Thursday 11 April 2013

சம்மர் கேம்ப்






 சம்மர் கேம்ப் என்றதும் நான் எதோ சம்மர் கேம்ப்  
ஆரம்பிக்கிறேன் , அதைப் பற்றி எழுதுகிறேன் என்றோ  இல்லை எங்கோ கேம்ப் அடிக்கப் போகிறேன்  என்றோ யாரும்  அவசரப்பட்டு   யோசிக்க வேண்டாம்.

நான்  சம்மர் கேம்பிற்கு சென்று கற்றுக் கொண்டு அனுபவித்து  ஆனந்தித்தது பற்றி தான் இந்தப் பதிவு.

 குழப்பம்  அதிகமாயிருக்குமே! நான் சொல்வது   என் சிறு வயது நினைவுகளை.
விடுமுறை விட்ட  அன்று,   பள்ளியிலிருந்து  வீட்டிற்குள் நுழையும் போதே  புத்தகப்பை  மூலையை நோக்கிப்  பறக்கும். அதற்காக முதுகில்  அடியும்  பழுக்கும்.   பின்னே, புக்கைஎல்லாம் எறிந்தால்.............

மறுநாள்  காலையிலிருந்து  தெருவில் சிறுவர் சிறுமியர்  படை  கூடும்.    ஒவ்வொரு நாளும்   இன்றைக்கு எந்த வீட்டை  அதகளம்  பண்ண வேண்டும்  என்பதை  முடிவெடுப்போம்........ ஹூம் ....... அதற்குப்  பிறகு   அந்த வீட்டில் இருப்பவர்கள் தான் பாவம்.!


பெரும்பாலும்   பக்கத்து வீட்டு  விஜி வீடு தான் ,டார்கெட் .காலை   பத்து மணிக்கு  விஜி வீட்டிற்குள் நுழைவோம். விஜி அவள் அண்ணன் முரளி,நாங்கள் மூன்று பேர் , அடுத்த வீட்டு இந்து ,அதற்கடுத்த வீட்டு பிரேமா , இன்னும் பிற.......எழுதிக்கொண்டே தான் போகணும்.  எல்லோருமாக   விஜி  வீட்டில்  கூடுவொம்.

அதற்குப் பிறகு  களை  கட்டி விடும்  அவர்கள் வீடு. ஒரு பக்கம் கேரம் போர்டு
கன  ஜோராய்   நடக்கும். காணவும் ஜோர் தான். நன்றாக  விளையாடிக் கொண்டேயிருப்போம். திடீரென்று   "முரளி, நீ போங்கு அடிக்கிறாய் . என்று மெதுவாக சண்டை ஆரம்பித்து அடிதடி சண்டையில் முடியும். அதெல்லாம் சும்மா கொஞ்ச நேரம் தான்.  உடனே சமாதானப் புறாவும் பறக்க விட்டு  உடன் படிக்கையும்    வாயாலேயே      கையெழுத்திடப்படும்.

சரி கேரம் வேண்டாம் ,என்று எல்லோருமாக  ரவுண்டு கட்டி உட்கார்ந்து Trade
விளையாட ஆரம்பிப்போம்.  அது கொஞ்ச நேரம் .நீ  டில்லியில் வீடு வாங்கினாயா? நான்  கௌஹாத்தியில்  வீடு வாங்கி விட்டேன்.  ஓ   விஜி  பாப்பர்.(திவால்) .என்று ஒரே  கூச்சலும் குழப்புமுமாய் ஆகி விடும் .  அவர்கள் வீட்டு மாமியின்  தக்க  நடவடிக்கையின்  பேரில் கூட்டம்   அமைதியாய் பிரிந்து செல்லும். அது சும்மா கொஞ்ச நேரத்திற்கு தான்.

பிரிந்து போவது போல் பிரிந்து ,இந்துவின்  வீட்டில்  கூடும்.அந்த வீட்டு மாமி,"  பசங்களா,  என்ன இன்றைக்கு  நாங்கள் மாட்டிக் கொண்டோமோ? " என்பார்.அவர்கள் வீட்டில் என்ன charm  என்றால்  அவர்கள் வீட்டில் ஹாலில் ஊஞ்சல்  இருக்கும். 
இந்த  ஊஞ்சலையே    கப்பலாக நினைத்துக் கொண்டு  இந்த  சிறுவர் சேனை  "row row row a boat "  கப்பலோட்டிய   தமிழனாவார்கள். பின் அதே ஊஞ்சல்  விமானமாகி " சர் சர் "என்று பறந்து  பறந்து ஆடும். யாராவது ஒருவருக்கு தலை சுற்றி வாந்தி  வரும் வரை ஆடி விட்டு  அந்த மாமியின் திட்டு quota  முடிந்த பின்னர்  எல்லோரும்  அவரவர் வீட்டிற்கு சென்று ,மிச்ச  வசவுகளை வாங்கிக்  கொள்வோம்.

(பெரியவர்கள்  எங்கள்  மேல் பாசமாய்த்தான் இருப்பார்கள். இத்தனைகலாட்டாசெய்தால் திட்டாமல்..... அவ்வளவு தான் )

அப்பொழுதெல்லாம்  ரோடில் மாலை வேளைகளில் கிரிக்கெட்  விளையாட  எந்த தடங்கலும் கிடையாது.  இவ்வளவு டிராபிக் கிடையாது. மூன்று   விறகு கட்டைகள்    ஸ்டம்ப்   ஆகிவிடும் . இதில்  யாராவது ஒருவர்  கமென்ட்ரி வேறு கொடுக்கும் அலப்பறை எல்லாம் நடக்கும்.


பல்லாங்குழி,  நாலு மூலை தாச்சி (இதனுடைய  modern version  தான் musical chair என்று நினைக்கிறேன்), கில்லி,  கபடி, கோ  என்று எதையும்   விட்டு வைத்ததில்லை.
எல்லாம் எட்டாம் கிளாஸ் வரை தான்.

ஆனால் இவை கற்றுத் தந்த  வாழ்க்கைப்  பாடங்கள்   ஏராளம்   ஏராளம்.
வாழ்க்கையின் அரிச்சுவடிகளைக் கற்றுக்  கொடுத்தது  என்றால் மிகையில்லை.
எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள், ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம், வெற்றியைப் போன்றே தோல்வியையும் ஏற்கும்  மன்ப்பாண்மை  எல்லாவற்றையும் விளையாட்டிலேயே கற்றுக் கொண்டோம். 
பல விதமான குணாதிசயங்கள் உள்ள  மனிதர்கள் அவர்களை எதிர்கொள்ளும் பாங்கு எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்தது இந்த   எங்களுடைய  
Summer Camp.  

அப்பாடி........ தலைப்பை   கொண்டு வந்து விட்டேன்.

இந்த  சம்மர் கேம்ப்  ஒரு செலவில்லை. யாரும் அழைத்துப் போக வேண்டாம்.
கலர் பென்சில் வேண்டாம், சார்ட் பேப்பர்  வேண்டாம், பெவிகால் இல்லை,கலர் பேப்பர் இல்லை..........

ஆனால் கற்றுக் கொண்டதோ  அதிகமோ அதிகம். 

இந்த காலத்து சம்மர் கேம்புகளில்  கிடைப்பது என்ன?
குழந்தைகளுக்கு சுமையாகி விட்டதோ?
கொஞ்சம் சொல்லி விட்டுப் போங்களேன்...... 





paatti  stories இல்  இப்போது  Harichandran

image courtesy----google

29 comments:

  1. //இந்த சம்மர் கேம்ப் ஒரு செலவில்லை. யாரும் அழைத்துப் போக வேண்டாம். கலர் பென்சில் வேண்டாம், சார்ட் பேப்பர் வேண்டாம், பெவிகால் இல்லை,கலர் பேப்பர் இல்லை..........

    ஆனால் கற்றுக் கொண்டதோ அதிகமோ அதிகம். //

    ஆம் உண்மை. அந்த நாள் ஞாபகங்களை அழகாகக் பதிவு செய்து கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த அடிக்கும் வெயிலில் என் சிறு வயது தோழியைப் பார்த்தேன்.
      உடனே சிருமியானது போல் உணர்வு. அதன் பாதிப்பு இந்தப் பதிவு.
      நன்றி வைகோ சார் உங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்கும்.

      Delete
  2. இப்பவும் நம்மைப் போன்ற பதிவர்களுக்கு குடும்பத்தோட முகாம் நடத்தலாமே.நிச்சயம் அப்போதைவிட இப்போ இன்னும் நல்ல மகிழ்ச்சியாய் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா ஐயா.
      வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  3. பெயரில்லாத அந்த நாளைய சம்மர் காம்ப் பற்றிய பதிவு எனக்கும் எங்களது கோடை விடுமுறையை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது. எங்கள் கோடை விடுமுறை ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கத்தில் தான்.
    முக்கியப் பொழுதுபோக்கு சைக்கிள் விடக் கற்றுக் கொள்வதுதான்.
    கொள்ளிடத்தில் நேரம் போவது தெரியாமல் குளிப்பதும், கோவிலுக்குப் போவதுமாகக் கழியும். எங்கள் பாட்டி வீட்டிலும் ஊஞ்சல் உண்டு. அதில் ஏறி எங்கள் உறவுக்காரர்கள் இருந்த ஊர்களுக்குப் போவோம். தாயக்கட்டை, பல்லாங்குழி, புளியங்கோட்டை கேந்துதல் போன்ற விளையாட்டுக்கள் தான் அப்போதைய சம்மர் கேம்பில் கற்றுக் கொண்ட விளையாட்டுக்கள்.

    தினமும் பெருமாள் வீதி உலா வரும்போது வீதியை அடைத்து கோலங்கள் போடுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் போய் அவர்கள் போடும் கோலங்களை ரசிப்பதும்.....எங்கேயோ போய்விட்டேன், ராஜி!

    இப்போது

    ReplyDelete
    Replies
    1. அந்த சம்மர் கேம்ப் விளையாட்டெல்லாம் வழக்கொழிந்து போய் விட்டன. அப்பொழுது கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டமாய் இருக்கும். ஆனால் இப்போதோ அதுவே சுமையாகி விட்டதோ என்று தோன்றுகிறது.
      //எங்கேயோ போய்விட்டேன், ராஜி// எங்கேயோ போன நீங்கள் பதிவாக்குங்களேன் படித்து ரசிக்கிறோம்.

      நன்றி ரஞ்சனி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete

  4. ஒரு comparison -க்காக நான் எழுதி இருந்த ” அதிர்ஷ்டசாலிகள்’ படித்துப் பாருங்கள். ஓ அது அந்தக் காலம்.....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக படிக்கிறேன் GMB சார்.
      உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சார்

      Delete
  5. கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம் ஏராளம்.
    வாழ்க்கையின் அரிச்சுவடிகளைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையில்லை.
    எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள், ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம், வெற்றியைப் போன்றே தோல்வியையும் ஏற்கும் மன்ப்பாண்மை எல்லாவற்றையும் விளையாட்டிலேயே கற்றுக் கொண்டோம்.
    பல விதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள் அவர்களை எதிர்கொள்ளும் பாங்கு எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்தது இந்த எங்களுடைய
    Summer Camp. அருமையான மலரும் நினைவுகள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  6. //இந்த காலத்து சம்மர் கேம்புகளில் கிடைப்பது என்ன?
    குழந்தைகளுக்கு சுமையாகி விட்டதோ? சம்மர் கேம்ப் லே என்ன கிடைத்ததா ?கொஞ்சம் சொல்லி விட்டுப் போங்களேன்...... //


    நான் செலுத்திய பணத்துக்கு ரசீது தந்தார்களே !! அது போதாதா ...!!

    சுப்பு தாத்தா.


    ReplyDelete
    Replies
    1. //நான் செலுத்திய பணத்துக்கு ரசீது தந்தார்களே !! அது போதாதா ...!//!
      ஹா....ஹா....ஹா....

      நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு

      Delete
  7. ...ம்... இனிய நினைவுகளை நினைத்து சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்... அது ஒரு பொற்காலம்...

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு கனாக்காலம் தனபாலன் சார்.
      நன்றி.

      Delete
  8. ஒரு விஷயம், அந்தக் காலத்தில் யார் வீட்டிலும் டி.வி. இல்லை, ரேடியோவும் சில வீடுகளில் தான் இருக்கும். நன்றாக விளையாட முடிந்தது. இந்தக் காலத்துக் குழந்தைகள், உண்மையிலேயே பாவம் தான்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .இந்த டிவி, வீடியோ கேம்ஸ் எல்லாம் குழந்தைகளின் நேரத்தை, ஆர்வத்தை திருடித் தான் விட்டன. உண்மையே!

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  9. அந்த நாள் நினைவுகள் எனக்குள்ளும் மலர்ந்தது! கேரம் போர்டிலேயே பாதி நாள் கழிந்ததும், கோலிக் குண்டும், பம்பரமும் மீதி நாளை நகர்த்தியதும், ஃபுட்பாலும், கிரிக்கெட்டும் சற்றே வளர்ந்தபின் ஆடிய விடுமுறைகளும்...! இனி வராத வசந்த நாட்கள் அவை!

    செல்லப்பா சொல்லியிருப்பது ஒருவகையில் உண்மை! அந்நாளில் தொலைக்காட்சியும், முக்கியமாய்... கம்ப்யூட்டர் கேம்களும் இல்லை. இப்பல்லாம் கம்ப்யூட்டர் கேம்லகூட பைக்ல போறவனை உதைக்கறதும், துப்பாக்கியால சுட்டுத் தள்ளறதும் ஆக ஒரே வன்முறைதான்! பத்தாக்குறைக்கு ‘அவனை நாசமாக்கி நடுத்தெருவுல நிறுத்தி கண்ணீர் சிந்த வெக்காம விடமாட்டேன்’னு யாராவது ஒருத்தர் அலர்ற பாழாப் போன சீரியல்கள்! எல்லாம் சேர்ந்து இன்றைய இளைய தலைமுறையைப் பார்த்தாலே எனக்குப் பரிதாபம்தாங்க எழுகிறது!

    ReplyDelete
    Replies
    1. பாவம் தான் இந்தக் காலக் குழந்தைகள்.தாங்கள் என்ன மிஸ் செய்கிறோம் என்று தெரியாமல் இருப்பது ஒரு வகையில் திருப்தி தான் என்று சொல்ல வேண்டும்.
      கம்ப்யுட்டரும் டிவியும் அவர்களை ஆக்கிரமித்து விட்டன.

      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  10. அதுசரி... ஒவ்வொரு வீட்டிலருந்தும் யாராவது ஒரு பொருள் கொண்டு வந்து தனியாக ஸ்வீட்டோ இல்ல பொங்கலோ சமைச்சுச் சாப்பிடற விளையாட்டு உங்க பால்யத்துல நடந்ததில்லையா ராஜி மேடம்?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உண்டு. அது ஒரு கனாக்காலம் தான் சார். Time machine ஒன்று இருந்தால் அந்த வயதை விட்டு வெளியே வரவே மாட்டேன்.
      நன்றி

      Delete
  11. ஆம் செல்லப்பா சார் நான் படிக்கும் போது நினைத்தை சொல்லிடார் இந்த தொல்லை காட்சியின் ஆதிக்கம் குறைந்தால் அந்த பக்கம் வீடியோகேம் அதையும் விட்டால் கம் ப்யூட்டரில் விளையாடு இல்லை இருக்கவே இருக்கு மொபையிலில் நட நட என்று சொல்லி நடக்கவேறு பழக வேண்டிய அளவுக்கு ஒரே இடத்தில ஜாம் ஆகிவிடும் நிலைமை இன்று
    அந்த நாள் வாராது அது பொற்காலம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மலர் நாம் அதையெல்லாம் கடந்து வந்து விட்டோம். மீண்டும் சிறு பிள்ளையாக வேண்டும் என்று அடம் பிடித்தால் பிழை தானே!
      நன்றி உங்கள் கருத்துக்கு மலர்.

      Delete
  12. நீங்க சொல்லித்தான் நம்ம ஊரிலும் இந்த 'சம்மர் கேம்ப்' இருப்பது தெரிய வருகிறது.

    "இந்த காலத்து சம்மர் கேம்புகளில் கிடைப்பது என்ன?"_____குழந்தைகளை வருடம் முழுவதும் ஏதாவது ஒரு இடத்தில் அடைத்து வைத்தே தீருவது என்ற எண்ணம்.

    'உங்க சம்மர் கேம்ப்'ஐ படித்ததால் என்னுடைய சிறு வயது நாட்களும் நினைவுக்கு வருகிறது.தினம்தினம் மாலை பள்ளி விட்டதும் 'சம்மர் கேம்ப்'தான்.நினைக்க நினைக்க மகிழ்ச்சியான‌ நாட்கள்.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,
      இங்கு இந்த aping the west என்று சொல்கிறார்களே அதெல்லாம் கண ஜோராய் நடந்தேறுகிறது.இது மட்டுமா? எவை எல்லாம் நமக்குக் கேடோ அவையெல்லாம் அழகாய் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறது.
      pizza,burger, living together....என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
      எல்லாம் காலத்தின் கோலம்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் வந்த வேண்டாத இலவச இணைப்புகள்.

      நன்றி சொல்ல மறந்து புலம்புகிறேன் பாருங்கள்
      நன்றி சித்ரா, உங்கள் கருத்துக்கு

      Delete
  13. அப்போதைய கோடை விடுமுறை இப்போதைய கம்ப்யூட்டர் கேம்ஸிலும், சம்மர் கேம்பிலும் நிச்சயம் வராது!

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  14. பல விதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள் அவர்களை எதிர்கொள்ளும் பாங்கு எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்தது இந்த எங்களுடைய
    Summer Camp. //

    ஆம் , உண்மை.
    எவ்வளவு குதுகலம் சிறு வயதில் ! ஒரு விளையாட்டு முடிந்தால், அடுத்து என்ன என்று கேட்டு அடுத்த விளையாட்டு என்று தொடர்கதையாக மாலை வீட்டுக்கு அம்மா கூப்பிடும்வரை மகிழ்ச்சியாக விளையாடுவோம். வெயில் , மழை எல்லாம் பொருட்டே இல்லை.
    அந்த நாளும் வந்திடதோ என்று மகிழ வைக்கும் நாட்கள்.
    அருமையான மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.



    ReplyDelete
  15. //அம்மா கூப்பிடும் வரை // கூப்பிட்டால் வந்து விடுவோமா என்ன?
    ஆமாம் நீங்கள் சொல்வது போல் அந்த நாளும் வந்திடாதோ?
    நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

    ReplyDelete
  16. இந்த அருமையான் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.
    வாழ்த்துக்கள்.

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்