Showing posts with label சூர்ப்பணகை. Show all posts
Showing posts with label சூர்ப்பணகை. Show all posts

Monday, 24 August 2020

கம்பரும், ஐஸ்வர்யா ராயும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-25)

Image Courtesy:DeviRajaraman.
"கம்பனும், மிளகாயும்" படிக்கலாம் இங்கே..

பக்கத்து வீட்டு ஜானுவின் திருமண வரவேற்பு.

நானும், என்னவரும் ஆஜர்.

மேடையில் பெண்ணும், மாப்பிள்ளையும் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்க நின்று கொண்டிருந்தனர்.

"ஆமாம்.. அது யாரது. ஜானுவின் பக்கத்தில்? தெரிந்த முகமாய் இருக்கு." சட்டென்று நினைவிற்கு வரவில்லை." மனம் குழம்பியது.

சில வினாடிகள் தான். கண்டு பிடித்து விட்டேன்.

ஜானுவின் அம்மா பட்டுப் புடைவை சரசரக்க , என்னருகில் வந்து ," வாங்கோ!" என்று சொன்னவுடன் , சிரித்துக் கொண்டே ,ஜானுவின் அருகில் நிற்பது உங்கள் தங்கை சுபா தானே. அடையாளமே தெரியல " என்றேன்.

சாதரணமாகவே நல்ல அழகு தான் இந்த சுபா. இப்ப மேக்கபின் கை வரிசையில் தேவதையாக ஜொலிக்கிறாள்.

மணப்பெண்ணுக்கு மட்டுமில்ல...இப்ப உறவினர்களுக்கும் பார்லர் பெண்மணி தேவையாயிருக்கு போலிருக்கு. 

இதெல்லாம் உலக அழகி திருமதி ஐஸ்வர்யா ராய் உபயம். காஸ்மெடிக் இண்டஸ்ரிக்கு நல்ல பிஸினஸ் நம் நாட்டில். நினைத்துக் கொண்டேன்.


"மேக்கப் " கலை ஒன்றும் நமக்குப் புதிது இல்லை. ராமாயணக் காலத்திலேயே இருந்திருக்கிறது.
இங்கே நான் சீதையைப் பற்றிப் பேசவில்லை. நான் சொல்வது சூர்ப்பணகைதான்.

சூர்ப்பணகை மேக்கப் போட்டுக் கொண்டேன் என்று உன்னிடம் வந்து சொன்னாளா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார். எப்படி என்று பார்ப்போமா?

காட்டில் ராமனைப் பார்க்கிறாள் சூர்ப்பணகை. ராமனின் அழகில் மதி மயங்கி எப்படியாவது ராமனைத் தன் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறாள். 
"ஆனால்,திருமகளின் வடிவமான சீதையோ ராமனின் பக்கத்திலேயே இருக்கிறாளே.
இவ்வளவு அழகான சீதையை விட்டு விட்டு அரக்கியான என் பக்கம் ராமன் எப்படித் திரும்புவான்." நினைத்துக் கொண்டவள் தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறாளாம்.

அரக்க குலத்திற்கு  உருவத்தை மாற்றிக் கொள்வது பெரிய விஷயமா என்ன... நினைத்தவுடன் அழகிய பெண் உருவெடுக்கிறாள் சூர்ப்பணகை. மேக்கப் போட்டுக் கொண்டிருப்பாளோ? 

அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு, எப்படி நடக்கிறாளாம்?

டங்...டங் என்று பூமியே அதிரும்படி அரக்கியாக  நடப்பாளா என்ன?

இல்லையாம். 

மெல்ல...மெல்ல ஒயிலாக நடந்து வருகிறாளாம்.

அவள் நடந்து வருவது, வின்னுலகில் இருந்து இறங்கி வரும் தேவ கண்ணிகைப் போல் (ஒப்பனை செய்து கொண்டு) வருவதைப் போலிருந்தது என்று கம்பர் சொல்கிறார். 

செம்பஞ்சும், தளிரும் நாணும்படி இருந்ததாம் அவள் பாதங்கள். தாமரை மலர் போன்ற பாதங்களை மெல்ல அடியெடுத்து வைத்து, மயில் போல்..அன்னம் போல்... என்று வர்ணித்துக் கொண்டே வந்த கம்பரை யாரோ தடுத்து நிறுத்துவது போல் தெரிகிறது.

"யார் என் சிந்தனையக் கலைப்பது? என்று உற்று கவனிக்கிறார் கம்பர்.

அட.. அவரின் மைண்ட் வாய்ஸ்.

அவரின் மைண்ட் வாய்ஸ், "கம்பரே...ஸ்டாப்...ஸ்டாப்.... கொஞ்சம் ஓவரா சூர்ப்பணகையை வர்ணிக்கிறாப் போல் தெரிகிறதே.  அவள் வில்லி என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா.. இல்லையா?" கேட்டிருக்கும்.

சட்டென்று சுதாரித்துக் கொள்கிறார் கம்பர்.." ஆமாம்...ஆமாம்.. சூர்ப்பணகையை ரொம்பவும் வர்ணித்து வைத்து விடப் போகிறேன். அங்கு ராமன் உட்கார்ந்திருக்கிறான். ராமன் ஏகப் பத்தினி விரதன் ஆயிற்றே.கொஞ்சம் அடக்கி வாசிப்போம்." நினைத்துக் கொண்டார்.

வர்ணிப்பை  off-set செய்ய வேண்டுமே...என்று மனம் நினைத்தவுடன்...அவருக்கு வார்த்தை வந்து விழுகிறது. மனம் நினைப்பதை,எழுத்தாணி கொண்டு செலுத்துகிறது. 

"நஞ்சம்"- என்கிற வார்த்தையைப் போடுகிறார். இத்தனை அழகான சூர்ப்பணகை, கொடுமையான விஷம் போல் வந்தாள் என்று சொல்லி முடித்து விட்டால் போதுமே!  ஆனால் அவர் மனம் ஒப்பவில்லைபோலும். இன்னும் கடுமையாக சூர்ப்பணகையை சாட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

கம்பர் ஆச்சே...

"வஞ்ச மகள் " என்று சொல்லி வஞ்சனை நிறைந்தவளான சூர்ப்பனகை நடந்து வந்தாள் என்று முடிக்கிறார்.


அவரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்...

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்.

செம்பஞ்சும், விளங்குகின்ற மிகச் செழித்த தளிர்களும் நாணும்படி, சிறந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள் உடையவள் ஆகி, அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும்,
அன்னம் போலவும்,விளங்குகின்ற வஞ்சிக் கொடி போலவும், கொடிய விடம் போலவும், வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.
அவர் எழுதிய அந்த நான்கு வரிகளையும், சற்றே வாய் விட்டுப் படித்து, சந்த நயத்தை அனுபவியுங்கள்.  ஓசை நயம் சூர்ப்பணகை அடி எடுத்து வைப்பது போலவே இருக்கும்.




சந்தத்தையும், பொருளையும், சூர்ப்பணகை நடந்து வருவதையும் பார்த்துக் கொண்டிருங்கள். வேறொரு கம்பன் காவியப் பாடலுடன் வருகிறேன்.

நன்றி.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்