Sunday, 26 January 2014

அது ஒரு கனாக் காலம் .





" Delhi Shivers in Cold " செய்தியைப் படித்ததும் ,எனக்கும் டெல்லிக் குளிர் நினைவில் வந்து மோதியது. நினைத்ததுமே, குளிரத் தொடங்கி விட்டது.

சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து,  சிங்காரச் சென்னையிலேயே  திருமணத்திற்கு பின்னும், வாழ்வதைப் பாக்கியமாகவே, நினைத்துக் கொண்டிருந்தேன்.திருமணமாகி  ,ஆறு மாதக் காலத்திற்குள்ளாகவே   அதற்கு  வேட்டு வைத்து விட்டனர், என் கணவர் வேலை பார்க்கும் , வங்கியினர்.

ஒரு நாள் மாலை  ஆபிசிலிருந்து வரும் போதே  சந்தோஷத்துடன் வந்தார், என் கணவர். என்ன என்று கேட்டதற்கு  , "ஐயாவை டெல்லிக்கு  மாற்றி விட்டார்கள் " என்று சொன்னவுடன்  முதலில் எனக்குத் தோன்றியது, "பிறந்த வீட்டை விட்டு அவ்வளவு தூரம்  நம்மால் போயிருக்க முடியுமா " என்பது தான். ( அதனால் தான் என்னவருக்கு  மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.)

இப்பொழுது போல், போன்  வசதியில்லாத நாட்கள் அவை. பிறந்த வீட்டுடன் தொடர்பு  என்பது, தபாலகாராரின்  வீசியெறியும்  கடிதத்தில்  அல்லவா இருக்கும்.   ஆனாலும் வேறு வழியில்லை . அதனால் டெல்லி வாழ்க்கைக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.  டெல்லி போய்  வந்தவர்கள், அங்கே குடித்தனம் செய்தவர்கள், செய்கிறவர்கள் என்று எல்லோரிடமும்  டெல்லியைப்  பற்றிக் கேட்க ஆரம்பித்தேன்.

நான் கேள்விப் பட்டவரையில், பெருவாரியாக என்னைப் பயமுறுத்திய விஷயங்களில் ,ஹிந்தியைத் தவிர ,இன்னொன்று  டெல்லிக் குளிர் .

அட......போ........ மார்கழி மாதத்தில் , காலை  நாலு மணிக்கெழுந்து,  பச்சைத் தண்ணீரில் குளித்து, திருப்பாவையும்,திருவெம்பாவை  சொல்லி விட்டு  பிறகே சூடாக காபிக் குடிப்பவள் தானே நீ. . . டெல்லிக் குளிர் அதைவிடவா அதிகம்? இதற்கெல்லாமா பயப்படுவது? என்று  தைரியம் கொடுத்தது   என் மனசாட்சி. நானும் அதையே நம்பினேன்.

ஆனாலும், எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஸ்வெட்டர், ஷால்  என்று  கவசங்களுடன் தான், டெல்லியில் இறங்கினோம் . நாங்கள் குடித்தனம் ஆரம்பித்தது  நவம்பரில் .

என் கணவர் வீடு பார்த்திருந்ததோ  கரோல்பாகில், W.E.A .6A பிளாக்கில். ஐந்து நிமிட  நடையில் ,பக்கத்திலேயே அஜ்மல்கான் ரோட்.  ஒரு சின்ன  " மால்  " ஒன்றைத் தெருவில் பிரித்துப் போட்டது போலிருக்கும்  அஜ்மல்கான் ரோடில்  பெரும்பாலும் எல்லாமே கிடைக்கும்.

டெல்லியின் பல பாகங்களிலிருக்கும் தமிழர்களை,   கரோல்பாக்கில் காணலாம். இங்கு தான் தேங்காய், காபிப் பொடி, அப்பளம்,சாம்பார் வெங்காயம் ,தினத்தந்தி, விகடன், குமுதம்  போன்ற  நம்மூர்  விஷயங்கள்  எல்லாமே  கிடைக்கும். இங்கு தெருவில், கடை வைத்திருக்கும்   ,ஸ்வெட்டர்  வாலாக்கள் நம் தமிழ் முகத்தைப் பார்த்தால், நம் அருகிலேயே வந்து, பத்திரிகை வைக்காத குறையாக,அவர்கள் ஸ்வெட்டர்  கடைக்கு  அழைத்தப் போவார்கள்.

எப்படித் தமிழர்களை  அடையாளம்  காண்கிறார்கள் ? என்று கேட்காதீர்கள். அது தான் ஹிந்தியில் தட்டுத் தடுமாறி ' கம்பள் சாயியே ' என்று கேட்கிறோமே. .அது போதாதா?
குளிர் என்று சொல்லிக் கொண்டே டெல்லி அஜ்மல்கான் ரோட்டை சுற்றிக் காட்டுகிராளே  என்று சலித்துக் கொள்ள வேண்டாம். அங்கு தான் நாங்களும்  " கம்பள்  ஸ்வெட்டர் " வாங்கிக் கொண்டோம்.

நவம்பர் மாதம் அவ்வளவாக குளிரவில்லையா, இல்லை எங்களுக்கு குளிர் தெரியவில்லையா என்பது புரியவில்லை. அதனால் நாங்கள் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளாமலே  சுற்றிக் கொண்டிருந்தோம். எங்கள் பக்கத்து வீட்டிலிருக்கும் "  மிண்டு " ," பாபிஜி , இப்படியே ஸ்வெட்டர் போடாமல் இருக்காதீர்கள். உடல் நலம் பாதிக்கும்  " என்று  ஹிந்தியிலேயே  இலவச ஆலோசனை கொடுப்பார்.

இதைப்போல் பக்கத்து வீட்லிருப்பவரை  , அண்ணனின்  மனைவியாக பாவித்து  முப்பது வருடங்கள் முன்பு தான். இப்போதோ ' பாபிகள் ' எல்லாம் ' ஆன்டி'களாகி விட்டார்கள். (வயதானதால்  ஆன்டிகளாகவில்லை) ஹிந்தியிலிருந்து , ஆங்கிலத்திற்குத் தாவி விட்டதை சொல்கிறேன்.  பாபியில் இருக்கும்  அன்பு கலந்த மரியாதை, கண்டிப்பாக அன்னிய மொழியில் இல்லையே .

ஆமாம், இந்தப் பாசமான பக்கத்து வீட்டுக் காரர்களை ,  டெல்லியில் மட்டுமல்ல ,சென்னையிலும் ,இப்போதெல்லாம்  பார்க்க முடிவதில்லையே.!
எங்கே சென்றிருப்பார்கள் இவர்கள் எல்லோரும்?

இந்தக் குளிரில் எல்லோர் உடையும்  பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக   இருக்கும். உள்ளே அரை பனியன்  சைசில் ஒரு  ஃஆப் ஸ்வெட்டர் , பிறகு நாம் போட்டுக் கொள்ளும் டிரெஸ் . அதற்கு மேல் ஃ புல்  ஸ்வெட்டர். , தலையில் குரங்கு குல்லாய், பெண்களாயிருந்தால் இந்த அலங்காரங்களுடன்  ஒரு ஷால் ஒன்று போர்த்திக்  கொண்டு தான் அலைவார்கள். எல்லோருமே பார்ப்பதற்கு ,' ரோஜா 'படத்தில் வரும்  தீவிரவாதிகள், போலவே இருக்கும்.

ஆனால் , எல்லாப் பெண்களின் கையிலும், இரண்டு ஸ்வெட்டர் ஊசியும், ஒரு நூல் கண்டும்  அவசியம் உண்டு. எப்பவும், போகும் போது , வரும் போது , என்று எப்பவுமே  ஸ்வெட்டர் பின்னிக் கொண்டேயிருப்பார்கள். வாய் பேசும், கண்  வேறெங்கோ பார்க்கும், ஆனால் ஸ்வெட்ட்டர் பின்னுவது   மட்டும் நிற்காது.கரெக்டாக ஒரு ஊசி மேல் இன்னொரு ஊசி தவறாது மேலும் கீழுமாக ஓடிக் கொண்டுஇருக்கும்.  கையை நல்ல சூடாக  வைத்துக் கொண்டிருக்கும் வழி என்று நினைப்பதுண்டு.

அந்த ஊர் பெண்களின்  சுறுசுறுப்பு  நம்மை அசத்தும் . ஏகப்பட்ட துணி மூட்டையை(குளிருக்காக) உடையாய்  உடுத்திக் கொண்டு   எல்லா வேலையும் சர்வ சாதரணமாக  செய்து கொண்டிருப்பார்கள். எனக்கோ ரஜாயை  விட்டு  வெளியே வரவே மனம் வராது. எப்படித்  தான் இவர்களெல்லாம் வேலை செய்கிறார்களோ என்று தோன்றும்.

இந்தக் குளிரில் தண்ணீரைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  குழாயைத் திறந்து கைகளில் தண்ணீர் படும் போதே , வலி உயிர்போகும். அத்தனை ஜில்லென்று இருக்கும் இந்தத் தண்ணீரில் எப்படி குளிப்பது? இப்பொழுது போல் அப்பல்லாம்  கீய்சர்  கிடையாது. இம்மர்ஷன் ஹீட்டர் தான்.  அதில் தண்ணீரை எவ்வளவு தான் சூடு செய்தாலும் குளிக்கும் போது நடுங்கிப் போய்
விடுவோம்.
அந்த ஊரில் தான் ஷாம்பு  குளியல் என்றால், நிஜமாகவே  வெறும் தலையை மட்டும் குழாயடியில் காண்பித்துக் குளிக்கும் அதிசயம் கண்டேன்.(குளிரினால் தான்)

டிசம்பர் இறுதியிலும், ஜனவரியிலும்   வெளியே பார்த்தால் , இரண்டடிக்கு மேல்  உங்கள் கண்ணிற்குத் தெரு  தெரியாது. பேசுவதற்காக வாயைத் திறந்தால் , சிகரெட் எதுவுமில்லாமலே  வாயிலிருந்து புகைப் புகையாக காற்று வரும். பள்ளி சிறுவர்களுக்கு இது ஒரு பெரிய விளையாட்டு.

உணவு முறையோ சொல்லவே வேண்டியதில்லை. கனவில் தான் இட்லி சாப்பிட வேண்டும். மாவு ஒரு வாரமானாலும் புளிக்காது. டெல்லியில் ,தயிர் உறைய வைப்பதைப் பற்றி, ஒரு புராணமே எழுதியிருக்கிறேன்.அதைப் படிக்க இங்கே 'க்ளிக்'கவும்.கேரட்டும், தக்காளியும், உருளைக்கிழங்கும், பச்சை காய்கறிகள் எல்லாமே  ரொம்ப சல்லிசாக கிடைக்கும். அடிக்கடி ' காஜர் அல்வா ' சாப்பிடலாம், டையாபிடிஸ் இல்லையானால் .. நாம் வில்லன் ரேஞ்சில் வைத்திருக்கும், உருளைக்கிழங்கு அவர்களுக்கு  ஹீரோ .மூட்டை மூட்டையாக வாங்குவார்கள். பழங்கள், அதிலும்' சேப் ' ,  பயங்கர ' சீப்'. (ஆப்பிள்).


இப்படிப் பட்ட ஒரு குளிரில் நான் மாட்டிக் கொண்டு  அவஸ்தைப் பட்டது ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை  சுமார் ஐந்து வருடங்கள்.. குளிர் காலம் தான் இப்படியிருக்கும் என்றால், வெயில் காலமோ, அவ்வப்போது  ஆந்தி வந்து  பாடாய் படுத்தும்.

இதையெல்லாம்  சுமார் ஐந்து வருடங்கள் அனுபவித்த நான் , அந்த ஐந்து  வருடங்களும் சென்னையை நினைத்து ஏங்காத நாளேயில்லை.
டெல்லிக் குளிரை நினைத்தால் இப்பவும் ஒரே நடுக்கம் தான். ஆனாலும்  அது என் இளமைக்காலம் அல்லவா? கண்டிப்பாக கனாக்காலம் தான்.

image courtesy--google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்