Sunday, 2 February 2014

முதல் பரிசு.(பரிசு-1)



வலையுலகில்  மிகப் பிரபலமான பதிவர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறுகதை விமரிசனப் போட்டி  ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்." தை வெள்ளிக்கிழமை " என்கிற  சிறுகதைக்கு நான்  எழுதிய  விமரிசனத்திற்கு  முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் பரிசை  திரு. ரமணி  சாருடன் பகிர்ந்து கொள்வதில்  எனக்குப் பெரு மகிழ்ச்சி.

' தை வெள்ளிக்கிழமை '  சிறு கதைக்கான இணைப்பு இதோ




அந்த சிறு கதைக்கான என் விமரிசனம்  இதோ 

தை வெள்ளிக்கிழமை '  கதை தாய்மை பண்பு மிளிரும் கதை.

கதையில் ருக்குவும் அவள் கணவரும்  எடுக்கும் முடிவுக்கு  வறுமை  மட்டுமே காரணம் என்பதை அருமையாய் விளக்கியிருக்கிறார் கதாசிரியர்.

இந்தக் கதை திரு. வை. கோபாலகிருஷ்ணன்   எழுதும் போது வாடகைத் தாய்மார்கள் இவ்வளவு பிரசித்தம் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது நிறைய வாடகைத் தாய்மார்கள்  , நம் கண்ணெதிரே உலவிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் எல்லோருமே தாய், பிறகு தான் அவர்கள்  தத்துக் கொடுக்கும் தாய்  என்பதை அழகாக விள்ங்க வைத்துள்ளார் கதாசிரியர். 

ருக்கு தாய் தானே! எப்படி தத்துக் கொடுக்க ஒத்துக் கொண்டாள் என்று  தோன்றலாம். ஔவையார் சொல்வது போல், வறுமை கொடிது ஆயிற்றே! அந்த நேரத்தில்  வளமான தன நான்கு குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமல்ல பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலமும்  அவர்களை அந்த முடிவை நோக்கித் தள்ளி விட்டு விட்டது.

தத்து கொடுத்து விடுவார்களோ என்கிற பதை பதைப்பு படிக்கும் போது ஏற்படுவதை  தவிர்க்க முடியாது..

 நான்கு குழந்தைகளின் எதிர்காலம், கணவரின் தொழில், பிறக்கப் போகும் குழந்தையின், வளமான எதிர்காலம், என்று  ருக்குவும் அவள் கணவரும் தத்துக் கொடுக்க தீர்மானித்தாலும், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்களுக்கு குழ்நதை மேல் இருந்த பாசமே இறுதியில்  வெற்றி பெறுகிறது.அப்பாடி......என்று பெருமூச்சு விடத் தோன்றுகிறது. 

காரணம் சொல்ல வேண்டுமே மறுப்பதற்கு  என்பதற்காக " அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது ,அதுவும் தைவெள்ளிக்கிழமை " என்று சொள்கிறார்கள் என்பதே என் கருத்து.  . அவர்கள்  பாசத்தின் முன் , வறுமை தோற்றோடிப் போனது . பணம் எவ்வளவு வலிமை வாய்ந்த ஆயுதம் என்றாலும் , இறுதியில் பாசம் தான் வெற்றி பெறும் என்று சொல்லி விட்டது கதை. பணமா,  பாசமா என்கிற  சவாலில் பாசத்தை வெற்றி பெற செய்ததற்கு  மிக்க நன்றி கோபு சார்.

தத்துக் கொடுக்கும் தாய் மார்களும், வாடகைத் தாய்களுக்கும் ஏற்படும் மனப் போராட்டத்தை விளக்கும் கதை. ஆயிரமாயிரம் ருக்குக்கள்  இன்னும் இந்த சமுதாயத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். ருக்கு தன முடிவை மாற்றிக் கொண்டதும் கோபப்படாமல் , அவர்கள் நிலைமையை புரிந்து கொண்ட டாக்டர் மரகதத்திற்கு பாராட்டுக்கள்.டாக்டர் மரகதம் போன்று எல்லா டாக்டர்களும் இருந்தால் மகிழ்ச்சி தான்.

மொத்தத்தில் தாய்மையின் உன்னதத்தை அழகாய் எடுத்துக் காட்டிய கதை.

                                   ------------------------------------------------------------------

இந்த அருமையான வாய்ப்பினை  தந்த திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும்,  என்  விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த  நடுவருக்கும்


                                                                  நன்றி!  நன்றி !



images courtesy----google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்