Saturday 24 November 2012

வேண்டுமே--மோர்

நாங்கள் பள்ளி ஆசிரியைகள் எட்டு பேர் சேர்ந்து ஒரு ஆன்மீக சுற்றுலா கிளம்பினோம்.ஐந்துநாட்கள் தான்.எங்கள் பள்ளி மைலாப்பூரில் மிகப் பிரபலமான ஒன்று.கபாலீஸ்வரர் கோவிலருகில். கோவிலின் உற்சவத்தின் போது மயிலையே கயிலை போல்தானிருக்கும்.எங்களுக்கும்லோக்கல் ஹாலிடே.ஒவ்வொரு வருடமும் நாங்கள் அந்தத் திருவிழாவை தவறாமல் அனுபவித்து இறைவன் அருள் பெறுவோம்.ஒரு வருடம்  சுற்றுலா கிளம்பினோம்.முதலில் பெங்களூர் செல்வதாகப் பிளான்.ஒவ்வொருத்தியாக சென்ட்ரல் ஸ்டேஷனை வந்தடடைந்தோம்.s2  கோச்சில் ஏறி அமர்ந்து அவள் வந்து விட்டாளா ? இவள்? என்று பதைபதைப்புடன் காத்திருந்தோம்.எங்களில் ஒருத்தி வர மிக லேட்.ஒரே படபடப்பு.பெரும் முயற்சிக்குப் பிறகே (எட்டு குடும்பங்களின் தலைவிகளை ஒரே சமயத்தில்  வீட்டுப் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பது லேசா? ) இந்த ட்ரிப் சென்ட்ரல் வரை வந்திருக்கிற்து.எந்த வில்லங்கமும் இல்லாமல் தொடரவேண்டுமே என்ற பயம் தான்.ஒரு வழியாக தோழியும் வந்துசேர்ந்தாள்.ஒரு குலுக்கலுடன் மெயிலும் கிளம்பியது.
காலை பெங்களூர் வந்து அங்கிருந்து பஸ் மூலம் தர்மஸ்தலா வந்து சேர்ந்தோம்.பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.அருகிலிருந்த ஓட்டலிற்குச் சென்றோம்.சூடான தோசை கமகம சாம்பார்,சட்னியுடன்வேக வேகமாக உள்ளேச் சென்று கொண்டிருந்தது.ஒருத்தி கொஞ்சமாக மோர் குடிக்க வேண்டும்.என்றாள்.அங்கே ஆரம்பித்தது கலாட்டா.இது வரை கன்னடா மொழி தெரியாதது ஒரு பெரிய கஷ்டமாக தெரியவில்லை.சர்வரைக் கூப்பிட்டு 'மோர்' என்றோம்.அவர் அப்படி என்றால் என்ன என்பது போல் எங்களைப் பார்க்க, நாங்கள் பந்தாவாக 'பட்டர் மில்க்' என்றோம்.ஊஹூம்...... அவருக்கு சுத்தமாகப் புரியவில்லை.இன்னொருத்தி அவரிடம் தன்னீரைக் காட்டி இது 'வைட்' கலரில் வேண்டும் என்று கூற உடனே அவர் 'மில்க்?' என்றார். மோரே  வேண்டாம் என்று தீர்மானித்து 'கர்ட்' வேண்டும் என்றோம்.நல்ல வேளையாக புரிந்தது சர்வருக்கு.தயிர் வந்தது.தயிரில்  கொஞ்சம் நீர் ஊற்றி மோராக்கிக் கொண்டிருந்தோம்.இப்பொழுது அவருக்கு புரிந்து விட்டது.பெரிதாக சிரித்துக் கொண்டே 'மஜ்ஜிகே பேக்காயித்தா' என்றுக் கேட்டு க்கொண்டு வந்த மோரைக் குடித்துவைத்தோம்.பின் ஓட்டல் ரூமிற்குச் சென்று சரியான  தூக்கம்.
மறு நாள் விடியற்காலையில் எழுந்து குளித்து  காபி குடித்துவிட்டு மஞ்சுநாதனை தரிசிக்க சென்றோம்.நல்ல கூட்டம்.க்யுவில் நின்று 'காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி 'சிவனிடம் வேண்டிக்கொண்டுஅவன் தாள் பணிந்து பிரகாரம் சுற்றினோம். அகிலத்திற்கே அன்னமளிப்பவன் எங்களை மட்டும் பசியோடு போக விடுவானா என்ன?பக்தர்கள் அனைவருக்கும் தரமான உணவு அளிக்கிறார்கள்.உண்டுவிட்டு 'சுப்பிரமணியா' சென்று வள்ளிக் கணவன் அருள் பெற்று அங்கிருந்து உடுப்பி சென்றோம் குழந்தை கண்ணனை சேவிக்க.அப்பப்பா.......என்ன ஒரு அழகு ? அந்த வெண்ணெய் திருடனை காணக் கண் கோடி வேண்டும்.சாளரம் வழியாக 'யசோதை மைந்தனை,நீல நிறத்து பாலகனை ' பார்த்துக்கொண்டே இருக்கலாம் .இன்னமும் அந்த கிருஷ்ணன் உருவம் மனதிலேயே நிற்கிறான்..எங்கிருந்திருந்தோ   காற்றிலே மிதந்து வந்த 'மாணிக்கம் கட்டி 'என்ற திவ்யப்பிரபந்த பாடல் சன்னதியிலேயே எங்களை கட்டிப் போட்டது.பிறகு பூசைக்கு உடுப்பி மத்து வாங்கிக் கொண்டு இரண்டு ஆட்டோ பிடித்தோம் பஸ் ஸ்டாண்ட் செல்ல.திரும்பவும் மொழிப் பிரச்சினை. ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டோக்கள் பறந்தன. திடீரென்று திரும்பிப் பார்த்தால் எங்கள் பின்னால் வந்தஆட்டோவை காணவில்லை.டிரைவரிடம் நிறுத்த சொன்னோம்.டிரைவரோ காதில் வாங்காமல் ஓட்டிக்கொண்டிருந்தார்.
தமிழ் புரியவில்லை என்பது அப்பொழுது தான் உரைத்தது.'ஸ்டாப் ஸ்டாப் ' என்று கத்தினோம்.அதல்லாம் டிரைவர் காதில் விழவேயில்லை.வேகமாக போய்க் கொண்டே இருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்று பின்னாலிருந்துஅவர் சட்டையை இழுத்தோம்.கோபமாக திரும்பி பார்த்தவுடன் 'ஆயுஷ்மான் பவ' என்பதுபோல் கையால் சைகை செய்த பின்னரே ஆட்டோ நின்றது.வேறு ரூட் எடுத்திருந்த ஆட்டோ ஒருவழியாக வந்து சேர்ந்தது.பின்னர் பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.பஸ்ஸில் பெங்களூர் வந்து ,ரயிலில் சென்னை வந்து சேர்ந்தோம்.
எங்கள்அனுபவங்களை சக ஆசிரியைகளுடன் பகிர்ந்து கொண்டோம்.மஞ்சுநாதன் ,வள்ளி மனாளன்,கீதை கொடுத்த கிருஷ்ணன் தரிசனம் பற்றி மட்டுமா சொன்னோம்.மோர் ரகளை, ஆட்டோ அட்டகாசம்,பற்றியும் தான்!!!

6 comments:

  1. Nice experience of teachers and very humourously presented in the blog. It's an eye-opener for others, who plan to visit places of people speaking unknown languages. Better learn some basic command words before hand. As the blogger is a teacher, she teaches the viewers.

    ReplyDelete
  2. உங்களுடைய கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. நல்ல அனுபவம். பிற மாநில மொழிகள் தெரியாமல் அவ்விடம் நாம் செல்லும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  4. உங்கள் கருத்துக்கு நன்றி

    ராஜி

    ReplyDelete
  5. அட்டகாசமான பயணப் பகிர்வுகள்....

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி.

      ராஜி

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்