Thursday 4 December 2014

'சார்' ஆன தாத்தா



google image






பேப்பர் ..... பேப்பர்..... பேப்பர்......

 வாரப் பத்திரிக்கையிலிருந்து,  என் கவனம் பேப்பர்....பேப்பர் என்று கூவிக் கொண்டு செல்பவரை  நோக்கித் திரும்பியது. நரைத்தத் தலை , அழுக்கேறிய லுங்கி,  சாயம் வெளுத்த சட்டை , தலையில் ஒரு கட்டுப் பழைய பேப்பர்  சகிதமாய் ஒரு வயதான மனிதர்   நடந்துக் கொண்டிருந்தார்.  பார்க்கப் பாவமாயிருந்தது.

பழைய பேப்பர் என்னவோ வீட்டில் இருந்தது  போட. ஆனால் இந்த மாதிரி ஆட்களைக் கூப்பிடுவது  சற்றே இப்பொழுதெல்லாம் கொஞ்சம் பயம் தான். பேப்பர் எடுக்கும் சாக்கில்  உள்ளே வந்து திருடுவதற்கு நோட்டம் விட்டாலோ, அல்லது திருடவே வந்து விட்டாலோ என்கிறப்  பயம் தான். நான் அந்த மனிதரைக் கவனிப்பதை அந்த மனிதரும் பார்த்து விட்டார்.

" பழைய பேப்பர் இருந்தாப் போடுங்கம்மா". என்று சொல்லி விட்டு "பிளாஸ்டிக், இரும்பு எல்லாம் கூட எடுப்பேன்"  என்று உபரியாய்   சொல்லவும், உள்ளே டிவிட்டரில்  சுவாரஸ்யமாய் ஆழ்ந்திருந்த என்னவர் , உள்ளேயிருந்து எட்டிப் பார்த்தார்.  தெருவில் போகிறவர்களை  எல்லாம் கூப்பிடாதே . நமக்கு வீ ட்டு வேலை செய்யும் கல்புவிடமே கொடுத்து விடு. அவள் ஏதோ பணம் வாங்கிக் கொள்ளட்டும்.  ,
 " தெருவில் சும்மாப் போகிற வம்பை  கூப்பிட்டு உள்ளே விடாதே " என்கிற  எச்சரிக்கையும் வந்தது என்னவரிடமிருந்து.

பேப்பர் காரரைப் பார்த்து நான், " ஒன்னும் இல்லைப்பா" என்றேன்.

மறு நாளும் அதே நேரத்திற்கு அதே பேப்பர் குரல் .  அதற்கடுத்த  நாளும்.... என்று சலிக்காமல் பேப்பர் எடுப்பவர் எங்கள் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

தினம் காலைப் பத்தரையிலிருந்து பன்னிரெண்டிற்குள்  பேப்பர் குரல் கேட்கும். அதே அழுக்கு உடைகள் தான்.  முதுகோடு ஒட்டிய வயிறு  , என்னை இம்சைப் படுத்தும்.

" பாவம். இந்தப் பேப்பர் எடுக்கும் தொழிலில் எவ்வளவு வந்து விடும்? இந்த மனிதருக்குத் தான் எத்தனை  நம்பிக்கை?  இதில் எப்படித்தான் குடும்பம் நடத்த  முடியும்? விற்கிற விலை வாசியில் என்னத்தை சாப்பிட முடியும்? " என்று என் கணவரிடம் அங்கலாய்க்கவும்,

அவரோ, " ஆமாம். உனக்கு என்னைத் தவிர அத்தனைப் பேரும் பாவம். நானும் சாப்பிட்டு எத்தனை நாளாச்சுத்  தெரியுமா ? "  என்று சொன்னார். என்ன உளறுகிறார் இவர் என்று நான் பார்க்கவும்   "தவலை வடையை  சாப்பிட்டு எத்தனை நாளாச்சு என்று சொல்ல வந்தேன்." எவ்வளவு  நாளாய் கேட்கிறேன்? கேட்டால் டாக்டர், டயட் என்கிறாய்?  " என்று  அவர் குறைப் பட்டுக் கொண்டார்.

தினமும் பேப்பர் காரர்  தெரு வழியாக செல்வது வழக்கமாச்சு  .  நம்பிக்கைத் தளராமல் எங்கள் வீட்டருகில் வந்ததும்  இன்னும் இரண்டுக் குரல் சேர்த்தே கூவுவார்.
 நானும் அவரைப் பார்த்துப் பரிதாபப் படுவதும்  தொடர்கதையானது.

ஒரு நாள் என் கணவர் கேட்டார்," ரொம்பவும்  பரிதாபப் படுகிறாயே. பேசாமல் அவரிடமே  பேப்பரைக்  கொடுத்து எடுத்துக் கொள்ள சொல். ஆனால் நீயே கேட்டருகில் கொண்டு போய் கொடுத்து  விடு என்று சொல்லவும்  , எனக்கும் அது சரியெனப் படவே அவரைக் கூப்பிட்டு, பழைய பேப்பர்  , பால் கவர், பழைய பிளாஸ்டிக் பக்கெட் என்று எல்லாவற்றையும்  அவரிடம் போட்டு விட்டேன் . பேப்பருக்குப் பணம் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. மற்ற சாமான்களுக்கு ஒரு சொற்பத் தொகைக் கொடுத்து  விட்டுப் போனார்.
ஆனாலும் மனதிற்குப்  பெரியத் திருப்தியாக இருந்தது. ஒரு மனிதருக்கு என்னால் ஆனது ஒரு நாள் சாப்பாடு கொடுத்து விட்டதாக( பெருமையாக ) எண்ணிக் கொண்டேன்.

அன்றிலிருந்து இரண்டு  மாதத்திற்கு ஒரு முறை பழையப் பேப்பர் காலியாகிக் கொண்டிருந்தது.எனக்கும்  பரம திருப்தி. பேப்பரும் காலியாகிறது. என்னாலான  உதவி அந்த வயதான  மனிதருக்கு என்று எண்ணிக் கொண்டேன்.( பேப்பருக்குக் காசு வாங்கிக் கொள்ளவில்லை . அதில்  எனக்குப் பெருமையோ பெருமை. அதை ஓரிருவரிடமும் பெருமையடித்துக் கொள்ளவும்   தவறவில்லை.)

அடிக்கடி  பேப்பர் தாத்தா, வீட்டிற்கு வர ஆரம்பிக்க,  எங்களுடன்  நன்றாகவே  பழக ஆரம்பித்தார்.  வராண்டா வரை அவர்  வர ஆரம்பித்தார். நாளாக  நாளாக அவர் குடும்பக் கதைகளை  அவிழ்த்து விட ஆரம்பித்தார்.
 அவர் மனைவிக்கு அறுவை சிகிச்சை ஆனது,  அவருக்கு அடிக்கடி வரும் நெஞ்சு  வலி ... என்று சொல்லிக் கொண்டிருப்பார்.  அவருக்கு நானும்  மோர் கொடுத்து  உபசரிப்பது வழக்கமானது..

 என்னவரோ"  இந்த மனிதர் இப்படி குறைகளாய் அவிழ்த்து விடுகிறாரே. நம் வீட்டரசிக்குப்   பாவம் தாங்காமல்  இவள் பாட்டிற்குப் பேப்பரையும்  போட்டு,  அதற்குப் பணமும் கொடுத்து அனுப்பி விடப் போகிறாள்  என்று  பயம்.

ஒரு நாள்  பர்சிலிருந்து " இந்தப் போட்டோவைப் பாரும்மா...என் பேத்தி "  என்று காண்பித்தார்.

அந்தப்பெண்  சிவப்பு சூடிதாரில் அழகாகவே இருந்தது.  அலை பாயும் கூந்தலை  இறுக்கி ஒரு ரப்பர் பேண்டிற்குள் சிறைப் படுத்தி இருந்தாள் .காதுகளிலும், கைகளிலும், பிளாஸ்டிக்  அணிகலன்கள் தான் ஆனாலும் வறுமையின் சாயல் தெரியவில்லை. பாவம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்களோ என்றிருந்தது எனக்கு.

" என்னப் படிக்கிறாள்? "

 " B.Sc.., ம்மா "

" பையன் பீஸ் கட்டி படிக்க வைக்கிறாரோ? " என்றேன்.

" ஆமாம்,"

" உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்  தாத்தா? "( இப்பொழுது நான் அவரைத்  தாத்தா என்று கூப்பிடும் அளவிற்கு சகஜமாகியிருந்தோம்.. )

"எனக்குக் குழந்தைகள்  இல்லம்மா..... "

"பின்னே..... இது யாரு? பேத்தின்னு சொல்றீங்களே தாத்தா? "

" அதுவா.....சுமித்ராவோட அப்பா  என்  தத்துப் பிள்ளை."

" சுமித்ரா......? "

" அதான் என் பேத்தி......."

 ஆச்சர்யம் கலந்தக் சுவாரஸ்யமாயிருந்தது எனக்கு.

அதற்குள்  டெலிபோன் மணி ஒலிக்க . "கொஞ்சம் இருங்கத் தாத்தா" என்று சொல்லி விட்டு போனை எடுக்க நான் உள்ளே கிளம்பும் போது .  " நான் நாளைக்கு  வரேம்மா  " என்று சொல்லி, என் சுவாரஸ்யத்தை அதிகமாக்கி விட்டு நகர்ந்தார்.

 சர்வ சாதாரணமாகத் தத்துப் பிள்ளை என்கிறார். பேத்தி என்கிறார். இவருக்கே சாப்பாட்டிற்கேக் கஷ்டம்( என்று நினைத்துக் கொண்டிருந்தேன்).  இந்தக் கஷ்டத்தில் தத்து எடுத்திருக்கிறார். "எத்தனைப் பெரிய மனது இந்தக் மனிதருக்கு "  மனதில் அவர் மேல்  அதிகமான மரியாதைத் தானாக  வந்தது.

அடுத்த முறை வரும் போது இவர் தத்து எடுத்தக் கதையைக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்குப் பிறகு  கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து நாட்கள் ஆளைக் காணவில்லை.  " வீடு  எங்கே என்றுக் கேட்காமல் போனோமே ? " என்று அங்கலாய்த்துக் கொண்டேன்.

" ஏன், வீட்டிற்குப் போய் விசாரிக்கப் போகிறாயா? " கணவர்  நக்கலடித்தார்.

சில நாட்களானது. பேப்பர் காரத் தாத்தாவும் என் நினைவடுக்குகளில் இருந்து மெல்ல நழுவ ஆரம்பித்திருந்தார்.

அன்று காலை ரசத்திற்குக் கறிவேப்பிலைத் தாளித்துக் கொண்டிருந்த போது , லேசாகக் கமறல் வந்தது. கமறலுடன், எங்கோ பேப்பர்  என்கிற சத்தம் கேட்டது போல் இருந்தது. கமறலை அடக்கிக் கொண்டு கவனிக்கையில்  பேப்பர்.... பேப்பர்  ..... என்கிற சத்தம் துல்லியமாய் கேட்டது. கேசை அணைத்து விட்டு

வெளியேப் போய்  பார்த்தால் , அட ..  . பேப்பர் தாத்தா..." தாத்தா... என்ன ஆச்சு உங்களுக்கு? இவ்வளவு நாட்களாகக் காணோமே " என்று விசாரித்தேன்.

" இல்லம்மா ஜுரம் வந்துப் படுத்து விட்டேன். உடம்பு சரியாக நாளாச்சு. .வயசாச்சு இல்லையா  அதான். "

" சரி. உள்ளே வாங்கத் தாத்தா." உடம்பு சரியில்லை என்கிறாரே என்று " இட்லி இருக்கு சாப்பிடுகிறீர்களா  ? " என்று கேட்டு ஒரு தட்டில் நாலு இட்லியும் சட்னியும் வைத்துக் கொடுக்க  " ஆசையாய் சாப்பிட்டார். சாப்பிட்டத் தட்டை வெளியே இருக்கும் குழாயில் கழுவி வைத்து விட்டு அவர் " அப்பாடி  ... " என்று உட்காரவும்.

நானும் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து, அவர் தத்துக் கதையை கேட்டுக் கொண்டேன்.  வீட்டருகிலேயே அம்மா இல்லாத பையன் , சித்திக் கொடுமை, அவனுடைய அப்பாவிடம் சொல்லி இவர் வீட்டிலேயே தங்கிப் படித்து  இன்று மாருதி சர்வீஸ் சென்டரில் கார் மெக்கானிக்  . அவனுக்கு இவரே கல்யாணம் செய்து வைத்து  பேரன் பேத்தியும் பார்த்து  விட்டார் இந்தக் கிழவர். ", நீங்கள் ஏன் தாத்தா இந்த தள்ளாத வயதில் பேப்பர் எடுத்துப் பிழைக்க வேண்டும்? பையன் தான் நல்ல சம்பாதிக்கிறானே"  என்று என் ஆதங்கத்தை சொல்லவும்.

" என் கையே  எனக்கு உதவிம்மா. அதோடு வீட்டில் சும்மா உட்கார்ந்து என்ன செய்ய ? " என்கிற பேச்சில் தன்னம்பிக்கை  வெளிப்பட்டது.

இரண்டு மூன்று  மாதம் ஆகியிருக்கும். ஒரு நாள் பேப்பர் தாத்தா வந்தார்,
 " அம்மா  என்னமோ  பான்  கார்டாமே ? அதை எங்கே போய்  வாங்க வேண்டும்.? " என்று தாத்தா கேட்க ,
நானோ அசால்டாக  அவர் ஆதார் கார்டைக் கேட்கத் தெரியாமல் பான்  கார்டு என்கிறார் என்று நினைத்துக் கொண்டு  " ஆதார் கார்டு மையம்  அங்கங்கே இருக்கிறதே. அங்கே  போய் கேட்டால் சொல்வார்களே . அடுத்தத்  தெருவில் கூட ஒன்று இருக்கிறது தாத்தா? " என்று நான் சொல்ல.

" இல்லம்மா... பான்  கார்டு " என்று  மீண்டும் சொன்னார்.

 " பான்  கார்டா , ரேஷன் கார்டா ? " நம்பிக்கையில்லாமல் நான் மீண்டும் கேட்க

அழுத்தம் திருத்தமாகப் பதில் வந்தது அந்த மனிதரிடமிருந்து," பான்  கார்டு "

"அது எதுக்குத் தாத்தா  உங்களுக்கு ? " என்றேன் சர்வ  அலட்சியமாய் .

"இல்லம்மா  எனக்கு இடம் ஒன்னு இருக்கு அதை விற்க வேண்டும். அதுக்கு  பான்  கார்டு வேணுமாம்."

நான் எங்கோ ஒரு ஒட்டப் பிடாரம், அல்லது கரிசல் காடு என்கிற இடத்தில் ஒரு கோவணம் அளவு இடம் இருக்கப் போகிறது  என்று நினைத்துக் கொண்டு.

" அப்படியா.. தாத்தா.... பான்  கார்டு எப்படி வாங்கவேண்டும் என்று எனக்குத் தெரியாதே . ஆமாம் எந்தக் கிராமம் உங்களுடையது. எவ்வளவு  நிலம் இருக்கு ? "  நான் கேட்ட கேள்வியில்  ஒரு ஏளனம் தொனித்தது.

அமைதியாய் அந்த அழுக்கு லுங்கிக்காரர் சொன்னார்," இங்கே தாம்மா ஆவடியில்  நிலம்.  அந்தக் காலத்தில் நான் ரயில்வேயில் தினசரிக் கூலியாக இருந்த போது ,  கடன் வாங்கித்  தான் இடம் வாங்கிப் போட்டேன். அந்தக் கடன் தீர்வதற்கு நான் பட்டப் பாடு எனக்குத் தான் தெரியும் . "

 " ஆவடியிலா?....." ஆச்சர்யம்  தொனித்தது என் கேள்வியில் .

"என்ன விலை இப்பொழுது? '

" ஒரு கோடிக்குக் கேக்கறாங்கம்மா . "
 " ஒரு கோடியா...... " திறந்த வாய், மூட சற்று அவகாசம் தேவைப்பட்டது.

இந்தக் கோடீஸ்வரருக்கா......  நான்  ஒரு வேளை சாப்பாடு போட்டதாக பீற்றிக் கொண்டேன். என்  மேல் எனக்கே  சற்றுக் கோபமே வந்தது. உருவத்தைக்   கொண்டு தப்புக் கணக்குப் போட்டேனே. இவருடைய உழைப்பு போற்றப்பட வேண்டியது . பரிதாபப்பட வேண்டியதில்லை என்கிற உண்மை புரிந்தது.

 அவருக்குத்  தான்   எவ்வளவுப் பெரிய பணக்காரர் என்றுத் தெரியவில்லையா? இல்லை   இளமையில் கஷ்டப்பட்டதின் விளைவாக பணத்தின் அருமை  உணர்ந்ததால்  எளிமையாய்  இருக்கிறாரா?புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

 சட்டென்று சமாளித்துக் கொண்டு

"பான்  கார்டு எங்கே வாங்க வேண்டும் என்றுக் கணவரிடம் கேட்டு சொல்கிறேன் சார். " என்றேன்.

" தாத்தா" சட்டென்று  " சார் " ஆக மாறினார்.(எல்லாம் பணம் படுத்தும் பாடு)

34 comments:

  1. பணம் தான் எப்படி எல்லாம் மாற்றுகிறது..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  2. இந்த நாளில் யாரையும் சட்டென நம்பிவிட முடியாதுதான். கடைசி வரியில் கவர்ந்துவிட்டீர்கள்.

    உழைத்தவர்களால் சும்மா இருக்க முடியாது. இந்தத் தாத்தாவும் அப்படித்தான் இருப்பாரோ!

    ReplyDelete
    Replies
    1. தாத்தா உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார் சித்ரா. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

      Delete
  3. உழைப்பால் உயர்ந்தவர். தன் கையே தனக்குதவி என்றிருப்பவர். இப்படி ஒருத்தரை சமீப நாட்களில் நாங்களும் பார்த்தோம். வீட்டுக்குப் பெயின்ட் பண்ண வந்த பெயின்டர்களில் ஒருவர். வேலை எல்லாம் முடிந்து வீட்டைச் சுத்தம் செய்தும் கொடுத்தார். கழிவறை உட்பட. அவர் பையர் டிசிஎஸ்ஸில் இஞ்சினியர். பெண்ணும் சி.ஏ. படிக்கிறாள். சி.ஏ. இன்டர் முடித்திருக்கிறாள். ஆனாலும் அவர் நம்மிடம் காட்டிய பணிவு! சொல்ல முடியாத அளவுக்குப் பணிவு. இப்படியும் மனிதர்கள்!

    ReplyDelete
    Replies
    1. பேப்பர் தாத்தாவை விடவும் எளிமையாகத் தெரிகிறாரே உங்கள் பெயிண்டர். சில சமயங்களில் சில மனிதர்கள் நம்மை ஆச்சரய்படுத்துகிறார்கள் கீதா மேடம். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  4. Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  5. Replies
    1. தமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  6. என் கையே எனக்கு உதவி - இதற்கு முன் எத்தனை கோடி இருந்தால் என்ன...? போனால் என்ன...?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போள் கைக்கு முன்னாடி,லக்ஷம், கோடி எல்லாமே வெறும் தூசு. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  7. வேகமாகப் போன வண்டி - சடாரென திரும்பியது போலிருக்கின்றது!..

    //இளமையில் கஷ்டப்பட்டதின் விளைவாக பணத்தின் அருமை உணர்ந்ததால் எளிமையாய் இருக்கிறாரா?..//

    உண்மை இதுவே!..

    விடியற்காலையில் நல்ல விஷயம்!.. படித்தாயிற்று!..
    மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  8. இப்படி கடந்து வந்த பாதையை பெரும்பாலும் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அருமையான கதை,,,! ( உண்மைக் கதை,?)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பாலு சார்.

      Delete
  9. தாத்தா சார் ஆனது அருமை.
    உழைப்பு, எளிமை, உதவும் மனபான்மை என்று சாரின்மேல் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி

      Delete
  10. தோற்றம் கண்டு யாரையும் எடை போட்டு விட முடியாது..... உணர்ந்து கொள்ள வைத்தது பதிவு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி .

      Delete
  11. சார் என்பதை விடவும் தாத்தா என்பதுதான் அவர் மனத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கும். நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்ற பாடல் வரிகள்தாம் நினைவுக்கு வந்தன. சரளமான சுவையான எழுத்துநடைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா . அவருக்கு ஒரு கோடி சொத்து இருக்கிறது என்று தெரிந்ததுமே, தன்னிச்சையாக சார் ஆகி விட்டார். நீங்கள் சொல்வது போல் தாத்தா என்றால் தான் நெருக்கமாக உணர்வார். உண்மை

      Delete
  12. தாத்தா, சார் ஆனது இருக்கட்டும் மேடம். ஆமை வடை கேட்டிருக்கிறேன், அது என்ன தவலை வடை? புதிதாக இருக்கிறதே?

    ReplyDelete
    Replies
    1. //http://geetha-sambasivam.blogspot.in/2010/07/blog-post.html//

      ஆறுமுகம் அய்யாசாமி, தவலை வடைக்கான குறிப்புகள் மேற்கண்ட சுட்டியில். தென் மாவட்டங்களில் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தால் தவலை வடையும், கோதுமை அல்வாவும் தவறாமல் கொடுத்து உபசரிப்பார்கள். மாப்பிள்ளைக்கு அளிக்கும் விருந்தில் தவலை வடை, கோதுமை அல்வா, போளி ஆகியன முக்கியமாகப் பரிமாறப்படும்.

      தவலை அடைனும் ஒண்ணு இருக்கு. கிட்டத்தட்ட இதே செய்முறைனாலும் அரிசி, பருப்பு வகையறாக்களைக் குருணையாக உடைத்துக் கொண்டு உப்புமாப் போல் கிளறிக் கொண்டு பின்னர் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்க் கீற்றுகள் சேர்த்துக் கொண்டு வெண்கலப்பானையில் அடை போல் தட்டி மூடி வைத்து வேக விட வேண்டும். :))) இவை எல்லாம் பாரம்பரிய உணவுகள். :))))

      Delete
    2. ஆறுமுகம் சார்,
      கீதா மேடம் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
      தவலை வடை நான் செய்யும் முறை சொல்கிறேன். செய்தோ, அல்லது வீட்டில் செய்ய சொல்லியோ சாப்பிட்டுப் பாருங்க,
      பச்சரிசி ஒரு டம்ளர்.
      கடலைப் பருப்பு, கால் டம்ளர்,
      துவரம் பருப்பு கால் டம்ளருக்கு சற்றே குறைவாக
      உளுத்தம் பருப்பு மூன்று ஸ்புன்
      பெருங்காயம் சிறிது.
      சிவப்பு மிளகாய் உங்கள் காரத்திற்கேற்ப .
      மிளகு அரை ஸ்புன்(உடைத்து வைத்ததுக் கொள்ளுங்க)
      உப்பு தேவைக்கேற்ப.
      கடுகு, உளுத்தம்பருப்பு சிறிது. தாளிக்க
      எண்ணெய் வடை சுடுவதற்கு.


      அரிசி, பருப்பு வகைகளை நான்கு மணி நேரம் ஊற வைத்த பின்னர், உப்பு,பெருங்காயம், மிளகாயுடன் மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்( நைசாக அரைக்கக் கூடாது). பின்பு சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கரிவேப்பிலை அரைத்த மாவில் தாளித்து. கொட்டவும்.
      பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சின்னக் கரண்டியால் மாவை ஊற்றி எடுக்கவும். சின்ன சின்னதாக ஊற்றினால் நன்கு வெந்து மேலே வரும். சூடாக சாப்பிடவும். தேங்காய் சட்னி நல்ல பொருத்தம் இதற்கு. சாப்பிட்ட பின் எனக்கு கருத்து அவசியம் தெரிவிக்க வேண்டும்.

      Delete
  13. என்னதான் சொத்து இருந்தாலும், அவர் அதனை அனுபவிக்காத வரை, கையில் பணமாக மாற்றி வைத்துக் கொள்ளாதவரை அந்த மனிதர் ஏழைதான். அந்த இடத்தை விற்றால்தான் கோடீஸ்வரர். அதுவரை அவர் இருந்தும் இல்லாதவரே! நீங்க்ள் இதுநாள் வரை ஒரு இல்லாதவருக்குத்தான் உதவி செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மையே தமிழ் சார். உங்கள் வருகைக்கும், ஆறுதலானக் கருத்துரைக்கும் நன்றி தமிழ் சார்.

      Delete
  14. கோடி கைக்கு வரும் வரை அவர் ஏழைதானே/அன்றாடப்பிழைப்பிற்கு பேப்பர் எடுத்துத்தானே ஆக வேண்டும்?

    ReplyDelete
  15. அப்படியே கோடிகள் கைக்கு வந்தாலும் கூட உட்கார்ந்து சாப்பிட்டால் மலையும் கரையும் என்பார்கள்/உண்மைதானே?

    ReplyDelete
  16. உழைப்பு தான் என்றும் அழியாதது..... குந்தித் தின்றால் குன்றும் மாளும்...

    ReplyDelete
  17. அம்மா...

    பதிவின் முடிவு என்னை சற்றே நிலைகுலைய வைத்துவிட்டது. உங்களின் சுய பகடியுடன் கூடிய எழுத்து நடை அற்புதம்.

    செய்யும் தொழிலை வைத்தோ அல்லது உடைகளை பார்த்தோ சட்டென ஒருவரை எடைபோட்டுவிடுவது நமது சமூக தவறுகளில் ஒன்று.

    நன்றியுடன்
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  18. ////" பாவம். இந்தப் பேப்பர் எடுக்கும் தொழிலில் எவ்வளவு வந்து விடும்? இந்த மனிதருக்குத் தான் எத்தனை நம்பிக்கை? இதில் எப்படித்தான் குடும்பம் நடத்த முடியும்? விற்கிற விலை வாசியில் என்னத்தை சாப்பிட முடியும்? " என்று என் கணவரிடம் அங்கலாய்க்கவும்,

    அவரோ, " ஆமாம். உனக்கு என்னைத் தவிர அத்தனைப் பேரும் பாவம். நானும் சாப்பிட்டு எத்தனை நாளாச்சுத் தெரியுமா ? " என்று சொன்னார். என்ன உளறுகிறார் இவர் என்று நான் பார்க்கவும் "தவலை வடையை சாப்பிட்டு எத்தனை நாளாச்சு என்று சொல்ல வந்தேன்." எவ்வளவு நாளாய் கேட்கிறேன்? கேட்டால் டாக்டர், டயட் என்கிறாய்? " என்று அவர் குறைப் பட்டுக் கொண்டார்.///////////////

    தனியாய் உட்கார்ந்து இருந்தவனைப் பைத்தியம் போன்று சிரிக்க வைத்த பாவம் உங்களையே வந்து சேரும்!

    ReplyDelete
  19. நானும் ஆறுமுகம அய்யாசாமி போல தவலை வடையை எப்படி செய்வது என்று தெரிந்த கொள்ள ஆசைப்படுகிறேன்.

    தாத்தா தான் இப்போ சார் ஆயிட்டாரே! இனி அவரைப் பற்றிக் கவலைப் பட வேண்டாமே! அதனால் தவலை அடை செய்ய போறேன்.

    ReplyDelete
  20. யோசிக்க வைக்கிறது இந்தப் பதிவு! பேப்பர் தாத்தா மாதிரி இங்கே ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை செய்யாமல் சும்மா இருக்கத் தெரியாது, அவர்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகப் போட்டு வாழும் தன்னம்பிக்கைசாலிகள்.

    இந்த வழிப்பறி, திருட்டு செய்ற மனுஷங்க இதெல்லாம் பார்த்து உருபட்டா நல்லா இருக்கும்.

    உங்க `என்னவர்` என்ன பதில் சொன்னார்?

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்