Thursday, 16 January 2014

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!


அன்று  சூப்பர்  மார்கெட்டில்  ,  என்னருகில் நின்றிருந்த பெண்மணியைக்  கவனித்தேன்.எங்கோ பார்த்த நினைவு.

அந்தப் பெண்மணியும் அந்த சமயத்தில் என்னைப் பார்க்க ," ராஜி, நீயா? எப்படி இருக்கிறாய்?" என்று கேட்க நான் குழம்ப  "என்னைத் தெரியவில்லையா . நான் மாலா . உன்னோடு  ஸ்கூலில்  படித்தேனே! "  என்றதும்  நினைவில்  வந்து மோதியது  , இவள் நினைவு மட்டுமல்ல பள்ளி நாட்களும் கூடத்தான்.
அவளுடன் கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு வீடு திரும்பினேன்.
மனம் என்னைவோ பழைய நாட்களை  விட்டு வர மறுத்து விட்டது.

யூனிஃபார்மில் பள்ளிக்கு  சென்றது. ஆறாம் கிளாசில் பேனாவில்  எழுத ஆரம்பித்தது.  அதற்கு போடும் இங்க்  . Bril  Ink , Camlin Ink, Chelpark......... .பேனா லீக்காகி  கையில், தலையில்,..............

இது போல்  எத்தனை விஷயங்கள்  நினைவடுக்குகளில் இருந்து மீட்டேன். சிலவற்றை லிஸ்ட்  போட்டிருக்கிறேன் பாருங்கள்.  .படித்த பின்னர்,
உங்களுக்கும்  நினைவுகள் மலரும்  என்பதில் சந்தேகமேயில்லை.



GoldSpot the Zing  thing  என் நாவிலேயே  இன்னும்  உள்ளது.  
இந்தியா  உலகமயமானதில் , இது  காணாமல் போய்விட்டது .



நம்புங்கள். இது நம் அண்ணா சாலையே தான். அறுபதுகளில் , எழுபதுகளில்  இப்படித் தான்.



அப்பொழுதெல்லாம் இந்த  மகாராஜாவின்  வாகனத்தை ,  வானத்தில் பறப்பதைப்   பார்த்து  ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.  இப்பொழுது ,அதில் பயணம்  செய்யவும்   சாத்தியமானது  நம்மில் பலருக்கு.



வருடத்தில்  இரண்டு முறை  சினிமா பார்க்க செல்வோம். டிக்கெட்  விலை
Rs. 1.66 .  நீளமான வரிசையில் நின்று  "ஹவுஸ் ஃ புல் " போர்டு  போட்டு விடக் கூ டாதே  என்று கடவுளிடம் வேண்டிய நாட்கள்  நினைவுக்கு வருகிறது. எதற்கெல்லாம் கடவுளை டிஸ்டர்ப்   செய்திருக்கிறேன் !

ராமனும் சீதையும்  எத்தனை மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் பாருங்கள்.இந்த காமிக்ஸ்  கதைகள்  மனப்பாடம் ஆன் பின்பும்  திரும்ப திரும்பப்  படித்திருக்கிறேன். அது ஒரு கனாக் காலம் தான்!


இதையும்  படிப்பதுண்டு.  பீர்பாலின் அறிவுக்  கூர்மை வியக்க வைக்கும். பீர்பாலின் அறிவுக் கூர்மை  இருக்கட்டும்  . உனக்கு .......என்று கேட்காதீர்கள்  ப்ளீஸ்......


ஜியோமெட்ரி  பெட்டி ,பள்ளி நாட்களின் மிகப் பெரிய பொக்கிஷம் எனக்கு. உங்களுக்கு?


பிடிவாதம்  மிகவும் பிடித்திருந்தது   கருப்பு வெள்ளை டிவியில் .எனக்கு.
சொல்கிறேன்   Junoon பற்றி.



கூரையின் மேல்  ஏறி நின்று கொண்டு, அவ்வப்போது ஆடி அசைந்து ,நாமும்  கூரை மேல்  ஏறினால்   மட்டுமே  படம்  காண்பிக்கும்  கம்பி.



இந்தக் காணொளியை  பாருங்கள். உங்கள் மனம்   பின்னோக்கி சென்று கொண்டிருப்பதை  தடுத்துப் பாருங்கள்.   முடியாதே .
டிவி முன்னால்  அமர்ந்து  இந்த ஒலிஒளி  பார்ப்பதற்கு தவமான தவம் இருந்திருக்கிறோமே!



             அப்போதெல்லாம் இது  இல்லாத  வீடுகளே இல்லை எனலாம் .
இதைப் பார்க்கும் போது  என் நினைவிற்கு வருவது ,"நிலவும் மலரும்பாடுது".
இப்பொழுது நிறைய பேர், இதை  பூ  கட்ட உபயோகித்து வருகிறார்கள். என்று கேள்வி.



                     இதில்  பயணம் செய்வது  ஒரு "Pleasure"  தான் அப்பொழுது.



இது நினைவிருக்கிறதா? நம் ட்ரெயின் டிக்கெட் .  சிறு வயது ரயில் பிரயாணத்தை  நினைவு படுத்தியது. டிக்கெட் விலையைப் பாருங்கள். அங்கிருந்து நாம் எவ்வளவு தூரம்  பயணித்து  விட்டோம். திரும்பிப் போக முடியாத தூரம் வந்து விட்டோம் .

ஹலோ!  என்ன  பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டீர்களா?   உங்களுக்கு நினைவில்  வந்து  மோதுவதைப் பற்றி  பின்னூட்டத்தில்  குறிப்பிடுங்களேன் . எல்லோருக்குமே  பழைய நினைவுகள்  சுகமான  ராகங்கள் தான் 

images courtesy---google.

45 comments:

  1. ஆஹா...அற்புதமான மலரும் நினைவுகள்!உங்கள் நினைவுகள் பல எனக்கும் உண்டு..அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!என் அனுபவங்களுக்கு நான் ஒரு பதிவே போடவேண்டும்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க திருமதி ராதா . உங்கள் முதல் வருகைக்கும், என் பதிவைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி. உங்கள் வலை ' கமகம 'என்று மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் இருக்கிறதே! வேண்டும் என்கிறதை எடுத்து சுவைக்க வருகிறேன்.நன்றி. மீண்டும் மீண்டும் வருக!

      Delete
  2. அருமையான அழகான நினைவலைகள். நாம் கிட்டத்தட்ட ஒரே ஏஜ் க்ரூப்பில் இருப்பதால் இவைகளை என்னாலும் மிகவும் ரஸிக்க முடிகிறது.

    BRIL INK க்கு முன்னால் ஐரிஸ் இங்க் என்றுதான் FAMOUS ஆக இருந்தது. அந்தக்கம்பெனி சில பிரச்சனைகளால் மூடப்பட்டு NURIS + NURIT இரண்டாகப் பிரிந்தன.

    ஐரிஸ் + நூரிஸ் என்பவை ஒன்று போல இருப்பதால் NURIT INK கம்பெனிக்காரர்கள் கேஸ் போட்டார்கள். அதன் பிறகே NURIS என்பது BRIL என்று மாறி மிகவும் Famous ஆனது. பிறகு கேஸ் போட்ட NURIT கம்பெனி காணாமல் போனது.

    அதுபோல நாம் படிக்கும் காலத்தில் ரைட்டர் பேனாவும், பார்க்கர் பேனாவும் மிகச் சிறந்ததாகக் கருதப்பட்டவை.

    வெள்ளிக்கிழமை மட்டும் அரை மணி நேரம் காட்டப்படும் ’ஒளியும் ஒளியும்’, ஞாயிறு 2 மணி நேரம் காட்டப்பட்ட பழைய தமிழ் சினிமாவும் ப்ளாக் அண்ட் ஒயிட்டில் ஆண்டனாவுடன் ஒரே சிரிப்பு தான்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இங்க் கதையை சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள் கோபு சார். நினைவுகளிலிருந்து சிலவற்றை மட்டுமே எடுத்துப் போட்டேன். நிறைய நிறைய இருக்கிறதே!ஒளியும், ஒலியும் மிகவும் சுவாரஸ்யம் அப்பொழுதெல்லாம்.
      உங்கள் வருகைக்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  3. என் பின்னூட்டத்தில் அந்த டீ.வீ. நிகழ்ச்சியை ‘ஒளியும் ஒலியும்’ என மாற்றிப்படிக்கவும். தவறாக அவசரத்தில் ’ஒளியும் ஒளியும்’ என்றே எழுதி விட்டேன்.

    ReplyDelete
  4. அந்தக்காலத்தில் பெரும்பாலும் Ambassador / Landmark / Fiat ஆகிய மூன்று விதக் கார்கள் மட்டுமே தெருவில் அதிகமாகப் பார்க்க முடிந்தது. பெரிய பணக்காரர்கள் மட்டுமே PLYMOUTH என்று கப்பல் போல ஓர் கார் வைத்திருப்பார்கள். HERALD 1965க்குப் பிறகு வந்தது என்று ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. கோபு சார் , கார் வைத்திருந்தாள் மட்டுமே பணக்காரர்கள் என்று நினைத்திருந்த காலம். இதில் கார் பெயர் எல்லாம் யாருக்குத் தெரியும் அப்போது.மீண்டம் வந்து உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு நன்றி சார்.

      Delete
  5. நல்லா இருக்கற பலப்பத்தை எல்லாம் குட்டிகுட்டியா ஒடச்சு, எண்ணிக்கையை அதிகமாக்கிக் கொள்ளுவது, ஒருவருடம் வாங்கிய ஜாமெட்ரி பாக்ஸ், ஸ்கெட்ச் & கலர் பென்ஸில்களை வருடக்கணக்கில் வைத்திருந்தது, 'சொட்டு' கணக்கில் இங்க் கடன் வாங்குவது & கொடுப்பது, Reynolds pen என்று ஒன்று வந்ததும் அதற்குத் தாவியது, அதால எழுதி டீச்சரிடம் திட்டு வாங்குவது, படு சிக்கனமாக இருந்தது ......இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.

    இதுக்குமேல எழுதமுடியல..... சுகமான நினைவுகள் வந்து ஆட்டிப் படைக்குது. நினைவுபடுத்தியதற்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. பலப்பம், கலர் பென்சில், ஜாமெட்ரி பாக்ஸ் என்று வரிசையாக உங்கள் கண் முன்னால் வந்து விட்டதே! அது மட்டுமில்லாமல் டீச்சரிடம் திட்டு வாங்கியது கூட நினைவிற்கு வந்து விட்டது போலிருக்கிறதே. நீங்கள் சொல்வது போல் அத ஒரு கனாக் காலம் தான்! நன்றி சித்ரா உங்கள் இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு.

      Delete
  6. அந்த நாள் ஞாபகம்
    வந்ததே நண்பனே நண்பனே
    இந்த நாள் அன்றுபோல்
    இன்பமாய் இல்லையே
    அது ஏன் ஏன் நண்பனே

    என்கிற கண்ணதாசனின் வரிகளை
    ஞாபகப் படுத்திப் போனது தங்கள்
    அற்புதமானப் பதிவு

    சொன்ன விஷயங்களும்
    படங்களுடன் சொல்லிப்போனவிதமும்
    மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் கருத்தை அழகிய கவிதையாய் வடித்து கொடுத்ததற்கு.

      Delete
  7. சுவாரஸ்யமான நினைவலைகள். அந்த தூர்தர்ஷன் இசையை ரசிக்காத குழந்தைகளே இருக்காது. நினைவு தெரியாத, பேச்சு கூட வராத குழந்தைகள் அந்த இசை வந்தவுடன் அழுகையை நிறுத்தி விடுவார்கள்! இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்... சென்னை அண்ணாசாலை 90களில் கூட காலியாகத்தான் இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் கருத்துக்கு . இன்றும் தூர்தர்ஷன் மியுசிக் கேட்கும் போது மனம் இளமைக் காலத்திற்கு தாவுவதை தடுக்க முடியவில்லை தான்.

      Delete
  8. அருமையான மலரும் நினைவுகள்.

    தொலைகாட்சி காணொளி படம் நீங்கள் சொன்னது போல் மனம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதை தடுத்துப் பார்த்தாலும் முடியவில்லை.
    அருமையான பகிர்வு. பழைய நினைவுகள் சுகமான ராகங்கள் தான்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் காணொளியை மிகவும் ரசித்திருக்கிறீர்கள் கோமதி. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  9. மலரும் நினைவுகள் பல நினைவுகளை நினைக்க வைத்ததென்பதோ உண்மை... ம்... அது ஒரு கனாக் காலம் தான்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தன்பாலன் சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  10. இளமைக் கால நினைவுகளை மீண்டும் மலரச் செய்துள்ளீர்கள் சகோதரி. நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ்முகில் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  11. உங்கள் பதிவைப் படித்து முடிந்ததும்,

    கோல்டு ஸ்பாட்டின் தித்திப்பு, மெட்ராஸ் மூர் மார்க்கெட், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசல், அடிக்கடி பயணம் போன பூதலூர் (தஞ்சாவூர்) ரெயில்வே ஸ்டேசன், இந்த்ரஜால், மண்ட்ரக் காமிக்ஸ் மற்றும் அமர் சித்ர கதைகள், ஒழுகும் பேனாவும் ப்ரில் இங்க் பாட்டிலும், எம்ஜிஆர் படம் திரையிட்ட திருச்சி தியேட்டர்கள் – இவை எல்லாம் மனத்திரையில் வந்து போயின.

    உங்கள் வலைப்பதிவில் நீங்கள் நன்றாகவே கிச்சுகிச்சு மூட்டுவீர்கள். இப்பொழுது அந்தக்கால நினைவுகளை ஞாபகம் மூட்டினீர்கள். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் மலரும் நினைவுகள் வந்து விதத்தே தமிழ் சார். நினைக்க நினைக்க மிகவும் சுகமானது பழைய நினைவுகள் தானே! மிக்க நன்றி சார் என் பதிவுகளைப் படித்து நகைச்சுவையை ரசிப்பதற்கும், மலரும் நினைவுகளை கொண்டாடுவதற்கும்.

      Delete
  12. சுவாரஸ்யமான நினைவலைகள்.

    விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த பகுதிகளுக்கு இசைகேட்ட மாத்திரத்தில் டி வி முன் ஆஜராவார்கள்..!

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் எல்லோருக்குமே இந்தக் காணொளி எத்தனையோ நினைவுகளை அள்ளித் தெளிக்கிறதே! நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  13. படங்களையும் விளக்கத்தையும்கண்டு மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  14. சுவையான நினைவலைகள்.... எங்களையும் சிறுபிராயத்துக்கே கொண்டு சென்றது... ஒரு புத்துணர்ச்சியும் கிடைத்தது நன்றி...

    தூர்தர்ஷனில் இரவில் காட்டாப்படும் MILE SUR MERA TUMHAARA பாடலும், ஞாயிறில் ரங்கோலி நிகழ்ச்சியும், ஒலியும் ஒளியும்...

    அலுக்காது படித்த அம்புலிமாமா, இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் புத்தகங்களும்...

    விடுமுறை நாட்களில் கும்பலில் அடித்து பிடித்து ஒருமுறை மிதிபட்டும் டிக்கட் வாங்கி பார்த்த சினிமாக்கள்...

    திரும்பி வாரா நாட்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மலரும் நினைவுகளை சுவையாக எழுதிவிட்டீர்கள். படம் பார்த்ததைவிடவும் , படம் பார்ப்பதற்காக நாம் பட்ட அவஸ்தை தான் நினைவில் இருக்கிறது பாருங்கள். இன்று நினைத்து சிரிப்போம். ஆனால் அன்று.....
      நன்றி ஆதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  15. 1986 என்று ஞாபகம். என் வீட்டில் தொலைகாட்சிப்பெட்டி நான் வாங்காத நேரம். ’அப்பு ஒளர் பப்பு’ என்ற யானை பற்றிய தொடர் ஹிந்தியில் வாராவாரம் ஒளிபரப்புவார்கள்.

    என் மூன்று பிள்ளைகளும் [வயது முறையே 12, 10, 4] டவுன்ஷிப்பில் ரோட்டை கிராஸ் செய்து எதிர் வீட்டுக்கு ஒரே ஓட்டமாக ஓடுவார்கள். அந்த வீட்டிலிருந்த சாந்தி, வஸந்தி என்ற இரண்டு பெண்களும் இவர்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். உடனே ஒரே ஓட்டமாக ஓடிவிடுவார்கள். அதற்காகவே [இவர்களின் ஓட்டத்தைத் தவிர்க்கவே] பிறகு நான் என் வீட்டில் முதன்முதலாக டீ.வி. வாங்கினேன். நான் வாங்கியதும் முதல் வாரம் ‘திருவிளையாடல்’ படம் போட்டார்கள். அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் என் வீட்டில் கூடினார்கள். ஒரே ஜாலியாக இருந்தது.

    ஞாபகம் வருதே ..... ஞாபகம் வருதே .... ;)))))

    ReplyDelete
    Replies
    1. ஒரு தெருவுக்கு ஒரு டிவி இருந்த காலத்தில் ஒருவருக்கொருவர் சொந்தம் கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பவோ ஒவ்வொரு அறையிலும் ஒரு டிவியை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீவாக இருக்கிறார்கள். எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.
      உங்கள் நினைவுகள் அலை போல் மீண்டும் மீண்டும் வருகின்றது போலிருக்கிறது. மீள் வருகை புரிவதற்கு நன்றி கோபு சார்.

      Delete
  16. ஞாபகம் வருது, ஞாபகம் வருது தான். என்னோட பதிவிலே வர கேள்விகளுக்கான விடைகள் எல்லாம் இங்கே இருக்கே! அந்தக் கேள்விகளுக்கு விடைகளைச் சொல்லி இருக்கக் கூடாதோ! :))) (என் கவலை எனக்கு) அதென்னமோ பாருங்க, மொக்கை போட்டால் தான் போணியே ஆகுது! :)))))

    ReplyDelete
    Replies
    1. இது உங்கள் கேள்விகளுக்கு விடைகளாக இருக்கின்றனவா? உங்கள் கேள்விகளுக்கு வந்து பதில் எழுதுகிறேன் கீதா மேடம்.
      நன்றி உங்கள் வருகைக்கும, கருத்துக்கும் கீதா மேடம்.

      Delete
  17. அருமையான நினைவுகள்! நியுரிட் இங்க் நான் பயன்படுத்தி இருக்கிறேன்! ஜுனூன் மறக்க முடியாத ஒன்று! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  18. ஒலியும் ஒளியும், மகாபாரதம், சாணக்யா, ராமாயணம், சித்ரஹார், சுரபி, ஞாயிறு காலை லாரல்-ஹார்டி என்று நினைவுகள் பசுமையாக ஒவ்வொருவர் நினைவிலும் பதிந்திருக்கும்! :) ஜ்யாமெட்ரி பாக்ஸ், சேப்பாக் பேனா, கேமல் இங்க் இதெல்லாம் எனக்கும் ஸ்பெஷல்!


    பழையநினைவுகளை மீண்டும் ரீஃப்ரெஷ் செய்ய வைத்த பதிவு ராஜி மேடம்! :)

    ReplyDelete
    Replies
    1. மகி உங்களின் பிசியான ஷெட்யுலில் என் பதிவுக்குக் கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  19. மறக்க முடியாத கோல்டு ஸ்பாட்டின் தித்திப்பு போல உங்களுடைய - அதென்ன உங்களுடைய!...

    நம்முடைய பழைய நினைவுகள் -

    ஒரு கணம் - மனம் அமைதியில் ஆழ்ந்தது!..

    ReplyDelete
    Replies
    1. படித்த பின் உங்கள் மனம் உங்களை சிறு வயதிற்கு ஓடி ஒட்டிக் கொண்டது தெரிகிறது.நன்றி துறை சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  20. அருமையான அந்த நாள் நினைவுகள்.
    மறக்க முடியாதவைகள். இனிய நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கொவைக்கவி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  21. ராஜி மேடம் உங்கள் இளமை பருவ நினைவுகளுக்கு அழைத்து சென்றமைக்கு நன்றி! அழகான, மனதை விட்டு அகலாத, அழிக்கவே முடியாத நினைவுகள்! வாழ்த்துக்கள் ராஜி மேடம் :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் மஹா. அழிக்கவே முடியாத நினைவுகள்.
      உங்கள் வருகைக்கும், கருத்ஹ்டுகும் நன்றி மஹா.

      Delete
  22. கண்களின் நினைவில் மறந்து, கனவு கண்டதுபோல் எங்கோ இருந்த சிறு வயது நினைவுகளை இதயம் மீட்டெடுத்து விட்டது போலும். உங்கள் பதிவும் படங்களும் குதூகலத்தை வெளிப்படுத்துகின்றன மேடம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் பழைய நினைவுகள் வந்திருக்குமே. நன்றி சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  23. நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு..... எத்தனை இழந்திருக்கிறோம்.... இல்லை புதியதாகப் பெற்றிருக்கிறோம்?.....

    ReplyDelete
    Replies
    1. பழையன கழிதலும், புதியன புகுதலும் நல்லது தான். ஆனாலும் நினைவுகள் என்று எடுத்துக்கொண்டால் மனம் என்னவோ பழயதைத்தானே நாடுகிறது.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் வெங்கட்ஜி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்