Tuesday, 16 February 2021

கம்பனும் Passportம்

image:Wkkimedia Commons


 இன்று எங்கள் வீட்டில் "தேடல் திருவிழா" தான் போங்கள் . 

அதிகாலையிலேயே  ஆரம்பித்தது ....

காபிப் பொடி டப்பாவை கை  மறதியாக  வைத்து விட்டு,   தேடு தேடென்று  தேடி , ஒரு வழியாக காபிக் கடை  முடிந்தது.

காபியை என்னவர் கையில் எடுக்கும் போதே ,"இன்றைய பேப்பர் எங்கே ?"

அடுத்தத் தேடலா..? பெரிய பெருமூச்சுடன்  அதையும்  ஒரு வழியாக தேடிக் கண்டு பிடித்து விட்டோம்.

" இது என்னடா இன்று  என்  நினைவாற்றலுக்கு  வந்த  சோதனை " அலுத்துக் கொண்டேன். அப்பத்  தெரியாது ..... இன்னும் கொஞ்ச நேரத்தில், பீரோவையே  நான் கவுத்துப் போட்டுத் தேடப் போகிறேன்  என்று..

என்ன?பீரோவையேவா?  

  ..இப்போழுது தான் கொஞ்சம் கொரோனா குறைந்திருக்கிறதே,  பாஸ்போர்ட் புதிப்பித்து  விடலாமே  என்று நினைத்து, பாஸ்போர்ட்  வைத்திருந்த பீரோவைத் திறந்து,எடுக்க கையை நீட்ட.. .. ஆரம்பித்ததது  தலைவலி..

வைத்திருந்த இடத்தில் அது இல்லை...எங்காவது விழுந்திருக்குமோ ? லாக்கரிலிருந்து, என் பார்வை, அருகில் வைத்திருந்த என் புடவைகள்  இருக்கும் இடத்தில் என் பார்வை நகர்ந்தது. புடவைகளுக்கு மேலே , அவைகள் நடுவில்.... என்று கையை விட்டு துழாவிக் கொண்டிருந்தேன்.

இத்தனைப் புடவைகளா! என்னவர் புடைவைகள் மேல் கண் வைக்க...

" ஏன் இப்படி கண் வைக்கிறீர்கள்? திருஷ்டி சுத்திப் போட வேண்டும்." சொல்லிக் கொண்டே தேட...

ம் ஹூ ம் .. கிடைக்கவில்லையே...

என்னுள் பதட்டம் கொஞ்சம்  கொஞ்சமாக  அதிகமாக ...

சமய சந்தர்ப்பம் இல்லாமல் என்னவரோ," குளிசசிட்டுத்  தேடு. கிடைக்கும்" என்று  கிண்டலடிக்க ( டிவியில் வரும் சோப் விளம்பரம்  போல சொல்கிறாராம்)

 நானோ, ராமனின் அம்பு ராவணனின் உடம்பை துளைத்துச் சென்றதைப் போல்...ஒரு இடம் பாக்கி இல்லாமல் தேடிக் கொண்டிருந்தேன்.

பாஸ்போர்ட் தேடும் போது எதுக்கு ராமன், ராவணன் என்று? Mind Voice சொன்னதை அலட்சியம் செய்தேன். 

"பாஸ்போர்ட்டை விடு. எங்கே போய் விடப் போகிறது. அதான் கொரோனா நம்மை ஒரு வருடமாக வீட்டிலேயே தான் உட்கார்த்தி வைத்திருக்கிறது. பிறகு என்ன கவலை ? இங்கு தான் வீட்டிற்குள் கிடக்கும்.முதலில் கம்ப காவியப் பாட்லை ரசிப்போம். பிறகு பாஸ்போர்ட்  தேடல்...OK?" மனம் ஒத்துக் கொள்ள... 

இதோ கம்பனின் வீடியோ...

 ராமனின் அம்புத் துளைத்து, ராவணன் மாண்டு போனான். மண்டோதரி கணவன் மேல் விழுந்து புலம்புகிறாள் .. 

"எத்தனை முறை சொன்னேன் ! வேண்டாம்  அந்த மகராசி. அவள் நம் வம்சத்தையே  கெடுக்க வந்தவள் போல எனக்குத் தோன்றுகிறாள். விட்டு விடு  ராசா  என்று  எத்தனை முறை உங்களிடம் கெஞ்சினேன். காதில் வாங்கிக் கொள்ளவேயில்லையே.

இன்று அவள் கணவன் கையால் அடிபட்டு இறந்து என்னையும் நட்டாத்தில் விட்டு விட்டீர்களே.  அதுவும் சும்மாவா ராகவனின் அம்பு பாயந்திருக்கிறது. உடம்பில் ஒரு இடம் இல்லாமல் துழாவிக் கொண்டு சென்றிருக்கிறதே . அந்த ஜானகியின்  மேலுள்ளக் காதல்  உங்கள் உடம்பின் எந்த மூலையிலாவது ஒளிந்திருந்தால் ,அதை விட்டு விடக் கூடாது என்பது போலல்லவா துளைத்திருக்கிறது. 

தேவையா இது உங்களுக்கு.

மாற்றான் மனைவி மேல் காதல் வயப்பட்டால், இந்த நிலை தான் உருவாகும்." என்று மண்டோதரி அழுது புலம்புவதாக கம்பர் எழுதியிருக்கிறார்.  

ராவணின் அம்பு ராவணனின் உடலைத் துளைத்துக் கொண்டு சென்றதை இதை விட அருமையாக யாராலும் சொல்லிவிட முடியுமா என்ன?

      'வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த 
                      திரு மேனிமேலும் கீழும்
        எள் இருக்கும் இடன் இன்றிஉயிர் இருக்கும் 
                     இடன் நாடிஇழைத்தவாறோ?
        "கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
                     மனச் சிறையில் கரந்த காதல்
         உள் இருக்கும்'' எனக் கருதிஉடல் புகுந்து
                    தடவியதோ ஒருவன் வாளி?

ஒப்பற்ற ராமபிரானின் அம்பு,வெள்ளை எருக்கம் பூவை சூடும் சிவபெருமானுடைய , கயிலை மலையைத் தூக்கிய ராவணனுடைய அழகிய உடலின் மேல் பகுதியிலும், கீழ்ப் பகுதியிலும், எள் இருக்க இடம் கூட இல்லாமல், உயிர் இருக்கும் இடம் முழுதும் தேடி ஆராய்ந்த வண்ணம் சென்றதோ?தேன் குடிக் கொள்ளும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சீதாதேவியை மனம் எனும் சிறையில் ஒளித்து வைத்திருந்த காதலானது, உள்ளே இன்னும் எங்காவது பதுங்கியிருக்கும் என்று எண்ணி உடல் முழுதும் நுழைந்து, தடவிப் பார்த்ததோ.

ஆஹா.... இதை விடவும், ஒழுக்க சிந்தனையை நான்கு வரிகளில் படம் பிடித்துக் காட்ட கம்பனைத் தவிர யாரால் முடியும் சொல்லுங்கள்.

மீண்டும் ஒரு கம்பனின் பாடலுடன் வருகிறேன்...

 நன்றி...



உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்