Tuesday, 12 February 2013

ஆகாசவாணி


 
"ஆகாசவாணி!  செய்திகள்   வாசிப்பது   சரோஜ்  நாராயணசுவாமி "  இதைப்   படிக்கும்   போது   மனம்         காலை  ஏழே   கால்     மணி    பரபரப்பை    உணர்ந்தது.    அந்த   நேர   ஸ்கூல் ,  கல்லூரிக்கு     செல்லும்    பரபரப்பு  ,   அடுக்களையிலிருந்து  மிதந்து    வரும்    சாம்பார்   கொதிக்கும்     மம்    எல்லாமே     நினைவுக்கு  வந்தன..

' ரேடியோ  "    பொழுது    போக்கு    அம்சத்தை     நம்    வீட்டு     கூடத்திற்கு   கொண்டு வந்தது.  இன்று    தொழில்  நுட்பம்    எத்தனையோ    சாதனங்களை    நம்   கையருகில்   கொண்டு வந்திருக்கலாம்.   அதற்கெல்லாம்   முன்னோடி   'ரேடியோ.'

இன்று    திடீரென்று    ரேடியோவிற்கு    எதற்கு    இப்படி  ஒரு        "   டாம்  டாம்  ".
காரணம்   இருக்கிறது   .பிப்ரவரி  13   , உலக   ரேடியோ     தினமாகக்     கொண்டாடப்படுகிறது  .     நாளிதழில்  படித்ததும்      மனம்    பின்னோக்கி     செல்வதை    தடுக்க  முடியவில்லை. சட்டென்று   சின்னப்  பெண்ணாகி    விட்டாற்  போல்   மனம்   துள்ளியது.

கடிகாரம்    பார்க்க வேண்டிய    அவசியம்  இல்லாமல்   காதால்  நிகழ்ச்சியைக்   கேட்டே    நேரம்   தவறாமல்    காரியங்களை  நடத்திக்  கொண்டிருந்தோம்.

"ஆகாஷவாணி " , " ஆல்     இன்டியா    ரேடியோ "   ஆனது.

நேயர்    விருப்பம்    இன்றும்    எனக்கு    விருப்பமே என்னைப்   போல்   நிறைய  பேர்     உண்டென்றே    நினைக்கிறேன்.

மெட்ராஸ்   A   ,  மெட்ராஸ்    B  ,   திருச்சி   என்று  பல  ஸ்டேஷன்களை    மாற்றி   மாற்றி   கேட்டிருக்கிறேன்.

ரேடியோ    சிலோன்  ல்    வரும்    பிறந்த நாள்  வாழ்த்து     நிகழ்ச்சி   பலரும்   விரும்பிக்   கேட்கும்   ஒன்று   ஆகும்.
"வாழ்த்துகிறவர்கள்    அம்மம்மா,  அப்பப்பா,   மாமி,    மாமா ....... "  என்று  நீண்டு     கொண்டே  போகும்  லிஸ்ட்டை யே    ரசிப்பவர்கள்   நிறைய  பேர். 

வீட்டில்    ரேடியோ   வாங்கிய   அன்று    எப்படி   ஒரு   சந்தோஷத்தில்    மிதந்தோம்    .அப்படியே   நினைவில்  இருக்கிறது.   

 திருச்சி  ஸ்டேஷனும்     ரேடியோ    சிலோனும்  கேட்பதற்காக     ஒரு    பெரிய    ஏரியல்    ஹாலில்    நீளமாகக்     கட்டியும் ,    ரேடியோ    சிலோனில்    TMS ம்  , சுசீலாவும்   தொண்டைக்   கட்டு   வந்தது    போல்   தான்  பாடிக்  கொண்டிருந்தார்கள்.

விவித்பாரதி ,   நாம்  வணிகமயமாகப்    போவதை   முன்கூட்டியே    நம்  வீட்டிற்குள்    வந்து   அறிவித்தது.    அதில்     வரும்   தேன்கிண்ணம்   நிகழ்ச்சிக்கு      அப்போதெல்லாம்     பெரும்      ரசிகர்      பட்டாளம்   உண்டு.   சினிமாப்    பாட்டுக்கு   மட்டுமல்ல ,  அதில்   வந்த   விளம்பரங்களுக்கு   கூடத்தான்   ரசிகர்கள்.     சாரிடான்    ,    அர்ச்சனா   ஸ்வீட்ஸ்,  நரசுஸ்   காபி    விளம்பரம்.,   இது    போல்     நிறைய   ......... .மனதைக்    கொள்ளையடிக்கும்.
சினிமா   பாட்டு  மட்டுமல்ல,   கர்நாடக   சங்கீதமும்,  இசைவிழா,   நாடக   விழா        எல்லாமே    காதிற்கு    விருந்து      தான்.  

கிரிக்கெட்  மேட்ச்    கமெண்டரி   மறக்க முடியுமா.? கிரிக்கெட்  க்ரௌண்டை   கண்ணால்  பார்க்காமலே     mid on  ,  midoff,  covers   எல்லாமே    கற்பனையில்..........   நாம்    நினைக்கின்ற இடம்  தான் .     .Pataudi    catch   பிடித்தது   அப்படியே    மனக்  கண்ணில்    விரிய  வைக்கும் ,  கமெண்டேடர்    சாமர்த்தியம்.

இது  மட்டுமா,   கும்பாபிஷேகங்கள்,   பெரிய  தலைவர்களின்   மரணச்செய்தி,  எல்லாமே    சட்டென்று  வீடு  வந்து சேர்ந்து விடும்  . வானிலை அறிக்கையும்     வந்தடையும்.    

அதன்    படி    மழையெல்லாம்    வருமா?   

உஷ்.......... அதெல்லாம்    கேட்கக்   கூடாது.

அதற்குப்  பிறகு    transistor  வந்தது.  பார்ப்பதற்கும்   ரேடியோவின்  சிஸ்டர்   தான்.   டேப்    ரெகார்டர்    வந்தும்    ரேடியோவின்    மவுசு   குறையத்தானில்லை.

தற்போது    FM    களின்   ஆட்சி    . கைபேசியிலேயே   கேட்டுவிடலாம். ஆகவே    இப்பொழுது   ரேடியோ  அவசியமில்லை  என்ற  நிலைக்கு   வந்துவிட்டோம்.  

சட்டென்று  ஒரு  குரல்    "இன்றைய    தலைப்புச்  செய்திகள்."
ஓ!   நான்      இப்பொழுது    "டிவி"   முன்னால், கையிலோ   " ஐபேட் " 

டிவியும்  ,  இணையமும்  , சேர்ந்து    ரேடியோ   ரசிகர்களை   கடத்திக்  கொண்டு  போய்     விட்டது   என்று    நினைத்தால்......   

இல்லை  , என்கிறது  புள்ளிவிவரம்*.உலகளவில் 1,00,000 ற்கு   மேல்   ரேடியோ  ஸ்டேஷன்களும் , 2,00,000  கோடி   ரேடியோக்களும்,  அதற்கான  ரசிகர்களும்   உள்ளார்களாம்.

நம்மை  மகிழ்விக்கும்,  ரேடியோவைக்   கண்டுபிடித்துக்   கொடுத்த   ' மார்கோனி 'க்கு 
" hats  off ".


என்னுடைய   ஆங்கிலப்  பதிப்பு  RAMA STORY  
இங்கே  க்ளிக்  செய்து   படியுங்களேன்.கருத்தும்  எழுதுங்கள்.

*young world dt 12th feb
 courtesy -- google  

31 comments:

 1. ரேடியோவும் ட்ரான்சிஸ்டரும் வேறுவேறா!நான் சரியான ரேடியோ பைத்தியம்.என்னவர் அதற்கும் மேல்.இப்பவும் ரேடியோ இல்லாமல் இவர் இல்லை. அந்த நாளில் எங்க வீட்டு ரேடியோ ரிப்பேர் என்றால் இவர்தான் சரிசெய்து,குட்டிகுட்டி கலர் பல்பெல்லாம் பொருத்தி அழகாக்கிக் கொடுப்பார்.

  ஒரு நிகழ்ச்சி விடாமல் உழவர் உலகம்கூட கேட்பேன்.எங்களுக்கு திருச்சி,சென்னையைவிட பாண்டிச்சேரி வானொலி நன்றாகக் கேட்கும்.இங்கு வந்தபிறகும் மகள் பிறந்த நாளுக்கு சிங்கப்பூர் வானொலிக்கு மெயில் அனுப்பி அவங்க வாழ்த்து சொன்னாங்க.நேயர் விருப்பமும் கேட்டோம்.

  ஐந்தாவது ஞாயிறன்று வரும் சினிமா ஒலிச் சித்திரத்திற்கு பொறுமை இல்லாமல் காத்திருப்பேன். சென்னை,திருச்சி வர்த்தக ஒலிபரப்பில் ஏன் இவ்வளவு விளம்பரங்கள் வருகிறது என புரியாமல் விழித்து உறவினர் அக்காவிடம் கேட்டபோது 'வர்த்தகம்னா என்ன?'என்றார்.நான் 'வியாபாரம்' என்றேன்.'அதுக்காகத்தான் இந்த வானொலி' என்றார்.இதில் வரும் இரவு 9:00 மணி தொடர் நாடகம்,அதன் இசை,அதைத்தொடர்ந்து வரும் சினிமா விளம்பரங்கள் மறக்க முடியாதவை.

  இலங்கை வானொலியிலும் பாடல்கள், வாழ்த்துக்களுடன் ஒலிச்சித்திரமும் போடுவாங்க. மதிய நேரத்துல'பாப்'பாடல்கள் போடுவாங்க.அந்தப் பாடல்கள் இன்னமும் எங்களுக்கு நினைவில் உள்ளது.பழைய நினைவுகளை அசைபோட வைத்ததற்கு நன்றிங்க‌.

  ReplyDelete
  Replies
  1. ரேடியோ நம் வீடு ஹாலில் கரண்ட் இருந்தால் மட்டுமே பாடும்.
   ஆனால் transistor பாட்டரியினால் இயங்கும் portable ம் கூட.

   உங்கள் விரிவான கருத்துரைக்கும் முதலில் நன்றி.
   நல்ல ரேடியோ ரசிகையாகத் தெரிகிறீர்கள்.நீங்கள் எழுதியிருந்தால் இன்னும் அனுபவித்து எழுதுவீர்கள் போல் தெரிகிறது.

   உங்கள் மலரும் நினைவுகளை ஒரு பதிவாக்குங்களேன்.
   படிக்கக் காத்திருக்கிறோம்.

   நன்றி உங்கள் மிக விரிவான கருத்துரைக்கும், பாராட்டுக்கும்.

   Delete
 2. //ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது ”சரோஜ் நாராயணசுவாமி " இதைப் படிக்கும் போது மனம் காலை ஏழே கால் மணி பரபரப்பை உணர்ந்தது. //

  இவர்களின் கம்பீரமான பிசிறு இல்லாத குரலை நான் பலநாட்கள் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

  அதே போல ’விஜயம்’ என்று ஒருவர்.

  இவர்கள் இருவருமே மிகவும் அருமையான செய்தி வாசிப்பாளர்கள்.

  நினைவுபடுத்தியதற்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அந்த காலை ஏழேகால் மணி செய்திகளின் குரலை மறக்க முடியுமா?

   நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

   Delete
 3. ரேடியோ இருந்த காலத்தில் குடும்பத்திலுள்ள எல்லோருமே செய்தியை தவறாது கேட்டுத் தெரிந்துகொள்ள முடிந்தது. வீட்டிலேயே விவாதம் நடைபெறும் .நேரம் தவறாமை இருந்தது,
  டி.வி வந்தப்புறம் எல்லாமே நிஜபடமாய் தெரிந்தது.இப்போது தாமதம் ஆரம்பிக்கிறது.இன்னும் கொஞ்சநேரம் கழித்து புறப்படலாம் என்ற எண்ணம் தோன்றி நேரத்தை வீணடித்துக் கொண்டு வருகிறோம்.
  இது விஞ்யான வளர்ச்சியா? சோம்பேரித்தனமா சொல்ல தெரியவில்லையே.

  ReplyDelete
  Replies
  1. டி.வியும், இணையமும் நம்மை அடிமைப் படுத்திவிட்டன .
   மீள்வது எப்படி?தெரியத்தான் இல்லை.
   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 4. மின்சாரம் இருக்கும் வரை எப்போதும் பண்பலை தான்...

  ReplyDelete
  Replies
  1. ரேடியோ ரசிகரா நீங்களும்?
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 5. உங்கள் ரேடியோ அனுபவங்கள், செய்திகள் எல்லாம் அருமை.


  //பல ஸ்டேஷன்களை மாற்றி மாற்றி கேட்டிருக்கிறேன்.//

  நானும் சிறு வயதில் சரியான ரேடியோபிரியள். இப்போதும் ரேடியோ பாடல்கள் கேட்பது பிடிக்கும்.

  நானும் ’வானொலி’ என்று என் ரேடியோ நினைவலைகளை பகிர்ந்து இருக்கிறேன். தனிமையை விரட்ட உற்சாகத்தை வரவழைக்க இன்றும்ம் எனக்கு உபயோகப்படுகிறது.(டிரான்ஸ்சிஸ்டர்)
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தனிமையை விரட்ட உற்ற தொழி தான் ரேடியோ.
   உங்கள் 'வானொலி' பதிவைப் படிக்கிறேன்.Blog Archives ள் கிடைக்குமில்லையா?

   உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கோமதி.

   Delete
 6. பிப்ரவரி 13 , உலக ரேடியோ தினமாகக் கொண்டாடப்படுகிறது .

  ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா ஒலிச்சித்திரம் , நாடகங்கள் எல்லாம் மலரும் மலரும் நினைவுகளை மலர்வித்தது ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். நானும் ஒலிசித்திரம் எல்லாம் தவறாமல் கேட்டிருக்கிறேன்.
   உங்கள் வருகைக்கும், கருத்துப் பரிமாரலிற்கும் நன்றி.

   Delete

 7. என் முதல் மகனின் முதலாம் பிறந்த நாளையொட்டி ஒரு மர்ஃபி ரேடியோ வாங்கினோம். கிரிக்கெட் காமெண்டரி பற்றிக் கூறியுள்ளது நான் அனுபவித்தது. இலங்கை வானொலியின் மயில்வாகனன் எங்கள் ரேடியோ ஜாக்கீ. மாலையில் கோலினாஸ் விளம்பரதாரரின் ஒலிப்பதிவு பிரசித்தம். ‘ அந்த நாள் ஞாபகம் வந்ததே ‘
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உலக ரேடியோ தினத்தையொட்டி நானும் சட்டென்று இளமையாகிவிட்டது போல் தோன்றியது.

   உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்.

   Delete
 8. உங்கள் பக்கத்தில் போட்டிருக்கும் வால்வு ரேடியோ பார்த்ததுமே நினைவு அப்படியே என்னை சிறுவயதிற்கு அழைத்துச் சென்றது. வீட்டில் அப்பா வாங்கி வைத்திருந்த ரேடியோ பற்றி, சிறிது சிறிதாக பணம் சேர்த்து வாங்கியது பற்றி சொன்னது, அதை திருப்பி ஏதோ ஒரு ஸ்டேஷனில் இருந்து பாட்டு கேட்டு மகிழ்ந்தது என ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. ரொம்ப வருடம் ரிப்பேர் ஆனாலும் வீட்டிலேயே இருந்தது. நெய்வேலி வீட்டினை காலி செய்து வரும்போது தான் அதை மனதில்லாமல் விட்டு வந்தோம் என நினைக்கிறேன்......

  சிறப்பான பகிர்வு. நினைவுகளை மீட்டியதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ரேடியோ , முதியோர், மற்றும் நடுத்தர வயதினர் எல்லோருமே இளமைக் காலத்தை சற்றே திரும்பிப் பார்க்க வைக்கும்.

   டி.வி. ,சி.டி.,இணையம் என்று எத்தனை வந்தாலும் நம் இளமையை நினைவுபடுத்துவது ரேடியோ தான்.

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.   Delete
 9. http://mathysblog.blogspot.com/2012/03/blog-post.html//

  ’அந்த நாளும் வந்ததே’ என்ற தலைப்பில் வனொலிப்பற்றி எழுதி இருக்கிறேன் முடிந்த போது பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவைப் படித்து பின்னூட்டமும் எழுதியிருக்கிறேன்.

   Delete
 10. உண்மை தான் தோழி ரேடியோ பக்கத்து வீட்டில் கேட்டலும் அது நாம்மை சேர்ந்தது போலவே இருக்கும் ஏனென்றால் எல்லோருமே ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளையே பின்பற்றி வந்தார்கள் அப்போது அதனால் ரேடியோ ரேடியோ தான் டி.வி டி.வி தான் பின்னதில் ஒற்றுமை இல்லை

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete

 11. பழைய நினைவுகளிற்கு இழுத்துச் சென்றது. நன்றி.
  பிந்திய வலன்ரைன்ஸ் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வேதா அவர்களே உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

   Delete
 12. உங்களது இந்தப் பதிவு படித்ததும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது 'பாப்பா மலர் மலரும் நேரம் பறந்து வருவோமே' என்ற பாடல் தான். ரேடியோ அண்ணா என்று அறியப்பட்ட திரு அய்யாசாமி அவர்கள் இந்த நிகழ்ச்சியை வெகு சுவாரஸ்யமாக நடத்துவார். குமாரி ஏ.சி. ஜெயஸ்ரீ அவர்களின் தேன் குரலில் இந்தப் பாடல் ஒலிக்கும். வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சியைக் கேட்க ஆவலுடன் காத்திருப்போம். கடிதம் எழுதிப் போட்டு எங்கள் பெயர் வருகிறதா என்று பார்ப்போம். மிகவும் இனிமையான நினைவுகள்!

  இன்றும் ரேடியோ தான் என் முதல் சாய்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, இந்த பாப்பா மலர் என்ற பெயரை மறந்தே போனேன்.
   நீங்கள் எழுதிவிட்டீர்கள் .நன்றி.

   உங்கள் கருத்துக்கு நன்றி ரஞ்சனி.

   Delete
 13. ரஞ்சனி மேடம் இன்று நாங்கள் பதிவிட்டிருந்த வானொலிப் பதிவில் தந்த சுட்டி மூலம் இங்கு வந்து, உங்கள் பதிவை ரசித்துப் படித்தேன். சொல்லாமல் விட்டது நிறைய என்பது போல ஒவ்வொன்றாய்ச் சொன்னால் நிறையவே இருக்கிறது நினைத்து மகிழ! இலங்கை வானொலியில் மரணச் செய்திகள் கூட வாசிப்பார்கள். மயில்வாகனம் சர்வானந்தா பெயர் பின்னூட்டம் படித்ததும் நினைவுக்கு வந்தது. நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஒவ்வொருவரும் பின்னூட்டம் இடும் போது தான் தோன்றுகிறது இதையெல்லாம் விட்டு விட்டோமே என்று.
   நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

   நானும் உங்கள் வானொலி பதிவு படிக்கிறேன்.

   Delete
 14. ஞாயிற்றுக் கிழமை ஒலிச்சித்திரங்கள், தொடரும் நேயர் விருப்பம் - சுவாரசியமான நினைவுகளைக் கிளறியது பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
   தொடர்ந்து வாருங்கள்.

   Delete
  2. Dhubaash Veedu, Kaappukkatti Chathiram, Vannachudar, Bhuvanalochani Veluppillai, V.Veeraammal, Tiruchi Radio Annavin Sirippu..........Marakka Mudiyuma....

   Delete
 15. மலரும் நினைவுகள்....

  இரவின் மடியில் - பழைய பாடல்கள் நிகழ்ச்சி
  இலங்கை வானொலி
  அதிகாலை புலரும் பொழுது - பக்திப் பாடல்கள்

  என்று பல நினைவுகளை மீட்டிச் சென்றது தங்களது பதிவு.

  பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  ReplyDelete
 16. ஏதோ ஒன்றை கூகிளில் தேடப் போக உங்களின் இந்த பதிவினில் வந்து சற்று இளைப்பாறல். பதிவினைப் படிக்க படிக்க எனக்கும் அந்தநாள் ரேடியோ, டிரான்சிஸ்டர், இலங்கை வானொலி ... .. என்று வரிசையாக நினைவுக்கு வந்தன. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்