Sunday 7 February 2016

ராசி வீட்டில் ரத்த ஆறு.


google image


 டிவி நிகழ்ச்சி ஒன்றில் லயித்துப் போயிருந்தாள்  ராசி.  மணி இரவு பத்தை  நெருங்கிக் கொண்டிருந்தது.  ஆப்பிள்  நறுக்கி சாப்பிட்டு விட்டு படுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ராசி.

"இந்த முறையாவது  புளிக்காத நல்ல ஆப்பிளை வாங்கி வந்தீர்களா?" என்று விஷ்ணுவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே, ஆப்பிள், கத்தி , தட்டு என்று சகல உபகரணங்களுடனும்   வந்தமர்ந்தாள்  ராசி.

" உனக்கு என்னிடம்  குற்றம் கண்டு பிடிக்காவிட்டால்  இன்றிரவுத் தூக்கம் வராதே ." என்று விஷ்ணு சொல்ல

" ஆமாம் எனக்கு உங்களைக் குற்றம் சொல்லணும் என்று  எப்பவும் ஆசை பாருங்கள். நீங்களே சொல்லுங்கள். போன  முறை வாங்கி வந்த ஆப்பிளை வாயில் வைக்க முடிந்ததா.? மாங்காயா ? ஆப்பிளா ? என்று சந்தேகத்துடன் சாபிட்டது  நீங்கள் தானே ."

" அதைக் கேட்டால்....... ராசி பொல்லாதவள். " கழுத்தை நொடித்தாள் ராசி.

" சரி. ஆப்பிளைப் பார்த்து  வெட்டு. கத்தி வேறு புதுசு. ஜாக்கிரதை." என்று விஷ்ணு சொல்ல

இடது கையில் ஆப்பிளை எடுத்து வாகாய் வைத்துக் கொண்டு " இந்த அக்கரைக்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை." என்று சொல்லிக் கொண்டே கத்தியை சரக்கென்று  ஆப்பிளில்  சொருக  ,

ஆப்பிளை வெட்டியதோடு நில்லாமல்  கொஞ்சமே கொஞ்சம்  விலகி  ராசியின் சுண்டு விரலையும்   பதம் பார்த்தது கத்தி.

" உஸ்.....ஆ......" என்று சன்னமாக ராசி குரலெழுப்ப  , விஷ்ணு "என்ன ஆச்சு " என்று கேட்டார்.

விடுதலையான மகிழ்ச்சியில்  ராசியின் விரலிருந்து ரத்தம் வெளியே  வர ஆரம்பித்தது.

ஓடிப்போய்  , வாஷ் பேசினில் சுண்டு  விரலை  நீட்டினாள்  ராசி. சட்டென்று  நின்றது ரத்தம்.  வாஷ்பேசின் குழாயை மூடி விட்டு  மீண்டும் வந்தமர்ந்தாள் ராசி. ஆப்பிளைக் கையில் எடுத்து வாயில் வைக்கப் போனவள் , இடது உள்ளங்கையில் ஜில்லென்று  என்னவோ  பட, பார்த்தால்  ரத்தம் நின்றது போல் பாவ்லா காட்டி விட்டு மீண்டும் வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால்  வலி எதுவும் இல்லை ராசிக்கு.

மீண்டும் குழாயில் விரலை நீட்டவும், ரத்தம் நின்று விட்டது.

திரும்பவும் ராசி ஹாலிற்கு வரவும், மீண்டும் ரத்தம் முட்டிக் கொண்டு வந்தது. வெட்டுக்  காயம் ரொம்பவும் பெரிதில்லை தான் .ஆனால் ரத்தமோ  விடாமல்  வந்து கொண்டு இருந்தது.

இப்பொழுது  விஷ்ணுவிற்கு மனதின் ஓரத்தில் கடுகத்தனைப் பயம்  விருட்டென்று முளைத்தது. "ரத்தம் நிற்கவில்லையே " நினைத்துக் கொண்டே பிரிஜ்ஜிலிருந்த ஐஸ் கட்டியை எடுத்து விரலில் வைத்துப் பார்த்தார் விஷ்ணு. ரத்தம் நின்றது.. .

"அப்பாடி ......இருவரும் பெருமூச்சு விட்டனர் . " ஐஸ் கட்டிக் கரையும் வரை அப்படியே பிடித்துக் கொண்டிரு . ரத்தம் நின்று விடும். "  என்று விஷ்ணு அறிவுறுத்தினார்.

 சொல்லி விட்டு ," இப்பொழுது  உன்னை யார் ஆப்பிளை வெட்ட சொன்னார்கள்.? என்று விஷ்ணு கோபமாக ஆப்பிளையும் கத்தியையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

மணி அதற்குள் பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. ராசி  ஐஸ் கட்டியை கெட்டியாக வெட்டுப்பட்ட சுண்டு விரலில் அழுத்திப் பிடித்துக் கொண்டிந்தாள் .

"நீ ஐஸ் கட்டியை வைத்து அணை கட்டினால்...........   நான் வர மாட்டேனா ?" என்று கேட்பது போல்  ஐஸ் கட்டி மெதுவாக கலர் மாறி சிவப்பு நிறமாக மாறிக்   கொண்டிருந்தது.  ஐஸ் கட்டி முழுதும் கரையும் தருவாயில் சின்ன  ரத்த ஐஸ் கட்டியாக மாறிக்கொண்டிருந்தது. விரல்  உறைந்துப் போனது தான் மிச்சம், ரத்தம் மட்டும் உறையவேயில்லை."

பயம் சற்று கூடுதலாக உணரத் தொடங்கினார் விஷ்ணு. இந்த அகால வேளையில் யாரைப் போய் எழுப்புவது?  ரத்தமோ நிற்பதாகத் தெரியவில்லை.  துணியால் கட்டிப் பார்த்தாள்  ராசி.

ம்ஹூம்.... ஒரு  பிரயோஜனமுமில்லை.  ரத்த ஆறு ஓடவில்லை தான். ஆனால்  விடாமல் இப்படியே ,  இரவுப் பூராவும் ரத்தம் வந்துக் கொண்டிருந்தால்....... பயம்  ராசியின் மனதிலும் மேலெழும்பிக் கொண்டிருந்தது.

ஆனால் ரத்தம் ஏன் இப்படி  நிற்காமல் வருகிறது என்பது மட்டும் புரியவில்லை ராசிக்கு . இது ரொம்பப் பெரிய வெட்டுக்  காயமுமில்லை. இதை விடப் பெரிய காயம் எல்லாம் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் வராத தொல்லை இப்பொழுது மட்டும்  ஏன் ?வயதானால் ரத்தம்  உறையாதோ என்கிற சந்தேகமும் வந்தது ராசிக்கு.

அதற்குள் விஷ்ணு  என்ன செய்யலாம் என்கிற யோசனையில் ஆழ்ந்தார்.
மகளையோ, மகனையோ போன் செய்து வரவழைக்கலாம் என்றால்  இந்த நேரத்தில் ..........போன்  செய்தால்.............வேண்டாம் ...வேண்டாம்..... இருவருமே பதறி ......  வேண்டாம் ....பதட்டத்தில்  வண்டி எடுக்க வேண்டாம் .சிறிது நேரம் பார்க்கலாம். ரத்தம் நின்றாலும் நின்று விடும். இல்லையென்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று போன் செய்யும் முடிவை ஒத்திப் போட்டார் விஷ்ணு.

சட்டென்று google நினைவு வந்தது விஷ்ணுவிற்கு. உடனே டாக்டர் கூகுளார்  துணையினை நாடினார் விஷ்ணு. ராசி அதற்குள் துணி மேல் துணி வைத்துக் கட்டி ரத்தத்தை நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் போராட்டம் எல்லாம் வீண் .

விஷ்ணு கூகுளில்  தேடியதும் பல உபாயங்கள் கிடைத்தன. பலர் இது போல் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியே மனதில் ஒரு பெரிய தைரியத்தை வரவழைத்தது விஷ்ணுவிற்கு.,

ஒவ்வொருவரும் என்னதான் தீர்வுக் கொடுக்கிறார்கள் என்று பார்த்தார் விஷ்ணு. தோசைமாவு, காபிப் பொடி, படிகாரம்  என்று பல கைவைத்தியங்கள் கிடைத்தன. எல்லாவற்றிலும் நடை முறை சிக்கல் இருந்ததால்  எதுவும் உபயோகமில்லை..
.
ஆனால் ஒரு யோசனை  நடைமுறைபடுத்தக் கூடியதாக இருந்தது.

"கையை சற்றே தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டிருங்கள். நிற்க வாய்ப்பிருக்கிறது" என்பது தான் அது..  விஷ்ணுவே ராசியின் கையை பிடித்து அவள் தலைக்கு மேல் உயர்த்தி வைத்தார். " அப்படியே கொஞ்ச நேரம் வைத்திரு ." இப்பவும் நிற்கலைன்னா  டாக்டர் வீடு தான் என்று சொல்லி விட்டு ராசியின் சுண்டு விரலையே பார்த்துக் கொண்டிருர்ந்தார் விஷ்ணு.

முதலில்  நின்றது  போல் இருந்த ரத்தம் ,  இரண்டு நிமிடங்களில், ராசி கையை கீழே இறக்கவும், மீண்டும்  'குபுக்'கென்று  புதிய வேகத்துடன் வெளியே வரத் தொடங்கியது.

பார்த்தார் விஷ்ணு. இதற்கு மேல் காத்திருப்பதில் புண்ணியமில்லை. என்று , " ராசி நீ கொஞ்ச நேரத்திற்குக் கையை மேலேயே  தூக்கிப் பிடித்துக் கொள். நான் நம்ம டாக்டர் மயில் வாகனனை  போனில் கூப்பிடுகிறேன் '

இரண்டி ரிங்கிற்குப் பிறகு டாக்டர் லைனில் வந்ததும் , "சாரி டாக்டர்.உங்களை இந்த நேரத்தில்  தொந்திரவு பண்ண ."

"அதான் பண்ணி விட்டீர்களே  சொல்லுங்கள்  விஷ்ணு."
மேலும் "சும்மா விளையாட்டிற்கு சொன்னேன்.என்ன விஷயம்? " என்று சமய சந்தர்ப்பில்லாமல் ஜோக் அடித்துக் கொண்டிருந்தார்.

டாக்டர், " ராசிக்குக் கையில் வெட்டுக் காயம். ரத்தம் நிற்காமல் வந்துக் கொண்டேயிருக்கிறது."

இப்பொழுது டாக்டர் சற்று சீரியசாக," எவ்வளவுப் பெரிய காயம்? நான் உங்கள் மனைவியை சற்று ஜாக்கிரதையாக இருக்க சொல்லியிருக்கிறேனே. ரத்தம் லேசில் நிற்காதே."

"ஏன் டாக்டர்?  ஆனால் காயம் சின்னது தான்."

" என்ன ஏன்  என்று கேள்வி கேட்கிறீர்கள் ?.சின்னதோ பெரிதோ  ராசி இதய நோயாளி அல்லவா.  அதற்கான anticoagulant tablets சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா ? அது ரத்தம்  உறைவதைத் தடுக்கும் மாத்திரை . சரி . இன்னும் வந்து கொண்டே தான் இருக்கிறதா. ?

"ஆமாம் டாக்டர். கையை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தால் நிற்கிறது.இல்லையென்றால் உடனே வந்து விடுகிறது."

" நல்ல வேலை செய்தீர்கள். அப்படியே கையை கீழே இறக்காமல்  விரலை மடிக்காமல் , நிமிர்த்தி வைத்துக் கொண்டு , ஒரு  நல்ல துணியால்  அழுத்திக் கட்டுங்கள்.   சில  நிமிடங்களில் நிற்கிறதா பாருங்கள். இல்லையென்றால் இங்கே  கிளினிக்கிற்கு அழைத்து வாருங்கள். "
என்று டாக்டர்  போனில் முதலுதவி சொல்லவும்.  விஷ்ணு அதை அப்படியே கடைபிடிக்க, ராசிக்கு உத்தரவுப் போட்டார்.

ராசியும் பயந்து போய் விஷ்ணுவையே பார்க்க, விஷ்ணு கேட்டார் " என்ன ஆச்சு? "
" இல்லை உங்களைத் தனியே விட்டு விட்டு போய் விடுவேனோ ?" ராசிக்குத்  துக்கம் தொண்டையடைத்தது.

" என்ன இந்த சின்ன வெட்டுக் காயத்திலா? "

"சரி , நீ ரொம்பவும் பயந்து போயிருக்கிறாய். உனக்குக் காபிப் போட்டுத் தருகிறேன்". என்று சொல்லவும் விஷ்ணு போட்ட காபி ராசியின் நினைவிற்கு வர  ," ஐயோ வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன் " என்று அவசரமாக மறுத்தாள் .

பத்து நிமிடம் ஓடியது.  ரத்தம் முழுசுமாக நின்று விட்டது.ஆனாலும் ராசிக் கையைக் கீழே இறக்குவதாயில்லை.  மீண்டும் ரத்த  ஆறு ஓடுவதைத் தவிர்க்கத் தான்.

விஷ்ணு சொன்னார்," மணி பதினொன்றரை ஆச்சு. ரத்தம் இனிமேல் வராது.  பேசாமல் படுத்துத் தூங்கு." 

ம்ஹூம்  ...ராசி கேட்பதாயில்லை. அவள் பயம் அவளுக்கு.

பார்த்தார் விஷ்ணு,  சுவற்றில் மாட்டியிருந்த கோவர்த்தனகிரி பெருமாளைப் பார்த்து,"கிருஷ்ண பரமாத்மா ! உன் சுண்டு விரலிற்கு கொஞ்ச நேரத்திற்கு   விடுதலை கொடுக்க நினைக்கிறாள் ராசி என்று நினைக்கிறேன்.நீ சுண்டு விரல் மீது தூக்கி வைத்திருக்கும் கோவர்த்தன மலையை ராசியின் சுண்டு விரல் மேல் வைத்து விட்டு நீ சற்று ரிலாக்ஸ் செய்து கொள். ராசியும் அதே போஸில்  தானே  கையை வைத்திருக்கிறாள் . அதற்காக சொன்னேன். " என்று விஷ்ணு சொன்னதை ராசி சட்டை செயவேயில்லையே.

ராசிக்குப்  புரிந்தது, "மனிதர் என் ரத்தத்தைப் பார்த்துக் கொஞ்சம் ஆடித் தான் போய் விட்டார் போலிருக்கிறது . இப்பொழுது தான் சகஜ நிலைக்குத் திரும்பியிருக்கிறார்."

ராசி எப்பொழுது தூங்கினாளோ  தெரியாது.

விடிந்தது. ராசிக்குப்  பூரண  குணம். காபிக் குடித்து விட்டு சமைக்க ஆரம்பித்து விட்டாள் . ஆனால் விஷ்ணு கண்களிலிருந்து மாலை மாலையாக கண்ணீர்.

ஆனந்தக் கண்ணீர்  என்று நீங்கள் நினைத்தால் விஷ்ணு பொறுப்பில்லை.

வெங்காயம் நறுக்கிக் கொண்டிருகிறார். அவ்வளவு தான்..
இன்னும் சில நாட்களுக்கு  விஷ்ணு காய்கறி நறுக்கினால் தான் அவருக்கு சாப்பாடு கிடைக்கும்.

பி.கு :  நண்பர் இல்லத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியைஅடிப்படையாகக்  கொண்டது இப்பதிவு. 
 ராசி விஷ்ணு தம்பதியினரை வைத்து சற்று  ஜாலியாக விவரிக்க முயற்சித்திருக்கிறேன்.

Anti Coagulant tablets சாப்பிடும் இதய நோயாளிகளுக்கு இப்படி ஒரு தொல்லையா? கவனமாக  இருந்து கொள்ளுங்கள் மக்களே!  

20 comments:

  1. மனதில் நோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்பு. பதிவைத் தந்திருக்கும் முறை ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. >>> ராசிக்குத் துக்கம் தொண்டையடைத்தது.<<<

    நானும் விக்கித்துப் போனேன்..

    ஆனாலும், நல்லதொரு விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்வதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், அருமையான பாராட்டிற்கும் நன்றி துரை சார். உங்கள் வார்த்தைகள் அடுத்தப் பதிவை எழுதத் தூண்டும் டானிக்.
      நன்றி.

      Delete
  3. படித்துக் கொண்டு வரும்போதே கையை மேலே உயர்த்தி வைத்துக் கொண்டால் இரத்தம் நிற்கும் என்று எழுதத் தோன்றியது ஆனால் ராசி தம்பதியினர் கூகிளை நாடி அதை கண்டு பிடித்து விட்டனர். கடைசிக் குறிப்பு பயனுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டிற்கும் நன்றி பாலு சார்.

      Delete
  4. கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியை சுவாரசியமாய் கொடுத்திருக்கீங்க.... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆம்மாம் எழில். நண்பர் பட்ட அவஸ்தையை கேட்ட போது சற்று அச்சமாக உணர்ந்தேன். அதன் விளைவே இப்பதிவு.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டிற்கும் நன்றி எழில்

      Delete
  5. சர்க்கரை வைத்தாலும் கொஞ்சம் குணம் இருக்கும் ராஜிசிவம்.
    வெகு அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.சரியான பாயிண்ட்.

    ReplyDelete
    Replies
    1. நாம் சந்திக்கும் இக்கட்டுகள் பெரும்பாலும் ஒரு பாடத்தை சொல்லி விட்டே நகரும். நண்பருக்கு வந்தசவால் மிகப் பெரிய அறிய வேண்டிய பாடஹ்தையே சொல்லித் தந்திருக்கிறது.
      ஆனாலும், உங்களின் சர்க்கரை மருத்துவத்தை எழுத மறந்து போனேனே!
      வாசகர்கள் இதையும்(சர்க்கரை) குறித்துக் கொள்வார்களாக.
      நன்றி வல்லி மேடம் உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  6. ரசிக்க வைக்கும் கதை என்றாலும் ஒரு மருத்துவக் குறிப்போடு...
    அருமை அம்மா...

    ReplyDelete
  7. முக்கியமான ஒரு விஷயத்தை நகைச்சுவையாகக் கொடுத்து மனதில் பதிய வச்சிட்டீங்க !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருக்கைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

      Delete
  8. அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஜெயக்குமார் சார்.

      Delete
  9. இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையினால் வரும் பக்க விளைவு பற்றி நகைச்சுவையாக எழுதியது நன்று. பலருக்கும் பயன்படும்.

    ReplyDelete
  10. இந்தப் பதிவை முன்னர் பார்க்கவில்லை. இதயநோயாளிகளுக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பது இப்போது தான் தெரியும். ஆனால் இதேபோல் எனக்குத் தக்காளி நறுக்கும்போது ஏற்பட்டது. ரத்தம் எப்போதுமே எனக்கு உடனடியாக நிற்காது. இதயநோயாளியெல்லாம் இல்லை. :) பின்னர் என்ன செய்வதென யோசித்து என்னிடம் இருந்த ஆலோவிர ஜெல் ஆயின்ட்மென்டைப் போட்டேன். சற்று நேரத்தில் ரத்தம் வருவது நின்றுவிட்டது. கட்டு எல்லாம் கட்டவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.ஆலோ விரா ஜெல் பற்றிக் குறித்துக் கொண்டேன். இப்பொழுது லேட்டஸ்டாக நான் படித்தது விக்ஸ் வேபரப் தடவினாலும் நிற்கும் என்பது .
      நன்றி கீதா மேடம்.

      Delete
  11. ராசி வீட்டில் ரத்த ஆறு - தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஏக்‌ஷன் கதையாக இருக்குமென்ற தப்புக்கணக்குப் போட்டுவிட்டேன்.

    அருமையான, யதார்த்தமான, நகைச்சுவையான பதிவு...தங்கள் எழுத்துக்களில் ஏதோ ஒருவித நகைச்சுவையோட்டம் ஓடுகிறது. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்! இது போன்ற நகைச்சுவையோட்டம் அனைவரின் எழுத்துக்களிலும் வெளிவருவதில்லை, சிலருக்கே அது அமையும்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி அருள்மொழிவர்மன். உங்கள் வருகையும், பாராட்டும் எனக்கு டானிக். சமீப நாட்களாக நான் எழுதுவது குறைந்து விட்டது. உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் தொடர்ந்து எழுத வைக்கிறது.
      வருகைக்கும், பாராட்டிற்கும் மிக நன்றி. தொடர்ந்து என் தளத்திற்கு வருகைப் புரியுங்கள்

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்