கவிதை என்றாலே நயம் தான்... அதில் சந்தேகம் வேண்டியதே இல்லை... அதிலும் கம்பன் பாடல் என்றால் கேட்கவே வேண்டியதில்லை .
சொல்ல மறந்து விட்டேனே....
மிதிலையை விட்டு வர மனமில்லாமல் அங்கே தான் இருக்கிறேன். எப்ப நீ மிதிலைக்குப் போனே என்று கேட்பவர்கள் "அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!" க்ளிக் செய்து பார்க்கவும்.
என்னவரோ,"போகலாம் வா! ஃப்ளைட்டிற்கு நேரமாச்சு. கிளம்பு...கிளம்பு " சொல்வதைக் காதிலேயே வாங்கிக்காமல் வைத்த கண்ணை எடுக்காமல் ராமனையும், சீதையையுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன காதில் விழுகிறதா? மீண்டும் அவர் கோபத்துடன் கேட்க...
"இதயம் இடம் மாறுகிறதே! அங்க பாருங்க.." நான் சொல்லவும்...
அவர் என்னைப் பார்த்தப் பார்வை இருக்கிறதே ! "இவளுக்கு சுத்தமாக மறை கழண்டு விட்டதோ" மாதிரி இருந்தது.
"நான் லட்சியம் செய்யவில்லையே!"
எத்தனை அருமையான காட்சி..
'Let us first enjoy this divine love scene.' மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
ராமன் சீதையைப் பார்க்க ...சீதை ராமனை வைத்த கண் வாங்காமல பார்க்க ...
இவர் வேறு." போகலாம்" என்று மீண்டும் மீண்டும் நச்சரிக்க....
அங்கே பாருங்கள்...."இருவரும் அவர்கள் படை பலத்தைக் காட்டி ஒருவரை ஒருவர் கொள்ளையடிக்கிறார்கள்" நான் சொல்ல
"படை பலமா?" இவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்து விட்டு," எனக்குத் தெரிந்து இங்கே போர் ஒன்றும் நடக்கவில்லையே. உனக்கு ஏதோ ஆகி விட்டது ராஜி. உனக்கு further damage ஆகாமல் இருக்க வேண்டுமென்றால் இப்பவே பெங்களூருக்குப் போக வேண்டும்." சற்றுக் கண்டிப்புடன் அவர் கூற....
அட... நான் சொல்லும் போர். வேறெதுவுமில்லைங்க.....காதல் போர்.. கம்பரின் வார்த்தைகளிலேயே சொல்கிறேனே...
"ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நாழிகையிலேயே....இருவரின் உள்ளமும் ஒன்றி விட்டது. " நான் சொல்ல..
அவர் கவனிப்பது போல் பாவனைக் காட்ட...
அலட்சியம் செய்த நான் தொடர்ந்தேன்...
"வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்." |
அண்ணலின் கையில் வில்லைக் கொடுத்த கம்பர், சீதைக்கும் எதாவது ஆயுதம் கொடுக்கணுமே." யோசித்திருப்பர்.... அதன் விளைவு....சீதைக்கு வாளைக் கொடுத்து விட்டார். கையில் இல்லை...கண்ணில் ...' வாள் கண் நங்கை ' ஆக்கி ரசிக்கிறார் .
என்ன ஒரு நயம். !
ராமனுடைய வில்லைப் பார்ப்பதா?
சீதையின் வாளழகைப் பார்ப்பதா?
ஒன்றுடன் ஒன்று போட்டிப் போடுகிறதே!
படிக்க படிக்க சுவையாய் இருக்கிறது கம்பர் காட்டும் காதல் கதை....சினிமா டைரக்டர்கள் கம்பரிடம் கொஞ்ச நாள் அஸிஸ்டண்ட் ஆக இருந்திருந்தால் நமக்கும் நல்ல காதல் படங்கள் கிடைத்திருக்கும். ம்ம்ம்.....நமக்குக் குடுத்து வைக்கல... What can we do?
கம்பர் டைரக்ட் செய்த காட்சியைப் பார்ப்போமா...
பருகிய நோக்கு எனும்
பாசத்தால் பிணித்து, |
ஒருவரை ஒருவர் தம் |
உள்ளம் ஈர்த்தலால், |
வரி சிலை அண்ணலும் |
வாள் கண் நங்கையும் |
இருவரும் மாறிப் புக்கு |
இதயம் எய்தினார். |
தமக்குள் ஒருவரது அழகை ஒருவர் விழுங்கிய கண் பார்வை என்னும் கயிற்றால் கட்டி ஒருவரை மற்றொருவரது மனம இழுத்து நின்றதால் , கட்டமைந்த வில்லுடைய இராமனும்,வாள் போன்ற கண்களையுடைய ,பெண்களில் சிறந்த சீதையும் ஆகிய இருவரும் ஒருவர் மனத்துள் ஒருவர் மாறிப் புகுந்து அடைந்தார்கள்.
உங்கள் மனக்கண்ணிலும் இந்தக் காதல் காட்சி விரிந்திருக்குமே...இருவருடைய படை பலத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்
இருவரிடமும் இருக்கும் குணங்கள் ஒன்றை பார்த்தோம்.
இருவரிடமும் இல்லாத charecteristics பற்றிப் பார்க்க வேண்டாமா?
பரம் பொருளிடம் இல்லாத நலங்களா? திருமகளிடம் காணாத குணங்களா? இருக்கே...
கம்பர் சொல்கிறாரே!
அடுத்தப் பதிவில் பார்ப்போமா?
நன்றி.
இந்த இயக்கமும் நன்றாக உள்ளது...
ReplyDeleteநன்றி சார்.
Deleteஎத்தனை கவி நயம் கம்பரின் பாடலில். உங்கள் விளக்கம் சிறப்பு.
ReplyDeleteதொடரட்டும் கம்பனின் கவியும் உங்கள் பதிவும்.
நன்ரி வெங்கட்ஜி
Delete