ஒரு பௌர்ணமி மாலையில் மெரினாவிற்கு கிளம்பினோம்.
நம் பர்சை, பதம் பார்க்காத , எல்லாத் தட்டு மக்களுக்கும் , ஏற்ற பொழுதுபோக்கு , " பீச் ".
வண்டியைப் பார்க் செய்ய இடம் , தேடி, தேடி , அலைந்து, ஒரு வழியாக கலங்கரை விளக்கம் அருகில், ஒருவர் காரை எடுக்க, உடனே அந்த இடத்தில் நாங்கள் அவசரமாகப் பார்க் செய்தோம்.
ஒரு matrimonial விளம்பரம் , படித்தது நினைவிற்கு வருகிறது.
" வண்டியை பார்க் செய்வதற்கு தேடினாலும் இடம் கிடைக்காது.
ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு வரன் கிடைத்து விடும். நாங்கள் இருக்கிறோமே. " என்கிற ரீதியில் இருக்கும்.
அது உண்மை தான் என்று சென்னையில் வண்டி வைத்திருப்பவர்கள் சொல்வது உறுதி.
வண்டியைப் " பார்க் " செய்தபின் நீண்ட தூரம் நடந்து காந்தி சிலையருகே
வந்தோம்.
மாலை நேர கதிரவன் மேற்கில் பயணித்துக் கொண்டிருந்த வேளை.
அங்கு முதலில் தென்பட்டது வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் நீண்ட பெஞ்சில் உட்கார்ந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது தான்.
இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? என்கிற மாதிரி அவர்களைப் பார்த்துக் கொண்டே கடக்கும் இளைய தலைமுறை.
அங்கிருந்து சிறிது தூரத்தில் பார்த்தால்.....................
நம்ம சச்சின் டெண்டுல்கர் , ராகுல்டிராவிட் எல்லோரையும் காணலாம்.
(" எதிர்கால ", என்று அங்கங்கே போட்டு படிக்கவும். )
அவர்களைக் கடந்து , மணலில் காலை வைத்து நடந்தேன்.
எதிரே , அட........ குடை ராட்டினம். குதிரை மேல் , குழந்தைகள் . சுற்றி வந்து கீழே குதித்த பின்பும் ,உற்சாகம் சிறிதும் குறையவில்லை.
நம்மையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள மேலே நடந்தோம்.
டப்............டப்...........டப்............
இது என்ன?
துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார்கள். யாரையா?
பலூனைத் தான்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த " ககன் நரங் " இந்த மெரீனாவில் தான் , துப்பாக்கியால் , முதன் முதலாக சுட்டு பயிற்சியை ஆரம்பித்திருக்கிறார். ராசியான கடற்கரை தான்.
மெடலெல்லாம் கிடைத்திருக்கிறதே. .
நிறைய இளைஞர்கள் அதற்குத் தான் பழகுகிறார்களோ ? . இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் நிறைய மெடல் உண்டு .
கவலையை விடுங்கள்.
கொஞ்சம் கடைகள் பக்கம் நடப்போமே என்று சென்றோம்.
பஜ்ஜி வாசனை மூக்கைத் துளைத்தது.
தோட்டா தரணி உதவி இல்லாமல், அங்கே ஒரு " ஹோட்டல் செட் " முளைத்து இருந்தது . இந்த பீச் காற்றிலும் எப்படியோ அடுப்பை எரிய வைக்க லாவகமாக தடுப்பு வைத்திருக்கிறார்கள்.
டாக்டரின் ஆலோசனைகளை பீச் காற்றில் பறக்க விட்டபடி, இரண்டு மிளகாய் பஜ்ஜி, கண்ணில் நீர் வர,வர சாப்பிட்டோம்
கிளிஞ்சல் பொம்மைகள், கிளிஞ்சல் திரைச்சீலைகள், கிளிஞ்சலில் எல்லா மத சாமிகளும் அருள்பாலித்துக் கொண்டிருந்தார்கள்.
பலூன், காற்றாடி விற்பவர்கள் , எல்லோருக்கும் உணவை அளிப்பது பீச்.
குதிரையில் யார் இவர்கள்.?
பிருத்விராஜ், சம்யுக்தை போல் ஆண்கள் தங்கள் ஜோடியை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு பெருமிதமாக பீச் வலம் வருகிறார்கள்.
பார்க்க நல்ல தமாஷ்.
குதிரை என்ன செய்தாலும் வேகம் எடுக்காது. ஒரே ஏரியாவையே சுற்றி சுற்றி வரும் . இதெல்லாம் தெரிந்தும் இந்த ஜோடிகள் போடும் சீன் இருக்கிறதே .... .........ஹப்பா..............தாங்கமுடியாது.
இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவில் , கட்டு மரங்கள் மறைவில் ஜோடிக் கிளிகளாய் காதலர்கள், இளம் தம்பதிகள் கிசு கிசு.
அவர்கள் தனிமையை , சுண்டல் , வேர்கடலை, பூ, முறுக்கு, காபி, ஐஸ்கிரீம் என்று ஒருவர் பின் ஒருவராக வந்து கெடுக்க ........அவர்கள் முகத்தில் தோன்றுவது கோபமா , எரிச்சலா, பரிதவிப்பா, .............
குடும்பத்துடன் வந்தவர்கள் தங்கள் குழந்தைகள் " பேங்க் " லோன் இல்லாமல் வீடு கட்டி மகிழ்வதைப் பார்க்க , குழந்தைகளோ கிளிஞ்சல்களை வைத்து interior decoration செய்து மகிழ்கிறார்கள்.
திடிரென்று , " உங்கள் அக்கா சொன்னால் ஒன்றுமில்லை. இதையே நான் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்." என்ற உரையாடல் காதில் விழ திரும்பினால் நடுத்தர வயதை எட்டிப் பிடிக்கும் தம்பதியரின் சின்ன ஊடல் .இந்த ஊடலுக்கெல்லாம் பீச்சில் ஆயுசு கம்மி.
இவர்களுக்கும் தனிமை வேண்டுமே.
இங்கு நமக்கென்ன வேலை .
பட்டம் மட்டுமா பறக்கும் ?
தட்டும் பறக்கும்.
' பறக்கும் தட்டு ' சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் தாண்டிப் போனால் " ஹோ " வென்ற இரைச்சலுடன்
நம் கதாநாயகி.
சிறுவர் முதல் பெரியவர் வரை அவள் வருவாளா என்று ஏங்கி நிற்கிறார்கள்..
மிகப் பெரிய அலையாக ' ஹோ ' வெனக் கிளம்பி கொஞ்சம் கொஞ்சமாக
தணிந்து ஒரு சின்ன ' களுக் ' சிரிப்புடன் நம் கால்களிடம் ரகசியம் சொல்லித் திரும்புகிறாள்.
தன் புது மனைவி கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவள் அலையைப் பார்த்து பயப்படும் அழகை ரசிக்கும் கணவனை ரசிக்கிறாளோ கடல் கன்னி.
இந்த அமர்க்களமான சூழ்னிலையில் அங்கங்கே ஓரிருவர் எதிலும் ஒட்டாமல் தள்ளி அமர்ந்து எதையோ பறிகொடுத்தவர் போல் அமர்ந்திருந்தனர்.. அவர்களுக்கும் நல்ல ஆறுதல் இந்தக் கடல்.
நினைப்பவருக்கு நினைத்த மாதிரி கடல் தன் குணத்தை மாற்றிக் கொள்வாள் போலும்.
அலைகள் திடீரென பெரும் உற்சாகத்துடன் உயர உயர வீச , என்னவென்று பார்த்தால் வட்ட வெள்ளித் தட்டு , போன்ற சந்திரனைப் பார்த்து தான் , இத்தனை ஆவேசம் அலைகளுக்கு.
பௌர்ணமி நிலா வட்டமாக மேலெழும்பியது..
நிலவின் வெளிச்சமும் கலங்கரை விளக்கமும் இருளை அகற்றத் துணைபுரிந்த போதிலும் , கூட்டம் மெதுவாக கலையத் தொடங்கியது.
நாங்களும் கடலையும் நிலவையும் பார்த்துக் கொண்டே நகர்ந்தோம்..
நான் எழுதியது கொஞ்சமே! விட்டது நிறைய இருக்கும் .
விட்டதைப் பற்றி பின்னூட்டங்களில் குறிப்பிட தயங்க வேண்டாம்.
RAMA STORY END PART படிக்கலாம் இங்கே.
image courtesy---google
மெரினாவை மிக அழகாக உங்கள் எழுத்து திறமையால் கண்முன் அப்படியே படம் பிடித்து காண்பித்து உள்ளீர்கள். எல்லோரும் கேமராவினால்தான் படம் பிடிப்பார்கள் என்றால் நீங்கள் எழுத்தால் படம் பிடித்து உள்ளீர்கள்
ReplyDeleteநன்றி MTG. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.
Deleteகடலே அழகு தான். அதனால் எழுத்தும் அழகாகி விட்டது.
Alaga kadalil payaniththu pol ullathu..
ReplyDeleteநன்றி அன்பு உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Deleteகுடும்பத்துடன் வந்தவர்கள் தங்கள் குழந்தைகள் " பேங்க் " லோன் இல்லாமல் வீடு கட்டி மகிழ்வதைப் பார்க்க , குழந்தைகளோ கிளிஞ்சல்களை வைத்து interior decoration செய்து மகிழ்கிறார்கள்.
ReplyDeleteகடலும் அலையும் நிலவும் மலரும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் பாராட்டிற்கு.
Deleteநினைப்பவருக்கு நினைத்த மாதிரி கடல் தன் குணத்தை மாற்றிக் கொள்வாள் போலும்.//
ReplyDeleteஉண்மை. மனநிலைக்கு ஏற்ற மாதிரி கடல் அம்மா ஆறுதல் தருவாள்.
தாலாட்டு பாடுவாள், குழந்தையாக குதுகலித்து ஓடிவருவாள். காதலியாக கொஞ்சுவாள், நண்பனாய் தோள்தட்டி வருடி செல்வாள், நினைப்பவர் நினைத்த மாதிரி கடல் அம்மா இருப்பதால் தான் அவளை நாடி நாளும் கூட்டம் அலை மோதுகிறது.
உங்கள் விரிவான கருத்துரைக்கு நன்றி கோமதி.
Deleteஆஹா சொல்லுவிதமே அருமை.மெரினாவை ரசிக்காத நபருண்டோ? அதும் நீங்க சொன்னப்புறமும்
ReplyDeleteஉங்கள் பாராட்டிற்கு நன்றி ஐயா.
Delete// தோட்டா தரணி உதவி இல்லாமல், அங்கே ஒரு " ஹோட்டல் செட் " முளைத்து இருந்தது . இந்த பீச் காற்றிலும் எப்படியோ அடுப்பை எரிய வைக்க லாவகமாக தடுப்பு வைத்திருக்கிறார்கள்.
ReplyDeleteடாக்டரின் ஆலோசனைகளை பீச் காற்றில் பறக்க விட்டபடி, இரண்டு மிளகாய் பஜ்ஜி, கண்ணில் நீர் வர,வர சாப்பிட்டோம்
// அட என்ன ஒரு காட்சி..வர்ணனை.. மெரினா உங்க எழுத்தில் இன்னும் அழகா தெரியுது.
ஆமாம் உஷா. நாங்கள் பஜ்ஜி சாப்பிட்டபோது இப்படித்தான் உணர்ந்தேன். அதை அப்பிடியே பதிவிட்டுவிட்டேன்.
Deleteஉங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி உஷா.
மெரினா பீச் அனுபவம் சுவாரஸ்யம்.
ReplyDeleteநன்றி சகோதரி உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்.
Deleteதொடர்ந்து வாருங்கள்.
நான் ஒரு பதிவை மீண்டும் படிப்பத்தில்லை ஆனால் இன்று வேலையில் இருந்து வந்ததும் மீண்டும் 2 முறை படித்தேன். பீச்சுக்கு போனதை ஒரு சிறு நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக சொல்லி சென்ற முறை என் மனதை கவர்ந்தது.
ReplyDeleteநன்றி !நன்றி ! நன்றி! இப்படி புகழ்வதற்கு.
Deleteநீங்கள் மெரினாவின் முதல் பகுதி படித்து விட்டீர்களா?
நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்களேன்.
பிடித்திருந்தால் கருத்திடுங்கள்.
இதோ லிங்க் http://rajalakshmiparamasivam.blogspot.com/2013/02/blog-post_20.html
"நம்மையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள"___உற்சாகத்தில் குடை ராட்டினத்தில் ஏறிட்டிங்கன்னு நினைச்சி ஏமாந்துட்டேன்.
ReplyDeleteபீச்சுக்கு வந்துள்ளவர்களின் மனநிலையை கண்முன்னே கொண்டுவந்திட்டிங்க.உங்களைப் படத்தில் காணோம் என்ற குறையைத்தவிர வேறொன்றுமில்லை.மெரினாவின் நினைவுகளில் மூழ்க வைத்ததற்கு நன்றிங்க.
இவ்வளவு அழகான இயற்கையை காசாக்காமல் இலவசமாக இருக்கும்வரை அனைவரும் ரசித்து மகிழலாம்.
குடை ராட்டினத்தில் ஏறியிருந்தால் அப்படியே திரும்பியிருப்பேன்.
Deleteதலை சுற்றல் எல்லாம் வரும். சில சமயம் பார்க்கும் போதே தலை சுற்றும். இந்த வம்பிற்கெல்லாம் போவதில்லை.
பீச் ஒரு ரம்யமான மாலை நேரத்தில் கொள்ளை அழகு. மனமில்லாமல் தான் நான் வீடு திரும்புவேன் ஒவ்வொரு முறையும்.
போட்டோ courtesy google தான்.அதனால் நானிருக்க வாய்ப்பில்லை.
நன்றி சித்ரா உங்கள் விரிவான கருத்துக்கும், பாராட்டுக்கும்.
உங்களுடன் கூடவே எங்களையும் மெரீனா விற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள், ராஜி!
ReplyDeleteஅலைகள் காலை நனைக்க நேரம் போவது தெரியாமல் நிற்கும் அனுபவமே தனிதான், இல்லையா?
நீங்கள் அனுபவித்ததுடன், எங்களுக்கும் இந்தப் பதிவு மூலம் ஒரு சுவையான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.
சரளமான நடை லயிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்!
நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
Deleteஅழகான அருமையான பதிவு கண்டோம். மகிழ்ச்சி கொண்டோம். குழந்தைகள் வீடு கட்டியது ப்ற்றிய வர்ணனை மிகவும் கவர்ந்தது. பாராட்டுக்கள்.
ReplyDeleteவீடு கட்டும் முக்கால்வாசி பேர் பேங்கின் உதவி இல்லாமல் கண்டிப்பாக கட்டியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
Deleteஅதனால் தான் பேங்க் லோன் இல்லாமல் வீடு கட்டினால் எப்படியிருக்கும் மனநிலை என்று நினைத்து எழுதினேன்.
நன்றி உங்கள் பாராட்டிற்கு.
ஈரம் காயாத நினைவுகள் இன்னும் பசுமையாய் உங்களுடன் ஆம் எப்போதும் இயற்கை நம்மை வாழ சொல்லும் கடல் அலைகள் போல் அலை அடிகிறது ஓயாமல் உங்கள் நினைவலைகளில்
ReplyDeleteநன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்
Deleteசுனாமி வரும்போது இதே கடலின் விஸ்வரூபத்தையும் காணலாம். தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் மிளகாய் பஜ்ஜிகள்... சுவையான காட்சிகள்.
ReplyDeleteகடல்... ஏழைகளின் A/C ஹால்! :))
ஆமாம். நீங்கள் சொல்வது போல் கடலின் கோபம்....அப்பா....சாது மிரண்டால் கதை தான். அந்தத் துயரத்தை நினைத்தாலே உடல் நடுங்குகிறது. மறக்க முயற்சிப்போம்......
Deleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி