்னொரு ஸ்டவ்வில்  தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஃபில்டரில்  காபித் தூள்  போட்டு  ,தண்ணீரை அதன் தலையில் கொட்டி விட்டு, என் கணவரை ,
எழுப்பினேன்.பால் வாங்கி வரத் தான். அருகிலேயே  தான்  'Mother Dairy' பூத்.

அவரோ ," இன்றைக்கு  ஞாயிற்றுக் கிழைமை. அதுவும் இந்தக் குளிரில்  என்னால் இத்தனை  சீக்கிரமாக எழுந்திருக்க முடியாது ." என்று சொல்லி விட்டு மீண்டம் ரஜாய்க்குள்  ஒளிந்து கொண்டார்.

முதல் நாள் பாலில்  காபிப் போட்டுக் குடித்தேன். பின், களியை ஒரு கிளறு கிளறலாம்  என்று  போனேன். கிளறப் போனால் லேசில் அதைக் கிளற முடியவில்லை. தொட்டுப் பார்த்தேன். வெந்திருந்த மாதிரி தான் இருந்தது. பின், வெல்லம் போட்டுக்  கிளறி  விட்டு, கொஞ்சம் இறுகியவுடன். , இறக்கி வைத்தேன். அதற்கு அலங்காரமெல்லாம் சரியாகத்  தான் செய்தேன். அதான் ஏலக்காய், முந்திரி..... எல்லாம் போட்டேன்.

அதற்குள் என்னவர் எழுந்து  பால் வாங்கக் கிளம்பினார். போகும் போதே," அட, களி  வாசனைத்  தூக்குகிறதே !"  என்று சொல்ல , எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

வந்து அவரும் குளித்தபின் , பூஜை செய்தோம் .பின்  களியை  எடுத்து  அவரிடம் ஒரு கின்னத்தில்  கொடுக்க அவரும் ஆசையாய்  ஸ்பூனால்  சாப்பிட ஆரம்பிக்க, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு விட்டு, நன்றாகத் தானிருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் வேக வேண்டும்  என்று சொல்ல நானும் வாயில் போட  அத்தனையும்  பாதி தான் வெந்திருந்தது. என்ன செய்வது?

அதற்குள்  "டிங் டாங்"

நண்பர் வந்து விட்டாரே!  அவருக்கு இதைக் கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து ,களி  சாப்பிட்ட  ,செய்த , தடயத்தைஎல்லாம் அவசரமாக மறைத்தேன்.

நண்பருக்காக  தோசையும் சட்னியும்  செய்து , சாப்பிடச்  சொன்னோம்.
சாப்பிட்டுக் கொண்டே  , " என்ன மேடம் ? நானும் வரும் வரும் என்று பார்க்கிறேன். களி வாசனை   அடிக்கிறது. ஆனால்  கண்ணில் காண்பிக்க மாட்டேனேன் கிறீர்களே!"என்று  சொல்ல  நான் திரு திரு ........தான் .

அதற்குள்  இவர் (நமக்கு விரோதி வெளியில் இல்லை . புரிந்தது)," களி  கல் மாதிரி இருக்கிறது. உனக்கெதற்கு   அந்தத் தண்டனை. எனக்கு மட்டும் போதும் ." என்று கிண்டலடித்தார்.  அத்தோடு நிறுத்தியிருந்தால்  பரவாயில்லை.
" களி   சாப்பிட வேண்டுமென்றால்  , என் அம்மா செய்து சாப்பிட வேண்டும்.
ஆருத்ரா தரிசனம் என்றால் எங்கள் ஊர்  லால்குடியில் காண வேண்டும்" என்று  இவர் புராணம் ஆரம்பிக்க . அந்த டெல்லிக் குளிரில் ,எழுந்து செய்த ,எனக்கு எப்படி இருந்திருக்கும்  பாருங்கள்.

அன்றே தீர்மானித்து விட்டேன். போர் கால அடிப்படையில்  களி  செய்யக்  கற்றுக் கொள்வதென்று.

சென்னைப் பக்கம் வரும்போது    , ஒரு முறை  களியை  அம்மா வீட்டில் கிண்டிப் பார்த்து  தெரிந்து கொண்டு விட்டேன்.

அதற்குப் பிறகு,  நான் எத்தனை சிரத்தையுடன் செய்தாலும் ,ஒவ்வொரு வருடமும்  " என் அம்மா  செய்யும் களி  போல்  இல்லை " என்று அவர் சொல்வது வாடிக்கையானது.

டெல்லியிலிருந்து கணவருக்கு மாற்றல்.  இப்பொழுது ஊடகங்களில்  ஆலோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறதே,  'Muzaffarnagar'  அதற்கு  அருகிலிருக்கும்  Modinagar என்கிற  சிறிய  ஊர்.

அந்த  வருடம் என் மாமியாரும் ,திருவாதிரை சமயம் அங்கு இருக்க ,அவர் எப்படித் தான் செய்கிறார்  பார்க்கலாம்  என்று காத்திருந்தேன். அப்பொழுது எனக்கு   இரு குழந்தைகள் . இரண்டும் ரெட்டை வால் .

அப்பொழுது என் பெண்ணிற்கு ,நான்கு வயதிருக்கும் என்று நினைக்கிறேன்.
பக்கத்து வீட்டில்  ஒரு சர்தார்ஜி குடும்பத்தினர்  இருந்தார்கள்.  வயதான தம்பதியினர்.  என் இரு  குழந்தைகளையும் ' ஆஜா  ஆஜா ' என்று  கூப்பிட்டு அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில்  விளையாட  விட்டு  சந்தோஷப்படுவார்கள்.

திருவாதிரையும் வந்தது. நானும்  ,என் மாமியாரும் ,காலையில்  களியைக்  கிண்ட  ஆரம்பிக்க  , என் பையன் அப்பொழுது மழலையில், " தீதி  தீதி " என்று எதையோ சொல்ல முயற்சிக்க நான் அவனை அடக்கி ,  " தீதியுடன்  போய் விளையாடு " என்று சொல்லி அவன் கையில் ஒரு பிஸ்கெட்டைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

ஐந்து நிமிடத்திற்கெல்லாம்  மீண்டும்  வந்தான் .மீண்டும்  " தீதி  தீதி " என்று உளர  ,என் மாமியாரும் " என்ன என்று தான் பாரேன் " என்று சொல்ல அவன்  என்னை அழைத்துக் கொண்டு போய்   பக்கத்து சர்தார்ஜி வீட்டைக் காட்டி " தீதி தீதி "சொல்ல முயற்சிக்க  , சட்டென்று தோன்றியது. 'பாப்பா எங்கே?'  , உள்ளே திரும்பி  ' பாப்பா பாப்பா  ' என்று
கூப்பிட , உள்ளேயிருந்து ஒரு பதிலைக் காணோம்.

ரஜாயிக்குள்,  ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்து படுக்கையறைக்கு சென்றால்  , அங்குமில்லை.என் கணவரிடம்   'பாப்பாவைக்  காணோம் ". என்று பதறினேன்.  அவரும், மாமியாரும் ,வீடு முழுக்க தேடி விட்டு , அவர் மாடியில் பார்க்கிறேன் என்று படியை நோக்கி ஓட , நானோ ஒன்றும் புரியாத பதட்டத்தில் , என் பையனோ கீறல் விழுந்த ரெக்கார்டாய்  " தீதி தீதி " என்று சொல்லிக் கொண்டிருக்க ,

"அம்மா  அம்மா" என்ற என் பெண்ணின் குரல் , காதுகளில் தேனாய் பாய்ந்தது..

பக்கத்து வீட்டிலிருந்து  , வாய் நிறைய கேக்குடன்  அவர்கள் வீட்டு சமையல் செய்யும் பெண்ணுடன் ,எங்கள் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தாள்  எங்கள் சீமந்த புத்திரி .
பஞ்சாபியில் அந்தப் பெண்  ஏதோ  சொல்ல,எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
வெளி கேட்  திறந்திருக்க  , இவள் பக்கத்து வீட்டிற்கு ஓடிப் போயிருக்க வேண்டும் என்று யூகித்தோம்.
ஆனாலும் ,அந்த ஒரு சில நிமிட பதட்டம் , இன்றும்  நினைத்தால்  பதறும்.

பதட்டம் தீர்ந்ததும் , "களி  அடுப்பிலிருக்கிறதே! மறந்து விட்டோமே "என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினேன்.  போய் பார்த்தால்   களி கருப்பாகி, தீய்ந்து எங்களைப் பார்த்து சிரித்தது.

என் களி  ராசி ,என் மாமியாரிடமும்  ஒட்டிக் கொண்டது போல் ஆனது அந்த வருடம்.

ஒவ்வொரு வருடமும், எப்படியாவது  களி என் கண்ணைக் கட்டி விளையாட்டுக் காட்டும். ஆனானப்பட்ட  லட்டும், மைசூர்பாகும்  நான் சொன்னபடி கேட்கும்.இந்தக் களி  தான்......

நாளைத் திருவாதிரை!  பஞ்சாங்கம் சொல்கிறது. சிவன் ஆடுகிறாரோ இல்லையோ, எங்கள் வீட்டில் களி  ஆட்டம்  நிச்சயம் .

image courtesy---google.




Tuesday, 10 December 2013

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

e c



" ராஜி எழுந்திரு  எழுந்திரு " என்னவர் என்னை எழுப்பினார்.

கண்ணை கசக்கிக் கொண்டு மணியைப் பார்த்தேன்.

சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் காலை மணி 7.30 ஆகிவிட்டது  என்பதை  சொல்லியபடி  தொங்கிக்  கொண்டிருந்தது.

அவசரமாக எழுந்து  வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

சூடான பாலில் ,மணக்க மணக்க  டிகாக்ஷன்  விடவும் ,அவர்  டேபிளிற்கு காலை நியுஸ்  பேப்பருடன் வரவும் சரியாக இருந்தது.

" இன்றைக்கு என்ன ஸ்பெஷல் நியுஸ் ? "  கேட்டபடி  இரண்டு டம்ளர் காபியுடன்  அமர்ந்தேன்.

காபியை டபராவில் ஆற்றிக் கொண்டே   "இதைக் கேளேன். உன்னைப் போன்ற  இரவில்  லேசில் தூக்கம் வராத  ஆட்கள்  தான் இதைப் படிக்க வேண்டும் .  " அவர் கூறினார்.

பேப்பரை எட்டிப் பார்த்தேன்.

ஜெர்மனியில்  நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுதியிருந்தது.

ஜெர்மனியில் ஒரு வங்கியில் கிளார்க் ஒருவர்  பணப் பரிமாற்றம்  செய்யும் பணியில் இருந்திருக்கிறார்.

ஒருவர் கணக்கில் இருந்து , இன்னொருவர் கணக்கிற்கு , பணத்தை  மாற்றும்  போது ,அவருக்கு என்ன அலுப்போ தெரியவில்லை.கை 2 என்ற கீயில் இருக்கும் பொது  கொஞ்சம் கண்ணசந்து விட்டார்.

விளைவு  2222222222222222222222222 மில்லியன் யூரோ க்கள்  ஒய்வூதியதாரர் ஒருவருக்கு மாற்றப்பட்டு விட்டது.

அவருடைய உயரதிகாரி கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு  இந்தப்  பணம் ஒய்வூதியதாரர் கணக்கில் போய் உட்கார்ந்து கொண்டது.

எப்படி ஒரு அதிர்ஷ்டம் பாருங்கள் அந்த ஒய்வூதியகாரருக்கு..

ஆனால் அவருடைய அதிர்ஷ்டம்  ரொம்பநேரம்  இல்லை.


வங்கியிலேயே வேறொருவர் இந்தத் தவறைக் கண்டுபிடித்து சரி செய்து  விட்டார்கள்.

ஆனால் அவருடைய மேலதிகாரிக்கு  என்ன துரதிர்ஷ்டமோ?  அந்தத் தவறை கண்டுபிடிக்கத் தவறியதால் அவரை வேலையிலிருந்து தூக்கி விட்டது  .

உயரதிகாரி கோர்ட்டிற்கு சென்று விட்டார். அந்த கேசைப் பற்றிய விவரங்களை  சொல்லியது செய்தி.
 கொஞ்சம் கண்ணசந்ததற்கே , மில்லியன் கணக்கில் , வங்கி தொலைக்க இருந்தது.

ஆனால் ஏன் இப்படி வேலை நேரத்தில் தூங்கினார்?பாவம் இரவுத் தூக்கம்  சரியில்லையோ என்னவோ?


நான் இரவு  தூங்காமல் ,லேட்டாய் எழுந்ததன் விளைவு ,எல்லா வேலையும் லேட்டாகி ,  அன்று மாலை வரை  ,நேரம் இல்லாமல் திண்டாடினேன். அன்றைக்கென்று, ஒரு கெஸ்ட்  வேறு .எல்லா வேலையும்  முடித்து விட்டு படுக்க செல்லும் போது மணி பத்தரையைத் தாண்டி விட்டது.

படுத்ததும்  தூக்கம் வரவில்லை. யோசித்துக் கொண்டிருந்தேன்.  
அடிக்கடி நினைத்துக் கொள்வேன் ,ஏதாவது  பரீட்சைக்கு  பணம் கட்டிவிட்டு , கையில் பரீட்சைக்கான  புஸ்தகமும் இருந்தால் , ஆனந்தமாய்  தூக்கம் வரும் என்று.

மனம் போன வாரத்திற்கு  ஓடிப் போனது.

சென்ற வாரம் ,பஸ்சில்  மாயவரம் செல்லும் போது ,என்னருகில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார்.  
அமர்ந்தவுடன்  என்னைப் பார்த்து சிநேகமாய் ஒரு புன்னகை. 
பஸ்ஸும்  கிளம்பியது.  
தன மொபைலை  காதருகில்  கொண்டு போய் ," நீ சாப்பிட்டாச்சா?"

"நான் இப்ப தான் கிளம்பி இருக்கிறேன்,"  "அலமாரியின் மேல் தட்டில்  வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொள்." என்று விதம்விதமாய்,  பலரிடம் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டே வந்தார்.  ஒரு சமயத்தில் எனக்குத் தலைவலியே வந்து விடும்  போலிருந்தது.

தீடீரென்று அமைதியானது . என்னவென்று பார்த்தால் 
கொர் .......கொர்  என்ற சன்னமான சத்தம் வந்தது .தூங்க ஆரம்பித்து விட்டார்.. 
அப்பாடி........ஏகாந்தத்தை அனுபவிப்போம் என்று  சாய்ந்து உட்கார்ந்தேன்.
(பிரயாணத்தில் ஏகாந்தம் எனக்கு  பிடித்தமானது)
சரசரவென்று  பின்னோக்கி ஓடி  மறையும்  மரங்களை  ரசித்துக் கொண்டிருக்கும் போது , 
தோளில் ஒரு  பெரிய இடி. 
பக்கத்து சீட் பெண்மணி தான்.
என் தோளை , ஒரு "ஸ்டாண்ட் " ஆக்கி  என் மேல் சாய ஆரம்பித்தார். 
மெதுவாக நகர்ந்தேன்.
 நகர்ந்தால்................... ,அவரும் கூடவே  சாய்ந்தார்.  

இது என்னடா தொல்லை.
மெதுவாக "மாமி "என்று 

எழுப்பி நகரும்படி  சொல்லி விட்டேன். 

" உங்கள் மேல் விழுந்து விட்டேனா ? சாரி "என்றார்.

ஆனாலும்  ஒரு பிரயோசனமும் இல்லை. 

மீண்டும்  ஈசி  சேரானது என் தோள் .ஒன்றும் செய்வதற்கில்லை  என்று விதியை நொந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து ,அவருக்கே என்ன தோன்றியதோ தெரியவில்லை தன்  இரு கைகளை அணை கொடுத்துத்  தூங்க ஆரம்பித்தார். நான்   மீண்டும்  ஏகாந்தத்தை  அனுபவிக்க ஆரம்பித்தேன்.

 " மடார் "  என்றொரு சத்தம். 

நான் மட்டுமில்லை ,முன் சீட்டில் இருந்தவரும் ,திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க என்னருகே இருந்த பெண்மணி தான் தூங்கி முன் சீட்டில் போய் மடார் ,என்று மோதியதோடு இல்லாமல் , தலை  கீழாக வேறு விழ இருந்தார். 

என்னால் சிரிப்பைக் கட்டுப் படுத்த முடியவில்லை. சிரிப்பதைப் பார்த்து, என்னை கோபமாய் அந்தப் பெண்மணி முறைக்க , நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். 
இது நினைவில்  வந்து மோதி  என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

தூங்கக் கூடாத நேரத்திலும், இடத்திலும் தூங்கினாலே  வம்பு தான்.நினைத்துக் கொண்டேன்.

எதற்கு இந்த தூக்க ஆராய்ச்சி என்கிறீர்களா?

எனக்குத் தூக்கம்  வருவது , என்பது குதிரைக்கொம்பு ஆனது கொஞ்ச நாளாய்.

பக்கத்து வீட்டு மாமி சொன்னாற்  போல் , ஏலக்காய் போட்டுப் பால்,  தேன் விட்டுப் பால்,   எல்லாம் முயற்சி செய்கிறேன்.

1,2,3, என்று எண்ணுவது,  படுக்கும் முன் குளியல்...... என்று பல வகையில் முயன்றும் , நித்திராதேவி என்னை ஆட்கொள்ள மறுக்கிறாள்.

கந்த சஷ்டிக் கவசம் சொல்லிப் பார்த்தேன்.  அது முடிந்து ,கந்த குரு கவசமும் முடிந்து விடும். தூக்கம் மட்டும்  என் கண்களைத் தழுவுவதில்லை.

என்ன  செய்வது ....................யோசிக்க ஆரம்பிக்க்க......

ஆ.........வ் .........  கொட்டவியாய்   வந்தது.

நான் தூங்கிடறேங்க........இல்லையென்றால்  விடிந்து தூங்க நேரிடும்.
ஓ !நீங்களும் தூங்கப்  போகிறீர்களா. ? அதற்கு முன்பாக ஒரேயொரு பின்னூட்டம் ...ப்ளீஸ்.......
                                        Good Night!
image courtesy----google.

Monday, 2 December 2013

' லொக்... லொக்.... லொக்.... '

இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். அப்பொழுது தான், லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, படுத்துக் கண் அசந்திருப்பேன்.

'லொக் , லொக் ' இருமலில் முழித்தேன்.
கொஞ்சம், இளம் சூடாக வெந்நீர் குடித்து விட்டுப் படுத்தேன்.
ஒரு வாரமாக  இந்த உபத்திரவம் .

தூக்கம் லேசில் வருவதாக இல்லை. எங்கெங்கோ ,உலா போன எண்ணங்களை இழுத்து வந்து , கந்த சஷ்டிக் கவசம் சொல்ல வைத்து....... ,' காக்க காக்க ' என்று சொன்னது நினைவிலுள்ளது. அதற்கு மேல் கண்ணை இழுத்து சொருகி கொண்டு போனது.

திரும்பவும் 'லொக் ,லொக் ' வந்து தூக்கத்தைக் கெடுக்கச் சுத்தமாய்த் தூக்கம் தொலைந்தது, எனக்கு மட்டுமல்ல ,வீட்டில் எல்லோருக்கும் தான்.

உட்கார்ந்தால் இருமல் இல்லை , படுத்தால் வந்தது இருமல்.

சரி, நாளை காலை எட்டு மணிக்கே சென்று Dr.Sathya வைப் பார்ப்பது என்று
வீட்டின் பொதுக்குழு, அந்த அகால நேரத்தில் கூடி தீர்மானம் நிறைவேற்றியது..

காலை  எட்டு மணிக்கு ,டானென்று டாக்டர் வீட்டில் நாங்கள் ஆஜர்.
டாகடர் வந்தவுடன் ,என் இருமல் பற்றிச் சொன்னேன்.

"நீங்கள் இங்கு என்னுடன் பேசும் போது ஒரு முறை கூட இருமவில்லையே !"என்று டாக்டர் கேட்க ,

"படுத்தால் தான் வருகிறது "-- இது நான்.

" போன வாரம் உங்களுக்கு வைரல் ஜுரம் வந்ததினால், இருமல்  இருக்கலாம். நான் கொடுத்த cough syrupஐக்  குடித்துப் பாருங்கள். ஒரு வேளைக் குறையலாம். இல்லையென்றால் ஒரு X-Ray எடுத்து விடுங்களேன் "  என்று சொல்ல, டாக்டர் சொன்ன cough syrup விஷயத்தைக் காற்றோடு, பறக்கவிட்டுவிட்டு, எதற்கும் ஒரு எக்ஸ் ரே எடுத்து  விடுவோம் என்று Scan World ற்குத்  தம்பதி சமேதராய் ஆஜரானோம்..(பெயர் தான் ஸ்கேன் வேர்ல்ட், எல்லா டெஸ்டும் செய்வார்கள்)

அரைமணி காத்திருந்தோம் .எக்ஸ்ரே எடுக்க ஒரு பெண்மணி வந்து அழைத்துப் போனார்.. எடுத்தும் முடித்தாயிற்று. ஒரு பத்து நிமிடத்தில் ரிப்போர்ட்  கொடுக்கிறோம். இருந்து வாங்கிக் கொண்டு ,செல்லுங்கள் என்று சொல்லக் காத்திருந்தோம்.

காத்திருந்த வேளையில் ,X-Ray அறையிலிருந்து ,வெள்ளைக் கோட்டை ,சரி செய்தபடியே ஒரு பெண் வந்து , பெயர் சொல்லிக் கூப்பிட்டு ,
" என்ன பிராப்ளம் உங்களுக்கு?
எதற்கு எக்ஸ்ரே எடுக்க வந்தீர்கள் ?"
என்று கேட்க ,

"இருமலுக்காக "என்று நான்  சொல்ல, அடுத்து அந்தப் பெண் சரமாரியாய்

 "ஜுரம் இருக்கா? "

"சளி?"

" நடந்தால் நெஞ்சு வலிக்கிறதா?"

 " மூச்சு வாங்குகிறதா ? "

இண்டர்வியு மாதிரி கேள்விகளால் துளைத்தார்.

எல்லாவற்றிற்கும் இல்லை என்று பதில் சொல்லும் போதே  "எல்லாவற்றையும் என்னிடமே கேட்டுக் கொண்டு போய் டைப் அடித்து ரிப்போர்ட் என்று கொடுக்கப் போகிறார்களோ "   நினைத்தேன்.

கொஞ்ச நேரத்தில் ரிப்போர்ட் வந்தது .
ரிப்போர்ட்  என்ன தான் எழுதியிருக்கிறது என்று பார்த்தேன் .
ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்கு வந்து மதியத்திற்காக வடைப் போட்டு மோர்குழம்பும், உசிலியையும் செய்து வைத்து விட்டு, லேப்டாப்பும், ரிபோர்ட்டுமாக உட்கார்ந்தேன்.

ரிப்போர்ட்டில் எழுதியிருந்ததை அப்படியே எழுத்துப் பிசகாமல் googleஇல் டைப் அடித்து search பட்டனை அமுக்கினேன்.

ஒரு பெரிய லிஸ்ட் என் முன்னே.
அதில் ஏதோ ஒன்றைக் கிளிக் செய்ய ," symptoms, treatment, life span ," என்று என்னென்னமோ சொல்ல, கொஞ்சமாய்ப் பீதி கிளம்பியது.

Life Span ஆ................பயத்தில் உறைந்தேன்.
சரி ,இந்த சைட், வேண்டாம் என்று வேறு பல சைட்டுகளையும் போய் பார்த்ததில், முதலில் கிடைத்த தகவல் தான், எல்லாவற்றிலும் இருக்க உடைந்து போனேன். அழுகை எட்டிப் பார்த்தது. சமாளித்தேன்.

மெதுவாக ,என்னைத் தேற்றிக் கொண்டு , மாலை டாக்டரிடமே கேட்டுக் கொள்ளலாம் ,என்று சமாதானமாக முயன்று ,தோற்றுப் போனேன்.

என் அழுகை ,கணவருக்குத் தெரியாமல் இருக்க , படாத பாடு பட்டேன்.

சாப்பிட உட்கார்ந்தோம்.

" ஓ ,இன்றைக்கு உனக்குப் பிடித்த மெனுவா? "

"ம் " ஒற்றை எழுத்தில் பதில் சொன்னேன்.

"மோர் குழம்பில் ஒரு உப்பு குறைச்சலாக இருக்கிறது "

' ஆமாம் '
(இன்னும் எத்தனை நாளைக்கு உங்களுக்குச் சமைக்கப் போகிறேனோ நினைத்தேன்.)

ஒன்றும் இருக்காது. சாப்பிட்ட பின் திரும்பவும் செக் செய்வோம் என்று நினைத்துக் கொண்டே,மோர்குழம்புக் கரண்டியை எடுக்க ,அது கைதவறிக் கீழே விழ அப்பொழுது தான் என்னை என் கணவர் கவனிக்க ,
"என்ன இது கண்ணில் நீர்? அழுகிறயா?" என்று கேட்டது தான்  தாமதம் ,ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன். அவருக்கும்  ஒன்றும்  புரியவில்லை.

மெதுவாக என் அச்சத்தைச் சொல்ல. அவரும் ,முதலில் மிரண்டு தான் போனார். பிறகு மாலை டாக்டரிடம்  கேட்டுக் கொள்ளலாம் என்று சொன்னதோடு , முதல் வேலையாக ,  லேப்டாப்பை எடுத்து அவர் கஸ்டடியில் வைத்துக் கொண்டார்.

மாலை ஐந்து மணி . திரும்பவும் டாக்டர் வீட்டில் ஆஜர். டாகடர் எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் படித்து விட்டு , "நல்ல வேளை . ஒன்றுமில்லை " ஒரு மருந்தும் வேண்டாம் என்று சொல்ல நான் ஆச்சர்யப் பட்டு , Googleஇல் பார்த்ததைச் சொல்ல ,' நீங்கள் சொல்வது போல் இந்த ரிப்போர்ட்டில் ஒன்றுமில்லை. இதிலுள்ள டெக்னிகல் வார்த்தையை Google செய்து பார்த்திருக்கிறீர்கள். நிறைய பேருக்கு இந்த மாதிரி இருப்பது  சகஜம். ஆனால் அதனால் பெரிய பாதிப்பெல்லாம்  இல்லை.அதைப்  பற்றி  நீங்கள் மறந்து விடலாம் "என்று அழுத்தமாக  சொல்லியும், நான் சமாதானமாகாமல் தயங்கி நின்றேன்.

"உங்களுக்குத் திருப்தியாகவில்லைஎன்றால்" ஒரு chest specialist பெயரைச் சொல்லி "அவரிடம் expert opinion வாங்கிவிடுங்களேன்" என்று சொல்ல
அடுத்து ,அவர் கிளினிக் வாசலில் தேவுடு காத்தோம்.

வயதான அந்த டாக்டர் , பொறுமையாக என் கதையெல்லாம் கேட்டு விட்டு ,
"உங்களை யார்  இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னது? கூகுளில் மெடிக்கல் விஷயங்களை , டாகடர்கள் படித்தாலே குழம்புகிறோம். உங்களைப் போன்றவர்கள் சும்மா இல்லாமல் முதலில் Dr. Googleஐ பார்த்து விட்டுத் தான்
எங்களிடமே வருகிறீர்கள்" என்று ஆதங்கப் பட்டுக் கொண்டே  என்னை செக் செய்தார். ,"எனக்கும் உங்கள் எக்ஸ்ரே ரிபோர்டில் ஒன்றும் தவறாக இல்லை. நீங்கள் இவ்வளவு பயப்படுவதாக இருப்பதால் ஒரு ஸ்கேன் செய்து பார்த்தால் நீங்கள் திருப்தியாகி விடுவீர்கள்" என்று சொல்ல

மறு நாள் மீண்டும் ஸ்கேன் செண்டர் , நீல கலர் டிரெஸ்ஸைப்  போட்டு விட்டு   ஒரு பெரிய வளைவுக்குள் அனுப்பி வெளியே இழுத்து விட்டார்கள்.
மீண்டும் ரிப்போர்ட் .அதைத்  திறந்து பார்ப்பதில்லை என்கிற உறுதியுடன் ,
நெருப்பின் மேல் நின்ற வண்ணமாய் ,மாலை வரை இருந்து ,பிறகு டாக்டரிடம் போனால்,

"என்ன google செய்தாகி விட்டதா? என்ன வியாதி என்று உங்கள் Dr.Google சொல்கிறார்?" என்று சிரித்துக் கொண்டே ரிப்போர்டை வாங்கிப் படித்து விட்டு
ரிப்போர்ட்டில்  Impression  ---- Normal  ,என்பதை ,என்னிடம் காட்ட , எனக்கு
'அப்பாடா.........' என்றிருக்க ,என் கணவர்  முகத்தில் தெரிந்த நிம்மதியை  வார்த்தைகளால்  சொல்ல முடியாது.

" ஆமாம். முந்தாநாள் இருமல் இருந்தது. இப்ப இரண்டு நாட்களாய் ......? " என்று டாக்டர்  கேட்க......

" இரண்டு நாட்களாய் நான் எங்கே தூங்கினேன். மரண பயத்திலல்லவா இருந்தேன் " என்று நான் சொல்ல .

(ஆனாலும் ஜாஸ்தி இருமவில்லையே ......மனதில் ஓடியது." ஷார்ட் விஸிட் "செய்திருந்த வைரல்  ஜுரம் தான் காரணமோ? )

" எதற்கும் இந்த cough syrup எழுதுகிறேன். தேவைப்பட்டால் இரவு படுக்கும் முன் இரண்டு ஸ்பூன் குடியுங்கள் "என்று அட்வைஸ் செய்ய ,

ஐம்பது ரூபாய்க்கு அந்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டினோம்.
நாளை  அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சனை  செய்து விடுவது என்று தீர்மானித்தோம்.

"இன்டர்நெட் தான் நம் விரல் நுனியில் இருக்கிறதே !  "என்கிற காரணத்தாலேயே கண்டதையும் ,படித்துக் குழம்பித் தவித்து , எட்டாயிரம் வரை செலவழித்த பின் தான்  .  "இனிமேல் எந்த ரிப்போர்ட்டையும் , அது என் பேரன் பேத்தி "பிராக்ரஸ் ரிப்போர்ட்டாகவே  "இருந்தாலும் நான் படிக்கப் போவதில்லை.  அப்படியே  எதையாவது படித்துத்  தொலைத்தாலும் , அதைப் பற்றிய விசாரணையை  கூகுளிடம்  ஆரம்பிக்கப் போவதில்லை " என்கிற ஞானம் உதித்தது.

போதும் இந்த அவஸ்தை .
பெரிய நிம்மதியுடன் விஜய் டிவி மகா பாரதத்தை  பார்க்க உட்கார்ந்தேன்.

"எல்லாம் சரி. உன் இருமல் என்னதான் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?"
இருமல் ,அதற்குப் பிறகு ,படிப்படியாய் குறைந்து போய் ,இப்பொழுது ஒன்றுமேயில்லை . வாங்கின cough syrup சீல் கூட உடைபடாமல்,  அலமாரியிலிருந்து ,என்னைப் பார்த்து ,சிரித்துக் கொண்டிருக்கிறது.

image courtesy---google...

Friday, 22 November 2013

வாழ்த்தும்...... ஆசியும் .........








சென்ற வருடத்தில் ஒரு நாள் ," இந்தப் புத்தகத்தைப் பார் ராஜி." என்று என் கணவர் சொல்ல , நான் சுரத்தே இல்லாமல் ,அவர் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தேன். 

தோழி, சினேகிதி, அவள் , இதில் எதுவென்று நினைவில் இல்லை.ஒரு பக்கத்தைத் திருப்பிச் சின்னக் கட்டத்தில் இருக்கும் செய்தியைப் படிக்கச் சொல்ல நானும் படித்தேன்.

"அதுக்கென்ன இப்போ ?" என்றது நான்.

"என்னவா? நீ தானே 'என்னவோ எழுதிக் கிழிப்பேன் ' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே. அதற்காகத் தான் கொடுத்தேன். அலட்சியமாகப் பேசுகிறாயே! வேண்டாமென்றால் போ " என்று அவர் திரும்ப ,

"ஆமாம் ....... "சட்டென்று உரைத்தது எனக்கு.

இரண்டொரு தடவை, பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்பினேன்.
இன்று வரை என்னவாயிற்று, என்றே தெரியவில்லை. அந்த அலுப்பில் எழுதியனுப்புவதை விட்டு விட்டேன். ஆனால் எழுதவேண்டும் என்று கீறல் விழுந்த ரெக்கார்டாய் பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை.

அதற்குத் தான் என்னவர் அந்தச் செய்தியைக் காட்டினார்.
செய்தி ,செய்தி என்று சொல்லிப் படுத்துகிறாயே. அதிலென்ன தான் இருந்தது என்று கேட்கிறீர்களா?

பிரபல பதிவர்கள் ,திருமதி ரஞ்சனி நாராயணன் , திருமதி காமாட்சி அவர்களின் வலைப்பூ பற்றி ஒரு சிறிய குறிப்பு.

இவர்கள் இன்டர்நெட்டில் எழுதுகிறார்கள் என்பது மட்டுமே எனக்குப் புரிந்தது.
நாமும்.................... எழுதலாமா ? வேண்டாமா? பட்டிமன்றம் ஓடியது மனதில்.

முதலில் ,அவர்களின் வலை URL வைத்து ,அவர்கள் வலைப்பூவைத் திறந்து பார்ப்போமே ,என்று பார்த்தால் அற்புத மாளிகைக்குள் நுழைவது போன்ற பிரமிப்பு உண்டாயிற்று. இவர்களெல்லாம் எப்படி எழுதுகிறார்கள், எவ்வளவு எழுதுகிறார்கள் ,மலைத்துப் போனேன்.

நமக்குத் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும் என்பதாலேயே ..... நாமும் எழுதுவதா?......
ஒரு சின்னச் சந்தேகம்.

ஆனால், ஆர்வம் , சந்தேகத்தை ஒரு தள்ளு தள்ளி விட்டு எழுது என்று ஆணையிட  என் கிறுக்கல்களை  ஆரம்பிக்கத் தீர்மானித்தேன்.

சரி எப்படி ஆரம்பிப்பது ? எங்கு ஆரம்பிப்பது, எதைப் பற்றி எழுதுவது.? மீண்டும் ஒரு பிரேக் .
கணினி பொறியியல் வல்லுனராய் இருக்கும் என் தங்கை பையன் ,சதீஷ் வந்திருக்கும் போது,
என் ஆசையைச் சொன்னேன்.

"இவ்வளவு தானே பெரியம்மா "என்று சொல்லி விட்டு சட்டென்று,
Word Press இல் ,ப்ளாக் ஒன்று ஆரம்பித்துக் கொடுத்தான்.
நீங்கள், எதை வேண்டுமானாலும் ,எழுதிக்கொள்ளுங்கள் என்று சொன்னதும் எனக்கு ஆர்வம் தாங்கவில்லை.

நீ ஆரம்பித்துக் கொடுத்து விட்டாய். நான் எழுதினால் யார் படிப்பார்கள் ?என்று மறு கேள்வி கேட்க

அது நீங்கள் எழுதுவதில் அடங்கியிருக்கிறது என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு WordPress ஐயே, சுற்றி, சுற்றி வந்தேன்.
ஒன்றும் சரியாகப் புலப்படவில்லை. எதைப் பற்றியோ எழுதினேன். ஆனால் சேமிக்கவில்லை போலிருக்கிறது. கரெண்ட் போய் விட்டது.

கரண்ட் வந்தபின்  திறந்தால் ஒன்றுமேயில்லை. கண்ணில் நீர் வராத குறை தான்.

மீண்டும், திருமதி ரஞ்சனி நாராயணன் வலைப் பக்கம் , விஸிட். வேறு யாரைப் பற்றியோ வலையுலகம் பற்றியோ எதுவும் தெரியாதாதால் ரஞ்சனியின் வலை என்னிடம் பட்ட பாடு இருக்கிறதே.................நான் பார்த்ததிலேயே அன்று நூறு ஹிட்ஸ்  வந்திருக்கும் அவர்களுக்கு.

ஆனாலும் 'வேர்ட் பிரஸ்' ஒரு மர்ம மாளிகை போலவே இருந்தது.
எங்கெல்லாம் ,திருமதி ரஞ்சனியின் வலையில் ,லிங்க் இருந்ததோ அங்கெல்லாம் போய் க்ளிக்கினேன்.

comments என்ற வார்த்தையைக் கிளிக்கினால் சுருட்டி வைத்திருந்த கேலண்டர் பிரிந்தது போல் சர்ரென்று மிக நீளமாய் கீழே  இறங்கியது. அதில் நிறையப் பேர் பதிவைப் பற்றிக் கருத்திட்டிருந்ததைப் பார்த்தேன் .

அங்கே எங்காவது லிங்க் வருகிறதா என்று பார்த்தால் என்னிடம் மாட்டியது திரு வை. கோபாலகிருஷ்ணனின் வலை. அவருடைய வலைப் பக்கம் போனால் டிசைன், எழுத்துரு , எல்லாமே வித்தியாசமாக, இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. URL பார்த்து Blogspot என்பதைத் தெரிந்து கொண்டேன்.

உடனே இன்னுமொரு ஜன்னலைத் திறந்தேன். ஹால் ஜன்னலா என்று கேட்காதீர்கள். பிரவுசர் விண்டோ தான். கூகிலிற்குப் போய்ப் பிளாக் ஸ்பாட்  என்று டைப்பினேன். உடனே பிளாக் ஸ்பாட் கதவு arattai காகத் திறந்தது.பிளாக் ஸ்பாட்  புரிபடுவது  கொஞ்சம் எளிமையாகப் பட்டது எனக்கு.

உடனே என் குடித்தனத்தை வேர்ட்பிரஸ் இலிருந்து ,பிளாக் ஸ்பாட்டிற்கு
மூட்டை கட்டிக் கொண்டு வந்து விட்டேன்.
அப்புறமென்ன ....எழுத ஆரம்பித்தேன்.
நான் எழுத ஆரம்பித்த சமயத்தில், தீபாவளி ஜவுளி எடுக்கச் சென்று வந்த சமயம். என் பேரன் ,அபினவ் 'ஆச்சா, ஆச்சா 'என்று எங்களைப் பாடாய் படுத்தியதை 'தீபாவளி ஆச்சா ' என்று பதிவிட்டேன்.

அதற்குப் பிறகு தான் காமெடி. பதிவிட்டதை publish என்று அழுத்தாமல் விட்டிருக்கிறேன். அப்பபோ போய் யாராவது பார்த்தார்களா என்று பார்த்தால்
(அதெல்லாம் புரிந்தது stats போய் க்ளிக்க வேண்டுமென்று.) ஒரு ஈ ,காக்காய் வரவேண்டுமே. "பப்ளிஷே "ஆகவில்லை . அப்புறம் யார் வந்து படிப்பார்கள்? ஒரு மாதிரி நானே கண்டு பிடித்துப் பப்ளிஷ் செய்தேன்.

அதற்குப் பிறகும் இரண்டு நாள் ,நான்  மட்டுமே  படித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரேயொரு முறை என் கணவர் படித்தார்.ஊரிலிருந்த வந்திருந்த, என் நாத்தனாரை விட்டுப் படிக்கச் சொன்னேன். ஆக மொத்தம் மூன்று பேர் தான் படித்திருந்தோம்.
என் நிலைப் பார்த்து ,பரிதாப்பட்டு ,என் கணவரே  கமெண்ட்ஸ் எழுதினார். ஒரு கருத்து வந்து விட்டது ,என்று மகிழலாமென்றால் அந்த நினைப்பிலும் மண்.
கமெண்டைப் பார்த்தால் rajalakshmi commented என்றேயிருக்க ,நொந்து போனேன

என் கணவரோ  ஹா...ஹா... என்று ,வெடிச் சிரிப்பு, சிரிக்க ,நான் அசடு வழிய ... என்ன தவறு செய்தேன் என்று புரிந்தது.

திரு வைகோ சார் வலைக்குச் சென்று அவரை என் தளத்திற்கு  வரவேற்றேன். தவறாமல் உடனடி வருகைப் புரிந்தார்.அது மட்டுமில்லாமல்
எனக்கு ஆலோசனைகளை ,அழகாய், அள்ளி வழங்கியிருக்கிறார்.அதையெல்லாம் ஓரளவிற்கு   கடைபிடித்து வருகிறேன் என்றே  சொல்ல வேண்டும்.
அதைப் படிக்க இங்கே' க்ளிக் 'செய்யவும்.
என்னுடைய maiden venture பதிவிற்கு மூன்று பேர் வருகை புரிந்தார்கள்.

வலையுலகம் என்கிற அற்புத உலகம், மெல்ல மெல்ல , புரிய ஆரம்பித்தது. என் வலையில் நிறைய நண்பர்களும் தோழிகளும் மாட்டிக் கொண்டார்கள். இவர்கள் எல்லாம் நான் தேங்காமல்  இருக்க உதவுவார்கள் என்று புரிந்தது.

இதற்காக நான் arattai க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன
 "ஊக்குவிப்பார் இருந்தால் ஊக்கு விற்பவன் கூடத் தேக்கு விற்பான்" என்று கவிஞர்  வாலி  சொன்னது நினைவிற்கு வருகிறது. 

இந்த ஒரு வருடத்தில் எனக்குப் பின்னூட்டம் என்கிற டானிக் கொடுத்தவர்கள் லிஸ்ட் மிக மிகப் பெரியது. அவர்கள் யார்யார் என்று சொல்லாமல் போனால் நான் நன்றி மறந்தவளாவேன்.
திருமதிகள் ரஞ்சனினாராயணன், சித்ராசுந்தர் ,கோமதி அரசு ,ராஜராஜேஸ்வரி,மகி,மஹாலக்ஷ்மி ,மனோசாமிநாதன் , தமிழ்முகில்,சாதிகா,
உஷாஅன்பரசு, ராஜி,மலர்பாலன்,மஞ்சுபாஷினிசம்பத்குமார் , ஜலீலா, கவிநயா,சமீரா,காமாக்ஷி, சந்திரகௌரி ,துளசிகோபால்,தமிழ்செல்வி, கீதாசாம்பசிவம் ,லக்ஷ்மி,விஜிபார்த்திபன்,கிரேஸ் ,அருணா செல்வம், அமைதிச் சாரல்,அனுஸ்ரீனி,ரத்னாபீட்டர்ஸ்

மற்றும்

திருவாளர்கள் .வை .கோபாலகிருஷ்ணன்,திண்டுக்கல் தனபாலன்,ரமணி, ஸ்ரீராம்,சுப்புத்தாத்தா,தமிழ்இளங்கோ,ஸ்கூல்பையன்,ஜோக்காளி,வெங்கட்ஜி,GMB,Chellappa Yagyaswamy,MTG,பாலகனேஷ்,கவியாழி கண்ணதாசன்,வருண் ,நம்பள்கி,சுரேஷ்,துரை செல்வராஜ் ,Arumugam Eswar,செம்மலை ஆகாஷ்,ஜெயதேவ் ,கடைசிபெஞ்ச் ,ரூபன் ,பாலசுப்ரமணியன், கவிஞர் பாரதிதாசன்.அட்வகேட் ஜெயராஜன் ,சென்னைப் பித்தன்,விமலன், விஜயன்,அப்பாதுரை,முனைவர். குணசீலன்,
 ஆகியோர் என் பதிவுகளைப் பொறுமையாய் படித்து என்னை ஊக்குவித்தவர்கள்.

அவர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி .இவர்கள் எல்லாம் என் நினைவிற்கு வந்தவர்கள். வேறு யார் பெயரும் விட்டிருந்தால் அவர்களுக்கும் என் நன்றி.

அலை போல், திரண்டு வந்து  என்பதிவுகளைப் படித்து எக்கச்சக்கமாய்  ' ஹிட்ஸ் ' கொடுக்கும் வாசக அன்பர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.

பதிவுகள் எழுத ஆரம்பித்த பொழுது தான் உணர்ந்தேன் ,வலையுலகம் என்பது ,கட்டுபாடுகளற்ற சுதந்திரமான வெட்டவெளி. அதில் எழுத்துப் பயணம், என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் தவறினாலும், கத்தி நம்மைப் பதம் பார்த்து விடும்.நான்  சர்வ ஜாக்கிரதையாக நடப்பதற்கு உதவுவது என்னவர் , என் பதிவுகளின் எடிட்டர். அவர் எடிட் செய்யவில்லை,என்றால் பல சமயங்களில், நான் வம்பில் மாட்டியிருப்பேன். அதனால் அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி .

Arattai யின் ஓராண்டு நிறைவிற்கு உங்கள் வாழ்த்தையும் ஆசியையும் வழங்குங்களேன். ................ப்ளீஸ் .

image courtesy----google


Saturday, 16 November 2013

கிரிக்கெட் கடவுள்



200வது  கிரிக்கெட் மாட்ச்  திரு. சச்சின் டெண்டுல்கர்  விளையாடிக் கொந்டிருந்ததை  டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார் என் கணவர். நானும் அவ்வப்போ கிச்சனிலிருந்து தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்று, சச்சின்  விளையாடிய 200வ து  டெஸ்ட் மாட்சில் இந்தியா  வெற்றியடைந்தது. சாதரண வெற்றி இல்லை. Innings Defeat ஆகியிருந்தது  மேற்கிந்திய  தீவுகள் அணி. ஆனாலும் இந்தியா வெற்றி என்றதும்  வழக்கமாக  மனதிற்குள் இருக்கும் சந்தோஷம்  இன்று  இல்லை. டிவியில் பார்க்கும் பொது  மும்பை மைதானத்திலிருக்கும்  ரசிகர்கள் முகத்திலும் எப்பொழுதும்  இருக்கும்  உற்சாகம்  இல்லை. 
சச்சின் டெண்டுல்கர்  இரண்டாவது இனிங்ஸ்  விளையாட முடியாதே!
மேலும் சச்சின் டெண்டுல்கர் இந்த டெஸ்ட்டுடன்  ஓய்வு  பெறுகிறாரே .
வருத்தத்திற்கு இதெல்லாம்  ஒரு காரணம் தானே.

அதற்குப் பிறகு பரிசளிப்பு விழா . பரிசளிப்பின் பொது  சச்சின் டெண்டுல்கர்  பேச்சு. மைதானத்தையே கட்டிப் போட்டு வைத்திருந்தது. அந்தப் பேச்சின் தமிழாக்கத்தை நான் எழுதப் போவதில்லை. நீங்கள் எல்லோருமே அதை கவனித்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

அவர் பேச்சைக் கேட்டதில் எனக்கு  மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
அவர் பேச்சை ஆரம்பிக்கும் போது  இருபத்தியிரண்டு அடியில்  தான்என் வாழ்க்கை இருபத்தி நான்கு வருடங்களாக  இருந்திருக்கிறது என்று  பெருமையுடன் சொன்னார்.  அவர் அதற்குப் பிறகு கிரிக்கெட்டைப் பற்றி தன்  பேச்சில் எங்குமே குறிப்பிடவேயில்லை. அவர் பேசியதெல்லாமே தன்னை வளர்த்தவர்கள், தனக்கு கோச்  செய்தவர்கள் தன மேனேஜர்   என்றே சுற்றி வந்தது.

தந்தையின் வழிகாட்டலின்  பேரில் தான் இத்தனை வருடங்களாக  விளையாடியதாக சொன்னதை இக்கால இளைஞர்கள் எடுத்துக் கொண்டால்  நல்லது. அவர் தந்தை சொன்னபடியே  தன கனவுகளை நனவாகக் எந்த குறுக்கு வழியும் எடுக்காமல் , வந்த தடைக் கற்களையெல்லாம் படிக்கற்களாக  மாற்றிக் கொண்டே இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். தன தந்தையின் மேல் அபார மரியாதை வைத்திருக்கிறார்.
தன தாயைப் பற்றி சொல்லும் போது குரல் உடைகிறது. அவருடைய தாய்ப் பாசம் நெகிழ் வைக்கிறது.மைதானத்தில் நிறைய பேர் கண்கள் குளமான.
உலகளாவிய  புகழ் பெற்ற மனிதர்  தன முதல் மரியாதையை தன பெற்றோருக்கு கொடுப்பது  அவரை இன்னும் உயரத்தில் வைக்கிறது.

பேச்சு சுவாரஸ்யத்தில் யாருக்காவது நன்றி சொல்லாமல் விட்டு விடுவோமோ என்கிற பதைப்பு இருந்தது அவரிடம் . அவர் கையில் வைத்திருக்கும் பெயர்கள் அடங்கிய லிஸ்டைப பார்த்து பார்த்து பேசுவதில்  அவருக்கு தன்னை சுற்றியிருந்தவர்கள் மீதிருந்த மரியாதையைக் காட்டியது..

அவரைப்பற்றி பேசும் வெளிநாட்டு கிரிகெட் வீரர்கள்  அவர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன்  என்பதைத் தாண்டி ஒரு மிக நல்ல மனிதர் என்றே புகழ்கிறார்கள். அதுவல்லவோ அவருடைய  பெருமைக்கு அழகு சேர்க்கும் ஒன்று.

ஒவ்வொரு ஆண்  மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் துணையிருக்கிறாள். தன்  மனைவியைப் பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை அவர். டாக்டராக இருக்கும் திருமதி அஞ்சலி டெண்டுல்கர்  தன கணவருக்காக  அவர் தன்  தொழிலைக்  கொஞ்சம் புறந்தள்ளி, குடும்ப நிர்வாகத்தில் நேரம் செலவழித்திருக்கிறார்.
அதுவும் உண்மை தானே. குடும்பம் என்னும் பொழுது எத்தனை எத்தனை கடமைகள். அத்தனையும்  திருமதி அஞ்சலி  தன் கணவருக்காக  தன் தொழில்
ஆர்வத்தை குறைத்து தியாகம் செய்திருக்கிறார் பாருங்கள். இக்கால பெண்கள்
சிலர்  குடும்பத்தை  பின்னால் தள்ளி முன்னேறத் துடிக்கும்
சுயநலவாதிகளாயிருக்கிரார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது.
உடனே  எங்கள் கணவர்கள்  டெண்டுல்கர் மாதிரி புகழடைந்தால் நாங்களும் எங்கள் தொழில்  ஆர்வத்தைக் குறைத்துக் கொள்கிறோம் என்று விதண்டாவாதம் செய்ய வேண்டாம். காதல் கணவன் கைபிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுப்பதால்  ஒன்றும் அவர்கள் தாழ்ந்து போவதில்லை என்பதற்கு அஞ்சலி ஒரு நல்ல உதாரணம் என்றே எனக்குப் படுகிறது.

அவருடைய பேச்சிலிருந்து  தெரிய வருவது அவர் பெற்றோரின் மேல் கொண்டிருக்கும் பக்தி, சகோதரப் பாசம், அன்புக் கணவராய்,  அருமைத் தந்தையாய், இருந்து மட்டுமல்லாமல் அவர்  மேற்கொண்ட கிரிக்கெட் தவத்தில் எத்தனை சவால்கள்  வந்தாலும் அதை எதிர் கொண்டு   அவர் மேலே எழுந்து வந்தது  எப்படி  என்பது தான்.

இந்த மகத்தான் மனிதருக்கு பாரத ரத்னா விருது வழங்கி    கௌரவித்திருக்கிறது நமது அரசு.
எந்த விருதோ, பரிசோ, புகழ்ச்சியோ  இந்த மனிதரை  ஒன்றுமே செய்யாது போலிருக்கிறது.அத்தனை எளிமை அவர் பேச்சில் மிளிர்கிறது.

அவர்   புகழ்  உச்சிக்குக்  காரணம் வெறும் கிரிகெட் மட்டுமல்ல அவருடைய எளிமை, அவர் குடும்பம்,  எடுத்துக்  கொண்ட நேர்மையான வழி இவையெல்லாம் தான் .
இவைகள் தான் உண்மையான காரணங்கள்.

முத்தாய்ப்பாய் அவர் தான் விளையாடிய கிரிக்கெட் பிட்சை  கையால் தொட்டு கும்பிடும் பொது  அங்கிருக்கும் ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நிறைய பேர் தங்கள் கண்களை  கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.நானும் தான்.

இவரைக் கிரிக்கெட்டின்  கடவுள் என்று  சொல்வது  சரி தானே!

image courtesy---google.

Thursday, 14 November 2013

கோடீஸ்வரராக வேண்டுமா?





இன்று  உலக டையாபிடீஸ்  தினம்.
எதைப் பற்றி எழுதலாம் என்று  யோசித்ததில் கிடைத்த ஐடியா  ," சாக்லேட்"
என்ன ........... டையாபிடிஸ்  தினத்தன்று சாக்லேட் பற்றி  எழுதி எல்லோர்  எரிச்ச்சலையும் கொட்டிக் கொள்கிறாயா என்று கேட்கிறீர்கள் தானே!
அதே டையாபிடீஸ் காரர்கள் தான்  அவசரத்திற்கு  கையில் சாக்லெட்டுடன் அலைபவர்கள். நினைவில்  வையுங்கள்.

அதோடு ,தலைப்பில் , கோடீஸ்வரர் ஆக வேண்டுமா என்று கேட்டு விட்டு  எதைப் பற்றியோ சொல்கிறாளே என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.

தொடர்ந்து படியுங்கள்.....

சாக்லேட், சொல்லும் போதே நாவில் இனிப்பு  கரைகிறது. இந்த சாக்லேட்  கண்டு பிடிக்கப் படவில்லைஎன்றால், அல்லது  இப்பூவுலகை  விட்டு திடீரென்று  மாயமாகிப் போனாலோ  என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மிகவும் துன்பத்திற்கு உள்ளாகப் போவது  குழந்தைகளாகத் தானிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

நாமும்  தான்  மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ள  என்ன செய்வோம்??
மீண்டும், கல்கண்டு, சர்க்கரை, ஆரஞ்சு மிட்டாய் என்று தேட வேண்டியது தான்.
லட்டு போன்ற இனிப்புகளுக்கு உடனடி  வாழ்வு கிடைக்கலாம்.
சாக்லேட் ஹீரோ  என்கிற சொல்லே வழக்கத்தில் இருக்காது. (பாவம் திரு. மாதவன்.​)
போர்ன்விடா, பூஸ்ட் , சாக்லேட் பால்   எதுவும் இல்லாத வீடுகளை நினைத்துப் பாருங்கள்.(எனர்ஜியின் சீக்ரெட் என்று எதை சொல்வது? )

இதில் மிகவும்  பாதிக்கப் படப் போவது  பிரபலமான சாக்லேட் கம்பெனிகள் தான் . கதவை இழுத்து மூடி விட்டு அடுத்த வேலையில் இறங்க வேண்டியது தான்.

அவர்களை விடவும்  அதிகம் பாதிப்புக்குள்ளாவது  யாரென்று  நினைக்கிறீர்கள். காதலன் தான் .அப்பப்போ  கோபித்துக் கொள்ளும் காதலிக்கு சட்டென்று  தன்னிடம் ஸ்டாக்கில் வைத்திருக்கும்  ஒரு சாக்லேட் பாரை எடுத்துக் கொடுத்து சமாதானப்படுத்த முடியாதே. கணவனும் ஊடலில்  இருக்கும் மனைவியை சாக்லெட்டைக் கொடுத்து ,"ஸ்வீட் எடு, கொண்டாடு " என்று  சொல்ல முடியாதே.ஆக கணவன், காதலன் பாடு எல்லாம் திண்டாட்டம் தான்., இனி.......


சாக்லேட்டை நம்பியே இருக்கும் விளம்பர நிறுவனங்கள் என்ன செய்யும் சொல்லுங்கள்.எத்தனை பேருக்கு  பிழைப்பு இதை நம்பியே இருக்கிறது  பாருங்கள்.

பொன் வைக்குமிடத்தில் பூ வைக்கலாம்.
சாக்லேட் இருந்த இடத்தில் பொன் வைத்தால் கூட நிரம்பாது என்றே நினைக்கிறேன்..
ரொம்பவே  கஷ்டம் தான்.

இதில் " டார்க்  " சாக்லேட்டைப் பற்றி வேறு பிரசாரம் செய்கிறார்கள்.
இதயத்திற்கு நல்லதாம்.  ஃ ப்ளாவினாயிட்ஸ்  இருக்கிறதாம் . அதனால் மன அழுத்தத்தைக் குறைக்க டார்க் சாக்லேட்  சாபிடுங்கள் என்கிறார்கள்.

சாக்லேட்டே  இல்லை என்கிறேன். டார்க் சாக்லெட்டிற்கு எங்கே போவது ?

ஆமாம் உனக்கேன் இந்த விபரீத கற்பனை என்று கேட்கிறீர்கள் தானே!

கற்பனையெல்லாம் இல்லை.
விகடனில்  இன்பாக்ஸ் பகுதியில் வந்திருந்த ஒரு செய்தி தான் என்னை பதிவு எழுத வைத்தது.

சாக்லெட்டிற்கு தேவையான மிகவும் முக்கியமான  பொருள்  கோகோ (cocoa).
அந்த கோகோவிற்கு 2020 இல் தட்டுப்பாடு வரப் போகிறதாம்.அதனால்  சாக்லேட்  என்கிற வஸ்து  இல்லாமல் போகும்  நிலை வரலாம். என்பது தான் அந்த செய்தி.

அதற்காக நிறைய கோகோ  செடிகள்  வளர்க்கத் திட்டமிடப் படுகிறதாம்.ஆனால் அது வளர்ந்து  சாகுபடி செய்ய  குறைந்த பட்சம்  நான்கு வருடங்கள் ஆகலாம். அதற்குப் பிறகு தான்  அறுவடையே.  உடனே மனம் கணக்குப் போடுகிறது தானே! 2020 ற்கு இன்னும் ஆறு வருடங்கள் தான் இருக்கிறதே என்று.
கோகோ  விளைந்து  அறுவடை நடந்தால்  தான் சாக்லேட். இல்லையென்றால் 2020ற்குப் பிறகு  பிறக்கும்  குழந்தைகளுக்கு  சாக்லேட்  என்ன ?என்பது பற்றி   தெரியாமலே போகும்  நிலை கூட வரலாம்.
உடனே  நிறைய சாக்லேட் வாங்கி  பதுக்கலாம்  என்று தானே தோன்றுகிறது. நானும் அப்படித் தான் நினைத்தேன்.

ஆனால் பாருங்கள் அன்று "மக்கள் " டிவி  சானலில் கோகோ  சாகுபடி செய்வது பற்றி விரிவான விளக்கம். நிறைய விவசாயிகள் ஊடு  பயிராக
சாகுபடி  செய்கிறார்கள் என்கிற செய்தி மகிழ்ச்சி.

ஆனால் நம் விவசாயிகள்  மட்டும் தானா, கோகோ பயிர் செய்வார்கள்?
நானும் செய்யப் போகிறேன் என் வீட்டுத் தோட்டத்தில்.. இப்ப ஆரம்பித்தால் தான் ,இன்னும் ஆறுவருடத்தில்  எழப்போகும் சந்தர்ப்பத்தை  உபயோகித்துக் கொள்ள முடியும்  .இதோ போய் கொண்டேயிருக்கிறேன்  நர்சரிக்கு.

நான் சொல்வது  உண்மையே. நீங்களும்  சாகுபடியை ஆரம்பியுங்கள். இன்னும் ஆறே வருடத்தில்  பெரும் கோடீஸ்வரர்கள் நாம்.
பெல்ஜியம்  நாட்டின் (உலகின் மிகச்  சிறந்த சாக்லேட்டுகளை  உருவாக்குபவர்கள்)
சாக்லேட் கம்பெனி  எம்.டி, மற்றும் Cadbury, Hershey போன்ற கம்பெனிகளின் எம்.டிக்கள்   நம் வீட்டு வாசலில்  லைன் கட்டி நிற்பார்கள். .
எதற்கா........? கோகோ வாங்கத்தான்.
அப்புறம் என்ன " ஸ்வீட் எடு,  கொண்டாடு " தான்.

image courtesy---google.

Monday, 11 November 2013

கோல்டன் " Zero "







" 49 O "என்ற தேர்தல் ஒட்டுக் கருவியின்  கடைசி பட்டனைப் பற்றிய  பதிவு என்று நினைக்கிறீர்களா?  

 இல்லை.

 ஆசிரியையாய்  இருந்ததால் ,எனக்கு  பூஜ்யத்தின் மேல் தனி அபிமானமோ  என்றும்  நினைக்க வேண்டாம்.

இணையத்தில் படித்த ஒரு விஷயத்தைப் பற்றித் தான் இது.
உண்மைச்  சம்பவம் என்கிறது மெயில் .

ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு மாதாந்திர  ' கேஸ் '(cooking gas)  பில்  வருகிறது. நம்மைப் போல் சிலிண்டர் இல்லை போலிருக்கிறது.' கேஸ் 'பைப்ப்பில் வரும் என்று நினைக்கிறேன். அதனால் மாதாந்திர பில்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது வரை அவர் ' கேசை ' உபயோகிக்கவில்லை  என்பது தான். அதனால்  'ஜீரோ டாலருக்கு ' பில் வருகிறது.நண்பர் சும்மா இருந்து விடுகிறார். இது அறியாமல் நடந்த தவறு. அதனால் அவர்களே சரி செய்து விடுவார்கள் என்று.

அடுத்த மாதமும், அதற்கடுத்த மாதமும் அதே ' ஜீரோ  டாலருக்கு 'பில் வருகிறது. அதுவும் உடனே கட்டணத்தை செலுத்த சொல்லி.
(அவர் வீட்டில் சமைக்கவே மாட்டாரா? காபி  .... இல்லையில்லை  வெந்நீர்.......அது கூட  வைத்துக் கொள்ள மாட்டாரா? என்று கேட்காதீர்கள்.
அவருக்கு திருமனமாகவில்லையோ என்னவோ? உடனே ,இளகிய  மனதுடையவர்கள் , பாவப்பட்டு அவருக்குப்  பெண் பார்க்க கிளம்பி விடப் போகிறீர்கள்.. நம்மூர்  பையன்களே,  பெண் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இதில் அவருக்கெல்லாம் நம் ஊர் பெண் எதற்கு?. )

இப்பொழுது அந்த நண்பர்  கேஸ் கம்பெனிக்கு போன் செய்ய , அவர்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, சரி செய்கிறோம் என்று சொல்லி விட்டனர். நண்பரும் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால் அந்த நிம்மதி அடுத்த மாத பில்  வரும் வரை  தான். அடுத்த மாதமும் இதே கட்டணத்திற்கு பில்.

அவர் எரிச்சலாகி இந்தத் தொல்லையிலிருந்து எப்படி விடுபடலாம் என்று யோசித்தார்.இதற்கு  ஒரே வழி  'கேஸை ' கொஞ்சமாவது உபயோகப் படுத்துவது தான்  என்று தீர்மானித்து, 'கேஸை 'உபயோகிக்க போனால் , இவர் பில் பணம் கட்டாததால்  இவர் 'கேஸ் 'இணைப்புத் துண்டிக்கப் பட்டிருந்தது.அதோடு இன்னும் பத்து நாட்களில் பணம் கட்டும்படி ஒரு கடிதமும் வந்திருந்தது.

சரி, இவர்கள் மொழியிலேயே நாமும் பேசலாம் என்று    'ஜீரோ' டாலருக்கு செக் எழுதி 'கேஸ்' கம்பெனிக்கு அனுப்பி விட்டார்.'கேஸ்' கம்பெனியும் உங்கள் பில் செட்டிலாகி விட்டது என்று செய்தி அனுப்பி விட்டது.
(காமெடியாயில்லை!)

பிறகு தான்  விஷயமே இருக்கிறது.

இரண்டு மூ ன்று நாட்களுக்குப் பிறகு வங்கி மேனேஜர் நண்பரை போனில் தொடர்பு கொண்டு  "எதற்கு  ஜீரோ டாலருக்கு செக் கொடுக்கிறீர்கள் ?"என்று கோபப்பட  , இவர் விவரத்தை சொல்லியிருக்கிறார்.
அதற்கு அந்த மேனேஜர், " உங்கள் "செக்"கால் எங்களுக்கு அன்றைய  அலுவல்கள் எதையும் செய்ய முடியாமல் கம்ப்புட்டார்  க்ரேஷ்  ஆகிவிட்டது . எங்கள் வாடிக்கையாளர்கள் நிறைய பேரின்  செக்  திருப்பியனுப்பும்படியாகி விட்டது. அதற்காக உங்கள் மேல் நாங்கள் நஷ்ட ஈடு  வாங்க கோர்டுக்குப் போகலாம் ," என்று பொரிந்து தள்ளி  விட்டார்.

இப்படியும் ஒரு தொல்லையா? முன்னே போனால் முட்டுகிறது, பின்னே வந்தால் உதைக்கிறது என்று நினைத்திருப்பாரோ நம் நண்பர்.

'கேஸ்' கம்பெனியும்  ஒரு வாரத்திற்குப் பிறகு இவருடைய  செக்   திரும்பி விட்டது என்கிற  காரணத்தைக் காட்டி , உடனே பணத்தைக் கட்டாவிட்டால் கோர்ட்டிற்கு இழுப்பதாக மிரட்டியது.

"நீங்களெல்லாம்  என்ன என்னை  கோர்டுக்கு இழுப்பது. நானே போகிறேன் " என்று நண்பர் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார். முதலில் இவருக்காக வாதாடுவதற்கே  எந்த வக்கீலும் தயாராகயில்லை  .('ஜீரோ டாலருக்கு'  ஒரு கேசா ? என்கிற இளக்காரம் தான் ). பெரும் முயற்சிக்குப் பிறகே இவர் கோர்ட்டில் வக்கீல் வைத்து வாதாடி  வெற்றி பெற்று, கேஸ் கம்பெனியிடமிருந்து  நஷ்ட ஈடு  பெறுவதற்கான கோர்ட் ஆர்டர் வாங்கியிருக்கிறார்.

கோர்ட் ஆர்டர் ,  கேஸ் கம்பெனிக்கு  ,
1. அவர்களுடைய கம்ப்யுட்டரின் தானியங்கி  பில்  போடும்  முறையை சீரமைக்கவும் ,
௨. நண்பருக்கு  அவருடைய  செக் திருப்பட்டதற்கான செலவையும்,
3.வங்கி  வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட  கஷ்டத்திற்கான நஷ்ட ஈடும்,
4.நண்பரின்  கோர்ட்  செலவையும்,
5. நண்பரின்  மன உளைச்சலுக்காக  கணிசமான  பணம் கொடுக்கும்படியாகவும்  
அறிவுறுத்தப் பட்டிருந்தது.

இத்தனையும்  "ஜீரோ" டாலருக்காகத் தான்.   அந்த ஜீரோ  " கோல்டன் ஜீரோ " தானே!

இதைப் படித்ததும்  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
"நமக்கு கேஸ் , சிலிண்டரில் தானே வருகிறது. நாம் பணமாகத்தானே சிலிண்டர்  போடுபவரிடம்  கொடுக்கிறோம்.அதனால் இந்தத் தகராறு  எல்லாம் இங்கே வராது.இந்த  மாதிரி  நாம் கோர்டுக்கு  செலவு செய்வோமா ?
 நேரமும் , பணமும் இங்கே கொட்டியா கிடக்கிறது?
மேலும் இந்த  ஜீரோவைக் கண்டு பிடித்ததே இந்தியர்களாகிய நாம் தானே .அதனால் இந்த ஜீரோ எல்லாம் நம்ம கிட்டே ஒன்றும் வாலாட்டாது.நம்மவர்கள் அவ்வளவு மோசமும்  இல்லை. இப்படிப் பட்ட பில் எல்லாம் நமக்கு வராது . அப்படியே தவறுதலாக  வந்தாலும்  கோடிக்கணக்கில் தானே இருக்கும் ." என்று தானே நினைத்தீர்கள்.

நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டு  , லாப்டாப்பை  மூடி விட்டு காபி போட, உள்ளே செல்ல எழுதேன்.

டிவி மேலிருந்த ,செல்போனிடமிருந்து   செல்லமாய் ஒரு சின்ன சினுங்கல் .
பார்த்தால்  எஸ்.எம்.எஸ். வங்கியிலிருந்து.

அலட்சியமாய் திறந்து பார்த்தால்  ," உங்கள் க்ரெடிட்  கார்டுக்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகை Rs.0.00. "அதோடு  இதைக் கட்ட வேண்டிய கடைசி தேதியையும் குறிப்பிட்டிருந்தது.

வங்கியும் , செல்போனும் என்னைப் பார்த்து  ,"இப்ப என்ன  செய்வே ? இப்ப என்ன செய்வே? " என்று  நக்கலடிக்கிறதோ !
                                                           


images courtesy---google.                                                         

Thursday, 31 October 2013

"You Tube"ல் ராசி.





வலையுலகம் எங்கே திரும்பினாலும்   தீபாவளிப்  பற்றிய பதிவுகள் தான்.
சுப்பு  தாத்தா வலைக்கு சென்றால்  அவர் எந்தெந்த பதிவில் என்னென்ன பலகாரங்கள் கிடைக்குமென்கிறார். உஷாவோ  பலகாரப் போட்டி ஒன்று வைத்து  பலகாரம் சுடும் வழி  சொல்லித் தருகிறார். இப்படி எல்லோரும் எதையாவது பற்றி தீபாவளிக்கு  எழுத நாம் மட்டும் விடுவதா  . 

 ராசி  தீபாவளிக்கு  " மைசூர்  பாக் " செய்ததைப் பற்றி எழுதுகிறேன். படித்துப்  பாருங்கள்.

இரண்டு  நாட்களுக்கு முன்பு  விஷ்ணுவிற்கு  பல் வலி இருந்தது.மைலாப்பூரில்   இருக்கும்  பல் டாக்டரிடம்  போய்  ஆலோசனைக் கேட்டதில்,"உங்கள் பல் , " பள்ளிக்  கொண்ட ரங்கநாதரைப்  போல்  கிடக்கிறது."
இப்போதைக்கு  வலி குறைய  மருந்து தருகிறேன். ஆனால் ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு  வாங்க , பல்லை எடுத்து விடுகிறேன் " என்று சொல்லியிருந்தார்,
உடனே  மைசூர்பாக்கினால்  பல் உடைந்து விட்டதா என்று குறுக்கு கேள்வி  கேட்காமல் தொடர்ந்து படியுங்கள் .
கன்னத்தில் கையை வைத்து பல்லைத் தாங்கிக் கொண்டே விஷ்ணு   ,"ராசி ,உனக்குத் தெரியமா. ? இப்பொழுதெல்லாம்  பலகாரம் செய்யும்  முறை  You Tubeஇல்  பதிவேற்றுகிறார்கள். நீ தீபாவளிக்குப்  பலகாரம் செய்வதை நானும்  You Tube இல்  போடுகிறேன். அதனால் செய்முறையை  சொல்லிக் கொண்டே   "மைசூர்  பாக்"  செய் " என்று  சொல்ல

ராசிக்கு  உற்சாகம் தொற்றிக் கொள்ள ,  டிவியில்  ஒளிபரப்புவதாக நினைத்துக் கொண்டாள் . ' நாளைக்கு செய்யட்டுமா 'என்று கேட்டுக் கொண்டே கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

மறு நாள் வெண்டைக்காய் சாம்பார்,  சேனைக்கிழங்கு ரோஸ்ட் , சாலட் எல்லாம் டேபிளில் வைத்தாள் .பின் விஷ்ணுவைப் பார்த்து, ' டைனிங்  டேபிள் மேல் எல்லாம் இருக்கிறது .நீங்களே போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுங்கள்.. மைசூர்பாக்  செய்ய வேண்டுமில்லையா ? அதற்காக நான் பியூட்டி பார்லர் போய் வருகிறேன் . "
என்று சொல்லவும் விஷ்ணு  குழப்பதில் ...

' பார்லருக்கா ? '

"ஆமாம். நீங்கள் தான்  You tube இல் போடுவதாக சொன்னீர்களே. அதற்காகத்  தான்."

பல்வலியுடன் சும்மா இல்லாமல் ,தானே எதையோ சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டதாகப் பட்டது விஷ்ணுவிற்கு.

' ஆனால் இனி மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை '  நினைத்துக் கொண்டார் விஷ்ணு.

கிட்டத்தட்ட  மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வந்தாள் ராசி. அவளைப் பார்த்தால் ஏதோ கல்யாண ரிசப்ஷ்னிற்கு  செல்பவள்
 போல் இருந்தாள்.  நல்ல கரு நீலத்தில் பட்டுப் புடைவை, மேட்சிங்  ப்ளவுஸ், கைகளில் நீல வளையல், கழுத்தில் நீலக்  கல் பதித்த அட்டிகை சகிதமாக வந்து நின்றாள் .

' அழகாகத் தானிருக்கிறாள் . ' நினைத்துக்  கொண்டார்  விஷ்ணு. " ஆனால் 'You Tube" என்று தானே சொன்னேன். அதுவும் மைசூர் பாக்  செய்வதைப் பற்றித் தானே ."

விஷ்ணு  நினைத்துக் கொண்டிருக்கும் போதே .......

டைனிங் டேபிள்  அலங்காரமானது. அதன் மேல்   கடலை  மாவு , சர்க்கரை, நெய் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள்.

இப்பொழுது  விஷ்ணு  வீடியோ ரெக்கார்டிங் ஆரம்பித்தார். 'கிளாப்  'செய்யாதது தான் பாக்கி.
ராசி  கடலை மாவை ,சர்க்கரைப்  பாகில் போட்டு ,நெய்யையும், விட்டு கிளறிக் கொண்டிருக்க விஷ்ணு டைரக்டர் ஆனார் .
அவள் மைசூர்பாக்  செய்வதை விடவும் அட்டிகையை சரி செய்வதற்கும், புடைவைத் தலைப்பு  அழகாய்  தெரிவதற்கும் பிரயத்தனப் பட்டாள் .
' இதில் எங்கே  மைசூர்  பாக்  நன்றாக வரப் போகிறது. இதை எதற்கு அப்லோட் செய்வது ? 'நினைத்துக் கொண்டார். ஆனால் ராசி விட மாட்டாளே .

Ipad உடன் இங்குமங்கும் அலைந்து பல கோணங்களில் "  மைசூர் பாக் " செய்வதைப்  படமாக்க முயற்சி  செய்யலானார்.

மைசூர் பாக் கிளறி, தட்டில் கொட்டி, துண்டு போட்டாகிவிட்டது.அதை ருசி பார்ப்பதையும் வீ டியோ  எடுத்தே ஆக வேண்டும்  என்று ராசி அடம்பிடிக்க  .

ஒரு துண்டை எடுத்து விஷ்ணு கையில் கொடுத்து  வாயில் போடச் சொன்னாள்  ராசி. அவரை  " Guninea Pig "  ஆக்கியதோடு  நிற்கவில்லை ராசி.விஷ்ணு  ருசி பார்ப்பதை இப்பொழுது  ராசி படமாக்கிக் கொண்டிருந்தாள் .
விஷ்ணு மைசூர்பாக்கை  வாயில் வைத்துக் கடிக்க  'கடக்' என்று சத்தம்.

கையால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டே வாயில் என்னவோ கடிபட்டதே என்று எடுத்துப் பார்க்க , ரத்த வெள்ளத்தில்  பல். வாய் கொப்பளித்து விட்டு  வந்தார் விஷ்ணு.  பல் எடுக்க  மைலாப்பூர்  போக அவசியமில்லாமல் போய் விட்டது .

" மைசூர்பாக் " வில்லனாகி விட்டது பல்டாக்டருக்கு.

ஆனால் அதுவும் பதிவாகி விட்டதே .இதை எப்படி எடிட் செய்வது?  கீழ் வீட்டில் இருக்கும் மணி(software engineer) நினைவிற்கு வர  அவனிடம் ipad ஐக் கொடுத்து ,  எடிட் செய்து அப்லோட் செய்ய சொன்னாள்  ராசி.

சிறிது நேரத்திற்கெல்லாம்  'டிங் டாங்"

பார்த்தால் மணி. " எடிட் செய்து
அப்லோடும் செய்து விட்டேன் " என்று சொல்லிவிட்டு , எப்படி பார்க்க வேண்டும் என்றும்  சொல்லி சென்று விட்டான்.

அதற்குப் பிறகு ராசியை  கையில் பிடிக்க  முடியுமா.தீபாவளி வேலையுடன் அவ்வப்போது  You Tube ஐயும்  பார்த்துக் கொண்டேயிருந்தாள் .

அன்று முழுக்க  ஐம்பது பேர்  பார்த்திருந்தார்கள் என்று  ஹிட்ஸ்  சொல்லியது. அதில் நாற்பத்தி எட்டு முறை  ராசியே பார்த்தது தானிருக்கும்.
வெறுத்துப் போனாள்  ராசி. அதைப் பற்றி  மறந்தும் விட்டாள் .

இரண்டு நாட்களானது. அவளுடைய மெயிலைப் பார்க்கும் போது ஒரு விளம்பர நிறுவனத்திடமிருந்து  "எங்கள்   விளம்பரத்தை  உங்கள் வீடியோவில்  போட்டுக் கொள்கிறோம்  .அதற்கு  சன்மானமும் தரப்படும்.  விருப்பமிருந்தால் தொடர்பு  கொள்ளவும்" என்று எழுதியிருந்தார்கள் 
இதை விஷ்ணுவிடம் சொல்ல இருவரும் திரும்பவும்  youtube பக்கம் செல்ல ,
பார்த்தால்  லட்சோப லட்சம் ஹிட்ஸ். அதில் கமெண்ட்ஸ் வேறு வந்திருந்தது.
"இது என்ன கலாட்டா "  நினைத்தார் விஷ்ணு.
("Gangnam  Style " டான்ஸிற்கு  போட்டியாகிவிடுமோ?)

ஷாலினி என்பவர்," உங்கள் புடைவை  மிகவும் அழகாக இருக்கிறது " என்று கமெண்ட் எழுதியிருந்தார்.

சரோஜா என்பவர்,"இந்த அட்டிகை நன்றாக இருக்கிறது. எந்தக் கடையில் இந்த டிசைன் கிடைக்கும் ? என்று கேட்டிருந்தார்.

லலிதா  என்பவர்  , உங்கள் தோடுகள்  கலர்   சரியில்லை  என்று நக்கீரராய்  மாறியிருந்தார்.

கணேஷ் என்பவர் " உங்கள் கணவர் பல் எப்படி இருக்கிறது "என்று  விசாரிக்க .

பல் டாக்டர் இந்த வீடியோவைத் தடை செய்ய கோர்ட் படி ஏறியிருக்கிறார்.  

திரும்பவும்  வீடியோவைப் பார்த்தால் ,குறும்புக்கார மணி ,எடிட் செய்யாமலே  அப்லோட் செய்தது தெரிய வந்தது.

இது எதைப் பற்றியும் கவலைப் படாத ராசி,  போனை எடுத்து தெரிந்தவர்களுக்கு எல்லாம்   தன்  வீடியோவிற்கு வந்த ஹிட்ஸ் பற்றி  தமுக்கு அடித்ததோடு , விளம்பரக் கம்பனிக்கு வேறு  மெயிலடித்துக் கொண்டிருக்கிறாள்.

" இது எப்படி  இவ்வளவு ஹிட்ஸ் ? " ராசிக்கே  ஆச்சர்யம்  தான்.

ஆனால் விஷ்ணுவிற்கோ  பயம் பிடித்துக்  கொண்டது.
இது  எங்கே போய் முடியப் போகிறதோ  ?  ராசி தன்னை  "வீடியோகிராஃ பராக்கி "விடுவாளே   என்கிற பயத்துடன் இருக்கிறார் விஷ்ணு.

அவர் பயத்தைப் போக்குவீர்களா யாராவது?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்  எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

image courtesy---google.

Thursday, 24 October 2013

டெடியும் வெங்காயமும்


நேற்று  சூப்பர்  மார்கெட் சென்றிருந்தேன். .மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டே, காய்கறி செக்ஷனில் சில காய்கறிகளை எடுத்துத்  தள்ளு வண்டியில் வைக்கும் போது "வீட்டில் வெங்காயம் தீர்ந்து விட்டதே"நினைவிற்கு வர  வெங்காயம் எடுத்து கவருக்குள் போடப்போனேன் .

தடுத்த என் கணவர்," எதற்கு வெங்காயம்?"என்றார்.

" சட்னிக்குத் தான் "

" சட்னிக்கு வெ......ங்........கா........யமா? . "

" சாப்பாட்டின் விலையே  ஐந்து ரூபாய் தான் .  ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார்.  அந்த சாப்பாடு எந்த ஹோட்டலில்  என்று விசாரித்து  சாப்பாடே ,   சாப்பிட்டு விடலாம். வெங்காயம் மட்டும் வேண்டாம்."என்று  என் கணவர் சொல்ல

" கால் கிலோ வாங்கிக் கொள்கிறேனே ."  நான் கெஞ்ச

"நீயென்ன அம்பானியின்  உறவு என்கிற நினைப்போ?
பேசாமல் ' பாதாம் பருப்பு 'வாங்கி சட்னி செய். அது போதும் " என்று அதட்ட நானும் வெங்காயத்தைப் பிரிய மனமில்லாமல் (கண்ணில் நீருடன்) நகர்ந்தேன்.

அப்பொழுது  " மிஸ் ,,,எப்படி இருக்கிறீர்கள் ? " பின்னாலிருந்து வந்த  குரல்  என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
என்னிடம் படித்த மாணவி கல்யாணி. தான்  என்னைக் கூப்பிட்டாள் .

' கல்யாணி  எப்படி இருக்கிறாய் ' குசலம் விசாரித்தேன்.
இரு குழந்தைகளின்  தாய் அவள்.. அவள் கணவருக்கு  என்னை அறிமுகப் படுத்தி வைக்கும் போது ," இவர்கள் என் டீச்சர். கொஞ்சம்  ஸ்டிரிக்ட்
தான். "
பின் என்னைப் பார்த்து , " ஆனால் அது தான்  நல்வழிப் படுத்தும்   என்னும்  பெரிய உண்மை  நான் தாயான பின் தான் எனக்குப் புரிந்தது ." என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேச  கடையிலிருந்த ஓரிருவர் என்னையும்,என் மாணவியையும்   ஒரு சில நிமிடங்கள் கவனிக்க  ,எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு ,என் மாணவி  போய் விட்டாள்.ஆனால்  நான்  பழைய நினைவுகளில்  ஆழ்ந்து கொண்டிருப்பதை கவனித்த என் கணவர்  என்னைத் தோளில் தட்டி  சுயநினைவிற்குத் திருப்பினார்.

என் மனதிற்குள் நான்  ஆசிரியையாய்  பணியாற்றிய  நினைவுகள் மட்டுமல்ல என் ஆசிரியர்களும்  நினைவில் வந்து போனார்கள்.

'A Teacher is a Second Mother ' ஒவ்வொரு  ஆசிரியையும் தாய்க்கு சமமானவள்  தான் . மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.


இது சம்பந்தமான ' Mom At School 'காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாருங்கள் . கேளுங்கள் .
உங்களுக்கு பிரியமான உங்கள் ஆசிரியர் கண்டிப்பாக நினைவிற்கு வருவார்.
நினைவிற்கு வரும் ஆசிரியர் பெயரைப் பின்னூட்டத்தில்  குறிப்பிட மறக்க வேண்டாம். அத்துணை  ஆசிரியர்களுக்கும்  என் வணக்கங்கள்.
காணொளி  இங்கே


அது என்ன " டெடியும் வெங்காயமும் " என்று தலைப்பு என்று கேட்கிறீர்களா.?
கானொளியில்  நீங்கள் கேட்ட டெடியைப்பற்றியும் சூப்பர் மார்கெட்டில்  நான் பார்த்த  (வாங்காத)   வெங்காயத்தைப்  பற்றியும்  தானே எழுதியிருக்கிறேன்.
இரண்டுமே  கண்களைக்  குளமாக்கின.
அதனால் தான் இது " டெடியும்  வெங்காயமும்."

image courtesy--google.
video  courtesy-- you tube.

Sunday, 20 October 2013

குடைக்குள்..................




குடைக்குள்  குழல்.

இது என்ன குழல் ?.........

கோவர்த்தனகிரி  பற்றியோ?

 இல்லை

மாயக் கண்ணனின் புல்லாங்குழலா?  வேய்ங்குழலா?.....என்று யோசிக்க  வேண்டாம்.

நானே....நானே சொல்லி விடுகிறேன்.......

தேங்குழல் .

என்னவர் கொஞ்சம் " நொறுக்ஸ் " பிரியர்  . அவருக்காக  என்ன முறுக்கு செய்யலாம், என்று யோசித்ததில்  சட்டென்று  மின்னலடித்தது ,போன வாரம் தேங்குழல்  மாவு  மெஷினில் அரைத்து வைத்தது  பற்றிய  நினைவு .

காலரைக்காபடி  மாவு எடுத்து , கச்சிதமாய் எள்ளு சேர்த்து , பெருங்காயம், உப்பு, சேர்த்து   பிசைந்து  முறுக்கு அச்சில்  போட்டு  எண்ணெயில் பிழிய  ஆரம்பித்தேன். ஒவ்வொரு தேங்குழலும்  என்னை எடுத்து விடேன் என்று கெஞ்சுவது போல்  குதித்து,குதித்து  மேலே வந்து   வந்து  தான் வெந்து விட்டதை பறை  சாற்றியது. அதை எடுத்துக் கொண்டிருக்கும் போதே  என்னவர் வந்து  ஒரு முறுக்கு  சுடச்சுட  எடுத்து வாயில் போட்டு "தேங்குழலென்றால்  அது நீ செய்தால் தான்  சுவை....... கர கரவென்று  என்று  வாயில் போட்டவுடன்  கரைகிறது "எனக்கு    பட்டம்  அளித்து விட்டு சென்றார்.

இது இன்றைய நிலைமை.
சில பல  வருடங்களுக்கு முன்பாக ...........இருங்கள்......... உடனே பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  என்று நினைத்துக் கொண்டு என்னை வயதானவளாக்கி விடப் போகிறீர்கள். முன்பே  ஒரு பதிவில் சொன்னது போல் , இளமையின் வாயிற்படியில்  நிற்கும் பாட்டி நான்.

ஜஸ்ட் , முப்பத்தைந்து  வருடங்கள் முன்பு நடந்தது  நினைவிற்கு வந்து முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
திருமணமாகி  இரண்டு வருடமிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் இப்படித் தான்  தேங்குழல்  செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தேன்
அப்பவே என்னவர் " எதற்கு ரிஸ்க்  எடுக்கிறாய். நான் வேண்டுமானால் கடையிலிருந்து  வாங்கி வந்து விடுகிறேனே" என்று  சொல்ல ,

எனக்கும்  சரி  என்று சொல்ல ஆசையிருந்தாலும் , என் சுயமரியாதை  என்னாவது  " எல்லாம் எனக்கு செய்யத் தெரியும்.நான் செய்து கொடுக்கிறேன் பாருங்கள் " என்று வீறு கொண்டு எழுந்தேன்
"எப்படியோ போய்த் தொலை "  என்று சொல்லி விட்டு  அவர் ஆபிசிற்கு சென்று விட  ,அன்று மாலையே  .........(விதி  சமையலறையில் புள்ளி வைத்து கோலம் போட்டு  விளையாடப் போவது   தெரியாமல்)  தேங்குழல்  பிழிய  ஆரம்பித்தேன்.

அதன்  விளைவு......அவர்  மட்டும் தான் மாட்டிக் கொண்டார் என்று இது நாள் வரை  நினைத்திருந்தேன்.இப்பொழுது  தான் புரிகிறது . நீங்களும்    கூட  என்னிடமிருந்து தப்பிக்க வில்லை என்று.(பதிவாக்கி விட்டேனே அதை சொல்கிறேன்.)

அரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரியான  விகிதத்தில்  சேர்த்து ,அம்மா அரைத்து கொடுத்திருக்கிறார்களே.  இதில் என்ன பெரிய  டெக்னிக்  இருந்து விடப் போகிறது  என்ற அசால்ட்டுடன்   வேலையை ஆரம்பித்தேன்.
(இந்த  " நினைப்பு தான்  பிழைப்பைக் கெடுக்கும்  "என்று சும்மாவா  சொன்னார்கள்  ).

சுடச்சுட  காபி ஒன்றைக் குடித்து விட்டு , அரைப்படி மாவு   எடுத்து  பாத்திரத்தில் போட்டு விட்டு,  இதில் எவ்வளவு உப்பு போடலாம்  என்று  யோசனையான யோசனை செய்து ( what's app இல்லை,
skype இல்லை, இ  மெயில் இல்லை,  செல்போன்  இல்லை, ஏன்  வீட்டில்  டெலிபோன் வசதி  கூட  இல்லாத  காரணத்தால் )  நானே  முக்கியமான முடிவை எடுத்தேன்.(அதாங்க  எவ்வவளவு உப்பு என்கிற முடிவு)  கண்ணளவு  உப்பு ,பெருங்காயம்,  எள்ளு சேர்த்து  தண்ணீர் விட்டுப் பிசைந்து  முறுக்கு அச்சில் போட்டு  துளியூண்டு  மாவு எடுத்து , எண்ணெயில் போட்டு  காய்ந்திருக்கிறதா  என்று பார்த்தேன்.(இதெல்லாம் சரியாக செய்து விடுவேன்)

பின்  பிழிய  ஆரம்பித்தேன்........ம் ம் ம் ம் ம் ........அழுத்தினதில்   அச்சே உடைந்து விடும் போல் இருக்கிறது. ஆனால் தேங்குழல்  வரவில்லை.
 கொஞ்சமாய் சிறிது தண்ணீர் கலந்தேன்.   .
 ஆனால் மாவு  கொழ கொழ  என்றாகி விட்டது.
சரி, கொஞ்சம்  மாவு போட்டால் கெட்டியாக்கி விடலாம்  என்று கொஞ்சம் மாவு சேர்த்தேன்.
இப்படி குரங்கு,அப்பம் கதையாய் ,  ஒரு வழியாய்  மாவை சரி செய்து
பிழிய ஆரம்பித்தேன்.  நன்றாக அழகாய்  சிறு சிறு  முறுக்குகளாய் வந்தது.
பார்க்க மிக மிக அழகாய்  மேலெழும்பப் பார்த்தது.

திடீரென்று  "பட் "  என்று ஒரு சத்தம்.

என்னவென்று திரும்பிப் பார்ப்பதற்குள்  அடுத்த" பட்  ."

கொஞ்ச நேரத்தில் மீண்டும்" பட் ...... பட்........  பட் ".
தேன்குழல்  தான்  ஊசி பட்டாசாய்  வெடித்துக் கொண்டிருந்தது.

பயத்தில்  என்ன செய்வதேன்றே  தெரியவில்லை. சரி சட்டென்று  ஸ்டவ்வை குறைத்தேன்.
வீட்டில் வேறு யாருமில்லை. திரு.....திரு... முழியுடன்  சமையலறையில்   நான்.......
ஒரு வேளை மாவு ஊற   வேண்டுமோ?  . ஒரு பதினைந்து நிமிடம்  கழித்து  மீண்டும் இந்த  வேலைக்குத் திரும்பினேன்.

மீண்டும் "பட் ......பட் .......பட் .......".
இதற்குள் சமையலறை முழுவதும்  எண்ணெயில் புள்ளியாய் .(கோலம் தான் பாக்கி) எங்கே காலை
வைத்தாலும்   ஒரே" பிசுக் பிசுக் ".

எப்படியும் இத்தனை மாவையும்  முறுக்காக்கி தானே  ஆக வேண்டும்.
வீணாக்க  மனம் வரவில்லை/
என்ன தான் செய்வது?

யோசித்தேன்.
எண்ணெய்  தெளிக்காமல் இருந்தால் போதும். என்  மாமனாரின் ' மான் மார்க் ' குடை  நினைவிற்கு வந்தது.
சட்டென்று அதை எடுத்து பிரித்து  என்னருகே வைத்துக் கொண்டேன்.
பின்  முறுக்கு  பிழிந்தேன். என்னிடமா வேலை காட்டுகிறாய்.........தேன்குழலே ......என்று  குடையை வாணலிக்கு மேல் உயரத்தில்  பிடித்துக் கொண்டேன். இப்பொழுது சுளீரென்று  என்கையில் ஒரு சொட்டு . ஆனால்  சமையலறை  சுவர், தரை  எல்லாம்  ஓரளவிற்கு தப்பியது.(மான் மார்க் குடை காரர்களுக்கு இது தெரிந்தால்  தேங்குழல்  செய்யப் போகிறீர்களா? வாங்குங்கள் எங்கள் மான் மார்க் குடையை என்று  விளம்பரப் படுத்தியிருப்பார்கள்).)
அப்புறம் கையில் ஒரு துணியை சுற்றிக் கொண்டு ,குடையைப் பிடித்துக் கொண்டு  ஒரு பாதி மாவை  முறுக்காக்கி விட்டேன்.

எனக்கே என்னைப் பார்க்க  பாவமாய் இருந்தது.

" டிங்...டாங் "

என்னவர் வருகை. 
" ஒரே வாசனை அடிக்கிறதே  தேங்குழல்  செய்து விட்டாயா?"என்று கேட்டுக் கொண்டே  சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்து   "இதென்ன குடை  சமையலறைக்குள் " என்று கேட்க  நான் என் சாதனைப் பற்றி சொல்ல
அவர் விழுந்து  ,விழுந்து ,சிரித்தது இன்றும் பசுமையாய்  நினைவில் வந்து மோதுகிறது.

இன்னும் மாவு பாக்கியிருக்கிறதா  என்று எட்டிப் பார்த்து   விட்டு "நான் உனக்கு ஒரு ஐடியா  கொடுக்கிறேன். "என் ஸ்கூட்டர்  ஹெல்மெட்  போட்டுக் கொண்டு கையில் கிளவுஸ்  போட்டுக்கோ  குடையையும் பிடித்துக் கொள் ." நீ, சமையலறை, தேங்குழல் எல்லோருக்கும்  சேஃப்டி  , பார்க்கவும்  ராணி ஜான்ஸி மாதிரி வீராங்கனையாக இருப்பாய் . என்ன கேடயம் தான் இல்லை "என்று நக்கலடிக்க  எனக்கோ கண்ணீர்  முட்டிக் கொண்டு எட்டிப் பார்த்தது.

ஒரு வழியாய்  தேங்குழல் ப்ராஜெக்ட்  முடித்தேன்.
இந்த கலாட்டாவில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். கண்ணளவு உப்பு போட்டிருந்தேன்..அது  கண்ணளவு இல்லை ,இம்மியளவு  தான் என்று  பரிந்தது. ஆனால்  ரொம்ப லேட்டாகத் தான் தெரிந்தது.அவர் தானே சாப்பிடப் போகிறார். நான் ஏன் சாப்பிடுகிறேன்?எனக்கென்ன தலையெழுத்தா?

அதற்குப் பிறகு தான் கிளைமாக்ஸ் வருகிறது.  . என்  கணவர்  சும்மாவா இருப்பார். அடுத்த வாரமே  ஒரு விசேஷத்திற்காக  ஊருக்குப் போகும் போது.
குடைக்குள் தேங்குழல் பிழிந்த கதை  எல்லோருக்கும்  நோட்டீஸ் அடிக்காத  குறை தான்.

எல்லோரும் என்னைப் பார்த்ததாலே,  தேங்குழல் பற்றி விசாரிக்க  ஆரம்பித்தார்கள்.

" இப்ப எப்படி ராஜி? தேங்குழல் வெடிக்குதாடி  இன்னும் ? " இது  இந்து  சித்தி 

"  தேங்குழல் பிழிவதாக  இருந்தால் என் தம்பி  ஆபிசிற்கு  சென்ற பிறகு செய் . " இது.......தம்பி மேல் கரிசனம் காட்டும்  அக்காவின்  குரல்.( ம்க்கும்......)

" அக்கா .....எனக்கும் சொல்லிக் கொடேன் . என்ன குடையெல்லாம்  உபயோகிக்கலாம்" இது என் மாமா  பெண்,  குழலியின்   கிண்டல்.

 பல வருடங்களுக்குத் தொடர்ந்தது..
நல விசாரிப்புடன்.  தேங்குழல்   விசாரணையையும்   முடுக்கி விடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இப்பவும்  சுமார் ஐந்து  வருடங்கள் , முன்பாக அறுபது  வயதான உறவுப் பெண்மணி தன்  மருமகளிடம் என்னை அறிமுகப் படுத்தும் போது ,"நான் சொன்னேனில்லை சமயோசிதமாக  யோசித்து வேலை செய்வாள். தேங்குழல்  எண்ணெயில் பிழிந்தவுடன் வெடித்தது  என்று     குடை பிடித்தாள் ."என்று சொல்ல ,

அந்தப் பெண்ணோ  ,"தேங்குழலிற்குக்.................குடையா ..............." என்று  கேட்க    நான் அந்த இடத்தில்  ஏன்  நிற்கிறேன் சொல்லுங்கள்.


யாருக்காவது  தேங்குழல் செய்வதில்  சந்தேகமா  ?என்ன குடை உபயோகிக்கலாம்  என்பதற்கு  ஆலோசனை  வேண்டுமா?
rajalakshmiparamasivam.blogspot.com என்கிற லிங்கில்  தொடர்பு  கொள்ளவும்.

image courtesy----google.



உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்