Sunday, 2 December 2012

காணவில்லை!! காணவில்லை!!

காலை எட்டு மணி இருக்கும் .
"அரவிந்த் என்  ஐ பேட் எங்கே?'பக்கத்து வீட்டில் அப்பா தன் பையனிடம் கேட்கும் குரல்.
"கொண்டு வந்து கூகுள் மேப் ஐ ஓபன் செய்து மைலாப்பூர்  டு ஆவடி ஷார்ட்டெஸ்ட்
ரூட் போட்டுவை. குளித்து விட்டு வருகிறேன் "என்று கூற அதை செய்து விட்டு கிடைத்த நேரத்தில் 'angry birds' விளையாடிக் கொண்டிருந்தான்.

அடுக்களையிலிருந்து அவன் அம்மா, ரசத்திற்கு, கடுகு தாளித்து க் கொண்டே
"அரவிந்த், கொஞ்சம் தண்ணி கேன் பையனுக்கு போன் போடேன் "என்று கூற
அதை செய்து விட்டு வேகவேகமாக பள்ளிக்கு செல்ல  தயாரானான்.

அப்பாவுடன் டைனிங் டேபிளில், அமர்ந்து இரண்டு இட்லிகளை வேக வேகமாக சாம்பாரில் தோய்த்து, பாதி மென்று ,முழுங்கி வைத்தான்.
அதற்குள் அவன் அப்பா "சரி சாப்டாச்சா,
போய் காரில் வெயிட் பண்ணு.நான் உன்னை டிராப் செய்து விட்டு ஆவடி செல்ல வேண்டும். கார் ம்யுஸிக் ஸிஸ்டத்தில், ஒரு நல்ல  சிடி யைப்
போடு" என்று சொல்ல அப்பாவுக்கு பிடித்த வீணை காயத்ரியின் ராகா வேவ்ஸ் போட ஓடினான்.

அவன் அம்மா கதவைப் பூட்டிக் கொண்டு ,ஸ்டார்ச் போட்ட  அழகான பேபி பிங்க் காட்டன் சாரி கட்டிக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

மாலை அரவிந்த் வீட்டிற்கு வந்ததும் பிரிட்ஜ்லிருந்து அவனே பாலை எடுத்து மைக்ரோவேவில் சூடு பண்ணிக் குடித்து விட்டு தனக்குப் பிடித்த கார்ட்டூன்
பார்த்துக் கொண்டே 'லேஸ்' பாக்கெட்டை காலி பண்ணிக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு கேஸ் வந்தால் வாங்கி வைக்கவும், தண்ணீர் கேன் வந்தால் அலமாரியில் இருந்து பணத்தைக் கொடுத்து,மீதி சில்லறை கரெக்டாக பெற்றுக் கொள்ளவும்,ஆன் லைனில் ஆர்டர் செய்யவும்அரவிந்திற்கு  கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

வெளி நாட்டிலிருக்கும் சித்தியிடம் ஸ்கைப் செய்து பேசக் கற்றுக் கொண்டிருக்கிறான்.
இன்னும் எவ்வளவோ விஷயங்கள் யாருடைய உதவியுமின்றி செய்வான்.
இதிலெல்லாம் என்ன அதிஸயம் என்கிறீர்களா?

விஷயத்திற்கு வருகிறேன்.
இந்த அர்விந்திற்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.குறைந்த பட்சம்
15 வயது என்று தானே நினைக்கிறீர்கள்.
அது தான் இல்லை.
அவன் 8 வயதே நிரம்பிய 3ம்வகுப்பு சின்னஞ்சிறு பச்சிளம் பாலகன்.
அவன் பெற்றோரே தங்கள் வசதிக்காக அவனுடைய  குழந்தைத்தனத்தை அவனிடமிருந்து திருடி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்களோ?
இது ஒரு கற்பனை தான்.

உண்மையில் ஐந்து அல்லது ஆறு வயது குழந்தைகளையே, பெரியவர்கள் போல் நடத்தி விட்டு,அவர்கள், எல்லார் முன்பாகவும் பெரிய மனிதத் தோரணையில் நடக்கும் போது மட்டும் நமக்குப் பிடிப்பதில்லை.
'பிஞ்சிலே பழுத்தது' என்று கடுப்படிக்கிறோம்
இது நியாயமா? சொல்லுங்கள்.

குழந்தைகளிடமிருந்து திருடு போன குழந்தைத்தனத்தை நாம் தான் கண்டு பிடித்து கொடுக்க வேண்டும்.
ஆனால்.........
 எப்படி?
யாரிடமிருந்து?
எங்கேயிருந்து?
எப்பொழுது?
இதற்கெல்லாம் நம்மிடம் பதில் இருக்கிறதா?
தெரியவில்லையே.......................



26 comments:

  1. ராஜி,

    நம்ம ஊர் குழந்தைகளுக்கு புத்தகமூட்டை, அளவுக்கதிகமான வீட்டுப்பாடம் இவற்றால் இளம் வயதிலேயே முதுமை வந்துவிடுவதாக‌ கேள்விப்பட்டிருக்கிறேன்.அத்துடன் பெற்றோரும் சேர்ந்துகொண்டால் அவ்வளவுதான்.எப்போது அவர்களின் குழந்தைத்தனத்தை ரசிக்கப்போகிறோமோ தெரியவில்லை!நல்ல பதிவு.தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சித்ரா,
      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
      இப்பொழுது சில காலமாகவே குழந்தைகளை நாம் இப்படி தான் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
      அதனால் தான் இந்தப் பதிவு.
      பாராட்டுக்கு நன்றி.
      ராஜி

      Delete
  2. குழந்தைகளிடமிருந்து திருடு போன குழந்தைத்தனத்தை நாம் தான் கண்டு பிடித்து கொடுக்க வேண்டும்.
    ஆனால்.........
    எப்படி?
    யாரிடமிருந்து?
    எங்கேயிருந்து?
    எப்பொழுது?
    இதற்கெல்லாம் நம்மிடம் பதில் இருக்கிறதா?
    தெரியவில்லையே.......................//

    மிகவும் நியாயமான ஆதங்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றி வைகோ சார
      இது என்னுடைய நெடுநாளைய ஆதங்கம் தான்.
      வருகைக்கும்,ஊக்குவிப்புக்கும்
      நன்றி.

      ராஜி

      Delete
  3. வணக்கம் ராஜி,

    அருமையான எழுத்துநடை, அப்பா - அம்மா இருவரும் வேலைக்குப்போகும் தனிக்குடும்பத்தைப் பற்றி அழகா எழுதியிருக்கீங்க... பாராட்டுகள்.

    தொடர்ந்து எழுதுங்கள். உங்களுடைய பதிவுகள் சில திரட்டிகளில் பகிர்ந்துக்கொண்டால் நிறைய வாசகர்கள் வருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆகாஷ்
      வணக்கம்.
      பின்னூட்டங்கள் தான் எழுதத் தூண்டுகின்றன.
      உங்களுடைய யோசனைக்கு நன்றி.

      ராஜி.

      Delete
  4. Manjula Subramanian4 December 2012 at 10:05

    Good one! It deserves a better place than this so that it will reach out to many. U made the reader think!
    (On a funny note-Unga kitta irundhu innum neraya edhir parkirom :-))

    ReplyDelete
    Replies
    1. மஞ்சுளா,
      வணக்கம்.
      உங்களுடைய பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி. உங்களை போன்ற வாசகர்களின் பின்னூட்டங்கள் என்னை இன்னும் நன்றாக எழுதத் தூண்டுகின்றன.
      நன்றி.
      ராஜி

      Delete
  5. யதார்த்த நிலையை அப்பட்டமாக சொல்லி இருக்கீங்க இது கற்பனைபொல்லவே தோனலே. இப்ப பெரிம்பாலான வீடுகளில் நடக்கும் உண்மை நிலைதான். குழந்தைகள் நிலமை நினைத்துப்பார்க்கவே கஷ்டமா இருக்குதான்

    ReplyDelete
    Replies
    1. லஷ்மி அம்மா,
      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
      நான் இப்பொழுது சென்னையில் தான் இருக்கிறேன்.சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் இருக்க நேர்ந்தது.
      டெல்லியில் இல்லாவிட்டால் என்ன.சென்னையில் என் இல்லத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
      வாருங்கள்

      அன்புடன்,
      ராஜி.

      Delete
  6. ரொம்ப சரியா எழுதி இருக்கீங்க.... சின்ன வயசிலேயே நிறைய சுமை இருப்பதால், அவர்களுடைய குழந்தை தனமே காணாமல் போய் விடுகிறது....

    ReplyDelete
    Replies
    1. பிரியா ,
      வாருங்கள் .உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
      நான் சில நாட்களாக ஊரில் இல்லாததால் பதில் எழுத தாமதம்.
      வருந்துகிறேன் .உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் தான் என்னைப்
      போன்றவர்களை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன.நானும்
      உங்கள் வலை தளத்திற்கு 'ரசிக்கவும் ருசிக்கவும்' வருகின்றேன் .
      வந்து தொடர்கிறேன் ,
      நன்றி.

      ராஜி.

      Delete
  7. அவன் பெற்றோரே தங்கள் வசதிக்காக அவனுடைய குழந்தைத்தனத்தை அவனிடமிருந்து திருடி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்களோ?//

    மிக அருமையான, மனதில் வலியைக் கொடுக்கும் வரிகள்! என் நெடுநாளைய ஆதங்கத்தை அப்படியே அழகாக பிரதிபலிக்கிறது உங்கள் பதிவு! எல்லா இடங்களிலும் இந்த பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது! மொபைலிலும் கணினியிலும் விளையாடும் குழந்தைகள் ஐந்து வயதிலேயே கண்னாடி அணிவதைப்பார்க்கும்போது வேத‌னையாக இருக்கிறது! கள்ள‌ங்கபடில்லாத குழந்தைத்தனம் இப்போது குழந்தைகளிடம் எங்கே இருக்கிற‌து?

    அடிக்கடி இது போன்ற பதிவுகள் எழுதி நானும் அவ்வப்போது புலம்பிக்கொன்டிருக்கிறேன்! புலம்ப மட்டும் தான் முடிகிறது!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மனோ.
      உங்கள் வருகைக்கும்,ஆதங்கத்திற்கும்,பாராட்டுக்கும்,
      நன்றி.உங்களுடன் இணைந்து,இது போன்ற பதிவுகள் மூலம் விழிப்புணர்வு கொண்டு வர முடிகிறதா? என்று பார்க்கிறேன்.
      இது போன்ற பாராட்டுக்கள் எனக்கு வலிமை கொடுக்கிறது.
      நன்றி.
      ராஜி

      Delete
  8. ஆதங்கம் இருக்கிறது ....

    பெற்றோரே தங்கள் வசதிக்காக அவனுடைய குழந்தைத்தனத்தை அவனிடமிருந்து திருடி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்களோ?//

    மீட்க வழிதான் தெரியவில்லை !1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ராஜராஜேஸ்வரி,
      உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

      ராஜி

      Delete
  9. வணக்கம்

    20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு அழகான மொழி நடையில் வாசக உள்ளங்களை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன்,

      வணக்கம்.
      நன்றி ரூபன். என் பதிவு வலைசரத்தில் அறிமுகமாயிருப்பதை முந்தி வந்து தெரிவித்ததற்கு.
      நம் எழுத்துக்கு கிடைக்கும் அங்கீகாரம் தானே நமக்கு மிகப்பெரிய பரிசு. அந்த வகையில் எனக்கு கிடைத்திருக்கும் பரிசு பற்றி எனக்கு தெரிவித்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி.
      உங்கள் பாராட்டுதலுக்கும் நன்றி ரூபன்.
      நட்புடன்,
      ராஜி.

      Delete
  10. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

      ராஜி

      Delete
  11. குழந்தைகளிடமிருந்து திருடு போன குழந்தைத்தனத்தை நாம் தான் கண்டு பிடித்து கொடுக்க வேண்டும்.//

    ஆஹா! உண்மை உண்மை நீங்கள் சொல்வது ராஜி குழந்தைகளுக்கு கற்ருக் கொடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய கற்றுக் கொடுத்து அவர்கள் கள்ளமில்லமல் விளையாடி கழிக்கும் பொழுதை திருடிக் கொண்டோம். அதை அவர்களீடம் கொடுத்து என்றும் குழந்தையாக இருக்கும் மனதை கொடுக்க வேண்டும்.
    அருமையாக எழுதிவிட்டீர்கள்.
    வாழ்த்துக்கள். மனோ அவர்கள் பதிவை வலைச்சரத்தில் குறிபிட்டமைக்கு அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி .
      என் பதிவைப் பாராட்டியதற்கும், வல்ச்சர அறிமுகத்தின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      ராஜி

      Delete
  12. வைடூரியமாக மின்னுகிறீர்களே இன்றைய வலைச்சரத்தில்! பாராட்டுக்கள் ராஜி!

    அருமையான இந்தப் பதிவு திருமதி மனோ அவர்களால் அடையாளம் காட்டப் பட்டிருப்பது உங்களுக்குக் கிடைத்திருக்கும் புத்தாண்டுப் பரிசு!

    மேலும் மேலும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி,

      ஆமாம். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
      இன்று காலையில் பயங்கர ஆச்சர்யம். அதனால்,என் உணர்வுகளை இன்று ஒரு பதிவாகவே எழுதிவிட்டேன்.

      உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      அன்புடன்,
      ராஜி.

      Delete
  13. அன்புள்ள ராஜி,
    மறுபடியும் இந்த பதிவு வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. பாராட்டுக்கள்.
    ஊரில் இல்லாததால் பல பதிவுகள் படிக்க முடியவில்லை. கூடிய விரைவில் படித்து பின்னூட்டம் கொடுக்கிறேன். சற்று அவகாசம் கொடுங்கள் ப்ளீஸ்!

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் இந்த பதிவை கவிநயா குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள் ராஜி.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்