Tuesday, 10 December 2019

கம்பனும், கொடியும். (கம்பன் என்ன சொல்கிறான் - 14)


Image Courtesy : Google.கம்பனும், கொசுவும்(கம்பன் என்ன சொல்கிறான்-13) படிக்க இங்கே க்ளிக்கவும்.


" அங்கே பாருங்க .  அவள் கூப்பிடறாள் பாருங்க.."


"யாரு?.....யாரை?"

"நம்ம ரெண்டு பேரையும் தான்."

யார் நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்று கூட்டத்தின் நடுவில்.. கணவன் துழாவிப் பார்க்கிறான். யாரையும் காணவில்லையே....யாரை சொல்கிறாள் இவள் .

தி.நகர் தீபாவளி நெரிசலில் எளிதில் கண்டு பிடித்து விட முடியுமா என்ன?

"தெரியலையாங்க... அதாங்க  ...... வணக்கம் சொல்லி கூப்பிடுகிறாள் பாருங்க அந்தப் பெண்."

மனைவி யாரைக் காட்டுகிறாள் என்று புரிந்து போனது கனவனுக்கு.

ஜவுளிக் கடை பொம்மை.

அந்த ஜவுளிக் கடைக் கூட்டம் மட்டும் பயமுறுத்தவில்லை.பர்சின் கனமும், கணிசமாய் குறையுமே என்கிற பயம் தான் கணவனுக்கு. 

சாமர்த்தியமாக சமாளித்தான் கணவன்..
" அடி அசடே ! அந்த மெஷின் பொம்மை சொல்றது உனக்குப் புரியல ?

என்ன?

"நன்றி!.. வீட்டுக்குப் பத்திரமா போய் வாருங்கள் " அப்படின்னு சொல்லுது.  போகலாம் வா.. என்று கணவன் சொல்ல...மனைவி "க்கும்...."என்று கழுத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.


மெஷின் பொம்மை "வா" என்று சொல்வதில் என்ன அதிசயம் சொல்லுங்கள். 
மிதிலை நகரக் கொடிகள்  செய்வதைப் பாருங்கள்...

தூரத்தில் விசுவாமித்திரர், ராம லஷ்மணர்களுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.  வயதானதால் ஏற்பட்ட அசதியோ என்னவோ... ஒரு சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் போலும்.
அவர் நின்றதும், பின்னால் வந்த தசரத குமாரர்களும் 'பிரேக்' அடித்தாற் போல் நின்று விடுகிறார்கள் .  குருவைத் தாண்டிப் போய் விடக் கூடாதல்லவா? அதோடு விசுவாமித்திரர் கோபம் பிரசித்திப் பெற்றதாயிற்றே. எதற்கு வம்பு ? அவர் வாயில் விழுந்து புறப்பட வேண்டுமா ? என்றும் இவர்கள் நின்றிருக்கலாம்.

சரி. எதற்கோ நின்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அதுவும் மிதிலைக்கு மிக அருகில்....

மிதிலையில் சீதாவின் சுயம்வரத்தை முன்னிட்டு கோலாகலமாய் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எங்கும் மலர்களாலும், கொடிகளாலும், தோரணங்களாலும்....

ராம லக்‌ஷமணர்கள் வருவதை முதலில் பார்த்தது இந்தக் கொடிகளாய் தான் இருக்கும். உயரத்தில் இருப்பதால்..

ராஜகுமாரி சீதையை மணமுடிக்கப் போகும் ராமன் வருவதைப் பார்த்து கொடிகள் மகிழ்ச்சியில்  ஒன்றொடு ஒன்று கைக் கோர்த்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தன. (தூக்குத் தோரணக் கொடிகள் - அதாவது மாவிலைத் தோரணம் போல் கட்டப்பட்டக் கொடிகள்.)

அவர்கள் பிரேக் போட்டதைப் பார்த்ததும், கொடிகள் ," என்னடா இது? இவர்களுக்கு மிதிலைக்கு வழித் தெரியவில்லையோ? Google Map பார்க்க வேண்டியது தானே." பேசிக் கொண்டனவோ.

"ராமா ..... வாடா.... ராமா...நீ எங்கே left, Right என்று திரும்பிப் பாக்கறே? மிதிலை இங்கே தான் இருக்கு.  உன் கரம் பற்றப் போகும்  சீதை இங்கு தான் இருக்கிறாள். " என்று கத்த வேண்டும் போல் இருந்திருக்கும்.

ஆனால் கொடி ஆயிற்றே! எப்படிக் கத்த முடியும் சொல்லுங்கள். 

அதனால்....master plan செய்து விட்டு கை கோர்த்துக் கொண்டு ரெடியாக காத்துக் கிடந்தன.

ஒரு பெரிய காற்று அடித்தது. தங்கள் பிளானை நிறைவேற்றிக் கொண்டன...எப்படித் தெரியுமா?

எல்லாம் ஒன்றாக காற்றில் மேலே பறந்து ராமனைப் பார்த்து," வா...வா...." என்பது போல் பட..பட...என்று அடித்துக் கொண்டனவாம்.

கம்பனுக்கு மட்டுமே இப்படியொரு கற்பனை உண்டாகும்..

இதை விவரிக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போமா...

மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்: என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!


காவல் மிக்க அந்த மிதிலை நகரம்," திருமகளானவள் குற்றமற்ற தாமரை மலரை விட்டுப் பிரிந்து, நான் புரிந்த மிகப் பெரிய தவத்தால் என்னிடம் வந்து பிறந்துள்ளாள்" என்று கூறி பெரிய அழகிய கொடிகள் என்கிற தன் கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டுவது, தாமரைப் போன்ற கண்களைக் கொண்ட ராமனை விரைவில் வந்து சேர்க என்று அழைப்பதைப் போன்றுள்ளது.

கம்பன் சொல்லும் காட்சி .....வீடியோவாய் உங்களுக்கு விரிந்திருக்குமே! ரசித்துக் கொண்டிருங்கள்....

வேறொரு கம்பனின் கற்பனையுடன் உங்களை சந்திக்கிறேன்..
நன்றி.

4 comments:

 1. ஆகா... மிகவும் ரசித்தேன் - உங்களின் வித்தியாசமான சிந்தனையை...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தனபாலன் சார்.

   Delete
 2. மார்டன் கம்பன் ...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பிரபு. உங்கள் முதல் வருகைக்கும், ரசித்துப் படித்தற்கும், கருத்திட்டதற்கும் மிக்க நன்றி பிரபு.

   Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்