Saturday, 17 June 2017

கொழுப்பு இருக்கிறதா?

இதென்ன கேள்வி என்று யாரும் என்னை கோபித்துக் கொள்ள வேண்டாம்.

இந்தக் கேள்வியை டாக்டர் என்னிடம் கேட்டுக் கொண்டே இரத்தப் பரிசோதனை முடிவுகள் மீது பார்வையை செலுத்தினார்.

என்னுடைய வருடாந்திர  பரிசோதனைக்காக டாக்டரிடம் சென்ற போது, வகை வகையாய்  பரிசோதனை செய்ய  சொல்ல, " டெஸ்ட்  வைப்பது என்னுடைய வேலையாயிற்றே (ஆசிரியை) . இப்போது எனக்கே டெஸ்ட் ..... எல்லாம் காலத்தின் கோலம்." என்று நினைத்துக் கொண்டே எல்லா  டெஸ்ட்டையும்  நான் மேற்கொண்டு பரிசோதனை முடிவுகளுடன்  டாக்டர்  கிளினிக் வாசலில் காத்திருந்தேன்.

என் முறை வந்த போது  தான் டாக்டர் என்னிடம் இந்தக் கேள்வியை  கேட்க, அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென நான் முழிக்க, டாக்டரே பதிலையும்  சொன்னார்.

" கொழுப்பு இருக்கிறது. ஆனால் நல்லது தான்." இதென்ன  'SURF'  விளம்பரம் மாதிரி டாக்டர் சொல்கிறாரே என்று குழம்பினேன்.

அவரே விளக்கவும் செய்தார்." நல்ல கொழுப்பு  இருக்கிறது. கெட்ட கொழுப்பு இல்லை." என்று சொல்லவும்.

கொழுப்பே கெடுதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதில் நல்லது கெட்டது என்று வகை வேறு இருக்கிறதா என்று மனதில் எண்ணம் ஓடியது

எனக்குத் தெரிய வேண்டியது,
" இப்பொழுது நான் ஏதாவது  மருந்து சாப்பிட வேண்டுமா, இல்லையா? அதை மட்டும் சொல்லுங்கள் டாக்டர் ." என்று நான் கேட்க,

" உங்களுக்கு ஒன்றுமில்லை .நீங்கள் எப்பொழுதும் போல் உங்கள் உணவு முறைகளை மேற்கொள்ளலாம்" என்று  டாக்டர் சொல்ல,

பெருத்த நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தேன். நுழைந்தவுடன், அம்மா, " டாக்டர் என்னடி சொன்னார்? எல்லாம் நார்மல் தானே ? " கவலையுடன் விசாரிக்க  நான் கொழுப்புக் கதையை சொன்னேன். "வருமுன் காப்போம்.,கொழுப்பு உடம்பில் சேராமல் இருக்க  உணவில் என்ன  சேர்த்துக் கொள்ளலாம்  என்று நெட்டில் பார்க்க வேண்டும்." என்று முனகிக் கொண்டே நகர

என் அம்மா, " அதற்கு எதற்கு இன்டர்நெட். நம் உணவில்  சாம்பார் வெங்காயம் அதிகம் சேர்த்தாலே போதும். கொழுப்பு சேராது."

"ஓகே! அப்படி என்றால்  தினம் வெங்காய சாம்பார்  தானே ராஜி ?" என்னவர் என்னை நக்கலடிக்க,

"ஏன் சாம்பார் தான் செய்ய வேண்டுமா என்ன? வெங்காயப் பொடி செய்து வைத்துக் கொண்டால் தினம்  சேர்த்துக் கொள்ளலாமே  ." என்று பதில் சொன்னேன்.

"வெங்காயத்தில் பொடியா? என்னை சோதனைச் சாலை  எலியாக்கி விடாதே " என்று அவர் அடித்தக் கிண்டலைக் கண்டு கொள்ளாமல்  வெங்காயப் பொடி செய்து வைத்தேன்.

சூடான சாதத்தில் பொடி, நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு விட்டு,  "சும்மா சொல்லக் கூடாது. பிரமாதமாக இருக்கிறது " என்று பாராட்டுப் பத்திரம்  வழங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வெங்காயப் பொடி செய்முறை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆவலாக இருக்கிறதா ?

என் சமையலறையை (இங்கே) க்ளிக் செய்யுங்கள் .

நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்களேன்.
நன்றி!

16 comments:

  1. கொழுப்பு பற்றி, கொஞ்சமும் கொழுப்பேதும் இல்லாமல் சுவைபடச் சொல்லியுள்ளது அழகு.

    வெங்காயத்தை உரித்துப்பார்த்தால் ஒன்றுமே இருக்காது என்பார்கள்.

    கொழுப்பினை ஓட ஓட விரட்டியடிக்கும் சக்தி இருப்பது வெங்காயத்தில் தான் என அறிந்துகொண்டோம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அஞ்சறைப் பெட்டியிலும் தொடர்ந்து கருத்தளித்து வரும் உங்களுக்கு நன்றிகளோ நன்றிகள் சார்.

      Delete
  2. அட சுலபமாக இருக்கே. செய்து பார்க்கணும்..... கொழுப்பு இல்லைன்னாலும் சாப்பிடலாம் தானே.... :)

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் சாப்பிடலாம் வெங்கட்ஜி. நம் முன்னோர்கள் நமக்காக மிகவும் பாதுகாப்பான உணவு முறையைத் தான் விட்டு சென்றிருக்கிறார்கள். நாம் தான் அதையெல்லாம் உதறி விட்டு வெகு தூரம் வந்து விட்டோம். அதையெல்லாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும், மருந்தே வேண்டாம். உணவே போதும்.
      உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வெங்கட்ஜி.

      Delete
  3. வெங்காயப்பொடி இப்போதுதான்
    கேள்விப்படுகிறோம்
    சொல்லிச் சென்றவிதமும்
    காணொளியாய்க் கொடுத்த விதமும் அருமை
    நாளை செய்து பார்க்கிறோம்
    இறுதியாய்ச் சொன்ன குறிப்பும்
    மிகப் பயனுள்ளது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ரமணி சார.
      சிரமம் இல்லையானால் "You Tube" தளத்தில் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். அங்கேயே, 'subscribe' பட்டனைத் தட்டி விட்டீர்கள் என்றால், என்னுடைய புது வீடியோக்கள் உங்கள் மெயில் பாக்ஸிற்கு தவறாமல் வந்து விடும்.நன்றி.

      Delete
  4. உபயோகமாக இருக்கிறது. செய்து பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் செய்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ஸ்ரீராம் சார்.
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  5. கறை நல்லது என்ற விளம்பரம் ரசிக்க வைத்தது.

    இணைய தேடுதல் எதற்கு ?
    நம் முன்னோர்களுக்கு தெரியாத மருத்துவமா ?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும், நன்றி சார்.

      Delete
  6. வெங்காய் பொடி அருமை.

    ReplyDelete
  7. மிகவும் நன்கு

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்