Friday 16 October 2020

கம்பனும், Confidence Boostingம்



Image Courtesy : Google

அம்மா? உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் அம்மா?

என்னடி?

கௌசல்யா ஏம்மா அப்படி நடந்து கொண்டாள்?

எந்தக் கௌசல்யாடி?

"சாட்சாத் ஸ்ரீராமனைப் பெற்றெடுத்த கௌசல்யாவைத் தான் சொல்றேன்."

அவள் என்னடி செஞ்சாள்?

(அம்மா மகளின் உரையாடல் இப்படிப் போகிறது.)

மகள் தொடர்ந்தாள்....

"ஸ்ரீ ராமனையே  பிள்ளையாப் பெற்றாளே... வளர்த்தாளோ? இல்லையே தூக்கிக் கைகேயிக் கையில் கொடுத்துட்டாளே. அதுக்கு என்ன சொல்ற...?"

அம்மா மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரி. அம்மா. அதை விடு. கைகேயி எவ்வளவு சம்ர்த்தாகக் காயை நகர்த்தி தன் மகன் பரதனை,("Out of Turnல்" ) ராஜாவாக்கிட வேண்டும்னு எவ்வளவு மெனெக்கெடறாள்.ஆனா  கௌசல்யாவைப் பாரு,. கண்ணால் நீர் விட்டு அழ மட்டும் தானே செய்தாள்.  அவள் பிள்ளைக்கு right royalஆக வர வேண்டிய பதவி கை நழுவிப் போவதை அழுதுக் கொண்டு, சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ  ஒரு அம்மா? 

ஆனால் கௌசல்யா இருந்திருக்கிறாளே. அதைத் தான் சொல்கிறேன் ." முடித்தாள் மகள் 

வினாடி நேரம் அம்மா வாயடைத்து நின்றாள். 

பிறகு வரிந்துக் கட்டிக் கொண்டு கிளம்பினாள்.

"எந்தப் பிரச்சினையையும், எடுத்தோம். கவுத்தோம்னு செஞ்சால் என்ன ஆகும்னு கைகேயியைப் பார்த்துத் தெரிஞ்சுச்க்கலாம்டி. பிரியமானப் புருஷனைப் பறிக் கொடுத்துட்டு, பெற்றப் பிள்ளை அவள் தூக்கிக் கொடுத்த அரசாட்சியையும், அவளையும்  உதறித் தள்ளிட்டுப் போக,  அயோத்தி மக்கள் அவளைக் காரித் துப்ப,  இன்றளவும் புராணம் அவளைக் கொடுமையானவளாகத் தானே காட்டுகிறது.

மாறாக கௌசல்யாவைப் பார். அழகாக பிரச்சினையைக் கையாண்டவள் கௌசல்யாதான். சொல்கிறேன் கேள்.

தன் மகன் ராஜாவாக வேண்டும் என்று எந்தத் தாய்க்குத் தான் ஆசையிருக்காது. கௌசல்யாவும் அப்படித் தான்.

பட்டாபிஷேக நாள் காலை.

நொடிக்கொரு தடவை தன் அந்தப்புர வாசலையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறாள் கௌசல்யா. தன் மகன் ராமன் முடி சூடிக் கொண்டு ராஜா ராமனாக வரப் போகும் அழகைக் காண அவள் மனம் துடிக்கிறது.. 

ஒரு இடத்தில் நிலைக் கொள்ளாமல் இங்குமங்கும் அலை பாய்கிறாள்.

சட்டென்று, தூரத்தில் ராமன் வருவதைப் பார்த்து விட்டாள்.  "என் ராமன் ராஜாராமனாக வருகிறான்." மனம் துள்ளிக் குதிக்க , ஆரத்தித் தட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தவள் சட்டென்று பிரேக் அடித்து நின்று, வரும் ராமனை மீண்டும் பார்க்கிறாள்.

ராமன் தனியாகல்லவா வருகிறான். வெண்கொற்றக் குடையில்லை. அவனுடைய சிகை பட்டாபிஷேகப் புனித நீரால் நனைந்திருக்கவில்லை. என்னமோ தப்பா இருக்கே. மனம் சஞ்சலப் படுகிறது. 

நிமிட நேரத்தில் அவளுக்குப் புரிந்து விடுகிறது.

" பட்டாபிஷேகம் நடக்கவில்லை". 

காரணம் எதுவாக இருந்தாலும் ராமனை அது பாதிக்க விடக் கூடாது என்பதில் தீர்மானமாய் இருக்கிறாள். அவன் தன்னம்பிக்கை இழந்து விடக் கூடாது என்று பெற்ற  மனம் கிடந்து தவியாய் தவிக்கிறது.

ராமன் வந்து நடந்த விஷயங்களை சொல்கிறான். அம்மா மனம் வருத்தப்படக் கூடாது என்று அவன் நினைப்பது அவன் வார்த்தைகளில் வெளிப் படுகிறது. தாயைப் போல் தானே பிள்ளையும்  இருக்கும்.

கௌசல்யாவின் Re- action ஐப் பார்...

"அப்படியாப்பா ராமா. உனக்குப் பட்டாபிஷேகம் என்றல்லவா நினைத்திருந்தேன்.  அத்னால் என்ன ராமா? பரவாயில்லை விடு.. நியாயப்படி  உனக்குத் தான் பட்டம் கிடைத்திருக்க வேண்டும்,  

ஆனால்  ராமன் ஆண்டால் என்ன? பரதன் ஆண்டால் என்ன ராமா?. பரதன் யார்?  உன் தம்பி தானே. மேலும் உன்னை விடவும் மும்மடங்கு நல்லவன் பரதன்..  அவன் கைகளில் தானே அயோத்தி இருக்கப் போகிறது." என்று சொல்லி விட்டுத் திரும்பி நின்று கண்ணில் வரும் நீரை அடக்க முயற்சிக்கிறாள்.

ராமன் முன் புலம்பித் தீர்க்கவில்லை. அழுது புலம்பவில்லை. தசரதனைத் திட்டித் தீர்க்கவில்லை. கைகேயிக்கு, சாபங்களை வாரி வழங்கவில்லை. ராமனின் எதிர்காலத்தை முன்னிட்டு அமைதிக் காத்து, தன் மகனுக்கு, அவனுக்கு யாரும் அநீதி இழைத்து விடவில்லை. இழைத்து விடவும் முடியாது முக்கியமாக "அவன் எதுவும் இழக்கவில்லை." என்று தன் வார்த்தைகளின் மூலம்  message அனுப்புகிறாள்.எதை இழந்தாலும், மீண்டும்  கைப் பற்றலாம் Self Confidence இருந்தால்.  அதனால் தான் ராமன் self confidenceஐ  இழந்துவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறாள் கைகேயி. 

ஆனால் அவள் உடைந்து தான் போயிருப்பாள். சந்தேகமே  வேண் டாம்.

இவளல்லவோ  தாய்.

"கௌசல்யாவிடம், தாய்மார்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இந்த confidence boosting  தான்.  இப்ப புரிஞ்சுதாடி?." முடித்தாள் அம்மா.

இப்ப கம்பன் கவியைப் பார்ப்போமா?

“முறைமை அன்று என்பது
    ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்
    நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்;“ எனக்
    கூறினள், நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்
    வேற்றுமை மாற்றினாள்.


இராமலக்குமண பரத சத்ருக்குனர்களாகிய நால்வரிடத்தும், குற்றமற்ற அ ன்பு செலுத்துவதில் வேறுபாட்டை நீக்கி ஒரே தன்மையளாய் உள்ள கோசலை,"மூத்தவன் இருக்கும் போது இளையவன் அரசாளுவது முறைமை அன்று என்ற ஒரு குறை உண்டு.ஆனால் பரதன் மூன்று மடங்கு எல்லோரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன்.உன்னையும் விட நல்லவன். கல்வி, இளமை, வீரம், குணம் முதலியவற்றில் யாதொரு குறையும் இல்லாதவன் என்று சொன்னாள்.


கம்பன் பெரிய 'சைக்கியாடரிஸ்ட்'  ஆக இருந்திருப்பாரோ ? ஒவ்வொரு பாடலும், ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறதே .

வேறொரு கம்பன் 'மேஜிக்'குடன்  மீண்டும் வருகிறேன்.

நன்றி............................................................................(தொடரும்)



5 comments:

  1. சிறப்பான விளக்கம். படித்தேன் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. RajalakshmiParamasivam19 October 2020 at 11:49

      என பதிவுக்கு வருகைபி புரிந்து, ரசித்துப் படித்து, பாராட்டியதற்கு நன்றி வெங்கட்ஜி

      Delete
  2. எளிய முறையில் அருமையான விளக்கம்💐

    விஸ்வநாதன்

    ReplyDelete
    Replies
    1. RajalakshmiParamasivam19 October 2020 at 11:50

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
    2. RajalakshmiParamasivam21 October 2020 at 12:01

      உஙகள் பூங்கொத்துக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்