தினம் இட்லி , தோசை ,உப்புமா என்றே செய்கிறாயே ? வேறு எதாவது செய்யேன் என்று என் வாழ்க்கைத் துணைவர் கேட்க நானும் அவரைப் பார்த்து வேறென்ன செய்ய ? என்று திருப்பிக் கேட்டேன்.
"ஏன் இடியாப்பம் செய்யேன் நாளைக் காலை டிபனிற்கு" என்று கூறினார்.
" ஒ.கே ." சொன்னேன்.
இப்பொழுது தான் , போன வாரம் இடியாப்ப மாவு தயார் செய்து சேர்த்து வைத்திருந்தேன்.
இடியாப்ப மாவு செய்வது கொஞ்சம் சிக்கலான வேலை. (ஒரு நாள் வேலை இழுத்து விடும்.)அரிசியை ஊற வைத்து , அரை ஈரமாக இருக்கும்போதே அரிசியை மெஷினில் அரைத்து பின் வேக வைத்து, காய வைத்து என்று முதுகை பெண்டு கழட்டும் வேலை.
அதற்குப் பிறகு இடியாப்பம் செய்வது மிகவும் சுலபம்.
இதான்........ இதான்..........(செய்வது சுலபம் என்பது நினைப்பு)
" நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் " என்று சும்மாவா சொன்னார்கள்.
மறு நாள் காலை எழுந்து காபி சாப்பிட்ட பிறகு ,காலை நியுஸ் பேப்பரை ஒரு ரஷ் முடித்து , நேராக லேப்டாப் பக்கம் வந்தேன்.
அப்பவே என் அம்மா, " இது என்ன ? இன்றைக்கு காலையிலேயே லேப்டாப்பை திறக்கிறாய்? டிபன் எல்லாம் உண்டா இல்லையா? என்று கேட்க ,
அதற்கு நான், " இடியாப்பம் தானே ! இதோ ஒரு அரை மணியில் செய்கிறேன் ." (இடியாப்ப சிக்கலில் நான் மாட்டிக் கொள்ளப் போவதை அறியாமல் ) என்றேன்.
பிறகு மெயில் செக் செய்தேன் . பின் என் டேஷ்போர்டிற்கு வந்து பின்னூட்டங்கள் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தேன்.பிறகு சில சமையல் குறிப்பு பதிவுகளைப் படித்து விட்டு டிபன் செய்யக் கிளம்பினேன்.
இண்டக்ஷன் ஸ்டவில் தண்ணீர் வைத்து விட்டு ஒன்றரை டம்ளர் மாவை அளந்து போட்டு விட்டு நன்கு கொதித்த தண்ணீரை மாவின் தலையில் கொட்டி கலந்தேன்.
காலை fm இல் "அன்பே ......... சுகமா.......' என்று பாடகி திருமதி . சாதனா சர்கம் உருகி உருகி பாட ,அதைக் கேட்டுக் கொண்டே..............
முறுக்கு பிழியும் நாழியில் ஓமப்பொடி அச்சைப் போட்டு , நன்கு திருகி மூடி விட்டு, மாவை நாழியின் வாயில் போட்டு அடைத்தேன்.
பிறகு இட்லித் தட்டில் எண்ணெய் தடவி பிழிய ஆரம்பித்தேன்.. எப்பொழுதும், சரம் ,சரமாய் , ஓமப்பொடியாய் இறங்கும் இடியாப்பம் இன்று " இர(ற)ங்கி வர மாட்டேன் " என்று அடம் பிடிக்க ஆரம்பித்தது.
நாழியில் இருக்கும் அச்சு சரியாக இருக்கிறதா என்று திருப்பிப் பார்த்தால் அது சமர்த்தாகத் தான் உட்கார்ந்திருந்தது.
நேற்று கொஞ்சம் கைவலி இருந்தது. அது தான் பிழிய முடியவில்லையோ ? என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் அம்மா அங்கு ஆஜரானார்.
" பிழிய கஷ்டமாக இருக்கிறதா? . இங்கே கொடு, நான் பிழிகிறேன் " என்று நாழியை வாங்கி பிழிய முயற்சி செய்தார்.
அது அசைந்து கொடுத்தால் தானே. !
உடனே என் அம்மா மப்டியில் இருக்கும் போலீஸ் மாதிரி விசாரிக்க ஆரம்பித்தார்.
"தண்ணீரை கொதிக்க வைத்தாயா? எந்த டப்பா மாவை எடுத்தாய் ?.........."
இப்படி சரமாறியாய் கேள்விகள் . நானும் விசாரணை கைதி மாதிரி , பதிலளித்து வந்தேன்.
பிறகு , இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு, அமுக்கப் பார்த்தோம். ஊஹூம்................ நீயெல்லாம் எனக்கு ஜுஜுபி மாதிரி என்பதைப் போல் அழுத்தமாக அசையாமல் இருந்தது.
இந்த சந்தடிகளைக் கேட்டுவிட்டு என்னவரும் சம்மன் இல்லாமலே சமயலறையில் ஆஜர்.
சரி அவரிடம் உதவி கேட்போம் என்று கேட்டு வைத்தேன். "சரி கொடு " என்று நாழியை வாங்கிக் கொண்டார்.
அவரும் முயற்சி செய்தாயிற்று. பலன் பூஜ்யம் தான் .
உடனே நாழியைத் தூக்கி bofors பீரங்கி மாதிரி பிடித்துக் கொண்டு
என்னைப் பார்த்து,"ராஜி, உண்மையைச் சொல். உள்ளே மாவு வைத்திருக்கிறாயா, இல்லை "குண்டு " வைத்திருக்கிறாயா?"என்று சீரியசாக ஜோக் அடித்து என் எரிச்சலை அதிகமாக்கினார்.
இந்த மாவில்............ இடியாப்பம் இல்லை ....... என்றாயிற்று.
சரி, இத்தனை மாவையும் என்ன செய்வது. உடனே பிடி கொழுக்
கட்டைகளாக்கி வேக வைத்தேன். மாலை ஸ்நாக்ஸ்
வேலை ஆச்சு என்று திருப்தியானேன்.
அது சரி. இப்ப டிபனுக்கு என்ன? மில்லியன் டாலர் கேள்வி என் முன்னே?
பிரிட்ஜைத் திறந்தேன். ஆபத்பாந்தவனாய் கைகொடுக்கும் தோசைமாவிற்காகத்தான். தோசை மாவு அடுக்கை காணோமே.
அழகாய் அமரிக்கையாய் அலமாரியில் உட்கார்ந்திருந்தது.
தோசை மாவு காலி ! உரைத்தது எனக்கு.
சரி என்ன செய்வது? ஒழுங்காக உப்புமாவைக் கிண்டியிருக்கலாம்.
விதி யாரை விட்டது.?
அன்று காலை பதிவில் படித்த ஓட்ஸ் கிச்சடி செய்ய உட்கார்ந்தேன்.
செய்து முடிததாயிற்று. தட்டில் எடுத்துப் போடும் போது தான் உரைத்தது.
ஓட்சை வறுத்திருக்க வேண்டும். விட்டு விட்டேனே!
ஒரே கொழ கொழ கிச்சடி. ஆனாலும் சுமாராக இருந்தது.
'இதயத்திற்கு இதமானது' என்று சாப்பிட்டு முடித்தோம்.
உஸ்.......அப்பாடி.............டிபன் கடை ஒரு வழியாய் முடித்தாயிற்று.
இடியாப்ப சிக்கலலிருந்து மீண்டோம் என்று பெருமூச்செறிந்தேன்
இல்லை.இன்னும் இந்த இடியாப்ப சிக்கலிலிருந்து மீள வில்லை, என்பது எனக்கு வீட்டு வேலையில் உதவி செய்யும் " கல்பு "( கல்பனாவின் சுருக்கம்) வந்த பிறகு நடந்தது , உணர்த்தியது.
கல்பு வரும் போதே யாரையோ வசை பாடிக் கொண்டே வந்தார். அதைக் காதில் வாங்காமல் எப்பவும் போல் " கல்பு , இந்த கிச்சடியை சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பி 'என்று கிச்சடியைக் கொடுத்தேன்.
ஏதோ விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல் அதை பார்த்துக் கொண்டே ஒரு வாய் எடுத்துப் போட்டு விட்டு, "ஐயே ! இன்னா இது? கிச்சடியா?
எனக்கு இன்னைக்கு காபி போதும் "என்று வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.
"குபீர்" சிரிப்பலை கிளம்பி வந்தது ஹாலிலிருந்து. என் கணவர் தான் .
எல்லாம் என் நிலையை பார்த்து தான்! வேறென்ன.......
ஹால் பக்கம் நான் ஏன் போகிறேன்?
மத்தியான சமையலை வில்லங்கம் இல்லாமல் செய்து முடித்து விட்டுத் தான் ஹால் பக்கம் தலை காட்டினேன்.
பி.கு : பதிவைப் படித்து விட்டு நான் சமையலில் கத்துக் குட்டி என்றோ, இடியாப்பமே செய்ய வராதோ என்று குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.
' ஆனைக்கும் அடி சறுக்குமாமே " அது மாதிரி தான் இந்த சம்பவமும்.
ஓஹோ..........அப்படியா...........என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
image courtesy --- google
நீங்கள் இடியாப்பச் சிக்கலிலிருந்து மீண்டாலும், ஏன் இடியாப்பம் பிழிய வரவில்லை என்பதை கண்டுபிடித்தீர்களா? இப்படி ஒரு பதிவு தேத்தவா?
ReplyDeleteகாரணம் தெரியாமல் எனக்கு தலை வெடித்து விடும் போலிருக்கிறதே!
அடுத்தமுறை நான் இடியாப்பம் செய்யும்போது இந்தச் சிக்கல் வராமல், வருமுன் காக்கலாமே, அதற்காகக் கேட்கிறேன்.
எப்படியோ மீண்டு வந்தீர்களே, வாழ்த்துகள்! அடுத்தமுறை நல்லபடியாக இடியாப்பம் செய்து அதையும் எழுதிவிடுங்கள். அப்போதான் நம்புவோம் நீங்கள் சமையலில் எக்ஸ்பெர்ட் என்று! (சும்மா ஒரு ஜோக்!)
கண்டு பிடித்தேன்.
Deleteஎப்பவும் வாங்கும் அரிசி இல்லை இது. அங்கே தான் சிக்கல் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் கழித்து யோசிக்கும் போது இந்த சிக்கலை கொஞ்சம் நகைச்சுவை கலந்து ஒரு பதிவாக்கிவிடலாமே என்று தோன்றியது. ஆனால், நிஜமாகவே அன்று காலை முழி பிதுங்கி விட்டது.
வேறு டிபன் எதுவும் சரியாக அமையாமல்.......
பெரும் தொல்லை. நல்ல வேளை. விருந்தினர் யாரும் அன்று டிபன் சாப்பிட வரவில்லையே என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.
ஆனால் ஒரு பதிவுக்கு ஆச்சு.
நன்றி ரஞ்சனி உங்கள் கருத்துக்கு.
இடியாப்ப சிக்கலில் ....
ReplyDeleteஎங்கே கோளாறு என்று கண்டுபிடித்தீர்களா...!!??/
அரிசியில் தான் சிக்கல் . தெளிவாகியது.
Deleteநன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
இதை நாங்கள் இடியாப்பம் என்று சொல்லாமல் “சேவை” என்று சொல்லுவோம்.
ReplyDeleteஇதை செய்வதும், அது நல்லபடியாக அமைவதும், கொஞ்சம் சிக்கலான வேலை தான்.
இருப்பினும் பக்குவமாகச் செய்தால் இதன் சுவை அருமையோ அருமையாக இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்தமான No. 1 டிபன் இதுதான். அடை கூட இதற்குப்பிறகு தான்.
என் பெரிய சம்பந்தியம்மா மாதம் ஓர் முறை இதை செய்து, எனக்கு மிகவும் பிடிக்குமே என, அன்புடன் கொண்டுவந்து தருவார்கள்.
இதில் தேங்காய் சேவை, பருப்பு சேவை, எலுமிச்சம்பழச் சேவை, வெல்லச்சேவை என பலவிதங்களில் செய்து வருவார்கள்.
நான் மிகவும் விரும்பிச்சாப்பிடுவது, நிறைய வறுத்த முந்திரியுடன், அவர்கள் செய்துவரும் தேங்காய் சேவை மட்டுமே.
காரசாரமாகவும், தேங்காய் இனிப்புடனும் ஜோராக சுவையாக இருக்கும்.
அவர்களிடம் “உங்களின் இதுபோன்ற சேவை கொண்டுவந்து தரும் சேவை தொடரட்டும்” என நான் வாழ்த்துவது உண்டு.
நல்ல பகிர்வு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
வைகோ சார்,
Deleteஎன் கணவருக்கும் மிகவும் பிடித்த உணவு சார்.
அன்று காலை வாரி விட்டது.தேங்காய் சர்க்கரை போட்டது மிகவும் பிடிக்கும் அவருக்கு. சுகர் ப்ரீ சர்க்கரை போட்டு கலந்து விடலாம் என்று பிளான் செய்திருந்தேன். எல்லாம் பணால்.......
அடுத்த முறை ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.
நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்.
சிக்கல் தான்... வீட்டிலும் மாட்டியதுண்டு...
ReplyDeleteதனபாலன் சார்,
Deleteஉங்கள் வீட்டில்....சிக்கலில் மாட்டிக் கொண்டதைப் பற்றி எழுதுங்களேன்.
நான் மட்டும் மாட்டவில்லை. என் கட்சி நிறைய பேர் உண்டு என்று திருப்தியாவது எனக்கு இருக்கும்.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
இடியாப்பம் செய்வதில் இது மாதிரி எனக்கும் ஒரு முறை வந்திருக்கிறது நானும் கை வலிக்க பிழிந்த பார்த்து விடுவிட்டு அதை அடை யாக மாறிவிட்டேன் ஆனால் எப்பவும் நொடியில் தயார் செய்துவிட கூடி ஒரு டிபன் இது எனக்கு நீங்கள் சொல்வது போல் மாவு தான் பிரச்சனையாக இருக்க வேண்டும் தொழ இப்போதெல்லாம் இடியாப்ப மாவு விற்கிறார்களே அதில் முயற்சித்ததில்லையா அதிலும் நன்றாக வரும் ஆனால் பிரண்டட் ஐட்டம் வாங்குங்கள் அப்பத்தான் நல்லது மேலும் எப்போ இடியாப்பம் செய்ய நினைத்தாலும் அந்த மாவை சலித்துவிட்ட பிறகு செய்யுங்கள் பிரச்சனை குறையும் அதிகம் சொல்லிவிட்டேனோ
ReplyDeleteஉங்கள் விரிவான பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
Deleteஎங்கள் வீட்டில் வாங்கின மாவில், செய்தால் அத்தனை சுவை இல்லை என்று புகார் வரும். எனக்கு இந்த மாதிரி மாட்டிக் கொண்டதே இல்லை. முதல் முறையாக சிக்கினேன்.
அரிசியில் தான் இருக்கிறது சூழ்ச்சி என்பதைப் புரிந்து கொண்டேன்.
உங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி, மலர்
பரவாயில்ல.. எப்பவாவது இது மாதிரி ஆனது. எனக்கெல்லாம் எப்பவும் இது மாதிரிதான். மாட்டிகிட்டது எங்க ஹஸ்பெண்ட்தான்..!
ReplyDeleteஉங்களுடைய வயதிற்கு ஓ.கே உஷா .(உங்கள் பதிவைப் பார்த்து நான் யூகிப்பது நீங்கள் யுத் என்று)
Deleteஎன் வயதிற்கு நான் சரியாக செய்திருக்க வேண்டாமா.
குளறுபடியும் நல்லதே. ஒரு பதிவுக்கு ஆயிற்றே . அதை சொல்கிறேன்.
நன்றி உஷா உங்கள் கருத்துக்கு
இடியாப்ப சரியாக வரவில்லை என்றல் என்ன! அழகான நகைச்சுவை பதிவு கிடைத்துவிட்டதே எங்களுக்கு.
ReplyDeleteபதிவு அருமை.
நானும் மலர் சொல்வது போல் இடியாப்பம் மாவு வாங்கிவிடுகிறேன்.
அருமையான் சேவை எளிதாக செய்ய முடியும்.
நன்றி கோமதி .
Deleteஆனால் மாவு வாங்கினால் அது சரிப்படுவதில்லை.
இனிமேல் அது மாதிரி தான் செய்ய வேண்டும்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி.
இப்படி கிச்சடி கொடுத்து ஏமாத்தினா சரியா? அப்புறம் எப்படி இடியாப்ப சிக்கல் தீரும்
ReplyDeleteநன்றி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
DeleteAs usual your 'Tryst with Idiyappam' is very interesting.
ReplyDeletethankyou sir for your catchy and appreciative comment.
Delete:) I also had such experience Raji madam! Idiyappam eppa sariyaa varumnu aandavanukku thaan theriyum....avvvvvv!
ReplyDeleteOats Kichadi-yum ungala vidala! ....hmmm! "Muthal konal murrum konal"- unmai aakiyirukku, that's all! Don't take it serious, it happened so that we all got a nice post!
You can find many stories like this in my blog! Hahaha! :)
thankyou for your encouraging and appreciative comments mahi
Deleteராஜலஷ்மி,
ReplyDeleteநீங்க இடியாப்பமே செஞ்சு கொடுத்திருந்தாலும் இவ்வளவு டேஸ்ட்டா இருந்திருக்குமா,தெரியாது.நீங்க சிக்கியதால் எங்களுக்கு ஒரு நகைச்சுவையான பதிவு கிடைத்தது.
"என் அம்மா மப்டியில் இருக்கும் போலீஸ் மாதிரி விசாரிக்க ஆரம்பித்தார்,நானும் விசாரணை கைதி மாதிரி , பதிலளித்து வந்தேன்" ___சூப்பரா எழுதறீங்க.ஓட்ஸ் பொங்கல்,கிச்சடி பதிவெல்லாம் எப்பொ வருமோ!
எல்லாமும் சரியாகச் செய்தும் இடியாப்பம் பிழிய வரலன்னா(ஐயையோ, இங்கேயுமா_நீங்க அலறினாலும் விடமாட்டேன்))மாவு சரியாக வெந்திருக்காது.மாவுல லேஸா தண்ணி தெளிச்சு மைக்ரோ அவன்ல 30,30 செகண்ட்ஸ்னு,ரெண்டுமூனு தடவ வச்சி எடுத்திடுங்க.அப்புறம் உங்க வீட்ல தினம்தினம் இடியாப்பம்தான்.
வீட்டில் கெஸ்ட் இருந்ததால் உங்கள் கருத்தை மிஸ் பண்ணி விட்டேன் என்று நினைக்கிறேன் .
Deleteரொம்ப சாரி , லேட்டாக உங்களுக்கு நன்றி சொல்வதற்கு.
நன்றி! நன்றி ! நன்றி!
நல்ல ஒரு விரிவான கருத்துரைக்கும், பாராட்டுரைக்கும் மிக்க நன்றி சித்ரா.
உங்கள் டிப்ஸ் நல்ல டிப்சாக இருக்கிறதே! இனிமேல் இடியாப்பம் காலை வாரி விட்டால் இது மாதிரி தான் செய வேண்டும்.
சும்மாவா சொன்னார்கள் , உயிர் காப்பான் தோழன் என்று.
என் இனிய தோழி சித்ரா இடியாப்பம் முதற் கொண்டு எல்லாம் காத்துக் கொடுப்பார். (just a joke!)
மீண்டும் நன்றி சித்ரா
இந்த முறையில் சேவை-இடியாப்பம்- செய்பவர்கள் இப்போதெல்லாம் மிகக் குறைவு. பாதிப் பேர் வீட்டில் சேவை நாழி இருப்பதில்லை. ரெடிமேட்தான்! ஆனால் இப்படி சாங்கோபாங்கமாகச் செய்யும் சேவை போல ரெடிமேட் இருப்பதில்லை. எப்படியிருந்தாலும் சுவையான பதிவுதான்!
ReplyDeleteபதிவு சுவையானது ஆனால் சேவை பொய்யானது.
Deleteஆனால் அதுவும் உப்யோகமாயிர்று ஒரு பதிவாக்க .
நன்றி உங்கள் கருத்துக்கு.