Sunday 23 June 2013

தயிர் புராணம்.







" உங்கள்  சாம்பார் மட்டும் எப்படி இவ்வளவு  சுவையாக வாசனையாக
இருக்கிறது. உங்கள் சாம்பார் பொடி ரகசியத்தை சொல்வீர்களா? "

"உங்கள் ரசத்திற்காகவே இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடப்

போகிறேன் "

இவையெல்லாம் என் தோழிகளும்,  உறவினர்களும்  என்

சமையலைப் பற்றிப் புகழ்ந்து  கூறும் வார்த்தைகள்.
Note: 
வீட்டிலுள்ளவர்கள்  என் சமையலை  இப்படிப் புகழ்வதில்லை.
வெளியில் இருப்பவர்கள் கண்களுக்கு  சமையலில்  
புலியாகத தெரியும் நான்  வீட்டில் இருப்பவர்களுக்கு எலியாகக் கூட
தெரியவில்லை என்பது தான் உண்மை.

அதிலும் என் கணவரிடம் கேட்டால் ,"ராஜி மிகவும் நன்றாக

வெந்நீரும், தயிரும்  செய்வாள் " என்று  நக்கலடிப்பார்.

ஆனால் நான் நிஜமாகவே தயிர் உறைய வைப்பதற்கு  திண்டாடின கதை

இருக்கிறதே  .......அது பெரிய ராமாயணம்.அவருக்கு  நிஜமாகவே
தயிரை கண்ணில் காட்டாமல்  திண்டாட விட்டிருக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பு.

ஸ்டாப்..... ஸ்டாப் .... பல வருடங்கள் என்று தான் சொன்னேன். உடனே

A.D. யா  B.C யா என்று கேட்காதீர்கள்.
இளம் தம்பதிகள் நாங்கள்.

இப்பொழுது தான் சமீபத்தில்  மணமானவர்கள்.

எங்களுக்குத் திருமணமாகி ஒரு முப்பத்தாறு வருடம் தான் ஆகிறது.
இளமையின் வாயிற்படியில் பேத்தி பேரன்களுடன்  நிற்கிறோம்.

சரி. தயிர் விஷயத்திற்கு வருகிறேன்.

எங்களுக்குத் திருமணமான புதிது.
டில்லி வாசம்.

புதுக் குடித்தனம்.சமையல், வீட்டிற்கு சாமான்கள் வாங்குவது என்று 

எல்லாவற்றிலும் trial and error தான்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

ஒரு முறை மாதாந்திர சாமான் லிஸ்ட் எழுதும்போது , பாயசத்திற்கு சேமியா கால் கிலோ, ஏலக்காய் கால் கிலோ(தவறுதலாக எல்லாம் இல்லை) என்று லிஸ்ட் எழுதி கடையில் கொடுத்து விட்டேன்.
மளிகைக் கடைக்காரரே  அதை " எடிட் "  செய்து இரண்டு ருபாய்க்கு
ஏலக்காய் போதும் என்று  கொடுத்தார் என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன் .

இப்படித் தப்பும் தவறுமாகத தான் போய் கொண்டிருந்தது எல்லாம்...

ஆனாலும், அது ஒரு கனாக்காலம் தான்
இந்த ரேஞ்சில் போய்கொண்டிருந்த குடித்தனத்திற்கு, குளிர்  காலம்
வந்து  இன்னும் கொஞ்சம்  குழப்பியது.

முதல் மழை போல் ,முதல் குளிர் எங்களுக்கு டெல்லியில்.


எல்லோரும்  ஸ்வெட்டர் ,ஷால் எல்லாம் போட்டுக் கொண்டு  " ரோஜா "

படத்தில் வரும் தீவிரவாதி போல்  நடமாடிக் கொண்டிருந்ததை
பார்த்து அதிசயத்தேன். 
ம்ம்ம்......நானும்  அப்படி த்தான் .

அந்தக் குளிரில் எதை சமைத்தாலும்  சட்டெனக் குளிர்ந்து போய்
விடும்.
ஒரு நாள் எப்பொழுதும் போல் சாதத்திற்கு தயிர் போட்டுக்
கொள்ளலாம் என்று எடுத்தால் ,....பாலாகவே இருந்தது.  முதல்
நாளிரவு உறை ஊற்றின ஞாபகம்  இருந்தது.உறை  ஊற்றினேனா  இல்லையா .....
என்கிற சந்தேகம்......

அடுத்த நாளும் இப்படியே ஆயிற்று. அதற்கு அடுத்த நாளும் அப்படியே....
ஊரே பிரிட்ஜ் மாதிரி இருக்கிறதே, அது தான் காரணமோ என்று குழம்பினேன்.

என்னவரோ ," தயிராவாது சரியாக செய்வாய் என்று எதிர் பார்த்தேன்.

அதுவம் இல்லையா..." என்று உதட்டை பிதுக்க..

எனக்கு மானப் பிரச்சினையானது. எப்படியாவது தயிர்  செய்யக்

கற்றுக் கொள்ளத் தீர்மானித்தேன். அதுவும் போர்க்கால அடிப்படையில்.

தயிர் செய்யக்.... கற்றுக் கொள்ள வேண்டுமா .. என்ன? 
 நினைப்பீர்கள் எல்லோரும்.
 தொடர்ந்து படியுங்கள் .தயிர் செய்வது எவ்வளவு
கஷ்டம் என்று உங்களுக்கே புரியும்.

என் தயிர்  பாடம்  இதோ .....

எதிர் வீட்டில் இருந்த பஞ்சாபி  அம்மாவிடம் ஆரம்பித்தேன்.

உடைந்த ஹிந்தியில் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

அவரும் ," ஆமாம் குளிரில் தயிர் உறைவது கொஞ்சம் கஷ்டம் தான் ."

(" Note this point என்னவரே  " என்று சொல்லியாயிற்று. ஆனால்
அவர் காதில் வாங்கினால்  தானே.....'எனக்குத் தெரியாது 'என்று நினைக்கும் என் வாழ்க்கை துணைவரிடம் ....என்னத்தை சொல்ல ...)

அந்த அம்மா சொன்ன மாதிரி மறு நாள் உறை ஊற்றி , ஸ்டவ்

மேலேயே  வைத்து விட்டேன்.

மறு நாள் ஆசையாக எடுத்தால் ," நீ ஸ்டவ் மேல் வைத்து

விட்டால்....நான் தயிராகி விடுவேனா  என்ன? " என்று என்னைப்
பார்த்து  சிரித்தது  பால்.

வேறு என்ன வழி? யோசனை பலமானது.

இப்பொழுது போல் போன்  வசதியில்லையே,சென்னையிலிருக்கும் அம்மாவைத் தொடர்பு கொள்ள. கடிதப்போக்குவரத்தோ  ஒரு வாரத்திற்கு மேல் ஓடி விடும்.
என்று யோசித்துக் கொண்டே , அஜ்மல்கான் ரோடில் நடக்கும் போது கண்ணில் தென்பட்டது  ஸ்வீட் கடை.

நாவில் நீர் ஊறியது .  ஸ்வீட்டைப் பார்த்து அல்ல .கல்லாவிற்கருகில்

பெரிய மண் சட்டியில்  இருந்த ,கட்டித் தயிரைப் பார்த்து தான்.

அட.....தயிர் ....என்று  காணாததைக் கண்டது மாதிரி (உண்மையில்
காணாது தானே) கத்தினேன்.

கத்தியால் வெட்டும் போல் இருந்த தயிரை  வாங்கும் போது    வேறு ஒரு யோசனை  தோன்றியது. 


ஒரு வேளை  ,மண் சட்டியில் உறை 
ஊற்றினால் தயிர் கட்டியாக உறையுமோ  என்று சின்ன ஆசை வந்தது.

அதை நடைமுறைப் படுத்த  மண் சட்டியைத் தேடிப் பிடித்து வாங்கிக்

கொடுத்தார் என் கணவர்.

வாங்கிய அன்றே ,பாலைக் காய்ச்சி உறை ஊற்றின பின்,  ஆடாமல்

அசையாமல்  (இது என் கணவருக்கு , அவர்  ஆபிசில் கிடைத்த டிப்ஸ்)
சர்வ ஜாக்கிரதியாக , மெதுவாக ,கீழே வைத்தேன். தயிர் உறைந்தால்,
பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு
படுத்தேன்.

மறு நாள் காலை முதல் வேலையாக ,மண் சட்டி மூடியைத் திறந்து,

மெதுவாக.... ஒரு ஸ்புனால்  தொட்டேன். தயிரை  டிஸ்டர்ப் செய்யக்
கூடாதல்லவா?

" லொடக் " என்று ஸ்பூன்  உள்ளே போனது. " நான் இன்னும்

பாலாகத் தான் இருக்கிறேன் " என்று சொல்லாமல் சொல்லியது
பால்.

சரி. இதற்கு மேல் என்ன செய்வது? வெறுத்து தான் போனேன்.


அப்படி,இப்படி, கடையில் தயிர் வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தோம்.

இப்போழுது போல், sealed packet இல்  தயிர் கிடைக்காது.

அதனால் தான் வீட்டில் தயிருக்காக பிரம்மப் பிரயத்தனம்  எடுத்துக்

கொண்டேன்.

அப்பொழுது ஒரு நாள் இவர் நண்பர் வீட்டிற்கு  சாப்பிடக் கூப்பிட,

அங்கு சென்றோம். ஆசையாய் காத்திருந்தேன்.... தயிருக்காக.

வந்தது அந்த நொடியும்.

என் தட்டில் கட்டித் தயிர்.ஆசையாய் சாப்பிட்டுக் கொண்டே.....
என் கேள்விகள் ஸ்டார்ட்....

என்ன பால் வாங்குகிறீர்கள்?

இது வாங்கிய தயிரா? இல்லை வீட்டிலேயே உறை ஊற்றியதா?
கண்டிப்பாக அந்தம்மா குழம்பிபோயிருக்க வேண்டும். ஆனாலும் ஒரு
தயிர் டிப்ஸ் கிடைத்தது.

அந்தம்மா சொன்னபடி  பாலை உறை ஊற்றி கோதுமைமாவு டின்னிற்குள் 
டைட்டாக  மூடி வைத்தேன்.

ம்க்கும்.....அதுவும் எனக்கு வேலை செய்யவில்லை.

என்னை சுற்றி எல்லோருமே வேண்டுமென்றே  நான் தயிர்
சாப்பிடக் கூடாதென்று  சதி வலை பின்னுகிறார்களோ? அதுதான் தயிர் ரகசியத்தை யாருமே சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் போல் என் கணவரோ

"கவலையே பாடாதே  . இனிமேல் தயிர் என்று பேப்பரில் எழுதிக்
கொடு பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விடுகிறேன் "  என்று சொன்ன
போது அழுகை வராதது தான் குறை..

யார் என்ன சொன்னாலும் அந்த  யோசனையை நடைமுறைப் படுத்த

தவறியதேயில்லை.
ஆனால் எதுவும் சரியாக வரவில்லை.
கடைகாரர் அருளினால் தான் தயிர்  சாப்பிட்டோம்.

இந்த தயிர் கூத்தும ஒரு நாள் முடிவிற்கு வந்தது.

ஆமாம் .ஒரு நாள் தயிர் உறைந்தே விட்டது.(ஒருபக்கம் ஆச்சர்யம்.ஒரு பக்கம் அளவிட முடியாத சந்தோஷம்  எனக்கு)
காரணம் குளிர் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது.
அன்று நான் தயிருக்கு விழா எடுக்காதது தான்  பாக்கி.

இப்பொழுது உங்களுக்குப் புரிந்ததா? தயிர் செய்வது எவ்வளவு
கஷ்டம்  என்று .....ஒத்துக் கொள்கிறீர்கள் தானே!

இப்பொழுது  மூன்று வருடத்திற்கு முன்பாக மீண்டும் டில்லி வாசம் .

மீண்டும் "தயிர் புராணமா"? என்று சலித்துக் கொள்ள வேண்டாம்.

Nestle,Amul,Mother Dairy என்று பலரின் உதவியுடன்  தயிர்
சாப்பிட்டோம்.
வாழ்க்கைமுறை எவ்வளவு  சுலபமானது பார்த்தீர்களா?

image courtesy--google.

42 comments:

  1. இப்போது எல்லாமே எளிது...

    தயிர் புராணம் அருமை....!

    ReplyDelete
    Replies
    1. முந்தி வந்து பின்னூட்டம் இட்டு சென்றதற்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  2. குளிர் பிரதேசத்தில் மாட்டிக்கொண்டால் இதெல்லாம் ஒரு அனுபவம்தான், இல்லையா ராஜி மேடம்? தயிருக்கு பட்ட பாட்டை சொல்லீட்டீங்க...அப்ப இந்த இட்லி மாவு??! அதுக்கென்ன பண்ணீங்க??! :)))

    நியூ ஜெர்ஸி வந்து செட்டில் ஆகியிருப்பீங்க என நினைக்கிறேன், கமென்ட் போட வேண்டும் என நினைத்து நினைத்தே உங்க பதிவுகள் இரண்டை மிஸ் பண்ணி, இந்தப் பதிவுக்கு கரெக்ட்டா வந்துட்டேன்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஹி,
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
      இட்லி மாவு என்ன செய்தேன் என்று தெரிந்து கொள்ள ஆவலா? இட்லி புராணம் ஒன்று எழுதிவிட்டால் ஆச்சு.

      Delete
  3. தயிர்புராணம் அருமை.
    என் பெண் குளிர் காலத்தில் இளஞ்சூட்டில் தயிருக்கு உறை ஊற்றி வெயிலில் வைத்து விடுவாள். அல்லது ஹாட்பேக், அதற்கு என்று ஒரு மெஷின் அதில் பாலை ஊற்றி உறை ஊற்றி பிளக்கில் மாட்டி ஒரு நிமிடம்வைத்து விடுவாள்.டெல்லியில் குளிரில் அவசரத்திற்கு தயிர், மற்றும் இட்லி மாவு கிடைப்பது கஷ்டம். மாவு அரைத்து ஸ்வெட்டர்சுற்றி புளிக்க வைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும். உங்கள் தயிர் டிப்ஸ் எனக்கு மட்டுமல்ல படிப்பவர் எல்லோருக்குமே உபயோகமாயிருக்கும்.
      நன்றி.

      Delete
  4. தயிர் புராணம் நல்ல (நகைச்)சுவை. சிறுகதை போல ஆரம்பம் முதல் முடிவு வரை எதிர்பார்ப்போடு இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ சார். உங்கள் வருகைக்கும், என் தயிர் புராணத்தை ரசித்து படித்து பாராட்டியதற்கும்

      Delete
  5. Heater பக்கத்தில் வைத்தால் தானாகவே புளித்துவிடும். தயிர், இட்டலி மாவு போன்றவை புளிக்க, அதாவது நொதிக்க அறையின் வெப்பநிலை வேண்டும், அவ் வெப்பநிலையில் தான் நுண்ணுயிர்கள் புளித்து தயிராகவே, இட்டலி மாவாகவோ உருமாறும். கடைகளில் கிடைக்கும் தயிரை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நிரஞ்சன்.தொடர்ந்து என் தளத்திற்கு வந்து கருத்திட்டால் மகிழ்வேன்.

      Delete
  6. தயிரைப்போலஅருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  7. எங்கள் ஊரிலும் மழைகாலத்தில் தயிர் உறைவது கஷ்டம் தான். பாலை கை பொறுக்கும் சூட்டிலேயே உறை ஊற்றி காப்பி ஆற்றுவது போல நன்றாக ஆற்றி வைத்துவிடுவேன். அடுத்த நாள் தயிர் ரெடி. காலையில் எழுந்தவுடன் எடுத்து பிரிட்ஜில் வைத்து விடுவேன்.
    இதை முயற்சி செய்யுங்கள் - மறுபடி குளிர் காலத்தில் டில்லியில் மாட்டிக் கொண்டால்!

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் தில்லி வாசமா? ..... நினைத்தாலே குளிர்கிறது.ஆனால் உங்கள் தயிர் யோசனையை வேண்டும்போது நடைமுறைபடுத்த மறக்க மாட்டேன்.
      நன்றி ரஞ்சனி உங்கள வருகைக்கும்,கருத்துரைக்கும்,தயிர் டிப்ஸ்க்கும்.

      Delete
  8. அப்பப்பா என்ன ஓரு தயிர் புராணம்! சுவை.
    அதைத் தாங்கள் எழுதிய விதமும் ரசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி , உங்கள் வருகைக்கும் என் தயிரை சுவைத்து படித்ததற்கும்.

      Delete
  9. //இப்பொழுது உங்களுக்குப் புரிந்ததா? தயிர் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று .....ஒத்துக் கொள்கிறீர்கள் தானே!//

    மஹா கஷ்டம் தான். வெயில் காலத்திலும், மின்தடை நேரங்களிலும் ஒருவிதமான கஷ்டம். குளிர்காலத்தில் வேறு விதமான கஷ்டம். தயிர் புராணம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
      ஒவ்வொரு காலத்திலும் அந்தந்த கஷ்டம் பிரும்மாண்டமாய் தான் நமக்குத் தெரிகிறது.

      Delete
  10. கடைசியில் தயிர் உறையாததற்கு காரணம்தான் என்ன? வெறும் குளிர் மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. நம்புங்கள் ஸ்ரீராம் சார். வெறும் சீதோஷன நிலை மட்டுமே தான் காரணம்.
      நான் கரெக்டாகத்தான் பாலெல்லாம் காய்ச்சி உறை ஊற்றினேன்.
      குளிரினால் ஊரே பிரிட்ஜ் மாதிரி இருக்கும் போது தயிர் மட்டும் எப்படி உறையும் ?
      நன்றி உங்கள் வருகைக்கும், படித்து ,ரசித்ததற்கும்.

      Delete
  11. அகால நேரத்தில் திடீர் விருந்தினர் வந்தால், ஓரளவுக்கு சமையல் எல்லாமே அட்ஜஸ்ட் செய்து போட்டுவிடலாம்.

    ஆனால் தயிர் அல்லது மோர் இல்லாவிட்டால் மிகவும் கஷ்டம்.

    அதற்கும் ஓர் எளிய வழி சொல்லியிருக்கிறார்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா.

    இப்போது சற்றுமுன் வேறொரு பெரியவர் வாயால் இந்த நிகழ்க்ச்சியினைச் சொல்லக்கேட்டு நான் மகிழ்ந்தேன்.

    அதாவது சாதம் வடிக்கும் முன் அரிசியை நன்றாக சிலமுறை நீரில் கழுவுவோம் அல்லவா.

    அந்த அரிசி கழுவிய நீரை, கீழே கொட்டாமல் தனியாக சேமிக்க வேண்டுமாம்.

    அதில் ஒரு அரை மூடியோ அல்லது ஒரு மூடியோ எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விட வேண்டுமாம். இப்போது உடனே மோர் ரெடியாம்.

    ஓர் நெருக்கடி நிலைமையில், ஸ்ரீமடத்தில், ஸ்ரீ மஹாபெரியவா சொன்னபடி, இதுபோல இன்ஸ்டண்ட் மோர் தயாரித்து பரிமாறினார்களாம்.

    அதை சாப்பிட்டவர்கள், இதுபோன்ற ருசியான ஒரு மோரை நாங்கள் இதுவரை எங்கள் வாழ்க்கையில் சாப்பிட்டதே இல்லை என்று சொல்லி பாராட்டிச் சென்றனராம்.

    இதைப்படிப்பவர்கள் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் தானே ! ;)

    ReplyDelete
    Replies
    1. இந்த யோசனை கண்டிப்பாக முயற்சிக்க வேண்டியது தான். உங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வைகோ சார்.

      Delete
  12. ஆஹா... சலிப்புத் தட்டாத தயிர் புராணம் அருமை! தயிர் உறைய வைக்க இத்தனை பாடா என்று வியந்துதான் போனேன்! பின்னூட்டங்களி்ன் மூலம் கிடைக்கும் டிப்ஸ்கள் ரசனைக்கு கூடுதல் போனஸ்! (ரகசியமா ஒண்ணு சொல்லிக்கறேன்... கல்யாணமாகி 36 வருடம்தான் ஆகிறது. இளைமையின் வாசற்படியில் பேரன் பேத்திகளோட நிற்கிறோம்-ங்கற உங்க ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப்ப புடிச்சிருக்கு. நானும் இதே டைப் ஆசாமிங்கறதால...)

    ReplyDelete
    Replies
    1. //நானும் இதே டைப் ஆசாமிங்கறதால..//
      ஆட்டிட்யுட் தானே சொல்கிறீர்கள். வயதோ என்று நினைத்தேன்.
      நான் தயிர் உறைய வைத்த கதையை சொல்ல வேண்டுமென்றால் நிறைய பதிவுகள் போடலாம். உங்களை எல்லாம் ரொம்ப இம்சிக்க வேண்டாம் என்று தான் சுருக்கமாக (?) ஒரே பதிவோடு முடித்துக் கொண்டேன்.

      நன்றி கணேஷ் சார் உங்கள் பாராட்டிற்கும் என் ஆட்டிட்யுடை புகழ்ந்ததற்கும்.

      Delete
  13. Ha ha ha. That's very interesting read. I think I'll get reminded of this post whenever I look at the curd.

    ReplyDelete
    Replies
    1. Iam happy that you enjoyed my curd post. Thankyou for your wonderful comment.

      Delete
  14. இளமையில் தயிருக்கு நீங்கள் பட்ட கஷ்டங்களினால் என்னவோ கடவுளே உங்களை இந்த நேரத்தில் உங்களை நீயூஜெர்ஸிக்கு அனுப்பி இருக்கிறார். விதவிதமான தயிர்களை வாங்கி ருசித்து சாப்பிடலாம் 2% fat, 1% fat, fat, free ,மற்றும் பல விதமான ப்ருட் தயிர்களும் கிடைக்கின்றன. தேசி தயிர்களும் உண்டு. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த தயிரைக் கொண்டு இங்கு தொடர்ந்து தயிர் தாயாரித்து சாப்பிடும் குடும்பங்கள் அனேகம்.. பருட் தயிர் சாப்பிட அருமையாக இருக்கும் ஆனால் அதில் சுகர் மிக அதிகம் அதில் கவனம் தேவை

    ReplyDelete
    Replies
    1. //இளமையில் தயிருக்கு நீங்கள் பட்ட கஷ்டங்களினால் என்னவோ கடவுளே உங்களை இந்த நேரத்தில்//
      முதலில் உங்களுக்கு என் கண்டனம்.எதற்குத் தெரியுமா? என் பதிவிலேயே இளமையின் வாயிற்படியில் நிற்கும் இளம் தம்பதி என்று போட்டிருக்கிறேன்.நீங்கள் எழுதிய முதல் வார்த்தைப் படியுங்கள். அதற்குத்தான். (just for joke. கோபித்துக் கொள்ள வேண்டாம்)
      //அதில் சுகர் மிக அதிகம் அதில் கவனம் தேவை// இந்த சகோதர அக்கறை என்னை நெகிழ வைக்கிறது என்பது தான் உண்மை.
      உங்கள் வருகைக்கும் அக்கறைக்கும், பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  15. குளிர் வந்தாலே இட்லி மாவும், தயிரும் பிரச்சினைதான்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகை என்னை மகிழ்விக்கிறது. தொடர்ந்து வாருங்கள் .
      வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  16. \\அந்தம்மா சொன்னபடி பாலை உறை ஊற்றி கோதுமைமாவு டின்னிற்குள் டைட்டாக மூடி வைத்தேன்.\\ஹாட் பேக்கில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி உரைக் குத்தி மூடி வைத்திருக்கலாம்!!

    \\என்னை சுற்றி எல்லோருமே வேண்டுமென்றே நான் தயிர்
    சாப்பிடக் கூடாதென்று சதி வலை பின்னுகிறார்களோ?\\ எனக்கும் பல நேரங்களில் இந்த நினைப்பு வந்ததுண்டு. Now in Bangalore the same problem, You never get good curds/buttermilk, or at least I don't know how to get it. We always buy!!

    ReplyDelete
    Replies
    1. \\ஹாட் பேக்கில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி உரைக் குத்தி மூடி வைத்திருக்கலாம்!!//
      நான் குடித்தனம் செய்ய ஆரம்பித்த காலத்தில் ஹாட் பேக் எல்லாம் இல்லை ஜெயதேவ் சார்.
      அருமையான டிப்ஸ் தான் இது. பெங்களூரில் இருக்கும் என் மருமகளுக்கு மட்டுமல்ல படிக்கும் எல்லோருக்குமே உங்களுடைய டிப்ஸ் உபயோகமாயிருக்கும்.
      நன்றி ஜெயதேவ் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  17. தயிர் செய்வது எவ்வளவு கஷ்டம்னு குளிர் பகுதிகளில் இருப்பவர்கள் பலமாகத் தலை ஆட்டித்தானே ஆக வேண்டும். இன்றைக்கு ஜாலியான பதிவாகியுள்ள இந்த தயிர் விஷயம் அன்றைக்கு எவ்வளவு கடுப்பாக இருந்திருக்கும்!

    எனக்கு இந்தப் பிரச்சினையின்போது, ஒரு தெலுங்கு பெண் உறை விட்டதும் அதில் ஒரு காய்ந்த மிளகாயை காம்பை எடுத்துவிட்டு போடச் சொன்னார். இதுவும் சில சமயம் சரிவரும், பல சமயங்களில் பால் & தயிர் இரண்டையும் வீணாக்குவதால் கடுப்புதான் வரும்.ஆமாம்,...இப்போ எப்படி சமாளிக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நீங்கள் சொல்வது போல் அந்த சமயத்தில் பால் வீணாகும் போது என் மேலேயே எனக்கு கோபம் வரும்.தான். என்ன செய்வது.
      உங்கள் தயிர் டிப்ஸ் noted.இந்தப் பதிவிற்கு வந்திருக்கும் தயிர் டிப்ஸ் வைத்து ஒரு புக் போடலாம். அவ்வளவு அருமையான டிப்ஸ்கள்.
      இப்ப தயிர் உறைய என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்கள் தானே. அவர்.. இல்லை.. அவன்(oven) வேலை அது.
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும்,தயிர் டிப்ஸிற்கும்,பாராட்டிற்கும்.

      Delete

  18. துபாய்க்கு எங்கள் மகனுடன் ஒரு மாத காலம் இருந்தோம். பாட்டிலில் பால் வாங்கி வருவான். யோகர்ட் என்று தயிரும் வாங்கி வருவான். இந்தப் பாலில் உரை ஊறினால் தயிராகாது. என்னென்னவோ செய்து பார்த்தோம். பாலில் எலுமிச்சைச் சாறும் ஊற்றிப்பார்த்தும் பிரயோசனப் படவில்லை. நல்ல அனுபவம் . இன்னும் காரணம் தெரியவில்லை பாலைத் தயிராக்கும் பாக்டீரியாக்கள் அங்குஇல்லை போலும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் உங்கள் வீட்டிலும் இருக்கிறதே!
      நன்றி GMB சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  19. அட, பாவமே! ரொம்ப சுலபமான வழி இருக்கிறதே! (ஐ.என்.ஏ.) லட்சுமிபாய் நகரில் என் மனைவியின் அத்தை பள்ளி ஆசிரியையாக இருந்தார். அவருடைய தயிர் உறையவைக்கும் முறை இது: அலுமினியப் பாத்திரத்தில் உறை ஊற்றவேண்டும். பாத்திரத்தை எடுத்து ஃப்ரிஜ்ஜின் மீதுள்ள ஸ்டெபிலைசர் மேல் வைக்கவேண்டும். இன்று வைத்தால் நாளை விட்டு அடுத்த நாள் நன்றாகத் தோய்ந்திருக்கும். டில்லியில் நான் மூன்று வருடம் இருந்தேன். இந்த முறையைத் தான் பின்பற்றினேன். நான் சொல்லி பலரும் பின்பற்றி வருகிறார்கள். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு பதில் எழுத தாமதமானது குறித்து முதலில் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். புது கணினி இன்னும் என் கைப் பழக்கத்திற்கு வராததால் சில சமயம் எழுதினபின்எதுவும் பதிவவதில்லை.
      அப்படித்தான் நேற்று உங்கள் கருத்துக்கு பதில் எழுதினேன். பதிவாகததால் இப்பொழுது நன்றி தெரிவிக்கிறேன்.

      நீங்கள் சொல்லியது போலவும் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அலுமினிய பாத்திரம் உபயோகித்ததில்லை.
      இவ்வளவு சுலபமான தயிர் டிப்ஸ் தந்ததற்கும், படித்து ரசித்ததற்கும், உங்கள்
      blog rollஇல் என் வலைத் தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டு இருப்பதற்கும் மிக்க நன்றி சார். இவையெல்லாம் எனக்கு ஊக்க போனஸ் தான்.

      Delete


  20. தாயார் புராணம் என்று படித்து இங்கு வந்தால்
    தயிர் புராணம்.

    சென்னையில் தயிர் நன்றாக தோய்வதற்கு ( இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள் ! ) நாங்கள்
    ஒரு தடவை பட்ட பாடு சொல்லில் மாளாது.

    இது இன்னொரு எக்ஸ்ட்ரீம். தயிர் கம்பி கம்பியாக வருகிறது. ஒரு தினுசா கோதுமை அல்வா மாதிரி.
    இப்பொழுதெல்லாம் ஆவின் பால் என்று வாங்குவதில் அதில் இயற்கையான கொழுப்பை எடுத்து விட்டு,
    செய்ற்கை கொழுப்பை ( ஒரு தினுசான ஆசிட்) கலக்கிறார்களாம். அப்பொழுது தான் அது ஸ்டெபிலைஸ்டு
    ஆக இருக்குமாம்.

    ஒரு நாலு நாளைக்குத் தொடர்ந்து அதே தயிரில் கொஞ்சம் எடுத்து அடுத்த நாளைக்கு பாலை தயிராக்க ஊற்றினால்,
    திரும்பவும் கம்பி கம்பி தயிர் தான் ஆகிறது.

    நெஸ்லே, ஹெரிடேஜ் தயிர் தான்.

    இங்கே நியூ ஜெர்சிலே தயிர் என்றாலே அவ்வளவு சுவை. இவர்களதுஎருமை, பசு மாடுகள் நம்ம ஊரு மாடுகள் விட
    நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என நினைக்கிறேன். கறக்கும் மாடுகளுக்கு போடும் தீனி என்ன பார்த்தேன்.
    மாடுகளிடம் பால் கறப்பது, அவற்றினை பதப்படுத்துவது, அதில் தயிர் செய்வது எல்லாமே நம் நாட்டிற்கும்
    இதற்கும் நிறைய வேறு பாடு இருக்கிறது. முக்கியமாக சுகாதாரம்.

    அது கிடக்கட்டும். தயிருக்கு வருவோம். ஒரு நல்ல தயிர் சாதம்.சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. திருமதி வல்லி
    நரசிம்மன் ஆத்துக்கு போனா கிடைக்கும் கண்டிப்பா. வந்த உடன், அங்கே போய் புளியோதரையும், தயிர் சாதமும்
    சாப்பிடணும்.

    உங்க வீடு எங்க இருக்கு ? வந்தா இந்த கிழவனுக்கு ஒரு நாள் பிக்ஷை போடுவேளோ ? போட்டால் தயிர் சாதம்
    கொஞ்சம் இரண்டு பிடி கூட போடுங்க.

    சுப்பு தாத்தா.,
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சுப்பு சார்,

      ஆஹா, கண்டிப்பாக விருந்து உண்டு சார். விருந்தோம்புதல் நம் பண்பாடு ஆயிற்றே!

      உங்கள் வருகைக்கு நன்றி சுப்பு சார். உங்கள் தயிர் புராணமும் சுவையாக இருக்கிறதே!
      நன்றி சார்.

      Delete
  21. Mani Kandan in google+
    12:11 PM


    madam intha mathiri 1ru experience enakum erukhu athu enna na nan en wife marriage panni dubaiku kutitu vandhen appa engha sema kuliru .avangha dosa idli mavu mixila araichangha mavu pulikhavey illa maru nallu idly pannagha parungha kallu mathiri erundhadhu .apparam enna kulir kalam mudira varikum pkt mavu than ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், கருத்துக்கும்.
      நீங்கள் ஆங்கிலத்திலேயே கூட கமென்ட் எழுதலாம்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்