வெள்ளிகிழமை அன்று கோவிலுக்கு போய் கொண்டிருந்தேன். அமைதியாய் என் கைப்பிடிக்குள் இருந்த மொபைல் " உயிரே ..... உயிரே.......என்று பாடத் தொடங்கியது. அவசரமாய் எடுத்து பார்த்தால் " Rasi Calling ". " சொல்லுடி ". " நான் பேசுவது கேட்கிறதா ? " " கேக்குதே " என்றேன் . " நல்லா கேக்குதா " " இது என்னடா தொல்லை? ம்.. ரொம்ப நல்லா கேக்குது " என்று நான் சலித்துக் கொள்ள அவளோ ." என் பையன் அன்னையர் தினத்திற்கு எனக்கு புது போன் வாங்கிக் கொடுத்திருக்கிறான் " நான் நாளைக்கு வீட்டிற்கு வந்து காட்டுகிறேன். " என்று முடித்தாள் ராசி. மறு நாள் மாலை வந்தாள் samsung போனுடன். " ஓ ....ஸ்மார்ட் டச் போனா? " கேட்டேன். "ஆமாமடி , என்னைப் போலவே என் போனும் ஸ்மார்ட் " பெருமையடித்துக் கொண்டாள். "எனக்குத் தெரியாதா நீ எவ்வளவு ஸ்மார்ட் ?" (மனதிற்குள் சரித்திரம் படைத்த ராசி பதிவு வரி , வரியாக ஓடியது.) சட்டென்று அவள் போன் "கிணிங் கினிங் "என்று இனிமையாய் இசைக்க ராசியோ அதையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் . " ஏய் போனை எடுத்துப் பேசு, யார் போனில்? "என்றது நான். ஒரு பதிலும் இல்லை. எட்டிப் பார்த்தேன்." Husband calling , Husband calling " என்று அலறுவது போல் ப்ளாஷ் அடித்தது. " என்ன ஆயிற்று? ஏன் போனை எடுக்கவில்லை? " என்றேன். " அதுவா....... எப்படி எடுப்பது என்பது மறந்து விட்டது "என்றாளே பார்க்கலாம் . "என்ன மறந்து விட்டதா?......." " சரி , இப்ப என்ன செய்வதாக உத்தேசம் ? விஷ்ணுவிற்கு அவசரமாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால்............"முடிக்கவில்லை நான் . சட்டென்று கைப்பைக்குள் இருந்த பழைய போனை எடுத்து கணவருடன் பேச ஆரம்பித்து விட்டாள் . " பக் " என்று சிரித்து விட்டேன்.சிரிப்பை அடக்க முடியவில்லை. ( இதில் இவளும் இவளுடைய போனும் " ஸ்மார்ட்டாம் ஸ்மார்ட்.") "சரி . contact list எல்லாம் யார் லோட் செய்தது "என்று கேட்டதற்கு எல்லாம் தன் மகன் செய்து தந்து விட்டான் என்றாள் கர்வமாக . (" இதிலொன்றும் குறைச்சலில்லை " நினைத்துக் கொண்டேன்.)
" சரி அவனிடமே கேளேன் எப்படி போனை எடுப்பது " என்றேன். " இரு என்னை தொந்திரவு செய்யாதே "என்று எரிச்சல் பட்டுக் கொண்டு சிறிது நேரம் யோசித்து பின் , "ஞாபகம்.... வந்திருச்சு....... " என்று கமலஹாசன் மாதிரி ராகம் பாடினாள் . "என்ன?" என்றேன் " கால் வந்தால் swipe செய்ய வேண்டும் ," என்று சொல்லிக் கொண்டே , அப்பொழுது பார்த்து வந்த போனிற்கு பதிலுரைத்தாள். யார் என்றதற்கு "ஒரு பொண்ணு கிரெடிட் கார்ட் வாங்கிக்கிறையா" என்று கேட்டார் என்றாள் . "இதை சரியாக எடு. கணவர் கூப்பிட்டால் கோட்டை விடு "நினைத்துக் கொண்டேன். " உன் நம்பரிலிருந்து கால் செய்யேன் எனக்கு ". என்று சொன்னேன் (எனக்கும் இந்த ஸ்மார்ட் போனை உபயோகித்துப் பார்க்க ஆசை வந்தது) என் நம்பரை தன் விரல்களால் தொட்டாள் . நானும் என் மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தேன். ம்ஹூஉம்......... என்ன ஆச்சு என்று எட்டிப் பார்த்தால், " you dont have an internet connection to connect to vonage " என்றிருந்தது. "இது என்ன? " என் பையன் தான் சொன்னான் ." நீ பைசா செலவில்லாமல் இன்டர்நெட் மூலமாக பேசலாம் " " ஆனால் என்னுடன் நேற்றெல்லாம் பேசினாயே internet இல்லாமலே " " அது தான் எனக்கும் புரியவில்லை "குழம்பினாள் ராசி. நானும் போனை வாங்கி எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒரு கால் கூ ட செய்ய முடியவில்லை.என் விரல் பற்றி எரிந்தது தான் மிச்சம். நான் என் தோல்வியை ஒப்புக் கொண்டு அவளிடமே அவள் ஸ்மார்ட் போனை கொடுத்தேன். என்ன செய்வது ? சரி வா சூடாக தோசையாவது சாப்பிடலாம் வா என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனேன். " டிங் டாங் " காலிங் பெல் ஒலித்தது.
கதவைத் திறந்தால் , கீழ வீட்டு மகேஷ்., சாப்ட்வேர் இஞ்சினியர் . "ஆண்டி, அம்மா சாவி கொடுத்தார்களா? என்றான். இல்லையே ! " சரி, அம்மா வரும் வரை உட்காரு " என்று சொல்லி விட்டு உள்ளே போனேன். அவன் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க , ராசியோ புது போனைப் பற்றிப் புலம்பி தீர்த்தாள் . பாவமாய் இருந்தது அவளைப் பார்க்க . மகேஷிடம் கேட்டுப் பார்க்க முடிவு செய்து அவனிடம் இந்தப் போனைக் கொடுத்தோம். அவனும் முயற்சி செய்து பார்த்து விட்டு "எனக்குத் தெரியவில்லை . samsung service centre ற்கு கொண்டு போனால் சரியாவதற்கு சான்ஸ் இருக்கு " என்றான், டாக்டர் "பேஷண்டை அட்மிட் செய்யுங்கள் சரியாகி விடும் " என்பது போல். அதற்குள் அவன் அம்மா வர ,அவன் சென்றான். இதுவும் தோல்வியா?
அதற்குள் ராசி," இந்த சின்னப் போனை சரி செய்ய முடியல இவனெல்லாம் என்ன ஸாப்ட் வேர் இன்ஜினியர் ? " என்று அர்ச்சித்து விட்டு சுடசுட காபியைக் குடித்தாள் . போய்விட்டு வருகிறேன் என்று விடை பெறும் சமயத்தில் மீண்டும் "டிங் டாங்" மீண்டும் மகேஷ். " ஆண்டி , இப்பொழுது தான் என் நண்பனிடம் உங்கள் போனைப் பற்றிய தகவலை சொன்னேன்.அவன் எப்படி சரி செய்வது என்று சொன்னான்".
"நான் மீண்டும் முயற்சி செய்யட்டுமா ? "என்று பவ்யமாய் கேட்க , எனக்கு ராசியின் அர்ச்சனை நினவு வந்தது.
"உங்கள் போனை கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி ஒரு ஐந்து நிமிடம் இங்கேயும் அங்கேயுமாக கைகளால் ஸ்வைப் செய்து, சரி செய்தான் .
ஒரு கால் வேறு செய்து சரியாகி விட்டது என்றன்.
" ரொம்ப தாங்க்ஸ் " என்று பல தடவை மகேஷிற்கு நன்றி சொல்லத் தவறவில்லை ராசி . பிறகு தன் கணவரை போனில் கூப்பிட்டு சொன்னாளே பார்க்கலாம் , . " அப்பாடி ஒரு வழியாக சரி செய்து விட்டேன். நான் ஸ்மார்ட் தானே " என்றாளே பார்க்கலாம் . என்ன......நீ சரி செய்தாயா ........அசந்து போனேன். நிஜமாகவே நீ ஸ்மார்ட் தான்.(பேசுவதில்)...... image courtesy--google.
இன்று உலக Hypertension தினம். இந்த Hypertension வருவதால் என்ன நடக்கும்? BP எகிறும். BP மிக உயரத்திற்கு சென்று High BP என்ற உயரத்தை தொட்டால் எத்தனை எத்தனை விபரீதங்கள் உண்டாகும் என்பது நம் எல்லோருக்கும் வெட்ட வெளிச்சம். இந்த BP ஐ நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கான வழியும் நம் கையில் தான் இருக்கிறது. இந்த High BP வருவதற்கு மருத்துவர்கள் பல காரணங்கள் சொல்கிறார்கள். புகை பிடிப்பது, மது அருந்துவது , Stress , கோபம் ....என்று பல.
பெரும்பாலானோருக்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரை ,"ரொம்ப கோபப்படுவீர்களோ? கொஞ்சம் உங்கள் கோபத்தை குறைத்தால் நல்லது." என்பது தான் . ஆனால் நம்மால் கோபத்தை குறைத்துக் கொள்ள முடிகிறதா? இல்லையே! நம் ஒவ்வொருவரும் தினம் நம் எத்தனை முறை கோபப்படுகிறோம் என்று கணக்கெடுத்து எழுதி அதை மீண்டும் பார்த்தோமென்றால் நம் மீதே நமக்கு கோபம் வந்து விடும். ஒரு சின்ன கதை நினைவிற்கு வருகிறது.பலருக்குத் தெரிந்திருக்கும்.(பெயர் மட்டும் என் கற்பனை)
வடிவேல் என்பவர் உயர்ந்த பதிவியில் இருக்கும் ஒரு அதிகாரி. ஆபீஸில் அவரைக் கண்டால் சிம்ம சொப்பனம் அத்தனை கோபக்கார மனிதர்.பைல் எல்லாம் கண ஜோராய் பார்க்கும் அவர் டாகடர் கோபத்தை குறைக்க அறிவுரை கூற , அதற்கே அவர் கோபமானார் என்றால் பார்த்துக் கொளுங்களேன்.
ஆனால் எப்படியாவது கோபத்தைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தார். யோகா, தியானம்...... ஒன்றிற்கும் அவர் கோபம் மசியவேயில்லை. இறுதியில் அவருடைய வயதான தந்தையிடம் அடைக்கலமானார். வடிவல். கோபத்தை அடக்கும் வித்தையை கற்றுக் கொள்வதற்குத் தான். அவர் தந்தை ஒரு நல்ல உபாயம் கூறுகிறார். "ஒவ்வொரு முறை நீ கோபப் படும் போதும் இந்த சுவற்றில் ஆணியை அடித்து எண்ணிக் கொண்டு வா? என்கிறார்.
மறு நாளே ஆரம்பிக்கிறார். அன்று இரவு தூங்கப் போவதற்கு முன்னால் சுவரைப் பார்த்தால் 14 ஆணிகள் .
பார்க்க , பார்க்க ,பயந்து போய் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப் படுத்திக் கொள்கிறார். கோபத்தை விட தன் ஆரோக்கியத்தின் மேல் பயம் அதிகமாகிறது.
அடுத்த நாளிலிருந்து கோபத்தை குறைக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஒரு நல்ல நாளில் கோபமே இல்லாத மனிதராக மாறுகிறார். தன தந்தைக்கும் ஆணிக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறார் வடிவேல். இல்லை. இன்னும் இந்தப் பயிற்சி முடிவடையவில்லை என்கிறார் அவர் தந்தை. "நாளையிலிருந்து நீ கோபப்படாத ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ஆணியாய் பிடுங்கி விடு " என்கிறார் தந்தை. தந்தை சொல் தட்டாத தனயனாய் மறு நாளிலிருந்து செய்கிறார் வடிவேல்.
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு தந்தையே வடிவேலுவை கூப்பிட்டு சுவற்றைப் பார்க்க சொல்கிறார்.
வடிவேலுவும் மகிழ்ச்சியாக ஆணிஎடுத்தபின் இருக்கும் சுவற்றில் இருக்கும் ஓட்டைகளை காண்பிக்கிறார்." எத்தனை ஆணிகளை பிடுங்கிவிட்டேன் பாருங்கள் " என்கிறார் வடிவேல்.
"அதையே தான் நானும் சொல்கிறேன். நீ கோபப்ட்டதால் சுவற்றில் மட்டுமல்ல உன் கோபத்துக்கு ஆளானவர்கள் மனதிலும் இப்படித்தானே வடு ஏற்பட்டிருக்கும். பார்த்தாயா, உன் கோபத்தின் விளைவை " என்கிறார் தந்தை. வடிவேலுவிற்கு இப்பொழுது நன்றாகவே புரிகிறது தன் தவறு .
கொஞ்சம் கொஞ்சமாக தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு தன் மன, மண , உடல் நலத்தையும் பேணிக் கொண்டு தன்னை சுற்றியிருப்பவர்களின் ஆரோக்கியமும் கெடாமல் பார்த்துக் கொள்கிறார்.
எப்பவுமே "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தான்"
நாமும் கோபத்தை குறைத்து Hypertension வராமல் பார்த்துக் கொண்டு நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருப்போம்.
பி.கு....எங்களுக்குத் தெரியாத என்னத்தை சொல்ல வந்துவிட்டே என்று யாரும் கோபப்பட வேண்டாம். Hypertension தினம் ஆயிற்றே . ஒரு பதிவு எழுதலாமே என்று தான்.......
" அம்மா எனக்கு அந்த அங்கிள் தலையில் இருக்கும் பிஸ்கெட் வேணும் " ஒரு சின்னப் பெண் குரல் . "தலையில் பிஸ்கெட்டா? " சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.
பார்த்தால் ரயில்வே பிளாட்பார்மில் ஒருவர் பிஸ்கெட் விற்றுக் கொண்டிருந்தார்.
நாங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் பிஸ்கெட் விற்பவர் தலையில் வைத்திருக்கும் அட்டைபெட்டியில் இருக்கும் அத்தனை பிஸ்கெட்டும் தெரிந்தது .
உட்கார்ந்திருப்பது மாடி ரயில் அல்லவா? அதாங்க double decker.
முன் சீட் குழ்ந்தை சொன்னது போல் பிளாட்பார்மில் செல்லும் எல்லோரின் உச்சி மண்டை எல்லாம் தெரிந்தது.
double decker ஓட ஆரம்பித்தாயிற்று என்று டிவியில் பார்த்துடனேயே பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸில் சென்னை திரும்ப வேண்டும் என்ற என் எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொண்டு MAS Double Decker இல் டிக்கெட்டை புக் செய்தேன்.
lower deck, middledeck , upper deck என்று மூன்று தளங்களாக பிரிக்கப் பட்டிருக்கிறது ரயில் . middle deck சும்மா பேருக்கு பன்னிரெண்டே சீட். மற்ற இரண்டு தளங்களில் தான் பெரும்பாலான பயணிகள்.
உயரத்தில் உட்கார்ந்து பயணிப்பது ஒரு புது அனுபவம் தான். நன்றாகவும் இருந்தது.
" திரிசங்கு சொர்க்கம் " இப்படித்தான் இருந்திருக்குமோ? ஆகாயத்திலும் இல்லை. தரையிலும் இல்லை.
மீண்டும் அந்தக் குழந்தையின் குரல்."அம்மா ஏசி வேண்டாம் குளிருதே " என்று நச்சரிக்க ஆரம்பித்தாள் .
அவளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் கூடத்தான். ஒருமுறை lower deck போய் பார்ப்போமே என்று ஒரு ரவுண்டு சென்று வந்தேன். மாடியில் ஒரே குளிர் என்றால் கீழ் தளத்தில் புழுக்கம் அதிகம்.. ஆனால் இதெல்லாம் ஆரம்பகால சிறு சிறு சங்கடங்கள். போகப்போக சரிசெய்தி விடுவார்கள்.
ஒரு காலத்தில் toilet வசதி கூட இல்லாமல் தான் நம் ரயில் இருந்திருக்கிறது. உண்மை !நம்புங்கள். ! அதாவது 1909 முன்பு நம்மூர் ரயில்களில் toilet வசதி இல்லை.
இதை நான் சொல்லவில்லை.
டில்லியில் இருக்கும் ரயில்வே மியுசியத்தில் திரு Okil Chandra Sen என்பவர் எழுதியிருக்கும் கடிதம் சொல்கிறது.
அவருடைய கடிதத்திற்கு அந்த காலத்தில் மரியாதை கொடுத்து கழிவறை வசதியை பிரிட்டிஷ் காரர்கள் உடனடியாக செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பிரிட்டிஷ் அரசாங்கத்தை எப்படி மிரட்டுகிறார் நீங்களே பாருங்கள்.
ஆங்கில இலக்கணம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை போலும் அவருக்கு. இல்லை, ரயில்களில் ஒரு toilet வசதி செய்து கொடு முதலில் . அப்புறம் நான் கற்கிறேன் உன் ஆங்கிலத்தை, என்று நினைத்துக் கொண்டு எழுதியது போல் தெரிகிறது இல்லையா? இக்கடித்தத்தின் சாராம்சம் என்னவெனில் திரு Ohil அஹமெட்பூர் ஸ்டேஷனில் Toilet உபயோகிக்க இறங்கியிருக்கிறார். அவர் திரும்ப ஏறுவதற்குள் ரயில் கிளம்பி விடுகிறது. அவசரமாக ஏற முயலும் போது அலங்கோலமாக கீழே விழுந்து ரயிலை தவற விடுகிறார்.
வந்த ஆத்திரத்தில் ரயில் நிர்வாகத்திற்கு எழுதப்பட்ட கடிதம் தான் இது. இக்கடிதத்திற்கு உடனடியாக பலனும் கிடைத்து விட்டதே ! அதைச் சொல்லுங்கள். நம்முடைய அடிப்படைத் தேவையை ஒரு கடிதத்தின் மூலமாகப் பெற்றுத் தந்த திரு.Okhil Chandra Sen அவர்களுக்கு நன்றியைக் கூறிக் கொண்டு நம் ரயில்வேத் துறை மேன்மேலும் முன்னேறும் என்று நம்புவோம்.