Monday, 2 December 2013

' லொக்... லொக்.... லொக்.... '

இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். அப்பொழுது தான், லேப்டாப்பை மூடி வைத்து விட்டு, படுத்துக் கண் அசந்திருப்பேன்.

'லொக் , லொக் ' இருமலில் முழித்தேன்.
கொஞ்சம், இளம் சூடாக வெந்நீர் குடித்து விட்டுப் படுத்தேன்.
ஒரு வாரமாக  இந்த உபத்திரவம் .

தூக்கம் லேசில் வருவதாக இல்லை. எங்கெங்கோ ,உலா போன எண்ணங்களை இழுத்து வந்து , கந்த சஷ்டிக் கவசம் சொல்ல வைத்து....... ,' காக்க காக்க ' என்று சொன்னது நினைவிலுள்ளது. அதற்கு மேல் கண்ணை இழுத்து சொருகி கொண்டு போனது.

திரும்பவும் 'லொக் ,லொக் ' வந்து தூக்கத்தைக் கெடுக்கச் சுத்தமாய்த் தூக்கம் தொலைந்தது, எனக்கு மட்டுமல்ல ,வீட்டில் எல்லோருக்கும் தான்.

உட்கார்ந்தால் இருமல் இல்லை , படுத்தால் வந்தது இருமல்.

சரி, நாளை காலை எட்டு மணிக்கே சென்று Dr.Sathya வைப் பார்ப்பது என்று
வீட்டின் பொதுக்குழு, அந்த அகால நேரத்தில் கூடி தீர்மானம் நிறைவேற்றியது..

காலை  எட்டு மணிக்கு ,டானென்று டாக்டர் வீட்டில் நாங்கள் ஆஜர்.
டாகடர் வந்தவுடன் ,என் இருமல் பற்றிச் சொன்னேன்.

"நீங்கள் இங்கு என்னுடன் பேசும் போது ஒரு முறை கூட இருமவில்லையே !"என்று டாக்டர் கேட்க ,

"படுத்தால் தான் வருகிறது "-- இது நான்.

" போன வாரம் உங்களுக்கு வைரல் ஜுரம் வந்ததினால், இருமல்  இருக்கலாம். நான் கொடுத்த cough syrupஐக்  குடித்துப் பாருங்கள். ஒரு வேளைக் குறையலாம். இல்லையென்றால் ஒரு X-Ray எடுத்து விடுங்களேன் "  என்று சொல்ல, டாக்டர் சொன்ன cough syrup விஷயத்தைக் காற்றோடு, பறக்கவிட்டுவிட்டு, எதற்கும் ஒரு எக்ஸ் ரே எடுத்து  விடுவோம் என்று Scan World ற்குத்  தம்பதி சமேதராய் ஆஜரானோம்..(பெயர் தான் ஸ்கேன் வேர்ல்ட், எல்லா டெஸ்டும் செய்வார்கள்)

அரைமணி காத்திருந்தோம் .எக்ஸ்ரே எடுக்க ஒரு பெண்மணி வந்து அழைத்துப் போனார்.. எடுத்தும் முடித்தாயிற்று. ஒரு பத்து நிமிடத்தில் ரிப்போர்ட்  கொடுக்கிறோம். இருந்து வாங்கிக் கொண்டு ,செல்லுங்கள் என்று சொல்லக் காத்திருந்தோம்.

காத்திருந்த வேளையில் ,X-Ray அறையிலிருந்து ,வெள்ளைக் கோட்டை ,சரி செய்தபடியே ஒரு பெண் வந்து , பெயர் சொல்லிக் கூப்பிட்டு ,
" என்ன பிராப்ளம் உங்களுக்கு?
எதற்கு எக்ஸ்ரே எடுக்க வந்தீர்கள் ?"
என்று கேட்க ,

"இருமலுக்காக "என்று நான்  சொல்ல, அடுத்து அந்தப் பெண் சரமாரியாய்

 "ஜுரம் இருக்கா? "

"சளி?"

" நடந்தால் நெஞ்சு வலிக்கிறதா?"

 " மூச்சு வாங்குகிறதா ? "

இண்டர்வியு மாதிரி கேள்விகளால் துளைத்தார்.

எல்லாவற்றிற்கும் இல்லை என்று பதில் சொல்லும் போதே  "எல்லாவற்றையும் என்னிடமே கேட்டுக் கொண்டு போய் டைப் அடித்து ரிப்போர்ட் என்று கொடுக்கப் போகிறார்களோ "   நினைத்தேன்.

கொஞ்ச நேரத்தில் ரிப்போர்ட் வந்தது .
ரிப்போர்ட்  என்ன தான் எழுதியிருக்கிறது என்று பார்த்தேன் .
ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்கு வந்து மதியத்திற்காக வடைப் போட்டு மோர்குழம்பும், உசிலியையும் செய்து வைத்து விட்டு, லேப்டாப்பும், ரிபோர்ட்டுமாக உட்கார்ந்தேன்.

ரிப்போர்ட்டில் எழுதியிருந்ததை அப்படியே எழுத்துப் பிசகாமல் googleஇல் டைப் அடித்து search பட்டனை அமுக்கினேன்.

ஒரு பெரிய லிஸ்ட் என் முன்னே.
அதில் ஏதோ ஒன்றைக் கிளிக் செய்ய ," symptoms, treatment, life span ," என்று என்னென்னமோ சொல்ல, கொஞ்சமாய்ப் பீதி கிளம்பியது.

Life Span ஆ................பயத்தில் உறைந்தேன்.
சரி ,இந்த சைட், வேண்டாம் என்று வேறு பல சைட்டுகளையும் போய் பார்த்ததில், முதலில் கிடைத்த தகவல் தான், எல்லாவற்றிலும் இருக்க உடைந்து போனேன். அழுகை எட்டிப் பார்த்தது. சமாளித்தேன்.

மெதுவாக ,என்னைத் தேற்றிக் கொண்டு , மாலை டாக்டரிடமே கேட்டுக் கொள்ளலாம் ,என்று சமாதானமாக முயன்று ,தோற்றுப் போனேன்.

என் அழுகை ,கணவருக்குத் தெரியாமல் இருக்க , படாத பாடு பட்டேன்.

சாப்பிட உட்கார்ந்தோம்.

" ஓ ,இன்றைக்கு உனக்குப் பிடித்த மெனுவா? "

"ம் " ஒற்றை எழுத்தில் பதில் சொன்னேன்.

"மோர் குழம்பில் ஒரு உப்பு குறைச்சலாக இருக்கிறது "

' ஆமாம் '
(இன்னும் எத்தனை நாளைக்கு உங்களுக்குச் சமைக்கப் போகிறேனோ நினைத்தேன்.)

ஒன்றும் இருக்காது. சாப்பிட்ட பின் திரும்பவும் செக் செய்வோம் என்று நினைத்துக் கொண்டே,மோர்குழம்புக் கரண்டியை எடுக்க ,அது கைதவறிக் கீழே விழ அப்பொழுது தான் என்னை என் கணவர் கவனிக்க ,
"என்ன இது கண்ணில் நீர்? அழுகிறயா?" என்று கேட்டது தான்  தாமதம் ,ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன். அவருக்கும்  ஒன்றும்  புரியவில்லை.

மெதுவாக என் அச்சத்தைச் சொல்ல. அவரும் ,முதலில் மிரண்டு தான் போனார். பிறகு மாலை டாக்டரிடம்  கேட்டுக் கொள்ளலாம் என்று சொன்னதோடு , முதல் வேலையாக ,  லேப்டாப்பை எடுத்து அவர் கஸ்டடியில் வைத்துக் கொண்டார்.

மாலை ஐந்து மணி . திரும்பவும் டாக்டர் வீட்டில் ஆஜர். டாகடர் எக்ஸ்ரே ரிப்போர்ட்டைப் படித்து விட்டு , "நல்ல வேளை . ஒன்றுமில்லை " ஒரு மருந்தும் வேண்டாம் என்று சொல்ல நான் ஆச்சர்யப் பட்டு , Googleஇல் பார்த்ததைச் சொல்ல ,' நீங்கள் சொல்வது போல் இந்த ரிப்போர்ட்டில் ஒன்றுமில்லை. இதிலுள்ள டெக்னிகல் வார்த்தையை Google செய்து பார்த்திருக்கிறீர்கள். நிறைய பேருக்கு இந்த மாதிரி இருப்பது  சகஜம். ஆனால் அதனால் பெரிய பாதிப்பெல்லாம்  இல்லை.அதைப்  பற்றி  நீங்கள் மறந்து விடலாம் "என்று அழுத்தமாக  சொல்லியும், நான் சமாதானமாகாமல் தயங்கி நின்றேன்.

"உங்களுக்குத் திருப்தியாகவில்லைஎன்றால்" ஒரு chest specialist பெயரைச் சொல்லி "அவரிடம் expert opinion வாங்கிவிடுங்களேன்" என்று சொல்ல
அடுத்து ,அவர் கிளினிக் வாசலில் தேவுடு காத்தோம்.

வயதான அந்த டாக்டர் , பொறுமையாக என் கதையெல்லாம் கேட்டு விட்டு ,
"உங்களை யார்  இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னது? கூகுளில் மெடிக்கல் விஷயங்களை , டாகடர்கள் படித்தாலே குழம்புகிறோம். உங்களைப் போன்றவர்கள் சும்மா இல்லாமல் முதலில் Dr. Googleஐ பார்த்து விட்டுத் தான்
எங்களிடமே வருகிறீர்கள்" என்று ஆதங்கப் பட்டுக் கொண்டே  என்னை செக் செய்தார். ,"எனக்கும் உங்கள் எக்ஸ்ரே ரிபோர்டில் ஒன்றும் தவறாக இல்லை. நீங்கள் இவ்வளவு பயப்படுவதாக இருப்பதால் ஒரு ஸ்கேன் செய்து பார்த்தால் நீங்கள் திருப்தியாகி விடுவீர்கள்" என்று சொல்ல

மறு நாள் மீண்டும் ஸ்கேன் செண்டர் , நீல கலர் டிரெஸ்ஸைப்  போட்டு விட்டு   ஒரு பெரிய வளைவுக்குள் அனுப்பி வெளியே இழுத்து விட்டார்கள்.
மீண்டும் ரிப்போர்ட் .அதைத்  திறந்து பார்ப்பதில்லை என்கிற உறுதியுடன் ,
நெருப்பின் மேல் நின்ற வண்ணமாய் ,மாலை வரை இருந்து ,பிறகு டாக்டரிடம் போனால்,

"என்ன google செய்தாகி விட்டதா? என்ன வியாதி என்று உங்கள் Dr.Google சொல்கிறார்?" என்று சிரித்துக் கொண்டே ரிப்போர்டை வாங்கிப் படித்து விட்டு
ரிப்போர்ட்டில்  Impression  ---- Normal  ,என்பதை ,என்னிடம் காட்ட , எனக்கு
'அப்பாடா.........' என்றிருக்க ,என் கணவர்  முகத்தில் தெரிந்த நிம்மதியை  வார்த்தைகளால்  சொல்ல முடியாது.

" ஆமாம். முந்தாநாள் இருமல் இருந்தது. இப்ப இரண்டு நாட்களாய் ......? " என்று டாக்டர்  கேட்க......

" இரண்டு நாட்களாய் நான் எங்கே தூங்கினேன். மரண பயத்திலல்லவா இருந்தேன் " என்று நான் சொல்ல .

(ஆனாலும் ஜாஸ்தி இருமவில்லையே ......மனதில் ஓடியது." ஷார்ட் விஸிட் "செய்திருந்த வைரல்  ஜுரம் தான் காரணமோ? )

" எதற்கும் இந்த cough syrup எழுதுகிறேன். தேவைப்பட்டால் இரவு படுக்கும் முன் இரண்டு ஸ்பூன் குடியுங்கள் "என்று அட்வைஸ் செய்ய ,

ஐம்பது ரூபாய்க்கு அந்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டினோம்.
நாளை  அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சனை  செய்து விடுவது என்று தீர்மானித்தோம்.

"இன்டர்நெட் தான் நம் விரல் நுனியில் இருக்கிறதே !  "என்கிற காரணத்தாலேயே கண்டதையும் ,படித்துக் குழம்பித் தவித்து , எட்டாயிரம் வரை செலவழித்த பின் தான்  .  "இனிமேல் எந்த ரிப்போர்ட்டையும் , அது என் பேரன் பேத்தி "பிராக்ரஸ் ரிப்போர்ட்டாகவே  "இருந்தாலும் நான் படிக்கப் போவதில்லை.  அப்படியே  எதையாவது படித்துத்  தொலைத்தாலும் , அதைப் பற்றிய விசாரணையை  கூகுளிடம்  ஆரம்பிக்கப் போவதில்லை " என்கிற ஞானம் உதித்தது.

போதும் இந்த அவஸ்தை .
பெரிய நிம்மதியுடன் விஜய் டிவி மகா பாரதத்தை  பார்க்க உட்கார்ந்தேன்.

"எல்லாம் சரி. உன் இருமல் என்னதான் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?"
இருமல் ,அதற்குப் பிறகு ,படிப்படியாய் குறைந்து போய் ,இப்பொழுது ஒன்றுமேயில்லை . வாங்கின cough syrup சீல் கூட உடைபடாமல்,  அலமாரியிலிருந்து ,என்னைப் பார்த்து ,சிரித்துக் கொண்டிருக்கிறது.

image courtesy---google...

70 comments:

  1. ஹா ஹா ஹா.. அதீத ஆர்வக்கோளாறு நிம்மதியைக் கெடுத்துவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மையே! பட்டால் தானே தெரிகிறது.
      உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி ஸ்பை ,

      Delete
  2. தானாக சரியாவதை கூகுள் கொண்டு
    அடித்து மன உளைச்சல் வேறு பட்ட்ருக்கிறீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. அந்த இரண்டு நாட்கள் மன நிம்மதி சுத்தமாய் போனது.
      நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் கருத்துக்கு.

      Delete
  3. நல்ல நகைச்சுவையாக உள்ளது. கூகுளில் தேடினால் இப்படித்தான் ஆகும். டாக்டர் சொல்லுவதுபோல, அவர்களுக்கே குழப்பம் தரக்கூடியவை நமக்கு எப்படிப்புரியும்?

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார் ,

      நான் நிஜமாகவே எனக்கு ஏதோ என்று நினைத்து உருகிப் போனேன்.
      எல்லாம் ஆர்வக் கோளாறு தான்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      Delete
  4. ரஸித்த இடங்கள்:

    //வீட்டின் பொதுக்குழு, அந்த அகால நேரத்தில் கூடி தீர்மானம் நிறைவேற்றியது..//

    //"எல்லாவற்றையும் என்னிடமே கேட்டுக் கொண்டு போய் டைப் அடித்து ரிப்போர்ட் என்று கொடுக்கப் போகிறார்களோ " //

    ஜோஸ்யர்களும் இப்படித்தான். நாம் என்ன பிரச்சனைக்காக வந்துள்ளோம் என நம்மிடமே கேட்பார்கள். அவர்கள் எல்லோருமே போலி ஜோதிடர்கள் என்பது என் அபிப்ராயம். நம் பெயர், ஊர், பிரச்சனைகள், ஜாதகம் பூராவும் அவரே சொல்ல வேண்டும், அப்படியும் சிலர் உள்ளனர். அவர்களே உண்மையான ஜோதிடர்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்துப் படித்ததற்கும், அதைப்பற்றிக் குறிப்பிட்டு பாராட்டுவதற்கும் நன்றி வைகோ சார்.நீங்கள் சொல்வது போல் ஜோதிடர்கள் சிலர் நம் வாயிலிருந்தே விஷயத்தை வாங்கி விட்டு அதை அவர்கள் சொல்வது போல் சொல்லி விடுகிறார்கள்.
      நன்றி உங்கள் மீள் வருகைக்கு.

      Delete
  5. //அது என் பேரன் பேத்தி "பிராக்ரஸ் ரிப்போர்ட்டாகவே "இருந்தாலும் நான் படிக்கப் போவதில்லை. அப்படியே எதையாவது படித்துத் தொலைத்தாலும் , அதைப் பற்றிய விசாரணையை கூகுளிடம் ஆரம்பிக்கப் போவதில்லை " //

    நல்ல தீர்மானம்.

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் தீர்மானத்தை புகழ்வதற்கு நன்றி வைகோ சார் .
      பலமுறை வருகை புரிந்து என் பதிவைப்பற்றி பாராட்டி பின்னுட்டம் இட்டதற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  6. இனிமே இருமல் வந்தா டாக்டரிடமும் கூகுல் காரானிடம் செல்லாதீங்க... அதுக்கு பதிலாக கிளி ஜோசியகாரங்கிட்ட போங்க... இல்லை கோயிலுக்கு போய் அர்சசனை பண்ணுங்க எல்லாம் சரியாக ஆகிவிடும் கணவன் தான் என் தெய்வம் என்று விட்டுலேயே அர்ச்சனை செய்துவிடாதீங்க

    ReplyDelete
  7. ஒரு இருமலுக்கு போய் இத்தனை ஆர்ப்பாட்டமா?அடேங்கப்பா.ராஜலக்‌ஷ்மியம்மா நீங்க பலே ஆள்தான்.:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும், கருத்தக்கும்.

      Delete
  8. பொதுக்குழுவை மட்டும் கூட்டிய நீங்கள் செயற்குழுவிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. கேட்காமல் போனதால்தான் இவ்வளவு அவஸ்தைகளும்.

    பாட்டி எடுத்துள்ள சபதத்தால் பேரப்பிள்ளைகள் தப்பித்தார்கள்.

    நீங்கள் பட்ட வேதனையை நகைச்சுவையாக எங்களுக்குக் கலக்கிக் கொடுத்து அசத்திட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. செயற்குழு தீர்மானங்கள் உடனே நிறைவேறி விடுமா என்ன? அதனால் தான் இந்த முடிவு.
      இங்கு வந்ததற்கும், பதிவை நகைச்சுவை என்று பாராட்டுவதற்கும் நன்றி சித்ரா.

      பி.கு. பார்த்தீர்களா சித்ரா . பனி மலைகளை பெயர்த்துக் கொண்டு என் தளத்தில் வைத்திருக்கிறேன் பார்த்தீர்களா?
      குருவை மிஞ்சிய சிஷ்யை ஆகி விட்டேன் என்று நினைக்கிறேன். நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்ததை அப்படியே கடை பிடித்து படத்தைக் கொண்டு வந்து விட்டேன். நன்றி சித்ரா உதவியதற்கு.
      மலையை அல்லவா பெயர்த்து எடுத்திருக்கிறேன் அதனால் தான் லேட்.

      Delete
    2. இப்போதான் பின்னூட்ட பதிலைப் பார்த்தேன். சும்மா இருக்கற மலைன்னாகூட பரவாயில்ல , ஆனா நீங்க பனி படர்ந்த மலையையில்ல‌ தூக்கி வந்திருக்கீங்க ! கொஞ்சம் கூடுதல் கஷ்டம்தான். சூப்பரா இருக்குங்க.

      இன்னும் என்னென்ன படமெல்லாம் போட்டு கலக்கப் போறீங்களோ !!

      Delete
  9. உங்கள் அனுபவம் அனைவர்க்கும் ஒரு நல்ல பாடம். இங்கு (ஆஸ்திரேலியாவில்) எழுதிக்கொடுக்கப்படும் பரிசோதனை முடிவுகளை முதலில் மருத்துவர்தான் பிரித்துப் பார்வையிடவேண்டும். அதற்குமுன் நோயாளிகள் கவரைப் பிரிக்கமுடியாதபடி சீல் செய்து தருவார்கள். அது இதுபோன்ற காரணத்துக்காகத்தான் போலும். இனிமேலாவது அவசரப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். அனுபவப்பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அப்படித்தான் இருந்தது . கொஞ்சம் கொஞ்சமாக விதிகள் தளர்ந்து இப்படி ஆகிவிட்டது.உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கீத மஞ்சரி.மீண்டும் மீண்டும் வருகை புரிந்தால் மகிழ்வேன்.

      Delete
  10. அந்த cough syrupஐ எனக்கு அனுப்பிவிடுங்கள். எனக்கும் இரண்டு நாட்களாக இருமல் லொக் லொக் கென்று இரவு நேரத்தில் மட்டும் வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்லப்பா சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..உங்கள் உடல் நலத்திற்கு நானும் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  11. // வயதான அந்த டாக்டர் , பொறுமையாக என் கதையெல்லாம் கேட்டு விட்டு ,"உங்களை யார் இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னது? கூகுளில் மெடிக்கல் விஷயங்களை , டாகடர்கள் படித்தாலே குழம்புகிறோம். உங்களைப் போன்றவர்கள் சும்மா இல்லாமல் முதலில் Dr. Googleஐ பார்த்து விட்டுத் தான்
    எங்களிடமே வருகிறீர்கள்" என்று ஆதங்கப் பட்டுக் கொண்டே என்னை செக் செய்தார்.//

    கூகிளால் ஏற்படும் இந்த ” கூகிள் போபியா” (GOOGLE PHOBIA ) எல்லோருக்கும் வருவது உண்டு. நீங்கள் ரொம்பவும் பயந்து விட்டீர்கள் போலிருக்கிறது. ஸ்கேன், அது, இது என்று போய்விட்ட்ட்ர்கள். இனிமேல் இந்த போபியா வராது.

    நான் எனது அனுபவத்தினை
    “ கூகிளில் நாம் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகளின் விவரம்” http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_19.html என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.


    ReplyDelete
    Replies
    1. இந்த கூகுள் போபியா இனிமேல் எனக்கு வரவே வராது. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் சென்று படிக்கிறேன் தமிழ் சார்.
      நன்றி சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  12. ”கூகிள் போபியா” (GOOGLE PHOBIA ) என்ற தலைப்பில் உங்கள் பாணியில் நகைச்சுவையாக ஒரு பதிவைப் போடுங்கள். எல்லோரும் விழுந்து விழுந்து எழட்டும். (எனக்கு நேரம் இல்லை. மேலும் என்னால் உங்களைப் போல நகைச்சுவையாக எழுத இயலாது )

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் கரு நன்றாகவே இருக்கிறது. ஒரு பதிவு எழுதிவிடுகிறேன். நன்றி உங்கள் மீள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  13. எனக்கும் இது போல இருமல் அதுவும் வறட்டு இருமல் வந்தால் ஒரு இரண்டு மாதம் இழுத்து அடித்து கடைசியில் எக்ஸ் ரே ப்ளட் ரிபோர்ட்எல்லாம் ஆனா பிறகு தானாகவே சரியாகிறது.

    இதை அலர்ஜிக் காப் என்று சொல்வார்கள்.

    எதுனாலே இந்த அலர்ஜி வரும் இருமல் வரும் என்று யாருக்குமே சொல்ல முடியாது.

    அதனாலே ஒரு அலற்ஜன் டெஸ்ட் எடுத்து விடுவது நல்லது.

    ராயப்பேட்டை லே ஒரு டாகடர் ஒரு 64 பொருட்களுக்கு அலர்ஜி இருக்கிறதா என்று கண்டு பிடிக்கிறார்.

    அதற்குள்ளே இல்லாத ஒரே விஷயம்.

    வீட்டுக்காரி.


    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்பு ஐயா உங்கள் வருகைக்கும், நகைச்சுவையான பின்னூட்டத்திற்கும்

      Delete
  14. Google இப்படி செய்து விட்டதே... இனிமேல் இந்தத் தேடலே வேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  15. மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நானும் கூகிளில் சில சமயம் சில வியாதிகளைக் குறித்துப் படித்து அறிந்தது உண்டு. என்றாலும் என்னோட உடம்புக்குப் பார்க்கவில்லை இன்று வரைக்கும். மத்தவங்களுக்காகப் படிச்சுச் சொல்லி இருக்கேன். சில சமயம் மருந்துகளின் விளைவுகளை அறியவேண்டிப் பார்த்தது உண்டு. ஆனால் கூகிளில் படிச்சுட்டு எனக்கு இதான் வியாதினு நீங்க முடிவு கட்டின விதம்!!!!!!!!!!!!!!!!! என்னத்தைச் சொல்றது!!!!!! படித்த பலருக்கும் இந்த கூகிளோஃபோபியா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. விபரீத புத்தி தான் எனக்கே நான் வியாதியை தீர்மானித்துக் கொண்டது.
      இறுதியில் All is well ஆனதும் ஒரு பெருத்த நிம்மதி.
      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி மேடம்.

      Delete
  16. நல்லவேளையா புராண, இதிகாச, வரலாற்றுத் தகவல்களுக்கு மட்டும் கூகிளை நாடுவதுனு வைச்சிருக்கேனோ, பிழைச்சேன்! :)))) மற்றபடி கூகிளை நம்பவே கூடாது. விக்கியிலும் பார்க்காதீங்க. அதுவும் நம்பிக்கைக்கு உரியது அல்ல.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம் உங்கள் மீள் வருகைக்கு.. நீங்கள் சொல்வது போல் நிறைய விஷயங்களுக்கு நாம் இண்டர்நெட்டைப் பார்க்காமல் இருப்பதே சுகம் தான்.

      Delete
  17. ப்ராங்கோ நிமோனியா வந்து அது வீசிங்கில் முடிஞ்சப்புறமா எனக்கு ஒரு இருமல் வரும் பாருங்க. அகில உலகமே நடுங்கும். அதோடு மாசக்கணக்கா வாழ்க்கை நடத்தி இருக்கேன். பத்ரிநாத் வரை கைலை வரை போயிருக்கேன். இப்போத் தான் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறப்பு மருத்துவர் கிட்டே போனப்புறமாக் கொஞ்சம் பரவாயில்லைனு சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. இருமலுடன் கைலை வரையா!....... மிக மிக தைரியமான பெண்மணி தான்.
      நானோ ஒரு சாதாரண இருமலுக்கு .வீட்டையே இரண்டு நாட்களில் அல்லோல கல்லோலப் படுத்தி விட்டேன்.
      நன்றி மேடம் உங்கள் கருத்துக்கு.

      Delete
  18. ஆனால் பாருங்க, உங்க மருத்துவர் எவ்வளவோ நல்லவர். கோபம் எல்லாம் இல்லாதவர். எங்க மருத்துவர் குடும்ப மருத்துவரா இருந்தாலும் இப்போக் காட்டும் சிறப்பு மருத்துவரா இருந்தாலும் யாரா இருந்தாலும் இப்படி என் சந்தேகத்தை கூகிளில் படிச்சேன்னு சொன்னா, ப்ரிஸ்கிரிப்ஷனையே தூக்கிப் போட்டுட்டு, நீயே வைத்தியம் பண்ணிக்கோனு சொல்லிடுவாங்க. :))))) அவங்க கிட்டே அவங்களாச் சொன்னாத் தான் இதெல்லாம் கேட்டுக்கலாம். மத்தபடி நாங்க எங்க சந்தேகத்தை எல்லாம் சொல்ல முடியாது. இப்படித் தான் ஒரு முறை தோள்பட்டை கை தூக்கினாலே நழுவ, ஆர்த்தோவிடம் அனுப்பிச்சாங்க. அவரிடம் அசட்டுத் தனமாக, என்ன ஆச்சு? மூட்டு நழுவிடுச்சா," னு கேட்க, அவருக்கு வந்ததே கோபம்.! மெடிகல் படிச்சிருக்கியானு கேள்வி! :)))))))

    ReplyDelete
    Replies
    1. கீதா மேடம். திட்டெல்லாம் நிறைய வாங்கிக் கொண்டேன். டாக்டரிடம் மட்டுமல்ல வீட்டினரிடமும் தான். அதையெல்லாம் நான் எழுதவில்லை ., என்னை குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாதே என்று தான்.
      நன்றி மேடம் நீங்கள் பலமுறை வந்து என் பதிவை பாராட்டி , கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு.

      Delete
  19. மருந்து எடுத்தால் ஒரு வாரத்திலும்
    மருந்து எடுக்காவிட்டால் தானாகவே ஏழுநாட்களிலும் சரியாகும் ..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

      Delete
    2. //மருந்து எடுத்தால் ஒரு வாரத்திலும்
      மருந்து எடுக்காவிட்டால் தானாகவே ஏழுநாட்களிலும் சரியாகும் ..!//

      மருந்து எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் ‘லொக்.... லொக்.... லொக்....’ ஒரு வாரம் இருந்து நம்முடன் உறவாடிவிட்டுத்தான், நம்மை விட்டுச் செல்லும் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள், போலிருக்கு. ;)

      Delete
  20. நாம் குழம்பி நம் மனதும் குழம்பி போவதற்கு முதல் முக்கிய காரணம் இன்டெர்னெட். சில சமயம், டாக்டர் எழுதி குடுத்த மருந்துகளின் பெயரை கூகிளில் குடுத்து இது என்ன, ஏது, எதற்கு என்று பார்க்கும் பொழுது, இரண்டு தலை வலி மாத்திரையையும் சேர்த்து வாங்கி இருந்திருக்கலாமோ என்று நினைக்கும் அளவுக்கு மண்டை குழம்பி போவதுண்டு!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மஹா. நீங்கள் சொல்வது போல் கூகுள் விசாரணையால் வேண்டாத தலிவலியை வாங்கிக் கொண்டது தான் மிச்சம். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மஹா.

      Delete
  21. ராஜி, உங்கள் பதிவு படித்து ரொம்பவும் சிரித்துவிட்டேன். நம்மில் பலபேர் இப்படித்தான் இருக்கிறோம். எனது பெண்ணிற்கு இரண்டாவது குழந்தை சிசேரியன். அவள் அதற்கு முன் இணையத்தில் அதைப் பற்றி படித்திருக்கிறாள். மருத்துவர் அவளுக்கு விட்ட 'டோஸ்' எனக்கும் அவளுக்கும் மறக்கமுடியாதது இந்த பிறவியில் மட்டுமல்ல; அடுத்த பிறவியிலும் கூட!
    அப்படியும் எனது கண் ஆபரேஷன் போது மருத்துவ மனையில் கொடுத்த கையேட்டைப் படித்துவிட்டு என் மனம் பட்ட பாடு!
    Ignorance is bliss - என்று இதைதான் சொல்லுகிறார்களோ?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சியடைதேன். உங்கள் net fasting முடிந்து நெட் உலா வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் நலம் என்றே நினைக்கிறேன்.

      நீங்கள் சொல்வது போல் நாம் எத்தனை திட்டு வாங்கினாலும் நம்மால் கட்டுப் படுத்தவே முடியாது.கூகுள் விசாரணையை.. நீங்கள் சொல்வது போல் அறியாமை சில சமயங்களில் வரமே!
      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  22. என்னமோ - எனக்கும் இரண்டு நாளா மனம் பாரமாக இருந்தது.
    உங்களுடைய பதிவைப் படித்ததும் கலகல என்று ஆகி விட்டது!..
    இருப்பினும் வாழ்க.. வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மன பாரத்தை , என் பதிவு லேசாக்கியிருக்கிறது என்றால் இதைவிட பெரிய மகிழ்ச்சியோ, பாராட்டோ என்ன இருக்க முடியும் துரை சார்.
      நன்றி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  23. ஹா..ஹா... எவ்வளவுசஸ்பென்சாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் பாவமாகவும் இருக்கிறது. டாக்டர்கள் சொல்லாமலேயே அடுத்தடுத்த டெஸ்டுகளுக்கு நீங்களே வழிவகுத்துக் கொண்டுவிட்டீர்கள் போல!

    ReplyDelete
    Replies
    1. //டாக்டர்கள் சொல்லாமலேயே அடுத்தடுத்த டெஸ்டுகளுக்கு நீங்களே வழிவகுத்துக் கொண்டுவிட்டீர்கள் போல!//
      டாக்டர்கள் வேண்டாம் என்று சொன்ன பின்னாலும் நானே வரவழைத்துக் கொண்ட உபத்திரவம் ஸ்ரீராம் சார் இது.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  24. கடைசியில் படம் வந்துடுச்சுபோல. பெயர் எழுத இடம் விட்டு, படம் அழகா இருக்குங்க !

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்கள்
      உபயம்
      தான்.

      Delete
  25. படத்திலே மலையை எல்லாம் ஒண்ணும் காணோமே? அதுவும் பனிமலை?????? அல்லது எனக்குத் தான் புரியலையா? மடிக்கணினி படம் தான் வந்திருக்கு. ஜலதோஷம் மட்டும் தான் ஒரு வாரம் அல்லது ஏழு நாட்களில் குணமாகும். (என்னோட அனுபவப்படி )மற்றபடி இருமல் வந்தால் பல சமயங்களில் மாதக் கணக்காக நீடிக்கும். ஒரு வாரத்தில் குணமாவது என்பதால் சும்மாத் தொண்டையிலே கீச் கீச்சாக இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. கீதா மேடம். பனி படர்ந்த மலை என்று நான். சொல்வது arattai என்று எழுதியிருக்கும் இடத்தில்இருக்கும் படம். தைக் கொண்டு வர தான் அந்த பாடு.
      மற்றபடி பதிவுக்கு மடிக்
      கணினி தான்.

      Delete
  26. //"இன்டர்நெட் தான் நம் விரல் நுனியில் இருக்கிறதே ! "என்கிற காரணத்தாலேயே கண்டதையும் ,படித்துக் குழம்பித் தவித்து , எட்டாயிரம் வரை செலவழித்த பின் தான் . "இனிமேல் எந்த ரிப்போர்ட்டையும் , அது என் பேரன் பேத்தி "பிராக்ரஸ் ரிப்போர்ட்டாகவே "இருந்தாலும் நான் படிக்கப் போவதில்லை//

    நல்லது.....

    பல நேரங்களில் இந்த மருத்துவ தளங்கள் ரொம்பவே குழப்புகிறது....

    ReplyDelete
  27. ஆமாம்
    நீங்கள் சொல்வது போல் குழப்பத்தை
    அஅதிகப்படுத்தும்
    தளங்கள் தான்.
    நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  28. இந்த இருமல் தொந்தரவு சில நேரங்களில் மூச்சே நின்றுவிடும் போலிருக்கும். வரட்டு இருமல். அலர்ஜியினால் என்று மருத்துவர் மாத்திரை கொடுத்தார். காரணம் தெரியவில்லை என்றால் இப்படித்தான் எல்லா டெஸ்டுகளும் செய்யச் சொல்லி நம் சொத்தையே அழித்து விடுவார்கள். நல்ல அனுபவப் பாடம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருஹ்த்டுக்கும் நன்றி GMB சார். என் பயம் தான் என்னை செலவழிக்க வைத்து விட்டது.

      Delete
  29. என் கணவர் சொல்லும் அட்வைஸ் கண்டதை படிக்காதே .
    எதையாவது படித்து விட்டு அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று புலம்புவேன் என்பாதால்.
    உங்களுக்கு நல்ல அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  30. வாழ்க்கையில் இதுபோல் சிறு துன்ப உணர்வுகளும், அதன் பின் "ஒண்ணுமில்லை"னு தெளிவடைந்து நாம் அடையும் "பெருமகிழ்ச்சி"யும் தான் நாம் அனுபவிக்கும் உண்மையான "நரகம்" "சொர்க்கம்" என்பதெல்லாம்!

    பக்கத்தில் கூகில் டாக்டர் இருக்கும்போது இதுபோல் ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது கடினம். ஆனால், நாம் எப்போதுமே "இது ஒண்ணுமில்லை" என்கிற பதில் மட்டுமே எதிர்பார்ப்போம். அந்த பதில்தான் நம்மை சந்தோஷப்படுத்தும்! மற்றவை எல்லாம் "அழுகை" வரவைக்கும். நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதுதெல்லாம் இதுபோல் தருணங்களிதான் நாம் உணருவோம். அதனால்தான் நமக்கு "கடவுள்" தேவைப்படுகிறார்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வருண் நீங்கள் சொல்வது உண்மையே.இந்த மாதிரி தருணங்களில் தான் நமக்குக் கடவுள் தேவைப்படுகிறார். நான் MTGற்கும் இதையே தான் சொல்ல நினைத்தேன்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  31. ஆஹா... இரவானால் படுத்தால் வரும் தும்மல் என்னை சென்ற மாதம் படுத்தியது போல உங்களையும் படுத்தி விட்டதா? லேபில் எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட் எடுத்தால் தரும் ரிப்போர்ட்டுகளை நானும் படித்துப் புரிந்து கொள்ளலாமே என்று முயன்று தோற்றதுண்டு நான். கூகிள்ல தேடிப் பாக்கலாமேன்னு என் (மர)மண்டைக்குத் தோணவேயில்லை...! அப்படி ஒருவேளை பாத்திருந்தா என்னா கஷ்டப்பட்டிருப்பேன்னு இப்ப உங்க அனுபவத்தைப் படிச்சதும் பளிச்சுன்னு புரிஞ்சிடுச்சு! டாங்ஸு!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை கணேஷ் நீங்கள் கூகுளிடம் விசாரணையை ஆரம்பிக்காமல் இருந்தீர்களே! என்ன மனநிலையில் இருப்போம் என்று இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்குமே!
      நன்றி கணேஷ் பதிவை ரசித்துப் படித்து கருத்திட்டதற்கு.

      Delete
  32. பயனுள்ள அரட்டை
    போகாத இடந்தனிலே போகவேண்டாம் என்பதுபோல்
    தேவையில்லாத விஷயத்தைத் தேடவேண்டாம் என
    எனக்கு ஒரு புது மொழி தங்கள் பதிவின் மூலம்
    பயனுள்ள சுவாரஸ்யமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.

      Delete
  33. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு.

      Delete
  34. வணக்கம் !
    வாழ்த்துக்கள் அம்மா .தங்கள் தளத்தினை வலைச்சர அறிமுகத்தில் அறிமுகம்
    செய்துள்ளனர் .நானும் அங்கிருந்து தான் வந்தேன் .http://blogintamil.blogspot.ch/2013/12/blog-post_8.html
    சிறப்பான நகைச்சுவைப் பகிர்வும் கண்டு ரசித்தேன் :))) .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்பாளடியாள் உங்கள் முதல் வருகைக்கும்,என்னைத் தொடர்வதற்கும்.
      நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கும்.
      நன்றி ! மீண்டும் வருக!

      Delete
  35. சுவையான பதிவு

    ReplyDelete
  36. நல்ல அனுபவம். பகிர்வுக்கு நன்றி. எதற்குத்தான் இன்டர்நெட் என்று இல்லையா​ ? அனுபவம் நல்ல பாடம். அதை அறியத்தருவது நல்ல பண்பு

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்