Saturday, 30 December 2017

ராசியின் வேட்டை !

இது ஒரு மீள் பதிவு.(பதிவு மட்டுமே மீண்டது.)


அன்று இரவு ராசி நல்ல உறக்கத்திலிருந்தாள் . கணவர் விஷ்ணு,   டிவியில்  திரு.அர்னப் கோஸ்வாமி , வீட்டிற்குப் போய்  விட்டாரா என்பதை உறுதி செய்து கொண்டு   விட்டுப் படுத்தார். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார் .

ராசிக்குத் தீடீரென்று  முழிப்பு வந்தது. கணுக்காலில் ஏதோ  அரிப்பது போலிருக்க,  ராசி, கொசு கடிக்கிறது என்று நினைத்துக் கொண்டு காலை இழுத்து, போர்வைக்குள் பத்திரமாக  வைத்துக் கொள்ள முயற்சிக்க, 'குறு குறு 'வென்று  ஊர்வது ராசிக்குப்  புரிந்தது. சட்டென்று எழுந்து, லைட்டைப் போடவும், கரப்பான் பூச்சி ஒன்று  அவசரமாக  கட்டிலடியில் ஓடி ஒளிந்து கொண்டது.அதை ராசிப் பார்த்து விட்டாள் . ராசிக்கு  உடம்பெல்லாம் நடுங்கியது. கரப்பான் பூச்சி என்றால் அவ்வளவு பயம் அவளுக்கு. கார்கிலிற்கு போகச் சொன்னால்  கூடப்  போய்    போரிட ரெடி.. ஆனால் இந்தக் கரப்பான் பூச்சி , அவளை  நடுங்க வைத்து விடும்.

விஷ்ணுவைப் பார்த்தாள் ராசி. அயர்ந்த உறக்கத்திலிருந்தார் விஷ்ணு. இந்த கரப்பான் பூச்சியை  அடித்து நொறுக்கா விட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வரப் போவதில்லை  ராசிக்கு. என்ன செய்வது? அறையின் கதவிற்குப் பின்னால் சாத்தியிருந்த துடைப்பம் கண்ணில் பட அதை எடுத்து  கட்டிலடியில் விட்டு ,"மடார்,மடார் " என்று அடித்ததில், கட்டிலின்   தூக்கத்திலிருந்த விஷ்ணு முழித்துக் கொண்டார். அவர் கண் விழித்துப் பார்க்கவும், ராசி கையில் ,துடைப்பத்தை செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழவும் சரியாக இருந்தது.

விஷ்ணுவிற்கு இந்தக் காட்சி பிடிபடவில்லை. அதுவும் சற்று நேரத்திற்கு முன்பாகத் தான் டிவியில் தேர்தல் செய்திகள் பார்த்திருந்தார். அதனால் ஒருவேளை தேர்தல் சின்னத்துடன் யாரோ ஓட்டு சேகரிக்க வந்திருக்கிறார்கள் என்று தான் முதலில் நினைத்தார். நன்கு கண்ணைக் முழித்துப் பார்க்கும் போது தான் புரிந்தது  ராசி தான் இப்படி துடைப்பமும் , கையுமாக நிற்கிறாள் என்பது.

"எதற்கு, இந்த நேரத்தில் பெருக்குகிராய். காலையில் பார்த்துக் கொள்ளலாமே "
என்று விஷ்ணு சொல்ல,

" உங்களுக்கு என்னைப்  பார்த்தால்,கிண்டலாக இருக்கிறதா? இந்த நேரத்தில் பெருக்க நான் என்ன பைத்தியமா? கரப்பான் பூச்சியை அடிக்கிறேன் ." என்று ராசி எரிச்சலாகச் சொன்னாள் .

" அப்படியா " என்று கேட்டு விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டே விஷ்ணு ," அதான் அடிச்சாச்சு இல்லையா ?  படுத்துத்  தூங்கு  "   என்று அசால்டாக சொல்ல ராசி  கோபத்தையடக்கிக் கொண்டு கட்டிலடியில் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் . எதுவும் வெளியே தலை நீட்டவில்லை.சரி.செத்துத் தொலைந்திருக்கும்  என்று நினைத்துக் கொண்டு லைட்டை அனைத்து விட்டுப் படுத்தாள் . கண்ணயரத் தொடங்கினாள் ராசி. எதற்கு வம்பு என்று தலையோடு கால் வரைப் போர்த்திக் கொண்டிருந்தாள்  ராசி.

" விர் " என்று சத்தம் வந்தது.மெதுவாகப்  போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தாள் ராசி. நைட் லேம்ப்  வெளிச்சத்தில் ஒன்றும் புரியவில்லை  அவளுக்கு. திரும்பவும் உறங்கத் தொடங்கினாள் . திரும்பவும் " விர் "  சத்தம். ஃபேன்  சத்தத்தைத் தாண்டிக் கேட்டது.

இன்றைக்கு நம் தூக்கம் போச்சு  என்று நினை த்துக் கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தாள்  ராசி. இப்பொழுது  எந்த சத்தமும் கேட்கவில்லை ராசிக்கு. லைட்டை அணைக்க  சுவிட்ச்  அருகே கையைக் கொண்டு போகும்போது தான் பார்த்தாள் ராசி, தான் அடித்துக் கொன்றதாக நினைத்த கரப்பான் பூச்சி கரெக்டாக சுவிட்ச் மேல் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இவள்  " ஆ "வென்று அலற  விஷ்ணு அலறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.

" இப்ப என்ன ஆச்சு " விஷ்ணு கேட்க,

"க ,,,,,க,,,,,,,கரப்பான் .நான் அடித்தது ,சாகவில்லை . இதோ இருக்கு " என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சுவிட்ச் போர்டைக் காட்டினாள்  ராசி.

" அதே கரப்பு  என்று உனக்குத் தெரியுமா? " விஷ்ணு விசாரிக்க, ராசிக்கு வந்ததே கோபம்.

" ரொம்ப முக்கியம் இந்த ஆராய்ச்சி இப்ப " என்று கடுகடுத்தாள்  ராசி.

" நான் அதற்கு சொல்லவில்லை. அதோ பார் அங்கே "என்று சுவற்றில்  மாட்டியிருந்த, இவர்களுடைய  போட்டோவைக் காட்ட , அங்கே இன்னொரு கரப்பான் பூச்சி  அட்டகாசமாய் அமர்ந்திருக்க, அதை அடிக்க வேகமாய் துடைப்பத்தை  எடுக்க ராசி நகர , 'போட்டோ கரப்பான் பூச்சி'  விமானம் போல் சர்ரென்று  " டேக் ஆப் " ஆனது. அதைப் பார்த்த உற்சாகமோ என்னவோ ,அதனுடைய சகாவும்  தன்  இறக்கையை விரித்துக் கொண்டு,  கிளம்பியது.

ராசி அப்படியே தரையோடு தரையாக ( குண்டு ஏதோ விழப் போவது மாதிரி நினைத்துக் கொண்டு ) அமர, கரப்பான்களும்,  அவளை எப்படி "கேரோ " செய்யலாம் என்று மாநாடு போடுவது போல்  தரையில் அவளருகில்  அமர்ந்தது. கிடு கிடு என்று கரப்பான்  கூட்டம்  சேர்ந்தது.  இரண்டு, நான்கு , எட்டு,   என்று  பெருகிக் கொண்டே  போனது.  ராசி  பயந்தது போதும் , பொங்கி எழுவோம்  என்று நினைத்தாளோ  என்னவோ தைரியம் எல்லாம் திரட்டிக் கொண்டு ,  கையில் கிடைக்கும் தினசரிகள் , புக், டிவி ரிமோட், என்று எல்லாம் வைத்து அவள் அடிக்க ஆரம்பிக்கவும், இப்பொழுது எல்லா  கரப்பான்களும்,   பட படவென்று பட்டம்  போல் பறக்க ஆரம்பித்தன. செய்வதறியாது, ராசி, விஷ்ணு இருவரும் திகைத்து, இருவரும் கையில் கிடைத்தைஎல்லாம் வைத்துக் கொண்டு, தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒன்று கூட  இவர்களுடைய அடிக்குக் கிடைக்காமல்  இவர்களுக்குப் போக்குக் காட்டி தப்பித்துக்  கொண்டிருந்தன.

அடுத்து என்ன செய்யலாம் என்று போர் வியூகம் அமைப்பது மாதிரி, தலையில் கை வைத்துக் கொண்டு  குனிந்தபடியே ராசி அமர்ந்திருக்க , விஷ்ணுவோ , நின்ற இடத்திலேயே ,  கையில் அன்றைய தினசரியை நீளமாய் சுருட்டிக் கொண்டு, தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்தார். தீடீரென்று ராசி தலையில்  இடியாய் விழுந்தது ஒரு அடி. விஷ்ணு தான் பேப்பரால் தான் அடித்தார். ராசி கோபத்துடன் சட்டென்று நிமிரவும் , அவள் தலையிலிருந்து செத்த கரப்பான்  ஒன்று நச்சென்று விழுந்தது.   " என்னா அடி! " என்று புலம்பினாள் .


இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல். இருவரும் அறையை விட்டு ஹாலுக்கு வந்து , ஆளுக்கு ஒரு சோபாவில் படுத்துக் கொண்டனர். நீங்கள் இங்கே வந்தால் விட்டு விடுவோமா என்பது போல் இங்கே  சில கரப்பான்கள் காத்திருந்தன. இவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக இவர்களை நோக்கி நகர , விஷ்ணு ஒரு அற்புதக் காரியம் செய்தார்.  சமையலறைக்கு சென்று கையில் கிடைக்கும், கின்னம், டப்பா, டம்ளர் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து ஒவ்வொரு கரப்பானையும் தனித்தனியாக சிறைப் பிடித்தார். கவுத்து ,கவுத்து  வைத்து  விட்டு அப்படியே தூங்கிப்  போனார்.ராசி தான் பாவம் இமையோடு, இமை மூடவில்லை. பாவம் பயத்தில் உறைந்து  விட்டாள் .

பொழுது விடிந்தது. இவர் கவிழ்த்து வைத்திருந்த  ஒவ்வொரு பாத்திரத்தையும் எடுத்து எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்வது பெரிய காரியமாக  இருந்தது விஷ்ணுவுக்கு.. டிவி ஸ்டான்ட் அடியில், சோபாவிற்குப் ப் பின்னால் என்று ஓடி ,ஓடி ஒளிந்து கொண்ட கரப்பான்களை , தேடி தேடிப் பிடித்து அசந்து தான் போனார்.

ராசியோ இந்த டம்ளர், கிண்ணம், தப்பா எல்லாவறையும், டெட்டால் போட்டு அலம்பி வைத்துக் கொண்டிருந்தாள் . அறையில் இருந்த கரப்பான்களும்  காணமல் போய் விட்டன. எல்லாம் ஒழிந்தது என்று இருவரும் தீர்மானித்து ,
இரவு படுக்கப் போனார்கள்.லைட்டை அனைத்ததும், திரும்பவும்  எல்லா கரப்பான்களும், நைட் டூட்டி க்கு வருவது போல் வந்து சேர்ந்தன. திரும்பவும் எல்லா ஆக்ஷன்க்ளும் ரிபீட் . இரண்டு நாட்களாக ராசிக்கு சரியான உறக்கமில்லை.

தீடீரென்று எங்கிருந்து இவ்வளவு கரப்பான்கள் படையெடுக்கின்றன. இவ்வளவு நாட்களாக இல்லையே ! என்று இருவரும் குழம்பித் தவித்தார்கள்.

மறு நாள் விடிந்ததும், ஹிட் , ரோச்  ஜெல், லக்ஸ்மன் ரேகா  என்று விதம் விதமாக மருந்துகள் வீட்டில் வந்து குவித்தார் விஷ்ணு . அவருக்கும் ராசியைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது.. பயப்படாமல்  தூங்கு என்று அவர் சொன்னாலும், அவள் தூங்குவதாயில்லை.

இந்தக் கரப்பான்களும் , விஷ்ணுவின் மருந்துக்கு எல்லாம் அசையவேயில்லை.  நீ என்னவேனாலும் செய்து கொள் என்று இறக்கையை தூக்கி, மீசையை  ஆட்டிப்  பயமுறுத்திக் கொண்டிருந்தன. மறு நாள் எதேச்சையாய்  , கீழ் வீ ட்டில்  புதிதாக வந்திருப்பவர்களை  மாடிப்படிகளில் கையில் குப்பைக்  கூடையுடன்   பார்த்து சிநேகமாய் சிரித்து வைத்தாள்  ராசி. குப்பைக் கூடையில் அதென்ன  குவியலாய். "அய்யய்யோ  கரப்பான் பூச்சி யல்லவா இது.". இவர்கள் தான் நம் வீட்டிற்கும் கரப்பான பூச்சி சப்ளை செய்பவர்களா? ராசிக்குப் புரிந்தது. இவர்கள் சாமானுடன் சாமானாக வந்திருக்கின்றன.ஆனால் இவ்வளவா இருக்கும்? .....

யோசித்துக் கொண்டே மாடி ஏறினாள்  ராசி. விஷ்ணுவிடமும் சொன்னாள் . யார் சப்ளை செய்தால் என்ன  ? அதை எப்படி விரட்டுவது? அதைச்  சொல் என்றபடி  , " பெஸ்ட் கன்ட்ரோலிற்கு "  போன் செய்யத் தீர்மானித்தார்கள். " எவ்வளவு செலவாகுமோ தெரியவில்லையே "என்று நொந்து கொண்டாள் ராசி.அதோடு எப்போது அவர்கள் வருவது , நம் தொல்லை தீர்வது......அலுப்பாக இருந்தது ராசிக்கு.

தனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என்று  போன் செய்து, கரப்பான்களை ஒழிக்க யோசனை கேட்டுக் கொண்டிருந்தாள் ராசி.

நான்   வீடியோவில்  சொல்லிய  சின்ன ட்ரிக்கை  ராசி செயல்படுத்தியிருந்தால்,  இப்படித் தூக்கம்  இல்லாமல்  அவள் சிரமப்பட்டிருக்க் வேண்டாம்!

என்ன ட்ரிக்? ....எங்கேயிருக்கு  வீடியோ?.... என்கிறீர்களா?

பதிவின் ஆரம்பத்தில் இணைத்திருக்கிறேனே!

அடக்கடவுளே! வீடியோ பார்க்க திரும்ப்பப் பதிவின் ஆரம்பித்திற்குப் போக வேண்டுமா? .....என்று சலித்துக் கொள்ள வேண்டாம்.

உங்கள் சௌகர்யத்திற்காக  இதோ மீண்டும் இணைக்கிறேன்.

                                    


 நன்றி !நன்றி!

Wednesday, 25 October 2017

கோலம்............ ஒரு வர்ண ஜாலம்.

இது ஒரு திருத்தப்பட்ட  மீள் பதிவு.

கோலங்கள்    நகரங்களில்     மறைந்துக்   கொண்டிருக்கும்    ஒரு கலையாகி விட்டதென்றே  நினைக்கிறேன். 

மிக  அதி காலையில்  எழுந்து  வீட்டு  வாசலில்  ,பசுஞ்சாணி  நீரால்   வாசல்  தெளித்து   அரிசி மாவினால்   புள்ளி  வைத்து  கோலம்  போடுவதை  இக்கால நவநாகரீகப்   பெண்கள்    பலர் அறிய   மாட்டார்கள்  என்றே   நினைக்கிறேன்.

வீட்டு வாசலைக்   குனிந்து  பார்க்கவே   நேரமில்லை.
கழுத்தை  நெறிக்கும்  வேலை.

அது மட்டுமா?
வெளியே  நடந்து போகும் போதும்  , ICU  விலிருந்து  தப்பித்து வந்தவர்கள்   போல்   காதுகளிளிருந்தும்   கைக்கும்   ஒயர் ஒயராக   ஏதோ    தொங்கிக்  கொண்டிருக்க    (ஆண்கள், பெண்கள்  இருவரும்  இதே மாதிரி)   எங்கேயோ   பார்த்து  பேசிக்கொண்டே    நடக்கிறார்கள்.
 இதில்    கோலம்   போடுவதாவது............

வீடுகள்  எல்லாம்   அடுக்கு மாடிக்  குடியிருப்புகளானதால்  கோலத்திற்கு  தான்  கேடு. 

சரி,    தனி    வீடுகளிலாவது    கோலம்  இருக்கிறதா என்றால்   அங்கும்   அதனுடைய    முக்கியத்துவத்தை   இழந்து   வெகு நாட்களாகி விட்டன.    


அங்கெல்லாம் கோலம் இருக்கிறது   ஆனால்  ஒரு சில வீடுகளைத் தவிர  பெரும்பாலான   வீடுகளில்        பெயிண்ட்  அல்லது   ஸ்டிக்கர்   கோலம்  தான்  நம்மைப்  பார்த்து  சிரிக்கும்.


ஆனால்,  மறைந்த  கோலத்தில்  தான்     எத்தனை  எத்தனை   விஷயங்கள்  அடக்கம்..

மார்கழி   மாதத்தில்   முன்பெல்லாம்    பெரிய பெரிய   கோலங்கள்   வீட்டு
வாசலை   அடைத்திருக்கும்.  

நீ முந்தி,   நான் முந்தி   ,  உன் கோலம் பெரிதா , என் கோலம்   பெரிதா  என்று விட்டிற்கு   வீடு   ,   அறிவிக்கப்படாத   கோலப்போட்டியே  நடக்கும்.

கோலம் போடும் பெண்களுக்குத் துணையாக அந்தப் பெண்ணின்    கணவரோ,

சகோதரரோ   அந்த அதிகாலை   நேரத்தில்    தலையில்   மப்ளருடன்    அவரும்     தூய்மையான    ozone  காற்றை   சுவாசிப்பார்.    

கணவர் ,  மனைவி   கோலம் போடும் அழகையும் ,  கோலத்தின்   அழகையும்   சேர்ந்தே    ரசிக்கலாம்.

புத்துணர்ச்சி  கிடைக்கும்.

கோலத்தைப்   போட்டுவிட்டு   கையில்   கோலப்பொடி   டப்பியுடன்  அப்படி நின்று,   இப்படி நின்று   தான் போட்ட கோலத்தை   பெருமிதத்துடன்   பார்க்கும் போதே   தன்னம்பிக்கை   அவளுக்குள் ஊற்றெடுப்பதை   கண் கூடாக  காணலாம்.

கோலம் போடுவதும்   ஒரு யோகப் பயிற்சி   என்று தான் கூறுகிரார்கள் .
சரியான இடைவெளி  விட்டு  , புள்ளி   வைத்து   ,அதை   லாவகமாக   வளைத்து  , வளைத்து,  இழைகள்   இடும்போது    அந்தப்   பெண்மணி   தானும்   அல்லவா  குனிந்து, வளைந்து, கைகளை  நீட்டி   , மடக்கி,  கால்களை  அங்கு மிங்கும்   கோலத்தின்   மேல்  படாமல்   நேர்த்தியாக  நகரும்  போது   பார்த்தால்   ,  நமக்கு ஒரு  யோகா  செண்டர்  நினைவிற்கு    வருவதைத்   தடுக்க  முடியாது.

  
குழந்தை   பிறந்து   காப்பிடும்    வைபவத்தில்    ஆரம்பித்து   நூற்றாண்டு   விழா  வரை    ,வாழ்வின்  ஒவ்வொரு  மகிழ்ச்சியான   விழாக்களை  அமர்க்களமாய்   நாம்   கொண்டாடுவதை,   வெளியுலகிற்கு   அறிவிக்கும்   அறிவிப்புப்  பலகை   என்றே கொள்ளலாம். 


கோவில்  திருவிழாக்களிலோ,  கல்யாண  வீடுகளிலோ   ,   தீபாவளி   பொங்கல்  போன்ற பண்டிகை  நாட்களிலோ   கோலத்தின்   முக்கியத்துவத்தை     சொல்லவே வேண்டியதில்லை.

அரிசி மாவினால்  கோலமிடும் போது   எறும்பிற்கும்   உணவளித்து 
  food pyramid  ஐ    நம்மை    அறியாமலே   காப்பாற்ற முனைகிறோம்.  அதை சுற்றி இடும்   செம்மண்,  தீய சக்திகள்   வீட்டிற்குள்   வர விடாமல்   தடுக்கும்   என்று   பெரியவர்கள்    சொல்லக்  கேட்டிருக்கிறேன்.

 கோலத்தைப்   பற்றியெல்லாம்   ஆய்வுகள்   மேற்கொள்ளப்   படுவது   சற்றே நம்  புருவத்தை  உயர்த்துகின்றன.

கோலம் போடும்   பெண்கள்  கணிதப்  பாடத்தில்   சிறந்து  விளங்குவதற்கான  சாத்தியக் கூறுகள்  ஏராளம்  என்கிறார்,.ஒருகணிதப்   பேராசிரியை.

கோலப்பொடியை   விரல்களிற்கு  இடையே   எடுத்து இடும் போது  மூளைக்கு
செல்லும்  நரம்புகள்    தூண்டப்படுவதால்   ,மண வளர்ச்சிக்   குன்றிய  குழந்தைகளுக்கு   ஒரு தெரபியாகக்  கொடுக்கிறார்கள்   என்று   தகவல்.


நம் கோலத்தின்   அருமை  புரிந்த  அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும்  கூட   இதில்   ஆர்வம்  காட்டுவதாக   பிரெஞ்சு  ஆய்வாளர்   ஒருவர் கூறுகிறார்.
 அதற்காகவே   இந்த ஆய்வாளர்   வருடா வருடம்   மார்கழி   மாதத்தில்   சென்னை  மைலாப்பூர்   வந்து   தங்கி   விடியோவும்   மைலாப்பூர்  மாமிகளை  பேட்டியும் ,   எடுத்து  செல்வதாக  பத்திரிகை   செய்தி  கூறுகிறது.  

இத்தனை  இருந்து என்ன..........

நம்   மாறி  வரும்  வாழ்க்கை   முறை,   அடுக்கு   மாடிக்    கட்டடங்களின்
 ஆக்கிரமிப்பு,     போன்ற  காரணங்களால்   கோலமிடும்   கலை   நம்மிடையே   மெல்ல  மெல்ல    அழிவது   தெரியாமல்   அழிந்து  கொண்டிருக்கிறது.

தினம் அரிசி மாவினால் கோலம் போடுவது நல்லதென்றால்,  , பண்டிகை நாட்களில்  இழைக்  கோலம் போடுவது இன்னும் சிறப்பு ஆயிற்றே.

எப்படி இழைக் கோலம் போடலாம் என்பதை  ஒரு அழகான  வீடியோவாக இணைத்திருக்கிறேன்.

பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்ல மறக்காதீர்கள்.



நன்றி ! நன்றி!

Sunday, 22 October 2017

ரத்தத்தில் சர்க்கரைக் குறைய ........

இப்பொழுது எங்கெங்கு  நோக்கினும்  சர்க்கரை நோய் தான்.  யாரைக் கேட்டாலும்,  காபியில் சர்க்கரை வேண்டாம்.......... ப்ளீஸ் ....என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.  எல்லாமே நம் பாரம்பர்ய உணவு முறைகளை விட்டு விட்டு வெகு தூரம் வந்ததன் விளைவு.


இப்ப புலம்பி என்ன ஆகப்போகிறது? என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.  வந்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு மருந்து வேண்டுமே என்று தவிக்கிறோம். சர்க்கரையைக்  கட்டுப் படுத்துவதற்கு மிக எளிய மருந்து நம் அஞ்சறைப் பெட்டியில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அது என்ன? எப்படி செய்யலாம் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்......




நன்றி! நன்றி !

Saturday, 17 June 2017

கொழுப்பு இருக்கிறதா?

இதென்ன கேள்வி என்று யாரும் என்னை கோபித்துக் கொள்ள வேண்டாம்.

இந்தக் கேள்வியை டாக்டர் என்னிடம் கேட்டுக் கொண்டே இரத்தப் பரிசோதனை முடிவுகள் மீது பார்வையை செலுத்தினார்.

என்னுடைய வருடாந்திர  பரிசோதனைக்காக டாக்டரிடம் சென்ற போது, வகை வகையாய்  பரிசோதனை செய்ய  சொல்ல, " டெஸ்ட்  வைப்பது என்னுடைய வேலையாயிற்றே (ஆசிரியை) . இப்போது எனக்கே டெஸ்ட் ..... எல்லாம் காலத்தின் கோலம்." என்று நினைத்துக் கொண்டே எல்லா  டெஸ்ட்டையும்  நான் மேற்கொண்டு பரிசோதனை முடிவுகளுடன்  டாக்டர்  கிளினிக் வாசலில் காத்திருந்தேன்.

என் முறை வந்த போது  தான் டாக்டர் என்னிடம் இந்தக் கேள்வியை  கேட்க, அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென நான் முழிக்க, டாக்டரே பதிலையும்  சொன்னார்.

" கொழுப்பு இருக்கிறது. ஆனால் நல்லது தான்." இதென்ன  'SURF'  விளம்பரம் மாதிரி டாக்டர் சொல்கிறாரே என்று குழம்பினேன்.

அவரே விளக்கவும் செய்தார்." நல்ல கொழுப்பு  இருக்கிறது. கெட்ட கொழுப்பு இல்லை." என்று சொல்லவும்.

கொழுப்பே கெடுதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதில் நல்லது கெட்டது என்று வகை வேறு இருக்கிறதா என்று மனதில் எண்ணம் ஓடியது

எனக்குத் தெரிய வேண்டியது,
" இப்பொழுது நான் ஏதாவது  மருந்து சாப்பிட வேண்டுமா, இல்லையா? அதை மட்டும் சொல்லுங்கள் டாக்டர் ." என்று நான் கேட்க,

" உங்களுக்கு ஒன்றுமில்லை .நீங்கள் எப்பொழுதும் போல் உங்கள் உணவு முறைகளை மேற்கொள்ளலாம்" என்று  டாக்டர் சொல்ல,

பெருத்த நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தேன். நுழைந்தவுடன், அம்மா, " டாக்டர் என்னடி சொன்னார்? எல்லாம் நார்மல் தானே ? " கவலையுடன் விசாரிக்க  நான் கொழுப்புக் கதையை சொன்னேன். "வருமுன் காப்போம்.,கொழுப்பு உடம்பில் சேராமல் இருக்க  உணவில் என்ன  சேர்த்துக் கொள்ளலாம்  என்று நெட்டில் பார்க்க வேண்டும்." என்று முனகிக் கொண்டே நகர

என் அம்மா, " அதற்கு எதற்கு இன்டர்நெட். நம் உணவில்  சாம்பார் வெங்காயம் அதிகம் சேர்த்தாலே போதும். கொழுப்பு சேராது."

"ஓகே! அப்படி என்றால்  தினம் வெங்காய சாம்பார்  தானே ராஜி ?" என்னவர் என்னை நக்கலடிக்க,

"ஏன் சாம்பார் தான் செய்ய வேண்டுமா என்ன? வெங்காயப் பொடி செய்து வைத்துக் கொண்டால் தினம்  சேர்த்துக் கொள்ளலாமே  ." என்று பதில் சொன்னேன்.

"வெங்காயத்தில் பொடியா? என்னை சோதனைச் சாலை  எலியாக்கி விடாதே " என்று அவர் அடித்தக் கிண்டலைக் கண்டு கொள்ளாமல்  வெங்காயப் பொடி செய்து வைத்தேன்.

சூடான சாதத்தில் பொடி, நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு விட்டு,  "சும்மா சொல்லக் கூடாது. பிரமாதமாக இருக்கிறது " என்று பாராட்டுப் பத்திரம்  வழங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வெங்காயப் பொடி செய்முறை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆவலாக இருக்கிறதா ?

என் சமையலறையை (இங்கே) க்ளிக் செய்யுங்கள் .

நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்களேன்.
நன்றி!

Wednesday, 17 May 2017

பிருந்தாவிடமிருந்து வந்த மிரட்டல்!



நான் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது நாளே பிருந்தாவிடமிருந்து  மிரட்டல் வந்தது.

என் எதிரே அமர்ந்திருந்த பிருந்தா,  குனிவதும், நிமிர்வதுமாகவே இருந்தாள். நான் சொல்வது எதையும் அவள் லட்சியம் செய்வதாகத் தெரியவில்லை.நானோ பேசிக் கொண்டேயிருந்தேன்.ஆனால் அவளோ குனிவதும், நிமிர்வதுமாகவே இருந்தாள்.

'ஒன்று நான்  சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையா  எழுந்து போக  வேண்டும்.யார் தடுத்தார்கள் ? ' என்று கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன்.

பதவி ஏற்றுக் கொண்ட இரண்டாவது  நாளே இப்படியா?.. சற்றே மலைப்பாக இருந்தது. எப்படி பணியைத் தொடரப் போகிறேனோ  என்கிற கவலைப் பெரிய பெருமூச்சாய்  வெளியேறியது.

"பிருந்தாவைத்  தவிர்த்து விடு.இரண்டாம் நாளே ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதே  " என்று என் மூளைக் கட்டளையிட்டது.

ஆனால் கண்கள், மூளை சொல்வதைக்  கேட்டால் தானே!"கண் முன்னே அமர்ந்திருப்பவளை எப்படித் தவிர்ப்பது?"  கண்கள் கேட்டன.

மூளைக்கும் , கண்ணிற்கும் நடந்து கொண்டிருந்த போராட்டம் சில நிமிடம் கழித்து ஒரு முடிவிற்கு வந்தது.
ஆம். போராட்டத்தில்  கண்கள் வென்றன.

இதற்கு மேல் அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று என் உள்ளமும் இப்பொழுது கொடிப் பிடிக்க ஆரம்பிக்க,,
" பிருந்தா ! எழுந்திரு."  என்று கட்டளையிட்டேன்.

யாரையோ  நான் சொல்வது போல் பிருந்தா அமர்த்தலாக உட்கார்ந்திருக்க, கோபத்துடன்
" பிருந்த உன்னைத் தான் சொல்கிறேன் . எழுந்து வெளியே போ." குரலை உயர்த்தி பிருந்தாவைப் பார்த்து சொன்னேன்.

இதற்காகவே  காத்திருந்தாற் போல் , பிருந்தா  எழுந்து வெளியேறினார். ஆனால் போவதற்கு முன்பாக , என்னைப்  பார்த்து  ஒரு மிரட்டல் பார்வையை வீசத் தவறவில்லை.
அவள் வெளியே போகும் போது தான் அவள் கையை கவனித்தேன்.
கையில் அவள் வைத்திருந்தைப் பார்த்ததில்  என் அதிர்ச்சி பல மடங்காகியது.

அது என்ன கையில்? கோபத்துடன் கேட்டதற்கு., பிருந்தா ," நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் "என்று என் கையில் திணித்தாள்.

நல்ல வேளையாக  அவ்வழியே வந்த என் உயரதிகாரி  , என் கையில் இருப்பதைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால்.....என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?  என் மானம் அல்லவா கப்பலேறியிருக்கும்.

அவர் பிருந்தாவை விசாரிக்க ஆரம்பிக்க, அவள் ஓவென்று  அழ ஆரம்பிக்க அங்கிருந்த  எல்லோரும் என்னைக் குற்றவாளிக் கூண்டில்  நிற்க வைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அட... இப்படியெல்லாம் கூட செய்வார்களா? என்ன தைரியம் வேண்டும்  ! என்று ஆதங்கப்ட்டுக் கொண்டே நான்  இருக்க,  பிருந்தாவின் அழுகை ஓய்வதாயில்லை.

அவளைத் திட்டிய உயரதிகாரியோ போய் விட்டார். நானும் பிருந்தாவும் அறைக்கு வெளியே தனியே விடப்பட்டோம். எனக்கு இது புது அனுபவம். என் கையில் அவள் கொடுத்தது.  என் கைகளில்  நடுக்கத்தை ஏற்படுத்தியது . அதை  நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே!

ஆனால் பிருந்தாவிற்கோ .....இது பழக்கம் போலும்.  சட்டென்று அழுகை நின்று  போனது.  பிறகு 'நான் என்ன செய்ய' என்பது போல் என்னைப் பார்க்க  ஒன்றும் சொல்லத் தெரியாதவளாய்  நின்று கொண்டிருந்தேன்.

ஒரு சில வினாடிகள் தான். பிறகு சுதாரித்துக் கொண்டேன். அவள் என் கையில் திணித்த பாக்கெட் நாவலைக் காட்டி ,'இது முதல் முறை என்பதால் மன்னிக்கிறேன். .இனி ஒரு முறை நீ இப்படி நடந்து கொண்டால்....நீ  வரவே வேண்டாம்...........என் வகுப்பிற்கு'  என்று நான் கோபத்துடன் பொரிந்து தள்ளவும்,.

"சாரி....".அதையும் ஒரு மிரட்டல் தொனியில் சொல்லி விட்டு, ஒன்றுமே  நடவாதது போல் வகுப்பில் போயமர்ந்தாள் பிருந்தா.

அதே பிருந்தா ஒரு மாதத்திற்குள்  என் ஆதர்ச மாணவியானது தனிக் கதை.

இரண்டாம் நாள் விவகாரம் இப்படியென்றால் முதல் நாள் என் பதவி ஏற்பு  வைபவம்  எப்படி நடந்திருக்கும் என்று  தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்..


Monday, 24 April 2017

கள்ளன் எங்கே?

எனக்குத் திருமணமான புதிது.அப்போது எனக்கு சமையல்  அரையும் குறையுமாய்  தான் தெரியும்.

அப்போது ஒரு நாள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். என் கணவருக்கு   சகோதரி முறையாக வேண்டும் அவர்.

குசல விசாரிப்பெல்லாம் முடிந்த பின், காபி போட உள்ளே சென்றவரை நானும் தொடர்ந்தேன்.  டைனிங் டேபிளின் மேல்  வாழைப்பூ  ஒன்று பாதி ஆய்ந்த நிலையில் இருந்தது. காபி போட்ட பின்பு  வாழைப்பூவை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தார் அக்கா.

அப்பொழுது அவருக்கு பக்கத்து வீட்டில் இருந்து அழைப்பு வரவே  எழுந்து போய் விட, நான் அரிவாள் மனையை எடுத்து வாழைப்பூவை  நறுக்கி  நீரில் போட்டுக் கொண்டிருந்தேன்."சகோதரன் மனைவி கை வேலையில் கெட்டிக்காரி" என்று நல்ல பெயர் எனக்கு வராதா  என்கிற ஆசையில் நறுக்கஆரம்பித்தேன்.

எல்லாமே நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. சட்டென்று நறுக்க முடியாமல் திணறினேன் 'என்னவோ நறுக்க விடாமல் தடுக்கிறதே ' ....ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நறுக்க முயற்சிக்கும் போது  ," அடடா .... கள்ளனை எடுத்து விட்டு நறுக்கி வை ராஜி " சொல்லிக் கொண்டே வந்தார்  அக்கா. .

இவர் என்ன சொல்கிறார்?
 " கள்ளனா ?"  எங்கே என்று சுற்று முற்றும் பார்த்தேன்.

ஒன்றும் புரியாதவளாய், மீண்டும் நறுக்க முயற்சிக்கவும்,அக்கா , " ராஜி...ராஜி... கள்ளனை எடுக்க சொன்னது  வாழைப்பூவிலிருந்து. நீயோ சுற்று முற்றும்  தேடுகிறாய். உன் உள்ளம் கவர்ந்த கள்வனை சொன்னேன் என்று நினைத்து விட்டாயோ " என்று என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டினார்..

இன்று சட்டென்று அந்த சம்பவம் நினைவில் வந்து மோதியது. என் " Rajisivams Kitchen"channel இல் வாழைப்பூ  வடை செய்முறை சொல்லும் போது நானும் கள்ளனைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.  சேனல் டைரக்டராயிருக்கும் என்னவர், " எல்லாம்  நேரம் ராஜி.  நீ கள்ளனைத் தேடியது எனக்கல்லாவா தெரியும்." என்றார்.

இதோ வீடியோ உங்கள் பார்வைக்கு.



இதை ' Like', 'Share' & 'Subscribe'  செய்ய மறக்க வேண்டாமே ....ப்ளீஸ் ...
                                                          நன்றி !

Thursday, 2 March 2017

ராதா பாட்டியுடன் வருகிறேன். !

சமையல் குறிப்புகளை அஞ்சறைப் பெட்டியில் எழுதி வருகிறேன்.  அதையே this is raji's counter  என்று ஆங்கிலத்திலும்  எழுதிக் கொண்டிருக்கிறேன்.  பலரும் அறிவீர்கள்.

எல்லோரையும் எழுதிக் கொல்வது போதாது என்று  தோன்றியதால்,  நேரே  உங்கள்  வரவேற்பறைக்கே  வந்து  உங்களுக்கு சமையல் குறிப்புகள் கொடுத்தால் என்ன என்று தோன்றி விட , உடனே செயல் படுத்தி விட்டேன்.

டிவியில்  நான் வரப்போவதாக   நீங்களாகவே  நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை.

சொல்ல மறந்து விட்டேனே .... நான் மட்டுமில்லை என் அம்மாவும் என்னுடன் வருகிறார்..

எப்படி  என்று யூகித்து விட்டீர்கள் இல்லையா?

ஆமாங்க......You Tube வழியாகத் தான். நானும் என் அம்மாவும் சேர்ந்து  சமையல் குறிப்புகளை வாரி வழங்கப் போகிறோம். நீங்களும் ருசித்துப் பார்த்து  சொல்லுங்கள்.

 சமையல் ராணியான, என் அம்மாவின் பெயரில் " Radha Paati Recipes "  என்று ஆரம்பித்திருக்கிறேன்.

வீடியோ பார்த்து  உங்கள் மேலான கருத்துக்களை  தெரியப்படுத்துங்கள். இது என் முதல் வீடியோ. குறைகளுக்கு வாய்ப்புண்டு.. குறைகளை  என்னிடம் மட்டும் தெரிவியுங்கள். நிறைகளை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வீடியோ பார்த்து பின்  மறக்காமல் 'Like' மற்றும்  ' Subscribe' பட்டன்களை ஒரு தட்டித்  தட்டி  விடுங்கள்.

உங்களின் மேலான ஆதரவை  எதிர்பார்க்கிறேன்.
இதோ 'You Tube'.......




                                                        நன்றி! நன்றி! நன்றி!

Thursday, 16 February 2017

கற்சட்டியில் சமைக்கலாம் வாருங்கள் !

 ஒண்ட வந்த பிடாரியான பிட்சாவும், பர்கரும்,  நம் பாரம்பரிய தின்பண்டங்களான  சீடை , முறுக்கு , அதிரசம்.....போன்றவற்றை  விரட்டியது மட்டுமல்லாமல்,  சாதத்திற்குப் பதிலாக  நாம் பிரெட்  சாப்பிட ஆரம்பித்து விடுவோமோ  என்கிற  அச்சத்தையும்  உண்டு பண்ணி விட்டது. நம் உணவு முறை மாற்றத்தை நம் உடற்கூறு  ஏற்றுக் கொள்ளுமா அல்லது புது உணவு முறை நம்மைக் கொல்லுமா என்கிற மிகப் பெரிய பயம் தோன்றிய நேரத்தில் தான்.....மௌனமாய்  புரட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நம் சமையலறையில்  இப்பொழுது சிறு தானியங்கள்  வருகை புரிந்து நம்மைக் காப்பற்ற உறுதி கொண்டுள்ளன எனலாம்.

ஆரம்பத்தில், அவற்றை எப்படி சமைப்பது என்பது பற்றிய ஒரு சிறு தயக்கம் இருந்தது. ஆனால் இணையம்  அதற்கு பேருதவி  புரிந்தது எனலாம்.

சிறு தானியங்கள் சமைப்பது பற்றிய விடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறு தானிய உணவு  மிகப் பெரிய வரப் பிரசாதம் என்றும் சொல்கிறார்கள் .

சிறு தானிய வகையில், நான் வரகரிசி உபயோகம்  செய்ய ஆரம்பித்தேன்.பொங்கல்  செய்யும் போது நன்றாகவே வந்தது. அதையே சாதமாக சமைப்பது  என் திறமைக்கு சவாலாக இருந்தது.

வரகரிசியை  சாதாரண அரிசி போல் குக்கரில் வைத்தால் வரகரிசி கூழ் கிடைத்தது. பேசாமல் சாதத்தை ஒரு  டம்ளரில் கொடு. நான் அதில் சாம்பாரோ, ரசமோ, மோரோ கலந்து குடித்து விடுவேன் என்று சீரியசாய்  முகத்தை வைத்துக் கொண்டு என்னவர் அடித்த கிண்டலை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நகர்ந்தேன்.

வடித்தால் ஒருவேளை  நன்றாக வரும் என்று நினைத்து மறு நாள் சாதம் வடிப்பது போல்  வடிக்க ........ , அப்படி வடித்தால் கஞ்சி  வடிகட்டப் படுகிறதோ இல்லையோ , வரகரிசி கடுகு சைசில் இருப்பதால்  சாதமே கஞ்சியுடன் சென்று விடுகிறது. என்னவரோ பாத்திரத்திற்குள் எட்டிப் பார்த்து கண்ணிற்கு மேல் கையை அனைவாய்  வைத்து, " கண்ணிற்கு எட்டிய தூரத்தில் தான் சாதம் இருக்கிறது" என்று மீண்டும் என்னை நக்கலடித்தார். அன்று எப்படியோ சமாளித்தேன் .

பிறகு எப்படித்தான் இதை சமைப்பது  என்று யோசித்துக் கொண்டே  நம் கூகுளார்  உதவியை நாடினேன்.

"ஒரு பாத்திரத்தில் அரிசிக்கு வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் அப்படியே வைத்து கொதி வந்தவுடன், இறக்கி வைத்து தட்டால் மூடி, பிறகு இருபத்த்தைந்து நிமிடங்களில் திறந்தால் உதிர் உதிராக வரகரிசி சாதம் கிடைக்கும்." என்கிற செய்முறை கண்ணில் பட்டது.

எவர்சில்வர் பாத்திரத்தில், அப்படி செய்ததில் எனக்கு அப்படியொன்றும்  பெரிய திருப்தி கிடைக்கவில்லை.

மண் பாண்டத்தில் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிற உபரி செய்தியையும் இணையம் சொன்னது. மண் பாண்டம் நமக்கு சரிப்படுமா?  "யார் மேலாவது இருக்கும் கோபத்தில்   ' நங்' என்று நீ மேடையில் வைத்தால், மண் பாண்டம் உடைந்து மேடைக்கு அன்னாபிஷேகம் செய்து விடுவாய் . அது தான் நடக்கும். பிறகு நாம் எல்லோரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தான்  " என்று அவர்  எச்சரிக்க ...

அப்பொழுது தான்  சட்டென்று மின்னலாய் உதித்தது......
என் தம்பி மனைவி ஆறு மாதத்திற்கு முன்பாக  எனக்கு ஒரு கற்சட்டி  பரிசளித்திருந்தாள்.

அதை கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நாள் பழக்கி  விட்டு,  வத்தக் குழம்பிற்கு உபயோகித்து  வந்தேன். அதுவும் இரண்டொரு முறை  உபயோகித்தப் பின் கவிழ்த்து வைத்த நான் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்து விட்டேன்.

மண் பாண்டத்திற்குப்  பதிலாக இதை உபயோகித்தால் என்ன.....தோன்றவே  யோசனையை செயல் படுத்தி பார்த்தேன்..இது மட்டும் உடையாதா என்று கேட்பவர்களுக்கு, "மண் பாண்டம் அளவிற்கு சட்டென்று கற்சட்டி உடையாது".

கற்சட்டியில் வரகரிசி சாதம் உதிர் உதிராக வெந்து என்னை அசத்தி விட்டது.எதிர்பார்த்தப் பலன் கிடைத்து ,எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

கற்சட்டிக்காக இந்தப் பதிவா? வரகரிசிக்காக இந்தப் பதிவா என்று கேட்டால் இரண்டுக்கும் தான் ......

இந்தக் கற்சட்டி சமையல் பற்றித் தெரியாதவர்கள் இதைத் தெரிந்து கொள்வார்களே என்று தான் பதிவிட்டேன்.

அது என்ன 'கற்சட்டி' என்பவர்களுக்கு , இது மாக்கல்லால் தயாரிக்கப்பட்டது. நம் பாட்டிக் காலத்தில்  சைஸ் வாரியாக  அடுக்களையில்  உட்கார்ந்திருந்த கற்சட்டிகளைத்   தொலைத்து விட்டு ,'நான் ஸ்டிக்' போன்ற நவநாகரிக பாண்டங்கள் பின்னால் ஓடினோம். அது உடல் நலனிற்குக் கேடு விளைவிக்கும்  என்பது இப்பொழுது புரிய வர ..

மீண்டும் பாரம்பரிய  பாத்திரமான  கற்சட்டியும், மண் பாண்டமும்,   நம் இல்லங்களுக்கு வருகைத் தர ஆரம்பித்திருக்கின்றன.

கற்சட்டியில் வத்தக் குழம்பு  வைத்துப் பாருங்கள். அலாதி சுவையோடு இருக்கும். சமைக்கும் உணவும் அதிக நேரம் சூடாகவே  இருக்கும்.

அதோடு இப்பொழுது 'ஸ்லோ குக்கிங்' ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பரவலாக பேசப்படுகிறது. அதற்கும்  கற்சட்டி ஏற்றது தான்.கற்சட்டியில் அரிசியைப் போட்டு , அரிசிக்கு வேண்டிய அளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரண்டியால்  அவ்வப்போது கிளறி விட வேண்டும். ஐந்து பத்து நிமிடத்தில் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது  அடுப்பை அணைத்து விட்டு , கீழே  இறக்கி விடவும். ஒரு தட்டால் கற்சட்டியை மூடி விடவும்.

பதினைந்து நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தால் பொலபொலவென்று சாதம் நம்மைப் பார்த்து சிரிக்கும்.



இத்தனைப் பலன்கள் இருப்பதால் தான் அக்காலத்தில்  இந்தப் பாத்திரங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். நாம் தான் அருமை தெரியாது அதை  எல்லாம் குப்பையில் போட்டு  விட்டோம்.

இனியாவது  அதையெல்லாம்  மீண்டும்  உபயோகிக்க ஆரம்பிப்போம்.
நம் பாரம்பரிய சமையல்  முறைகளை மீட்டெடுப்போம் வாருங்கள்.

அட..... நீங்கள் எங்கே கிளம்பி விட்டீர்கள்? கற்சட்டி வாங்கவா? இல்லை  மண் பாண்டம் வாங்கி வரவா?

அது சரி....கற்சட்டியை எப்படி பழக்குவது என்று யோசிக்கிறிர்களா? இது உதவி....
இந்த வீடியோவைப்  பாருங்கள் புரியும்.



நன்றி !




உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்